Thursday, August 10, 2017

118. ''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்


ஏறாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் என்பவராவார். இவர் 'அல்-கையிஸ்' என்ற புனைப் பெயரிலும் தனது படைப்புக்களை எழுதியுள்ளார்.  பயிற்றப்பட்ட கலைமானி பட்டதாரி ஆசிரியராக தனது சேவையை சிறப்பாகச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக சேவை, ஆன்மீகத் துறை போன்றவற்றிலும் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்துள்ளார்.

1990 காலப் பகுதிகளில் இவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே மீண்டும் கலை இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். சமூகத்தின் மீது அதிக அக்கரை கொண்டு தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் தனது படைப்புக்களால் ஆளுமையை வெளிப்படுத்தி வந்த இவரை இனங்கண்டு 2012 ஆம் ஆண்டு பிரதேச கலை இலக்கிய விழாவில், ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இவரது 'சுவனத்து மலர்கள்' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியிட்டுக் கொடுத்துள்ளது. யாப்பிலக்கண விதிமுறைகளுக்குட்பட்டு கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற இவரது இரண்டாவது நூல் வெளியீடே 'பெண்ணியம்' என்ற கவிதை நூல் வெளியீடாகும்.

''பெண்ணியம்'' என்ற இந்தக் கவிதை நூல் 77 பக்கங்களில் 37 கவிதைகளை உள்ளடக்கியதாக எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது. இந்நூலில் அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களது மனப்பதிவுகளையும் அழகிய கவிதைகளாக இவரால் எழுதப்பட்டுள்ளன.

இந்நூலின் சிறப்பம்சமாக இஸ்லாமியக் கவிதைகளைக் கொள்ளலாம். வரலாற்றுச் சம்பவங்களை, இஸ்லாத்தின் போதனைகளை, இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கத்தை எல்லாம் பெண்ணியம் என்ற இந்நூலிலுள்ள கவிதைகள் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை முறையை இறைத்தூதர் முஹம்மத் நபியவர்கள் வந்தே சீர்திருத்தினார்கள் என்பது நாம் அறிந்த விடயம். அக்காலத்தில் காணப்பட்ட பல வழக்கங்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் பாரியளவில் மாற்றமுறத் தொடங்கின. அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி 'மனிதம் விதைத்தவர்கள்' (பக்கம் 01) என்ற தலைப்பில் அமைந்த கவிதையின் மூலம் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பெருமைக்காக மதுவுண்டு
பெண் சிசுக்குள் புதையுண்டு
இருளாம் குப்ரும் இணையுடனும்
ஈமான் இழந்து வாழ்ந்தவர்கள்

சாதிப் பெருமை வலுவாகி
சமுதாயம் பல பிளவாகி
சாதனையாப் பழி வாங்கி
சரித்திரம் படைத்த சண்டாளர்

அக்காலத்தில் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஒழித்துக்கட்டுவதற்காக பல சதிகள் நடத்தப்பட்டன. இஸ்லாத்தை ஏற்றவர்களை வதைத்து அவர்களுக்கு காபிர்கள் கொடுமை செய்தனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் சளைத்துவிடாமல் இஸ்லாத்துக்காக உயிர் நீத்தவர்கள் பலர். பெற்ற பிள்ளையைக்கூட இஸ்லாத்துக்காக வாழ்வதற்கு பயிற்வித்ததை உணர்த்துமுகமாக 'வீரத் தாய்மார்கள்' (பக்கம் 05) என்ற கவிதை எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொள்கையிலே உறுதி பூண்ட
சுமையா அன்னை
கொடியவனாம் அபூ ஜஹ்லின்
கொடுமைகளைத் தாங்கி
அடிமனதில் தௌஹீது
நிலை கொண்டதாலே
அபத்தினிலே ஈட்டி பாய
ஆருயிரை நீத்தார்..

சமூகத்தின் வேரையே ஆட்டங் காணச் செய்யும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று சீதனம். சீதனத்தை வாங்குபவர்களை ஏளனமாகச் சொன்னபோதும் சீதனம் கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வீடு, வீட்டுப் பொருட்கள், கார், நகைகள், லட்சங்கள் என்று அவற்றின் எல்லை விரிவடைந்தவாறு செல்கின்ற அவல நிலைக்கு தற்கால சமூகம் முகங்;கொடுத்து வருகிறது. அதை கவிஞர் மிகவும் கண்டித்து 'சீதனமா? சீச்சீ...' (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு சாடுகின்றார்.

கட்டழகு மேனியும் கற்புடனே நற்குணமும்
பட்டப் படிப்பும் பதவியும் - கட்டாக
வேதனமும் மாதாந்தம் வேறாகப் பெற்றிருந்தும்
சீதமுங் கேட்கின்றான் சீச்சீ..

பேர் புகழைத் தேடுதற்காய்ப் போராடும் செல்வந்தர்
ஊர் புகழும் வீட்டுடனே ஊர்திகளும் - காரிருள் போல்
பெண்ணுக்குச் சீதனமாய்ப் பெருந்தொகையுந் தள்ளினால்
என் செய்யும் இல்லாத ஏழை?

ஒரு மெல்லிய காதல் கதையை 'ஒரு தனிப் பறவை' (பக்கம் 30) என்ற கவிதையில் காண முடிகின்றது. சிறு வயது தொடக்கம் அன்பாக இருந்துவிட்டு பல்கலைக்கழகம் சென்றதும் தன்னை மறந்துவிட்ட காதலனிடம் காதலி கேட்கும் கீழுள்ள வரிகள் மனதில் வலியை ஏற்படுத்தி நிற்கின்றன.

பட்டப் படிப்பிற்காய் - நீங்கள்
பல்கலைக்கழகஞ் சென்ற பின்னே
ஒட்டு மொத்தமாய் - நம்
உறவை மறந்தீர்களா?
நுனிக்கரும்பாய் இருந்தபோது
நேசமுடன் இருந்துவிட்டு - நான்
அடிக்கரும்பாய் ஆனபோது
அனைத்தையும் மறந்தீர்களா?

'ஆணாதிக்கம்' (பக்கம் 32) என்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களைப் பல ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் பிரச்சினையாகக் கொள்ளலாம். சிலர் இதற்கு விதிவிலக்காக இருப்பது கண்கூடு என்றாலும் பெரும்பாலானவர்களால் பெண்கள் படும் வேதனையை கவிஞர் இந்தக் கவிதையில் சிறப்புற சுட்டிக்காட்டியுள்ளார்.

எறும்பெடுத்த அளையிலே
பாம்பு குடியிருப்பது போல்
இவனிருக்கும் வீடும்
இவனுடையதல்ல
இருந்துமவன்
இறுமாப்புடுன் பேசுகிறான்
என் வீடு என் வாசலென

................
அகப்பையொரு கையிலும்
அழுங் குழந்தை
மறு கையிலுமாய் - அவள்
அவதியுறும்போது
சமைத்து முடியலையா? என்னுஞ்
சத்தம் எழுகிறது..

பெண்ணியம் என்ற இந்நூலில் சமூகக் கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. சமூகத்தின் எழுச்சிக்காக குரல் கொடுக்கும் மிக முக்கிய கவிஞர் பட்டியலில் கலாபூஷணம் அப்துல் ஹலீம் அவர்களும் இணைந்திருக்கின்றார். மென்மேலும் கவியெழுதி சமூகத்தாகம் தீர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - பெண்ணியம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர - கலாபூஷணம் அப்துல் ஹலீம்
வெளியீடு - எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகம் 
விலை - 200 ரூபாய்

Tuesday, June 13, 2017

117. தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

 புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது. 

தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 

இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். 

சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.

இந்நாவலின் பிரதான பாத்திரமான ஐங்கரன் இலங்கையைவிட்டு வெளிநாடு போய் பத்து வருடங்கள் கழித்து தன் சகோதரியைப் பார்ப்பதற்காக இலங்கை வருகின்றான். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஐங்கரனுக்கு அவனது அண்ணன் பாஸ்கரனுக்கும் தாயாக தந்தையாக இருந்தவர்களும் அவர்களது அக்காவான ஈஸ்வரமும் அவளது கணவன் பசுபதியும்தான். 

நாட்டில் நிலவிய பயங்கர சூழலில் தன் உடன்பிறப்பை இழந்துவிடக்கூடாது என்ற உந்துதலில் பசுபதியின் வற்புறுத்தலில் ஈஸ்வரம் தன் தாலிக்கொடியை அடகுவைத்து ஐங்கரனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றாள். அத்தகைய அக்காவையும் அவளது கணவனையும் தன் பெற்றோரைப் போல எண்ணி மரியாதை செய்யும் ஐங்கரன் பத்து வருடங்கள் கழித்து நாட்டுக்கு வந்து தன் நண்பன் அழகேந்திரனின் உதவியோடு அக்காவைச் சந்திக்க முனைகின்றான்.

அக்காலத்தில் இருந்த சில வரைமுறைகளை மேற்கொண்டு அக்காவுக்காகக் காத்திருக்கும் அவன் தூரத்தே வெள்ளைப் புடவையணிந்து ஆடியாடி நடந்து வரும் பெண்ணைக் கண்டு மனதுக்குள் மிகவும் வேதனைப்படுகின்றான். இந்த யுத்தம் எத்தனைப் பேரின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது. அதில் எத்தனை விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் என்றெல்லாம் எண்ணி வருந்தியவன் அருகே வந்த பெண், தன் அக்கா என்று அறிந்ததும் ஆடிப்போய் கதறி அழுகின்றான். அவளது கணவன் பசுபதி ஷெல்லடிபட்டு இறந்துவிட்ட செய்தியை அறிந்து பெருமூச்சு விட்டவாறு தங்கள் மாமாவான மாயவரை பார்க்க அழைத்துப் போகின்றார்.

மாயவரின் மகள் கனகாவைத்தான் ஐங்கரனின் அண்ணாவான பாஸ்கரனுக்குத் திருமணம் முடிக்க பேசியிருக்கின்றார்கள். ஆனால் அவனோ அடுத்த மாதம்.. அதற்கடுத்த மாதம்.. என்று காலத்தைக் கடத்தி சுமார் ஒரு வருடங்கள் கனகாவைக் காக்க வைக்கின்றான். பாஸ்கரன் கனகாவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஐங்கரனுக்கு அறிவிக்க அவன் அதைத் தன் அக்கா ஈஸ்வரம் மூலம் மாயவருக்கு புரிய வைக்கின்றான். அத்தோடு தான் கனகாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றான் ஐங்கரன்.

ஒருத்தரால் வஞ்சிக்கப்பட்ட கனகா அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட விரும்பாமல் பிடிவாதம்  பிடிக்க அந்தத் துயரம் தாங்காமல் மாயவர் இறந்து போகின்றார். வாழ்க்கையை இழந்த கனகா ஏமாற்றத்தோடு மனமுடைந்து காணப்படுகின்றாள்.

தன் சகோதரன் செய்த தவறுக்கு தான் பிராயச்சித்தம் தேடி கனகாவை மணமுடிக்க தயாரான ஐங்கரனுக்கு தற்போது என்ன செய்வது என்ற தெரியாத நிலையில் இருக்கின்றான். 

கனகாவின் தோழி மைதிலி. யுத்தத்தின்போது ஒரு காலை இழந்துவிட்டு தற்போது கொழும்பில் வேலைத் தேடிக் கொண்டிருக்கின்றாள். அழகேந்திரனின் வற்புறுத்தலாலும் மைதிலியின் அழகு, அறிவாலும் கவரப்பட்ட ஐங்கரன் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பதாய் எண்ணி மைதிலியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றான். 

யுத்தம் பலரது வாழ்வை சின்னாபின்னப்படுத்தியதற்கு உதாரணம் பாஸ்கரன் வெளிநாட்டில் வெள்ளைக்காரப் பெண்ணை மணமுடித்து குழந்தையும் இருக்கத்தக்க கனகாவை மணமுடிப்பதாக ஏன் பொய் சொல்ல வேண்டும்? தன்னால் முடியாது என்றும் தான் ஏற்கனவே திருமணம் முடித்தவன் என்றும் ஏற்கனவே பாஸ்கரன் சொல்லியிருந்தால் மாயவர் கனகாவுக்கு வேறு துணையைத் தேடியிருக்கக் கூடும். 

கனகாவின் வாழ்க்கை போல் எத்தனை பேதைப் பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருப்பார்கள் என்று எண்ணுகையில் மனதில் துயர் மேகம் படகின்றது.
அதுபோல உறவுகளை மறந்துவிடாமல் தன்னைக் கரையேற்றிய அக்காவைப் பார்க்க பத்து வருடங்கள் கழிந்த நிலையில்  அதே பாசத்துடன் திரும்பி வந்த தம்பி ஐங்கரனால் நாவலின் துயரம் சற்று மட்டுப்படுத்தப்படுகின்றது. மைதிலிக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டமை சற்று ஆறுதலான விடயம்.

ஐங்கரனின் நண்பன் அழகேந்திரனின் உதவியால் ஈஸ்வரத்தின் மகனும் வெளிநாடு செல்லக் கூடிய நிலமை உருவாகியமை நட்பின் புனிதத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இந்நாவலில் காணப்படும் ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றது. முன்னால் நடந்துகொண்ருக்கும் சம்பவத்தைப் பார்ப்பது போன்ற தத்ரூபத்தை நூலாசிரியரின் கதைசொல்லும் பாங்கு ஏற்படுத்துகின்றது. தெளிவான எழுத்தோட்டம். அலட்டல்களில்லாலத சொற்பிரயோகங்கள் நாவலை இறுதிவரை வாசிக்கத் தூண்டுகின்றது.

சிறுகதை, நாவல் துறைகளில் இன்னும் சிறப்பாக செயற்பட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென பிரார்த்தித்து நூலாசிரியர் மா. பாலசிங்கம் அவர்களை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - தழும்பு
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - மா. பாலசிங்கம்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா

Tuesday, April 18, 2017

116. உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

வெலிகம மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற நூல். இந்நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் வெலிகமையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள். இவர் ஏற்கனவே கணிதப் பயிற்சி (வெள்ளி மலர்), வெலிகாமத்தில் கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் சிறப்பு மலர், மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் (மறைந்த உலமாக்களின் விபரம்), பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு, மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர், நெஞ்சைவிட்டும் நீங்காத நினைவலைகள் (மர்ஹும் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைவு மலர்), அருள் மழை பொழியும் ரமழான் ஆகிய நூல்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற இந்த நூலானது, தப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலில் காணப்படுகின்ற பலரது கவிதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட பெருமதிவாய்ந்த நூலாகும். இறைவனின் வல்லமை, இறையச்சம், இறைவனின் கருணை, முஹம்மது நபியின் முன்மாதிரி, வாழ்க்கை, மரணம், நீதி, நிதானம், நன்மை – தீமை ஆகிய பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கவிதைகளையே நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார்.

கவிதைகள் இதயத்துக்கு உற்சாகமளிக்கக் கூடியவை. ஆன்மாவுக்கு உயிரூட்டக்கூடியவை. சிறிய கவிதைகள் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். அவ்வாறான கவிதைகள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இலகுவாகக் காணப்படுவதால் அவற்றை வாசிப்பவர்களின் தொகையும் அதிகமாகும்.

இத்தொகுப்பில் காணப்படும் கவிதைகளும் அத்தகையவை தாம். சிற்சில வரிகளினூடாக ஆழமான விடயங்களைக் கூற விழைந்துள்ளன. இறையச்சத்தையும், வாழ்வியல் யதார்த்தத்தையும் ஆணித்தரமாக மனதில் விதைக்கக் கூடியன.

நீ உடைத்த எலும்பை
ஒட்டுவார் யாருமில்லை
நீ இணைத்த எலும்பை
உடைப்பவரும் யாருமில்லை

என்ற வரிகள் இறைவனின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இறைவன் நாடினால் மாத்திரமே இலைகூட அசையும் என்பது நாம் அறிந்த விடயம். அதே போல வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்கின்ற சகல விடயங்களும் இறைவனின் தீர்ப்பே அன்றி வேறெதும் கிடையாது என்பது இதனால் புலனாகின்றது.

அகத்திலுள்ளதை மறைக்காதீர்
அல்லாஹ் அறியக் கூடாது என்பதற்காக
எப்படி மறைத்தாலும்
அல்லாஹ் அறியவே செய்வான்

மனிதர்களிடம் நாம் வேண்டியதை மறைத்து ஏமாற்றிவிடலாம். ஆனால் அல்லாஹ்வை ஏமாற்றவே முடியாது. எமது உள்ளத்தில் நாம் நினைக்கின்ற விடயங்களைக்கூட அல்லாஹ் நன்கறிந்தவனாகக் காணப்படுகின்றான். எனவே அவனது தண்டனைக்குப் பயந்துகொள்ள வேண்டும். அவனது அருளுக்காய் பாடுபட வேண்டும் என்ற சிந்தனையை மேலுள்ள கவி வரிகள் ஏற்படுத்துகின்றன.

நாம் இரவில் கண்ணயர்ந்து உறங்குகின்றோம். காலையில் எழுந்து குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால் மரணம் என்பது எமது செருப்புக்களின் வாருகளைவிட எம் அருகே இருக்கின்றது. அந்த மரணத்தை நாம் ஒருபோதும் விரட்டியடிக்க முடியாது. எமக்கான தவணை வந்தால் நாம் இறைவன்பால் மீண்டுவிட வேண்டும். இதனை கீழுள்ள வரிகளில் காணலாம்.

காலை விடியலுடன்
குடும்பத்தாரோடு
விடியலை அடைகிறேன்..
செருப்புவாரைவிட
அருகில் இருக்கிறது மரணம்

இஸ்லாமிய மணம் கமழக்
கூடிய இச்சிறு கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நூலாசிரியரின் இந்த முயற்சியை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! மேலும் பல காத்திரமான நூல்களை வெளியிட்டு தமிழ்ப்பணி மற்றும் ஆன்மீகப் பணியாற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள்
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711

Wednesday, January 25, 2017

115. இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

பாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.

குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

தனது சிறுவயது முதற்கொண்டு  கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.

தனது சூழலில் அன்றாடம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.

ஈரமுள்ள நெஞ்சம் (பக்கம் 01) எனும் கதை உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் ஒருசில மாணவர்கள்தான் போட்டிக்கு படிப்பார்கள். பெரும்பாலானவர்கள் நன்றாக படிப்பவர்கள் மீது பொறாமை கொண்டவர்களாகவும், அவர்களை ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும்தான் காணப்படுவார்கள். இது மாணவர்களின் இயல்பு. தான் செய்வதே சரி என்ற ஆதிக்கத்தில் சிலர் இருப்பார்கள். மற்றவர்களை பற்றி சதாவும் குறைகூறியபடி இருக்கும் மாணவர்கள் இருப்பார்கள். இவற்றையெல்லாம் ஆசிரியர்கள் தம் கழுகுப் பார்வையாலே உணர்ந்து கொள்வதுண்டு. இக்கதையிலும் அவ்வாறான மனநிலை கொண்ட சில மாணவிகளதும், அன்புள்ளம் கொண்ட ஒரு மாணவியினதும் செயற்பாடுகள் சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளன.

மலர் என்ற மாணவி பாடசாலைக்கு வர தாமதமாகிறது. மாணவிகள் எல்லோரும் மலர் இன்று வகுப்பறையை சுத்தம் செய்யவிருப்பதால் நேரம் பிந்தி வருவாள் என்று ஆசிரியரிடம் சொல்லுகின்றனர். வகுப்பறை குப்பைகள் நிறைந்து அழுக்காக காணப்படுகின்றது. சிறிது நேரத்தில் வகுப்புக்கு தாமதமாக வரும் மாணவி மலரிடம் ஏன் தாமதம் என ஆசிரியர் கேட்கின்றார். அதற்கு மலர் அழுதவாறே கால் இழந்த ஒரு மனிதருக்கு தன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு தண்ணீர் அருந்தச் செய்த பின் வருவதற்கு சற்று சுணங்கிவிட்டதாகக் கூறுகின்றாள்.

அதற்கு ஆசிரியர், நீ நல்ல பிள்ளையம்மா. நல்ல காரியம் ஒன்றை செஞ்சிட்டு வந்து ஏம்மா அழுரே? உன்னப் போல எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த இரக்கம், பாசம், உதவி செய்யும் உள்ளம் இருந்தால் இண்டக்கி வகுப்பறை இப்படி இருந்திருக்குமா? என்று கேட்கின்றார்.

ஆசிரியர் இவ்வாறு சொன்னதும் மற்ற மாணவிகளுக்கு தாம் செய்த தவறு விளங்குகின்றது. உடனே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வகுப்பறையைச் சுத்தம் செய்வதாகவும், மலரோடு அன்பாக இருப்பதாகவும் கதை நிறைவடைகின்றது.

மனித நேயம் (பக்கம் 06) எனும் கதை பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இன்று பஸ்களில் பயணம் செய்பவர்களைப் பார்க்கும்போது மனிதநேயம் மரணித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

வயதானவர்கள் வந்தால் இடம் கொடுக்க விருப்பமின்றி அசட்டையாக அப்பால் திரும்பிக்கொள்வது, தூங்குவது போல நடிப்பது அல்லது கர்ப்பிணித் தாய்மார்கள் வந்தால் வேறு யாராவது இடம் கொடுக்க மாட்டார்களா என்று சுற்று முற்றும் பார்ப்பது, அல்லது பொதிகளை வைத்திருப்பவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் தெரியாதது போல பாவனை பண்ணுவது போன்றவற்றை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இனி இல்லை என்றால் சிலர் அவ்வாறு எழுந்து இடம்கொடுப்பதும், பொதிகளை வாங்கி உதவி செய்வதும் அத்தி பூத்தாற்போல காணக் கிடைக்கின்ற காட்சிகளாகும்.

இக்கதையில் வருகின்ற அருண் என்ற மாணவன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவனருகில் நின்றுகொண்டு வந்த பெரியவரின் தோற்றமும், உடையும் அவர் மீது அவனுக்கு மிகுந்த மரியாதையை வரவழைக்கின்றது. எனவே அவருக்கு இருக்க இடம்கொடுத்துவிட்டு அவன் நின்றபடி வருகின்றான். மற்ற நண்பர்கள் அவனைப் பார்த்து கேலி செய்கின்றனர்.

அருண் படிக்கும் பாடசாலையில் அன்று இலக்கிய விழா. அதில் பேச்சுப் போட்டியில் மனித நேயம் என்ற தலைப்பில் பேசி முதலாமிடம் பெற்ற அருணுக்கு பரிசில்களை வழங்கி வைத்தவர் காலையின் அருண் பஸ்ஸில் கண்ட அந்தப் பெரியவர். அவர் அருணுக்கு பரிசிலை வழங்கியதுடன் ``இந்தச் சிறுவன் மனித நேயம் என்ற தலைப்பில் பேசியவன். பேச்சில் கூறப்பட்டது போல் செயலிலும் காட்டியவன். அருணுக்கு எனது அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கி அவனை கௌரவிக்கிறேன்'' என்கின்றார். வாய்ப் பேச்சால் மட்டும் உலகை வெல்ல முடியாது. உண்மையான செயற்பாடு மூலமே உயர்வடையலாம் என்று கதாசிரியர் இறுதியில் கூறியிருக்கும் கூற்று நிதர்சனமானது.

நழுவிய சந்தர்ப்பம் (பக்கம் 13) என்ற கதையில் கல்வியின் சிறப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. சாதாரண பரீட்சையில்  சித்தியடைந்த நபீஸ் உயர் தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிவெடுக்கின்றான். ஹரூஸின் பெறுபேறுகள் போதாமல் இருப்பதால் அவன் மிகவும் கவலையடைகின்றான். ``நானும் இன்னும் கவனமாகப் படித்திருந்தால் உன்னைப் போல உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிந்திருக்குமே. இனி அதைப்பற்றி எவ்வளவு சிந்தித்தும், அழுதும் பயனில்லை. நீயாவது படித்து ஊரில் உயர்ந்த அந்தஸ்திற்கு வா. நான் கலைப் பிரிவில் படித்து ஏதோ ஒரு சிறு தொழிலையாவது செய்ய முயற்சிக்கிறேன்'' என்று ஹரூஸ் கூறும் கூற்றில்

''ஏதோ ஒரு சிறு தொழிலையாவது'' என்ற சொல்லாடல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையவில்லை. ஏனெனில் கலைப்பிரிவில் கற்றவர்கள் படிக்க முடியாதவர்கள் என்று அர்த்தமாகிவிடாது. கலைப் பிரிவில் கற்ற எத்தனையோ பேர் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, கலாநிதிகளாக, பிரபல எழுத்தாளர்களாக ஏன் சட்டத்தரணிகளாகக்கூட உருவாகி இருக்கின்றார்கள். எனவே கலைப் பிரிவு என்பதை தாழ்வாக சித்திரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒழிந்தது பிடிவாதம் (பக்கம் 16) என்ற கதை சிறுவர்கள் அடம்பிடித்து தம் காரியங்களை செய்து கொள்வதில் வல்லவர்கள் என்பதையும் அதனால் பெற்றோர்கள் மனக் கவலைக்கு ஆளாகிவிடுகின்றனர் என்பதையும் திறம்பட சொல்லியிருக்கின்றது. இக்கதையில் வரும் சிறுமியான பாத்திமா தன் பிறந்த நாளுக்கு தங்கச் சங்கிலி வேண்டும் என்று அடம்பிடிக்கின்றாள். ஆனால் அதைச் செய்து கொடுக்குமளவுக்கு பாத்திமாவின் பெற்றோர் வசதியானவர்கள் கிடையாது. ஒருநாள் பாத்திமா பாடசாலை விட்டு வரும்போது மழை பெய்த காரணத்தால் ஒரு குடிசையருகில் ஒதுங்குகின்றாள். அந்தக் குடிசையில் இருந்த சிறுமியின் அப்பாவுக்கு சுகமில்லை. அதனால் அம்மா வேலைக்குச் சென்று காசு சம்பாதித்து தன் மகளை சுற்றுலாவுக்கு அனுப்ப காசு தருகிறேன் என்று மகளிடம் கூறுகின்றாள். அதற்கு அந்தச் சிறுமி நீங்கள் இருவரும் கஷ்டப்பட வேண்டம். நான் அடுத்த வருடம் சுற்றுலா போகிறேன் என்று நிலைமையுணர்ந்து கூறுகின்றாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாத்திமாவின் உள்ளம் தெளிவாகின்றது. தானும் இனிமேல் தன் பெற்றோருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று உணர்ந்து திருந்துகின்றாள். அருமையானதொரு கதை இது.

பிறந்த நாள் பரிசு (பக்கம் 25) என்ற கதையும் மாணவர்களுக்கு படிப்பினையான ஒரு கதையாகும். பிறந்த நாளுக்காக இன்று ஆடம்பரமாக செலவு செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இதைத் தவிர்த்து இக்கதையில் வரும் சிவா என்ற சிறுவன் பாடசாலை வாசிகசாலைக்கு புத்தகங்களைப் பரிசளிக்கின்றான். அவனது செயலைப் பாராட்டி பாடசாலையில் அவனையும், அவனது பெற்றோரையும் கௌரவிக்கின்றார்கள். நாம் வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும். இவ்வாறான காரியங்கள் எம்மை எமக்கும் மற்றவர்களுக்கும் பறைசாற்றும். இவ்வாறான நல்லவற்றை நாமும் செய்து பிறரையும் செய்யத் தூண்ட வேண்டும். ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறான பயன்மிகு கதைகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வாசிப்பதற்கு ஏற்றன. அவ்வாறான கதைகளை ஒரு தொகுதியாக்கி வெளியிடும் வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் பஸீலா அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் - இளந்தளிர்
நூலின் வகை - சிறுவர் கதைகள்
நூலாசிரியர் - பஸீலா அமீர்
விலை - 140 ரூபாய்

114. அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும் நூல் பற்றிய சுவையான கண்ணோட்டம்

அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும் நூல் பற்றிய சுவையான கண்ணோட்டம்


கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இலக்கிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவர். திறனாய்வுகளை திறம்பட எழுதி வருவதுடன், மொழிபெயர்ப்புக்களையும், பத்தி எழுத்துக்களினூடாக பலரைப் பற்றிய, பல்துறை சார்ந்தவை பற்றிய அறிமுகங்களையும் செய்து வருகின்றார். இவருடைய ஆளுமை, விசேடமாக கடல் தாண்டி விரிவடைந்திருக்கின்றமை இலங்கையர்களான நம் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும். 

ஒரு பத்தி எழுத்தாளராகவும், மதிப்புரையாளராகவும், கட்டுரையாளராகவும் செயற்படும் இவர் ஏனையவர்களைப் பற்றி மனம் திறந்து எழுதுவது பாராட்டப்படக்கூடியது. அதற்கான காரணம்; மற்றவர்களின் படைப்புக்களை முழுதாக நேரம் ஒதுக்கிப் படித்துவிட்டு, அந்த முயற்சியைப் பாராட்டி, அதிலுள்ள நல்லவற்றை எடுத்துக்காட்டி, பிழைகளை இங்கிதமாக சுட்டிக்காட்டி எழுதியவரை இன்னும் ஊக்கப்படுத்தும் பணியை இவர் செய்து வருவதாகும். பரந்துபட்ட திறந்த மனதுடையவர்களால்தான் மற்றவர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல முடியும். அதே போல் மற்றவர்களின் படைப்புக்களை திறந்த மனதுடன் அணுக முடியும். அந்த வகையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மென் மனம் படைத்த ஒரு இலக்கியவாதியாவார்.

பல நூல்களுக்கு சொந்தக்காரரான இவர், ''அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்'' என்ற இன்னொரு திறனாய்வு நூலை வெளிக் கொணர்ந்திருக்கின்றார். 110 பக்கங்களில் அமைந்துள்ள இத்தொகுதி மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்திருக்கின்றது.

திறனாய்வு, மதிப்பீடு, விமர்சனம் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் இவ்வார்த்தைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒத்த கருத்தைத் தருவதில்லை. அதற்கான அர்த்தத்தை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கீழுள்ளவாறு அருமையாக விளக்குகின்றார்.

Review என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மதிப்புரை என்று தமிழில் கூறுகின்றோம். கலை இலக்கியங்களின் தரம் பற்றிய கருத்து அல்லது கணிப்பு மதிப்புரை எனலாம். திறனாய்வு, விமர்சனம் என்ற சொற்களும் மதிப்புரையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான திறனாய்வு மதிப்புரையையும் சற்று கடந்தது. விரிவானது. ஆழமானது. Critisism என்ற வார்த்தைக்கு சிலர் கண்டனம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். குணதோஷங்களை காரணங்களுடன் சான்றுகளுடன் வெளிப்படுத்தும் முறைமையை Criticism எனலாம்.  பாடல்களில் உள்ள நயங்களைக் காணல் என்பது Appreciation என்பார்கள்.....'

இலங்கையில் வெளிவந்த விடிவு என்ற தொலைத் திரைப்படம் பற்றி கே.எஸ். சிவகுமாரன் தனது கருத்துக்களை இந்த நூலில் (பக்கம் 15) எழுதியிருக்கின்றார். அந்தத் திரைப்படத்துக்கான கதை, வசனம், நெறியாள்கை என்பவை பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படம் அங்கவீனம் பற்றி பின்வருமாறு பேசுகின்றது. அங்கவீனர்கள் தாழ்த்தபட வேண்டியவர்கள் அல்லர். உடலில் ஊனம் இருப்பதைவிட மனதில் ஊனம் இருப்பதுதான் வெட்கப்படக் கூடியதொரு விடயமாகும். அந்த வகையில் பரிகாசத்துக்கும், கிண்டலுக்கும் அங்கவீனர்கள் ஆளாகிவிடக் கூடாது. உடலளவில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இன்று பாதையோரங்களில் அவ்வாறான பலரை நாம் தினசரி சந்திக்கின்றோம். அவர்களில் எத்தனைப் பேருக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இலங்கை வரலாற்றில் கறை படிந்த பக்கங்களில் யுத்த காலம் பிரதான இடத்தை வகிக்கின்றது. உயிர்ச் சேதம், உடல் சேதம், பொருட் சேதம் என்று பல வகைகளிலும் மனிதனின் வாழ்க்கையோடு விளையாடிவிட்ட யுத்தத்தின் எச்சங்களாக இன்று பல அங்கவீனர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய சம்பவங்களைத் தொகுத்தே இந்த விடிவு என்ற திரைப்படம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் எந்த இனமும் இன்னொரு இனத்தைச் சாராமல் வாழ முடியாது என்ற கருவும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. மூவினங்களைக் கொண்ட இலங்கையில் யாரும் யாரையும் விலக்கி வைத்துவிட்டு கருமமாற்ற முடியாது என்பது கண்கூடான விடயம். இத்திரைப்படம் திருப்திகரமானது என்பதை கே.எஸ். சிவகுமாரன் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

மாதுமை சிவசுப்பிரமணியத்தின் தூரத்துக் கோடை இடிகள் என்ற நூல் பற்றியும் இத்தொகுதியில் எழுதப்பட்டிருக்கின்றது. மாதுமை திருகோணமலையைச் சேர்ந்தவர். பாடசாலைக் காலத்திலேயே சிறுகதைகள் எழுதி பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டவர். மாதுமை, பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்களின் புதல்வியாவார். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் துன்பங்கள் குறித்த பிரச்சினைகளை அவர்களது மொழிப் பாணியிலேயே எழுதியுள்ளார். இவரைப் பற்றிய நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'முதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்திய – மத்திய தர மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இன வேறுபாடுகளுக்கும் அப்பால் மனித உறவுகளின் அன்னியோன்னியம், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர் சிலரின் கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப்பெண் வயோதிபருக்கும், அநாதைப் பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கண நேரக் காதலை வெளிப்படுத்த முடியாத அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின் உதாசீனம், குருவை உதாசீனஞ் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மண வாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி, தோல்விகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப் பலவிதமான நிகழ்ச்சிகளை அவர் வாசகர் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க அம்சம்'.

இலக்கிய உலகத்தின் ஜாம்பவானாக என்றும் விளங்குபவர் டொமினிக் ஜீவா அவர்கள். உழைப்பால் உயர்ந்த அவர் பலருக்கு முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். மல்லிகை என்ற சஞ்சிகை மூலம் பலரை இனங்காட்டியவர். மக்களை மதிப்பவர். இயல்பாகப் பழகக் கூடியவர். அதே போல முகத்திற்கே எதையும் கேட்டுவிடும் போக்குடையவர். பின்னாலிருந்து மற்றவர்கள் பற்றி பேசாதவர். இவர் பற்றி நூலாசிரியரின் கருத்து இவ்வாறு அமைந்திருக்கின்றது.

'டொமினிக் ஜீவா கீழ் மட்ட வாழ்க்கை அனுபவங்களை இளமையிலேயே எதிர்கொண்டவர். சுய நம்பிக்கை, விடா முயற்சி, அறிவுத் தாகம், பிரயாசை, கடின உழைப்பு, ஜீவ காரூண்யம், சிறுமை கண்டு வெகுண்டெழும் தார்மீகக் கோபம், வரித்துக்கொண்ட அரசியல் தத்துவார்த்தக் கோட்பாடு போன்றவை அவர் தளத்தை உயர்த்தியிருக்கின்றது. இவர் பல மட்டங்களிலும் பரிச்சயமுள்ளவர் - சமுதாய மட்டங்களில் மாத்திரமல்ல வாழ்க்கையின் இதர மட்டங்களிலும் தளங்களிலும் பரிச்சயமும் கொண்டவர். வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்திலே சிறப்புப் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர். சிறுகதை எழுத்தாளனாக ஆரம்பித்து மல்லிகை என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியனாக மலர்ந்து, இன்று நூல் வெளியீட்டாளனாகவும் பரிணமித்திருக்கின்றார். இவரில் குழந்தைத் தன்மை இயல்பாய் அமைந்திருக்கின்றது. இதுவே இவரருடைய வெற்றியின் இரகசியம்'

தான் ரசித்த புத்தகங்கள், சினிமாக்கள், தான் சந்தித்த மிக முக்கியமான மனிதர்கள் பற்றியெல்லாம் வாசகருக்கு அறியத் தரும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் பவள விழா கண்ட மூத்த ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்
நூல் வகை - ஆய்வு 
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன் 
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 120 இந்திய ரூபாய்

113. அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

 எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார்.

புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார்.

ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார்.

நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.

அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.

கொழுந்து கொய்து
கொழுந்து கொய்து
வெடித்துப் போன - என்
விரல் இடுக்கைப் பாராதே..

கங்காணி திட்டுவதைப் பாராதே
கணக்குப்பிள்ளை
கடிவதைப் பாராதே..

தேயிலைக்குள் மாண்ட
தலைமுறை என்னோடு முடங்கட்டும்
கலாம் சொன்னதைப் போல
காத்திருக்கிறது உலகம்
அக்கினியாய் வெளியே வா
என் அக்கினிக் குஞ்சே

நான் அநாதையா? (பக்கம் 17) என்ற கவிதை வித்தியாசமான முறையில் அமைந்திருக்கின்றது. எதுவும் இல்லாதவன் அநாதை என்று சொல்லப்படுவதை எதிர்த்து, எனக்கு நான் இருக்கும் வரை அநாதை இல்லை என்ற மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது இந்தக் கவிதை.

குப்பைக்குழி உண்ட
எச்ச உணவை
என் குடல் நிரப்பும்

கொக்கு குடித்து வளரும்
குளத்து நீர்
என் தாகம் தீர்க்கும்

அழுக்குத் துணிகள்
என் அந்தரங்கம் மறைக்கும்

என் இலக்குகளை
நித்திரைக்குள் தள்ளிவிடாதீர்கள்
ஊனப் பார்வை பார்த்து
என் உள்ளததை
ஊனமாக்கி விடாதீர்கள்

கானல் நீர் (பக்கம் 25) என்ற சிறிய கவிதை அழகிய உவமானங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பருவ கால மழையை காதலுக்கு உவமித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றது.

தொடர் மழையாய் வந்த
உன் காதல் மழை
பருவ மழையாகி பின்
பார்த்துவிட்டுப் போகும் மழையானது
இப்போது பாலைவன
மழையாகக்கூட இல்லையே
பாலைவனக் கானல் நீரைப் போல
உன் காதலும் என்னை ஏமாற்றுகிறது

லயம் பார்க்க வாருங்கள் (பக்கம் 55) கவிதையில் மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கை முறையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரே அறைக்குள் ஏழெட்டு ஜீவன்கள், ஆடு, மாடு, கோழிகளோடு வாழ்ந்திடும் வாழ்க்கை, அடிப்படை சுகாதார வசதிகளற்ற நிலைமை போன்றவை கவிதையை வாசிக்கையில் மனக் கண்ணில் நிழலாடி மனதை கனக்கச் செய்கிறது.

வீட்டெரு கூட்டெரு மாட்டெரு மனித எரு
எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பார்க்க வேண்டுமா?

குருவிக் கூடு கோழிக்கூடு ஆட்டுப்பட்டி பாட்டிப்பட்டி
ஆதங்க அழுகைப்பட்டி பார்க்க வேண்டுமா?
ஐந்து பேர் ஆறு பேர் ஏழு பேர் எட்டு பேர்
ஒன்றாய் ஓரிரு அறையில்
மூன்று சகாப்தமாய்
முடங்கி வாழ்வதைப் பார்க்க வேண்டுமா
லயித்து வாழ்ந்தவர்களே
முகம் சுளித்துப் பார்க்க லயம் பார்க்க வாருங்கள்

தன் கவிதைகளுக்கூடாக சமூக எழுச்சியை ஏற்படுத்த நினைக்கும் நூலாசிரியர் தயானியிக்கு என்வா ழ்த்துக்கள்!!!

நூல் - அக்கினியாய் வெளியே வா
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - இராகலை தயானி
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்

112. பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.

இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.

பேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு, 'ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்' என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

இனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன.

நீ தரும் சோதனைகளின் போதும் வேதனைகளின் போதும் எனதுள்ளத்தினைப் பலவீனப்படுத்தாதே.. என் ஏகனே பலப்படுத்து.. நீ தரும் துன்பங்களின் போதும் துயரங்களின் போதும் எனதெண்ணங்களைத் துருப்பிடிக்கச் செய்யாதே என் ஏகனே தூய்மைப்படுத்து.. காத்திருக்கிறேன் உன் சோதனைகளுக்காக.. அஞ்சவில்லை நீ தரும் வேதனைகளுக்காக.. திக்கற்ற இத்தரணியிலே தவிப்புற்று வாடவில்லை!!!

வேண்டாம் (பக்கம் 20) என்ற கவிதை விரோதம் வளர்ப்பவர்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. உறவுகள் இன்று பேணப்படுவது அரிது. தானும் தன் குடும்பமும் என்று ஒதுங்கி வாழ்பவர்கள் சொந்த பந்தங்களை நண்பர்களை எல்லாம் மறந்து துறந்து வாழ்கின்றனர். சின்ன சின்ன மனஸ்தாபங்களுக்கு பகை பாராட்டித் திரிகின்றனர். என்றோ நடந்த தவறுகளுக்கு காலம் முழுவதும் தண்டனையை வழங்கி தானும் துயருருகின்றனர். இப்படியெல்லாம் இருந்துவிட்டு பின் ஒருவரின் மரணத்தின்போது அவரது வீட்டுக்குச் சென்று கவலைபப்படுகினறனர். இருக்கும்போது உறவில்லாமல் இருந்துவிட்டு இறந்தபின்பு உறவுகொண்டாடுவதில் எவ்விதப் பலனும் இல்லை என்பதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாக உணரலாம்.

சுமந்து செல்லக் கூடும் ஒரு நாள் என்னை ஜனாஸாவாக.. இன்று பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் வராத நீ.. அன்றும்; வேண்டாம் வர.. போலிக் கண்ணீர் சிந்த.. உறவாடல்கள் யாவும் உயிரோடும் உணர்வோடும் வாழும் உறவுகளுக்கே.. உயிர் போனால் உடல் வெறும் கூடு.. அதனோடு ஓர் உறவு எதற்கு? வேண்டாம் போலிக் கண்ணீர்.. கருணை கரையும் வார்த்தைகள்  எதுவுமே.. உயிரோடு உறவாடாத உறவுகள் எதுவும் வேண்டாம் உயிருக்கும் பின்னாலும்!!!

மனசாட்சியே விடை சொல் (பக்கம் 26) என்ற கவிதையின் வரிகள் சிந்திக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. தீமைகளின் பால் விரைந்தோடிச் செல்லும் மனித மனம், நன்மைகளை செய்வதில் பொடுபோக்காகவும் அசமந்தமாகவும் தொழிற்படுகின்றது. நன்மைகள் செய்வதற்காக ஏவும்போது அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கின்றதா என்று வாதாடுபவர்கள் தீமை செய்கையில் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா என்பதை எண்ண மறுக்கின்றார்கள். நன்மைகள் புரிவதற்கு ஓய்வுநேரம் இல்லை என்பவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்கின்றார்கள். அவர்;களுக்காக எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள் பின்வருமாறு,

தீமைகளை தடுக்கும் போதும் நன்மைகளை ஏவும் போதும் ஆதாரங்களை கேட்டு அடம்பிடிக்கின்ற மனிதனே.. தீமைகளைத் தூண்டும் போதும் பாவங்களைச் செய்யும் போதும் ஆதாரங்கள் தேட மறந்து போவதும் ஏனோ? அருள் மறையை ஓதுவதற்கும் ஹதீஸ்களை அறிவதற்கும் ஓய்வுகளில்லையெனப் புலம்புகின்ற மனிதனே.. தொல்லை தரும் தொலைக்காட்சியிலும் சீரழிக்கின்ற சினிமாவிலும் சீரியல்களிலும் சிதைந்துகொண்டிருக்கின்ற உன் சிந்தனைகள் சிதறிப் போவதும் ஏனோ? உனது மனசாட்சியிடமே தேடு ஆதாரத்தை நன்மைகளை வெறுக்கும் போதும்.. தீமைகளை நாடும் போதும்!!!

தூது செல் மேகமே (பக்கம் 39) என்ற கவிதையின் ஆரம்ப வரிகள் காதலனிடம் துது சொல்வதைப் போல இருப்பது ரசனைக்குரியதாகின்றது. எனினும் இறுதியில் இது இறைவனுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த கவிதையாக அமைந்திருக்கின்றமை கவிதையின் சிறப்பாகும்.

வான் மேகங்களே தூது செல்லுங்களேன்.. என் தலைவனிடம் சென்று சொல்லுங்களேன்.. அவனையே எண்ணி ஒரு ஜீவன் வாழுதென்று.. அல்லும் பகலும் உள்ளம் உருகுதென்று.. அவனைக் காணும் ஆவல் எல்லை மீறுதென்று.. இராப் பகல் ஏக்கம் கூடுதென்று.. உள்ளமும் உணர்வும் அவன் நிழல் தேடுதென்று.. அவனுக்காக மனம் மெழுகாய் உருகுதென்று..

மனிதம் தேடுது மனசு (பக்கம் 74) கவிஞரின் எதிர்பார்ப்புக்களை அள்ளித் தெளித்திருக்கின்றது. தூய நட்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் மருவி போலிகளே மேலோங்கியிருப்பது கண்கூடு. ஒருசிலர் நட்பை மதித்து காலங்காலமாக நட்புக்கு மதிப்பு கொடுத்தாலும் பல முகங்கள் பொய் முகங்களாகவே காணப்படுகின்றன. இதயங்கள் துருப்பிடித்து இரக்க குணத்தை இழந்து விட்டிருக்கின்றன. இவை இல்லாமலாகி இனிய நேசம், இனிய உறவுகள், துரோகம் நினைக்காத உறவுகள் வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆதங்கம் நியாயமானது.

தூய நட்பு வேண்டும் - மனம்
துறந்து பழக வேண்டும்
துன்யாவில் தேடுகிறேன்
துரோக இதயம் உண்டு
குரோத பழக்கம் உண்டு
துயரில் வாடி நின்றேன்

இனிய நேசம் வேண்டும்
இதமாய்ப் பழக வேண்டும்
இறைவனிடம் வேண்டி நின்றேன்
இனிக்க பழக்கம் கொண்டு
இடியாய் புழக்கம் கொள்ளும்
இதயமே காணுகின்றேன்..

சமூக சீர்திருத்தங்களை நோக்காகக் கொண்டே இந்த நூலாசிரியர் கவிதைகளை யாத்துள்ளார். இவர் காதல் கவிதைகளை எழுதவில்லை. காதல் தவிர்த்து இவரது கவிதைகளில் யதார்த்த விடயங்களே பரவலாகப் பேசப்பட்டுள்ளன. வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்ட கவிதைகளாக இவற்றை பார்க்க முடியாது. சமூக சீர்திருத்தத்தை விரும்பும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் - பொக்கிஷம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - பேனா வெளியீட்டகம்
விலை - 250 ரூபாய்

111. உன்னத வாழ்வு கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

உன்னத வாழ்வு கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

இலக்கிய வடிவங்களில் கவிதை அதிக கவனத்தைப் பெறுகின்றது. கவிதை மூலம் உணர்வுகள் வெளிப்படுத்தப்படும்போது வாசிப்பவர்களையும் அது சென்றடைகின்றது. தனி மனித, சமுதாய எழுச்சிகளைப் பாடி நிற்கும் கவிதைகள் காலத்தால் அழியாதவை. அந்த வகையில் ஓய்வு பெற்ற அதிபரான வெலிப்பன்னை அத்தாஸ் எழுதியுள்ள ''உன்னத வாழ்வு'' என்ற கவிதைத் தொகுதி சிறப்புக்குரியது.

இவர் இதுவரை உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், மர்ஹூம் எம்.எம்.எம். யூசுப் நினைவு மலர், சிந்தனைப் பார்வைகள், பூவும் கனியும், தியாகம் ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். ஆறாவது நூலான இத்தொகுதி 72 பக்கங்களில் மொடன் ஸ்டடி சென்றர் மூலம் வெளியீடு செய்யப்படுள்ளது.

இத்தொகுதி பற்றி கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஷகவிஞர் அத்தாஸ் அவர்கள் வாழ்வின் தரிசனங்களை உயிர்ப்போடு கவிதைகளாகப் படைத்துள்ளார். தாய், கல்வி, ஆசிரியர் என்பவற்றையும் தொட்டு கவிதைகள் ஊற்றெடுக்கின்றன. கவிதைகள் ஒரு வாசகனின் மனதில் பதிய வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு இவரது கவிதைகள் பயணிக்கின்றன|

நாம் இவ்வுலகிற்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. நமது மரணத்திற்குப் பிறகு எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நாம் பாவனை செய்யும் எல்லா பொருட்களையும் சொந்தம் கொண்டாடிக்கொள்கிறோம். ஏகபோக உரிமை கொண்டாடுகிறோம். ஏனையவர்கள் உதவி பெறுவதைத் தடுக்கின்றோம். ஆனால் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் இறைவன் மாத்திரமே. அவனது நாட்டம் இல்லாவிட்டால் நம்மிடம் எதுவுமே இல்லாமல் போகும் நிலமை உருவாகலாம். சர்வ வல்லமையும் பொருந்திய ஓரிறைவனுக்கு அனைத்தும் சொந்தம் என்பதை உரிமையாளன் இறைவன் (பக்கம் 01) கவிதை உணர்த்துகின்றது.

அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவன்
அனைத்துக்கும் உரிமையாளன் அவனே ஆவான்
ஆயினும் நம்மவர் நமதெனத் தமதெனப்
பயமுறுத்தி ஒருவரையொருவர் பேசுவோர் ஆயினர்

அல் குர்ஆன் எமது வழிகாட்டியாகும். வாழ்க்கையின் அனைத்துத் தத்துவங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் யாராலும் குர்ஆனைப் போலொரு சிறந்த அறிவுரையை யாராலும் சொல்லவும் முடியாது. சிந்திக்கவும் முடியாது. உலகத்தவர்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த அருட்கொடை. அல் குர்ஆனில் சொல்லப்பட்ட விடயங்கள் முக்காலத்துக்கும் பொருந்தும்படியாக அமைந்துள்ளமை அதன் சிறப்பம்சமாகும். அல் குர்ஆன் (பக்கம் 03) இல் அது பின்வருமாறு உறுதிப்படுத்தப்படுகின்றது.

பொய்யாம் உலகின் இயல்புதனை
வகுத்துத் தொகுத்துச் சொல்வதுடன்
பொருளும் வளமும் பெறும் வழிகள்
பண்பாய் உணர்த்திடும் அல்குர்ஆன்

நேரிய சீரிய வழிதனில்
நேராய் நடந்து வாழ்க்கை தனில்
சித்தி நமக்குக் கிடைத்திட்டால்
சுவனமே பரிசு எனும் அல்குர்ஆன்

ஆதிக்க சக்தி (பக்கம் 09) இயற்கை அனர்த்தங்களை மிகத் தெளிவாகவும், தத்ரூபமாகவும் சொல்லியிருக்கின்றது. இயற்கைக்கு நாம் மாறு செய்தால் இயற்கையே நம்மை தண்டித்துவிடும் என்பது கண்கூடு. காடழிப்பு, மணல் அகழ்வு, பாரிய வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றால் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செயற்கைத்தனம் மேலோங்கி காணப்படுகின்றது. மனிதனின் மனம் தீயவற்றின்பால் நாட்டம் கொள்கையில் இறைவன் இதுபோன்ற சோதனைகளைத் தருகின்றான் என்று கவிஞர் அத்தாஸ் கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஆதிக்க வல்லமை உள்ளான் ஏகன் கருணையாளன்
இறையோன் அழிவை எங்கும் எதிலும் திணித்திட முயலான்
மறைவழி தவிர்ந்து தீநெறி ஒழுகும் மக்களை நன்னெறியில்
மாண்புறச் செய்திட அதிர்வலையாய் அழிவைத் தந்திடுவான்

உயர்ந்த பூமி மயானம் (பக்கம் 25) என்ற கவிதை இறைவனிடம் யாவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது. உலகத்தில் வாழும்போதுதான் நல்லவன் - கெட்டவன், படித்தவன் - பாமரன், ஏழை – பணக்காரன் என்று எல்லா வகையிலும் மனிதன் பிரிவினைப்படுகின்றான். ஆனால் இறந்தபிறகு எப்படி வாழ்ந்த மனிதனாயிருந்தாலும் அவன்; சடலம் என்றே அழைக்கப்படுவான். பணக்காரனுக்கு இன்ன சுடுகாடு, படிக்காதவனுக்கு இன்ன சுடுகாடு என்று சுடுகாடுகள் வரையறுக்கப்படுவதில்லை. யாராக இருந்தாலும் ஆறடி நிலமே இறுதியில் சொந்தமாகிறது. ஆதலால் மயானம் என்பது பயங்கர இடமல்ல. அது மதிக்கத்தக்கது என கவிதையில் கூறப்படுகின்றது.

வாழ்க்கை நெறி காட்டும்
உயர்ந்த பூமி
உன்னத பூமி
அமைதி நிலவும் மயானம்

சுகபோகம் வேண்டாம் (பக்கம் 53) என்ற கவிதை ஆடம்பரமாக வாழும் மானிடர்க்கு அறிவுரை சொல்லுவதாக அமைந்திருக்கின்றது. பகட்டுக்கும் பெருமைக்கும் ஆளாகி மற்றவர்களை மதிக்காமல், இறைவனை நினைக்காமல் பல பணக்காரர்கள் வாழ்கின்றார்கள். இல்லாதவர்களை ஏளனம் செய்தும், ஏசி விரட்டியும் தம்மைத் தாமே பணக்காரர்கள் என்பதை நிரூபிக்க முயல்கின்றார்கள். அங்கவீனர்கள், நோயாளிகள், வறியவர்களுக்கு அவர்கள் தம் செல்வத்திலிருந்து கொடுத்து உதவி செய்தால் அது கொடுத்தவர்களின் மறுமை மோட்சத்துக்கு காரணமாகவும், உதவியைப் பெற்றவர்களுக்கு வாழ்வை சுபீட்சமாக்கும் வழியாகவும் இருக்கும். கீழுள்ள வரிகள் இதை நிதர்சனமாக்குகின்றன.

அங்கவீனர், உண்மை நோயாளி, வறியோர்
எங்கும் இனங்கண்டு உதவுதல் அத்தியவசியம்
பணம் உள்ளோர் சுகபோகம் விட்டொழித்து
குணம் காட்டி உதவிகளைப் புரிந்து நிற்பீரே

நேர்த்தியான வடிவமைப்பு, எழுத்துப் பிழைகள் இன்மை என்பன ஒரு நூலின் தரத்தை நிர்ணயிக்கின்றன. நூலாசிரியர் இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவரது எதிர்கால வெளியீடுகளுக்கு வலு சேர்க்கும். ஆன்மீகம், சமூகம் சார்ந்த கவிதைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கவிஞர் அத்தாஸின் இலக்கிய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூல் - உன்னத வாழ்வு
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ்
வெளியீடு - மொடர்ன் ஸ்டடி சென்றர்
விலை - 250

110. வாழ்க்கைச் சோலை நாவல் மீதான பார்வை

வாழ்க்கைச் சோலை நாவல் மீதான பார்வை

ஒரு சமூகத்தின் வரலாற்றை நாவலினூடாக வெளிக்கொணரும்போது அச்சமூகம் பற்றிய விடயங்கள் வாசகனும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். நாவலில் உலாவும் பாத்திரங்கள் மனதோடு பதிந்து நேரில் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வை மனதுக்குள் ஏற்படுத்துவது நாவலில் கட்டாயம் காணப்பட வேண்டிய விடயமாகும். சில நாவல்கள் காலத்தால் அழியாதவை. சில நாவல்கள் வாசித்ததும் மறந்துவிடக் கூடியவை. இது எழுதுகின்ற ஆற்றலிலும், மொழிப் புலமையிலும், எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமிடையில் உள்ள உள்ளுணர்வுக்கும் உட்பட்டிருக்கின்றது.

வாழ்க்கைச் சோலை என்ற நாவல் நித்தியஜோதியின் இரண்டாவது நூலாகும். இவர் ஏற்கனவே மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். பூனாகலை நித்தியஜோதி எழுதியுள்ள வாழ்க்கைச் சோலை என்ற நாவல் 88 பக்கங்களில் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால்
வெளியிடப்பட்டிருக்கின்றது.

பலரது வாழ்க்கை இன்று பாலைவனமாக மாற்றியிருக்கின்ற நிலையில்
ஏதாவதொரு வகையில் வாழ்க்கை வசந்தமாக வேண்டும் என்று ஏங்குபவர்கள் ஏராளம். வாழ்க்கைச் சோலை என்ற தலைப்பு நாவலை வாசிப்பதற்கு முன்னரேயே வாசகனை மகிழ்ச்சியிலாழ்த்தி விடுகின்றது.

இந்த நாவலானது அறிவியல் சார்ந்த விடயங்களோடு பயணிப்பதுடன் பல்லின சமூகத்தின் நிலவரங்களையும் ஆங்காங்கே படம் பிடித்துக் காட்டுகிறது. அது மாத்திரமல்லாமல் அரசியல் சார்ந்த விடயங்களும்
இந்நாவலில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாவலுக்கு சுவாரஷ்யம் சேர்க்கக் கூடியதாக ஒரு மெல்லிய காதல் கதையும் நகர்கிறது.

இலங்கையின் வரலாற்றில் என்றுமே முன்னேற்றம் காணாதவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் இனம் காணப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட சரிவர அமையாதவர்கள் வெறும் கூலிகளாக நோக்கப்பட்டு வந்தாலும் தற்போது அந்த நிலமை மிக வேகமாக மாறி வருகின்றமை கண்கூடு. கல்வியறிவிலும், தொழில்நுட்பத்திலும் அவர்களின் பங்கும் அளப்பரியதாகக் காணப்படுகின்றது. மலையகப் பிரதேசம் சார்ந்த கருத்துக்கள் மாத்திரமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கி சுமூகமான உறவுக்கு வித்திடும் வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மலையகத்தைச் சேர்ந்த பிற கவிஞர்களின் பொருத்தமான கவி வரிகள் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ளமையானது இந்நாவலின் முக்கிய சிறப்பம்சமாகக் கொள்ளக் கூடியதுடன் குறித்த மலையக கவிஞர்களின் திறமையை பறைசாற்றுவதாகவும் அவை அமைந்திருக்கின்றது.

இந்நாவலின் இரண்டாவது பாகத்தை வெளியிடவிருக்கும் நூலாசிரியர்
நாவலின் மென்மை தன்மையை தக்க வைப்பதற்கான இன்னும் புதிய பல
உத்திகளையும் கையாண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - வாழ்க்கைச் சோலை
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - பூனாகலை நித்தியஜோதி
வெளியீடு - தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்
விலை - 290 ரூபாய்

109. பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.
பூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது. 

பல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.

`நான் ஆரம்பத்துல ஒங்கள காதலிச்சேன். அன்பு வச்சேன். பாசமா இருந்தேன். எனக்காக நீங்க அனுபவிச்ச கஷ்ட நஷ்டங்களயும் கேட்டதிலிருந்து அந்தக் காதல், அன்பு, பாசம் எல்லாம் இன்னும் ஆழமா மனசுல பதிஞ்சிட்டுது. அந்தக் காதலில, அன்பில, பாசத்தில பூவிதழ் ஒண்டுல உள்ள புனிதத்த இப்ப நான் உணர்ரேன். நாங்க கலியாணம் கட்டி கணவன் மனைவியா வாழப் போனா அந்தப் பூவிதழ் உதிர்ந்து அதுட புனிதம் மாசடைந்து போகலாம்'.

அன்பளிப்பு (பக்கம் 25) என்ற சிறுகதையில் ஆலிம்ஷாவின் வாழ்க்கை பற்றியும் இன்றைய சமுதாயப் போக்கு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இன்று இறந்தவர்களின் பெயரில் கத்தம் கொடுப்பது சரியா பிழையா என்ற வாதம் நடந்துகொண்டிருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் அவ்வாறான நிகழ்வு இடம்பெற்றால் ஆலிம்ஷாவுக்கு பணம் கொடுப்பது வழமை. அவ்வாறு ஒரு மரண வீட்டிற்கு அழைக்கப்பட்டு அனைத்து பொறுப்புக்களும் ஆலிம்ஷாவுக்கு கொடுக்கப் படுகின்றது. அன்றைய வருமானத்துக்கு வழிவந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு அனைத்து வேலைகளையும் முழுமனதோடு செய்கின்றார். ஆனால் இறுதியில் யாருமே அவருக்குரிய கொடுப்பனவைக் கொடுக்கவில்லை என்பதாக கதை நிறைவடைகின்றது. இன்று பள்ளிவாசலில் பணிபுரிபவர்களின் நிலை இதுதான். இதை மாற்றியமைக்க தனவந்தர்களின் உதவி தேவை என்பதை இக்கதை உணர்த்தி நிற்கின்றது.

பெற்றது குற்றம் (பக்கம் 67) என்ற சிறுகதை தாய்ப் பாசத்தையும், பிள்ளைகளின் வேஷத்தையும் பறைசாற்றுகின்றது. உம்முனா என்ற வயோதிப மாதுவின் எண்ணங்;கள் தன் பிள்ளைகளைச் சுற்றியே வலம் வருகின்றது. ஆனால் பிள்ளைகள் மூவரும் தந்தையின் இறப்புக்குப் பின்னர் தாயிடம் பரிவு காட்டி, நடித்து அவளிடமிருந்து சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொண்டு கடைசியில் அவளை கைவிடுகின்றனர். இறுதியில் அவள் வளர்த்த பூனைக்குட்டி மாத்திரமே அவளுடன் துணைக்கு வருகின்றது. அவள் தற்போது பஸ் தரிப்பு நிலையத்தில் தனியாக இருப்பதாக சொல்லப்பட்டதிலிருந்து பிள்ளை மனம் பித்து என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சுவர்க்கமும் நரகமும் (பக்கம் 88) என்ற கதை சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கின்றது. அதை வாசித்துக்கொண்டு போகையில் எம்மையும் அறியாமல் சிரிப்பு மேலோங்குவது கதையோட்டத்தின் சிறப்பாகக் கொள்ள முடியும். ஆப்தீன் ஹாஜி என்ற பாத்திரத்தினூடாக சுவர்க்கமும் நரகமும் நகைச்சுவையாக சொல்லிக் காட்டப்படுகின்றது. அதாவது அவர் வயது போன காலத்தில் வாய் உளறிக்கொண்டு இருக்கின்றார். மரணித்துவிட்ட அவரது இனசனங்கள் தன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துப் போவதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு உட்கார இட வசதி வேண்டும் என்பதால் முன்வாசல் சுவரை இடிக்கும்படியும் உத்தரவிடுகின்றார். 

அப்போது அங்கு வந்த அவரது மனைவி சொர்க்கத்துக்கு அல்ல அங்கொடைக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுவதாக இக்கதை நகர்ந்து செல்கின்றது. அத்துடன் அவர் சம்பாதிக்கும் காலத்தில் மார்க்கத்துக்கு முரணான பல காரியங்கள் செய்ததாகவும் அதிலிருந்து வரும் பணத்தில் நன்மைகள் செய்ததாகவும் சொல்லும் ஆப்தீன் ஹாஜி இதனால் சுவர்க்கம் கிடைக்குமா? நரகம் கிடைக்குமா என்று கனவிலும் அவதிப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தீய வழிகளில் பணம் சம்பாதித்துவிட்டு அதை நன்மையான காரியங்களுக்காக செலவழிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நன்மை செய்யுமளவுக்கு தனக்கு வசதியில்லாதபோதும் தீய வழியில் பணம் சம்பாதிப்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை இக்கதை மூலம் நன்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.

இந்த நூலில் 09 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மண் வாசனையுடன் கூடிய உரையாடல்கள் மூலம் இந்தக் கதைகளை நூலாசிரியர் நகர்த்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம். சமூகத் தளத்தில் நின்று இலக்கியப் பணிபுரியும் உ. நிசார் அவர்களிடமிருந்து இன்னும் பல படைப்புக்கள் வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - பூவிதழும் புனிதமும்
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - உ. நிசார்
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 350 ரூபாய்