தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதி பற்றிய பார்வை
நிகழ்காலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை ஒரு படைப்பாக வெளிக்கொணரும் போது அது மனதுக்கு ஓரளவு திருப்தியையும், மனிதர்களிடத்தில் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகின்றது. இப்படைப்புக்களை காலம் கடந்து வாசிக்கின்றபோது கடந்துபோன சமுதாயத்தின் அல்லது காணாமல் போன வரலாற்றின் எச்சங்களை நிரூபிக்கின்றது. காலத்தின் கண்ணாடியாக இலக்கியம் கொள்ளப்படுவது இதனாலேயாகும். குறிப்பிட்ட காலத்தில் வாழும் கவிஞர்கள் அந்தந்த காலத்தில் நிகழ்ந்தவை பற்றி படைப்பு இலக்கியங்களினூடாக பதிவு செய்திருப்பதால் அந்தந்த காலத்து மக்களின் மனநிலைகள், வாழ்க்கைப் போக்குகள், எண்ணப்பாடுகள், கொள்கைகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியும். பிரகாசக்கவி எம்.பீ அன்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் தடம் தொலைத்த தடயங்கள் என்ற இந்தத் தொகுதி இலங்கையில் நடந்த யுத்த சூழலையும், அது தந்த வடுக்களையும், அரசியல் கள நிலவரங்களையும் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் எழுச்சிக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றது.
ஓவியா பதிப்பகத்தின் மூலம் 112 பக்கங்களை உள்ளடக்கியதாக பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் தடம் தொலைத்த தடயங்கள் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அட்டைப்படம் மிகவும் அழகான முறையில் அமைந்து வாசகர்களை வசீகரித்துக்கொள்கிறது.
இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சென்னை, அண்ணாநகர் கிழக்கு, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் ப. பானுமதி (ஆதிரா முல்லை) அவர்கள், சரித்திரம் படைக்கும் சமுதாயக் கவிஞர் என்ற தலைப்பிட்டு தனது கருத்துக்களை வழங்கியுள்ளார். அதில் ஷஷகவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின் பெருமை பேசுவதோ அல்லது சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த விவேகம் நிறைந்த, எழுச்சிமிகுந்த கருத்தால் சிறுமையை களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக்கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்|| என்று குறிப்பிடுகின்றார்.
வாழ்த்துரை வழங்கியுள்ள கவிஞர் றியாஸ் குரானா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஷஷமிகவும் எளிமையான கவிதை அமைப்பு. வாழைப் பழத்தை உரித்து ஊட்டிவிடுவதைப் போன்ற கவிதை சொல்லல், மரபின் இசைத் தன்மை கூடிவருகிற வசனங்கள். வாசிக்கவும், நினைவில் பதிந்துவிடவுமான ஒருவகை கவிதை சொல்லல். நமது மூதாதையரின் கவிதை மனமும், கவிதைக்கான சொல்லுதலும் இந்த இசைத் தன்மையும், எளிமையும் நிறைந்தவைதான். அதைத்தான் நாம் நாட்டார் பாடல் என இன்று அழைக்கிறோம். அதன் தொடர்ச்சியை இன்று நிகழ்த்திக் காட்டினால், அநேகமாக இவருடைய கவிதை செயல் போலவே அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. நமது பாரம்பரிய அல்லது சாதாரண மக்களின் கலைப் பங்களிப்பு, கலை ஈடுபாடு இந்த நாட்டார் தன்மையையே அதிகம் அக்கறை கொண்டிருப்பதாகும். அவர்கள் தங்களின் பாட்டையும் பதையத்துக்களையும் எளிமையாகவும் கிண்டலாகவும், சிறு கோபங்களாகவும் வெளிப்படுத்தினார்கள். அதைத் தொடர்வதாகவே இவருடைய கவிதைச் செயல் அமைந்திருக்கிறது||.
பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் தனதுரையில் ஷஷசமூகத்தில் புரையோடிப் போயுள்ள மடமைகளை, அடிமைத் தனங்களை, பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை, எமது இலங்கைத் திருநாட்டில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பீடித்திருந்த கொடிய யுத்தம் ஏற்படுத்திய யுத்த வடுக்களை எளியோரை எள்ளி நகையோடும் வலியோரின் ஈனச் செயல்கள் மீதான என் அதிருப்திகளை, இந்த உலக வாழ்வின் மீதான நிலையாமையினை, சாக்கடை அரசியலை, யுத்தத்துக்கு பின்னரான இலங்கைத் தீவில் சிறுபான்மை சமூகங்களுக்கு (முஸ்லீம்களுக்கு) எதிரான இனவாத, மதவாத அடக்குமுறைகளை கண்டு சாந்தி, சமாதானம், இன ஒற்றுமை, சகவாழ்வு என்பவற்றை விரும்பும் ஒரு சராசரி மனிதனாய் என் மனம் கொண்ட ஆற்றாமையினை, சீற்றத்தினை அவற்றின் ரணங்களை இந்த தடம் தொலைத்த தடயங்கள் என்னும் கவிதை தொகுப்பின் பிம்பமாய் செதுக்க முயற்சித்துள்ளேன்||
இனி இந்தத் தொகுதியிலுள்ள 53 கவிதைகளில் ஒரு சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.
வாழ்க்கையின் யதார்த்த நிலையில் மிக அழகாக சுட்டிக்காட்டும் கவிதையாக நீயும் மனிதன் (பக்கம் 20) என்ற கவிதையைக் கொள்ளலாம். நிச்சயமற்ற வாழ்க்கையின் மீது மனிதன் கொண்டுள்ள ஆசையானது வெறும் கற்பனையே தவிர வேறில்லை. மரணம் வந்து இதையெல்லாம் மறக்கடித்துவிட்டால் போலியாக வாழ்ந்த வாழ்க்கை மாத்திரம்தான் மிச்சமாகும். இறந்த பின் எம்மைச் சுற்றியிருந்த உறவுகள் எல்லாம் விலகிவிட, நாமும் எமது செயல்களும்தான் எம்முடன் வரும். ஒரு கறுத்த போர்வையால் மூடப்பட்டிருக்கும் உலக இன்பம் என்ற ஆசையை ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மைக்காக உண்மையாக வாழ வேண்டும் என்கிறார் கவிஞர்.
நிலையில்லா - உன் வாழ்க்கையெனும் பயணத்தின் வசந்த காலத்தரிப்பிடம் இந்த உலகம்.. அதில் கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீடு மனிதா நீ..! இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! அலை வந்து உடைத்துச் செல்லும் மணல் வீடாய் உன் மரணம்.. அதில் அழுகிப் போகும் மாம்பழம் உன் உடல் இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! தேநீரில் சேர்க்கும் சர்க்கரையாய் கரைந்து போவது உன் சொத்துக்கள்.. அதில் தேன் குடித்ததும் பறந்து செல்லும் தேனீக்களாய் உன் உறவுகள் இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! இத்தனையும் புரியாத கிணற்றுத் தவளையாய் இன்பங் காணும் மானுடனே.. இத்தனைக்கும் இன்பத்தின் போர்வைகள் என்பதனை நீயும் உணர்ந்திட்டால் நீதான் என்றும் மனிதனடா..!!
தூரத்துப் பயணம் (பக்கம் 22) என்ற கவிதை தூரதேசம் சென்று தொழில் செய்பவர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது. வருடங்கள் பல கடந்தாலும் வாழ்க்கையில்; முன்னேற்றங்கள் இல்லை என்ற காரணத்தா வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கின்றார்கள் பலர். பணம் சம்பாதிப்பதற்காக வேண்டி தாய் தந்தையை மனைவி பிள்ளைகளை உற்றார் உறவினர்களை எல்லாம் விட்டுவிட்டு கனவுகளையும், ஏக்கங்களையும் மாத்திரம் சுமந்துகொண்டு கடல்தாண்டி வேறு தேசம் செல்கின்ற அத்தகையவர்களின் வேதனைக் குரலை காதுகளில் ஒலிக்கச் செய்கின்றது இக்கவிதை.
இலட்சியங்களின் முதுகிலேறி ஒட்டக தேசத்துக்கான பயணமிது! அம்மாவும் அப்பாவும் அழுது ஆசிகள் பல கூற.. அண்ணனும் தங்கையும் முத்தங்கள் பரிமாற.. ஏக்கத்தோடு மனைவியும் பாசத்தோடு பிள்ளைகளும் பாவமாய் பார்த்திருக்க.. விரும்பியும் விரும்பாமலும் விரைந்து செல்லும் பயணமிது.. ஓராயிரம் இலட்சியங்கள் முதுகில்.. ஒற்றை வீரனாய் பணமெனும் பள்ளத்தாக்குகளைத் தேடிய பயணமிது! ஒருவேளை அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிருக்கலாம்..! மனைவி பிள்ளைகள் நோயினால் நொந்து போயிருக்கலாம்..! ஏன் எனக்குக் கூட வழுக்கை விழுந்துவிடலாம்..! ஆனால் நானும் என் கனவுகளும் முடிவிலியாய்.. பணமெனும் பள்ளத்தாக்குகளை நோக்கி..!!
தேர்தல் காலம் (பக்கம் 26) என்ற கவிதை சம காலத்துடன் பொருந்தி நிற்கும் ஒரு கவிதையாகும். மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசும் கயவர்கள் உருவாகியிருக்கும் காலம் இது. வீடு தேடி வந்து மிகவும் பணிந்து தனது கைகளினால் வெற்றிலை தந்து கும்பிட்டவர்களே பிறகு அநியாயங்களை மேற்கொள்கின்றார்கள். பொருட்களுக்கெல்லாம் முடிந்தவரையில் விலைகளை அதிகரித்துவிட்டு தேர்தல் நெருங்கும்போது வெறும் கண் துடைப்புக்காக விலைகளில் வீழ்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள். இவர்களின் வார்த்தைகளுக்குள் சிக்கிவிடாமல் இருப்பதற்கான கவிதை இது.
மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடும் மூடர்களும், ஓடுகின்ற மாட்டில் இறைச்சி உண்ணும் ஓநாய்களும், ஓசியில் வயிறு வளர்த்து ஏவுரை விடும் காக்காய்களும், வீர வசனம் பேசும் தேங்காய்ப்பூ சண்டியர்களும், உங்கள் வீடு தேடிவரும் காலம் இது.. என் சமூகமே தூங்கியது போதும் விழித்தெழு.. பசுத்தோல் போர்த்திய புலிகளின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விட்டால் அரசியலில் அபிலாசைகளை மட்டுமல்ல அப்பத் துண்டுகளைக்கூட பெற முடியாது நம்மால்..!!
இன்றைய காலத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் அது அத்தியாவசியச் செலவுகளுக்குப் போதாமலேயே இருக்கின்றது. அதிகரித்துவிட்ட விலையேற்றங்களும் அத்தியவசியமாகிப்போன ஆடம்பரப் பொருட்களும் இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம். அத்துடன் புதிது புதிதாக பாவனைக்கு வருகின்ற தொழில்நுட்பக் கருவிகளும், விளம்பரங்களும் கூட உழைக்கும் பணத்தை ஏப்பம்விடும் முதலைகளாக ஆகிவிடுகின்றன. யானைப் பசியும் சோளப் பொறியும் (பக்கம் 68) என்ற கவிதை அத்தகையதொரு மனக் குழப்பத்தை எடுத்துக்காட்டும் கவிதையாகும்.
தொலைபேசி தொல்லை தரும்.. தெரு வாயில் தீ மிதிக்கும்.. மாத பட்ஜெட் மனைவி கையில் மல்லுக்கட்டும்.. மகனுக்கும் மகளுக்கும் மனசெல்லாம் மத்தாப்பூ வெடி வெடிக்கும்.. ஓடி ஆடி உடலைப் பிழிந்து உறக்கம் தொலைத்தாலும் ஊனப்பட்டுத்தான் போகிறது.. ஹிரோஷிமா ஈன்றெடுக்கும் இதயங்கள் போல.. என் முயற்சியெனும் முடிவிலிகள்.. ஓடுவது நான் ஆயினும் துரத்துவது கடன் ஆயிற்றே??
இரவு (பக்கம் 112) என்ற கவிதை உழைத்துக் களைத்த ஒருவனின் கீதமாக இருக்கின்றது. பகலில் எல்லாம் இரைச்சலில்; இருந்த செவிகளை இரவில் நிம்மதியாக வைத்திருப்பது பற்றியும், சத்தம் சந்தடிகளற்ற ஒரு நெடிய பயணத்தில் திளைத்திருக்கவும் நாடும் மனசை கவிஞர் இக்கவிதையினூடாக அழகாக கூறியிருக்கின்றார்.
இரைச்சல்களின் சாலைகளில் தினம் நடந்து இரத்தம் சொட்டிய காதுகளை ஓர் ஆமைக்குஞ்சு போல் போர்வைக்குள்ளிழுத்து ஒட்டகங்களைப் போல் ஓய்வின்றி நீண்ட நிசப்தங்களின் மேல் பயணிக்க ஒத்திகை பார்க்கிறது ஊமை மனசு.. உருளுதல் உலாத்துதல் என்று சில சரசரப்புகளினூடே விழிகள் கதவடைக்க பற்றிக்கொள்கிறது பயணம் ஏகாந்தத்தின் ஸ்பரிசங்களில்.. அமைதிக் கிண்ணங்களில் மெய் கரைந்துருக இதயம் வெடித்த இலவம் பஞ்சு போல காற்றோடு கைகோர்க்கிறது கனவு.. மற்றுமொரு பொழுதின் பிரசவம் ஒன்றிற்காய்..!!
வாழ்வியல் பற்றிய நிஜங்களோடு கைகோர்த்த சமுதாயம் குறித்த தன் ஆழமான அக்கறையை வெளிக்காட்டியிருக்கின்றார் கவிஞர் எம்.பீ. அன்வர். இந்தத் தொகுதியில் காணப்படும் அநேக கவிதைகள் வெளிநாட்டில் வசிப்பவர்களின் இதய ஏக்கங்களை புடம்போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. தடம் தொலைத்த தடயங்கள் என்ற இந்தத் தொகுதியை வெளியிட்டிருக்கும் எம்.பீ. அன்வர் அவர்களுக்கு மனமார்;ந்த வாழ்த்துக்கள்!!!
நூல் - தடம் தொலைத்த தடயங்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பிரகாசக்கவி எம்.பீ. அன்வர்
வெளியீடு - ஓவியா பதிப்பகம்
விலை - இந்திய விலை 120 ரூபாய்