Friday, July 5, 2013

46. பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்தவர். முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான 'முஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்' என்ற கட்டுரை 1961 இல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் எம்.எம்.எம். யூசுப் நினைவுகள் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள் ஆகிய 03 நூல்கள் இவரால் எழுதி வெயிடப்பட்டுள்ளன. 2013 இல் இவர் எழுதிய பூவும் கனியும் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது.

முதலில் புத்தகத்தை பிரித்தால் அதனுள்ளிருக்கும் வசீகரத்தன்மை மனதை ஈர்த்து விடுகிறது. வர்ணத் தாள்களில் அச்சாக்கப்பட்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதற்கு அது உறுதுணை புரிகிறது என்பது உண்மை. 


சிறுவர்களிடம் இறை அச்சத்தை, இறை பக்தியை வளர்க்க வேண்டியது பெற்றோர்கள் மாத்திரமல்ல. உங்களை, எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் அது கடமையான விடயம். விசேடமாக சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தனது முதல் பாடலாக அல்லாஹ் என்ற தலைப்பிட்டு அத்தாஸ் அவர்கள் எழுதியிருப்பது, அல்லாஹ்வே முதன்மையானவன் என்பதை குழந்தைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் உணர்த்தி நிற்கின்றது.

இணையில்லா ஒருவனே அல்லாஹ்
இகம் தனைப் படைத்தவன் அல்லாஹ்
இறைவன் அவனே அல்லாஹ்
இனிதே வணங்குவோம் அல்லாஹ் 

என அந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு அடுத்தாக அவனது தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே நாம் நேசிக்கின்றோம். உத்தம நபி என்ற பெயரில் அமைந்திருக்கும் இரண்டாவது கவிதை அத்தாஸ் அவர்கள், குழந்தைகளின் மனதை இஸ்லாத்தின் பால் திசை திருப்புவது பற்றி உணர்ந்தவர் என்பதை எமக்கு காட்டி நிற்கின்றது. அந்தப் பாடலின் சில வரிகள் இதோ..

அல்லாஹ் அருளிய வேதம் தனை
அகிலத்தாருக்கு சொன்ன நபி
அல்குர்ஆனில் மொழிந்தபடி
வாழ்வில் செயலில் காட்டும் நபி

அகிலத்தை படைத்த அல்லாஹ் அதில் எமக்கு உற்ற துணையாக, பாதுகாப்பு அரணாக படைத்திருப்பது நமது தாயைத்தான். அதனால்தான் தாயின் பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது என்ற மேன்மையை எமக்கு அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். தூய நேசம் கொண்ட தாயின் புகழை மூன்றாவது பாடலில் பதிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

தந்தையின் நிழலில் வளரும் குழந்தைகள் தரணியில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறின்றி தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆனால் தாயும், தந்தையும் முதுமைப் பருவத்தை அடைந்ததும் எத்தனைப் பேர் அன்பாக, ஆதரவாக அவர்களைக் கவனிக்கின்றார்கள்? இன்றைய சமுதாயம் பணம், பட்டம், பதவி என்பவற்றில்தான் அதிக அக்கறை காட்டுகின்றதே தவிர பாசத்தில் அல்ல. தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை எனது அப்பா என்ற பாடலில் நூலாசிரியர் பின்வருமாறு சொல்லியிருக்கின்றார்.

எங்கள் அப்பா நல்லவர்
எல்லாம் சொல்லித் தருபவர்
எங்கும் கூட்டிச் செல்பவர்
எவரும் விரும்பும் உயர்ந்தவர்

சின்ன வயதிலிருந்து இன்றுவரை ராஜா ராணி கதைகள் கேட்பது சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை எமக்கு குழந்தைப் பருவத்திலே ஊட்டியவர்கள் எமது பாட்டி, பாட்டன். எனவே பாட்டி பற்றிய பாடலையும் எழுத மறக்கவில்லை நூலாசிரியர். 

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவிதைக்கு அப்பால் மிருகங்கள், இயற்கைக் காட்சிகள், மாம்பழம், வெள்ளைக் கொக்கு என்று சிறுவர்கள் விரும்பும் விடயங்கள் பற்றி எழுதியிருக்கும் அத்தாஸ் அவர்கள் பாடல்களுக்குரிய சிறிய படங்களையும் தந்திருப்பது சிறப்பம்சம் என கருதுகிறேன். எழுத்துக்களைவிட படங்கள் மனதில் பதிவதால் பாடலை சிறுவர்கள் வாசித்துணர அது வழிகோலும். 
காகம் என்ற பாடலில் அமைந்துள்ள சில வரிகள் பின்வருமாறு

நாடு நகர் எங்கும் நீ
கூடி வாழ்தல் காண்கின்றோம்
குடும்ப நன்மை அதுவன்றோ
கூட மாந்தர் அறிவாரோ

இந்த வரிகளில் ஒரு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பொதிந்திருக்கின்றது. இதை காகத்தின் மூலம் கவிஞர் உணர்த்தியிருக்கின்றார். ஆறறிவு பெற்ற மனிதர்களிடம் இல்லாத பண்புகள் காகத்திடம் காணப்படுகின்றது. இயற்கை நமக்கு பல பாடங்களை கற்பித்து தருகின்றது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும். 

நவமணி, தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் சிறுவர் பகுதியில் வெளிவந்த பாடல்களே இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது கவிஞரின் சிறுவர் இலக்கியப் புலமைக்கு சான்று பகர்வதாக அமைகின்றது. 

சிறுவர் இலக்கியத்தில் ஈடுபவர்கள் வெகு சிலரே. ஏனெனில் சிறுவர்களின் மனதைக்கவரும் படியாக, சிறுவர்களுக்கு புரியும் படியாக எழுதுவது சவாலான விடயம். எனினும் தன்னாலான இலக்கியத் தொண்டுகளை புரிவதற்கு ஏற்ற மனமுடையவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தர முடிகிறது. அந்த வகையில் சிறுவர் இலக்கியம் படைக்க முற்பட்டிருக்கும் வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - பூவும் கனியும் 
நூலின் வகை - சிறுவர் பாடல்
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ் 
முகவரி - 41A, Mudlim Road, Welippenna.
வெளியீடு - மொடன் ஸ்டடி சென்டர்
விலை - 150 ரூபாய்