Tuesday, March 27, 2018

122. கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்


இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ''கடல் முற்றம்'' கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

விடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.

அக்கறையின் வெகு தொலைவில்
சிறு புள்ளியாய் தெரிகிறது
விடியல்

பேயுலவும் கரிய இரவாய்
இருண்டு கிடக்கிறது
மா கடல்

அலைகள் விட்டுச் சென்ற
இருளின் ஈரமோ
தீய்த்தெரிக்கிறது
மிக எளிய கால்களை

ஆனாலும்
விடியலை நோக்கி
அழைத்துச் செல்லும்
பெருவிருப்போடு
பற்றச்சொல்லி
விரல் நீட்டுகிறது
நம்பிக்கை

அவன் மட்டுந்தான் பேரழகு (பக்கம் 24) என்ற கவிதை ஒரு குழந்தை பற்றி எழுதப்பட்ட கவிதையாகும். குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றாலே அதைத் தாங்க முடியாத தாயாரிடம் வைத்தியர்கள் அனுமானித்துச் சொல்கின்ற காரணங்கள் பய உணர்வை உள்ளுக்குள் விதைக்கிறது. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கும்போது மனது கனக்கிறது.

ஆனாலும் அவன்
வளர்ந்துகொண்டேயிருக்கிறான்
இயல்பேயற்ற இயல்புகளுடன்
அவன் தாயின்.. என் ஒரே தங்கையின்
கண்களினோரம்
பெருஞ் சமுத்திரமொன்றை
வளரவிட்டபடி

மேலாடை கிழிக்கப்படுகையில் (பக்கம் 26) என்ற கவிதை இன முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒற்றுமையாக இருந்து முன்னேற முயற்சிக்காத மனிதர்கள், இன்று இன, மத, பிரதேச ரீதியாக முரண்பட்டு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கிப்போடுகின்றார்கள். எல்லா இனத்திலும் காணப்படும் அப்பாவி மக்கள் இந்த நிலையை வெறுக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில கடும்போக்குடையவர்களால் தூண்டி விடப்படும் இனவாதம் என்ற தீயானது முழு நாட்டிலும் பரவி விடுவதை இக்கவிதை வரிகள் நன்கு உணர்த்தி நிற்கிறது.

நான் உங்கள் நண்பன்
நீங்கள் என்னை நம்பலாம்

அன்று வானம்வரை எகிறிக்குதித்த
திருவிழாக்கால நம்பிக்கைகள்..
தொழுகைத் தலங்கள் நொறுக்கப்படுகையில்
சில காவிகளின் கோணல் சொண்டுகளால்
என் மேலாடை கிழிக்கப்படுகையில்
தரச்சான்றிதழ் இழுபறிக்குள்
பிடிச்சோறும் தொண்டைக் குழிக்குள்
சிக்கித் திணறுகையில்

வசீகர மொழி காவி (பக்கம் 48) என்ற கவிதை அழகியல் ததும்பியதாக காணப்படுகின்றது. ரசனையைத் தூண்டிவிட்டுச் சுகமளிக்கும் அந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-

அறைந்து மோதிய சாரளத்தோரமாய்
சிலந்திகள் சித்திரம் வரையத் தொடங்கிய வேளை
வந்தமர்கிற ஹம்மிங் பறவையின்
மெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது
எந்தப் பூவின் மகரந்தமோ
கண்ணாடி மணக்கிறது

காற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற
மெல்லிய சிறகசைவினிலே
ஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை
உதிர்ந்த துகள்கள்
ஓவ்வொன்னுமேயதன்
வசீகர மொழிகாவிப் பறக்கின்றன
பரிபுரணமாய்

இயற்கை சார் அழகியலை தன் கவிதைக்குள் இருத்தி மென்னுணர்வு வெளிப்பாடுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர் கிண்ணியா எஸ். பாயிஸா அலி மென்மேலும் பல படைப்புகளைத் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கடல் முற்றம்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ். பாயிஸா அலி
ஈமெயில் - sfmali@kinniyans.net
வெளியீடு - மோக்லி வெளியீட்டகம்
விலை - 200 ரூபாய்


121. உன்னோடு வந்த மழை கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 உன்னோடு வந்த மழை கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

அடை மழை நேரத்தில் சூடாக அருந்தும் தேநீர் போன்ற இன்பத்தைத் தருவது கவிதை. கவிதை மனம் கொண்டுள்ளவர்கள் கனிவுடையவர்கள். இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையோடு உறவாடி நிலாச் சோறுண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்பவர்கள்.

''உன்னோடு வந்த மழை'' என்ற அழகிய நாமம் கொண்ட கவிதை நூலை வெளியிட்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் விஜிலி 1990 ஆம் ஆண்டு முதல் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். அநேக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் களம் கண்டுள்ளன.
ஒரு மனிதனின் குணாதிசயங்களைத் தீர்மானிப்பதில் அவன் பிறந்து வாழ்ந்த மண்ணும் தாக்கம் செலுத்துகின்றது. அத்தகைய சொந்த ஊரின் நினைவுகள் ஊரைவிட்டு வேறிடங்களில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி மரண வேதனையைத் தருவதுண்டு. ஊரோடு வாழுதல் என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பாக்கியமல்ல. எனது மண் (பக்கம் 01) என்ற கவிதையும் அத்தகைய ஒரு மன வெளிப்பாட்டுடன் எழுதப்பட்டுள்ளது. சொந்த நிலங்கள் பறிபோனதால் சோகங்களோடு வாழும் பலர் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடைசிக் காலத்தை ஊர் மண்ணோடு கழித்துவிட வேண்டும் என்ற அவா, தவிப்பு எல்லோருக்கும் இருக்கின்றது. கவிதையின் சில வரிகள் இதோ:-

வாசலில் தவழ்ந்து
புழுதி மண் விளையாடுகையில்
உம்மா கையைத் தட்டிவிட்ட
அந்த மண்
தவறிப்போய் விடுமோ என
அச்சமாயுள்ளது..

முன்னரான பொழுதொன்றில்
மண்ணோடு பேசினோம்
இப்போது நம்மோடு பேசுகின்றது மண்

''பேய்கள் ஆடிய நடனம்'' (பக்கம் 7) என்ற கவிதை மனிதர்களை பேய்களோடு உவமித்து எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றியது. இன்று நம் மத்தியில் வாழ்பவர்களில் சிலர்  பேய்களை விடவும் பயங்கரமானவர்கள். இவர்கள் முகமூடிகளோடு வாழ்ந்து முதுகில் குத்துபவர்கள். அத்தகையவர்களை பேய்களாக சித்திரித்து எழுதப்படுள்ள இக்கவிதை சிறப்புக்குரியது.

எங்கும் பேய்கள்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன
...............
தேவதைப் பேய்கள்
அற்புதப் பேய்கள்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
அவலட்சணமான பேய்கள்

அழகான பேய்களும்
அரங்கை அலங்கரித்தன
பொய்களைத் தலையில் வைத்து
ஆடின சில பேய்கள்

உலகிலுள்ள பெரிய இன்பம் காதலிக்கப்படுவது என்று சொல்வார்கள். அத்தகைய காதல் வந்தால் ஒரு மனிதனின் வாழ்க்கையே திசை மாறும். சிலருக்கு சுகந்தமாகவும், சிலருக்கு சுடுவதாகவும் தோன்றும். ''உன்னோடு வந்த மழை'' (பக்கம் 11) என்ற கவிதை சுகந்தமான காதலொன்றை எம் கண்முன்னே தோற்றுவிக்கின்றது.

குடை விரிக்கும் மெல்லிய சத்தமாய்
அடித்துக் கொண்டது
எனக்குள் இதயம்
செவ்வானத்தையும் கடந்து
பஞ்சுப் பொதிகளாய் கறுத்து
ஊடறுத்து டிசன்றது மேகம்
உன் முகத்துள் புதையும்
கோபத்தைப் போல

உடல் மேனி தொட்டுச் செல்லும்
ஈரக்காற்றின் சுகந்தம்
என்னை ஸ்பரிசம் கொள்ள
நான் நினைத்துக் கொண்டேன்
நீதான் என்னை
கடந்து செல்கிறாய் என்று

ஜன்னலோரப் பேரூந்துப் பயணங்கள் இனிமையானவை. நமக்கான நதிகளை நாமே உருவாக்கி அதில் நீந்திச் செல்லக்கூடிய சுகானுபவத்தைத் தருபவவை. ஆனால் நெரிசல் மிகுந்த பயணங்கள் வாழ்க்கையை வெறுத்துவிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்குபவை. பஸ்களில் நெரிசல் மிகுதியினால் ஆண்கள் தொங்கிக் கொண்டு செல்கின்ற விதம் ஆச்சரியத்தையும் அலுப்பையும் ஏற்படுத்த வல்லவை. அத்தகைய துயர் அனுபவத்தை ''நேற்றைய என் பேரூந்துப் பயணம்'' (பக்கம் 17) என்ற கவிதையினூடாக பகிர்ந்துகொள்கின்றார் கவிஞர் விஜிலி.

நேற்று நான் தொற்றிக் கொண்ட
பேரூந்து
போதை ஏற்றியிருந்ததா?
அவ்வளவு ஆட்டமும் தள்ளாட்டமுமாய்

வியர்வைப் புழுக்கத்தினுள்
வீதியை அரைத்து
ஊர்ந்து கடகடத்தது வண்டி

சிறுசுகள் ஈனக் குரல் எழுப்ப
எறும்புக் கூட்டமாய்த் தொங்கின
மனிதத் தலைகள்

மூட நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப் போட்டதொரு காலமிருந்தது. இன்று அவை பாரியளவில் மாற்றம் கண்டு மனிதன் முன்னேற்றத்தின் திசையில் பயணிக்கின்றான். காகம் கத்தினால் கடிதம் வரும், பூனை குறுக்கே வந்தால் போகும் காரியம் பிழைக்கும் போன்ற நம்பிக்கைகள் இன்றும்கூட நம்பப்பட்டு வருகின்றன. ஆறறிவுள்ள மனிதன் ஐயறிவு ஜீவன்களுக்குள் அடங்கியிருக்கின்றான் என்பதாக எழுதப்பட்டிருக்கின்றது ''வெட்கமில்லாத மனிதன்'' (பக்கம் 29) என்ற கவிதை.

ஆக்காட்டிப் பறவை
ஆகாயத்தில் வட்டமிட்டு
குரல் எழுப்புகையில்
மழையை அது அள்ளி வருவதாய்
பூரிப்படைகிறான்

சொறி நாய் ஒன்று
வால் குழைந்து இவன் பாதங்களை
நாக்கால் நக்குகையில்
நன்றியுணர்வு என்றும்
வாய் பிளக்கின்றான்

இச்சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளத்தில் நான் வாசித்த ஒரு வாசகம் ஞாபகத்துக்கு வருகின்றது ஷநாம்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் மற்ற உயிரினங்களுக்கு ஐந்தறிவு என்று.. மனிதனுக்கே அறிவே இல்லை என்று அவை நினைத்துக் கொண்டிருக்கலாம்|

மனப் புழுக்கத்தால் வாடுபவர்களுக்கு, கவிதைப் பூக்களால் சாமரம் வீசிக்கொண்டிருக்கும் கவிஞர் விஜிலி இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கிய உலகில் பிரகாசிக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - உன்னோடு வந்த மழை
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதமுனை விஜிலி
தொலைபேசி - 0779797210
வெளியீடு - அலிஸ் ஊடக கலை இலக்கிய சமூக சேவை வலையமைப்பு
விலை - 400 ரூபாய்



120. ''நான் மூச்சயர்ந்த போது'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''நான் மூச்சயர்ந்த போது'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''நான் மூச்சயர்ந்த போது'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.யூ. கமர்ஜான் பீபீ அவர்களாவார். வத்தளை ஹுனுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் நாடறிந்த பன்னூல் ஆசிரியர் நூறுல் ஹக் அவர்களின் துணைவியாவார். அத்துடன் பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசியராக ஹுனுப்பிட்டி ஸாஹிரா வித்தியாலயத்தில் கடமையாற்றுகிறார். 
1980 காலப் பகுதிகளில் தனது எழுத்துப் பயணத்தைத் துவங்கிய இவர் 'ஹுனுப்பிட்டி செல்வி' என்ற புனைப் பெயரிலும் தனது கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார். தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி வார வெளியீடு, நவமணி, இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, அல் - ஹிலால், அல் - ஹுதா, சோலை, மருதம், தூது, சப்தம், பார்வை, ஹிக்மா, அல் - ஜெஸீறா, மிம்ரஹா, சிந்தனை,  புயல், நங்கூரம், கவிமலர், பவளம், பாசம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஆகியவற்றில் எழுதிவந்த கமர்ஜான் பீபீ அவர்களின் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வெளியிடும் கன்னி நூல் வெளியீடே இந்தக் கவிதை நூலாகும். 

'என்னுடைய கல்வித்துறை வாழ்வில் மறக்க முடியாத மனிதநேயம் மிகுந்த ஒரு மாணவி' என்ற தலைப்பில் நூலாசிரியர் கற்பிக்கும் பாடசாலையின் அதிபராக இருந்த அல்ஹாஜ் என்.எம்.எம். றெஸீன் அவர்கள் நூலாசிரியர் கமர்ஜான் பீபீ பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''ஹுனுப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தில் என்னிடம் கல்வி கற்ற மாணவ மாணவிகளில் எனது மனதில் இன்றும் இடம் பெற்றுள்ள மாணவி கமர்ஜான் பீபீ என்பவராவார். ஆரம்ப காலத்திலிருந்து க.பொ.த. சாதாரண தரம் வரைக்கும் என்னிடம் கல்வி கற்றார். தமிழ் மொழியில் மிகவும் பற்றுக் கொண்ட கமர்ஜான் பீபீ படிக்கும் காலங்களிலேயே எழுத்துத் துறையில் ஆக்கங்கள் செய்வார். பத்திரிகைகளில் சிறுவர் மலர் பகுதிகளில் அக்காலத்தில் அவரது ஆக்கங்கள் வெளிவரும். வானொலி மாணவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதோடு, ஹுனுப்பிட்டி பகுதி வாழ் மாணவ மாணவியரை சிறுவர் நிகழ்ச்சிகளில் பயிற்சி அளித்து பங்கேற்கச் செய்வார்'' என்று கமர்ஜான் பீபீயின் இலக்கிய ஆர்வம், பங்களிப்புக்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.

76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சுமார் 52 கவிதைகளே உள்ளடங்கியுள்ளன. ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ள இந்தக் கவிதாயினி கல்பில் நிறைந்த காத்தமுன் நபியே, றஸுல் எங்கள் நாயகமே, ஹாஜிகளே வருக, முஹர்ரமே வருக, நோன்பினை நோற்று மாண்பினை அடைவோம், மறையின் மகிமை ஆகிய ஆன்மீகக் கவிதைகளையும் நூலாசிரியர் எழுதியுள்ளார். இதுதவிர சமுக அவலம், அரசியல், வறுமைப் புயல், இயற்கையின் சீற்றம், தாய்ப் பாசம், குழந்தைப் பாசம், வாழ்த்து போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களில் பல்வேறு கவிதைகளையும் யாத்துள்ளார்.

கவிஞராகவும் கணக்காளராகவும் அடையாளம் பெற்ற நூலாசிரியரின் மகனுக்காக ஷஎன் மகனே நீ வாழ்க| (பக்கம் 13) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். தான் பெற்ற பிள்ளைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழும்போது அது பெற்றோருக்கு எந்தளவு மகிழ்ச்சியையும் தைரியத்தையும் வழங்குகின்றது என்பதற்கு இக்கவிதை உதாரணமாகத் திகழ்கின்றது. பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் மகன் அல்லது மகளைப் பெற்றெடுத்த பெற்றோரின் பிரார்த்தனைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அத்தகைய ஒரு தாயாக அவர் தன் மகனுக்காக எழுதிய கவிதையின் சிலவரிகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

பத்து மாதம் கருவிலே சுமந்துன்னை
பவுத்திரமாய் பெற்றெடுத்தேன் செல்ல மகனே
இரத்தத்தைப் பாலாக்கி மூன்று வருடமுனக்கு
இரணமாய் ஊட்டினேன் நீ வளர

கருவிலே உன்னை வைத்திருந்த போதினிலே
கவனமாகப் பாதுகாத்தார் உன் தந்தை
என் மகன் எப்போது வெளிவருவான் என்று
ஏக்கத்துடன் தவிர்த்து நின்றார்
உன் வரவைஎ ண்ணி

பாலகர்களே (பக்கம் 18) என்ற கவிதை மூலம் கல்வியின் பெருமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார். அத்துடன் நேரம் பொன்னானது. ஒருநிமிடம் கூட மகிவும் பெறுமதி வாய்ந்தது. அந்த நேரத்தைப் பயனுள்ளாதக் கழிக்க வேண்டும் என்று ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் என்றும் நல்ல சிந்தனைகளை பிள்ளைகள் மனதில் தூவும் விதமாக அவர் எழுதியிருக்கும் பாங்கு நோக்கத்தக்கதாகும்.

பாலகர்களே பாலகர்களே
பள்ளி செல்ல எழுந்திடுங்கள்
கண்ணயர்ந்து தூங்கிவிட்டால் 
கணப் பொழுதில் ஓடிவிடும் நேரம்

காலையில் எழுந்து நீங்கள்
காலைக் கடமையினை முடித்திடுங்கள்
கல்விதனை கற்றிடவே
கல்வி கூடம் சென்றிடுங்கள்

அறிவுதனை பெற்றிடவே
ஆசான் சொல்லை மதித்திடுங்கள்
கரை காணாத கல்விதனை
கவனமாய் கற்றிடுங்கள்

உம்மாவுக்காக.. (பக்கம் 28) என்ற கவிதை தாயன்பை சித்தரித்திருக்கின்றது. தியாகத்தின் மறு வடிவமாகத் திகழும் ஒருதாய், தன் பிள்ளைகளை நல்ல நிலைமையில் பார்ப்பதற்காக பாடுபட்டு பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றார். அந்தத் தாயின் கனவு நிறைவேறும் தருணத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தை கொண்டு அளவிட முடியாது. அதேபோல தாயின் அன்பையும் எந்தக் கருவியினாலும் அளந்திட இயலாது. தாய்க்கு நிகர் யாருமில்லை. கீழுள்ள கவி வரிகள் மூலம் நூலாசிரியர் தன் தாயாரின் தியாகங்களைப் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்.

என் தாயே
ஜெய்னம்பு உம்மா ஈன்ற
செல்வம் நீங்கள்
வல்ல நாயன்
எமக்களித்த பொக்கிஷம்
தாயென்று முத்தாக
முகம் மகிழ்ந்தீர்கள்

எங்கள் இதயமே
நீங்கள் மெழுகுவர்த்தியாக
உருகிப் போனீர்கள்
பிறருக்கு செய்த
சேவையின் நிமித்தம்
அன்பு காட்டினீர்கள்

வீட்டுக்கு மாத்திரமல்ல
எல்லோருக்கும்
ஒளி விளக்காக பிரகாசித்தீர்கள்
பொறுமைக்கு நிகர்
நீங்களாக இருந்தீர்கள்

நிம்மதிக்காக (பக்கம் 32) என்ற கவிதை கடந்து போன யுத்த காலத்தைப் பற்றி பேசியிருக்கிறது. துணிவிருக்கிறது என்பதற்காக எல்லாக் காரியங்களையும் துணிச்சலாக செய்துவிடக் கூடாது. அந்தத் துணிவை தூரமாக்கிவிட்டு அன்பெனும் கூட்டுக்குள் பிரியமாக வாழ்வதற்கு ஆசை கொள்ள வேண்டும். அகிம்சை மூலம் உலகத்தை வெல்ல வேண்டும். துப்பாக்கிச் சப்தங்களுக்கு பதிலாக பறவைகள் கீச்சிடும் சத்தம் கேட்டு நாட்கள் புலர வேண்டும். துன்பங்களைத் துரத்திவிட்டு இன்பத்தின் கைகளுக்குள் தஞ்சமடைய வேண்டும்.. நாளைய உலகம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற தன் மன ஆதங்கத்தை நூலாசிரியர் கீழுள்ளவரிகள் மூலம் தௌ;ளத் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

துணிவுக்கு
துறவறமிட்டு
துப்பாக்கிகளை
கீழே இறக்கட்டும்

நாளைய சந்ததிக்காக
அமைதியினை நிலைநாட்டி
சமாதானப் பூ
பாரெங்கும் 
பூத்துக் குழுங்கட்டும்

கடந்து போன
அந்தக் கொடூ ரநாட்கள்
தொலைந்தே போகட்டும் 

இறுதியில் நூலாசிரியரின் மகளுக்காக 'திருமண வாழ்த்து' (பக்கம் 74) என்ற தலைப்பில் ஒரு கவிதையாத்துள்ளார். மனதாலும் கவிதையாலும் தன் மகழுக்கு வாழ்த்திசைத்துள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

வல்லல்லிறை வகுத்திட்ட
வாழ்க்கை துணை நித்தம்
பண்புடனே அமைந்திடவே
பாவையே உறுதி பூண்டிடுவாய்

தாயான நான் இவள்
தரணியிலே உன்னை ஈன்றெடுத்தேன்
தரமான பிள்ளை என்றதனால்
பரவசம் கொள்கின்றேன் நித்தம்

பொன்னான உன் வாழ்வு
பொங்கிடவே இம்மணநாள் தன்னில்
மனப் பூரிப்புடனே வாழ்த்துகின்றேன்
என்னுயிர் செல்ல மகளே


ஆன்மீகக் கவிதைகள், சிறுவர்களுக்கான நற்சிந்தனைகள், சமூகத்தில் காணப்படும் அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள், குடும்பத்தாருக்கான கவிதைகள் என்று பலதரப்பட்ட தலைப்புக்கள் இந்நூலில் பரந்து கிடக்கின்றன. நூலாசிரியர் தன் வாசிப்புத் தேடலை இன்னும் விரிவுபடுத்தி, எதிர்காலத்தில் இன்னமும் படைப்புக்களை வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - நான் மூச்சயர்ந்தபோது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்.யூ. கமர்ஜான் பீபீ
வெளியீடு - மருதம் கலை இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்