Thursday, August 10, 2017

118. ''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்


ஏறாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் என்பவராவார். இவர் 'அல்-கையிஸ்' என்ற புனைப் பெயரிலும் தனது படைப்புக்களை எழுதியுள்ளார்.  பயிற்றப்பட்ட கலைமானி பட்டதாரி ஆசிரியராக தனது சேவையை சிறப்பாகச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக சேவை, ஆன்மீகத் துறை போன்றவற்றிலும் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்துள்ளார்.

1990 காலப் பகுதிகளில் இவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே மீண்டும் கலை இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். சமூகத்தின் மீது அதிக அக்கரை கொண்டு தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் தனது படைப்புக்களால் ஆளுமையை வெளிப்படுத்தி வந்த இவரை இனங்கண்டு 2012 ஆம் ஆண்டு பிரதேச கலை இலக்கிய விழாவில், ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இவரது 'சுவனத்து மலர்கள்' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியிட்டுக் கொடுத்துள்ளது. யாப்பிலக்கண விதிமுறைகளுக்குட்பட்டு கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற இவரது இரண்டாவது நூல் வெளியீடே 'பெண்ணியம்' என்ற கவிதை நூல் வெளியீடாகும்.

''பெண்ணியம்'' என்ற இந்தக் கவிதை நூல் 77 பக்கங்களில் 37 கவிதைகளை உள்ளடக்கியதாக எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது. இந்நூலில் அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களது மனப்பதிவுகளையும் அழகிய கவிதைகளாக இவரால் எழுதப்பட்டுள்ளன.

இந்நூலின் சிறப்பம்சமாக இஸ்லாமியக் கவிதைகளைக் கொள்ளலாம். வரலாற்றுச் சம்பவங்களை, இஸ்லாத்தின் போதனைகளை, இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கத்தை எல்லாம் பெண்ணியம் என்ற இந்நூலிலுள்ள கவிதைகள் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை முறையை இறைத்தூதர் முஹம்மத் நபியவர்கள் வந்தே சீர்திருத்தினார்கள் என்பது நாம் அறிந்த விடயம். அக்காலத்தில் காணப்பட்ட பல வழக்கங்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் பாரியளவில் மாற்றமுறத் தொடங்கின. அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி 'மனிதம் விதைத்தவர்கள்' (பக்கம் 01) என்ற தலைப்பில் அமைந்த கவிதையின் மூலம் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பெருமைக்காக மதுவுண்டு
பெண் சிசுக்குள் புதையுண்டு
இருளாம் குப்ரும் இணையுடனும்
ஈமான் இழந்து வாழ்ந்தவர்கள்

சாதிப் பெருமை வலுவாகி
சமுதாயம் பல பிளவாகி
சாதனையாப் பழி வாங்கி
சரித்திரம் படைத்த சண்டாளர்

அக்காலத்தில் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஒழித்துக்கட்டுவதற்காக பல சதிகள் நடத்தப்பட்டன. இஸ்லாத்தை ஏற்றவர்களை வதைத்து அவர்களுக்கு காபிர்கள் கொடுமை செய்தனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் சளைத்துவிடாமல் இஸ்லாத்துக்காக உயிர் நீத்தவர்கள் பலர். பெற்ற பிள்ளையைக்கூட இஸ்லாத்துக்காக வாழ்வதற்கு பயிற்வித்ததை உணர்த்துமுகமாக 'வீரத் தாய்மார்கள்' (பக்கம் 05) என்ற கவிதை எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொள்கையிலே உறுதி பூண்ட
சுமையா அன்னை
கொடியவனாம் அபூ ஜஹ்லின்
கொடுமைகளைத் தாங்கி
அடிமனதில் தௌஹீது
நிலை கொண்டதாலே
அபத்தினிலே ஈட்டி பாய
ஆருயிரை நீத்தார்..

சமூகத்தின் வேரையே ஆட்டங் காணச் செய்யும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று சீதனம். சீதனத்தை வாங்குபவர்களை ஏளனமாகச் சொன்னபோதும் சீதனம் கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வீடு, வீட்டுப் பொருட்கள், கார், நகைகள், லட்சங்கள் என்று அவற்றின் எல்லை விரிவடைந்தவாறு செல்கின்ற அவல நிலைக்கு தற்கால சமூகம் முகங்;கொடுத்து வருகிறது. அதை கவிஞர் மிகவும் கண்டித்து 'சீதனமா? சீச்சீ...' (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு சாடுகின்றார்.

கட்டழகு மேனியும் கற்புடனே நற்குணமும்
பட்டப் படிப்பும் பதவியும் - கட்டாக
வேதனமும் மாதாந்தம் வேறாகப் பெற்றிருந்தும்
சீதமுங் கேட்கின்றான் சீச்சீ..

பேர் புகழைத் தேடுதற்காய்ப் போராடும் செல்வந்தர்
ஊர் புகழும் வீட்டுடனே ஊர்திகளும் - காரிருள் போல்
பெண்ணுக்குச் சீதனமாய்ப் பெருந்தொகையுந் தள்ளினால்
என் செய்யும் இல்லாத ஏழை?

ஒரு மெல்லிய காதல் கதையை 'ஒரு தனிப் பறவை' (பக்கம் 30) என்ற கவிதையில் காண முடிகின்றது. சிறு வயது தொடக்கம் அன்பாக இருந்துவிட்டு பல்கலைக்கழகம் சென்றதும் தன்னை மறந்துவிட்ட காதலனிடம் காதலி கேட்கும் கீழுள்ள வரிகள் மனதில் வலியை ஏற்படுத்தி நிற்கின்றன.

பட்டப் படிப்பிற்காய் - நீங்கள்
பல்கலைக்கழகஞ் சென்ற பின்னே
ஒட்டு மொத்தமாய் - நம்
உறவை மறந்தீர்களா?
நுனிக்கரும்பாய் இருந்தபோது
நேசமுடன் இருந்துவிட்டு - நான்
அடிக்கரும்பாய் ஆனபோது
அனைத்தையும் மறந்தீர்களா?

'ஆணாதிக்கம்' (பக்கம் 32) என்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களைப் பல ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் பிரச்சினையாகக் கொள்ளலாம். சிலர் இதற்கு விதிவிலக்காக இருப்பது கண்கூடு என்றாலும் பெரும்பாலானவர்களால் பெண்கள் படும் வேதனையை கவிஞர் இந்தக் கவிதையில் சிறப்புற சுட்டிக்காட்டியுள்ளார்.

எறும்பெடுத்த அளையிலே
பாம்பு குடியிருப்பது போல்
இவனிருக்கும் வீடும்
இவனுடையதல்ல
இருந்துமவன்
இறுமாப்புடுன் பேசுகிறான்
என் வீடு என் வாசலென

................
அகப்பையொரு கையிலும்
அழுங் குழந்தை
மறு கையிலுமாய் - அவள்
அவதியுறும்போது
சமைத்து முடியலையா? என்னுஞ்
சத்தம் எழுகிறது..

பெண்ணியம் என்ற இந்நூலில் சமூகக் கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. சமூகத்தின் எழுச்சிக்காக குரல் கொடுக்கும் மிக முக்கிய கவிஞர் பட்டியலில் கலாபூஷணம் அப்துல் ஹலீம் அவர்களும் இணைந்திருக்கின்றார். மென்மேலும் கவியெழுதி சமூகத்தாகம் தீர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - பெண்ணியம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர - கலாபூஷணம் அப்துல் ஹலீம்
வெளியீடு - எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகம் 
விலை - 200 ரூபாய்