Thursday, October 29, 2015

91. மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.

சிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.

`இதெல்லாம் உங்களை ஏமாத்துற வேலை. உங்களுக்காக எந்த சொத்தையாவது சாச்சா எழுதிவச்சாரா?'

'ஆமா! நீங்க சீதனமே வேணாம்னு என்னை கட்டிக்கிட்டபோதும் காணி முழுசையும் என் பேருல எழுதியிருக்காரே'

'வெறும் காணியை தந்தா போதுமா? அதுல குடை பிடிச்சிக்கிட்டா குடும்பம் நடத்துறது?'

'குடை பிடிச்சுக்கிட்டு எதுக்கு குடும்பம் நடத்தனும்? இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுலயே வாழலாமே. கடல் மாதிரி இடம் இருக்கே'

அஸ்மானின் சுயரூபத்தை அறிந்துகொண்ட ஸாஹினா அவனைவிட்டு தூரமாகின்றாள். இப்போதுகூட அவன் ஸாஹினாவைக் கெஞ்சுவது அவளது நகைகளை எடுப்பதற்காகத்தான் என்று கதை இறுதியில் சொல்லப்படுவதிலிருந்து அவனது பேராசைக் குணம் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கின்றது.

இன்றைய காலத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்பவர்கள் அதிகம். காசு கொடுத்தால் அதைத் திருப்பி எடுப்பதற்குள் பகை ஏற்படுகின்றது. உதவிகள் செய்தால் அது உபத்திரவமாகின்றது. கலிகாலம் என்று சொல்வதற்கேற்ப இன்று அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டால் போதும் என்ற பக்குவம் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. தலைநகரைப் பொறுத்தளவில் அடுக்குமாடி வீடுகளில் வாழ்வோர் அடுத்த வீட்டில் யார் தங்கியிருக்கின்றனர் என்பதைக்கூட அறிந்துகொள்ள முனையாதவர்களாகக் காணப்படுகின்றனர். காரணம் யாரை நம்புவது என்று தெரியாத நிலை. யாரைப் பார்த்தாலும் குள்ள நரித்தனம். நலவுக்குக் காலமில்லை (பக்கம் 22) என்ற சிறுகதையும் அத்தகையதொரு வலியையே தனக்குள் சுமந்திருக்கின்றது.

காயத்ரியின் வீட்டில் வேலம்மா என்பவள் வேலை செய்கின்றாள். இந்த நிலையில் தனது மகளின் பாதுகாப்புக் கருதி, தனது மகள் ரோஜாவை காயத்ரியின் வீட்டில் தங்க வைக்க காயத்ரியிடம் அனுமதி கேட்கின்றாள் வேலம்மா. நல்லுள்ளம் படைத்த காயத்ரியும் தன் கணவனிடம் அனுமதி கேட்டுவிட்டு அதற்குச் சம்மதிக்கின்றாள். ரோஜா வந்து சிறிது காலத்தில் வேலம்மா தனக்குச் சுகமில்லை என்றுகூறி வேலையிலிருந்து நின்றுவிடுகின்றாள். காயத்ரி ரோஜாவை ஒரு வேலைக்காரியாகப் பார்க்காமல் அவளைப் படிக்கவைத்து ஆடைகள் வாங்கிக்கொடுத்து அன்பாகக் கவனித்து வருகின்றாள். ஆனால் ரோஜா மற்றவர்களின் துன்பத்தில் குளிர்காயும் கெட்ட பழக்கத்தை சிறுவயதிலேயே பழகியிருந்தாள். கோள் சொல்வது அவளுக்கு வா(வே)டிக்கையான விடயமாக இருந்தது. காயத்ரியின் அயல் வீட்டில் வாழ்பவர்களையும் காயத்திரியையும் பிரிக்கும் துரித வேலைகளில் ரோஜா சந்தோசம் கண்டாள். பின்வரும் உரையாடல் இதைப் பறை சாற்றுகின்றது.

'காயத்ரி அக்கா அடுத்தவீட்டு ஆனந்தி எங்க மரத்துல மாங்கா பறிக்கிறா. உங்ககிட்ட கேட்டாவா?' என்றாள் ரோஜா.

'இல்ல ரோஜா. பறிச்சிட்டு போவட்டும். பாவம் மசக்கைக்காரி'

எனப் பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினாள் காயத்ரி. உடனே ஆனந்தியிடம் சென்ற ரோஜா,

'நீங்க யாருகிட்ட கேட்டு மாங்கா பறிக்கிறீங்கன்னு காயத்ரி அக்கா கேட்டுவரச் சொன்னா'

இவ்வாறான செயற்பாடுகளால் காயத்ரியிடம் யாரும் அன்பாகப் பழகவில்லை. அவர்களிடமிருந்து காரணத்தை அறிந்துகொண்ட காயத்ரி அதிர்ச்சியடைகின்றாள். காலப்போக்கில் ரோஜாவின் நடவடிக்கைகளும் மோசமாகின்றன. பல வாலிபர்களோடு அவளுக்கு தொடர்பிருப்பதாக அறிந்த காயத்ரி அவளை அங்கிருந்து அனுப்பி விடுகின்றாள். அதன் பிறகுதான் அவள் நிம்மதியாக இருப்பதாகக் கதையில் சொல்லப்படுகின்றது.

சமூகமே உணர்வாயா? (பக்கம் 28) என்ற கதை அனைவரும் படித்துத் தெளிவடைய வேண்டிய சிறப்பான சிறுகதையாகும். இன்று சில ஆண்கள் தன் மனைவி அழகானவளாக, கவர்ச்சியானவளாக இருக்க வேண்டும் என எண்ணி வெளியிடங்களுக்கும் அவ்வாறே அழைத்துச் செல்கின்றனர். தம் நண்பர்களிடத்தில் தன் மனைவியின் பெருமைகளைப்பற்றி சிலாகித்துப் பேசுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மற்றவர்களின் மனதில் தீய எண்ணங்களை வளர்த்துவிடும் என்பதை அநேகர் உணர்ந்து கொள்வதில்லை.

இக்கதையில் வரும் ஸபார் என்பவன் சபலப் புத்திகொண்டவன். அவன் ரஸ்லானின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ரஸ்லானின் மனைவியைத் தகாத முறையில் பார்த்து ரசிக்கின்றவன். இதை அறிந்த ரஸ்லானின் மனைவி, ரஸ்லானிடம் பல தடவைகள் ஸபாரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என மன்றாடுகின்றாள். ஆனால் ரஸ்லான் அவள் சொல்வதைக் கேட்கவில்லை. இன்னொரு தினம் திடீரென தன் வீட்டுக்கு வரும் ரஸ்லான் ஸபார் சமையலறை ஜன்னல் வழியாக தன் மனைவியை கள்ளத்தனமாக நோக்குதைக் ஒருநாள் கண்டு விடுகின்றான். தன் மனைவி ஸபாரை வெறுப்பதற்கான காரணம் ரஸ்லானுக்கு அப்போதுதான் புரிகின்றது. அதை எமது சமூகம் எப்போது உணரப் போகின்றது என்று கதை இறுதியில் நூலாசிரியர் வாசகர்களிடம் கேள்விக் கணையைத் தொடுக்கின்றார்.

தென்றலின் தாக்கம் (பக்கம் 12) என்ற சிறுகதை திருமணமான ஆண்கள் எதிர்நோக்கும் நெருக்கடியான சூழலை நன்கு சித்தரித்துக் காட்டுகின்றது. திருமணமான பின்பு மனைவியை ஆண்களின் மனம் அதிகமாக விரும்புகின்றது. தாயின் சொல்லைவிட மனைவி சொல் மந்திரமாகின்றது. அந்த மனநிலையில் இருப்பவன்தான் இக்கதையில் வரும் பிரதான பாத்திரம். மனைவியின் சொல்லுக்கு அடிமையாகி தாயின் அரவணைப்பை இழந்து தவிக்கின்றான். தான் விரும்பியவளையே தனக்குத் திருமணம் முடித்து வைத்த தன் தாயை எப்படி அவ்வளவு சீக்கிரம் தூக்கியெறிய முடிந்தது என்று தன்னைத் தானே கேட்டு அழுகின்றது அவனது ஆத்மா. மனைவியின் அன்பில் புதைந்து கிடந்தவன் தாயைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

ஒரே வீட்டுக்குள் வசித்தாலும் ஒரு திருடனைப் போலத்தான் ஆரம்பத்தில் தன் தாயுடனும் தங்கையுடனும் அவன் பேசுவான். காலப் போக்கில் மனைவிக்கு கட்டுப்பட்டு அதையும் அடியோடு நிறுத்திவிட்டு வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டான். மனைவியின் ஆடம்பரத் தேவைகள் அதிகரித்தன. காலப்போக்கில் அவனது வியாபாரம் நஷ்டமடைந்தது. பணம் இருக்கும்போது அவனை மதித்த மனைவியும், மனைவியின் தாயும் இப்போது அவனைக் கணக்கெடுப்பதே இல்லை. இப்போதுதான் அவனுக்கு தன் தாயின்  அருமை புரிகின்றது. எல்லாவற்றையும் வீசிவிட்டு தாய் மடியில் விழுந்து கதறி அழ வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு. ஒருநாள் அவனது தாய் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்க்கின்றபோது வீட்டுக் கதவு பூட்டியிருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் இறைவனிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்றெண்ணி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றான் அவன். இக்கதையை வாசிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் வலி உயிர் வரை ஆழமாக ஊடுறுவுகின்றது. தன் தாயை மறந்து மனைவியை நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும் இக்கதை நல்லதொரு படிப்பினையாக அமைகின்றது.

சமுதாயத்தில் நாம் காணும் விடயம் யாவும் நமக்கொரு பாடமாகத்தான் இருக்கின்றது. நாம் தான்  அவற்றைப் பயில்வதில்லை. அவ்வாறான விடயங்களை சிறுகதைகள் மூலம் படிக்க நேர்கின்றபோது மனதுக்கு நிறைவாக இருக்கின்றது. அந்த நிறைவை வாசகர்களுக்குத் தன் எழுத்து மூலம் வழங்கும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மீண்டும் ஒரு வசந்தம்
நூல் - சிறுகதை
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

Wednesday, October 28, 2015

90. முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் நூல் மீதான பார்வை

முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் நூல் மீதான பார்வை

சிறுவர் இலக்கியத் துறையில் தன் பெயரைப் பதித்துக் கொண்டவர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஜெனீரா ஹைருள் அமான் குறிப்பிடத்தக்கவர். அவரது நூல்கள் பல விருதுகளையும், பரிசில்களையும் பெற்றிருப்பதானது இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். குழந்தைகளாக மாறி அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடல்களை எழுதுவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனாலும் மாணவர்களின் வாசிப்பின்மீது கொண்ட அக்கறையால் அத்தகைய சிறந்த பணியைச் செய்திருக்கின்றார் நூலாசிரியர் ஜெனீரா. ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக தான் கடமையாற்றுவதனாலும், அவரது குடும்பச் சூழ்நிலை சாதகமாக அமைந்திருப்பதனாலும் அவரால் தொடர்ந்து எழுத்துத் துறையில் பயணிக்க முடிந்திருக்கிறது.

முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்ற தொகுதி அவரது ஆறாவது நூலாகும். இந்நூலில் 34 சிறுவர் பாடல்கள் 69 பக்களில் அமைந்திருக்கின்றன.

ஓசைநயமிக்க பாடல் வரிகளைக் கொண்டமைந்த விளக்கம் தாருங்கள் (பக்கம் 03) என்ற பாடல் இரசிக்கத்தக்கதாய் இருக்கின்றது. சூரியக் கதிரின் சூட்டிலா சோளப் பொரிகள் பொரித்தன என்ற வரிகள் மிக அற்புதமானவையாக இருக்கின்றன. அதேபோல நட்சத்திரங்கள் பற்றிய நூலாசிரியன் கற்பனை இவ்வாறு அமைந்திருக்கின்றன.

சூரியக் கதிரின் சூட்டிலா
சோளப் பொரிகள் பொரித்தன
காற்றுமெல்லத் தொட்டதாலா
கண்கள் சிமிட்டும் தாரகை

மல்லிகைப் பூக்கள் என்று எண்ணியே
மதிததான் கொண்டுசென்றதா?
வெள்ளைநிறத்துப் பூக்கள்தான்
வெள்ளிஎன்றுஆனதா?

விரைந்து வாருங்கள் (பக்கம் 09) என்ற பாடலில் நற்பண்புகள் கூறப்பட்டிருக்கின்றன. கல்வி ஆரம்பத்தில் கசப்பாக இருந்தபோதும் அதுவே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக அமையும் என்தை எடுத்துக் காட்டுகின்றார். விளையாட்டு மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டால் அவை மாணவர் மனதில் பதியும் என்பதை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

படிக்கச் சிறுவர் வருகின்றார்
பண்பை மறந்து திரிகின்றார்....
....விலகிச் செல்லும் மாணவர்க்கு
விளையாட்டு மூலம் கற்பிப்போம்

ரோசாமலர் பற்றி மலர்களின் ராணி ரோசா (பக்கம் 11) என்ற கவிதையில் அழகாக கூறப்பட்டுள்ளது. ரோசாமலர் பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுகின்றது. அதன் தன்மையும், நிறமும் பார்ப்பவர் கண்ணைக் கவர்ந்துவிடுவதே அதற்குக் காரணமாகும். அழகுக்காகவும், அன்பைவெளிப்படுத்தவும் ரோசா பயன்படுகின்றது. ரோசாபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

பலபல நிறங்களில் பூக்குமாம்
பலரையும் விரும்ப வைக்குமாம்
வளர்ப்பது சற்றுச் சிரமம்தான்
வளர்ந்து பூத்தால் அழகுதான்

நல்லதை வளருங்கள் (பக்கம் 21) எனும் பாடல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பாடலாகும். அறிவுரைகளை அழகிய முறையில் அள்ளித் தெளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஜனீரா. அதைச் செய் இதைச் செய் என்று குழந்தைகளை வருத்தக் கூடாது. பக்குவமாக அவர்களிடம் புரியவைக்க வேண்டும். அறிவுரையை இசையுடன், பாடலாகச் சொல்லிக் கொடுத்தால் அவை மாணவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.

அன்பு கொண்ட சிறுவர்களே
அறிவைத் தேடிப் படியுங்கள்
அகிம்சை வழியில் செல்லுங்கள்
அகிலம் போற்ற வாழுங்கள்

வட்டமிடும் பருந்து (பக்கம் 29) என்ற பாடலில் பருந்தின் பண்புகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களின் சிந்தனையைக் கவரும் விதத்தில் எடுத்தாளப்பட்டுள்ள மொழி நடை சிறப்புக்குரியதெனலாம்.

கூர்மையான கண்களால்
கூர்ந்து நன்கு பார்க்கின்றாய்
கூர்மைமிக்க நகங்களால்
குஞ்சைத் தூக்கிச் செல்கின்றாய்

சிறுவர்களின் வாசிப்புத் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் வண்ணம் பாடல்கள் எழுதப்படுவது இன்றியமையாதது. அந்தப் பணியை செவ்வனே செய்யும் ஜெனீரா அமானுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முப்லிஹாவின் சிறுவர் கானங்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஜெனீரா கைருல் அமான்
வெளியீடு - அல் அக்தாப் இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய் 

89. கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.

யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது.  இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05)  என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.

அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.

பேய்களுக்குப் பயமில்லை (பக்கம் 13) என்ற சிறுகதை வேடிக்கைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் சுவாரஷ்யமிக்க சிறுகதையாகும். பேய்கள் பற்றிய பிரக்ஞைப் பூர்வமான விடயங்களை முதலில் பேசிவிட்டு இறுதியில் நகைச்சுவையாக முடிந்திருக்கின்றது இக்கதை. கோசலையும் அனுவும் வெளிநாட்டுக்கு படிக்கச் செல்கின்றனர். இருவரும் ஒரே அறையில் தங்கிப் படிக்கும் நேரத்தில் கோசலை பேய் பேய் என்று கத்தி அனுவையும் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றாள். நாட்களின் நகர்வில் ஒருநாள் திடீரென கோசலை தன் தந்தைக்கு அறிவித்து அவரும் அவளைப் பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் அனுதான் பேய் பற்றிக் கூறி தன்னைப் பயமுறுத்துவதாக பொய்யுரைக்கின்றாள். கோசலையின் தந்தை அனுவை பின்வருமாறு திட்டுகின்றார்.

``ஆளுக்காள் துணையாக இருப்பியள் என்று சேர்த்து அனுப்பினால் இங்க நீ மகளையும் பயப்படுத்தி வச்சிருக்கிறாய்.. இப்பவே அவளுக்கு வேற அறை ஒழுங்கு பண்ணப் போறன்''

கோசலை போன்றவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்வது ஆபத்து என்பதை இந்தக் கதை மூலம் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கின்றார் நூலாசிரியர்.

விலகிடும் திரைகள் (பக்கம் 31) என்ற சிறுகதை கணவன் மனைவியின் ஒற்றுமை பற்றி எடுத்தியம்புகின்றது. கணேசனும் மாலாவும் அந்நியோன்னியமான தம்பதியர். சில காலமாக இருவருக்குமிடையில் இடைவெளி அதிகமாகியிருக்கின்றது. கணேசன்தான் அவளைவிட்டு ஒதுங்குகின்றான். மாலா அதற்கான காரணத்தை ஆராய்கின்றாள். கணேசனின் வியாபாரம் நஷ்டமடைந்து வருவதால் அது பற்றிய எண்ணம் அவனை வாட்டுகின்றது என்பதை அவள் உணர்ந்துகொள்கின்றாள். அதனால் அவள் தையல் வேலை செய்து குடும்பப் பாரத்தை சற்று குறைக்க எண்ணினாள். ஆனால் கணேசனுக்கு அது அவமானமாக இருக்கின்றது. மனைவியின் காசில் தான் வாழ்வதா என்ற ஈகோ எழுகின்றது. அதை அறிந்த அவள் அவனை பக்குவமாக அணுகி தன்பக்க நியாயத்தை எடுத்துக் கூறி வியாபாரம் நஷ்டமடையாதிருக்க வேறு வழிவகைகளையும் கூறுகின்றாள். கணேசனுக்கு இப்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக தான் மட்டும் ஒரு முடிவை எடுத்துவிட்டு மற்றவரை காயப்படுத்தக் கூடாது என்பதை அழகாக சொல்கின்றது இந்தக் கதை.

கால தரிசனம் (பக்கம் 43) என்ற சிறுகதை போர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நிலையை எடுத்துக் கூறியிருக்கின்றது. காவியாவும் பிரசன்னாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள். ஆனால் அவனது சாதியைக் காரணம் காட்டி காவியாவின் பெற்றோர் அவர்களின் காதலை எதிர்க்கின்றார்கள். இந்த விரக்தியில் அவனோ போராளியாக இணைகின்றான். சில  காலங்களின் பின்னர் காவியாவின் தந்தை வீதி விபத்தில் இறந்து போகின்றார். சகோதரர்கள் தமது வாழ்வைத் தேடிக்கொண்டு போய்விட்டர்கள். இவ்வாறு அடுத்தடுத்து வந்த இடர்களால் காவியாவுக்கு மனநிலை பாதிப்படைகின்றது. மரத்திலிருந்து விழுந்தவளை மாடு முட்டின கதையாக அவள்  மானபங்கப்படுத்தப்படுகின்றாள். காலப் போக்கில் பிரசன்னா காவியாவைக் காண்கையில் அவள் உருமாறி கறுத்துப் போயிருப்பதைக் கண்டு துன்பமடைகின்றான். அவள் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்த அவன் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களைச் சந்தித்து காவியாவைப் பற்றிக் கூறி அவளை குணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றான். அவளது மனநிலையில் முன்னேற்றம் தெரிகின்றது. பிரசன்னாவிடம் தான் ஒரு எச்சில் கனி என்கின்றாள் காவியா.

ஆரம்பத்தில் பிரசன்னாவை அவமதித்த காவியாவின் தாய் இப்போது,

`தம்பி காவியாவுக்கு உங்களை விட்டா யார் இருக்கினம்?' என்கின்றார்.

ஆனால் காவியா இதற்கு சம்மதிக்காமல் இருக்க பிரசன்னாவோ,

`நான் உன்னை நேசித்தது உண்மை. நீ எனக்கு துரோகம் செய்யாபோது ஏன் யோசிக்கின்றாய்?' என்கின்றான்.

அந்தத் தூய காதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாய் கதை நிறைவுறுகின்றது.

கோடை மழை (பக்கம் 74) என்ற சிறுகதை முன்னால் காதலியை சந்திக்கும் ஒரு ஆணின் மன உணர்வுகளை சித்தரித்துக் காட்டுகின்றது. முடிந்து போன காதல் மீண்டும் மனதில் வந்தால் புயலடிக்கும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

தன் மனைவி அமராவதியோடு அன்பாக ஆதரவாக இருந்தாலும் அந்நியோன்னியம் இருக்கவில்லை. ஆனாலும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருபவர் தன் காதலியான செல்வியைக் கண்டதும் அந்தரப்படுகின்றார். செல்வி தங்குமிடம் தேடி அவ்வீட்டுக்கு வருகின்றாள். தன் பழைய காதலனின் வீடு அது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. திடீரென இருவரும் ஒரே வீட்டில் சந்திக்கும்போது மனைவி அமராவதி இருவரையும் அறிமுகம் செய்து வைக்கின்றாள். ஏற்கனவே தாம் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அவர் தன் மனைவிக்குக் கூற அவளும் சந்தோசப்படுகின்றாள்.

செல்வியின் கணவன் இறந்துவிட்டமையும் இவரது மனைவி நோயாளியாக இருப்பதும் அவர் மனதில் வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கின்றது. ஆனால் செல்வியோ மிகவும் உறுதியாக இருக்கின்றாள்.
அமராவதிக்கு நோய் முற்றிப் போக அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றாள். அவள் தன் கணவனிடமும் செல்வியிடமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகின்றாள். செல்வி அதிர்ச்சியாகி மௌனமாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு கணவனிடம் கேட்க, அவரும் செல்வியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றார். வீட்டில் வந்து விசாரிக்கும்போது செல்வி விரும்பிச் சொல்லவில்லை என்பது தெரிய வருகின்றது. ஆனாலும் அவரது மனம் சலனமடைகின்றது. அவளைத் தொட எத்தனிக்கும் போது ஷபோங்க வெளியே| என்று காட்டமாக் கூறுகின்றாள் செல்வி. அச்சந்தர்ப்பம் பார்த்து அவரது தொலைபேசி ஒலிக்கின்றது. அமராவதி இந்துவிட்டதாக வந்த அந்தச் செய்தியில் அவரும் அதிர்ச்சியாகியிருப்பதாக கதை நிறைவடைகின்றது.

இவ்வாறான சமுதாய விடயங்களை தன் படைப்பினூடாக வெளிப்படுத்தும் ஆற்றல் ச. முருகானந்தனுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கின்றது. கோடை மழை இவரது 10 ஆவது சிறுகதைத் தொகுதியாகும். இதுதவிர 02 கவிதைத் தொகுதிகளையும், குறநாவல்கள் இரண்டையும், ஒரு கட்டுரைத் தொகுதியும் மூன்று மருத்துவம் சார்ந்த நூல்களும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 40க்கும் மேற்பட்ட பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ள நூலாசிரியர் தனது சிறுகதைகள் விளிம்பு நிலை மக்களின் விடிவுக்கு பயன்பட்டால் அதுவே தனக்குப் போதும் என்று கூறுகிறார். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறேன்;!!!

நூலின் பெயர் - கோடை மழை
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ச. முருகானந்தன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

88. நிலவு நீரிலும் தெரியும் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

நிலவு நீரிலும் தெரியும் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

முருகேசு ரவீந்திரன் இலங்கை வானொலியின் முதற்தர அறிவிப்பாளராவார். இவர் எழுதியிருக்கும் நிலவு நீரிலும் சுடும் என்ற சிறுகதைத் தொகுதி 12 சிறுகதைகளை உஎள்ளடக்கி 90 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் கதைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றது. மண் வாசனைச் சொற்களோடு கதைகள் யாவும் எழுதப்பட்டிருக்கின்றன. சமுதாயத்தில் பரவிக் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள் இவரது கதைகளின் கருவாக கையாளப்பட்டுள்ளன.

இறுக்கம் (பக்கம் 10) என்ற சிறுகதை போர்க் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் துயரை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. சிவராசா கொழும்பில் வேலை செய்பவன். விடுமுறை தினங்களில் ஊருக்குப் போவான். மனைவியும், மகன் கோபுவும் அவன் வருகைக்காக காத்திருப்பார்கள். ஊருக்குப் போகும்போது இருக்கும் உற்சாகம் கொழும்புக்கு மீண்டும் வரும்போது அவனுக்கு இருப்பதில்லை. ஆனால் தொழில் முக்கியம் என்பதால் மனைவி அவனை ஆதரவுடன் அனுப்பி வைப்பாள். தொழிலுக்கு வந்தாலும் அவனுக்கு வீட்டு நினைப்பே காணப்படும். கால்கற்சட்டை உடுத்தி காற்றாடியின் கீழ் வேலைப் பார்த்த அவன் யுத்த நிலமையில் வீட்டாரை விட்டுப் போக மனமின்றி சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்வதற்கு எண்ணி அதுபற்றி மனைவியிடம் கூறுகின்றான். மனைவிக்கும் அவன் தங்களோடு வீட்டில் இருப்பது மனதுக்குத் திருப்தியாக இருப்பதால் அவள் அதற்குச் சம்மதிக்கின்றாள். கதை நிறைவடைகின்றது.

நிலவு நீரிலும் தெரியும் (பக்கம் 17) என்ற சிறுகதை பிரிவின் துயரத்தைச் சொல்லி நிற்கின்றது. அவன் தன் மகள் சுஜியுடன் ஐஸ்கிரீம் கடைக்குச் செல்கின்றான். அவளோ குழந்தைத் தனத்துக்கே உரிய குறும்போடு ஐஸ்கிரீமை சுவைப்பதை இவன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இடையே அவர்களிருவருக்கும் இடையே நடக்கும் சிறு உரையாடல் அவன் மனதில் தேக்கி வைத்திருக்கும் துயரத்தை அப்படியே புடம் போட்டுக் காட்டுகின்றது.

`அப்பா இனி எப்ப வருவியள்?'

`கெதியா வருவன்'

`கெதியா என்டால்?'

`இந்த மாதக் கடைசியில்'

`அப்பா உங்களுக்கு லீவு கிடைக்குமே?'

`கிடைக்கும்'

மீண்டும் அவன் கொழும்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருக்கும் ஒரு சிறுமி முருங்கைக் காய் விற்றபடி வருகின்றாள். அவளிடம் அவன் அனைத்து முரங்கைக் கட்டுக்களையும் வாங்கிவிட்டு பணம் கொடுக்கின்றான். அவளோ ஓடிச்சென்று இரண்டு ஐஸ்கிரீம்களை வாங்கிவந்து அவனுக்கும் ஒன்றை நீட்டுகின்றாள். மீண்டும் மகள் சுஜியின் நினைவு அவனுக்கு வருகின்றது. பிரிவு தரும் துன்பம் யாவருக்கும் பொதுவானது. சிலசில சந்தர்ப்பங்களில் நாம் விரும்பாமலேயே பிரிவு நேர்ந்துவிடும் போது மனது தளர்ந்து போகின்றது. அத்தகையதொரு வலியை இக்கதை வாசகர்களுக்குள் ஏற்படுத்தி விடுவது கதையின் சிறப்பம்சமாகும்.

தெளிவு (பக்கம் 24) என்ற சிறுகதை திருமணம் முடிக்கக் காத்திருக்கும் கன்னியின் மன உணர்வுகளை தத்ரூபமாகச் சொல்லியிருக்கின்றது. தன்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற கணத்திலிருந்து தமிழினி ஆயிரமாயிரம் கற்பனைகளை வளர்க்கின்றாள். நேற்றுவரை தெரியாத சின்னச் சின்ன அழகுகள் எல்லாம் இன்று அவள் கண்ணில்பட்டு மகிழ்ச்சி காட்டுகின்றன. இந்த உலகம் அவளுக்கும் பார்த்தீபனுக்கும் மாத்திரம் உரியதாக அவளது பெண்ணுள்ளம் நினைத்து மகிழ்கின்றது. பெண் பார்க்க வந்திருந்த சமயம் அவளுடன் உரையாடிய பார்த்தீபன் தமிழினியை திருமணம் செய்யதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவளிடமே கூறும்போது இந்த உலகமே தன் வசப்பட்டுவிட்டதாய் தோன்றுகிறது அவளுக்கு.

ஆனால் அவனது வீட்டிலோ அவள் இதற்குமுதல் இன்னொருவனைக் காதலித்திருப்பதாக யாரோ சொன்ன செய்தியை அறிந்து தமிழினியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை பார்த்தீபனுக்கு மணமுடித்து வைக்க பேசிக்கொள்கின்றார்கள். பார்த்தீபனுக்கு தமிழின் காதலித்த விடயம் பெரிதாகத் தோன்றவில்லை. அவனும் மனதார சிலரை விரும்பியிருக்கின்றான். ஆனால் சொல்வதற்குத் துணிச்சலில்லாததால் அவை கைமீறிப் போய்விட்டன என கூறிக்கொண்டு தமிழியைச் சந்திக்கச் செல்வதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திருமணம் கைகூடுமா? இல்லையா என்பதை வாசகர்களின் கற்பனைக்கு விட்டிருக்கின்றார் நூலாசிரியர்.

பரந்துபட்ட வாசிப்பின் தேடல் வளம் மிக்கதொரு படைப்பாளனை உருவாக்கும். நூலாசிரியர் ஏற்கனவே வாழ்க்கைப் பயணம் சிறுகதைத் தொகுதியையும், அனைத்தும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முருகேசு இரவீந்திரன் அவர்கள் இன்னும் பல காத்திரமான படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள்!!!

நூல் - நிலவு நீரிலும் தெரியும்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - முருகேசு இரவீந்திரன்
வெளியீடு - யாழ். இந்துக் கல்லூரி நண்பர்கள் வட்டம்
விலை - 300 ரூபாய்

Saturday, October 24, 2015

87. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

தனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

 இனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

``மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது'' என்கிறார்.

இந்த நூலில் உள்ள முதலாவது கவிதை மாதா (பக்கம் 19) என்ற தலைப்பில் அமைந்து தாயின் பெருமையை பேசுகின்றது. ஒரு ஆணின் உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்தால் அவன் பிணமாகிறான். ஆனால் ஒரு பெண்ணின் உடலிலிருந்து ஒரு உயிரைப் பிரித்தெடுத்தால் அவள் தாயாகின்றாள். அத்தகையதொரு உறவின் உன்னதத்தைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. எனக்கு என்ன வாங்கினாய் என்றே எல்லா உறவுகளும் கேட்கும். ஆனால் தாயின் குரல் மாத்திரம்தான் எனக்கு எதுக்கு வாங்கினாய்? என்று ஒலிக்கும். நமது அத்தனை கவலைகளுக்கும் துன்பங்களுக்கும் வடிகாலாக தாயின் புன்னகை முகமே மருந்தாகிவிடும். பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து பெற்று தனது உதிரத்தையே பாலாக மாற்றி பசி போக்கிய தாயின் பெருமை பற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

அன்னை யெனும் உறவு அடிமனத் துணர்வு
அன்பின் சிகரமாய் அவனியில் நிலைக்கும்
என்னைச் சுமந்து எத்தனையோ நோய் தாங்கி
ஏற்றமுற வைத்த எழிலான தெய்வம்
இன்னல்கள் பல தாங்கி இன்பங்கள் மறந்து
இதய நோய் சுமந்த இல்லத் தலைவி அவள்
தன்னலம் பாராது தனித்துவம் பேணி
தளராது பணி செய்த தியாக தீபம்!

காவியம் இயற்றிட வேண்டும் அம்மா அதில்
கருப்பொருளாய் உனை அமர்த்தி
ஆவியது உடலைவிட்டகலும் வரை நீ
அகத்தினில் என்றும் உறைந்திருப்பாய்
பூவிலே வாசனை இருப்பது போல் உன்
புன்னகை முகம் என்றும் வாழுமம்மா
பாவிலே எனக்கென்றும் பல்லவி நீ
பண்புடன் உன் புகழினைப் பாடுகிறேன்!

குழந்தைகளின் உலகில் எல்லாமே மகிழ்ச்சிக்குரியனதான். கள்ளம் கபடமற்று மனதில் சந்தோசத்தை மட்டுமே சுமந்துகொண்டு புள்ளி மான்களாகத் துள்ளித் திரியும் பரவசம் மிகுந்த காலமது. எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாததொரு பொற்காலம். சின்னச் சின்ன சண்டைகள்.. குறும்புகள்.. அழுகைகள், விளையாட்டுக்கள் என பொழுது போவதே தெரியாமல் மகிழ்ந்திருந்த காலத்தை பசுமைக்காலம் (பக்கம் 23) என்ற கவிதை ஞாபகமூட்டிச் செல்கின்றது.

பத்து வயதுப் பருவமதில் பாலகர் நாமும் சேர்ந்தொன்றாய் சித்தம் மகிழ்ந்து திரிகையிலே சிந்தையில் கவலை இல்லையடி.. கடற்கரையோர மணல்மீது கள்ளங் கபடம் ஏதுமின்றி அடம்பன் பூவால் மாலைகட்டி அணிந்து நாமும் மகிழ்ந்தோமடி.. சிப்பி பொறுக்கிக் கொண்டு வந்து சிரட்டையில் ஒன்றாய்ச் சேர்த்தெடுத்து தப்பியோடிய நண்டு பற்றி தலையில் ஓடவிட்டோமடி.. கிணறு தோண்ட வேண்டுமென்று கிண்டிக் கிண்டி மண்ணெடுத்து தண்ணீர் ஊறி வருகையிலே தாவிக் குதித்துக் களித்தோமடி.. மண்ணால் வீடு கட்டி அதில் மலர்கள் குத்தி அலங்கரித்து வண்ணச் சிவப்புத் தாமழம் பழம் வைத்து அழகு பார்த்தோமடி.. ஆலமரத்தின் விழுதினிலே அழகாய் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த காலம் என்றும் பசுமையடி கண்ணில் இன்றும் வாழுதடி..

பிரிவு ஏனோ? (பக்கம் 34) என்ற கவிதை ஒற்றுமையை வலியுறுத்தும் அழகியல் கவிதையாகும். காகங்கள், எறும்புகள் போன்ற படைப்பினங்கள் கூட ஒற்றுமையாக வாழ்கின்றன. சூரியன் தனது ஒளியை உலகுக்கே வாரிக் கொடுக்கும். பேதமின்றி மழையும் எல்லா இடங்களிலும் பெய்யும். இப்படி இயற்கையே எல்லாவற்றிலும் ஒற்றுமையை காட்டி நிற்கும்போது மனிதன் மாத்திரம் செயற்கையாக எதற்கு சண்டைப் போட்டு பிரிந்து போக வேண்டும் என்று கேள்வியெழுப்புகின்றார்.

வானமொன்று பூமியொன்று வண்ணமதி யொன்று காணமொன்று காற்றினில் கலந்ததுவே இன்று சாதிமத பேதமின்றி சாற்றுவதே நன்று ஓதியதை உள்ளமென்றும் உணர்வதுவே நன்று.. காக்கையினம் ஒன்று கூடி களித்துண்டு வாழும் யாக்கையது அழிந்தபோது கரைந்தொன்றாய்ச் சேரும் எறும்பினமும் ஒன்றாக எவ்விடமும் செல்லும் குறமணியாம் உணவுதனை கூட்டாகச் சேர்க்கும்.. காலையிளம் பரிதியது கதிர் நீட்டும் உலகில் சோலையிலே மலர்களெலாம் சுகந்தமதை வீசும் கார்மேகம் மழை பொழியும் காட்டாது பேதம் ஊர் நிலவும் தண்ணொளியை உலகோர்க்கு ஊட்டும்.. பிறப்பாலும் மனிதரொன்று பிறந்தபின் இறப்பொன்று நிறத்திலும் குருதியொன்று நீ அதை உணராயோ? இயற்கையோ ஒற்றுமையை இதமாகக் காட்டுகையில் செயற்கையால் பிரிவு செய்து சீர் கெடுக்கலாமோ?

முதியோரெனும் முத்து (பக்கம் 41) எனும் கவிதை முதியோரின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றது. தாய் தந்தையர் எப்போதும் பிள்ளைகளைப் பிள்ளையாகத்தான் பார்க்கின்றனர். அனால் பிள்ளைகள்தான் அவர்களை தொல்லையாகப் பார்க்கின்றனர். சில காலங்களுக்கு முன்பு முதியோர் இல்லங்களில் உள்ளவர்களின் விகிதத்தைவிட இன்றைய காலத்தில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. பகட்டு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் வயதான தமது தாய் தந்தையரை, பாட்டன், பாட்டியை வீட்டை விட்டும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். படிக்க வைத்தது மாத்திரமன்றி நல்ல அனுபவப் பாடங்களையும் கற்றுத் தந்த அவர்களை எதுவும் தெரியாதவர்கள் என்றெண்ணுவது இதற்கொரு முக்கிய காரணம். தாய்ப்பால் குடித்த மனித மிருகங்கள் மாத இறுதியில் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு விடுவதுடன் தன் கடமை முடிந்ததாக எண்ணுகின்றனர். ஆனால் முதியவர்கள் என்போர் எவ்வளவு போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை கீழுள்ள வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

அறுபது அகவை பெறும் அனைத்து மனிதரும்
பெறுவோர் முதியோர் எனும் பெயரை நன்றாய்
ஐப்பசி ஒன்று அகிலத்தில் முதியோர் தினம்
எப்படி மறப்பது ஏந்தல்கள் பெருமை

மண்ணின் சரித்திரம் மாட்சிமை புரிந்தவர்
பண்பாடு பேணும் பழம்பெரும் களஞ்சியம்
வளையாக் கொள்கையுறு வளமுடை பொக்கிஷம்
இளையோர்க்கு வழிகாட்டும் இணையில்லா செம்மல்

வயதால் மூத்தவர் வளங்கள் நிறைந்தவர்
அயராது உழைத்து எமை ஆளாக்கி விட்டவர்
அன்பாகப் புத்தி சொல்லும் அனுபவ முத்துக்கள்
பண்பாடு பேணுகின்ற பழம்பெரும் பெட்டகங்கள்

வாசிப்பை நேசி (பக்கம் 48) என்ற கவிதை வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்குகின்றது. வாசிப்பதால் கிடைக்கும் அறிவின் மூலம் மனிதன் தன்னில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து நீங்கிவிடுகின்றான்;. நல்ல நண்பர்களாக புத்தகங்களைக் கொண்டவன் பாக்கியசாலியாவான். ஏனெனில் நண்பர்கள்கூட எந்த நேரத்தில் துரோகியாக மாறுவார்கள் என்று தெரியாத காலம் இது. ஆனால் நல்ல புத்தகங்கள் என்றும் எம்மை நல்வழிப்படுத்துவன. தீய வழியின்பால் நாம் செல்லாமல் எம்மைக் காத்து நிற்பன. தேனீக்கள் தேனைத் தேடிச் செல்வது போல ஞானிகள் புத்தகங்களை நாடிச் செல்வர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து வாசிப்பின் பெருமையை நாம் அறிய முடிகின்றது.

மனிதன் அறிவு பெறும் மகத்தான வாசிப்பால்
புனித நூல்களை புவனத்தார் போற்றுகின்றார்
தேனீக்கள் தேடுகின்ற தேனுள்ள மலர் போல
ஞானிகள் நாடுகின்றார் நல்லமுத நூல்களை
வாசிப்பின் அவசியத்தை வளமுள்ளோர் அறிவர்
யாசிப்பர் புத்தகங்கள் யாங்கனும் தேடியதை

ஐப்பசித் திங்களதை வாசிப்பு மாதம் என்றே
செப்பியோர் சிந்தையது தேடலை ஊக்குவிக்கும்
பத்திரிகை சஞ்சிகை பயனுள்ள நூல்களெல்லாம்
திக்குள்ள தகவல்களைத் திரட்டி எமக்களிக்கும்
கிடைக்கும் நேரமதில் வாசித்துப் பழகிவிட்டால்
படைப்பாக்கத் திறனும் பக்குவமாய் வளரும்

துணை (பக்கம் 60) என்ற கவிதை அழகிய காதல் கவிதையாகும். காதல் பற்றிய நூலாசிரியரின் பார்வை இரசிக்கத் தக்கதாக அமைந்திருக்கின்றது. தம்பதியரிடத்தில் காணப்பட வேண்டிய புரிந்துணர்வை கவிதையினூடாக பின்வருமாறு சித்தரித்திருக்கின்றார் நூலாசிரியர்.

நீ சூரியனாக இருப்பதனால்தான் நான் பூமியாகச் சுற்றுகிறேன்.. உனது ஒளி பெற்றே நிலவாகப் பிரகாசிக்கிறேன்.. நிழலாக உன்னைத் தொடர்வதால் நிம்மதியாய் மூச்சு விடுகின்றேன்.. உன்னால் எழுதப்பட்ட வீட்டுச் சட்டங்களையும் குடும்ப நிர்வாகத்தையும் எனது வாழ்க்கையின் பாட நூலாக்கினேன்.. புரிந்துணர்வுப் பாடத்தை நீயே புரிய வைத்தாய் எனக்கு.. எமது வீட்டு எறும்புகள் கூட உன்னிடமிருந்தே சுறுசுறுப்பைக் கற்றுக்கொண்டன..

பெண்ணைப் பெற்றவரே (பக்கம் 83) என்ற கவிதை சின்னளஞ்சிறு பெண் பிள்ளைகளை வை;ததிருப்பவர் முதல் திருமண வயதை அடைந்த பெண்ணை வைத்திருப்பவர் வரை அனைவருக்கும் பொருத்தமானதொரு கவிதையாகும். இன்று எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம் என்று தினம் தினம் நடந்தேறி வருகின்றது. மனித  இனத்திலிருந்து விலங்கினத்தை நோக்கி நம் சமுதாயம் நகர்ந்து செல்வதை இது பறைசாற்றுகின்றது. இரக்க குணம் மாறி இன்று அரக்க குணம் தலைதூக்கி விட்ட துரதிர்ஷ்டத்தை கீழுள்ள வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்ணைப் பெற்ற தாய்மாரே பிள்ளை தின்னிகள் திரிகின்றனர்.. கண்ணைப் போன்ற சிறுவர்களைக் காப்பது எமது கடன்.. பள்ளி செல்லும் பாலகரை பாலியல் வெறிக்குப் பாழாக்கி கொள்ளி வைக்கவும் துணிகின்ற கொடிய அரக்கரை அறியுங்கள்.. அந்தரங்க உறுப்புக்களை அன்புத் தந்தை தொட்டாலும் வந்திடும் தீமை என்பதனை வகையாய்ச் சொல்லி வையுங்கள்.. புலமைப் பரிசில் பரீட்சைக்கு புத்தி சொல்வது போலவே நிலைமை பற்றிக் கூறுங்கள் நித்தம் செய்தி அறியுங்கள்.. நம்பிக்கை வைக்கும் உறவாலும் நாசம் வந்து சேர்ந்திடலாம் சம்பவம் நடந்த பின்பு நாம் சாபம் இட்டு என்ன பயன்?

சிந்தையைக் கவரும் சிறப்பான கவிதைகளைத் தந்த தம்பிலுவில் ஜெகா பாராட்டுக்குரியவர். மறைந்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களால் இவருக்கு ஷஷகவிக்கோகிலம்|| என்ற பட்டம் வழங்கப்பட்டமை சாலப் பொருத்தமானதாகும். இலக்கிய உலகில் விடைதேடி என்ற இந்த நூலுக்கு நிச்சயமாக நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என்று கூறி அவரை வாழ்த்துகிறேன்!!!

நூல் - விடைதேடி
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - தம்பிலுவில் ஜெகா
விலை - 240 ரூபாய்
மின்னஞ்சல் - thambiluviljega23@gmail.com

86. மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்

மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்

கிழக்கிலங்கையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளரான ஜெனீரா அமானின் மழலையர் மாருதம் எனும் நூல் வெளிவந்திருக்கின்றது. சிறுவர் உளவியல் கட்டுரைகளின் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்நூல் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் மனநிலை போன்றவற்றை உணர்ந்து குழந்தைகளை சீராக வளர்ப்பதற்காக பல விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றது.

இந்நூலுக்கான அணிந்துரையை வழங்கியிருக்கும் கலாநிதி கே.எம். இக்பால் அவர்கள் ``மனித வாழ்வில் பிள்ளைப் பருவம் முக்கியமானது. பெற்றோர் தமது பிள்ளைகளை உளவியல் ரீதியாக அணுகிட இந்நூல் உதவும். பிள்ளைகளின் உடல் உள நலன்களைப் புரிந்துகொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியமாகும். இந்நூலில் உள்ள கட்டுரைகள் பிள்ளைகளின் உடல், உள தேவைகளை நிறைவேற்ற உதவும்'' என்கிறார்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். குழந்தைகள் நற்பிரஜைகளாக வளர்வதற்கான அடித்தளம் முதலில் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. வீட்டில் பெற்றோர் குழந்தைகளுடன் நடந்துகொள்ளும் முறை, குழந்தையின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றும் முறை போன்ற குழந்தை வளர்ப்பிற்கு இன்றியமையாதவையாகும். குழந்தைகளின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல செயற்படும்போது அவர்களின் உடல், உள ரீதியான பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ள இயலும். ஒரு சிறந்த நிர்வாகியாக தாயும், தந்தையும் செயற்படும்போது குழந்தைகளின் மன வளர்ச்சியும் ஆரோக்கியமானதாகவே இருக்கும். அவ்வாறில்லாமல் தான்தோன்றித்தனமாக குழந்தைகளை செயல்பட அனுமதித்தால் குழந்தைகள் மனதளவில் சிதைந்து நல்லொழுக்கமற்ற, சமுதாய துரோகியாக வளர்வதற்கு ஏதுவாக அமையும்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அந்த கூற்றுக்கிணங்க குழந்தைகள் விரல் சூப்புவதை சிறுவயதிலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வளர்ந்து பெரியவர்களானாலும் அவர்களால் அப்பழக்கத்தை விடமுடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். விரல் சூப்பும் பழக்கமானது குழந்தைகளின் பற்களை உறுதியற்றதாக்கி விடுகின்றது. அதுபோல் குழந்தைகள் பிடிவாதக் குணம் உள்ளவர்களாகுவதற்கும் ஏதுவான காரணியாக அது அமைகின்றது. எனவே வேறு விடயங்களில் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதாக அறிவுரை சொல்லியிருக்கின்றார் நூலாசிரியர்.

அன்பு உலகை இயங்கச் செய்கின்றது. அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை யாவருக்கும் அன்பு ஒரு ஆயுதமாக, கேடயமாக இருக்கின்றது. அன்பு காட்டுபவர்களையே குழந்தைகள் அதிகம் நேசிக்கின்றார்கள். தனிமையில் விடப்படும் குழந்தை கத்தி அழுகின்றது. தாய் ஓடிவந்து உணவு ஊட்டிவிட்டு குழந்தை பசிக்காக அழுததாக தீர்மானிக்கிறார். ஆனால் அன்பை எதிர்பார்த்து அதை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றது. எனவே தன் பக்கம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஏனைய குழந்தைகளை அடித்தும், கிள்ளியும் தனது செயல்களை மாற்றிக்கொள்கின்றது. அது பொறாமையாக உருவெடுத்து விடுவதாக இந்த நூலில் உள்ள கட்டுரை அமைந்திருக்கின்றது. நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விடயத்தில் எத்தனை தூரம் குழந்தைகள்; பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நூலாசிரியர் மிக அருமையாக சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

விருப்பு வெறுப்புக்கள் மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் வேறுபடும். குழந்தைகள் விடயத்தில் அது மிகவும் கரிசனை காட்டப்பட வேண்டியதொன்றாகும். குழந்தைகளுக்கு உணவூட்டுவது பெரும் பிரச்சினைகளில் ஒன்று. எல்லா தாய்மார்களும் முகம்கொடுக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை இது. தாம் விரும்பியவற்றை பிள்ளைகளுக்குத் திணிக்காமல் பிள்ளை விரும்பும் உணவை அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம். பிள்ளைகள் தம் பிஞ்சுக் கைகளால் தாமாக உணவை அள்ளிச் சாப்பிடவே மிகவும் விரும்புவார்கள். ஆனால் உணவை சிதறி விடுவார்கள் என்பதற்காக குழந்தைகளின் கையில் கொடுக்காமல் இருப்பது பிழையான செயலாகும் என்று உணவூட்டல் சம்பந்தமாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷசிறு பிள்ளைகள் தானே.. வளர்ந்ததும் திருந்திவிடுவார்கள்| என்ற கோட்பாட்டிலிருந்து பெற்றோர்கள் விலகிக்கொள்ளல் அவசியம். ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களானதும் திருந்திவிடுவதில்லை. சிறுவயதில் தாம் பழகியவற்றை சரியென்றே அவர்கள் எண்ணுகின்றார்கள். பெற்றோர்கள் கண்டிக்காத செயல்கள் சிறுவர்கள் உள்ளத்தில் சரியானவை என்ற பதிவையே உருவாக்கிவிடுகின்றன. சின்னச் சின்ன பொருட்களை திருடுவது தெரிந்தாலே ஆரம்பத்தில் அதைத் தடுக்க வேண்டும். திருடுவது தவறு, மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது என்று பிள்ளைகளிடம் ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் பிஞ்சு உள்ளத்தில் அது பதியும். அதைவிடுத்து அவற்றை இரசித்து சிரித்துக் கொண்டிருந்துவிட்டால் எதிர்காலத்தில் அழுது தீர்க்க வேண்டியேற்படும்.

மழலையர் மாருதம் ஜெனீரா கைருல் அமானின் ஏழாவது நூல் வெளியீடாக அமைந்துள்ளது. இவர் ஏற்கனவே பாலர் பாடல் (சிறுவர் பாடல் - 1991), சின்னக்குயில் பாட்டு (சிறுவர் பாடல் - 2009), பிரியமான சினேகிதி (சிறுகதை - 2009), மிதுஹாவின் நந்தவனம் (சிறுவர் கதை - 2010), கட்டுரை எழுதுவோம்  (03 - 05 ஆம் வகுப்புக்களுக்குரியது - 2010), முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் (சிறுவர் பாடல் - 2012) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்தவர்களாக அவர்களை மாற்றுவதற்குரிய சிறந்த பல ஆலோசனைகளை முன்வைத்து மழலையர் மாருதம் என்ற நூலைத் தந்த ஜெனீரா கைருல் அமான் பாராட்டுக்குரியவர். அவரது இலக்கியப் பணி தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூலாசிரியர் - ஜெனீரா அமான்
நூல் - மழலையர் மாருதம்
தொலைபேசி - 0262236487
வெளியீடு - அல் அக்தாப் இலக்கிய மன்றம், கிண்ணியா
விலை - 200 ரூபா

Sunday, October 18, 2015

85. ஆஷா நாயும் அவளும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஆஷா நாயும் அவளும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

போர்காலச் சூழலில் தோன்றும் படைப்புக்கள் அக்காலம் சார்ந்த நிலமைகளை மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டும். போரின்போது வெளிப்படுத்தப்படாத விடயங்கள் இன்று போரின் பின்னரான காலங்களில் படைப்புகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அக்கால சூழ்நிலையில் மக்கள் அனுபவித்த துன்பங்களை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

ஒவ்வொரு கணமும் உயிருக்காகப் போராடி, அடுத்த நிமிடம் வாழ்வோமா, சாவோமா என்ற நிலையில் இருக்கும்போதும், தாம் பட்ட துன்பங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று அவற்றை தத்ரூபமாகப் படைப்பாக்கும் திறமை நம்நாட்டில் பலருக்கு வாய்த்திருக்கின்து. அந்த வகையில் வள்ளுவர்புரம் யோ. புரட்சி தான் வாழ்ந்த சூழ்நிலையை தன் எழுத்துக்கள் மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய் என்பது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. அடுத்தது எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும் என்ற கவிதைத் தொகுதி. இந்தத் தொகுதியின் வெளியீட்டு விழா கடலில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆஷா நாயும் அவளும் என்ற சிறுகதை நூலினூடாக மீண்டும் வாசகரைச் சந்திக்கின்றார் யோ. புரட்சி. இந்த நூல் காட்டில் வைத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் அதிக ஆர்வமாக எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கவர் இவர். தன் எழுத்தாற்றல் மூலம் வாசகரின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

"இந்நூலில் உலாவரும் கதைகள் பத்திரிகைகளில் தவழ்ந்தபோது பாராட்டிய அநேகர்க்கு, அவற்றை எழுதி தபாலிடுவதற்கு நான் பட்ட பாடுகள் தெரிந்திட வாய்ப்பில்லை" என குறிப்பிடும் யோ. புரட்சி தன் தாயின் ஆசிச் செய்தியை தனது எல்லா நூல்களில் சேர்த்து வருவது குறிப்பிட்டு பாராட்டக்கூடியதொரு அம்சம் எனலாம்.

இந்நூலுக்கு கருத்துரை வழங்கியிருக்கும் வவூனிய+ர் இரா. உதயணன் அவர்கள் ~இந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு முதலில் என்னை ஒருவித மாற்றுச் சிந்தனைக்கு தள்ளியபோதும்இ படித்தபோதே அதன் மறுபக்கம் தெரிந்தது. ஆஷா நாயூம் அவளும் என்பதும் ஒரு காலத்தின் பதிவூ| என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இலண்டன் மற்றும் தமிழ் இலக்கிய நிறுவகம் வெளியிட்டிருக்கும் இத்தொகுதி பதினொரு கதைகளை 62 பக்கங்களில் உள்ளடக்கியிருக்கின்றது. இதில் காணப்படும் கதைகள் எல்லாம் சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் யூத்தகால சூழ்நிலைக்குள் வாசகரை கூட்டிச் செல்லும் அற்புதத்தையூம் கொண்டிருக்கின்றன.

காதல் என்ற மந்திரச் சொல் இன்று தந்திரச் சொல்லாக உருவெடுத்திருக்கின்றது. காதல் தெய்வீகமானது என்ற நிலைமை மாறி காதல் மாயையானது என்ற நிலை தற்போது உருவாகியிருக்கின்றது. காரணம் காதல்கள் இன்று காமத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றமைதான். எவ்வளவூதான் உயிருக்குயிராக காதலித்தபோதும் கல்யாணம் ஆகும் வரைக்கும் எல்லைமீறக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் ஒரு பெண்ணுக்குஇ சமூகத்தாலும்இ இயற்கையாலும் பாதிப்பு அதிகமாக ஏற்படுகின்றது. வலிந்து வலிந்து காதலிக்கும் சில ஆண்கள்இ காரியம் கைகூடியதும் ஒளிந்துக்கொள்கின்றார்கள். அவ்வாறானதொரு கதைப் பின்னணியை வைத்து எழுதப்பட்டிருப்பதே காதல் அவசரம் (பக்கம் 01) என்ற முதல் கதையாகும். வீட்டாரிடம் பொய்சொல்லவிட்டு காதலனுடன் ~மியூ+சிக் புரோகிராம்| செல்லும் பெண்இ இரவானதும் காதலனுடன் லொட்ஜுக்குச் செல்கின்றாள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கின்றது. பற்றாமல் வேறென்ன செய்யூம்? காதலி பொய்யாக தடுக்கின்றாள். ஆனால் காதலனின் "என்னை நம்பிக்கையில்லையா?" என்ற கேள்வி அவளுக்கு நம்பிக்கையைத் தர அவள் தன்னை அவனிடம் இழந்துவிடுகின்றாள். அந்த இரவில் செய்த தவறு சிலநாட்களில் வெளிச்சமாகிறது. அவன் குழந்தைஇ அவள் வயிற்றில் வளர்கிறது. ஆனால் அவனைக் காணோம். வெளிநாட்டுக்கு அவன் சென்றுவிடுகின்றான். அவளது வாழ்க்கை இருண்டு போகிறது. அவளோ வாழ்வதற்கு வழியின்றி தன் குழந்தையூடன் மகளிர் இல்லம் நோக்கிச் செல்வதாக கதை நிறைவடைகின்றது.

மாறுகிறாள் மனைவி (பக்கம் 14) என்ற சிறுகதை நகைச்சுவையாகவூம்இ படிப்பினையாகவூம் இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் கணவனை சந்தேகிக்கக் கூடாது. அவனது அன்பை ஏற்கப் பழக வேண்டும். கொஞ்ச நேரம் பிந்தி வீட்டுக்கு வந்தால் ~எவளுடன் வலிஞ்சிக்கிட்டு இருக்காரோ?| என்ற ஐயப்பாட்டுடன் மனைவி வாழக்கூடாது. பொதுவாகவே கணவன்மார் நேரத்துக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டும். காரணம் தனிமைப்பட்டு வீட்டுக்குள்ளே சிறைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் கணவனின் வருகையால்தான் சந்தோசப்படுகின்றார்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட பிந்திப்போனால் அதற்குரிய காரணத்தைக் கேட்டு அதற்கேற்றபடி மனைவி நடந்துகொள்ள வேண்டும் என இருபக்க நியாயத்தையூம் இக்கதை நன்கு உணர்த்தியிருக்கின்றது.

வேலைக்குப் போகும் பெண்களில் அநேகர் எதிர்கொள்ளும் பிரச்சினையை அழகாக எடுத்துக் காட்டுகின்றது ஆசையின் வலையில் (பக்கம் 33) என்ற சிறுகதை. மனேஜரின் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு வருகின்றாள் சுபமலர் என்ற பெண். தனது தோழியின் தீய அறிவூரைக்கு இணங்க மனேஜரை வளைத்துப்போடுவதில் குறியாக இருக்கிறாள் சுபமலர். மனேஜரை கைக்குள் போட்டுக்கொண்டால் நல்லதொரு பதவி உயர்வை அடைந்துவிடலாம் என்ற பேரவா அவளுக்கு. மனேஜரும் சபலப் புத்திக்காரர். பைல்களைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே கையை உரசுவார். அதை சுபமலர் ஒரு சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தாள். அவளது சம்மதத்தைக் கண்ட மனேஜர் ஒருநாள் வெளியூ+ருக்கு வேலை விடயமாக் போவதாகக்கூறி அவளையூம் அழைத்துச் செல்கின்றார். அவரது ஆசை வாரத்தைகளுக்குக் காத்திருந்த சுபமலரும் சுலபமாகவே அவருக்கு தன்னை காணிக்கையாக்குகின்றாள். திடீரென சிலமோசடிகளின் பேரில் மனேஜர் தன் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றார். யாரை நம்பி கற்பினை இழந்தாளோ இன்று அவரே வேலையில்லாமல் தவிக்கின்றார் எனும்போது தீய அறிவூரை சொன்ன நண்பி மீது கடுங்கோபம் வருகிறது சுபமலருக்கு. பேராசை கூடாது என்றும்இ ஆசைக்காக கற்பை இழக்கக்கூடாதென்றும்இ தீய நண்பர்களின் தொடர்பு கூடாது என்றும் உணர்த்தியிருக்கின்றது இந்தக்கதை.

மகுடத்தலைப்பான ஆஷா நாயூம் அவளும் (பக்கம் 50) என்ற கதை சோகத்தை சுமந்திருக்கும் ஒரு கதையாகும். இந்தக்கதை வாசகரை நிச்சயம் யூத்தக்கால சூழ்நிலைக்கு இழுத்துச் செல்லும். மதுவின் கணவன் உட்பட பலர் ஷெல்வீச்சால் மடிந்து போகின்றார்கள். பொத்திப் பொத்திப் பாதுகாத்த குழந்தை ஆஷாவூம் இறுதியில் ஷெல்லடிக்குப் பலியாகின்றாள். கணவனதும்இ குழந்தையினதும் இறப்பை அடுத்தடுத்து கண்ட மது மயங்கி விழுகின்றாள். தற்போது அவளொரு அநாதை இல்லத்தில் பணிபுரிகின்றாள். தன்னையே சுற்றிச்சுற்றி வரும் ஒரு நாய்க்கு தன் மகளின் பெயரை வைத்திருப்பதுதான் மகுடத் தலைப்பாக இடப்பட்டிருக்கின்றது.

ஆஷா நாயூம் அவளும் கதையைப் போலவே யூத்தத்தில் பெற்றௌரை இழந்து குழந்தைகள் படும் அவஸ்தையை இரண்டு மொட்டுக்கள் விரிகின்றன (பக்கம் 18) என்ற கதையில் தரிசிக்க முடிகின்றது. இவ்வாறு சமூகத்தில் புரையோடிப் போயூள்ள விடயங்களை தன் எழுத்துக்களால் வெளிப்படுத்தி வரும் யோ. புரட்சிக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ஆஷா நாயூம் அவளும்
நூலாசிரியர் - யோ. புரட்சி
தொலைபேசி - 0775892351 / 0774641921
மின்னஞ்சல் - puratchi2100@gmail.com
வெளியீடு - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்
விலை - 220 ரூபாய்