Sunday, August 31, 2014

64. கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

உலகின் எந்த மூலை முடுக்குகளை எடுத்துக்கொண்டாலும் சித்;திரவதை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. வல்லரசுகள் அதற்குக் கீழுள்ள நாடுகளை சித்திரவதைப்படுத்துவது என்பது வரலாறு கண்ட பேருண்மை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் சர்வதேசம் குறித்த பார்வையை மக்களுக்கு தெரிவித்தபோதும் அது குறித்த இறுதி மதிப்பீடுகள் இன்று வரை ஏற்பட்டதில்லை என்பதுதான் நிதர்சனம்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வப்போது இஸ்ரேல், பலஸ்தீனம் மீது ஏற்படுத்திய தொடர் தாக்குதல்களால் எத்தனை எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்? சொத்து சுகங்களை இழந்தார்கள்? அந்த யுத்தம் ஒரு நிறுத்தத்துக்கு ஐக்கியப்படாமல் இன்று இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதுதான் பெரும் துரதிஷ்டவசமான நிகழ்வாகும். இது குறித்த கருத்தாடல்கள் அல்லது கண்டனங்களை பல நாடுகள் மேற்கொண்டு இருக்கின்றது. ஆனபோதும் யுத்த முடிவு ஒன்றை பலஸ்தீனம் எதிர்காலத்திலாவது காணுமா என்பது ஐயத்துக்கும் அச்சத்துக்கும் உரிய விடயமாகவே காணப்படுகின்றது. அண்மையில் சுமார் ஒன்றரை மாதங்களாக இஸ்ரேலினால், பலத்தீனர்கள் மீது காஸாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்தது யாவரும் அறிந்ததே. இதில் 500 க்கும் மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள், 250 க்கும் மேற்பட்ட பெண்கள், 100 க்குக் கிட்டிய முதியோர்கள் உள்ளடங்குவர்.

கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதிக்கு கண்கள் போன்றவை. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இசைப்பாடல், ஓவியம், மேடைப் பேச்சு போன்ற சகல துறைகளிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டு நிற்கும். இந்த வகையில் பல்கலை வேந்தன் என்ற பட்டம் இவருக்கு கிடைக்கப் பெற்றமை மிகவும் பொருத்தமானதே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இவரது பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இருந்துவருகின்றது. தற்போது நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். 

தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்கள் மன்னார் படிப்பு வட்டத்தின் ஊடாக 68 பக்கங்களில் வெளியிட்ட ஷஷஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்|| என்ற நூல் குறித்த பார்வையை பதிவு செய்வது காலத்தின் தேவையாகும். கலைவாதி கலீல் அவர்கள் ஏற்கனவே உலகை மாற்றிய உத்தமர் (இயல் - இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைகள்), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக் கவிதைகள்), றோணியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்) ஆகிய நான்கு நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெள்ளி ரூபா என்ற சிறுகதைத் தொகுதி எழுத்தாளர் தேசியக் கவுன்ஸில் விருது பெற்றுள்ளது.

இந்நூல் இஸ்ரேலுக்கும் பலஸ்தீன விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் அரபு ஆட்சியாளர்களுக்கும் எதிராக நஜீ அல் அலி என்பவரால் வரையப்பட்ட கூடார்த்த சித்திரங்களுக்கு எழுதப்பட்ட வரிகள் கலைவாதியின் கவிதைகளாக மலர்ந்திருக்கின்றது. இது தழுவலோ மொழி பெயர்ப்போ அல்ல. சித்திரங்களைப் பார்த்து கவிஞரின் மனதில் தோன்றிய எண்ணங்கள். 

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா, மேற்குக் கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் மிகுந்த காலப்பகுதியில் இனந்தெரியாதோரால் இந்த நஜீ அல் அலி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

உண்மைகளை உரத்துச் சொல்லும் எவருக்கும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது என்பதற்கு நஜி அல் அலியின் கொலையும் வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. யதார்த்தபூர்வமான சிதிதிரங்களை தத்ரூபமாக வரைந்ததினாலோ என்னவோ அவருக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. இனி அவரது சித்திரங்களுக்கு நூலாசிரியர் கலைவாதி அவர்கள் எழுதிய கவிதைகளில் சிலதை நோக்குவோம்.

பிஞ்சின் கரத்தில் அக்கினிக் குஞ்சு (பக்கம் 17) என்ற கவிதை பின்வருமாறு அமைகின்றது.

உயிர் நீங்கி ஓய்ந்த போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்

ஒரு கரம் ஓயும் போது
மறுகரம் கல்லை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்

பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த ஒரு எழுச்சிக் குரலாக மேலுள்ள கவிதையை நோக்கலாம். உயிர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாண்ட போதும் சத்தியத்துக்காக போராடும் மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்து புலப்பட அவர் எழுதியிருக்கின்றார் என்பது எனது அவதானம்.

அதேபோல தீ (பக்கம் 20) என்ற கவிதையும் உணர்ச்சித் தீயை வாசகர் மனதில் எரித்துவிட்டுச் செல்கின்றமை கவிதையின் சிறப்பம்சமாகும்.

கல்லில் கசியும் குருதித் துளிகள் 
கானகப் பூவை மலர்விக்கும்
கல்லைப் பிளந்தும் செடி துளிர்க்கும்
பூக்கள் மலர்ந்து தீ கக்கும்

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடுநடுங்கும்
வெள்ளைப் பிறையும் வெண் போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை சேர்க்கும்.

பூக்கள் மலர்ந்தால் கூட அவை தீ கக்கும் வீரத்துடன்தான் இருக்கின்றன. அதுபோல வெள்ளைப் பிறையும் போர் புரியத்தக்க வாளாய் மாறி துணை சேர்க்கும் என்ற கற்பனை கவிஞரின் மன வேதனையையும், வீராவேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.

இஸ்ரேலின் பிடிக்குள் சிக்குபட்ட பலஸ்தீனம் பற்றியும், பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தவர்களுக்குமாக கல் என்ற கவிதையில் (பக்கம் 31) கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.

முள்ளின் படுக்கையில்
முகங் குப்புறக் கிடக்கிறது பலஸ்தீனம்
அதனுள் அழிந்து எழ, எழ முயன்று
ரணத்துள் வழக்கம்
மஸ்ஜிதுல் அக்ஸா!

வானை நோக்கும் 
கைகள் ஏந்தத் 
துவக்கு இல்லையென்றால்...
கல்லை ஏந்தும்
அது சிறு கல்லை ஏந்தும்!

கல்லைக் கொண்டு 
யானைப் படையை 
பூண்டோடு அழித்த
புரட்சி வரலாறு
எம்மிடம் உளது ஜாக்கிரதை!

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டபோதும் இந்த நூல் இன்றைய காலத்துக்கு மிகவும்  பொருந்துகின்றது. பல்துறை ஆளுமை கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்கு நிறைய களம் அமைத்துக் கொடுப்பவர். பலரது மனதிலும் மரியாதைக்குரியவராக வலம் வருபவர். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் எழுதிவரும் கலைவாதி கலீல் அவர்களது பல்வேறு வகையான காத்திரமான அனைத்து ஆக்கங்களும் நூலுருபெற்று வெளிவர வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும். அவர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

நூல் - ஓ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - தாஜுல் உலூம் கலைவாதி கலீல்
வெளியீடு - மன்னார் படிப்பு வட்டம்
தொலைபேசி - 0785659319

Wednesday, August 20, 2014

63. ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல் 90 நாவல் பற்றிய கண்ணோட்டம்

ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல் 90 நாவல் பற்றிய கண்ணோட்டம்

மண்வாசனை மணக்கும் விதமாக படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான மொழிநடையாக எழுதி தன் நிலையை நிரூபித்திருக்கின்றார் ஆர்.எம். நௌஸாத். கிழக்கு மாகாணத்தின் பள்ளிமுனைக் கிராமத்தின் சொல்லாடல்கள் நாவலின் கனதிக்கு கட்டியம் கூறுகின்றன. கொல்வதெழுதுதல் 90 என்ற நாவலை வெளியிட்டிருக்கும் இவர் ஏற்கனவே வல்லமை தாராயோ? (2000) என்ற சிறுகதைத் தொகுதியையும், நட்டுமை (2009) என்ற நாவலையும், வெள்ளி விரல் (2011) என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்டுமை நாவலுக்கு சுந்தர ராமசாமி 75 பவள விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. அதேபோல் வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் உயர் இலக்கிய விருதான அரச சாகித்திய விருதும், கிழக்கு மாகாண மாகாண சபையி;ன் சாகித்திய விருதும் கிடைத்துள்ளன. 1990 காலப் பகுதிகளில் நடைபெற்ற அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டே இந்த நாவலை ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார் என்பது நோக்கத்தக்கது.

இந்த நாவல் பற்றி குறிப்புரை தந்திருக்கும் எம்.எம்.எம். நூறுல்ஹக் அவர்கள் ''ஒரு கிராமத்தின் தேர்தல் கள நிலவரங்கள், கொலைக் கள விபரங்கள், வர்க்க முரண் நிலைகள், காதலுணர்வுகள் ஆகியன வெகு யதார்த்தமாக இதில் சித்தரிக்கப்பட்டள்ளன. அதேவேளை அப்பாவிக் கிராமத்து மனிதர்களின் மனவியல்புகள், வர்ணனைகள், பேச்சோசைகள் என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளன. நாவலாசிரியர் ஒரு திறமையான கதைசொல்லி என்பதை அவரது எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன'' என குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசியல் வரலாற்றின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அரசியல் தலைவன், தொண்டன், கட்சிப் பிரமுகர்கள், ஊர் மக்கள், தேர்தல் கால சூடுகள் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் கிராமிய வாழ்க்கை, காதல் உணர்வு, ஏழ்மை போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சமூக நாவலாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் கதாநாயகன் ஒரு அரசியல்வாதி என்பதை விட, அவரால் உருவாக்கப்படும் முத்து முஹம்மத் என்ற பாத்திரமாகும். வாழ்க்கையில் படக்கூடாத கஷ்டங்கள், அவமானங்கள் போன்ற அனைத்து தாழ்வுகளையும் சந்திக்கும் முத்து முஹம்மது, மைமுனா என்ற தன் மச்சினியைக் காதலிக்கின்றான். அவளும் முத்து முஹம்மதுவை மனதாரக் காதலிக்கின்றாள். மைமுனாவின் தாயாருக்கு இருவரது காதல் பிடிக்கவில்லை. வெறுமனே ஊர்ப் பொதுக் கூட்டங்களில் பாடல்களை பாடிக்கொண்டு திரியும் முத்து முஹம்மதுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் வளம் இருப்பதாக நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலை முத்து முஹம்மத் அடிக்கடி பாடுவதாகவும், அதன்போது மைமுனா கூட்டத்தில் இருக்கிறாளா என்று அவன் கண்கள் தேடுவதாகவும் குறிப்பிட்டுள்ள விதத்திலிருந்து அவர்களது காதல் உணர்வு மிக மென்மையாக இழையோடுவதை அறிய முடிகின்றது.

அதே போல அவனது காதலிக்கு வலைவீசும் சப்பு சுலுத்தான் என்ற பாத்திரமும் இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவலின் விறுவிறுப்புக்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் சப்பு சுலுத்தானின் நடவடிக்கைகள் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவல் மேலீட்டுக்கு அவனது செயல்கள் காரணம் என்பது அவதானத்துக்குரியது. ஏனெனில் இன்றைய காலத்திலும் சரி, என்றைய காலத்திலும் சரி.. சப்பு சுலுத்தான் போன்ற விஷமிகள் நம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். பெண்களை ஏமாற்றி வெளிநாட்டு ஆசையை வளர்த்து, பின் கொழும்புக்கு கூட்டிச் சென்று அவர்களது வாழ்வை இருட்டாக்கிவிட்டு, அந்தக் காசில் மனசாட்சியே இல்லாமல் சொகுசாக வாழ்கின்றார்கள். அதுவும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு பெண்களின் கற்பு சுலுத்தான் போன்றவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது என்பது நாவலின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

கன்னிவெடிபட்டு கால் முடமாகிப் போனதால் 'முட உதுமான்' என்ற காரணப் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஊர்வாசியின் மனைவி, சுலுத்தானுடன் கொழும்புக்குச் சென்று அவனால் வாழ்க்கை இழக்கிறாள். அதை முத்து முஹம்மத் அடிக்கடி மைமுனாவுக்கு ஞாபகப்படுத்தி சுலுத்தானோடு பேச்சு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகின்றான். கிராமிய மணம் கமழும் சொற்றொடர்கள் இந்த நாவலில் தாராளமாகவே விரவிக் கிடக்கின்றதெனலாம். பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடும் சொற்களிலிருந்து அவர்களது அன்றாட வாழ்வியலை தரிசிக்க முடிகின்றது. உதாரணமாக கீழுள்ள உரையாடலைக் குறிப்பிடலாம்.

''ஐஸ்பளம் வாங்கித்தந்த ஆரு? சப்பன் எங்க?''

''அவன் சுல்தான்! நெக்கில்ல... தம்பிக்கு வாங்கிக் கொடுத்த''

''மைமுனா! அந்த நாய்க்கிட்ட ஒன்டும் வாங்காதண்டு செல்லிரிக்கன்... ல்லா..? ஞ்சப்பாரு நான் வாங்கித்தாரன்..''

நாவலின் இடையே திடீரென முட உதுமானின் மனைவி நஞ்சு குடித்து இறந்து போகின்றாள். அவளது மையத்துக்கு வருகை தரும் தலைவர், முதல் முறையாக முத்து முஹம்மதுவுடன் பேசுகையில் அவன் பெறும் சந்தோஷம் கண்முன் தெரிகின்றது. ஒரு சாதாரண இளைஞனாக ஊருக்குள் இருக்கும் முத்து முஹம்மது தலைவர் மீது கொண்ட பற்றால் தலைவரின் நியமிப்பின் பேரில் இளைஞர் அணித் தலைவனாக ஆகிவிடுகின்றான்.

மைமுனாவின் தாய் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்கின்றாள். முத்து முஹம்மது அதற்கு சம்மதிக்காதபோது மைமுனாவையும், அவளது தங்கைகளையும் பாரமெடுத்து வீடு வளவு வாங்குவதற்கு உன்னால் முடியுமா என்று கேட்கும் கேள்வியால் முத்து முஹம்மது சர்வாங்கமும் ஒடுங்கிப் போகின்றான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கு உதைத்துவிட்டு அவன் தரையில் உட்கார்ந்து அழுவதில் அவனது இயலாமை வெளிப்படுகின்றது.

மைமுனா வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை சப்பு சுலுத்தான் செய்து முடித்துவிட்டு கொழும்புக்கு அழைக்கின்றான். மைமுனாவையும் அவளது தம்பி யாஸீன் மற்றும் முத்து முஹம்மதுவை அழைத்துக்கொண்டு மைமுனாவின் தாய் கொழும்புக்கு பயணமாகின்றாள்.

மருதானையில் உள்ள 'யூக்கே லொஜ்' என அழைக்கப்படும் விடுதியில் அவர்களை இரண்டு வாடகை அறை எடுத்து தங்க வைக்கின்றான் சுலுத்தான். முத்து முஹம்மதுவை அழைத்து வந்தது அவனுக்கு எரிச்சலாக இருப்பதை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கின்றான். விமானமேறும் நாளில் எம்.பி யின் ஒப்பம் வேண்டும். அதற்கு முத்து முஹம்மது உதவி புரிய வேண்டும் என்று பொய்யைச் சொல்லி அழைத்துப்போய் இடையில் கைவிட்டு விடுகின்றான் சுலுத்தான். அவனது சூழ்ச்சியால் முத்து முஹம்மதுவும் கூடவே சென்ற யாஸீனும் கொழும்பில் வழிதெரியாமல் திக்குமுக்காடித் தவிக்கும் காட்சியில் முத்து முஹம்மது வாசகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றான்.

அங்கிருந்த பொலிஸாரிடம் அழுது மன்றாடி எம்.பியின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுடன்.. சுலுத்தான் ஏமாற்றிய விதத்தைக் கூறி அவரது மேலீட்டால் யூக்கே லொஜ் செல்கின்கிறான். சுலுத்தான் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்பியதுடன் யாஸீனை முத்து முஹம்மது கடத்தியதாக பொய் சொல்லி மைமுனாவின் தாய் மனதையும் மாற்றுகிறான். அதனால் மைமுனாவின் தாய் முத்து முஹம்மதுவை குறை சொல்கின்றாள்.

மைமுனா வெளிநாடு போன பின்பு பள்ளிமுனைக் கிராமத்துக்கு போகவே பிடிக்கவில்லை முத்து முஹம்மதுக்கு. அவளில்லாத அந்தக் கிராமத்தை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஷஷபொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன். நா வந்த நேரம் அந்ந பூவங்கு இல்ல|| என்ற பாடலை முத்து முஹம்மத் முணுமுணுக்கிறான். இதன் மூலம் மைமுனா மீது அவன் வைத்திருந்த உருக்கமான காதலின் வலி வாசகர் மனதிலும் கசிகிறது. எனவே எம்.பியே கதியென்று தன்னை எம்.பிக்காகவே அர்ப்பணித்துக்கொள்கின்றான் முத்து முஹம்மத்;. அவரது வழிகாட்டலின் கீழ் தான் கொஞ்ச கொஞ்மாக முன்னேறி, அரசியல் கற்று, தலைவரின் பேச்சு நுணுக்கங்களை ஆராய்ந்து ஒரு சராசரி நகரத்து இளைஞனாக மாறிக்கொண்டிருந்தான். தலைவரைக் கொல்ல வந்த முயற்சியில் தன் உயிரைத் துச்சமென மதித்து அவரைக் காப்பாற்றியதில் முத்து முஹம்மதுவுக்கு தனது இடது கையில் மூன்று விரல்களையும் இழக்க நேரிடுகின்றது. தலைவருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த அவனை பலரும் பாராட்டுகின்றனர். இந்தக் காரணத்தால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் வயற்சேனை பிரதேசத்தின் தவிசாளராக முத்து முஹம்மதுவை கட்சி நியமிக்கிறது. இதனால்  பலருக்குள் பொறாமைத்தீ கொளுந்து விட்டெரிகின்றது. இடையில் மைமுனா அனுப்புகின்ற கெஸட் முத்து முஹம்மதுக்கு கிடைக்கின்றது. சுலுத்தான் அவளது பெண்மையை சூரையாடிய சோகத்தை கெஸட் பாடி நிற்கின்றது. அந்த ஆத்திரத்தில் சுலுத்தானைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றான் முத்து முஹம்மது.

இப்படியே நாட்கள் செல்ல முட உதுமானின் மகன் இயக்கத்தில் சேர்ந்து, தன் நண்பனொருவனுடன் வந்து சுலுத்தானை கொலை செய்கின்றான். தன் தாயை கொழும்புக்கு அழைத்துச் சென்று அவளது வாழ்க்கையை மட்டுமல்லாமல் தனதும், தன் தந்தையினதும் வாழ்க்கையை இல்லாமலாக்கிய சுலுத்தானை பலி வாங்கும் அவனது நோக்கம் அல்லது குறிக்கோள் நிறைவேறியதில் வாசகர்கள் ஆறுதலடையலாம். சுலுத்தான் போன்ற அயோக்கியர்கள் சமூகத்தில் இருக்கவே கூடாது என்ற மனநிலையில் நாவலைப் படிக்கும் வாசகர்கள் சுலுத்தானின் மறைவில் திருப்தி காணுவார்கள் என்பது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இவ்வாறான சூழ்நிலைகளில் முன்னேறி எம்.பியின் மனதில் இடம்பிடித்து அவருக்கு விசுவாசமாக இருக்கின்றான் முத்து முஹம்மத். இலங்கை இஸ்லாமிய கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராகவும், பள்ளி முனை இளைஞர் தலைவராகவும், முன்னாள் வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளராகவும் இருந்த முத்து முஹம்மது, தற்போதைய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ளான். அவன் தன் இளம் மனைவி மைமுனா சகிதம் வருவதாக நாவல் நிறைவடைகின்றது.
வாசிக்கிறோம் என்ற உணர்வை மறந்து பள்ளிமுனையில் வசிக்கச் செய்த நாவலாக இதைக் கொள்ளலாம். பள்ளிமுனைக் கிராமத்தை சுற்றிப் பார்த்து, அங்குள்ளவர்களுடன் உரையாடி.. அவர்களுடன் சிலநாட்கள் வாழ்ந்த ஒரு அனுபவம் நாவலை வாசித்து முடிக்கையில் உணர முடிகின்றது. இவ்வாறு ஒரு நாவலின் ஊடாக வாழ்வியலை தரிசிக்கச்செய்தநாவலாசிரியர் ஆர்.எம். நௌஸாதுக்கு வாழ்த்துக்கள்!!!

நாவல் - கொல்வதெழுதுதல் 90
நாவலாசிரியர் - ஆர்.எம். நௌஸாத்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - இந்திய 150 ரூபாய்

62. ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன.

போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள்  அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.

நிலை குலைவு பற்றிய விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் கே.ஆர். டேவிட்டும், காவி நரகத்தின் கதைகள் என்ற தலைப்பில் ஜே. பிரோஸ்கானும், நஸ்புள்ளாஹ்வின் கதைகளில் நான் என்ற தலைப்பில் ஏ.எம்.எம். அலியும், நான் நேசிக்கின்ற சகோதர சமூகத்திற்காக என்ற தலைப்பில் நூலாசிரியரின் குறிப்புக்களையும் நூலில் காண முடிகின்றது.

2007 இல் முதலாவது சிறுகதை லண்டன் புதினம் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், பூபாள ராகங்கள் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், 2009 இல் வந்தாறு மூலை கிழக்கொளி சிறுகதைப்  போட்டியிலும் (மூன்றாமிடம்) பரிசுகள் கிடைத்துள்ளதோடு, நோர்வே சர்வதேச தமிழர் கவிதை சிறப்பிதழ் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளதோடு, தேசிய பிரதேச மட்டங்களிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றுள்ளார். இவற்றை இவரது சிறுகதைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கலாம்.

2008 இல் திருகோணமலை நூலக அபிவிருத்திச் சங்கம் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் இலக்கிய ஒளி பட்டமும், விருதும் வழங்கப்பட்டுள்ளதோடு, கிண்ணியா நகர சபையினால் கௌரவிக்கப்பட்ட சமூகம் என்னும் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான் இவரது சிறுகதைகளை ஆராய்ந்து பார்ப்பது சாலப் பொருத்தம் என்று கருதுகின்றேன்.

இனி நஸ்புள்ளாஹ்வின் முதலாவது கதையான புத்தன் வந்த பூமியிலே (பக்கம் 23) என்ற சிறுகதையை நோக்குவோமேயானால் மனிதம் மரித்துப் போன தேசத்தின் வரலாற்றை அது குறித்து நிற்கின்றதெனலாம். இனவெறிகளால் ஆளப்பட்டு இன்பமான வாழ்வை தொலைத்து நிற்பவர்களுக்கு இதுவொரு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. கருணையும், காரூண்யமுமே வாழ்வின் ஆதாரம் என்று போதித்த புத்தன் வாழ்ந்த இந்த பூமி இரத்த வெள்ளத்தாலும், பிரேத வாடையாலும் மாசுபட்டுவிட்டது. வரலாற்றுக் கறையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் அப்பாவிகளே கொல்லப்பட்டமை கண்டுகூடு. இந்தக் கதையிலும் அவ்வாறாதோர் சம்பவமே கருவாக சொல்லப்பட்டுள்ளது. சந்திரபால என்ற சிங்கள மனிதன், மாணிக்கம் என்ற இந்து மனிதனை எதிரியாக நோக்குவதினூடாகவே கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. கதையின் இறுதியில் மாணிக்கத்தின் மகனை சந்திரபால தன் வாகனத்தால் விபத்துக்குள்ளாக்குகின்றான். தனது அண்ணனின் சொந்த மகனையே, தான் கொன்றுவிட்டதாக சந்திரபால பின்னர் அறிகின்றான். காட்டேறி மனிதர்களின் கசந்த மனது இக்கதையில் இழையோடியிருக்கிறன்றது.

நிலைகுலைவு (பக்கம் 55) என்ற சிறுகதையிலும் யுத்தமே கருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் மனித நேயத்தின் சாயல்களை இனங்காட்டியிருக்கின்றார் நஸ்புள்ளாஹ். காயத்திரி என்ற முதிர் கன்னியின் வேதனைகளும், அவஸ்தைகளும் தத்ரூபமாக இக்கதையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரம் நடந்த ஒரு பயங்கர இரவில் கருணாரட்னவின் மனைவிக்கு பிரசவம் பார்க்கிறார்கள் காயத்திரியும் அவளது நண்பி உமாவும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக கருணாரட்ன கண்டிக்குச் சென்றுவிடுகிறான். கருணாரட்ன என்ற மத வெறியன் மனதினாகிறான். சில நாட்களின் பின் நன்றி தெரிவித்து காயத்திரிக்கு கடிதம் எழுதுகின்றான். புரிந்துணர்வு வந்துவிட்டால் பூமி ஆனந்தமாக இயங்கும் என்ற உண்மை இக்கதை மூலம் உணர்த்தப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது.

இப்படிக்கு பூங்காற்று (பக்கம் 79) என்ற சிறுகதை மெல்லிய காதல் உணர்வினை மனதில் விதைத்துச் செல்கின்றது. ரம்மியமான முறையில் கதை சலனமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற அதிகபட்ச ஆர்வத்தை இக்கதை ஏற்படுத்துகின்றது. கதையின் ஆரம்பத்தில் தாயிடம் பயணம் சொல்லிக்கொண்டு நாச்சியாதீவுக்கு வரும் இளைஞன் என்ன செய்கிறான் என்ற எதிர்பார்ப்பே எட்டி நிற்கின்றது. எனினும் கதையின் இறுதியில் ஏற்படும் தாயின் மரணம் மனதை துண்டாடுகின்றது. சோகம் அப்பிக்கொள்கின்றது. தாய்ப் பாசத்தையும், காதலையும், மனித நேயத்தையும் ஒருசேர உணர்த்தியிருக்கும் பாங்கு சிறப்புக்குரியதெனலாம்.

மகுடக் கதையான காவி நரகம் (பக்கம் 90) என்ற சிறுகதையிலும் யுத்தமே சொல்லப்பட்டிருக்கின்றது. கர்ப்பம் தரித்து நிற்கும் குகநாயகியின் கணவன் ஒரு ஊடகவியலாளன். செய்திகளை அழுத்தந் திருத்தமாக வெளியிட்ட காரணத்தால் அவன் வெள்ளை வேனில் கடத்தப்படுகின்றான். ஐந்துமாத கர்ப்பத்துடன் அவள் வாழ்தல் பற்றிய நம்பிக்கையையே இழந்து காணப்படுகின்றாள். காலம் அதன் பாட்டுக்கு நகர்ந்து செல்கின்றது. பசி, தாகம், தூக்கம் எதிலும் பிடிமானம் இல்லாமல் சராசரி மனுசியாகக்கூட இல்லாமல் அவள் தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றாள். சாப்பிடுமாறு அவளது தாய் கூறியபோது தனக்கு பசிக்கவில்லை என்கின்றாள். ஆனால் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காகவே சாப்பிடுகின்றாள்.

திட்டமிடப்பட்ட கொலையால் கணவனை இழந்த ஒட்டுமொத்த பெண்களின் வலி இக்கதையால் புலப்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் எவரும் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்ற ஆயுததாரிகளின் கட்டளை குகநாயகி பிரசவ வேதனையில் துடிக்கும் போது கரையுடைகின்றது. மகளின் பிரசவ வேதனை தாங்க இயலாமல் அவளது தாய் உதவிக்கு அழைக்க அயல்வீட்டுக்குச் செல்கிறாள். அத்தருணத்தில் காவலரண் அமைத்து அதிலிருந்தவர்கள் அவளை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றனர். 'கடவுளே என்ற அம்மா' என்று தன் வேதனையையும் மறந்து குகநாயகி வெளியே செல்கையில் அவளும் சுட்டுக் கொல்லப்படுகின்றாள். அநியாயங்கள் மலிந்த.. அரக்கர்கள் நிறைந்த.. அந்த சூழலுக்கு காவி நரகம் என்ற தலைப்பை நூலாசிரியர் வைத்திருப்பதிலிருந்து அவரது மன வேதனை வெளிப்படுகின்றது.

காதல் ஒன்று சேராவிட்டால் அது தரும் காயங்கள் வாழ்நாள் முழுக்க தொடரும். வருடங்கள் பல கழிந்தாலும் காதல் தந்த வடு சிறிதும் மாறாமல் அப்படியேதான் இருக்கும் என்பதை சுதா, சுங்கன் மீன் போல அழகு (பக்கம் 110) என்ற சிறுகதை உணர்த்தி நிற்கின்றது. முபாரக் என்ற இளைஞன் பள்ளிக் காலத்தில் சுமையாவின் மீது கொள்கின்ற பாசம் அவனது தாய் பள்ளிக்கூடம் மாற்றியதால் மறைந்து போகிறது. கனவுகள் வளர்த்த காதலர்கள் பிரிந்து போனாலும் வாழ்க்கை என்பது உரிய காலத்தில் அவரவர்க்கான துணையை தேடிக்கொடுக்கின்றமை நிதர்சனம். அதற்கிணங்க இருவரும் இருவேறு துருவத்தில் வாழ்தலை மேற்கொள்கின்றனர்.

காலம் கழிகிறது. முபாரக்கிற்கு இரு குழந்தைகள். அவர்களை சுற்றுலா பயணத்துக்காக அழைத்துச் செல்கின்றபோது எதிர்பாராத விதமாக சுமையாவைக் காண்கின்றான் முபாரக். நீண்ட நாட்களுக்கு பின் அவனைப் பார்க்கும் எந்தவித பரபரப்புமின்றி அவள் காணப்படுகின்றாள். அவளது மாற்றத்துக்கான காரணத்தை முபாரக் வினவியபோது, பிற ஆண்களுடன் பேசுவது தன் கணவனுக்கு விருப்பமில்லை என்று வெடுக்கென்று பதில் கூறுகிறாள் சுமையா. முபாரக்கிற்கு கன்னத்தில் அறைந்தது போல இருக்கின்றது. இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறான். அவனது கடந்த காலத்தை அறிந்திருந்த மனைவி அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கவிதை யாத்தலில் தன் பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்திக்கொண்டுள்ள நஸ்புள்ளாஹ் காவி நரகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதி மூலம் தான் ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளி என்பதையும் நிரூபித்திருக்கின்றார். மேலும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட நஸ்புல்லாஹ்வுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - காவி நரகம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஏ. நஸ்புள்ளாஹ்
வெளியீடு - பேனா பதிப்பகம்
விலை - 400 ரூபாய்

61. வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


ஈழநாட்டுப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்தவரே சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்கள். தினக்குரல், இடி, மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் சுடர் ஒளி ஆசிரிய பீடத்தில் தற்போது பணிபுரிந்து வருவதை அறியமுடிகின்றது. கவிதை, சிறுகதை போன்ற துறைகளில் தனது நாமத்தை சிறப்பாகப் பதித்துள்ள இவர், இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, அரசியல் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பத்திரிகைத் துறையைப் பொருத்தமட்டில் துணுக்குகள், பத்தி எழுத்து, விளையாட்டு, விவரணக் கட்டுரை ஆகியவற்றுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆங்கில, சிங்கள மொழிப் பத்திரிகையாளர்களுடன் போட்டியிட்டு விவரணக் கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரன் ஏ. ரவிவர்மாவின் கன்னிச் சிறுகதைத் தொகுதி வடக்கே போகும் மெயில் என்ற மகுடத்தில் சிறுகதைகளையும், குறுங்கதைகளையும் உள்ளடக்கியதாக காயத்திரி பப்ளிகேஷன் மூலம் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள் யதார்த்தமானவை. மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற கஷ்டங்களையும், சோகங்களையும் படம் பிடித்துக்காட்டும்படியாக தனது சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்து நடை வாசகர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் அமைந்துள்ளது சிறப்பு. 80 பக்கங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் வடக்கே போகும் மெயில், போனால் போகட்டும், பொன்னுக் கிழவி, மிலேனிய அப்பா, என்னைத் தெரியுமா?, செல்லாக் காசு, தாலி பாக்கியம், திக்குத் தெரியாத..., முடிவிலும் ஒன்று தொடரலாம், குல தெய்வம், தண்ணீர் தண்ணீர், திரைகடல் ஓடியும், கொக்கு வெடி, என்று மறையும், காவியமா நெஞ்சில் ஓவியமா?, விடியலைத் தேடி ஆகிய 16 தலைப்புக்களிலேயே கதைகள் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு பரம்பரையாகத் தொடரும் எழுத்தூழியம் என்ற தலைப்பிட்டு தனது ஆசியுரையை லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா) அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர் தனது ஆசியுரையில் ''வடமாரட்சியில் அடிநிலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை. இயல்பிலேயே இலக்கிய நாட்டமும், பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன. ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவி புனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பேசத் தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்துக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள் காரணமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும், ஊடகவியலாளராக செய்திகளைச் செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல் மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும் சிறப்பிக்க முடியும். ரவிவர்மாவின் பின்புலம் மனித உரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது'' என்கிறார்.

அதேபோல் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கனடாவைச் சேர்ந்த க. நவம் அவர்கள் தனதுரையில் ''வடக்கே போகும் மெயில் திரட்டினை படித்து முடிக்கும் வாசகர்கள், இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுதுபோக்கு அம்சங்களைக் கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரரல்ல என்பதையும், பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும், அக்கறையும் கொண்ட ஒரு மனித நேயப் படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தமது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார். எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும், அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி, மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.'' என்கிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள வடக்கே போகும் மெயில், தாலி பாக்கியம், திக்குத் தெரியாத..., குலதெய்வம், தண்ணீர் தண்ணீர், என்று மறையும், விடியலைத் தேடி ஆகிய கதைகள் நேரடியாக அல்லது மறைமுகமாகவேனும் யுத்த கால கெடுபிடிகள், கஷ்டங்கள், பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஞாபகப்படுத்தி மனதை ரணப்படுத்துகின்றன. போர்காலச் சூழலுடன் பின்னிப் பிணைந்த இக் கதைகள் நிச்சயமாக அச்சூழலைக் கடந்து வந்த மக்களின் மனதில் ஒரு உஷ்ணமான பெருமூச்சை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வடக்கே போகும் மெயில் (பக்கம் 13) என்ற சிறுகதை ரயில் பயணத்தை உணர்வு பூர்வமாக சித்திரித்திருக்கின்றது. கதாசிரியர் சொல்லும் பாங்கில் ரயிலில் வாசகர்களும் பயணம் செய்வது போன்ற ஒரு மனநிலை ஏற்படுவது மொழிநடைச் சிறப்பு என்று கூறலாம். அன்றாடம் பயணம் செய்பவர்கள் வெகு சாதாரணமாக எதிர்நோக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒரு சிறுகதையாக கூறியிருக்கிறார். இச்சிறுகதையில் பயணிகள் பற்றிய மனப்பதிவுகள் கூறப்படுவதோடு திடீரென ஒரு கும்பல் ரயிலுக்குள் ஏறி தமது அடாவடித்தனங்களை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சொற்ப நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதத்தில் உயிர்களும், உடமைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனூடாக இனப்பிரச்சினையின் கொடுமை பற்றியும், அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காசு இருக்கும்போது மற்றவர்களை இழிவாகப் பார்த்தவர்களுக்கும், ஊனமானவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் தமக்கென துன்பம் வரும்போது அதை உணர்ந்துகொள்வார்கள் போன்ற தத்துவச் சிந்தனைகளும் இச்சிறுகதையில் பொதிந்துள்ளமை அவதானத்துக்குரியது.

என்னைத் தெரியுமா? (பக்கம் 31) என்ற சிறுகதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்ட ஒரு யதார்த்தமான சிறுகதையாகும். பொழுதுபோக்குச் சாதனமாகக் கருதப்படும் வானொலியினால் இன்று பலரது வாழ்க்கையை சிதைத்திருக்கின்ற சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன. அதில் மிக முக்கியமான அம்சம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது, தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கும் நேரத்தில் தொலைபேசியில் பெண்கள் தங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லிவிடுவதுதான். இச்சிறுகதையில் வரும் கல்பனா என்ற பாத்திரமும் அத்தகைய இயல்பைக் கொண்டவள். கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார் என்ற தகவல் தொடக்கம் தனக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் வரை ஊருலகத்துக்கே சொல்கின்றாள். பிறகு திருடன் அவளது வீட்டுக்கு வருவதைக் கண்ட பக்கத்து வீட்டார் பொலிசுக்கு அறிவிக்கின்றனர். இதுதான் சாராம்சம். இக்கதை சொல்ல வரும் சேதி எத்தனை ஆழமானது? பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண்கள் பக்குவமில்லாமல் இவ்வாறு நடந்துகொள்வது நடைமுறையில் இருப்பதை மறந்துவிடக்கூடாது. யதார்த்தத்துக்கு புறம்பான கற்பனைக் கதைகளை மக்கள் ரசிப்பதைவிட இவ்வாறான கதைகள் வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் சிறப்பான சிறுகதையாக இதைக் கொள்ளலாம்.

தாலிபாக்கியம் (பக்கம் 38) என்ற சிறுகதையின் ஆரம்பம் கற்பனைகள் பலதை ஏற்படுத்திவிடுகின்றது. வாசிப்பின் இடையில் வயதான வள்ளிப்பிள்ளை - கந்தசாமி தம்பதியர் மீண்டும் திருமணம் செய்துகொள்கின்றார்கள். காரணம் இப்போது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசதியாக வாழ்வதால் காசுக்குப் பஞ்சமில்லை. எனவே வள்ளியம்மைக்கு புதுத்தாலி மற்றும் நகைகளை அணிவித்துப் பார்க்க ஆசைப்படுகின்றார் கந்தசாமி. ஊரார்கள், நண்பர்கள் அனைவருக்கும் தடல்புடல் விருந்து கொடுக்கப்டுகின்றது. கதையின் இறுதியில் மகனது கல்யாண விடயமாக தரகரைச் சந்திக்க செல்லும் கந்தசாமி டவுன் பக்கம் ஹர்த்தால் என்பது தெரியாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிடுகின்றார். குதூகலமாக வாசித்த சிறுகதை மனதில் ஈரத்தை கசியச் செய்கின்றது. ஒரு சின்ன சிறுகதையில் இதயத்தை உருக்கும் விடயத்தை உள்ளடக்கியிருக்கும் பாங்கு சிறப்பிற்குரியது எனலாம்.

திக்குத் தெரியாத... (பக்கம் 42) என்ற சிறுகதை யுத்த காலகட்டத்தை நினைவுபடுத்திச் செல்கின்றது. யார் குண்டு வைத்தாலும் சிறுபான்மை இனத்தவரை சந்தேகம் கொண்டு பார்த்து பொலிசுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பார்கள். செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதிவிடுவார்கள். அத்தகையதொரு பிண்ணனியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதையில் வரும் அவனும் பொலிசாரினால் ஏற்றிச்செல்லப்படுகின்றான். பொலிஸில் உள்ள கம்பிக்கூண்டினுள் அவனுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கின்றனர். பிரபு என்ற அந்த மாணவனுக்கு தமிழ் பத்திரிகையைக் கொடுத்து படிக்கச் சொல்லுகின்றனர். காரணம் அவன் வருவதற்கு முதல்நாள் அந்தப் பிரதேசத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. கண்டியைச் சொந்த ஊடராகக் கொண்ட அவனை அந்தத் தமிழ் பத்திரிகையை வாசிக்கச் சொல்லி அதட்ட, அவன் மறுக்கின்றான். பொலிசார் மிகவும் கடுமையாக நடந்துகொள்கையில், அவன் சிங்கள மொழி மூலமே கற்றுக்கொண்டிருப்பதாகவும், தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்றும் கூறுகின்றான். அவனுக்கு அடிக்க கையை ஓங்கிய அதிகாரி அதிர்ச்சியடைவதாக கதை நிறைவடைகின்றது.

முடிவிலும் ஒன்று தொடரலாம் (பக்கம் 47) என்ற சிறுகதை தொழிலாளர் பிரச்சனை பற்றிப் பேசுகின்றது. அன்று தொடக்கம் இன்று வரை தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்வதும், தொழிற்சாலை நிர்வாகம் வேறு தொழிலாளிகளை வேலைக்குச் சேர்ப்பதும் நடந்தேறி வரும் விடயமாகும். வறுமையில் வாடுபவர்கள் வேறு வழியில்லாமல் குறைந்த சம்பளத்துக்காக வேலைக்குச் சென்றுவிடுகின்றார். இயலுமானவர்கள் தெரிந்தவர்களின் கையைக் காலைப் பிடித்தேனும் வேறு தொழில்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள். முதலாளி வர்க்கத்தினர் என்றும் போல சுகபோக வாழ்க்கை வாழ்வதும், தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே மாய்ந்து போவதும் விதி என்றால் அதை மாற்ற யாராலும் முடியாதே.

இவ்வாறாக பல யதார்தமான விடயங்களை கருப்பொருட்களாக வைத்தே தனது சகல கதைகளையும் நூலாசிரியர் படைத்துள்ளார். ஏகாம்பரம் ரவிவர்மா எழுதிய தமிழக அரசியல், திரைக்கு வராத சங்கதி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள், பாடல் பிறந்த கதை ஆகியவை வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. தனது ஆசிரியபீடப் பணிகளில் பல புதிய கவிஞர்களையும், எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இவருக்கு உண்டு. திரு. ரவிவர்மா இதுவரை பத்திரிகைளில் எழுதி வெளிவந்த பல கவிதைகளையும் தொகுத்து ஒரு கவிதை நூலாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!!!

நூலின் தலைப்பு - வடக்கே போகும் மெயில்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூரன் ஏ. ரவிவர்மா
வெளியீடு - காயத்திரி பப்ளிகேஷன்
விலை - 250 ரூபாய்

60. என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.



என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.

சூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.

ஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.

நதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-

நான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை
தடைகள் எனக்கு புதிதல்ல
மேலிருந்து கீழாக குதித்து
விளையாடுவதிலேயே எனக்கு இஷ்டம்
பல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்
மரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு
தொடர்ந்திருக்கின்றேன் என் பயணத்தினை
பாறைகளிலிருந்து தினம் கற்சில்லுகளை
பிரித்து அங்குமிங்குமாக சேர்த்திருக்கிறேன்
இல்லை சிதைத்திருக்கிறேன்
ஒரு நாளும் மரங்களோ பாறைகளோ
என் மீது கோபித்ததில்லை..

கடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.

நீ மரணம் பற்றி அந்த இரவு
முழுவதுமாய் பேசிக்கொண்டேயிருந்தாய்
பயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி
சிரித்தது..
உன் முகத்தில் நான் என்றைக்குமே
கண்டிடாத புன்னகையையும்
உன் வார்த்தையின் தெளிவையும் கண்டு
நான் ஒரு நீள் தெருவில் நடப்பதான
எண்ணத்தில் பயணிக்கிறேன்..
நடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்
என் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது
மரணம்... மரணம்... மரணம்...
இப்படியாய் சகோதரி உன் பேச்சு
விகசித்துக் கொண்டிருந்தது..
அப்போது எனக்கும் தெரிந்திருக்கவில்லை..
நீ அறிந்திருந்தாயா?
உனது கடைசி இரவை???

விஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.

என் உடலின் மேலாக
குட்டிக் கம்பளிப் பூச்சியொன்று
ஊர்ந்து உதிர்த்து விட்டுச்சென்ற
மயிர்க்கால்கள் எங்குமாக படர்ந்து
தழும்புகளை ரயில்ப் பாதையாய்
வரைந்து விட்டிருந்தது..
குழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..

எதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா..? (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.

நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது
றிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்துவிடுவாய் என்று..

இப்போ நான் எப்படிச் சொல்வேன்

நீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு
மார்க்கம் கற்ற குர்ஆன்
மத்ரஸாவுக்கு
அந்த அடுப்பங்கரைக்கும்
ஆட்டுப் பட்டிக்கும்
எப்படிச் சொல்வேன்
நீ இனி வரவே மாட்டாயென்று..

நீயும் சகோதரியுமாய்
ஊஞ்சல் ஆடிய புளியமரமும்
தும்பி பிடித்து விளையாடிய
அந்தக் கவளப் பற்றைகளும்
உன்னைத் தேடுமே...

கவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - என் எல்லா நரம்புகளிலும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு - பேனா பப்ளிகேஷன்
விலை - 200 ரூபாய்