Tuesday, February 28, 2012

18. அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஏ.எப்.எம். அஷ்ரப் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமலை அஷ்ரப், நேஹா, புரட்சி மகன், போன்ற பெயர்களில் கவிதை எழுதி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 64 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் 21 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், இன்றைய ஈழத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அல்லற்படுகின்ற மக்கள் பற்றியுமான பதிவுகளாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட விடயங்களுள், கவிஞரது சொந்த மாவட்டமான திருகோணமலைப் பிரதேசத்தின் சிதைவு கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை புலப்படுகிறது என்கிறார்.

மனம் திறந்து சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சிறுவயதிலிருந்து எனக்கு கவிதையில் ஈடுபாடு உண்டு. பாடசாலைக் காலத்தில் எனது தந்தையான கலைப் பிரியன் பரீட் அவர்களது வழிகாட்டலின் கீழ் அவ்வப்போது சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சியில் மஹாகவியும், நீலாவணனும் ஓர் சமூக ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பில் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது எனது கவிதை ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இக்கவிதைத்தொகுதி. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மஹாகவி, நீலாவணன் ஆகியோரின் கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவிதை வெளிப்பாட்டுக்கு காரணமாகியது. எனது கவிதைகளில் காணத்தகும் உருவ, உள்ளடக்கச் சிந்தனைகளுக்கு அவர்களது செல்வாக்கும் ஒரு காரணமே என்கிறார்.

நான் என்ற கவிதையில் போர்க்கால சூழல் தந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இயற்கையையும், இலக்கியத்தையும் காதலிக்கும் ஒரு சாதாரண கவிஞன், கனவுகள் சுமந்து இன்பக் கற்பனையில் மிதக்க விரும்புகிறான். ஆனாலும் திறந்த வெளிச்சிறையாக உலகம் மாறிவிட்டதால் தனது கற்பனைகள் எதுவும் ஈடேறாமல் செயற்கையான வாழ்வினை வாழ்வதாக திரு. அஷ்ரப் அவர்கள் கீழுள்ள வரிகள் கொண்டு புரிய வைக்க முனைகிறார்.

கொலையும்
கொலைவெறியும் மிகைத்து
மனிதம் மறைந்துவிட்ட - இத்
து(ர்)ப்பாக்கிய தேசத்தில்
கானகத்தில் சிறைப்பட்ட
பறவைகளாய்
சுதந்திர நாட்டின்
அடிமைகளாய் நாம் (பக்கம் 30)

தினம் தோறும் நாம் பலரைச் சந்திக்கிறோம். அவர்களில் எல்லோரும் நம்மோடு ஐக்கியப்பட்டவர்களல்லர். அதே போலதான் காத்தாயி என்ற பாத்திரம். காத்தாயி என்பவள்; பொதுப் பாதையை தினமும் கூட்டித் துப்பரவு செய்யும் பெண் என்பதனை இக்கவிதை மூலம் அறியமுடிகிறது. காலை வேலைகளிலேயே பாதைகளை சுத்தப்படுத்தி பொது மக்கள் அசௌகரியம் அடையா வண்ணம் சூழலை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு காத்தாயிக்குரியது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவ்வாறான தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. திரு. அஷ்ரப் அவர்கள் இந்தக் கவிதையினூடாக காத்தாயியைப் பற்றி எழுதியிருக்கும் சில வரிகள் இதோ

மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து
காலை மாலை வேளை மறந்து
வீதிகள் தோறும் விசராய் திரவாள்
காத்தாயி..
அமர்களமான அவளது வாழ்வில்
நோயும் இல்லை நொடியும் இல்லை
நலமாய் வாழ நாங்கள் நாடும்
மாத்திரை இல்லை மருந்தும் இல்லை
பறபறவென்று பறந்து வாழும்
கலியுகர்போலே அவளிடம் - அந்த
காசும் இல்லை கவலையும் இல்லை (பக்கம் 39)

நமது அன்றாட வாழ்வியல் யுத்தமுனை வார்த்தைகளைக் கொண்டே கழிகின்றது. துப்பாக்கிகள், குண்டுகள்தான் எமது உணர்வுகளாக இருக்கின்றன. ஆனால் வெற்றி கிடைப்பதற்காக வேண்டி சிறுவர்களையும், பெண்களையும் சீரழிப்பது தர்மமாகாது. அது போல நிம்மதியைக் குலைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது வீரமும் அல்ல. அப்பாவிகளை அழிக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இப்பொழுது
போராட்டந்தான்
ஒரு பாசையாக
விளங்குகிறது..
துப்பாக்கிகளும்
ரவைகளும்
குண்டுகளும்
தீவைப்புந்தான்
எமது உணர்வுகளை
வெளிக்காட்டுகின்றன! (பக்கம் 46)

ஏ ஆக்கிரமிப்பாளர்களே எனும் கவிதை சமாதானத்துக்கு தூது விடுவதாய் அமைந்துள்ளது. சமாதானத்தின் சின்னம் புறா. அமைதிக்கு உதாரணம் பூக்கள். இவைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதிலாக இருந்துவிட்டால் நமது தேசத்தின் ஆறாவடு என்றோ நீங்கியிருக்கும். அதைவிட்டுவிடாததன் காரணமாக யுத்ததத்தால் இன்று நாடு சின்னா பின்னமாகியிருக்கிறது. இவ்வாறான கருத்து புலப்பட தனது கவி வரிகளை கீழுள்ளவாறு எழுதியுள்ளார் திரு. அஷ்ரப் அவர்கள்.

இதய வேலிகளைப்
பிய்த்தெறிந்துவிட்டு
உங்கள்
துப்பாக்கிகளில்
ரவைகளுக்குப் பதிலாய்
மலர்ச் சொண்டுகளை
சூடுங்கள்..
ராக்கட்டுகளுக்குப் பதிலாய்
தோள்களில்
புறாக்களைச்
சுமந்து வாருங்கள்..
உங்கள் சொந்த தேசத்தின்
சுதந்திரத்தை
மீண்டும்; தருகிறோம்!
மீட்டுத் தருகிறோம்!! (பக்கம் 50)

மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக புத்தகத்தைத் தந்திருக்கின்ற நூலாசிரியர் திருமலை அஷ்ரப்; அவர்கள் பாராட்டுக்குரியவர். யுத்த கால நிகழ்வுகளை தனது கவிதைகளினூடாக சொல்லியிருக்கிறார். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமய நாமும் வாழ்த்துகிறோம்.!!!

நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - ashraff1973@gmail.com
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150

17. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார்.



2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.


எரிமலை குமுறும் இதய ஆழியின் சங்கமத்தில் என்ற தனது உரையில் நூலாசிரியர் அஸீஸ் அவர்கள் கீழுள்ளவாறு கூறுகின்றார். ஊழல்களின் உறைவிடமாகிய உலகின் மானிடனாகப் பிறந்த மதிப்பீடு இன்னும்... இதய ஆழியில் எழும் சுனாமி அலையாக என்னுள் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மானிடனாகப் பிறந்ததை விடவும் கல்லாக, ஏன் புல்லாகவேனும் படைக்கப்பட்டிருந்தால் கூட யாருக்காவது பிரயோசனப் பட்டிருப்பேனே என ஆதங்கப்பட்டு இதயத்தால் அழுதுகொண்ட உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் குமுறல் ஆன்மீக வெளிப்பாட்டின் உச்சம் மட்டுமல்ல சமூகப் பார்வையின் உண்மையான சலனம் என்று கூடச் சொல்லலாம். அந்தளவுக்கு அநியாய அரக்கன் கொடிகட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மாய உலகின் மானிடனாகப் படைக்கப்படும் முன் எழுந்த ஒரு விமர்சனம் இருபத்து நான்கு மணித்தியாலமும் நினைவிலேயே சதா மூழ்கி உனக்காகவே வாழ்ந்துவரும் எங்களைவிடவா இரத்தம் சிந்தி இறுமாப்போடு உன்னை மறந்து வாழும் ஊழல் பேர்வழிகளையா உலகில் படைக்கப் போகிறாய் என்ற வானவரின் யதார்த்தமான கேள்வியில் எவ்வளவு தூரம் உண்மை பொதிந்திருக்கிறது?... என்ற ஆதங்கம் மானிடனாகப் பிறந்து, பாவத்தில் மூழ்கி தம் வாழ்வை சீரழித்துக் கொள்வோருக்கான உபதேசமாக இருக்கிறது என்கிறார்.

பாடலின் முக்கிய சில அடிகள் இவ்வாறு..

இரண்டாயிரத்து நான்கு மார்கழி மாதம்
இருபத்தி ஆறு அதிகாலை, அவ்வேளை
சரமாரியாய் ஆழி அலைமே லெழுந்து
சாதனை புரிந்தஇவ் வரலாறு கேளீர்.. (பக்கம் 12)

என்ற இவ்வரி ஆழிப்பேரலை நடந்த காலத்தை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்திப் போகிறது. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியதை நூலாசிரியர் வெளியிட்ட இந்நூலிலும், இறுவட்டிலும் தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பச்சிளம் பாலகர் முதல் பெண்கள், வயோதிபர்கள் என்று பால், வயது வேறுபாடின்றி கடலலையின் கோரப் பசிக்கு இரையான காட்சிகள் கல்நெஞ்சத்திலும் ஈரத்தை கசியச் செய்யும். அந்தளவுக்கு கட்டிடங்களின் சிதைவுகளாலும், சுனாமி அலையின் வேகமான வீச்சாலும் உயிரிழந்தோர் பலர். உலகம் விஞ்ஞான வளர்ச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இயற்கையின் சீற்றத்தை நிறுத்த மனிதனால் முடியாது. பின்வரும் பாடல் வரிகள் அதனை நிதர்சனமாக்குகின்றது.

விஞ்ஞானம் வளர்ந்ததென வீறாப்பு பேசும்
வெகுளிகளை மூக்கின்மேல் விரல் வைக்கச்செய்த
அஞ்சாது, அழையாத விருந்தாளியாகி
அலைவந்து ஓடோட விரட்டியது கேளீர் (பக்கம் 12)

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகாம்களில் வாழ்ந்துவரும் காட்சியும் தத்ரூபமாக இறுவட்டில் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, மாளிகைக்காடு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில் போன்ற ஊர்களில் நிகழ்ந்த இக்கொடூர காட்சிகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தாய் தந்தையர் யார் என்று அறிய முடியாத சிறார்களை மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடித்து சேர்த்த சம்பவங்கள்கூட நடந்தேறியிருக்கின்றன. அதற்கான பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

அம்மணமாய் சிலபேரை அலையடித்துச் செல்ல
அழு குழந்தை இந்நாளில் உயிரோடு மீள
அம்மா யார்? அப்பா யார்? மரபணுவின் ஆய்வில்
அசல் கண்டு சேர்ப்பித்த அதிசயமே கேளீர் (பக்கம் 13)

நீரிலே மிதந்த உயிரற்ற உடல்களையும், சேதமாகிப் போன ஊர்களையும் ஒருங்கே சுத்தப்படுத்தி உதவியவர்களுக்கும் நூலாசிரியர் இந்நூலினூடு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதுபோல கரையோர மக்கள் கதிகலங்கி இருக்கும் போது கடுகளவும் பாதிப்புறாதோர் குறுக்கு வழியில் முன்னேறவும் சுனாமி உதவிசெய்த பரிதாபமும் கண்கூடு. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தபோதும் அதை சில சதிகாரர் தமக்காகப் பயன்படுத்திக் கொண்ட சோகக் கதைகளும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மக்கள் செய்கின்ற பாவங்களே காரணம் என்கிறார் நூலாசிரியர். அவ்வாறு இறைவனை மறந்து செயற்பட்டதால் வந்தவினை தான் சுனாமி என்பதை கீழுள்ள பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

பொய், களவு, காமங்கள், சூது, கொலை, வட்டி
பொறாமை, கோள், வஞ்சகம், போட்டி மனப்பான்மை
வையக வாழ்வினிலே வந்தவினை தானே
வரலாற்றில் நாம் பெற்ற சுனாமியதன் சீற்றம் (பக்கம் 18)

மேற்குறிப்பிட்ட விடயங்களை புத்தக வடிவிலும், இறுவட்டிலும் தந்திருக்கின்ற நூலாசிரியர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதே போல் மிகவும் சிறப்பாக இக்காவியத்தை பாடியுள்ள இசைவாணர் எம்.எம். அப்துல் கபூர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்த அற்புதமான கண்ணீர்க் காவிய நூலை படிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.!!!

நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
நூலாசிரியர் - கலாபூஷணம் கே. எம். ஏ. அஸீஸ்
தொலைபேசி - 067 7913248, 075 2529532
வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம்
விலை - 150/=