Monday, November 21, 2016

107. ''எனக்கும் உனக்குமான உலகம்'' கவிதைத் தொகுதி மீதான பார்வை

''எனக்கும் உனக்குமான உலகம்'' கவிதைத் தொகுதி மீதான பார்வை 

எனக்கும் உனக்குமான உலகம் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம். இவர் சிறந்த மேடைப் பேச்சாளரான சமூகஜோதி ரபீக் அவர்களின் புதல்வர். மழைமேகம் என்ற கவிதைத் தொகுதியையும், விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் (மாணவர் வழிகாட்டல்;) நூலையும் இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது வைத்திய கலாநிதியாக இருக்கும் இவர் இலக்கிய கலை நதியாகவும் இருப்பது சிறப்பம்சமாகும்.

ஈரம் சொட்டச் சொட்ட காதல் மழையில் நனைய விரும்புபவர்களுக்கு உனக்கும் எனக்குமான உலகம் என்ற இந்தத் தொகுதி மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தன் மனதில் உருவாகிய காதலை வார்த்தைகளால் செதுக்கிச் செதுக்கி ஒரு சிற்பமாக இப்புத்தகத்தை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். அதுபோல இளைஞர்களுக்கான அறிவுரைகளையும் அவர் இந்நூலில் திறம்பட வழங்கியிருக்கின்றார். வாழ்க்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அந்த அறிவுரைகள் காணப்படுகின்றன. நூலாசிரியர் கையாண்டிருக்கும் சொற்களும் உவமைகளும் மனதைக் கவர்ந்து பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

இன்னுமா ஒரு தேடல் (பக்கம் 07) என்ற கவிதை காதலியின் ஞாபகங்கள் கொண்டு வடிக்கப்பட்டிருக்கின்றது. காதலின் பசுமையான நினைவுகள் நெஞ்சைவிட்டு என்றும் அகலாதவை.. காதலித்த கணங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் இன்பங்களை சுமந்தவை.. காதலிப்பவர்களுக்காக மாத்திரமே இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு மெய் மயக்கம்.. இந்த ஆனந்த அவஸ்தையையெல்லாம் இரசிக்கும் ஒரு இளம் காதலனின் வரிகள் இதோ:-

அந்த 
மின்மினிச் சிரிப்புக்காக
கண்மணி தவமிருக்கிறது..

உன் கன்னக்குழியில்
வண்ணக் கிளியின் வதனம்...

வைகறைப் பனித்துளிகூட – எனக்கு
வாழ்த்துச் சொல்லும்
உன்னைப் பார்க்கும் போது...

என் சோகங்களை ராகங்களாக்கிவிட்டு
அந்த சோலைவனம் எங்கே சென்றது?

வயது வந்தவர்களுக்கு மட்டும் (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த கவிதை வாழ்க்கை மீது வெறுப்புற்று துவண்டு போனவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரிகளாக அமைந்துள்ளன. இன்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் வாழ்க்கையை வெறுத்து நடைப்பிணமாக வாழும் பலர் ஆறதலுக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள். ஒரு கவிஞன் தன் படைப்புக்களினூடாக வாழ்க்கையின் அர்த்தங்களைச் சொல்லி அவர்களை எல்லாம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறான்.

...உங்கள் வயது புயல் போன்றது
தெளிவான சிந்தனைகளால்
அதனை தென்றலாக மாற்றுங்கள்..

புன்னகைப் பூக்களைப் புண்படுத்திவிடாமல்
கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி பண்படுத்துங்கள்..

காலத்தை அரட்டையால் அழித்து விடாதீர்கள்
நேரத்தை குறட்டையால் குறைத்து விடாதீர்கள்..

மாட்டேனா என்ன? (பக்கம் 26) இல் அமைந்துள்ள காதல் கவிதை சிறந்த சொல்வளத்துடனும் ஓசைநயத்துடனும் கூடிய கவிதையாக அமைந்திருக்கின்றது. மனங்கவர்ந்த காதலிக்கு காதலன் எழுதும் அன்பு மடலாக இந்தக் கவிதை நோக்கத்தக்கது. காதலன், தன்னை வர்ணிக்கும் போது ஒரு காதலியின் மனவோட்டம் எப்படியிருக்குமோ அந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்துகின்றன கீழுள்ள வரிகள்..

தேன் சிந்தும் விழிகளிலே
நான் சேர மாட்டேனா?
மான் போன்ற மேனியாளின்
மடி வீழ மாட்டேனா?

நதிபோன்ற அதரங்களில்
அமுதெடுக்க மாட்டேனா?
புதிதான புன்னகையில்
பூப் பறிக்க மாட்டேனா?

வானம் தொட்டுவிடும் தூரம் (பக்கம் 28) என்ற கவிதை இயற்கை காட்சிகள் பற்றிய பதிவாக அமைந்திருக்கின்றது. இயற்கையை இரசிக்காத கலைஞன் (கவிஞன்) இல்லை. இக் கவிஞனின் மனம் இயற்கையோடு கலந்துறவாடுகிறது. 

பகலவனின் பார்வைபட ஒளிபெறுமே உலகம்
பாட்டுதனை பாடும்உழவர் பைந்தமிழின் அழகும்
அகலவரும் அருவிநீரின் மழலை மொழிச்சத்தம்
அணுதினமும் செவிகளிலே கேட்குமது நித்தம்

இயற்கையிலே நிறைந்துகிடக்கு ரசிப்பதற்கு அழகு
இதயம் திறந்து நீயும்பார்த்து மனிதனாகப் பழகு
செயற்கையான கருத்தையெல்லாம் தூரஎறிந்து வீசி
செந்தமிழால் ஆன இந்த கவிதையினை வாசி

அன்பே என் அன்பே (பக்கம் 60) என்ற கவிதை உலகத்தில் பல்வேறு விடயங்களுக்காக புகழ்பெற்றவர் சிலரையும், புகழ்பெற்ற இடங்கள் சிலவற்றையும் காதல் கவிதையூடாக அறிமுகப்படுத்தும் புதிய பாணியைக் கையாண்டிருக்கின்றார் நூலாசிரியர்.

புதுவெளிச்சம் காட்டும்
உன் புன்னகையை 
எங்கே சென்று புதுப்பித்தாய்?
நீ என்ன
எடிசன் மகளா?

கண்களிலே காந்தம் வைத்து
என்னைக் கவர்ந்திழுக்கும் வித்தை 
எங்கே சென்று கற்றாய்
நீ என்ன
நியூட்டன் உறவா?

மரீனாக் கடல்
சமாதானம் பேச சம்மதம்
உன் இதயத்தின் ஆழம்
அது அறிந்தது எப்படி?

செவ்வாயில் இடம் தேடும் பணி
நேற்றோடு இடைநிறுத்தம்
உன் செவ்வாயில் 
விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

நேற்றைய காற்று (பக்கம் 94) எனும் கவிதை பால்ய வயது ஞாபகங்களை வரிசையாக ஞாபகமூட்டிப் போகின்றது. இக்கவிதையில் வரும் பல்வேறு சம்பவங்கள் அநேகமாக எல்லோர் வாழ்விலும் நடந்தேறியிருக்கும். இதில் இல்லாத பல ஞாபகங்களும் இக்கவிதையை வாசிக்கையில் நம்மை வந்து தாலாட்டும். இன்றைய சிறுவர்கள் கணிணிக்குள்ளும், கைத்தொலைபேசிக்குள்ளும் தமது குழந்தைப் பருவத்தை தொலைத்துவிட்டனர். ஆனாலும் தமது குழந்தைப் பருவத்தை வயலோடும் வரப்போடும், குருவியோடும் கூட்டோடும், ஆற்றோடும் கரையோடும் மிக மகிழ்ச்சியாகக்கழித்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். நூலாசிரியரின் கவிதையும் அந்த அதிர்ஷ்டசாலிகள் பற்றியே ஞாபகப்படுத்திப் பேசுகிறது.

சிட்டுக் குருவி சிறகு வாங்கி
சிரித்துப் பறந்த ஞாபகம்
பட்டுப்பூச்சி வண்ணம்தனை
தொட்டு வியந்த ஞாபகம்

சுடச் சுடவே தேநீர் வேண்டி
அடம்பிடித்த ஞாபகம்
சுட்ட பின்பும் ஊதி ஊதி
சுவைத்துக் குடித்த ஞாபகம்

அலைகடலில் கால் கழுவ
ஆசைகொண்ட ஞாபகம்
அலையதுதான் பாய்ந்துவர
ஓட்டம்விட்ட ஞாபகம்

சொற்களை இலாவகமாகப் பயன்படுத்தி கவி யாத்திருக்கும் கவிஞர் அஸீம் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட்டு வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - உனக்கும் எனக்குமான உலகம்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம்
விலை - 250 ரூபாய்

106. செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத் தொகுதி மீதான கண்ணோட்டம்

செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத் தொகுதி மீதான கண்ணோட்டம்

 புரவலர் புத்தக் பூங்காவின் 36 ஆவது நூல் வெளியீடு மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பூகொடையூரைச் சேர்ந்த அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் என்ற கவிதை நூலாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் விஷேட துறையில் கலைமாணிப்பட்டம் பெற்ற இவர் தற்போது பூகொடை குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புவியியல் கற்பிக்கும் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அஸ்மா பேகத்தின் சிறியதும் பெரியதுமான 51 கவிதைகள் உள்ளடக்கியதாக செங்குருதியும் பச்சோந்தியும் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக நூலாசிரியர்களின் கன்னித் தொகுதிகளை தொடர்ந்தும் புரவலர் புத்தகப் பூங்கா வெளியிட்டு வருகின்றது. தனிமனிதனாக இவ்வகையான அரும்பெரும் சேவையைச் செய்து இலக்கிய உலகுக்கு வெளிச்சம் பாய்ச்சும் புரவலர் ஹாஷிம் உமர் பாராட்டுக்குரியவர்.

நூலுக்கு பதிப்புரை வழங்கியுள்ள ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரை அவர்கள் ''தம் படைப்புக்களை நூலாக்க முடியாத, மூத்த - இளைய படைப்பாளிகளை இனங்கண்டு, அவர் தம் படைப்புகளை நூலாக்கித்தரும் இப்பணி இன்றைய நாளில் கவனிக்கத்தக்க ஒன்றாக பேசப்படுவதையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்கிறோம். இந்த நூலின் வருகையின் மூலம் அஸ்மா பேகத்தின் கவித்திறனையும் ஆர்வத்தையும் பரவலாக அறியக் கூடியதாக இருக்கும். அத்தோடு அஸ்மா பேகம் மேலும் இத்துறையில் உற்சாகத்தையும் உந்துதலையும் பெறுவார்'' என்று குறிப்பிடுகின்றார். ''அஸ்மா பேகத்தின் பிரதிகள் பெண்ணிய வாசிப்பில்..'' என்ற தலைப்பில் மேமன் கவி அவர்கள் தனக்கேயுரிய பாணியில் இந்த நூல் பற்றிய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

நூலாசிரியர் தனது உரையை உள்ளத்திலிருந்து உங்களுக்காக என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

''கவிதை எழுதத் தொடங்கி பத்து வருடங்கள். ஆனாலும் சில வருடங்கள் ஏனோ எதுவும் எழுதாமல் எங்கோ ஓடிவிட்டன. ஏன் என்று என்னைக் கேட்டால் எனக்கே தெரியாது. எழுதியதில் உளப்பாரம் தீர்த்துவிட்டு நாடோடித் தனமாய் பத்திரப்படுத்தாமல் தொலைத்த கவிதைகள் பல. பல்கலையில் முளைத்த கவிதைகளை அங்கே தொலைத்து வந்து இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். பல்கலையில் பாதங்கள் வரை வந்த வாய்ப்புக்களை, சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் கவிதைகளை முடக்கி வைத்த கைசேதத்திற்காய் சின்னப் பிராயச்சித்தம் இது'' என்று தனதுரையில் நூலாசிரியர் கவிதைகள் பலவற்றை தொலைத்த அநுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றார். எழுதியவனுக்குத் தான் எழுத்தின் பெறுமதி புரியும். நூலாசிரியரின் இந்தக் கருத்து மனதை ரணப்படுத்துகின்றது. எங்கோ எப்படியோ பத்திரப்படுத்தப்பட்ட சொச்சக் கவிதைகளை செங்குருதியும் பச்சோந்தியும் கவிதை நூலாக வாசகர்களுக்கு தந்து ஓரளவு மனநிறைவு கொள்கின்றார் நூலாசிரியர்.

அடுப்பு தின்னும் பத்தாண்டுகள் (பக்கம் 24) என்ற கவிதையில் பெண்கள் அனுபவிக்கும் துயர் துல்லியமாhக் கூறப்பட்டுள்ளது. சில பெண்கள் சிறிது காலம் படித்ததும் படிப்பை நிறுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள். வீட்டில் அன்றாடம் சமைக்கும் பணியை மாத்திரமே மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சமையலில் திருப்தி காணாதவர்களுக்காக அவள் அடுக்களைக்குள் தன் நேரத்தை செலவிடுகின்றாள். பாரதி கண்ட புதுமை பெண் இன்னும் அடுக்களையை விட்டு வரவில்லை என்ற நூலாசிரியரின் சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் சிந்தனையாகக் காணப்படுகின்றது.

அடுப்பில் விறகோடு
அடுக்கப்படுவதாய்
அவளது ஏக்கங்களும்
எதிர்பார்ப்புக்களும்

அடுப்பூதப் படிப்பெதற்கு
என்ற காலம்
கொஞ்சம் வளர்ந்து
படித்து விட்டு
அடுப்பூதும்
பரம்பரையில்
அவளும்..

உன்னைத் தேடு (பக்கம் 28) என்ற கவிதை உற்சாகம் தரும் கவிதையாகக் காணப்படுகின்றது. அதில் எடுத்தாளப்பட்டுள்ள குறியீடுகள் சிறப்பானதாகும். தேங்கி நின்றால் நல்ல நீரும் சாக்கடை என்ற வரிகள் அர்த்தபூர்வமானது. வாழ்க்கையில் தோற்றுப் போனவனை தூக்கி நிறுத்தும் இந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-

வாழ்க்கைப் புத்தகத்தில்
இன்று உனது
எத்தனையாவது பக்கம்
எண்ணிப் பார்த்தாயா?

ஏனெனில் இன்று – உன்
கடைசிப் பக்கமாயும்
இருக்கலாம்..

இன்று வரை உனது
இலட்சியம் என்ன?

அலட்சியப்படுத்தாமல்
இன்றே உன்னிடம் கேள்..

உனக்குள் ஒழிந்திருக்கும்
உன்னை இப்பொழுதே தேடு..

தூக்கம் தொலைத்த ஏக்கம் (பக்கம் 38) என்ற கவிதை தொழிலுக்குச் செல்லும் பெண்களின் மன வேதனையை மொழிபெயர்த்துக் காட்டியிருக்கின்றது. காலையில் ஓட்டமும் நடையுமாக தொழிலுக்குச் செல்பவர்கள் மாலையில் சோர்வும் களைப்புமாக வீடு வருகின்றனர். பின் வீட்டு வேலை, சமையல் வேலை, குடும்ப உறவுகளின் வேலைகள் என எல்லாவற்றையும் கவனித்துவிட்டு குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட நேரமில்லாமல் தவிக்கும் தாய்மார்கள் அதிகம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள்கூட தன் குஞ்சுகளுடன், குட்டிகளுடன் அன்பாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்க்கும்போது செல்லப் பிள்ளையின் குறும்பை ரசிக்க நேரமில்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமே என்பதை இக்கவிதை நன்கு உணர்த்தியிருக்கின்றது.

வெளவாலும்
ஆந்தையும் இல்லாப் பொழுதில்
நான் மட்டும்
இரவைத் தத்தெடுத்தவள் போல
விழித்துக்கொண்டு
தினமும் அவதிப்படுகின்றேன்..

கனவொன்று கண்டு
நாட்களாச்சு..
கண்ணுறங்கவும்
நேரமில்லா வாழ்க்கையில்
என்னதான் என்
இறுதி இலக்கென்று
விம்மி அழும் மூச்சு..

சோர்வில்லா ம(லே)ழை (பக்கம் 54) எனும் கவிதை மழை நாளை ஈரலிப்பை அகக் கண்ணிலும் நெஞ்சிலும் பூசிச் செல்கின்றது. இனிய மாலையிலே மெல்லிய மழையை ஜன்னல் வழியாக பார்த்து ரசிப்போர் சிலர்.. மழையில் நனைந்து கொள்ளை இன்பம் கொள்வோர் சிலர். எவ்வாறிருப்பினும் மழைக் காலத்தின் நினைவுகள் அலாதியானவை. மெல்லிய மழைத் தூறல் ஒரு கவிஞனின் மனதையும் நனைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை. கோடையிலும் மழையை அனுபவிக்கு கவிதா ஆற்றல் கொண்ட உள்ளத்துக்கு முடியுமாயிருக்கின்றது. அத்தகையதொரு மழைக்காலம் கீழுள்ள வரிகளினூடே கண்முன் வந்துபோகின்றது.

இடி மேளம் முழங்க
மின்னல் படம் பிடிக்க
இசைக்கு அபிநயம் கொடுத்து
நர்த்தனமாடுது விடா மழை

அடிவானில் கரு மேகம்
அதன் மீதே தொடும் கோடு
அப்பாலே அரங்கேறும்
வானவில்லின் வர்ண ஜாலம்

சுழன்றடிக்கும் காற்றோடு
சுருதி தவறும் மழைத்தாளம்
கோர மழைக் குளிராலே
முகிலுக்கும் குளிர்க் காய்ச்சல்

இத்தொகுதியின் மூலம் இலக்கியத் துறையில் புதுப்பிரவேசம் செய்திருக்கும் நூலாசிரியர் இன்னும் காத்திரமான பல படைப்புக்களை வெளியிட எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - செங்குருதியும் பச்சோந்தியும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பூகொடையூர் அஸ்மா பேகம் 
வெளியீடு; - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்