Thursday, July 28, 2016

105. தாய் நிலம் சிறுகதைத் தொகுதி மீதான கண்ணோட்டம்

தாய் நிலம் சிறுகதைத் தொகுதி மீதான கண்ணோட்டம்


வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் அனுபவங்கள் பலதரப்பட்டவை. அவற்றில் சில காலத்தின் வடுவாகவும், சில காலத்தின் வரமாகவும் அமைந்து விடுகின்றன. வடுவாக அமைந்த அனுபவங்கள் ஒருவரின் மரணம் வரையும் உயிரை வதைத்துவிடுவதில் முன்னிலை வகிக்கின்றன. 

இலங்கையில் முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடந்த யுத்தம் பலரின் வாழ்வை சின்னாபின்னமாக்கி இருக்கின்றது. பலரின் வாழ்வை நடுவில் முடித்து வைத்திருக்கின்றது. பலரின் உயிரை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கி விட்டிருக்கின்றது. சில நல்ல எழுத்தாளர்களைத் தோற்றுவித்திருக்கின்றது. 

போரின் பின்னர் எழுந்த இலக்கியங்கள் போரின் அச்சுறுத்தல் குறித்தும், அதன் வக்கிரம் குறித்தும், சாதாரண மக்களின் வாழ்க்கைப் படகு திசை தெரியாதவாறு தத்தளிப்பது பற்றியும், ஊரிழந்து, உறவிழந்து வாழ்ந்து கொண்டிருப்போர் பற்றியும் அதிகம் பேசியுள்ளன.

இளந்தலைமுறை எழுத்தாளர்களின் சொல் வீச்சும், நம்பிக்கையும் இலங்கை எழுத்தாளர்களின் வரிசையை இன்னும் நீளமாக்கியிருப்பதில் மிக்க ஆனந்த மாயிருந்தாலும், ஒரு துயரத்தினால் அவர்கள் பட்ட வலியை எண்ணுகையில் கண்ணீர் துளிர்க்கின்றது.

ஆ. முல்லை திவ்யன் என்ற இளம் படைப்பாளி யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை கதையின் கருக்களாக்கி சிறுகதை படைத்திருக்கின்றார். அவரது கதைகளை வாசிக்கும்போது அருகேயிருந்து கொண்டு அக்காட்சியைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இது அவரது எழுத்துக்களின் சிறப்பாகும். சொல்ல வந்த விடயத்தை தெளிவாக சொல்லியிருப்பதிலிருந்து கதையை தொடர்ந்தும் வாசிக்கச் செய்து விடுகின்ற திறமை அவரது எழுத்துக்களுக்கு இருக்கின்றது. அவரது சொல்லாடலும், மொழிநடையும் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது. பாத்திரங்களின் உரையாடல்கள் பந்திகளாக இல்லாமல் உரையாடல் வடிவில் கீழ்கீழாக அச்சிடப்பட்டிருப்பின் அது இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.

இருள் விலகுமா? (பக்கம் 01) என்ற சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான தமிழ்நிலவன் ஒரு கிழமையாக பாடசாலைக்கு வராமல் இருக்கின்றான். அதற்கான காரணம் வறுமை. தாய் இதய நோயாளியாக ஆகிவிட்ட பிறகு அவனால் தொடர்ந்து படிக்க முடியாத மனவேதனை. தாயை நன்றாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு. கல்யாண வயதில் அக்கா. இத்தகைய பிரச்சினைகள் யாவும் அவனது தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றன. யுத்தத்தால் தந்தையை இழந்த குடும்பம் துடுப்பின்றி தள்ளாடுவதை தமிழ்நிலவனால் தாங்க முடியாதிருக்கவே அவன் தொழில் செய்கின்றானென கதை நிறைவடைகின்றது. 

இன்று இதைப் போல எத்தனையோ பேர் படிப்பை துறந்து விட்டு வெளிநாடுகளுக்குப் பறந்து போய்விட்டனர். தனது குடும்பத்துக்காக உழைக்க வேண்டி அவர்கள் அவ்வாறு போன பின்பும் இங்குள்ளவர்கள் நிம்மதியாய் வாழ்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.  பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர், சகோதரர்களை இழந்த உடன் பிறப்புக்கள் என்று யுத்தம் அவர்களது வாழ்வில் எத்தனை சுவடுகளை பதித்திருக்கின்றது என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம். 

வேலை கிடைச்சாச்சு (பக்கம் 10) என்ற கதை இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைக் கோலத்தை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. படித்தும் வேலையில்லாத பிரச்சினை எப்போது ஒழியுமோ என்ற பலரது ஆத்திரம் இக்கதையில் வெளிப்பட்டு நிற்கின்றது. நல்லதொரு உத்தியோகத்துக்கு செல்ல வேண்டுமானால் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று பணம் செலவழிக்க வேண்டும். தொழில் கிடைத்த பிறகும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், அல்லது யாராவது மந்திரியின் பின்னால் அலைய வேண்டும் என்ற நிலைமை பல இளைஞர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக அமைகின்றது. இந்தக் கதையில் வருகின்ற யாழவன் என்ற இளைஞனும் மேற்படி பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றான். 

பிறகு ஒருவாறு பத்திரிகையில் பார்த்த வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புகின்றான். நேர்முகத்தேர்வுக்கு கொழும்புக்கு வருமாறு கடிதம் வருகின்றது. அங்கு செல்வதற்காக நல்ல சப்பாத்து ஒன்றுகூட இல்லாத நிலையில் அடுத்த வீட்டு அண்ணனிடம் சப்பாத்தை இரவல் பெற்று நேர்முகப் பரீட்சைக்குச் செல்கின்றான். அவனுக்கு கொழும்பில் வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வாசகரையும் மகிழ்விக்கின்றது. அந்த கதையின் இறுதியின் யாழவனுக்கு இதற்கு முன்னர் விண்ணப்பித்த தொழிலொன்றுக்குச் சொந்த ஊரிலேயே தொழிலுக்கான கடிதம் வந்திருப்பதாக அவனது அம்மா சொல்வதினூடாக இன்னும் மகிழ்ச்சி இழையோடுகின்றது.

பாசம் (பக்கம் 25) என்ற சிறுகதை கனகம்மா ஆச்சியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. வயது போன காலத்தில் தன் மகனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றாள். அவளைப் பிரிந்த மகன் ஈழமாறன் தற்போது உயிருடன் இருக்கின்றானா? அல்லது இறந்துவிட்டானா? இல்லை பிடிபட்டு சித்திரவதை அனுபவிக்கிறானா? என்ற தகவல் கூட தெரியாமல் தனிமையில் வாடும் கனகம்மா ஆச்சி வாசகரின் மனதில் ஆசனமிட்டு அமர்ந்துகொள்கின்றான். தான் அநாதைப் பிணமாக சாகக்கூடாது. தனக்கு கொள்ளி வைக்க தன் மகன் வந்துவிட வேண்டும் என்று அவள் சதாவும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றாள். சில காலங்களின் பின்னர் ஒருநாள் அவள் திடீரென இறந்துவிடுகின்றாள். அங்கு காவல் துறையினரின் பலத்த காவலோடு வந்திருந்த அவளது மகன் ஈழமாறன் தன் தாயுடன் இறுதிக் காலத்தில் இருக்க முடியவில்லையே என்று வருந்துவது வாசகரின் நெஞ்சையும் கலங்க வைத்துவிடுகின்றது. யுத்தம் மனிதனின் அன்றாட வாழ்வைக்கூட சிதைத்து விட்டபோது அவன் மாத்திரம் எப்படி இயல்பாக இருக்க முடியும்? தாயும் தாய் மண்ணும் வெவ்வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான் என்று கதையின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

செவ்வரத்தப் பூ (பக்கம் 35) என்ற சிறுகதை தமிழ்விழி என்பவள் காலை வேளையில் செவ்வரத்தம் பூவுக்கு நீருற்றிக் கொண்டிருப்பதாக தொடங்குகின்றது. குடிசை வீடு என்றாலும் அழகாக பூக்களை வளர்த்து அந்த சூழலையே அழகுறச் செய்து கொண்டிருப்பவள். அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. வைத்தியராக வர வேண்டும் என்ற உறுதியான கொள்கையில் இருக்கின்றாள். தந்தை ஷெல்லடி பட்டு இறந்து போன பிறகு அவர்களது வாழ்வை வறுமை சூழ்ந்துகொள்கின்றது. 

ஒரு சைக்கிளை வாங்குவதற்கு மனதுக்குள் ஆவல் மேலிட்டாலும் அதை அடக்கிக்கொண்டு தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றாள் தமிழ்விழி. சேகுவேராவின் புரட்சி வரிகள் அவளது சிந்தையில் நிறைந்திருக்கின்றன. அவளது படிப்பை விட சுதந்திரமே முக்கியம் என்று அவள் சிலரால் மூளைச் சலவை செய்யப்படுவதால் இறுதியில் அவளுக்குள் உறைந்திருந்த சுதந்திர தாகம் விழித்துக்கொள்கின்றது. 

அவள் படிப்பை கைவிட்டுவிட்டு இயக்கத்தில் இணைந்துகொள்கின்றாள். அவள் அதற்குப் பிறகு தன் தாயைப் பார்க்கக் கூட வரவில்லை. முட்புதர்கள் மூடிக்கிடந்த அவளின் வீட்டருகே ஒற்றை செவ்வரத்தை பூத்து நிற்கின்றது. அது தமிழ்விழி என்ற புரட்சிப் பூ என்பதாக கதை நிறைவு பெற்றிருக்கின்றது.

யுத்தம் தந்த வேதனைகளை கதையின் கருக்களில் அழகாக உட்புகுத்தி சிறுகதைகளை அமைத்திருக்கும் ஆ. முல்லை திவ்யன் இன்னும் நிறைய படைப்புக்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் பெறும் ஒளியால் அவரது எழுத்துத் துறை இன்னும் மிளிர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - தாய் நிலம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஆ. முல்லை திவ்யன்
வெளியீடு - வர்ணா வெளியீடு
விலை; - 200 ரூபாய்

104. கக்கக் கனிய சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

கக்கக் கனிய சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

பல்வேறு துறை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்வதை விரும்புவார்கள். சிறுகதைகள் அவ்வாறானதொரு தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாக சிறுகதைகளினூடாக கையாளலாம் என்பதனாலாகும்.

சட்டத்தரணி எஸ். முத்துமீரானின் படைப்புக்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் பல விடயங்களையும் தனக்குள் உள்வாங்கி, தானே கதைசொல்லியாகி வாசகர்களுக்கும் அறியத் தருவதாக அமைந்திருக்கும். கக்கக் கனிய என்ற தொகுதியானது நெஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 16 சிறுகதைகளை உள்ளடக்கி 144 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லாஹ் கீழுள்ளவாறு குறிப்பிட் டிருக்கின்றார்.

`முத்துமீரானின் எழுத்துக்களில் ஒரு சமூகத்தின்  ஒட்டுமொத்தமான படப்பிடிப்பைக் காண முடியும். இலங்கை தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற வட்டத்துக்குள் முஸ்லிம்களும் அடங்குவர். அதனால் முஸ்லிம்கள் தமிழர்கள் ஆகி விடுவதில்லை. அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேறு சமூகத்தினர். அவர்களுக்கென்று தனியான மதம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதார அம்சங்கள் முதலானவை வேறானவையாக அமைகின்றன. இதற்கு முத்துமீரானின் எழுத்துக்கள் மிக ஆதாரமாக அமைகின்றன. அதனாலே அவரது கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலேயும் மண்வளச் சொற்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன'.

தாய்மை சாவதில்லை (பக்கம் 24) என்ற கதை தாய்ப் பாசத்தின் ஆழத்தை உருக்கமாக கூறி நிற்கின்றது. உலகில் உள்ள எல்லா உறவுகளும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் பழகும். ஆனால் தாய் என்ற உறவு மாத்திரமே பாசத்துக்காகப் பழகும். தன் பிள்ளை எத்தகைய கெட்டவனாக இருந்த போதிலும் அவனது நன்மைக்காக சதாவும் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் தாயினுடையது. பத்து மாதங்கள் வயிற்றில் சுமப்பது முதல் குழந்தையின் எதிர்காலம், நன்மை பற்றி மாத்திரமே தாயுள்ளம் சிந்திக்கின்றது. அவ்வாறான உறவை சிலர் மதிப்பதில்லை. தாயின் பெருமையைப்பற்றி பேசுபவர்கள் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தாயின் மனதை உடைத்து விடுவார்கள். இஸ்லாம் மார்க்கம்; தாயின் காலடியின் கீழ் சுவர்க்கம் உண்டு என தாயின் சிறப்பு பற்றி கூறியுள்ளது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், மாதா, பிதா, குரு, தெய்வம் போன்றவற்றில் கூட தாய்க்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இக்கதையில் வருகின்ற செய்யது ராத்தா என்ற மூதாட்டி சட்டத்தரணி மீரானின் வீட்டுக்குச் செல்கின்றார். அவரது நோக்கம்   அவரது பெயரில் இருக்கும் வீடு வளவை பிள்ளைகளுக்கு கொடுப்பது பற்றிய ஆலோசனையை மீரான் அவர்களிடம் கேட்பதற்காகும்.

``என்ன ராத்தா கடும் யோசனயோட இரிக்காய்?''

``ஒண்டுமில்லம்பி.. ஒனக்கிட்ட ஒரு புத்தி கேப்பமின்டு வந்தன்..''

``அதிலென்ன, எதப்பத்தி?''

``என்ர பேரில இருக்கிற, பேமிற்று வளவப் பத்தித் தான்..''

``அதுக்கென்னப்ப..?''

``அதயேன் கேக்காய்.. இதால என்ட ஊட்ட ஒரு மாசமா ஒரே கொழப்பம் தம்பி. என்ர புள்ளயலெல்லாம் அந்த வளவ  வித்துக் கேட்டு என்னோடச் சண்ட புடிக்கிதுகள். வூட்டுல நிம்மதியா இரிக்கேலாமக் கிடக்கு. என்னேரமும் கொம்பலும் கொழப்பமுமாக் கெடக்கு. ஒனக்கிட்டச் செல்றத்திக்கென்ன என்ர கொடலுக்க சோறு, தண்ணி போய் நாலஞ்சி நாலம்பி..''

இந்த உரையாடலில் செய்யது ராத்தா எந்தளவுக்கு மன உளைச்சலில் காணப்படுகின்றார் என்பது புலனாகின்றது. 

அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிய மீரான், செய்யது ராத்தாவுக்கு புத்திமதி சொல்கின்றார்.

``அப்ப லாவைக்கு நான் கடிதத்த எழுதி வெக்கன். நீ காலத்தால வந்து வாங்கிற்று போ லாத்தா. ஏதோ வளவ விக்கிற எல்லாக் காசயும் புள்ளயளுக்கு குடுத்திராத. கொஞ்சக் காச ஒன்ட மகுத்துச் செலவுக்கு வச்சிக்க''

அடுத்த நாள் செய்யது ராத்தா மீண்டும் தலையில் காயத்துடன் ஓடி வருகின்றாள். அவளது மகன், தாய் என்று கூட பாராமல் அவளைத் தாக்கிவிட்டு இறப்புச் செலவுக்கு வைத்திருந்த காசையும் எடுத்துக்கொண்டு போனதாகச் சொல்லி ஓவென அழுகின்றாள். அவரது நிலை கண்டு மீரானுக்கும் மிகவும் மனவருத்தம். அவனைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்வோம் என மீரான் கூறியதுற்கு அந்தத் தாயுள்ளம் அதனைத் தடுத்துவிடுகின்றது.

``அவன் சின்னப் புள்ள.. உட்டிரு வாப்பா.. அவன் எல்லாத்தயிம் மறந்து லாவெக்கி என்னப் பாக்க வருவான்..'' என்கின்றாள்.

தாய்ப் பாசத்தை அணுவணுவாகப் புரிய வைக்கும் அழகிய கதை இது.

கொத்தும் கொறயுமா  (பக்கம் 33) என்ற சிறுகதை சமூகத்தில் நடந்தேறும் அராஜகங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றது. இன்று எல்லாவற்றுக்கும் பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றையே எல்லோரும் மதிப்பாகக் கருதுகின்றார்கள். அவை இல்லாதவர்களை நாயைவிடக் கேவலமாக நினைக்கின்றார்கள். ஆனால் எல்லாத் தகுதியும் இருப்பவர்கள் பண்புகளை இழந்துவிடுகின்றார்கள்.

பள்ளிவாயல்களில் நடக்கும் பிரசங்கங்கள் சுயநலத்துக்காக இடம்பெறுகின்றன. தமக்குத் தேவையானதைக் கூறி மக்களை அதன்வழி இழுப்பதற்கு பலர் துணிவதாக இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹாஜியார் என்ற பட்டத்துக்காகவும், ஊரிலுள்ளவர்கள் தன்னை மதிப்பதற்காகவும், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கம் போன்றவற்றை கொண்டு வந்து உள்நாட்டில் விற்றால் இன்னும் இலாபம் பெற முடியும் என்பதற்காகவும் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதாக இக்கதை தெளிவாகக் கூறியிருக்கின்றது.

இக்கதையில் வரும் வட்டியன்ட மூத்தமகன் சின்னப்பிள்ளை என்பவர் சுலைமான் மௌலவியுடன் ஹஜ்ஜுக்கு செல்வதாக ஏற்பாடாகியிருக்கின்றது. போகும் போக்கில் காசை கூடுதலாக கொண்டு வருமாறும் மக்காவிலிருந்து நகை நட்டுக்களை வாங்கி வருவோம் என்றும் கூறுகின்றார் மௌலவி. அத்துடன் தாம் அங்கு தங்கியிருக்கும் ஹோட்டல்கள் ஏசி பூட்டிய ஆடம்பரமானவை என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றார். கன்னிகளைக் கரை சேர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; வரிசை கட்டிப் பார்த்திருக்க, பல தேவைகளை உடையவர்கள் தம்மைச் சூழவும் இருக்க, பகட்டுக்காக அல்லாஹ்வின் போதனைகளை மறுத்து இன்னும் சொத்து சேர்ப்பதற்காக ஹஜ்ஜுக்கு செல்லும் இவர்களின் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகம். அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பானது.

மைய்யத்து வீடு (116) என்ற சிறுகதை சுலைமான் சப் என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஊருக்குள் வட்டிக்குக் கொடுத்து, நாள் கொமிஷனுக்கு காசு கொடுத்து, பெண்களுக்கான கள்ள பாஸ்போர்ட் செய்து பணக்காரன் ஆனவன்தான் சுலைமான். அவன் அந்த ஊர் எம்.பியின் செல்லப்பிள்ளை. அந்த செல்வாக்கால் சுலைமானை ஊரார் பெரிய புள்ளியாகப் பார்க்கத் துணிகின்றனர். இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணாக பணம் சம்பாதிப்பவன் அல்லாஹ்வின் புனித மாளிகையின் தலைவனாக  நம்பிக்கையாளர் சபையின் அங்கத்தவனாக இருக்கின்றான். இவ்வாறான அசிங்கமான அரங்கேற்றங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இறுதிநாள் நெருங்கும்போது தகுதியில்லாதவர்கள் எல்லாம் தலைவர்களாக மாறுவது சாதாரண விடயம். அந்தவகையில் சுலைமானும் செல்வாக்குள்ளவனாக ஆகிவிடுகின்றான். 

இவன் மையத்தை எடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம் கொழுக்கட்டப் பொட்டிரக் கொழந்த என்பவள் வந்து தலையிலடித்து மையத்து வீட்டை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கின்றாள். காரணம் அவளது மகள் சவூதிக்குப் போவதற்காக வீட்டை சுலைமானிடம் அடகு வைத்திருக்கின்றாள். சுலைமான் அதற்கும் வட்டிக்கு மேல் வட்டி என்று பல ஆயிரங்களைகக் கறந்து இறுதியில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் உறுதியைத் தன் பெயருக்கு மாற்றிவிட்டான். சவூதியிலிருந்து கஷ்டப்பட்டு உழைத்த காசை எல்லாம் இந்தக் களவானிக்குக் கொடுத்தது போக சொந்த வீடும் தனக்கில்லை என்றால் யார் தான் தாங்குவார்? அவரின் நிலை வாசகரின் மனதையும் பிழிந்துவிடுகின்றது.

இப்தார் (பக்கம் 138) என்ற சிறுகதை யதார்த்தமாக நடக்கும் சம்பவமொன்றை மிக அருமையாக சொல்லியிருக்கின்றது.  நோன்புக்காலம் வந்தால் பலர் நம்மிடம் உதவி கேட்டு வருகின்றார்கள். நோன்பு காலத்தில் இவ்வாறு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது தமக்கு நோன்பு பிடிப்பதற்கு அல்லது நோன்பு திறப்பதற்கு போதுமான உணவு இல்லாதிருக்கலாம். அல்லது தம் பிள்ளைகளுக்கு வகை வகையாக சாப்பாடு கொடுக்க முடியாத கஷ்டத்தில் இருக்கலாம். அல்லது கணவன் மரணித்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நோன்புக் காலங்களில் தனவந்தர்களின் மனது இரங்கியிருக்கும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம். இஸ்லாம் ஸக்காத்தை மூன்றாவது கடமையாக ஆக்கியிருக்கின்றது. வசதி படைத்த ஒவ்வொருவரும் அல்லாஹ் நிர்ணயித்த ஸக்காத்தைக் கொடுத்தே தீர வேண்டும். இல்லாவிடில் மறுமையில் அவர் சேர்ந்த சொத்துக்கள்தான் அவரை நரகத்துக்கு இட்டுச் செல்லும். அல்குர்ஆனில் எட்டு கூட்டத்தார்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு கட்டாயமாக ஸக்காத்தை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு வழங்கிய செல்வத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்துதவுமாறு கூறியிருக்கின்றது. 

நோன்புக் காலத்தில் ஸக்காத் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால்தான் இல்லாதவர்கள் கையேந்துகின்றார்கள். இக்கதையில் வரும் மீரான் என்பவர் பெரிய பெரிய செல்வந்தர்களுக்குக்கும், எம்.பிக்களுக்கும் இப்தாருக்கு (நோன்பு திறத்தல்) அழைப்பு விடுக்கின்றார். அவரது வீட்டில் கோழிக் கஞ்சும், இடியப்ப புரியாணியும் செய்து அசத்துவதில் குறியாக இருக்கின்றார். அப்போது ஸக்காத் பெற தகுதியானவர்கள் வந்து அவரிடம் கையேந்தும் போது வங்கியில் மாற்றக்கொடுத்த சில்லறைக் காசு நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லி திருப்பியனுப்புகின்றார். அள்ளிக்கொடுக்க வேண்டிய கைகள் கிள்ளிக் கொடுக்கின்றன. கதையை வாசிக்கும்போதே மனதில் நெருடல் ஏற்படுகின்றது.

இவ்வாறு மண்வளம் மாறாமல் படைப்பிலக்கியம் செய்கின்ற, சம்பவங்களை எல்லாம் சிறுகதைகளாய் படைக்கின்ற சட்டத்தரணி முத்துமீரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கக்கக் கனிய
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
வெளியீடு - நெஷனல் பப்ளிஷர்ஸ் 
விலை - 350 ரூபாய்

103. முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம்  கண்டுகளித்து வருகின்றோம்.

 சினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள்! இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-

சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

திரைப்பட திறனாய்வுக்கு தமிழில் ஒரு ஏடு (பக்கம் 10) என்ற பதிவில் காலத்தின் தேவையாக இருக்கும் தமிழ் ஏடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதன் பெயர் அகல்விழி. சினிமா, ஓவியம், புகைப்படக் கலைக்காக மலர்ந்த காலாண்டு இதழ். மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட இந்த உயர்தர ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தின் கருத்துக்களை கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கின்றார். நாம் காணாத சஞ்சிகைகள் பற்றிய தகவல்களும், அக்காலத்தில் அதன் ஆசிரியர் தலையங்கங்களில் அமைந்த கருத்துக்களையும் நாம் அவதானிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த ஆசிரியர் தலையங் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

சினிமா பற்றிய புத்தகங்கள், விமர்சனங்கள், திரைப்பட விழாக்கள், திரைப்பட சங்கங்கள், சினிமா பத்திரிகைகள் அனைத்தும் இருந்தும் தமிழில் புதிய சினிமா உருவாகவில்லை. இதன் அடிப்படையை ஆராய்ந்தோமேயானால் நல்ல இயக்குனர்கள் இல்லாமற் போனதே இதற்கான காரணமாகும். தமிழ் நல்ல சினிமாக்கள் அனைத்துமே வணிக விதிகளுக்கும் ஊறிப்போன பழைய படிமங்களுக்கும் உட்பட்டவை.

இந்திய சினிமாத் துறை விடுத்து உலக அனைத்துலகத் திரைப்படங்களும் அதிக வரவேற்பு பெற்றவைகளாகும். 1996 இல் புது டில்லி அனைத்துலகத் திரைப்பட விழாவில் இந்தியப் பெண் நெறியாளர்களின் படங்களுடன், ஆசியாக் கண்டத்தின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் படங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாணம் என்ற சீன மொழிப் படம், ஊர்காவல் என்ற பீஜிங் மாநகரப் படம், சுதந்திரக் கும்பல் என்ற லெபனான் நாட்டுப் படம், நீல முக்காடு என்ற ஈரானியப் படம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அறிதற்கரிய தகவல்களை தன்னகத்தே சுமந்திருக்கும் இந்நூல் சினிமாத் துறையில் ஈடுபாடுள்ளவர்களின் வாசிப்புக்கு சிறந்த நூலாகும். நூலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்
நூலின் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
ஈமெயில் - sivakumaranks@yahoo.com
                     kssivakumaran610@yahoo.com
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 100 இந்திய ரூபாய்

Tuesday, July 19, 2016

102. என்னடா கொலமும் கோத்திரமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

என்னடா கொலமும் கோத்திரமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

கிழக்கிலங்கையின் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ். முத்துமீரான் அவர்கள் வெளியிட்டிருக்கும் என்னடா கொலமும் கோத்திரமும் என்ற சிறுகதைத் தொகுதி மீரா உம்மா வெளியீட்டகத்தின் மூலம் 110 பக்கங்களில் 10 சிறுகதைகளை உள்ளடக் கியதாகக் காணப்படுகின்றது. 
இந்த நூல் முத்துமீரான் வெர்களின் நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். இதில் முதலாவது சிறுகதை பூனைக்குட்டி செத்து பெயித்துகா (பக்கம் 09) என்ற சிறுகதையாகும். இந்தக் கதை குட்டிப் பூனையை கடுவன் பூனை கடித்து விட்ட கதையைக் கூறுகின்றது. அந்தச் சின்னப் பூனைக் குட்டியைப் பார்க்க பாவமாக இருக்கின்றது. கழுத்தில் இரத்தம் வழிந்தோடி உள் தசையெல்லாம் தெரிகின்றது. அதை தூக்கிக்கொண்டு போக சில காகங்கள் வட்டமிடுகின்றன. தாய் பூனை செய்வதறியாத கவலையுடன் காணப்படுகின்றது. அதைப் பார்த்து நாயும் மிகவும் பரிதாப்பட்டு சதாவும் குரைத்துக் கொண்டே இருக்கின்றது.

இந்தக் கதையின் சிறப்பம் என்னவென்றால் பூனைகளைக் குறியீடாக வைத்து சமூகத்தில் நடக்கின்ற அநியாயங்களைச் சுட்டி நிற்பதாகும். பூனைக் குட்டியாக பொது மக்களும் கடுவன் பூனையாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களும், அந்த பொது மக்களை இன்னும் கஷ்டப்படுத்துவதற்கு காகங்களாக அரசியல்வாதிகளும் இருப்பதாக உணர்த்தப்பட்டுள்ளது.

அதாவது பதவிக்கு ஆசைப்பட்டு தனக்குக் கீழ் உள்ளவர்களின் உரிமைகளை அவர்கள் ஒன்றணைந்து குறி வைக்கின்றார்கள். தமக்கு மாத்திரம் எல்லா அதிர்ஷ்டங்களும் வாய்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை அனுபவிக்காமல் கட்டிக் காத்து மாப்பிள்ளையாக வருகின்ற டாக்டருக்கு ஏசீ காரும், வீடும் கொடுக்கின்றார்கள். பெருமைக்காக தம்பட்டம் அடிக்கும் இவர்கள் வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிட்டோ, நன்றாக உடுத்தியோ அனுபவிக்காதவர்கள். மனதில் ஆசைகளை வைத்துக்கொண்டு இறப்பவர்களின் உயிர் இந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை சிலரிடத்தில் உலவுகின்றது. இந்தக் கதையில் வருகின்ற கதாபாத்திரம் இறந்ததைத் தொடர்ந்து அவரின் ஆவி ஊரெல்லாம் திரிவதாக பேசப்படுகின்றது. உலகத்தில் பேராசை கொண்டு கருமியாக வாழ்ந்தவர்களின் ஆவி இப்படித்தான் அலைந்து கொண்டிருக்குமோ என்று வாசகரைக் கேட்டு நிற்கின்றது நூலாசிரியரின் இந்தக் கதை.

போடுங்கடா டயரயிம் கட்டயயிம் (பக்கம் 18) என்ற சிறுகதையும் காலத்துக்கு ஏற்றாற் போன்ற கதையம்சத்தைக் கொண்டுள்ளது. அகமது மாமா என்பவருக்கு உடல் நலம் குன்றிப் போகின்றது. பலருக்கு சிக்கன் குனியா காய்ச்சல் ஏற்பட்டு தீடீரென பல மரணங்கள் சம்பவிக்கின்றன. மார்க்கத்தை முறையாகப் பின்பற்றாமல் தான்தோன்றித் தனமாக வாழ்பவர்கள் சுனாமி வந்தாலென்ன.. சிக்கன் குனியா வந்தாலென்ன எதற்கும் அஞ்சாமல் ஏழைகளின் வயிற்றிலடிக்கின்றார்கள்.

இவ்வாறானதோர் ஏழையான அகமது காக்கா ஊருக்குள் ஒரு வைத்தியசாலை இல்லாத காரணத்தால் பல மைல் தூரம் தள்ளி அமைந்திருக்கின்ற வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமையில் காணப்படுகின்றார். சுனாமிக்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் பலர் காசை எடுத்துக்கொண்டு வைத்தியசாலை கட்டித் தருவதற்கு உதவி செய்ய வந்த போதிலும் அந்த ஊரில் உள்ள படித்தவர்கள், எம்பிக்கள் எல்லாம் ஏதேதோ கூறி அந்த வேலைத் திட்டத்தை நிறுத்திவிட்டதால் இந்த நிலைமை என்று கூறுகின்றார் அகமது.

அப்போது அவ்விடம் வந்த சிலர், முஸ்லிம் நாடுகளான ஜோர்டான் மற்றும் ஈராக் நாடுகள்  அமெரிக்காவால் தாக்கப்படுவதாகவும் ஊர் எம்பியின் கட்டளைக்கு இணங்க, அதை எதிர்த்து கடைகள் மூடப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். மீறி வாகனங்கள் செல்லுமானால் அவை எரிக்கப்படும் என்றும் சவால் விடுக்கும் அவர்களிடம் தனக்கு வருத்தமாக இருப்பதால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சுகின்றார் வயோதிபர் அகமது. அவரது குரலைக் காதில் வாங்காதவர்கள் வீட்டிற்குச் சென்று கைமருந்து குடித்துவிட்டு வீட்டிலேயே நிற்குமாறு அவரை வழியனுப்புகின்றனர். 

அயலவர்கள் கஷ்டத்தில் வாடும்போது எங்கோ உள்ளவர்களுக்கு போர்க்கொடி தூக்கி ஊரில் மையத்துக்கள் விழுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர்களும், எம்பி மார்களும் என்றுதான் மார்க்கத்தை உணர்ந்து திருந்தி நடக்கப் போகின்றனரோ என்று அங்கலாய்கின்றார் அகமது.

சமூக நிகழ்வுகள் முத்துமீரான் என்ற படைப்பாளியால் மிகத் துல்லியமாக படம்பிடிக்கப்படுகின்றன. வாசகரை மகிழ்விப்பதற்காக அவரது படைப்புக்கள் இன்னும் பல நூல்களாக வெளிவர வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - என்னடா கொலமும் கோத்திரமும்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
வெளியீடு - நெஷனல் பப்ளிஷர்ஸ் 
விலை - 250 ரூபாய்

101. வந்தது வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

                                வந்தது வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை


சிறுகதைகளின் போக்கு ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக காணப்படும். சிலரது கதைகள் சாதாரண கற்பனைகளாகவும் சில அபரிமிதமான கற்பனைகளாகவும் சில யதார்த்த பூர்வமானதாகவும் காணப்படும். அதை கதாசிரியரே முடிவு செய்கின்றார். எவ்வாறான போக்குகள் கொண்டவையானாலும் கதையின் கரு மனதுக்கு இதமளிப்பதாகவோ, சிந்தனைக்கு வித்திடுவதாகவோ, மக்களுக்கு படிப்பினையாகவோ இருக்கும் பட்சத்தில் அக்கதை வெற்றி பெற்றுவிடுகின்றது.

நஸீலா ஸித்தீக் எழுதியிருக்கும் வந்தது வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் அமைந்துள்ள  கதைகள் உண்மையின் சொரூபமாகக் காணப்படுகின்றன. அவர் எடுத்துக்கொண்ட கரு, சமுதாயத்தில் அன்றாடம் நடக்கின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. 56 பக்கங்களைக் கொண்டமைந்த இத்தொகுதியில் ஏழு கதைகள் காணப்படுகின்றன. வடிவமைப்பில் சிறிய புத்தகமாக இருந்தபோதிலும் உள்ளடக்கம் சிறப்பாக காணப்படுகின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் ஆசிரிய ஆலோசகர் ஏ.ரீ.எம். நிஜாம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

`பழமையான இலக்கியப் பாரம்பரியமிக்க முஸ்லிம்களின் இலக்கியப் பணியில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவானது எனக் கூறலாம். இக்கூற்றானது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் உருவாகவில்லை அல்லது கலா ரசனை இல்லாதவர்கள் என்பதில்லை.  முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இலைமறை காய்களாக உள்ளனர். பாடசாலை மட்டங்களிலும், தேசிய மட்டங்களிலும் பரிசுகளை வென்றதோடு ஊக்கப்படுத்த யாருமில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்'.

எனவே நூலாசிரியரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நூல் வெளிவர உதவி புரிந்த புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள்; பாராட்டப்பட வேண்டியவர். 

இன்று ஆன்மீகம் என்ற சொல் வெறும் வார்த்தையாக இருக்கின்றதே தவிர அது வாழ்க்கையாக மாறவில்லை. தான்தோன்றித்தனமாக வாழ முற்படும் பலர், இறைவன் தமக்கு அளித்துள்ள அருட்கொடைகள், செல்வங்கள் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதை அலட்சியமாகக் கொள்கின்றனர். ஊனமுற்ற ஒருவரைக் கண்டாலோ அல்லது தாங்க முடியாத ஒரு வேதனை வந்தாலோ இறைவனின் பேரருளை வேண்டும் பலர், அதன்பின் அதை அசட்டையாக விட்டுவிடுகின்றார்கள். மார்க்க விடயங்களில் பேணுதலாக இருக்கத் தவறிவிடுகின்றனர். பாவத்தை செய்வதை நாகரீகம் என்று கருதிக்கொள்கின்றனர். 

வந்தது வசந்தம் (பக்கம் 08) என்ற சிறுகதை ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. இக்கதையில் வரும் றுஸ்லி என்ற பெண்ணின் கணவன் அனஸ் மார்க்க விடயங்களைக் கடைப்பிடிப்பதில் அலட்சியமாக செயற்படுகின்றான். நேரத்துக்கு தொழுமாறு மனைவி றுஸ்லி கூறினால் அவளுக்கு ஏசுவான். அவள் குர்ஆனை சத்தமிட்டு ஓதினால் தூக்கம் கலைகிறது என்று கூறி அவளை அப்பால் போகச் சொல்லுவான். இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு போக்கு அவனிடம் காணப்பட்டாலும் அவன் அடிப்படையில் நல்லவன். மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவன். முழுமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை நாளெல்லாம் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்பதும், தமக்கு பிறக்கப் போகும் குழந்தைக்காக செல்வம் சேர்க்க வேண்டும் என்பதும்தான் அவனது குறிக்கோள். அதனால் தர்மம் செய்வதை அவசியமற்றது எனக் கருதி வந்தான்.

றுஸ்லி தன் பொறுமையாலும், தொழுகையாலும் அல்லாஹ்விடம் உதவி கேட்கிறாள். அவன் திருந்திவிட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுகிறாள். றுஸ்லி பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அனஸ் ஒரு கனவு காண்கின்றான். அதில் பாம்புகள் அவனைத் துரத்துவதாகவும், கீழே நிலமெல்லாம் இரத்த வெள்ளமாக இருப்பதாகவும், பாம்பு அவனைக் கொத்த வருவதாகவும் கண்டு அவன் இறைவனிடம் மன்னிப்பு கோருவதாகவும் காண்கின்றான்.

அதிர்ச்சியடைந்து கண்விழித்துப் பார்த்த அனஸ் சிந்தை தெளிந்து இனிமேல் இறைவனின் சொற்படி நடக்க வேண்டும் எனவும், மனைவிக்கு பிடித்த கணவனாக இருக்க வேண்டும் எனவும் தன் மனதை மாற்றிக்கொள்கின்றான் என்று கதை முடிவடைகின்றது.

அவள் பெறும் பட்டம் (பக்கம் 16) என்ற கதை கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டியதொன்றாகும். இன்று கல்விக்காக என்றும், தொழிலுக்காக என்றும் பலர் வீட்டை விட்டு விடுதிகளில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. அவ்வாறு வீட்டைவிட்டு செல்பவர்கள் பிற நண்பர்களிடம் அவதானமாக இருக்க வேண்டும். பெற்றோரும் தம் பிள்ளைகள் பற்றியும், பிள்ளையுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் பற்றியும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டில் செல்லமாக வளர்ந்தவர்கள், விடுதிகளில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு விடயத்துக்கு சற்று கடுமையாக பேசிவிட்டாலும் கூட மனமுடைந்து போவார்கள். அதுபோல பல்கலைக் கழகங்களில் நடைபெறும் பகிடிவதையாலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் படிப்பே வேண்டாம் என்றுவிட்டு ஊரோடு வந்து சேர்ந்துவிடுகின்றார்கள். 

இந்தக் கதையில் வருகின்ற ரிஸானா என்பவள் மௌலவியா ஆகுவதற்காக கலாசாலை விடுதிக்கு வருகின்றாள். அவளது அறையில் உள்ள நண்பிகள் எதற்கெடுத்தாலும் அவளைக் குறை கூறுவதாகவும், ஏசுவதாகவும் இருக்கின்றார்கள். ஒரு சிலர்தான் அவளை அன்புடன் ஆதரிக்கின்றார்கள். ஆனால் ரிஸானா மென்னுள்ளம் கொண்டவள் என்பதால் அவளால் அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் போகின்றது. காலவோட்ட நகர்வால் அவளது போக்கு மாறிப்போகின்றது. அதனால் அவளை வைத்தியரிடம் காட்டியபோது ரிஸானா மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றாள் என்று சொல்லப்படுகின்றது. கதையின் இறுதியில் `ஆறு மாதங்களிலேயே வெளியேறுகின்றாள். மௌலவியா பட்டத்துடன் அல்ல. மனநோயாளி பட்டத்துடன்' என்ற வரிகள் நிச்சயம் வலியைத் தந்துவிடுகின்றது.

புயலொன்று பூவானது (பக்கம் 36) என்ற சிறுகதை நண்பிகளிடம் குடிகொண்டிருக்கும் பழக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அரபுக் கல்லூரி ஒன்றுக்கு வந்து சேரும் மாணவிகளுள் ரிப்னாவும், ஸிமாராவுமே இக்கதையின் பிரதான பாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸிமாரா படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவள். அனைவரும் அவளைத்தான் நல்ல விடயங்களுக்கு உதாரணமாகவும் கூறுவார்கள். இவ்வாறு ஸிமாராவை எல்லோரும் புகழ்வது ரிப்னாவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றது. 

திடீரென ஸிமாராவுக்கு சுகயீனம் ஏற்பட்டு வீட்;டுக்குச் சென்றுவிடுகின்றாள். எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முனைந்த ரிப்னா, ஸிமாராவைப் பற்றி ஏனையவர்களிடம் இல்லாதபொல்லாத விடயங்களை எத்தி வைக்க முனைகின்றாள். ஆனால் அங்கிருந்த ஒரு தோழி புறம் பேசுவது தன் சகோதரனின் உடல் மாமிசத்தை சாப்பிடுவதற்குச் சமம் என்ற நபிமொழியை உதாரணமாகக் காட்டி ரிப்னாவின் பேச்சை நிறுத்திவிடுகின்றாள். அவர்கள் அவள் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. ஸிமாராவின் நல்ல பண்புகளை அறிந்த அவர்களுக்கு ஸிமாராவைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால் அவர்கள் ஸிமாராவுடன் கோபம் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு ரிப்னாவின் உள்ளம் ஏதோ ஒன்றால் திண்டாடியது. அவள் தன் கனவில் யாரோ வந்து தனது சதையை சாப்பிடுவதாக உணருகின்றாள். எனவே பீதியடைந்த அவள் தன்னை விடுமாறு கனவில் கத்துகின்றாள்.

அவளது கத்துதலைக் கேட்டு ஓடி வந்த மற்ற நண்பிகள் அவளை ஆசுவாசப்படுத்துகின்றார்கள். ரிப்னா, தான் கண்ட கனவை எண்ணி பயத்துடன் காணப்படுகின்றாள். அக்கனவு ஸிமாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அவள் ஸிமாராவிடம் நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கின்றாள். ஸிமாரா எதையும் பொருட்படுத்தாமல் மிகவும் அன்பாக அவளுடனும் பிறருடன் நடந்துகொள்வதுடன், ரிப்னா என்ற புயலையும் பூவாக மாற்றிவிடுகின்றாள். பொறாமை என்றுமே நம் மனதில் நுழைந்துவிடக் கூடாது. பொறாமை வந்துவிட்டால் புறம் பேசுதல், அவதூறு சொல்லுதல், கோள் மூட்டுதல் போன்ற அனைத்து பாவங்களை மேற்கொள்வதற்கும் அது காரணமாக அமைந்துவிடும் என்பதை இக்கதை நன்றாக தெளிவு படுத்துகின்றது.

யதார்த்த விடயங்களை ஆணித்தரமாகச் சொல்லும் ஊடகவியலாளர் சித்தீக்  ஹனீபாவின் மனைவியான கதாசிரியர் நஸீலா ஸித்தீக் பாராட்டுக்குரியவர். அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வந்தது வசந்தம்
நூல் வகை - சிறுகதை
நூலின் பெயர் - நஸீலா ஸித்தீக்
வெளியீடு - ஏசியன் கிரபிக்ஸ்

100. மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட  எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார். 

இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார். 

மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.  இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார். 

மெல்லிசைத் தூறல்கள் என்னும் இந்த நூல், மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. இத்தொகுதியில் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நோக்குகளையும், போக்குகளையும் கொண்டவையாக அவை விளங்குகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், இலங்கையின் இன ஒற்றுமை, காதல்,  அறிவுரை, தனிமனித உணர்வுகள் முதலான பல்வேறு விடயங்கள் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கணிசமானவை அகநிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக உள்ளன'' என்கின்றார்.

மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள கண்டி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ரதி தேவ சுந்தரம் அவர்கள் ``உலகின் எல்லா மொழி வடிவங்களிலும் மிகப் பழமையானது கவிதை (செய்யுள்). இவை அறிவின் அறைகூவல்கள். சிந்தனையின் சாகசங்கள். கற்பனையின் சுவடுகள். வாழ்வின் வசந்தங்கள். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் என்ற தொகுதி இந்த வசந்தத்தை எமக்கு வழங்குகின்றன. இதில் முப்பத்தாறு தூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இஸ்லாம்  மதத்தோடு தொடர்புடையதாய் சில தூறல்கள், இளமையின் துள்ளலாய் சில தூறல்கள், படிக்குந் தோறும் இதயத்தை இனிமையாக்கி குளிர்விக்கும் தூறல்கள் என இவை அமைந்துள்ளன.

பல இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எச்.எப். ரிஸ்னா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். உள்நாட்டில் வெளிவந்த தொகுப்புக்களில் மட்டுமல்லாது இந்தியாவில் வெளிவந்த மழையில் கரைகிறது மானம் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் தனது கதையைப் பதித்தவர். அத்துடன் ஊடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருபவர். இவர், பல அமைப்புக்கள் மூலம் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை, பாடல் போட்டிகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில்  பணிபுரியும் ரிஸ்னா, இறைவனால் வழங்கப்பட்ட பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பது அவரது இலக்கிய செயற்பாடுகளை நோக்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. வாழ்க்கையின் போராட்டத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் எம் மத்தியில், புதிய சிந்தனைகளைத் துளிர்விடச் செய்து மெல்லிசைத் தூறல்களை அகிலமெங்கும் பொழியச் செய்யும் ரிஸ்னாவின் முயற்சி பாராட்டுக்குரியது. கௌரவத்துக்குரியது'' என்று ரிஸ்னாவின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

இசை என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்காதவர்கள் யாரும் இல்லை. இசை என்பது உள்ளங்களை ஈர்த்தெடுக்கும் ஒரு பலமான சக்தி. இசையுடன் கூடிய பாடல்கள் ரசனை உள்ளங்களை தன்பால் ஈர்த்துக்கொள்கின்றன. பாடல் வரிகளில் ஓசை நயமும், சந்தமும், எதுகை மோனையும் ஒரு சேர பயன்படுத்தப்படும்போது அது வாசிப்பதற்கும் இனிமையாக இருக்கின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் வாசிப்போரை வசீகரிக்கும் என்பது திண்ணம். இதில் காணப்படும் ஆன்மீகப் பாடல்களாக அன்பை அள்ளிப் பொழியும், இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே, மக்காவில் பிறந்த மாணிக்கமே போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடல் நேத்ரா தொலைக் காட்சியில் ஜனாப் டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளது. அதேபோல மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக் கமல் அவர்களால் இசையமைத்து பாடப்பட்டு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது.

நூலில் உள்ள பாடல்கள் பல்லவி, சரணம் 1, சரணம் 2 என்று வகுக்கப்பட்டு பாடல் எழுதுவதற்கான உரிய முறையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.

முதலாவது பாடல் அன்பை அள்ளிப் பொழியும் இதயம் நிறைந்த அல்லாஹ்வே (பக்கம் 19) என்று இறைவன் பற்றிப் பாடியுள்ளார். இறைவனின் பேரருள் கிடைக்காவிட்டால் எமது வாழ்க்கையில் எந்தவித அர்த்தமும் கிடையாது. நாம் இம்மை வாழ்வில் செய்கின்ற நன்மைகள்தான் எமது மறுமை வாழ்வை அழகாக மாற்றுகின்றது. அதற்கு இறைவன் கற்றுத் தந்தவற்றை அணுவளவும் பிசகாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு உணவு தந்து, உடை, தந்து, நல் பெற்றோரைத் தந்து எம்மை சமூகத்தில் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருக்கின்றான் என்றால் நாம் அவனுக்கு எவ்வளவு நன்றியுடையோராக இருக்க வேண்டும்? இத்தகைய இறைவன் பற்றிய இந்தப் பாடல் மனதுக்கு நிம்மதியளிக்கின்றது.

அன்பை அள்ளிப் பொழியும் 
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில் 
வாழ்வேனே என் வாழ்வை 

காடு மலை நதிகளை 
கண்குளிர்ச்சியாய் தந்தாயே 
சுகந்தரும் தென்றலை 
சுவாசிக்க வைத்தாயே...

வெண் பகலை இரவுக்குள் 
வேறாக்கி வைத்தாயே 
நீரினிலும் நிலத்தினிலும் 
உயிர்களைப் படைத்தாயே

பாதைகள் புதிது என்ற பாடல் ஏழை - பணக்காரன் வாழ்வை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் ஜீவ மரணப் போராட்டம் பசி. இருப்பவனுக்கு ஒருநாள் என்பது சாதாரணம். இல்லாதவனுக்கு  மூன்று வேளை உணவு கிடைக்குமா என்ற சதா ரணம். இருப்பவனுக்கு கேளிக்கையில் நாள் கழியும். இல்லாதவனுக்கு நம்பிக்கை மாத்திரமே மூலதனம். பாடல் வரிகள் தத்ரூபமாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.

பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது

வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது

இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்

வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்

மக்காவில் பிறந்த மாணிக்கமே (பக்கம் 24) என்ற பாடல் நபி பெருமானின் புகழ்பாடி நிற்கின்றது. அல்லாஹ் மிகவும் நேசிக்கும் மனிதப் புனிதரான நபியவர்கள் பற்றி நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே...

துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..

பாடலாசிரியர் ரிஸ்னா பெற்றோருக்கு சமர்ப்பணமாக தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட (பக்கம் 26) என்ற பாடலை எழுதியிருக்கின்றார். ஒருவர் சிறந்தவராக மாறுவதும், தீயவராக ஆவதும் பெற்றோரின் கைகளில் தங்கியுள்ளது. பெற்றோர்கள் இன்றி வளரும் குழந்தைகள் தான்தோன்றித் தனமாகச் செயற்படுவது நாமறிந்த விடயம். அவ்வாறில்லாமல் பக்குவமாகவும், பாசமாகவும் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் வாய்க்கப் பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள் அத்தகைய பெற்றோருக்காக இவ்வாறான வரிகளால் பிரார்த்திக்கின்றார் நூலாசிரியர்.

கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது

பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே

ஒருவனுக்கு நாட்டுப்பற்று இல்லாவிட்டால் அவன் வாழ்வதற்கே தகுதியற்றவன். தாயும் தாய் நாடும் இரு கண்கள் போன்றவை. தான் கொண்டுள்ள நாட்டுப் பற்று காரணமாக யுத்தம் நிகழ்ந்த இந்நாட்டைப் பார்த்து இந்த தேசம் நம் தேசம் (பக்கம் 77) என்ற பாடலை யாத்துள்ளார். இந்தப் பாடல் இன ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் வரிகள் சில

குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது

ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்

இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ரசனை ததும்பும் காதல் பாடல்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. அந்த வகையில் ஓ மேகமே ஓ மேகமே, பொன்மாலைப் பொழுதொன்றில், மாங்குருவி போல் வந்து, வானவில்லின் நிறங்கள், வானம் உடைந்து, வாலிபத் தென்றலாய் வந்து, பொல்லாத காதல் என்னை, கிளை விரித்த உன் நெஞ்சில், உயிருக்குள் நீ பாதி, தேன் ஊறும் உன் கன்னம், இதயம் இப்படி வலிக்கவில்லை, மழையில் நனைந்த சிறு புறாவாய், நிம்மதியான இந்த நிமிடங்களை, மார்புக்குள் ஒரு குடிசை செய்து, அன்பை எல்லாம், உன்னைப் பார்க்க ஓடி வந்தேன், எப்போது என் வெறுமையை, மருந்தெல்லாம் இனிக்குதடி, இந்த வாழ்க்கை, நான் தந்த மடலினை, பால்நிலா பொழியும் நேரம் ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

பொல்லாத காதல் என்னை (பக்கம் 44) என்ற பாடல் பிரிந்து போன காதல் பற்றி துயர் பாடுகின்றது. ஏகாந்த வெளியில் காதல் வலியைப் பாடும் ஒரு காட்சி இந்தப் பாடலை வாசிக்கும் போது ஏற்படுகின்றமை பாடலின் சிறப்பம்சமாகும். பாடலில் உள்ளடக்கட்ட விடயங்கள் அற்புதமாக காணப்படுகின்றன. ஓசை நயமும், வார்த்தை வீச்சும் புருவமுயர்த்தச் செய்கின்றன.

பொல்லாத காதல் என்னை 
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்

பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து 
என்னை கீறிச் செல்லும்

நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்

மார்புக்குள் ஒரு குடிசை செய்து (பக்கம் 69) என்ற பாடல் காதல் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பாடலில் வந்து விழுந்துள்ள சொற்கள் யாவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளன. ரசனையுடன் பாடக்கூடிய பாடலாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் சினிமாப் பாடல்களின் தரத்தில் மேலுயர்ந்து காணப்படுகின்றமை கூடுதல் சிறப்பு.

மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் மூடி வைத்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்

காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்

பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்

ஆன்மீகம், தாய்மை, பெற்றோர் பாசம், பிரிவு, காதல் சுவை போன்ற உணர்வுகள் கலந்து செய்த ரசனை மிக்க பாடல்களை எழுதியிருக்கும் ரிஸ்னா எதிர்காலத்தில் இப்பாடல்களை இசை வடிவிலும் வாசகர்களுக்காக தர வேண்டும் என்றும் அவரது முயற்சிகள் யாவும் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்!!!

நூல் - மெல்லிசைத் தூறல்கள் 
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - கொடகே பதிப்பகம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com
 விலை - 300 ரூபாய்

Monday, July 11, 2016

99. கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் மெய்ம்மை கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் மெய்ம்மை கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் 

காலத்தால் அழிக்க முடியாத கவிஞர்களுள் மிக முக்கியமானவராக கவிஞர் ஏ. இக்பால் அவர்களைக் கொள்ளலாம். கவிஞர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவரை இலக்கிய உலகம் என்றும் மறந்துவிடப் போவதில்லை. உறவினராக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி மனதில் தோன்றியதை வெளிப்டையாகப் பேசுபவர் இவர். அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அவரது பிரத்தியேக வாசிகசாலையில் பல்லாயிரம் நூல்கள் காணப்படுகின்றன. உசாத்துணைக்கான நூல்களைப் பெற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டாளமே அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும். 


இக்பால் அவர்கள் தர்காநகர் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். பல மாணவர்களை ஆசிரியர்களாக்கி அவர்களின் வாழ்வை சுபீட்சமாக்கியவர். 

இவர் ஏற்கனவே பன்னிரண்டு நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவரைப் பற்றி ஏனையவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், குறிப்புக்கள் உள்ளடங்கிய 'கவிஞர் ஏ. இக்பால் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்' என்ற நூல் பெரும் வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிய மெய்ம்மை என்ற நூல் 57 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இது கைக்கு அடக்கமான சிறிய கவிதைத் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் அவர் எழுதியுள்ள அனைத்து கவிதைகளும் அவரது வாழ்வோடு இரண்டறக் கலந்த உண்மைச் சம்பவங்களாகும். அவற்றை கவிதை வடிவில் யதார்த்தமாக எழுதியிருக்கின்றார்.

தலைக்கனம் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை காசை கடனாகப் பெற்றுவிட்டு அதை திருப்பித் தராதவர் பற்றியதாகும். இன்றைய யுகம் காசைக் கொடுத்தவன் பணிந்து நிற்க வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றது. காசை கை நீட்டி வாங்கியவனோ எதுவித மனக்கிலேசமும் இல்லாமல் வாழ, கடன் கொடுத்து உதவி செய்தவன் மனப் போராட்டத்துடன் வாழ வேண்டியிருக்கின்றது. காசை திருப்பிக் கேட்டால் கேட்டவர் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்கின்றார். வாங்கியவர் தலைநிமிர்ந்து செல்கின்றார். இஸ்லாம் மார்க்கத்தில் ஹஜ் எனும் புனித மக்கா யாத்திரை ஐந்தாவது கட்டாய கடமையாக விதிக்கப்பட்டிருக்கின்றது. வசதியுள்ளவர்கள் கட்டாயம் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும். ஆனால் பிறருக்கு ஒரு ரூபாயாகினும் கடன் வைத்துக்கொண்டு அல்லது தமக்கு சாட்டப்பட்டுள்ள பொறுப்புக்கள், சமூக பொறுப்புக்களை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஹஜ் கடமையை பல முறை செய்தாலும் அதற்குப் பலனில்லை. 

இக் கவிதையில் வரும் றுமைஸா என்ற பெண்ணும் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றாள். திருப்பிக் கடன் வேண்டும் என்றால் பழைய தொகையை குறிப்பிட்டு புதிய தொகையையும் குறிப்பிட்டு எல்லாவற்றையும் சேர்த்து திருப்பித் தருவதாகக் கூறியே மீண்டும் கடன் வாங்கும் தந்திரோபாயத்தைக் கையாள்கின்றாள். ஆனால் இறுதி வரை கடனைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை. கடன் கொடுத்தவரை மதிக்கவுமில்லை. ஆனால் கடன் வைத்துக்கொண்டு அவள் ஹஜ் கடமையை செய்யப் போவது எந்தளவுக்கு இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று வாசகரிடத்தில் வினா தொடுக்கின்றார் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள்.

திருப்பிக்கொடுக்காது திடீரென ஒரு காகிதத் துண்டில்
இத்தனை ரூபா உங்களுக்குத் தரவேண்டும் இன்னும்
இத்தனை ரூபாக் கடன் வேண்டும் சேர்த்தெல்லாம்
மொத்தமாய்த் தருவேன் என்றெழுதிக் கடன் வாங்கும்
எத்தனங்கள் இவளிடம் மெத்தமுண்டு!

வாடிக்கையாளர் வருத்தம் (பக்கம் 13) என்ற கவிதை வங்கிகளில் பணம் வைப்பு செய்யும்போது அல்லது பெறும்போது நிகழ்கின்ற பிரச்சினைகளின் கருவை மையமாகக்கொண்டது. இன்று அனைவருக்கும் வங்கியில் கணக்கு இருக்கின்றது. அவசரத் தேவைகளுக்காகவும், சேமிப்புக்காகவும், திருடர் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும் வங்கியில் பணம் வைப்பு செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட வங்கியின் தொடர் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள், அன்பளிப்புக்கள் கிடைக்கின்றன. இந்தக் கவிதையில் குறிப்பிட்ட தொடர் வாடிக்கையாளரான கவிஞர் பத்து வருடங்களாக அந்த வங்கியில் கணக்கை நடைமுறைப்படுத்தி வருகின்றார். ஒருநாள் அவர் காசை வங்கியில் கையளிக்கும்போது அதை வாங்கிப் பார்த்த வங்கியாளன் திடீரென எழுந்து முகாமையாளரிடம் செல்கின்றான்.

சிறிது நேரத்தின் பின்னர் துப்பாக்கியுடன் இரண்டு பொலீஸார் கவிஞரை சூழ்ந்துகொள்கின்றனர். காரணம் அதில் ஒரு நோட்டு கள்ள நோட்டு என்பதனாலாகும். பத்து வருட வாடிக்கையாளர்; மிகப் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றார். வழமையான வாடிக்கையாளர் என்றுகூடப் பார்க்காமல் எவ்வித விசாரணையுமின்றி நேரடியாக நீதவானிடம் ஆஜர் படுத்தப்படுகின்றார். ஒரு இலட்சம் பணத்தை பிணையாகக் கொடுத்துத்தான் கவிஞரால் திரும்பி வர முடிந்தது. இப்படி ஒரு துரோகத்தை செய்த வங்கியில் இனியும் எப்படி வாடிக்கையாளராக இருப்பேன் என்கிறார் கவிஞர். இவ்வாறான சட்டங்களும், திட்டங்களும் அப்பாவிகளை மிகவும் கவலையடையச் செய்வனவாகும். என்னதான் பண்புடன் வாழ்ந்தாலும் மனிதனையன்றி பணத்தைத்தான் பார்ப்பார்கள் என்பதை கவிஞர் நன்கு உணர்த்தியிருக்கின்றார்.

பத்து வருடங்கள் என்
பண்பினை வங்கி
அறிந்ததென் றெண்ணி
ஆலாய்ப் பறந்த நான்
அப்போதுதான் எல்லாம்
பணத்துடன் மனிதனைப் பார்ப்பார்
என்பதை உணர்ந்திட முடிந்தது!

நான் மன்னிப்பதே இல்லை (பக்கம் 39) என்ற கவிதை ஆசிரியர்களை இழிவுபடுத்துபவர்களுக்காக எழுதப் பட்டிருக்கின்றது. அதாவது கவிஞர் ஆசிரிய சேவையாற்றிய காலத்தில் அவரையும் இன்னொரு பெண் ஆசிரியரையும் பற்றி அவதூறாக எழுதியவர்கள் உண்மையில் வீரமில்லாத கோழையர்களாவர். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு முன்னே சொல்லும் கவிஞருக்கு இவ்வாறானதோர் அவமானத்தைத் தேடிக்கொடுக்க முனைந்தவர்கள் உள்ளத்தில் பொறாமை எனும் தீச்சுவாலை கொண்டவர்கள். ஒரு பெண்ணின் மீது இருக்கும் கோபம், எரிச்சல், வெறுப்பு என்பவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் என்றால் அது அந்தப் பெண் பற்றி தவறாகப் பேசுவதே ஆகும். அதுதான் ஒரு பெண்ணிற்கு கொடுக்கப்படும் உச்ச தண்டனையும் பட்டமுமாகும். அதே போல அந்தப் பெண் ஆசிரியரை அவதூறு பேசி தீய கண்ணோட்டத்தைக் கொடுத்தவர்களுக்கு இறைவனின் தீர்ப்பு நாளில் தண்டனை கிடைத்தே தீரும். ஆசிரியையின் கணவர் கவிஞரிடம் தன் மனைவியைப் பற்றி தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று கூறுவதில் வாசகர்களுக்கும் மனத்திருப்தி ஏற்படுகின்றது. கவிஞர் ஆணித்தரமாக நான் மன்னிப்பதே இல்லை என்று சொல்லி விட்டார். ஆசிரியையும், அவரோடு இணைந்து அவரது கணவனும் மன்னிக்காவிட்டால் நாளை மறுமையில் இவ்வாறு அவதூறு சொன்னவர்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. 

காரணம் எளிது (43) என்ற கவிதை காதல் எனும் பெயரில் அரங்கேறும் களியாட்டத்தை எடுத்தியம்புகின்றது. காதல் புனிதமானது என்று சொல்லப்பட்ட காலம் மாறி காதல் என்றாலே பருவத்தின் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுமளவுக்கு இன்று காதல் சந்துபொந்துகளில் எல்லாம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு காதலித்து.. ஊர் சுற்றி.. பின் திருமணத்துக்கு முதலே கர்ப்பமான ஒரு பெண் பற்றியே இந்தக் கவிதை பேசுகின்றது. தன் காதலி கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் வெளிநாட்டுக்குச் செல்லத் துணிகின்ற காதலன் வெளிநாடு சென்று வந்து அவளை மணமுடிப்பதாக உறுதியளிக்கின்றான். ஆனால் வெளிநாட்டுக்கு சென்று வந்த பிறகு இது பற்றி கதைக்கையில், தான் இல்லாத காலத்தில் அவளது நடத்தை தவறாக இருந்திருக்கின்றது என்று முகத்திலடித்தாற்போல கூறுகின்றான். 

நம்பிக் காதலித்து, தன்னையும் பறிகொடுத்து, பின் திருமணத்துக்கு முதலே கர்ப்பமாகி இறுதியில் காதலனே காதலியை நடத்தைக் கெட்டவள் என்று சொல்வதில் எங்கேயிருக்கிறது காதல்? காதலியைக் கைப்பிடித்து சொந்தமாக்கும் முன்பே களவாக அவளை அனுபவிப்பதில் எங்கேயிருக்கிறது காதல்? வீட்டார் நம்பி வெளியே அனுப்ப உல்லாச விடுதியில் உல்லாசமாக இருக்கும்போது ஏறிய காம போதையில் எங்கேயிருக்கிறது காதல்? காதல் என்ற சொல் இன்று கள்ளத் தொடர்புக்குத்தான் அநேகமாக பயன்படுகின்றது. அதைத்தான் மேற்கூறப்பட்ட சம்பவம் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இப்படிப் பல உண்மைச் சம்பவங்கைளைத் தொகுத்து கவிதைகளாக்கி மெய்ம்மை என்ற புத்தகம் வெளிவந்திருப்பதானது அந்த மெய்யை அனைவரும் உணர்ந்து திருந்தி வாழ்வதற்கான நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது. அதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். நல்ல விடயங்களை நாடிப் போக வேண்டும். தீயவற்றைக் கண்டால் விலகிப் போக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த உண்மைகளை உலகுக்குச் சொன்ன கவிஞர் ஏ. இக்பால் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - மெய்ம்மை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஏ. இக்பால் 
வெளியீடு - அல் கலம் வெளியீட்டகம்
விலை - 150 ரூபாய்

Sunday, July 10, 2016

98. அன்ன யாவினும் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

அன்ன யாவினும் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

விட்டு விடுதலை காண், அக்குரோணி ஆகிய கவிதை நூல்களை  வெளியிட்டுள்ள மன்னார் அமுதனின் அன்ன யாவினும் என்ற கவிதைத் தொகுதி மன்னார் தமிழ்ச் சங்க வெளியீடாக 33 கவிதைகளை உள்ளடக்கி 76 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
  
எழுச்சியின் நிழல் (பக்கம் 16) என்ற கவிதை வாழ்வின் இரு பக்கங்களான இன்பம் துன்பம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. வாழ்க்கையிடம் தோற்றுப் போனவர்கள் அதிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அவ்வாறு எழுந்தவன் கூட மற்றவர்களை ஏளனப்படுத்தும் நிலை தோன்றும். தன்னைவிட தாழ்ந்தவனையும் தாண்டிக்கொண்டு, தான் மட்டும் முன்னேறிவிட வேண்டும் என்ற மனப்போக்குள்ள மனிதன் பற்றி இக்கவிதை உணர்த்தி நிற்கின்றது.

எத்தனை எழுதியும்
எழுந்து நிற்க முடியவதில்லை
தோற்றவனின் மனதால்

ஏதோ ஒரு பொழுதில்
எழுந்து நின்றுவிட்டால்
ஏறிட்டும் பார்ப்பதில்லை
வீழ்ந்தவர்களை..

வீழ்வதிலும்
எழுவதிலும் தான்
தீர்மானிக்கின்றோம்
தோல்விகளையும்
வெற்றிகளையும்

நிசப்தம் (பக்கம் 21) என்ற கவிதை அழகிய உவமானங்களையும் படிமங்களையும் கொண்ட கவிதையாகக்; காணப்படுகின்றது. நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களிலிருந்து கவிஞனின் பார்வையில் சப்தம் நிசப்தமாக ஒலிக்கின்றது.

மழைக்கால நாயின்
முனகலைப் போலவும்
தனியறைக் கிழவியின்
இருமலைப் போலவும்
கேட்கிறது சப்தம்

அகரம் பறை ஆயுதம் மறை (பக்கம் 23) என்ற கவிதை நம்பிக்கை விதைகளைத் தூவும் கவிதையாக மலர்ந்திருக்கின்றது. இன்றைய காலத்தில் மன அழுத்தம் கொண்டவர்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றார்கள். வாழ்க்கையை வெறுத்து, உறவுகளை வெறுத்து, செய்யும் தொழிலை வெறுத்து ஏன் வாழ்கின்றோம் என்ற எண்ணப்பாட்டில் தன்போக்கில் வாழ்கின்றார்கள். அவ்வாறு மனதளவில் சோர்ந்திருப்பவர்களைத் தட்டிக்கொடுக்கும் இந்தக் கவிதையின் சில வரிகள் இதோ

முட்டிப் பாரு முடியுமே உன்னால்
மோதிப் பாரு உடையுமே தன்னால்
தட்டிப் பாரு தடைகளே எரியும்
தாண்டிப் பறக்க வானமே விரியும்

வாடா தோழா - நாம்
வாழ்வை வெல்வோம்
கூடா எண்ணம் - அதை
விதையில் கொல்வோம்

சுனாமியின் சுவடுகள் இன்றும் அழியாமல் கிடந்து மீண்டும் மீண்டும் கடல் பற்றிய பயத்தை அவ்வப்போது ஏற்படுத்துவது உண்மை. மழைக் காலத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இன்னொரு சுனாமி வந்திடுமோ என்ற அச்சம் இன்னும் இருக்கின்றது. அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மீள் குடியேறாமல் அவதிப்படுவது மனதுக்கு வேதனை தரக்கூடியதாகவும் உள்ளது. ஓ என் கடல் மாதா என்ற கவிதையில் கடல் மாதாவுக்காக, கவிஞன் மனதில் எழும் கவிதையின் வரிகள் இவ்வாறு துயரத்தை சுமந்திருக்கின்றது.

ஓய்வெடு என் கடல் மாதா
ஓய்ந்து விட்டாயா
ஓய்வெடு போதும் பகை ஓய்வெடு

விண் முட்ட அலைகள்
விழி நிறைய உடல்கள்
கண்ட காட்சிகளில்
கதறத்தான் முடியவில்லை

யார் அழுவது 
யாருக்காய் அழுவது
ஆண்டுகள் கழிந்தும்
அழுகை நிற்கவில்லை

நீதி (பக்கம் 43) என்ற கவிதை நீ மரித்த உலகம் பற்றி வாசகரிடம் பேசுகின்றது. நீதியைவிட பணத்துக்குத்தான் மதிப்பதிகம். நீதியை பணம் கொடுத்து தனதாக்கும் முயற்சிகள் கண்கூடாக நடந்து வருகின்றன. ஏழைகளுக்கு ஒரு சட்டம் - பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்றாகிவிட்ட நிலை இன்று பரவிக் காணப்படுகின்றது.

கஞ்சிக்கும் கூழுக்கும் 
நீதியொன்று - பணம் 
காய்த்த நல் மரத்திற்கு 
நீதி வேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி 
நீதி சொல்லும் - அந்த
நீதிமான்களைக் 
காலம் வெல்லும்

கவிதைகளை மிக நேர்த்தியாக எழுதிவரும் மன்னார் அமுதன் இன்னும் பல இலக்கியப் படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - அன்ன யாவினும்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - மன்னார் அமுதன்
வெளியீடு - மன்னார் தமிழ்ச் சங்கம்
மின்னஞ்சல் - amujo1984@gmail.comamujo1984@yahoo.com
விலை - 200 ரூபாய்