Sunday, July 12, 2026

162. 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை

 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஈழத்தின் வட பகுதியிலுள்ள மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி கமலினி கதிர் அவர்கள். 2002 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றதிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஆக்க இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு, பல படைப்புகளை வெளியீடு செய்து இலக்கிய உலகின் அவதானத்தைப் பெற்றுள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள இவர், அண்மையில் 'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையையும் நூலின் பின்னட்டைக்கான குறிப்பையும் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் எழுத்தாளருமான திருமதி பவானி சிவகுமாரன் எழுதியுள்ளார். அவரது உரையில், 'சமூகத்தின் மீது கரிசனையும் பற்றும் நூலாசிரியர் கமலினி கதிரின் கதைகளில் பிரதிபலிக்கின்றன என்பது மட்டுமல்லாமல் வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில் தனிநபராக இவர் செய்கின்ற சமூகப் பணிகள் பல. அவற்றுள் ஏழை மாணவரின் கல்வி, குழாய்க் கிணறு அமைத்தல், மருத்துவ உதவி, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவி என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. இப்படி சமூகத்தை நேசிக்கும் ஒருவரால்தான் நல்ல படைப்புகளையும் சமூகத்திற்குத் தர முடியும் என்று செயலில் காட்டுபவர் இவர். இனிவரும் காலங்களிலும் இவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை ஈழத்து இலக்கியம் எதிர்பார்க்கலாம்' என்று கமலினி கதிர் அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி, இலக்கியப் படைப்புகளை வரவேற்கின்றார்.

நூலாசிரியர் கமலினி கதிர் தனதுரையில் 'புத்தக வாசிப்பு என்ற அற்புதம் உலகை தெரிய வைத்து அடுத்தடுத்த இடம் நோக்கி நகரத் தூண்டும். புத்தக வாசிப்பின் மூலந்தான் காட்சிப்படுத்தல் என்ற அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். பறவைகளோடு எத்தனை வருடம் வாழ்ந்தாலும் பறவையாகிவிட முடியாது. ஆனால் பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள், பதினோராவது புத்தகமாக மாறிவிடுவீர்கள் என்று யாரோ கூறியதாக வாசித்தது ஞாபகத்துக்கு வருகிறது. எழுத்துகள் வலிமையானவை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். எழுத்து ஒருவரை அழ வைக்கவோ, கோபப்பட வைக்கவோ, சிரிக்க வைக்கவோ வேண்டும். அப்போதுதான் எழுத்தாளன் அங்கே வெற்றி பெறுகின்றான். ஆனால் தற்போது வாசிப்பு நலிந்து கொண்டு வருவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இளையவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசிப்பு பழக்கத்தினின்றும் விலகி சமூக ஊடகங்கள் வசம் தம்மை ஒப்படைத்து விடுகின்றார்கள்' என்று வாசிப்பின் அருமை பற்றிக் கூறி, இன்றைய உலகில் பலரும் சமூக ஊடகங்களில் மூழ்கி விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமையைக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலின் தலைப்பே வாசகர்களின் மனதில் ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த சிறுகதை நூல் 'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள், ஓடும் வெண்முகிலாய், கரை தொடா அலைகள், இதுவும் கடந்து போகும், இழந்த காலங்கள், பூங்காற்று திரும்புமா?, அன்பு மகளுக்கு அம்மா எழுதும் மடல், கலைந்து போகும் கோலங்கள், நினைவிலிருந்து வழியும் விழிநீர்த் துளிகள், என் சுவாசக் காற்றே மன்னிப்பாயா?, அனாதையாக்கப்படும் அன்பு, மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள், எந்த நதியில் கரைப்பேன்?, அந்திமாலை, பொன்னாடை, தூறல் நிற்கட்டும்' ஆகிய 16 கதைகளை உள்ளடக்கி, 172 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  இந்த 16 சிறுகதைகளில்  எட்டுக் கதைகள்  புலம் பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டுள்ளன. அத்துடன் ஈழத்தில் இடம்பெற்ற போர்க்கால நினைவுகளின் பாதிப்புகள் மற்றும் தாயகத்தைப் பிரிந்து வாழும் நினைவுகளின் வலிகள், ஏக்கம், தவிப்பு போன்றவற்றை பிரதிபலிப்பதாகவும் சில கதைகள் எழுதப்பட்டுள்ளன.

இனி இந்த நூலில் இடம்பிடித்துள்ள கதைகளில் ஒரு சில கதைகளை வாசகர்களின் இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள்' (பக்கம் 09) என்ற கதை, சுவிஸ் நாட்டின் குளிர்ச்சியான இலையுதிர் காலப் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற துவாரகா என்ற பெண்ணின் வாழ்வில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற வகையில் அமைந்துள்ளது. நடுத்தர வயதைக் கடந்து  தனியாக வாழும் துவாரகாவின் அலுவலக நட்பான, சுவிஸ் நாட்டுப் பெண் லியூகா, கால் உடைந்த நிலையில் வேலைக்கு வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள்.  லியூகாவைப் பார்க்க அடிக்கடி செல்வது துவாரகாவின் பழக்கமாக இருந்து வந்தது. கமரூன் நாட்டைச் சேர்ந்த அகதியாக சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்த, பதினாறு வயதான பெண் பிள்ளை மியாஞ்சா தன்னைக் கவனித்துப் பார்ப்பதாகவும் அத்துடன் பேர்ண்ணில் வேலை பார்க்கும் மகனும் இடைக்கிடையில் தன்னை வந்து பார்ப்பதாகவும் லியூகா சொல்லியிருப்பது துவாரகாவுக்கு சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது. இந்தநிலையில் லியூகாவின் மகன் ஸ்ரிவ் மியாஞ்சாவுடன் பழகி, அவளைத் தாயாக்கிவிட்டு அவனுடைய தகப்பனைப் போலவே மியாஞ்சாவைக் கழற்றிவிட்டான் என்று ஒருநாள் லியூகா, துவாரகாவிடம் கூறுகின்றாள்.

லியூகாவின் சொந்த மகனே மியாஞ்சாவுக்கு துரோகஞ் செய்த போதும், தவறு செய்தவன் தன் மகன் என்றுகூடப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மியாஞ்சாவுக்கு ஆதரவாக நிற்கின்றாள் லியூகா. அதாவது மியாஞ்சாவைத் தத்தெடுத்து லியூகாவின் வீடு, சொத்துக்கள் போன்றவற்றை அவளுக்குப் பின்னர் மியாஞ்சாவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிவிட்டாள். லியூகாவின் இந்தத் துணிச்சல் போற்றத்தக்கது. தாய் நாட்டைப் பிரிந்து வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தவிக்கும் ஒரு யுவதிக்கு, தாய்க்குத் தாய் போல ஆதரவு காட்டும் லியூகாவின் மூலம் கதையின் கனதியை கதாசிரியர் உயர்த்துகின்றார். பணம், அந்தஸ்த்து, சொத்து, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தை நேசிக்க வைக்கும் இந்தச் சிறுகதை வாசகர்களின் மனதில் ஈரம் கசியச் செய்யும் ஒரு சிறந்த கதையாக அமைந்துள்ளது. 

அடுத்து 'ஓடும் வெண்முகிலாய்' (பக்கம் 14) என்ற கதையானது திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர் ஒரு கணவன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் விதத்தை கடிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது, அவர்களை கவனிக்காமல் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார் அந்தக் கணவன். அந்த மன உளைச்சளைத் தாங்க முடியாத மனைவி,  கணவனைப் பிரிந்து சென்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் தனியாக வாழ்கிறாள். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த கணவன் இறுதியில் தன் தவறுகளை உணர்ந்து அவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றான். கணவன் என்கின்ற கதாபாத்திரத்தின் ஆதங்கம், தவிப்பு போன்றவை இந்தக் கதை முழுவதும் விரவிச் செல்வதைக் காணலாம். ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ கணவன் மனைவிக்கிடையில் காதல் என்ற உணர்வு நூல் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது மிகவும் அருமையாக இருக்கின்றது.

'கலைந்து போகும் கோலங்கள்' (பக்கம் 78) என்ற கதையானது கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற விரிசல்களையும், குறிப்பாகப் மனைவியின் மனப்போராட்டங்களையும் பிள்ளைகளின் அசௌகரியமான மன உணர்வுகளையும் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. கணவனின் தவறான போக்கைச் சகித்துக்கொள்ள முடியாமல் மனைவி லதா அவனிடமிருந்து தனது இலக்கியா, இலக்கியன் ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் துணிச்சலாகப் பிரிந்து செல்ல எடுக்கும் முயற்சியை நோக்கி இக்கதை நகர்ந்து செல்கின்றது. இக்காலச் சமூகத்தில் நிலவுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளையும், அதன் விளைவாகக் குடும்ப அமைப்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கதாசிரியர் தனது கூர்ந்த அவதானிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மணவாழ்வில் நீடித்திருக்க வேண்டும் என்ற மனைவியின் தவிப்பு ஒருபுறமிருக்க, விருப்பமில்லாத உறவில் தன்னைத் திணித்துக்கொள்ள விரும்பாத நிலை இன்னொரு புறமுமான தவிப்புடன் மனைவி லதாவின் இரட்டை மனப்பாங்கு கதை முழுவதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கணவனைப் பிரிய மறுத்த லதா, ஒரு கட்டத்துக்கு மேல் போலி வாழ்க்கையிலிருந்து விலகி தன் பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காகவே தன் கணவனைப் பிரிய வேண்டும் என்ற தீர்மானத்தோடு எடுக்கும் முடிவே கதையின் முடிவாக அமைகிறது. ஒரு சிலரின்  யதார்த்த வாழ்வைக் கலைந்து போகும் கோலங்களாக உருவகப்படுத்தி, உறவுகளின் நிலையற்ற தன்மையை கதாசிரியர் இந்தக் கதையில் பதிவுசெய்துள்ளார்.

'நினைவிலிருந்து வழியும் விழிநீர்த்துளிகள்' (பக்கம் 87) என்ற கதைக்கு 2024 இல் நடைபெற்ற எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது, பாராட்டுக்கள். இந்தக் கதையின் கருப்பொருள் அருமையாக அமைந்துள்ளது. குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்து, தன் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த தர்சினி என்ற கதாபாத்திரம் கடைசியில் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றாள் என்பது வாசகரின் மனதில் ஒரு வகையான துயரத்தைத் தந்துவிடுகிறது.

'அந்திமாலை' (பக்கம் 133) என்ற கதை குறு நாவலாக அல்லது நாவலாக விரிக்கக் கூடிய கதைக் கருவைக் கொண்டுள்ளது. வாசகர்களுக்கு இந்தக் கதை மிகவும் நீண்டுவிட்டதே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, ஒருவகையான சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயம் தோன்றுகின்றது.

'பொன்னாடை' (பக்கம் 149) என்ற கதை புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ஏனைய சில விழாக்களிலும் ஆளுமையாளர்களை கௌரவிக்க பொன்னாடைகளைப் போர்த்துவதற்குப் பதிலாக பெறுமதியான நல்ல சிறந்த புத்தகங்களை பரிசளிக்கலாம் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். ஏனென்றால் அந்த ஒரு நிமிடம் போர்த்தப்படும் பொன்னாடைகள் பிறகு வேறு எதற்காகவும் பயன்படுத்த முடியாமல் வீட்டு அலுமாரிகளிலேயே பத்திரப்படுத்தி வைக்கப்படுகின்றன. எனவே இந்தப் பொன்னாடைக் கலாசாரம் தேவைதானா? என்ற நூலாசிரியரின்  நியாயமான கேள்வி பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

பொதுவாக நோக்கும் போது கமலினி கதிரின் எழுத்து நடை எளிமையாக அமைந்துள்ளது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்களைப் போன்ற இயல்பான தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த நூலின் சிறப்பு அதன் உணர்ச்சி வெளிப்பாட்டிலேயே தங்கி இருக்கின்றது. சில கதைகள் மனதை நெகிழச் செய்கின்றன. சில கதைகள் சமூகத்தில் நடைபெறுகின்ற உண்மைகளை சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக மனித நேயம், குடும்ப உறவுகள், பெண்களின் மனநிலைகள் போன்றவை கதைகளில் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அளவுக்கு அதிகமான வர்ணனைகளும் தேவைக்கு மேலதிகமான விளக்கங்களும் ஒரு சிறுகதையின் கனதித் தன்மையைக் குறைத்துவிடும் என்று கூறி, இனிவரும் சிறுகதைகளை மிகவும் காத்திரமான முறையில் எழுதி, கனதியான சிறுகதைத் தொகுதிகளாக தொடர்ந்தும் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல்:- என் சுவாசக் காற்றே

நூல் வகை:- சிறுகதை

நூலாசிரியர்:- கமலினி கதிர்

விலை:- 300 ரூபாய்



நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, February 8, 2026

161. ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்

 நினைவு தினம் - 2026.01.16 

(பன்னிரண்டாம் ஆண்டு நினைவுக் கட்டுரை)


ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர்

'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கல்வித் துறையிலும் கலை இலக்கியத் துறையிலும் புகழ் பெற்ற திக்கம் சிவயோகமலர் 1950.04.20 இல் சின்னத்தம்பியார் கணேஷ் - சின்னம்மா ஆகியோருக்கு சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்தார். 'திரவி' என்ற செல்லப் பெயர் கொண்டு எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார். இவர் தரம் ஒன்று தொடக்கம் திக்கம் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், ஆறாம் வகுப்பு முதல் உயர்தர முதலாம் வருடம் வரை பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சேர்ந்து உயர் தரக் கல்வியை முடித்தார். 

கல்லூரிக் காலத்திலேயே இவருக்கு இலக்கியத்தின் மீது அலாதியான ஈடுபாடு காணப்பட்டது. பல்வேறு வகையான இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்று தனது பாடசாலைக்கும், தனது ஊருக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தார். உயர் தரத்தில் சிறப்பாகத் தேறிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைத்துறைப் பட்டதாரியானார். பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அல்வாய் மேற்கு 'திக்கம்' எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், தனது இறுதிக் காலத்தில் கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். 2014.01.16 இல் தனது 64 ஆம் வயதில் காலஞ் சென்றாலும் இவர் பற்றிய நினைவுகளும் அவருடைய இலக்கியப் படைப்புகளும் காலத்தால் அழியாதவை என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

இவருடைய குடும்பமே ஒரு இலக்கியக் குடும்பம். கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் அரச சேவையில் கணக்காளராகவும், உள்ளகக் கணக்காய்வாளராகவும் கடமையாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்ற இவர் நாடறிந்த ஓர் எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். இவரும் பல படைப்புகளை எழுதி ஊடகங்களில் களப்படுத்தி வந்துள்ளார். அதேபோல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருடைய ஒரே மகன் றுக்மாங்கதனும் இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பல்வேறு வகையான ஆக்கங்களை எழுதி வருகின்றார். ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதை ஒன்றும் பரிசுக்குரியதாய் தெரிவு செய்யப்பட்டு அந்தச் சிறுகதை, ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட 'செவ்வரத்தை' (2015) என்ற சிறுகதைத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

வாழும் காலத்தில் இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள், 1980களில் கவிதைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வந்துள்ளார். அதன் பின்னரே சிறுகதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பரவலாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், நாடகப் பிரதிகள் போன்ற எக்கச்சக்கமான இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். தான் பிறந்த ஊரை மறவாமல் 'திக்கம்' என்ற அடைமொழியைச் சேர்த்து 'திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார்' என்ற பெயரிலேயே எழுதிய படைப்புகளையும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைககளில் களப்படுத்தி வந்துள்ளார். இவற்றுள் பல ஆக்கங்களுக்காக பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்ற இவர், இலக்கியத் துறையில் கவிஞராக, கதாசிரியராக, நாவலாசிரியராக என்று பல துறைகளிலும் சிறந்த ஆளுமையாளராகப் பரிணமித்தார். குறிப்பாக எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய முதலாவது சிறுகதை 'மகன் தேடிய வீடு' 1984 ஆம் ஆண்டு சிந்தாமணியில் வெளிவந்துள்ளது. வானம் பொய்க்கவில்லை (1990), பிறந்த மண் (1997), பாவத்தின் சுவடுகள் (1998), அவள் அகதி இல்லை, மயங்குகிறாள் ஒரு மாது, மலர் தாவும் வண்டுகள், சாமேளம், சுயம், மண் வாசம் (2013) போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது சிறுகதைகளுக்கு பல்வேறு இலக்கிய அமைப்புகள் மூலம் பரிசில்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவருடைய பல ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, ஈழநாடு, வீரகேசரி, முரசொலி, ஈழமுரசு, சுடரொளி, தினமுரசு போன்ற பத்திரிகைகளிலும் லண்டன் தமிழ் உலகம், சிரித்திரன், கற்பகம், அருள் ஊற்று, நமதுதூது, ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக இவர் அமரத்துவமடைந்த பின்னரும் அதாவது 2014 மார்ச் மாதத்திலிருந்து 'காத்திருக்கப் போகிறாள்' என்ற இவருடைய தொடர்கதை ஒளி அரசி சஞ்சிகையில் பிரசுரமாகி வந்துள்ளது.

1999 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதி, 21 அத்தியாயங்களாக வெளிவந்துள்ள 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் 2023 ஆம் ஆண்டு இவருடைய கணவரான மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஜே. ஜெயக்குமாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

ஒல்லாந்தரால்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மலாய் வம்சத்தினரின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு, தனது கற்பனைக் குதிரையை தட்டி ஓடவிட்டு புனையப்பட்ட ஒரு சரித்திர நாவலே, 'அடிமையின் காதலி' என்ற நாவலாகும். இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான காலியை பின்புலமாகக் கொண்ட கச்சேரியையும் அதை அண்டிய பகுதிகளிலும் நடைபெற்ற சில சம்பவங்களின் திரட்டாகவே இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளோடு இந்தச் சரித்திர நாவல் பின்னிப் பிணைந்துள்ளது. இது வரலாற்று நாவல் என்பதால் போர்த்துக்கீசர், டச்சு ஒல்லாந்தர், மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சில குறிப்புகளும் எமது நாட்டின் முக்கிய இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்லப்பா முதலி, கோமளவல்லி, லீலாவதி ஆகிய பாத்திரங்களோடு ஷூலர், கபொங், மாசோ, செயடங், டொன்பேதுரு, அமங்குராத், மஹதிர், யுரம்பதி ஏனைய இனங்களைச் சேர்ந்த பாத்திரங்களும், விலியற் சோக் பங்களாவும் நாவலில் இடம்பிடித்துள்ளது. 

வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு சரித்திர நாவலாகவே இந்நாவல் அமைந்துள்ளது. இந்த வரலாற்று நாவலின் மூலம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற கொடுமைகளை வாசகர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வைக்கிறார் நாவலாசிரியர். அதாவது அக்கால ஆட்சி முறையில் இடம் பெற்ற கொடூரங்கள், சித்திரவதைகள், துன்பங்கள், அடிமைக் கைதிகள் போன்றவற்றை நாவலாசிரியர் கண்முன் கொண்டு வருகின்றார். மொத்தத்தில் அம்பிகாபதி - அமராவதி, அனார்கலி - சலீம், லைலா - மஜ்னு ஆகிய அமர காவியங்கள் போன்றதொரு அருமையான காதல் காவியமாகவே 'அடிமையின் காதலி' என்ற இந்தச் சரித்திர நாவல் அமைந்துள்ளது. இச்சரித்திர வரலாற்று நாவலை எழுதி, இலங்கை இலக்கிய வரலாற்றில் முதல் பெண் சரித்திர நாவலாசிரியராக தனது பெயரைப் பதித்துள்ளார் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள்.

'அடிமையின் காதலி' என்ற இவருடைய சரித்திர நாவல் பற்றி மூத்த எழுத்தாளர் தமிழ்மணி கலாபூஷணம் மானா மக்கீன் அவர்கள் 'எவரும் எழுதத் தோன்றாதது, எண்ணியும் பார்க்க முடியாதது' என்ற தலைப்பில், இச்சரித்திர நாவல் வடபுல சிவயோகமலர் வழங்கிய வரலாற்றுப் புதினம் என்று குறிப்பிட்டு எழுதிய அருமையானதொரு கட்டுரையை சுடரொளி பத்திரிகையில் பிரசுரித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தச் சரித்திர நாவல் ஈழத்தின் முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியை எழுதிய சாதனை படைத்த சரித்திர நாவல் என்ற வகையில் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்றும், ஒரு வரலாற்று காலகட்டத்திற்கு உங்களையும் உள்ளீர்க்கும் என்றும் உறுதியாக நம்பலாம்.

சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்களின் நான்கு ஆண்டு கால முயற்சியின் பயனாகவே 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. நாவலொன்றை அவ்வளவு இலேசாக எல்லோராலும் எழுதிவிட முடியாது. பெரும்பாலும் அதற்குப் பல வருடங்கள் தேவைப்படலாம். அதுவும் சரித்திர நாவல் ஒன்றை எழுத நிறைய பொறுமையும் தொடர்புடைய வரலாற்று தகவல்கள் மீதான போதிய அறிவும் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக ஆற்றலும் ஆளுமையும் உள்ள ஒருவராலேயே இதனை இலகுவாக மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில், அதுவும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் வரிசையில் தனித்துவமான ஒரு பெண் ஆளுமையாளராக இலக்கிய உலகில் தனது பெயரை நன்கு பதித்தவர் நாவலாசிரியரான அமரர் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார். 

நாடகத் துறையைப் பொறுத்தவரை 'புலம் பெயரும் பாசங்கள்' என்ற இவருடைய நாடகப் பிரதி முதற் பரிசைப் பெற்றுள்ளது. 'கல்லுக்குள் ஈரம்' என்ற இவருடைய குறு நாவலும் பரிசு பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டமும், திரு. எஸ். திருச்செல்வத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த முரசொலி பத்திரிகையும் இணைந்து நடாத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவருடைய 'தேட்டம்' என்ற குழந்தைப் பாடல்கள் அடங்கிய தொகுதியும் பரிசு பெற்றுள்ளது. அத்துடன் லண்டன் தமிழ் மாத சஞ்சிகையில் 2004 - 2005 காலப்பகுதிகளில் 'மலரும் மொட்டுக்கள்' என்ற என்ற தலைப்பில் 14 அங்கங்களை உள்ளடக்கியதாக தொடர்கதையும் பிரசுரமாகியுள்ளது.

இவருடைய 'சிறுவர் பாடல்கள்' (2023) அடங்கிய நூலொன்றும் வெளிவந்து சிறுவர் படைப்பிலக்கியத் துறையிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடும் ஆற்றலும் இருக்கின்றது என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது. சிறுவர்களது வாசிப்பின் மீது இவருக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த 'சிறுவர் பாடல்கள்' நூல் அமைந்துள்ளது. அழகானதொரு அட்டைப் படம் சிறுவர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறுவர் பாடல் நூலில் கருத்தைக் கவரும் 36 சிறுவர் பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. 

இந்த நூலின் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ள நேர்மை, விரோதி, தகுதி, தகாத நட்பு, வீண் சண்டை, தண்டனை, தனிவழி, தன்னம்பிக்கை, பரீட்சை, அறிவு, புத்தி, ஈயார் தேட்டம், நண்பன், கோபம், பயன், பட்டம், எண்ணும் எழுத்தும், பொம்மை, ரயில் ஓடுது பார், ஏழு நிறங்கள், பலூன்கள், சின்னச் சின்ன பொம்மை, வண்ணப் பூச்சி, யானை, நிலவு, கப்பல், குட்டிப் பூனை, அணில், நல்ல வீடு, சுத்தமான நீர், தாய் சொல்லைத் தட்டாதே, தாலாட்டு, புன்னகை, ஒரு காலம், குட்டி முயல், விடிவெள்ளி போன்ற சிறுவர்களுடன் தொடர்புடைய அவர்களுக்கு விருப்பமான தலைப்புகள் என்னை ஆகர்ஷித்தன. இந்த சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. சிறுவர் பாடல்களில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பயன்படும் வகையிலேயே அமைந்துள்ளன. நல்ல பண்புகளை பாடல்களாக சொல்லிக் கொடுக்கும் போது அவற்றை சிறுவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அத்துடன் அவர்களது தமிழ் மொழி ஆற்றலும் மேம்படும் என்பது திக்கம் சிவயோகமலரின் திடமான நம்பிக்கை. இவர் சிறுவர்களுக்காக எழுதியுள்ள படைப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒரு பகுதியாகவே 'சிறுவர் பாடல்கள்' என்ற இந்தத் தொகுதி வெளிவந்துள்ளது.

பிரபல மூத்த ஆளுமையாளர் செங்கையாழியான் கலாநிதி க. குணராசா அவர்கள் எழுதியுள்ள 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற ஆய்வு நூலில் 'ஈழத்தின் தரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன' என்று பாராட்டிப் பதிவு செய்துள்ளார். அத்துடன் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவில் இவர் ஏழாந் தலைமுறைப் படைப்பாளியாக முத்திரையிடப்பட்டுள்ளார்.

 டொமினிக் ஜீவா அவர்களைப் பிரதம ஆசிரியராக கொண்டு அரை நூற்றாண்டு காலமாக வெளிவந்த மல்லிகை சஞ்சிகையின் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் (34 ஆவது ஆண்டு மலர்) அட்டை படத்தில் இவரது படத்தை பிரசுரித்து கௌரவித்துள்ளது. மல்லிகை 43 ஆவது ஆண்டு மலரிலும் (2008 ஜனவரி) இவரது படைப்புகள் பற்றி சிலாகிக்கப்பட்டுள்ளன. ஜீவநதி பெண் ஆளுமைச் சிறப்பிதழிலும் இவர் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவருடைய இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வானது சப்பிரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட மொழித்துறைப் பட்டதாரி மாணவியான மீராவினால் மேற்கொள்ளப்பட்டு சிறப்புப் பட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றதுடன் ஆய்வு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள் மறைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தாலும் அவரது நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த நினைவு நாளில் அவருடைய நினைவுகளை மீட்டி மனநிறைவு அடைவது போல இலக்கிய உலகமும் இத்தகைய ஆற்றலுள்ள ஒரு காத்திரமான பெண் படைப்பாளியை நினைவுகூரும் என்று நம்புகிறேன். மறைந்தாலும், கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் அவரது பரந்துபட்ட படைப்புகள் வழியாக நினைவுளில் வாழும் சரித்திர நாயகியாக 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் இலக்கிய உலகில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்!!!

குறிப்பு:- இவர் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எனது தேடலுக்குக் கிடைத்த சொற்பமாகும். இதனையும் தாண்டி இவரது படைப்புவெளி பரந்துபட்டது. இவர் பற்றியும், இவரது படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நினைவுக் கட்டுரை ஒரு தொடக்கப் புள்ளியாகவே அமையும் என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.


வெலிகம ரிம்ஸா முஹம்மத் 


Wednesday, December 10, 2025

160. 'என்னை மீட்டும் வீணை' கவிதைத் தொகுதி மீதான இரசனைப் பார்வை

'என்னை மீட்டும் வீணை' கவிதைத் தொகுதி மீதான இரசனைப் பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


'மக்கொனையூராள்' என்ற புனைப் பெயரில் எழுதி வருகின்ற பர்ஹானா அப்துல்லாவின் 'நிசாந்தம்', 'நான் முகிலாகிறேன்' ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து, 'என்னை மீட்டும் வீணை' என்ற இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதி குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்து கவிதைப் பிரியர்களை மகிழ்விக்கின்றது. 

'என்னை மீட்டும் வீணை' என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் இவர் அண்மைக் காலமாக எழுதிய 60 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அக உணர்வுக் கவிதைகளோடு அன்பு, கருணை, நட்பு, நேசம், பெண்மையின் சுபாவம், பெண் வலிமை, எழுத்தின் முக்கியத்துவம், பிரிவுத் துயரம், போலி அரசியல், வறுமை, இயற்கை எழில், வாசிப்பின் தேவை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், நோன்பின் மாண்பு, தந்தைப் பாசம், மனித உறவுகள் போன்ற பல கருப்பொருட்களில் அமைந்த கவிதைகள் 64 பக்கங்களில் காணப்படுகின்றன.

கனதியான சொற்களைக் கொண்டு, எளிமையான முறையில் இவர் கோர்க்கும் கவிதைகள் மனதைக் கவர்கின்றன. பர்ஹானா அப்துல்லாஹ் ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட கவிஞர் என்பதால் இவர் பற்றிய அறிமுகத்தை வாசகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பர். எனவே இவருடைய கவிதைகளைப் பற்றிய எனது பார்வையை இங்கு நேரடியாகவே பதிவு செய்கின்றேன்.

'பொழுதுகளோடு போராடுதல்' (பக்கம் 06) என்ற கவிதை ஏமாற்றங்களையும் நிராகரிப்புகளையும் தாங்கும் உள்ளத்தின் பலம் பற்றிப் பேசுகிறது. வேதனைகளோடு நகரும் வாழ்க்கையைக் கடக்க பொழுதுகளோடு போராட வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது. விடையில்லா கேள்விகளுக்குக்கூட வழி தேடும் உயிர்ப்பே மனித வாழ்க்கையின் உண்மையான போராட்டம் என்பதை இக்கவிதை நன்கு உணர்த்துகிறது.


எல்லா பொழுதுகளிலும் மலராக இருத்தல் முடியாது 

சில பொழுதுகளில் மரித்தாக வேண்டும் 

போலிப் புன்னகை தரித்தாக வேண்டும் 

சில ஏமாற்றங்களை சகித்தாக வேண்டும்


முட் சொற்களை ஏந்தியாக வேண்டும் 

கற் பொழிவுகளை தாங்கியாக வேண்டும் 

கதவடைப்புகளை வாங்கியாக வேண்டும் 

நிராகரிப்புகளில் நீந்தியாக வேண்டும் 

மௌனத்தின் கரம்பற்றி மொழியாக வேண்டும் 

பெருவனத்திலும் தனித்தாக வேண்டும் 


விடையில்லா கேள்விகளுக்கும் பதிலாக வேண்டும் 

பதில் இல்லா பொழுதொன்றில் வழி காண வேண்டும்  

துணிந்திருக்கவும் வேண்டும் பணிந்திருக்கவும் வேண்டும் 

மொத்தத்தில் வாழாமல் வாழ வேண்டும் 

பொழுதுகளோடு போராடுதல் தானே வாழ்க்கை!


'என் மேகமே' (பக்கம் 32) என்ற கவிதை மேகத்தை ஒரு நெருங்கிய துணையாக எண்ணி, மனத் துயரங்களை அதனோடு பகிரும் ஒரு அழகியல் சார்ந்த கவிதையாகும். கவிஞர் தனது மனத் துயரம், தனிமை, ஆறுதல் ஆகியவற்றை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்து, மேகத்திடம் தஞ்சமடைவதாக இரசனையோடு இக்கவிதையை அமைத்துள்ளார். பரந்த வானத்திலுள்ள மேகத்தோடு எல்லை இல்லாத நேசத்தைப் பேசும் உணர்வானது கவிதைக்கு நித்தியமான காதல் ஒளியைக் கொடுக்கிறது.


வெண் பஞ்சு மேகங்களே 

என் தஞ்சம் ஆகுங்களே 

நான் கொஞ்சம் தோள் சாயவே 

பொன்மஞ்சம் தாருங்களே


என் நெஞ்சின் வலி தீரவே 

மென் பூ கொஞ்சம் தூவுங்களே 

நான் துஞ்சும் துயர் நீங்கவே 

தேன் கொஞ்சப் பேசுங்களே


வழிகின்ற விழிநீர் எல்லாம் 

மறைந்தோடச் செய் மேகமே 

நீள்கின்ற என் கைகளில் 

இதழ் பதித்துப் போ மேகமே


ஓடாதே நில் மேகமே 

தாளாதே என் தேகமே

உன்னோடு எனை ஏந்தியே 

விண்ணோடு செல் மேகமே


எல்லை இல்லாத நீல்வானிலே 

தொல்லை இல்லாது தினம் நீந்த வா

சொல்லில் முடியாத நம் நேசத்தை 

நில்லாமல் நிதம் பேச வா!


'அன்பே இன்ப ஊற்று' (பக்கம் 43)  என்ற கவிதையில் அன்பு என்பது ஒரு சொல் அல்ல. அது ஒரு வாழ்வியல் என்கிறார் கவிஞர். அன்பு மனிதர்களை ஒன்றாக்கும் மென்மையான இணைப்பு. அன்பு உலர்ந்து போன மனங்களை ஈரலிக்கச் செய்கின்ற ஒரு மழை. அன்பு ஒரு பரிசுப் பொருள். இங்கு பெறுபவர் மட்டுமல்லாமல் வழங்குபவரும் மகிழ்ச்சியடைகிறார். சுமைகளை நீக்கும் சுகமாக அன்பு காணப்படுகிறது. அன்பு நதியில் நீச்சலடிக்கும்போது மனிதன் புதிதாகப் பிறக்க முடியும். இக்கவிதையில் அன்பானது பயணம், மழை, கீதம், கவிதை, பரிசு, விருந்து, மொழி, காற்று, சுவாசம், நதி, சிறகு ஆகிய பல உருவங்களில் உருவெடுத்து, மனித வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது என்பதை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளார்.


அன்பின் பாதை தேடு அதில் பயணம் செய்

அன்பை வலையாய் வீசு உறவுகளைப் பிடி 

அன்பை மழையாய்ப் பொழி இதயம் நனை 

அன்பு கீதம் பாடு பிறரை இரசிக்க வை

அன்புக் கவிதை எழுது பரிசளித்து விடு 

அன்புத் தேநீர் தயாரி பருகக் கொடு

அன்பை ஆகாரமாக்கு விருந்து வை


அன்பை மொழியாக்கு பேசிச் சுவை

அன்பைக் காற்றாக்கு சுவாசம் கொடு 

அன்பை நதியாக்கு மூழ்கி எழு

அன்பை கைக்குள் திணி பற்றிக்கொள் 

அன்புச் சிறகு விரி அகிலத்தைச் சுற்று

அன்பை விதை அன்பளித்து விடு

அன்பால் ஆள் அன்பால் வாழ் - வாழ வை!


'முதுமை' (பக்கம் 49) என்ற கவிதை முதுமையின் மகிமையைப் பேசுகின்றது. இன்றைய காலங்களில் இளவயது மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முதுமையை அடைவது பலருக்குக் கிடைக்காத ஒரு வரமாக அமைந்துள்ளது. இப்போதைய சூழ்நிலைகளில் காலத்தை வென்று இந்நிலையை அடைவது பெரிய சாதனையாகவே காணப்படுகிறது. முதுமையின் நரைத்த முடி வாழ்வின் அனுபவங்களைச் சொல்கிறது. உடல் பலவீனமடைந்தாலும், முதியோரின் உள்ளத்தில் இனிமையான நினைவுகள், வாழ்க்கைச் சுவைகள், அனுபவக் கதைகள் நிரம்பிக் காணப்படும்.


முதுமை கடந்த கால வாழ்வுக்கான 

நற்சான்றுப் பத்திரம் 

முதுமை சாபமல்ல வரம் 

மூப்பெய்து முன்னரே முடிந்து போகின்றது 

பலரது வாழ்க்கை 

கூன் விழுந்த தேகத்திலும் 

தேன் ஒழுகும் கதைகள் காணலாம் 

நரைத்த முடியெல்லாம் 

உரைக்கும் அனுபவப் பாடம் 


இளமை நதி சங்கமிக்கும் கடல் முதுமை 

அங்கே கொஞ்சம் நீந்திப் பார்த்தால் 

அனுபவ முத்துக்களை அள்ளி வரலாம்

வாழ்வியலின் வலியறியவும் 

தோல்விகளின் வலியறியவும்

புதினங்களைப் புரிந்து கொள்ளவும் 

கவனமாய் வாழ்வை வெல்லவும் 

முதுமையின் கையில் இருக்கும் 

புதுமையின் முகவரி 

தேடிப்போய் கண்டுபிடி 

உன் வெற்றிக்கான முதல் வரி!


'என்னை மீட்டும் வீணை' சமூகப் பெறுமானம் மிக்க கவிதைகளின் தொகுதியாகும். சோர்ந்து போய் இருக்கின்ற ஆன்மாக்களைத் தடவி, ஆறுதல் படுத்தக்கூடிய பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை சிறப்பு. இத்தகைய அழகிய, அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி வருகின்ற இவருடைய எழுத்துக்கள் உயிரோட்டமிக்கதாக அமைந்திருக்கின்றன. அவை நிச்சயமாக சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். 'என்னை மீட்டும் வீணையின் நாதம் உங்களில் எழுப்பட்டும் இனிமையின் கீதம்' என்ற நூலாசிரியரின் வரிகளை இங்கு சுட்டிக்காட்டி, சொற்களை இலாவகமாகப் பயன்படுத்தி கவிதைகளை யாத்திருக்கும் பர்ஹானா அப்துல்லாஹ் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட்டு இலக்கிய வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!


நூல் - என்னை மீட்டும் வீணை

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்

விலை - 400 ரூபாய்




நூல் கண்ணோட்டம்:-

வெலிகம ரிம்ஸா முஹம்மத்












Saturday, December 6, 2025

159. ருஷ்தா லுக்மானின் மௌன ஓசை கவிதை தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 ருஷ்தா லுக்மானின்

மௌன ஓசை கவிதை தொகுதி மீதான இரசனைக் குறிப்பு


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலக்கியத் துறையில் அதிக முனைப்பு காட்டி தமது கவிதைகளை ஊடகங்கள் வாயிலாக களப்படுத்தி வருகின்ற இளம் தலைமுறைப் படைப்பாளிகள் அண்மைக் காலமாக கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு வருவதில் மிகவும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அந்தவகையில் 'மௌன ஓசை' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு ருஷ்தா லுக்மானும் இலக்கியத் துறையில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார். மௌன ஓசை என்ற கவிதைத் தொகுதி சிறியதும் பெரியதுமான 74 கவிதைகள் உள்ளடக்கி 104 பக்கங்களில் வெளிவந்துள்ளது.


ருஷ்தா லுக்மானின் பிறப்பிடம் கிழக்கிலங்கையின் காத்தான்குடியாகும். இந்த ஊரின் மண் வாசனையே இவரது படைப்புகளில் அதிலும் விசேடமாக கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. 'எழுதும் ஆற்றல் உள்ளவர்களுக்கு உணர்வு பெருக்கெடுத்தோடும் போது அவ்வெழுத்துக்கள் கவிதைகளாக பிரவாகம் எடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் பிரவாகமாகவே ருஷ்தா லுக்மானின் கவிதைகளைப் பார்க்கின்றேன். தன்னோடு வாழும் தந்தை பற்றியும், அவரை தந்தைக்கும் மேலாய் உற்ற நண்பராய் பார்க்கும் உணர்வினையும் தனது மன எழுச்சிக் கவிதையாக பதிவு செய்துள்ளார். தாயைப் பாடியுள்ள அவர் தாய் மண் என்று கிழக்கையும் பாடியுள்ளார்' என்று ருஷ்தா லுக்மானின் கவிதைகள் பற்றி முன்னாள் அரசாங்க தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தனது அணிந்துரையில் எழுதியுள்ளார். இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பை இவருடைய சகோதரியான லுதுபியா லுக்மான் எழுதியுள்ளார்.

'மௌன ஓசை என்ற இந்த கவிதைத் தொகுதியில் சிந்தனைக்கும் உணர்வுக்கும் இடையே பாலமாகப் பதிந்திருக்கும் பல்வேறு அனுபவங்கள், மௌனித்திருந்த உணர்வுகள் என்பன பேசாமல் பேசுகின்றன' என்று ருஷ்தா லுக்மான் தனது கவிதைகள் குறித்து என்னுரையில் பதிவு செய்துள்ளார். 

தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழ் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு வலய மட்டம், மாகாண மட்டம், மற்றும் மாவட்ட மட்டங்களில் கவிதைப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று கவிதைத் துறையில் தனக்கானதொரு தடத்தைப் பதிவு செய்துள்ளார் ருஷ்தா லுக்மான். 

இந்த நூல் ஆண்கள் உணராத பெண்களின் வலிகளையும், பெண்கள் உணராத ஆண்களின் சுமைகளையும், உறவுகளின் முகங்களையும், சமூகம் கவனிக்க மறந்த கடமைகளையும், தட்டிக் கேட்கப்படாத அநியாயங்களையும், இயற்கைக்கும் தனக்குமான பிரிக்க முடியாத காதலையும், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், முயற்சி, வீழ்ச்சி என பன்முகங்களையும் கண் முன்னே கொண்டு வந்து கவிதை வரிகளின் வழியாக வாசகர்களுக்குள் புதுப் பரிமாணத்தைத் தோற்றுவிக்கும் என்ற நூலாசிரியரின் கூற்றுக்கு இணங்க நாமும் இவருடைய கவிதைகளை எதிர்பார்க்கலாம். வாசகர்களின் இரசனைக்காக நூலாசிரியரின் சில கவிதைகளை இங்கே நாம் எடுத்து நோக்குவோம்.

'அவள் இருபதின் பின்' (பக்கம் 16) என்ற தலைப்பில் அமைந்த கவிதை பெண்களின் வாழ்க்கையில் கல்வியறிவு, தன்னம்பிக்கை, கனவு, எதிர்பார்ப்பு கொண்ட இளமைப் பருவத்திலிருந்து குடும்பப் பொறுப்புகளுக்குள் முற்றாக மாறிவிடுகின்ற நிலையை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இருபதுகளின் பின்னரான அவளின் உற்சாகம் சாந்தமாக மாறினாலும், அதில் ஒரு ஆழ்ந்த வலியும் அமைதியும் கலந்துள்ளது என்று குறிப்பிட்டு இப்பெண்களின் மௌனப் போராட்டத்தையும் அதனைத் தாங்கும் சக்தியையும் இக்கவிதை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கிறது. கவிதையின் சில வரிகள் இதோ:-


பேனா கறை படிந்த அவள் கரங்கள் 

அடுப்பங்கறைக்கு சொந்தமாயிற்று!

வகுப்பறையில் போட்ட கூச்சலும் சத்தமும் 

அடுப்பறையில் சாந்தமாயிற்று! 


மைதானங்களில் ஓடி வெற்றி நடை போட்ட அவள் கால்கள் 

விளக்குமாறோடு கொல்லைப் புறத்தில் கோலமிடுகிறது! 

எதற்கும் துணிந்து எதிர்த்துப் பேசிய நாவும்

எதையும் தாங்கும் இதயம் கொண்டு சாந்தமாயிற்று!


'நவீன தாய்' (பக்கம் 20) என்ற தலைப்பில் அமைந்த கவிதை  இக்காலத்தில் பெரும்பாலானோருக்குள் இருக்கும் செல்போன் மோகத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. வீட்டு வேலைகளையும் கணவன் மற்றும் குழந்தைகளின் வேலைகளையும் பூர்த்தி செய்யாமல் சீரியல்களிலும் பேஸ்புக்கிலும் காலம் களிக்கும் பெண்கள் ஏராளம். நவீன தொழில்நுட்பமானது தாய்மையின் நேசத் தொடுதலை மங்கச் செய்ததையும், தாய்க்கும் சேய்க்குமிடையிலான இடைவெளி ஏற்பட்டுள்ளமையையும் ஆணித்தரமாக சித்தரித்துள்ள இக் கவிதையின் சில வரிகள் இதோ:-


சொல் பேச்சு கேட்காது செல் பேச்சு பழகிட்டு 

ஓயாத கண்ணிற்கு ஒன்றுமே விளங்காது 

வெளி விளையாட்டு தெரியாது வீட்டு வேலை ஓடாது 

கைபேசி கதை பேச அதுவே உலகமாயிற்று!


செல்போன் சிறைக்குள் சிக்கித் தவிக்கின்றனர் 

திசை மாறிய சிட்டுக்கள்!

தன் வேலை நிறைவேற தன்நிலை மறந்து 

செல்போனைக் கொடுத்துவிட்டு செல்லமாய் தடவிவிட்டு 

பிள்ளை தடம் புரள தலைப்பிடும் நீ எல்லாம் 

தாயாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய் 

பத்து மாதம் சுமப்பவள் தாய் அல்ல - மாறாக 

பக்குவமாய் சுமப்பவளே தாய்!


'அவன் இருந்தும் நான் விதவை' (பக்கம் 37) என்ற தலைப்பில் அமைந்த கவிதையை வாசிக்கும் போதே ஒரு வகையான மனவேதனை ஏற்படுகின்றது. கணவனின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கும் ஒரு மனைவியின் ஏக்கமும் துன்பமும் தனிமையின் தவிப்பாக இக்கவிதையில் வெளிப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு உணவும் உடையும் ஆபரணமும் கொடுத்துவிட்டால் அவள் இன்பமாக இருப்பதாய் பலரும் எண்ணுகிறார்கள். அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை இயந்திரங்களாக அணுகுபவர்கள் பலர். அத்தகைய பெண்கள் வெளியுலகுக்கு தாம் மகிழ்ச்சியாய் இருப்பதாகக் காட்டிகொண்டு உள்ளுக்குள் குமுறுவார்கள். அத்தகைய பெண்ணின் மனப்பாரத்தைப் பகிரும் இக்கவிதையின் வரிகள் இதோ:-


இரவானால் தூங்குவதிலும் 

விடிந்ததும் வேலைக்கு கிளம்புவதிலும் 

உன் காலம் ஓடுகிறது! 

இதற்கிடையில் அர்த்தமே இல்லாமல் 

உன் வாழ்வில் நான் எதற்கு?


நீயோ வேலை என்று சொல்லி 

என்னை வாடவிட்டு வெளிநாடு பறந்து விட்டாய் 

நானோ உன்னை மட்டுமே எண்ணியெண்ணி 

ஒவ்வொரு நிமிடத்திலும் 

நிகழ்காலத்திற்காய் செத்துப் பிழைக்கிறேன்!


நான் உன் மனைவி.. 

உன் உயிரின் பாதி..

உன் விலா எலும்பின் மீதி..

உன் இரவின் போர்வை!


நான் கேட்பதெல்லாம் உன் வாழ்நாளின் 

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே

அந்த நிமிடங்களிலும்கூட உன் மடியில் 

என் தலை சாய்த்து உன் விரல்கள் என் தலை கோத

என் கரங்கள் உன்னை இறுகப்பிடித்து 

கதை பேச வேண்டும்!


'மௌன ஓசை' கவிதைத் தொகுதி நூலாசிரியரின் கன்னி முயற்சியாகும். இதில் அதிகமாக அகம்சார் கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன. தொடர்ந்து வெளியிடும் கவிதை நூல்களில் சமூகம்சார் கவிதைகள், காத்திரமான கருப்பொருட்களை உள்ளடக்கி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்போடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.


நூல் - மௌன ஓசை

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ருஷ்தா லுக்மான்

தொலைபேசி - 0778389567

வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்

விலை - 600 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்









Saturday, October 11, 2025

158. 'ஹீரா இசை அமுதம்' (ஞான கீதங்கள்) நூலாய்வு

 'ஹீரா இசை அமுதம்' (ஞான கீதங்கள்) நூலாய்வு


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்கள் வரிசையில் இறை ஞானிகளின் நேசரான, ஸூஃபி கவி எம்.டப்ளியு.எம். றியாழ் அவர்களும் இணைந்துகொள்கின்றார் என்பதில் தென்னிலங்கையைச் சேர்ந்தவள் என்ற வகையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். றியாழ் ஆசிரியர் அவர்களும் நானும் வெலிகமையைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ஒரே தெருவில் (புதிய தெரு) வசித்து வந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இவர் வெளியிட்டுள்ள ஹீரா இசை அமுதம் (ஞான கீதங்கள்) என்ற இந்த நூல் அஸ்ஸித்தீகீ மலர் மன்றத்தினால் 63 பாடல்களை உள்ளடக்கிய வகையில் 70 பக்கங்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாடல்களை இனிமையான பழைய, இடைக்கால தமிழ் சினிமாப் பாடல்களின் மெட்டிலும் மற்றும் சிலவற்றை ஹிந்திப் பாடல்களின் மெட்டிலுமே நூலாசிரியர் எழுதியுள்ளார். மெட்டுக்களின் இராகம் மாறாமலும் சந்தம் பிசகாமலும் இவர் யாத்துள்ள இந்தப் பாடல்கள் மிகுந்த இரசனைக்குரியதாக அமைந்துள்ளன என்பதைப் பாராட்டியாக வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் பாடல்கள், கீதங்கள், இசைநயம் கொண்ட படைப்புகள் போன்றவை மனித மனதிற்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பாடல்களைத் தாங்கி வெளிவந்திருக்கும் பனுவலாகவே இந்த நூலைக் குறிப்பிடலாம். பாடல்களின் வரிகளைப் பொதுவாக நோக்கும் போது நூலாசிரியரின் இலக்கிய ஆர்வம், கற்பனையாழம், ஆன்மீகச் சிந்தனை, தமிழ் மொழி மீதுள்ள பற்று, இத்துறைகளில் அவருக்குள்ள விருப்பம் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. 

இந்த நூலின் தனிச் சிறப்பு இசைநயமாகும். ஒவ்வொரு பாடலும் எளிதாக பாடக் கூடிய வகையில் பழைய பாடல்களின் மெட்டில் எழுதப்பட்டுள்ளன. பாடல்களின் ஓசை, ஒத்திசை, சொல் இனிமை போன்றவை வாசகனை ஈர்த்து, பாடல்களை மெட்டுக்கு ஏற்ப பாடும் போது இன்பம் தருவதாக அமைகின்றன. பாடல்களில் வெளிப்படும் உணர்ச்சிகளான பக்தி, அன்பு, ஏக்கம், நம்பிக்கை, அமைதி - அனைத்தும் மனதைக் கவர்கின்றன. வாசிக்கும் போது மட்டுமல்ல, பாடும் போதும் அந்த உணர்வுகள் ஆழமாக அனுபவிக்கப்படுகின்றன. பாடல் வரிகளை எளிமையான சொற்களாலும் ஆழமான சிந்தனைகளையும் வெளிப்படுத்தி அமைத்திருப்பது எழுத்தாளரின் திறமைக்குச் சான்றாகும். பாடல்கள் கவிநயம் கொண்டதால் அவை இலக்கியச் சுவையையும் வாசகனுக்கு அளிக்கின்றன.

நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற மேல் மாகாண சங்கீத ஆசிரிய ஆலோசகர் வைத்திலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் நூலாசிரியர் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'எம்.டபிள்யு.எம். றியாழ் அவர்கள் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் பணியை ஆரம்பித்து ஆசிரியராக பல பாடசாலைகளில் கற்பித்து வந்துள்ளார். அச்சந்தர்ப்பங்களில் அக்குறித்த பாடசாலையின் பாடசாலைக் கீதங்களை வடிவமைத்து தமது கவிப்புலமையை ஆரம்ப காலத்திலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நிர்வாகத்திலும் கலைத் துறையிலும் காணப்படும் ஆர்வம் காரணமாக இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் (SLPS 1) கடமையாற்றினார். இவர் அதிபராகக் கடமையாற்றிய வெலிகம அறபா தேசிய பாடசாலைக் கீதத்தை வடிவமைத்துக் கொடுத்த பெருமை றியாழ் அவர்களின் இந்த நூலாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது' என்று பாராட்டியுள்ளார்.

நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள தென் மாகாண ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எம். ஹிஷாம் அவர்கள் நூலாசிரியருக்குள்ள இலக்கிய மற்றும் இசை மீதான ஈடுபாடு குறித்தும் அவருடைய நூல் உருவாக்கம் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இலக்கிய வானில் கட்டுக்கடங்காத எல்லைகளை மீறி, தமிழின் அழகைத் தரணியில் விதைத்து வருவது கவிதை என்றால் அது மிகையாகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிதைகளை இராகம், தாளம், பாவம் சார்ந்த இசை மூலம் உயிரூட்டி ஆன்மீகம், லௌகீகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் பாடல்களாக அமையப்பெற்றுள்ள இந்த நூலை நோக்கும் போது உள்ளம் பூரிப்படைகின்றது. இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஓர் அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும் உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகுச் சாதனம்தான் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். இன்பம், துன்பம், சோகம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால்தான் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை, 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைக்கின்றனர் சான்றோர். இலக்கிய ஆர்வமும் இசை இன்பமும் கொண்ட றியாழ் அவர்கள் தனது கற்பனையில் உதித்த இலக்கியச் செழுமைகளை ஆத்மீக ஞானத்தை ஒட்டியும் லௌகீகம் மூலம் ஆன்மீக வழியை அடையக்கூடிய விதமாகவும் தத்துவ ரீதியான பாடல்களை ஏட்டிலே சிதற விட்டுள்ளார்.' 

நூன் முகம் என்ற தலைப்பில் நூலாசிரியர் தனக்கும் இசைக்குமான தனது இளமைக் கால தொடர்பைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றார். 'இசைக்குத் தெரியும் எனது இளமைப் பருவம். அப்பருவத்தில் வானொலியில் இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சியைத் தவறாது கேட்டு வருவேன். அப்பாட்டுக்குரிய பாடல் புத்தகங்களையும் வாங்கிப் படித்து மகிழ்வேன். இது என்னை இத்துறையில் ஈடுபடச் செய்தது. இதன் காரணமாக இசைப் போட்டிகளிலேயே நான் பங்குபற்றி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் மீலாத் விழாக்களிலும் இஸ்லாமிய கீதங்களைப் பாடிப் பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது ஆசிரியர் தொழிலில் நான் கடமை புரிந்த எல்லாப் பாடசாலைகளிலும் இசை அமுதத்தினைப் பொழிவதற்குக் களமாய் அமைத்துக்கொண்டேன். எனவேதான் இன்பத் தேனையும் வெல்லும் இசையை அவ்வப்போது அசைத்துப் பாடல்களையும் அமைத்துக் கொடுத்து வருடா வருடம் நடைபெறும் தமிழ் மொழித் தினத்திற்கும் எனது பங்களிப்பினை வழங்கியுள்ளேன். இசை ஒலியால் ஆனது. செவியால் உணர்வதற்கு உரியது. இலக்கியத்தின் வகைகளுக்குள் சிறந்ததாகிய பாட்டு என்பது இசையுடன் கூடியது.'

நூலுக்கான கவி வாழ்த்தை டாக்டர் எம்.எச். நூர்டீன் அவர்களும், வாழ்த்துரையை இந்தியாவைச் சேர்ந்த பிலாலிய்யா நபி புகழ் கவிதாயினி எம். சலீமா பானு மற்றும் அஷ்ஷேய்க் மௌலவி முஹம்மது பாயிஸ் முஹியத்தீன் அவர்களும் வழங்கியுள்ளார்கள். 

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே, வா வா வசந்தமே சுகந்தரும் சுகந்தமே, நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது, பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை, கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே, வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு,  யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது, நான் ஒரு சிந்து காவடிச் சிந்து, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே, பாடவா உன் பாடலை, மேகமே மேகமே பால் நிலா தேயுதே, பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே, உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை, நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே, சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம், நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை, ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போhர்க்களமே போன்ற நெஞ்சம் கவரும் பழைய மற்றும் இடைக்கால சினிமாப் பாடல்களின் மெட்டுக்கு இசைவான நூலாசிரியரின் பல  பாடல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. பழைய ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்கு இசைவான ஒரு சில பாடல்களும் இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. இவ்வகையான பழைய மற்றும் இடைக்காலப் பாடல்கள் காற்றலைகளில் தவழும் போது இரசித்துக் கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

இனி பாடலாசிரியர் றியாழ் அவர்களின் நூலில் இடம்பிடித்துள்ள 63 பாடல்களில் ஒரு சில பாடல்களைத் தொட்டுக்காட்டி ஹீரா இசை அமுதத்தில் நனைய வாசகர்களையும் அழைத்துச் செல்கின்றேன். 

'மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே' என்ற பாடலின் மெட்டில் நூலின் முதலாவது பாடலாக அமைந்துள்ள 'மண்ணில் வந்த ஒளியே இறை ஒளியில் பூத்த மலரே' என்ற பாடல் வரிகள் தாஹா நபிக்கான தாலாட்டாக எழுதப்பட்டுள்ளது. தாஹா நபியை 'மண்ணில் வந்த ஒளி' எனக் கொண்டாடி, இறைவனின் அருளால் பிறந்த தூய்மையான மலராக சித்தரிக்கின்றது இந்தப் பாடல் வரிகள். மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்களின் பிள்ளைப் பருவத்தை விண்மீன்களும் மேகங்களும் தாலாட்டுகின்றன என்று பாடலாசிரியர் அழகாக வர்ணித்துள்ளார். நபியின் அழகு, நறுமணம், அருள் அனைத்தும் உலகிற்கு தெய்வீக ஒளியாய் விளங்குவதாகக் குறிப்பிட்டு இறைவன் அளித்த அருளும் அழகும் நபியின் உருவத்தில் ஒளிர்வதாக வெளிப்படுத்தியுள்ளார்.


மண்ணில் வந்த ஒளியே 

இறை ஒளியில் பூத்த மலரே - 2

அன்பு கொண்ட அன்பின் ஒளி 

கண்ணில் எங்கும் மின்னும் ஒளி ஒன்றன்றோ 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே 

(மண்ணில்)


எட்டி நிற்கும் வானம் பக்கம் வந்து நின்று 

பிள்ளையினைத் தாலாட்டும் 

விண்ணின் குளிர் மேகம் பக்கம் வந்து நின்று 

பிள்ளையினைச் சீராட்டும் - 2

விழிகளில் ஒளிமயம் உடலினில் நறுமணம்

இங்கே நூராகும் 

உறங்கிடும் வரையினில் அன்பின் தாய்மடி 

மகிழ்ந்திடும் சேயாகும் 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே

(மண்ணில்)


தங்க நிறப்பாதம் சின்ன மணிப்பாதம் 

மண்ணைத் தொடக்கூடாது 

பொன்னழகு மின்னும் இன்முகம் பார்த்து 

கண்கள் படக்கூடாது - 2

உலகினில் ஒளிகளில் மின்னும் அழகினை 

இறையோன் தந்தானோ 

மணிக்கதிர் மின்னிடும் உடுக்களின் அழகினை 

இறையோன் தந்தானோ 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே

(மண்ணில்)


அடுத்து பக்கம் 13 இல் இடம் பிடித்துள்ள 'நான் ஒரு சிந்து காவடிச் சிந்து' என்ற மெட்டிலமைந்த 'நான் ஒரு வித்து ஏகனின் சொத்து' என்ற பாடல் மனித வாழ்வின் நிலையின்மை, ஆன்மீகத் தேடல் மற்றும் இறை அருளின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறது. உலகப் பயணத்தின் அர்த்தமறியாமை, அறிவின் வரம்பு, ஆன்மாவின் நிலையைக் கண்டு பிடிக்கும் தேடல் ஆகியவை கவியுணர்வாக ஒலிக்கின்றன. இப்பாடல் மெட்டில் ஒலிக்கும் ஓசை பாடலைப் பாடும் போது ஒரு வகையான உற்சாகத்தைத் தருகிறது. வாழ்வின் ஆழமான கேள்விகளை எளிய கவிப்பாங்கில் வெளிப்படுத்திய சிந்தனைப் பாடல் இது வெளிப்படுகின்றது.


நான் ஒரு வித்து ஏகனின் சொத்து 

ஞானம் தெரியவில்லை 

இந்தக் கோலம் புரியவில்லை

மண்ணில் இருந்தும் வானில் பறந்தும் 

அர்த்தம் புரியவில்லை 

அதை எண்ண அறிவுமில்லை

(நான் ஒரு வித்து)

 

நில்லாத உலகிற்கு என்னென்ன பேரோ 

நாடோடி வாழ்வுக்கு நானிங்கு யாரோ 

மண்ணோடு போராடும் அலையாட்டம் பாரு 

நிலையாத வாழ்விற்கு விதைபோட்ட யாரு? 

தேடிப் படிச்சா சந்நிதி உண்டு 

ரூஹுக்குள்ளேயும் சங்கதி உண்டு 

கண்டுபிடி...

(நான் ஒரு வித்து)


வித்தொன்று வழி தேடி பார்க்கின்ற வேளை

அல்லான்னு சொல்லவும் அறிவாளர் இல்லை 

இக்கதி அப்போது தெரிந்திருந்தாலே 

சொர்க்கத்தில் நானே இருந்திருப்பேனே

இறையெழுத்தென்ன 

முடிவெழுத்தின 

சொல்லுங்களே...

(நான் ஒரு வித்து)


பக்கம் 35 இல் இடம்பிடித்துள்ள 'உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை' என்ற பாடலின் மெட்டில் அமைந்த 'வரவுகள் தொடர் நிலை முடிவுகள் மறு நிலை' என்ற பாடல் வாழ்வின் வரவுகளும் முடிவுகளும் சுழற்சி போல தொடர்வதைக் கூறுகின்றது. மனத்துயரமும் பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கி கடந்து செல்லும் வலிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் என்பதையும் வாழ்க்கையின் துயர நிலைகள் இன்பம் நோக்கி செலுத்தும் என்பதையும் காட்டுகிறது. துன்பத்தைக் கடந்து இன்பம் பிறக்கும் என்ற நம்பிக்கையை இப்பாடல் வரிகள் உறுதிப்படுத்துகிறது.


வரவுகள் தொடர்நிலை 

முடிவுகள் மறுநிலை 

ஒரு நிலை என்றும் முடியலாம் 

முடிவிலும் நன்மை தொடரலாம் 

இது எல்லாம் சுகமே 

(வரவுகள்)


எந்நெஞ்சிலே பாரம் எனக்காகவே நானும் 

சுமைக் கோலமாய்த் தாங்குவேன் 

என் கண்களின் ஓரம் எந்நாளுமே ஈரம் 

கண்ணீரை நான் மாற்றுவேன் 

வேதனை தீரலாம் வெண்பனி விலகலாம் 

என் கோலமே புது வடிவிலே 

நானும் மறையலாம்

(வரவுகள்)


வாழ்வென்பதே மாயம் தொடர்கின்றதோ ஏகம் 

நாற்றிசையிலும் ஆனந்தம்

நான் கண்டதோ துன்பம் இனிவாழ்வெல்லாம் இன்பம்

அவனேகமே ஆரம்பம் 

நம்மிலே புது எழில் எங்குமே கலந்தது 

எம் சொந்தமே எங்கும் இணைந்தது 

இன்பம் பிறந்தது

(வரவுகள்)


பக்கம் 45 இல் இடம்பிடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை' என்ற மெட்டில் அமைந்துள்ள 'என்றும் நிலைப்பதில்லை புவி நிலையும் நிலைப்பதில்லை' என்ற பாடல் உலகின் நிலையாமையை உணர்த்துகிறது. மனிதன் வாழ்வில் பொய்மையும் துன்பமும் நிலையானவை அல்ல என்பதைக் கூறுகிறது. உண்மையான அமைதி என்பது இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்று வலியுறுத்துகிறது. இறைவனைத் துதித்து வாழும் வாழ்க்கையில் சோகம், மாயை எதுவும் இருக்காது என்று இப்பாடல் சிறப்பாக அறிவுறுத்துகிறது.


என்றும் நிலைப்பதில்லை 

புவி நிலையும் நிலைப்பதில்லை

நாம் வாழ்ந்து வந்தோம் 

பொய்யில் வீழ்ந்திருந்தோம் 

மனதிலும் சாந்தியில்லை 

எம் மனதிலும் சாந்தியில்லை

(என்றும் நிலைப்பதில்லை)


வான் மறை கூறும் அறிவினைத் தேடி 

கலங்கும் நல் மனமே

மனச் சாந்தியையும் மன அமைதியையும் - நாம் 

பெறுவது அதனிடமே -  என்றும் 

நாம் பெறுவது அதனிடமே

(என்றும் நிலைப்பதில்லை)


வாழும் உலகில் இறைவனைத் துதித்து 

மதித்தே வாழ்ந்திடுவோம் 

மனச் சோகம் இல்லை 

முக வாட்டம் இல்லை 

மண்ணின் மாயங்கள் என்றும் இல்லை 

எம்மில் மாயங்கள் என்றும் இல்லை

(என்றும் நிலைப்பதில்லை)


நூலாசிரியரின் சில பாடல்களுக்கு இசை வடிவமும் சேர்க்கப்பட்டு பாடலுக்கான கனதியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வரிகள் வரிகளாக மட்டுமில்லாமல் இசை சேர்க்கப்பட்டு சிறந்த பாடகர்களால் பாடப்படும் போதே அவை முழுமையாகக் கேட்போரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெறுகின்றன. இந்தப் பனுவலில் உள்ள நூலாசிரியர் றியாழ் அவர்களின் பல பாடல்களை மீலாத் நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பல உள்நாட்டுப் பாடகர்கள் பாடியுள்ளார்கள். மட்டுமல்லாமல் இந்தியா தமிழ்நாட்டு 'சுப்பர் சிங்கர்' இசைப் போட்டியில் தெரிவான பிரபலமான பாடகி பரீதா பேகம் அவர்கள் நூலாசிரியரின் 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது', 'மேகமே மேகமே பால் நிலா தேயுதே', 'நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை' ஆகிய மெட்டுக்களில் அமைந்துள்ள நூலாசிரியரின் மூன்று பாடல்களைப் பாடிட்டுள்ளார். மிகவும் இனிமையான குரலில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடல்களைக் கேட்கும் போது மனதுக்கு இதம் தருவதாக அமைகிறது. இதற்காக பாடகி பரீதா பேகத்தையும் இந்த இடத்தில் பாராட்ட வேண்டும். 

மொத்தத்தில் 'ஹீரா இசை அமுதம் (ஞான கீதங்கள்)' என்பது பாடல்களால் ஆன்மீகத்தையும், இசையால் நெகிழ்ச்சியையும், ஞானத்தால் சிந்தனையையும் தரும் ஓர் அரிய படைப்பாக அமைந்துள்ளது. இது வெறும் பாடல்களை உள்ளடக்கிய நூல் மட்டுமல்ல. வாசகனை ஆன்மீகப் பயணம் நோக்கி அழைக்கும் விதமாகவே இந்நூல் அமைந்துள்ளன. எனவே வாழ்க்கை வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. எனவே இப்படைப்பு வாசகனின் மனதில் மகிழ்ச்சியையும் இறை பக்தியையும் ஊட்டும் படைப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.

80 வயதுகளைக் கடந்த  நிலையில் இருக்கும் தனது தந்தை றியாழ் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மகனார் எம்.ஆர். ஸபீர் அஹமத் அவர்களும் இந்த இடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே. ஏனெனில் இவருடைய இந்த முயற்சியின் விளைவாகவே ஓசை நயம் கொண்ட கவித்துவமான அழகிய பாடல்களை எமக்கு நுகரக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது. பாடலாசிரியர் றியாழ் அவர்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறவும், அவருடைய தேக ஆரோக்கியதுக்காகவும் பிரார்த்தனை செய்வதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!


நூல்:- ஹீரா இசை அமுதம்

நூல் வகை:- ஞான கீதங்கள்

நூலாசிரியர்:- ஸூஃபி கவி எம்.டப்ளியு.எம். றியாழ்

வெளியீடு:- அஸ்ஸித்தீகீ மலர் மன்றம்

விலை:- 300 ரூபாய்


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Wednesday, July 30, 2025

157. 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' அனுபவக் கட்டுரைகள் பற்றிய ஒரு பார்வை

 கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபீயின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' அனுபவக் கட்டுரைகள் பற்றிய ஒரு பார்வை


நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்கள், எழில் கொஞ்சும் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகின்றார். அங்கு பல்கலைக்கழகமொன்றில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், வானொலி நாடகக் கலைஞர், ஊக்குவிப்புப் பேச்சாளர், சமூக சேவையாளர் எனப் பன்முகங்களைக்கொண்டவர்.


இவருடைய கவிதைகளில் கவிநயம் சொட்டும். சிறுகதைகளை இவர் எழுதும் போது கையாளும் மொழிநடை வாசகர்களைச் சுண்டி இழுக்கும். நாடகங்களை இவர் எழுதும் போது பயன்படுத்தும் மொழி நடை மிகவும் இரசனையாக அமைந்திருக்கும். இவர் எழுதும் கட்டுரைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? கட்டுரைகளை எழுதும் போது இவர், தனது அனுபவக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடு வாசகர்களுக்கு முன்வைக்கும் பாங்கு அலாதியானது. மொத்தத்தில் இவருடைய ஆக்கங்கள் யாவும் இலக்கிய வாசகர்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையவை.

அவுஸ்திரேலியாவின் வளர்பிறை பதிப்பகத்தின் மூலம் மரீனா இல்யாஸ் ஷாஃபியின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற மகுடத்தில் அமைந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூலானது 132 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.


தான் இதுவரை முகநூலில் எழுதி வந்த அனுபவக் கட்டுரைகள் பலவற்றில் தெரிவு செய்த 33 அனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து 'என்மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற இந்த நூலை வெளியிட்டுள்ள நூலாசிரியர், தனது பெற்றோர்களான மர்ஹூம் முகம்மது இல்யாஸ், மஸ்தூரா உம்மா மற்றும் தனது அன்புக் கணவர் அஷ்ஷேய்க் செய்யத் ஷாஃபீ ஆகியோருக்குத் தனது நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். சமர்ப்பணத்தை தொடர்ந்து நூலாசிரியர் எழுதியுள்ள  'மலைகளைக் குடைந்து தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றில்லை. அழகிய வார்த்தைகளுக்கும் அந்த சக்தி இருக்கின்றது' என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். யாக்கூப் அவர்கள் முன்வைத்துள்ள பின்வரும் கருத்து கவனிக்கத்தக்கது.

'அறிவுபூர்வமான கட்டுரைகள் தொடர்பு சாதனத் துறையில் அண்மைக் காலமாக பாரிய அளவில் தாக்கம் செலுத்தி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக எழுத்தாற்றல் என்பது நவீன உலகை வடிவமைக்கும் நிகழ்ச்சி நிரலில் முன்னிலை வகிக்கின்றது. கட்டுரைகளைப் பொருத்தவரையில் ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள் என்பவை ஊடகங்களுடன் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அந்த வரிசையில் நியூசிலாந்தில் இருந்து மரீனா இல்யாஸ் ஷாஃபி தனது வாழ்வின் அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி, ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் 'இன்பத்தமிழ் வானொலி'யில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் 'வளர்பிறை' நிகழ்ச்சியினூடாக காற்றலை வழியே கலை வடிவங்களாகப் படைத்திருப்பது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும். அதனையும் தாண்டி அவர் தனது கட்டுரைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நவீன ஊடகத் துறையில் இன்னும் ஒரு சாதனையாகவே நான் கருதுகின்றேன்'.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை, தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு, வலம்புரி கவிதை வட்டத்தின் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் அணிந்துரையும் நூலை அலங்கரிக்கின்றன. தான் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்து நூலாசிரியர் தனதுரையில், 'இங்கே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. இரத்தமும் சதையும் கலந்து எழுதப்பட்ட, உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த சம்பவங்கள். உடலும் உள்ளமும் சோர்ந்து, தளர்வடைந்து, இனி வாழ்ந்தது போதும் என்று அலுப்புத் தட்டும் போதெல்லாம் இந்த அனுபவங்களை மீட்டிப் பார்த்து ஒரு கோப்பைத் தேநீர் போல் ஊற்றிப் பருகி, என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி நூலாசிரியர் நூலின் உள்ளடக்கத்தில் முன் வைத்துள்ள விபத்து, பஸ் பயணம், மனித நேயம், பாதை தவறிய பயணம், சொர்க்கத்தின் சிறு துண்டு, நியாயத்தை தேடி, உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்?, மறுபக்கம், தவறிப்போன மரணம், ஒரு புன்னகையின் விலை, பூட்டப்படாத வீடுகள், வியாபாரிகள் அற்ற கடைகள், தூங்காத இரவுகள், ஒரு திகில் பல திருப்பங்கள், அதிசயத் தீவு, ஹிச் ஹைக்கிங் (ர்iஉh ர்மைiபெ), மாற்றங்கள், மூச்சுத் திணறிய புற்கள், துணை, மனச்சாட்சி, தற்கொலை முயற்சி, கொரோனா தொற்றாலி, எதிர்வீட்டு ஜன்னல், திருமணம், சட்டத்தில் ஓர் ஓட்டை, சீருடை மாற்றுவதற்குள், இரண்டு வருடங்களின் பின்பு, படிக்கற்கள், வீட்டைச் சுமந்து செல்லல், தூண்டில், வெள்ளம், கனவு நிறைவேறிய நாள், பாதியில் சிதறிய பயணம் ஆகிய 33 தலைப்புகளில்  அமைந்துள்ள அனுபவக் கட்டுரைகளில் சிலவற்றை மாத்திரம் வாசகர்களின் இரசனைக்காக இங்கே எடுத்து நோக்குவோம்.

'விபத்து' (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த முதலாவது அனுபவக் கட்டுரையானது அவ்வப்போது சிறிய சிறிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் துவண்டு போகும் மனிதர்களுக்கு சிறந்த படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது. நூலாசிரியர் தனது பயணத்தில், தான் எதிர்கொண்ட விபத்தின் மூலம் சக்கர நாற்காலியில் காலம் கழித்த நாட்களை மிகுந்த துயரோடு நினைவுபடுத்தி, வல்ல நாயன் அல்லாஹ்வின் துணையோடு, அவர் எழுந்து நடந்த கதையைப் பதிவு செய்துள்ளார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது எனது மனமும் ஒரு நிமிடம் கலங்கித்தான் போனது. இந்தக் கட்டுரையின் மூலம் மன உறுதியுடன் கூடிய இறை நம்பிக்கையானது வாழ்க்கையின் எந்தத் துயரமான கட்டத்தையும் கடக்க வைக்கும் என்பதை மிகவும் அருமையாகச் சொல்லி நிற்கின்றார்.

கை, முதுகு, கழுத்து என்று உடல் முழுவதுமான காயங்களோடு கால் எலும்பு முறிந்து இரண்டு வருடங்களாக எழுந்திருக்க முடியாமல் சக்கர நாற்காலியே கதியென்றிருந்தவருக்கு  மீண்டும் பழைய நிலைக்கு வர முடியுமா என்று தெரியாத சந்தர்ப்பத்திலும் இறைவனின்  கருணையில் நம்பிக்கையை இழக்காத நிலையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து உடல்நிலை தேறி மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறி வந்த கதையை வாசிக்கும் போது உண்மையில் எனது மேனியும்  புல்லரித்துப் போய்விட்டது. சோதனைகள் பலவற்றையும் ஈமானை பலப்படுத்தும் செயற்பாடாக பார்க்கும் நூலாசிரியரின் மனப்பாங்கு எமது ஈமானையும் அதிகரிப்பதாக அமைந்துவிடுகின்றது.

'பாதை தவறிய பயணம்' (பக்கம் 32)  என்ற தலைப்பில் அமைந்த அனுபவக் கட்டுரையும் ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருவதாகவே அமைந்துள்ளது. நியூசிலாந்திலுள்ள மிக உயரமான 'மவுண்ட் குக்' என்ற மலையின் இடைக்கிடையே இருக்கும் குன்றுகளில் ஏறி அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அங்கிருக்கும் ஒரு குன்றுவரை பயணித்து, பனிப்பாறையைப் பார்க்கும் ஆசை நம் நூலாசிரியருக்கும் ஏற்படவே தனது கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பலருடன் பயணத்தை ஆரம்பித்த பொழுதொன்றில் பாதி தூரத்தைக் கடக்க முன்பே கூட வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் நூலாசிரியரின் உடல்நிலை சற்று இந்தப் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமைதான். நூலாசிரியருடன் வந்த நண்பர்கள் மெல்ல மெல்ல நடந்து செல்ல விரும்பவில்லை. அவர்கள் அவசரமாகச் சென்றே இயற்கைக் காட்சிகளை இரசிக்க விரும்பினார்கள்.

வேறு வழியில்லாத நிலையில் மிகவும் களைத்துப்போன  நிலையில், தாங்க முடியாத முட்டுக்கால் வலியுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மனோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறையோனைப் பிரார்த்தித்து, மலை அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு கணவர் மற்றும் தெரிந்தவர்களின் துணையோடு நம் நூலூசிரியர் திரும்பிவிட்டார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது மனிதர்களை நம்பிப் பயனில்லை. ஆனால் இறை நம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும் என்ற ஒரு புதுத் தெம்பை விதைத்துச் செல்கின்றது.

இதுவரை மிகுந்த துயரத்தோடும், மேனி சிலிர்க்கின்ற வகையிலும், ஆச்சரியத்தோடும் கட்டுரைகளை வாசித்து வந்த எனக்கு 'உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்..?' (பக்கம் 43) என்ற கட்டுரைத் தலைப்பு ஒரு சுவாரஷ்யத் தன்மையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்விக்கு என்ன பதிலைத்தான் எழுதி இருப்பார் என்று யோசித்துக் கொண்டே கட்டுரையை வாசித்தேன். விரிவுரை மண்டபத்தில் மாணவர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியே இது. அதற்கு இவர், 'சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பலதார மனம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறதே தவிர அது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு செயல் அல்ல' என்று மிகவும் அழகாகப் பதில் சொல்லியுள்ளார்.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண், இன்னொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்ய நேரிட்டால் அந்த ஆணின் கடமைகள் என்ன என்பதையும், அந்தப் பெண்ணின் உரிமைகள் என்ன என்பதையும், முக்கியமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பு பற்றியும் தெளிவாக முன்வைத்து, ஒரு முஸ்லிம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு குழந்தையும் 'தனக்கு தந்தையின் பெயர் தெரியாது' என்று முறையிடக்கூடிய அவலம் நேர வாய்ப்பில்லை என்பதையும் தெளிவாக மாணவர்களிடம் விளக்கியுள்ளார்.

'தவறிப்போன மரணம்' (பக்கம் 50) என்ற திகில் கட்டுரையானது தலைப்புக்குள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுரைக்குள் வரும் ஒற்றைக் கதாநாயகியான அந்தப் பெண்ணுக்கு இறுதியில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி கட்டுரை மீதான முடிவு இன்னும் நீள வேண்டும் என்ற மனோ பாவத்தை ஏற்படுத்தி நிற்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

'வியாபாரிகள் அற்றக் கடைகள்' (பக்கம் 60) என்ற கட்டுரையை வாசிக்கும் போது ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற ஒரு உணர்வு தொற்றிக்கொள்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் கூட பொருட்களை திருடிச் செல்கின்ற ஒரு சூழலில் வசிக்கின்ற எமக்கு இந்தக் கட்டுரை புதுமையான விடயத்தைச் சொல்லி நிற்கின்றது. இப்படியும் சாத்தியமா என்று நினைக்கத் தோன்றுகின்றது. 'பொய்யும் ஏமாற்றமும் களவும் ஊறிப்போன ஒரு சமூகத்தில் வியாபாரிகள் அற்ற கடைகள் என்ற கோட்பாடு வெறும் கனவாகவே இருக்கும். ஆனால் மனச்சாட்சியை மதித்து வாழப் பழகிக்கொண்டால் இதுவும் சாத்தியமே' என்ற நூலாசிரியரின் வரிகள் அந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, தான் கண்ட யதார்த்தத்தை சிறப்பாக முன்வைத்துள்ளார்.

'அதிசயத் தீவு' (பக்கம் 71) என்ற கட்டுரை கடல் கடந்து ஒரு குட்டித் தீவைப் பார்க்கப் போன விடயத்தைப் பேசுகின்றது. மினி பஸ்ஸின் அளவுகூட இல்லாத, குட்டியாக ஒரு வேனில் பறப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒன்பது பேரை மட்டுமே சுமந்து செல்லக்கூடிய ஒரு சிறிய விமானத்தில் குட்டித் தீவைப் பார்க்கப் பயணித்த கதையை நூலாசிரியர் பயம், பதட்டம், உற்சாகம் கலந்து முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரை முழுவதையும் வாசித்த போது 'அண்டாட்டிக்கா'வுக்கு அருகில் உள்ள 'ஸ்டீவர்ட் ஐலண்ட்' என்ற அந்த அழகிய தீவைப் நாமும் பார்த்துவிட்டு வந்தது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது. எல்லாற்றையும்விட இந்தத் தீவில் திருடர்களே இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி தருகின்றது.

'வீட்டைச் சுமந்து செல்லல்' (பக்கம் 115) என்ற கட்டுரையானது மிகவும் ஆச்சரியமான ஒரு தகவலைக் கூறி நிற்கின்றது. அதாவது நியூசிலாந்தில் வீடுகள், ஹோட்டல்கள் போன்றவை இடமாற்றம் செய்யப்படுகின்றதாம்.  நியூசிலாந்தில் வீடுகள் எப்போதும் நிலத்திலிருந்து கொஞ்சம் உயரமாக இருக்குமாம். அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்புக் கருதியே இவ்வாறு பலகை வீடுகள்  அமைக்கப்படுகின்றதாம். இப்படி நிலநடுக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் வீடுகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றுகிறார்களாம். நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் அமைந்துள்ள 40 விருந்தினர் அறைகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் கூட ஒரு தளத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறதாம். இதுபோன்ற தகவல்களை இந்தக் கட்டுரை எமக்கு எடுத்தியம்புகின்றது.

இலக்கிய இரசம் சொட்டும் இவருடைய எழுத்துக்கள், நிச்சயமாக வாசகர்களை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. பொதுவாக இவருடைய படைப்புகளை நோக்கும் போது அவை சமூகத்துக்குத் தேவையான, முக்கியமான கருத்துகளை முன்வைப்பதாகவே அமைந்துள்ளன. 'என் மேல் விழுந்த மழைத்துளிகள்' என்ற அனுபவக் கட்டுரைகளானது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்துள்ள இந்த நூலானது வாசகர்களான எமக்கு சிறந்த ஆலோசனைகளையும், நல்ல படிப்பினைகளையும் தருகின்றன என்பதைத் துணிந்து கூறலாம். எனவே இவருடைய இந்தக் கட்டுரைத் தொகுதி இலக்கிய வாசகர்கள் அனைவரையும் நிச்சயமாகக் கவரும். இருந்தாலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டியது தவிர்க்க முடியாதுள்ளது. நூல் வடிவமைப்பில் இன்னும் கூடிய கரிசனை காட்டியிருக்கலாம். அதிலும் குறிப்பாக பந்தி பிரித்தல் போன்ற முக்கியமான விடயத்தை நல்ல அவதானிப்புடனே செய்திருக்க வேண்டும். அடுத்த வெளியீடு இன்னும் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே இங்கு இதனைக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இறுதியாக தொடர்ந்தும் பல காத்திரமான இலக்கிய நூல்களை வாசகர்களுக்குத் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.

நூல் :- என்மேல் விழுந்த மழைத்துளிகள்
நூல் வகை :- அனுபவக் கட்டுரைகள்
நூலாசிரியர் :- மரீனா இல்யாஸ் ஷாஃபீ
வெளியீடு :- வளர்பிறை பதிப்பகம்
விலை :- 800 ரூபாய்



நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

156. 'இப்படிக்கு என் இதயம்' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

 மாவனல்லை பாத்திமா சில்மியாவின் 

'இப்படிக்கு என் இதயம்' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்


நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஏட்டுலா கனவாக்கத்தின் மூன்றாவது நூல் வெளியீடாக மாவனல்லையைச் சேர்ந்த பாத்திமா சில்மியாவின் 'இப்படிக்கு என் இதயம்' என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இவர் இலக்கியத் துறையில், அதிலும் கவிதைத் துறையில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஓர் இளம் தலைமுறைக் கவிஞராவார். 124 பக்கங்களை உள்ளடக்கியுள்ள இந்த நூலை சிறியதும் பெரியதுமான கவிதைகள், கவித்துளிகள் உட்பட 120 கவிதைத் தலைப்புகள் அலங்கரிக்கின்றன.

பக்கம் 29 இல் அமைந்துள்ள 'வெள்ளைச் சீருடை நாட்கள்' என்ற கவிதை பாடசாலைக் காலத்து நினைவுகளை மீட்டி மனதில் சந்தோஷத்தை நிறைக்கின்றது. எவ்வளவு  காலம் கடந்து போனாலும் பாடசாலைக் காலத்தை நினைக்கும் போது மனதில் ஒரு புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டு மனது சந்தோசத்தால் நிரம்பி வழியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உங்களின் இரசனைக்காக இந்தக் கவிதையின் வரிகள் இதோ:-

மீட்டிப் பார்க்கிறேன்
என் மனக் கண்ணில்
வெள்ளைச் சீருடையில் 
சுற்றித் திரிந்த - அந்தப் 
பொக்கிஷமான காலத்தை! 

அன்பான பரிமாறல்கள் 
செல்லச் சண்டைகள் 
குறும்பு சேட்டைகள் 
முடியக் காத்திருக்கும் 
பாடவேளைகள் 
பாசம் நிறைந்த கண்டிப்புகள்! 

புத்தகப்பை மட்டுமே 
சுமையாகத் தெரிந்த 
அழகிய நாட்கள் 
வராதோ மீண்டும் 
நம் வாழ்வில்!

தன்னைப் பெற்ற தாய்க்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த நூலில் தாய் பற்றிய 'அன்புள்ள அம்மாவுக்கு' (பக்கம் 32), 'கர்ப்பம் முதல் கல்லறை வரை' (பக்கம் 49) ஆகிய இரண்டு கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் பக்கம் 32 இல் அமைந்துள்ள 'அன்புள்ள அம்மாவுக்கு' என்ற கவிதை பெற்ற தாயின் தியாகத்தை இயம்புவதாய் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அன்பிற்கும் ஆதாரமாகத் திகழ்வது தாயின் அன்பாகும். தாயன்பிற்கு ஈடு இணை இல்லை. எத்தனை பெரியவர்களாக வளர்ந்த போதும் ஒரு தாய்க்கு தன் பிள்ளை குழந்தை போன்றே தோன்றும். தாய் பற்றிய தனது உள்ளத்து உணர்வை இக்கவிதையின் பின்வரும் வரிகளில் பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
என் சிரிப்பிலே மனம் மகிழ்ந்து
பசி தாகம் துறந்து களைப்பும் மறந்து
எனக்கெனவே அர்ப்பணித்த 
என் அன்பின் அன்னையே!

என் செய்வேன் - உனக்கான
கடன் அடைத்திட நான்
ஈடாகுமோ உன் சேவைக்கு
அவனியிலே ஏதும்!

இந்த உலகத்தில் எல்லோரும் இன்னொருவரை சார்ந்தே வாழ வேண்டி இருக்கிறது. நாம் அன்றாடம் காணும் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு புதிய பாடத்தை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு ஜீவராசியிடம் இருந்தும் ஒரு புதிய விடயத்தை நாம் தினமும் கற்றுக் கொள்ளும் படியே இயற்கை அமைந்திருக்கிறது. ஆம் அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயங்களில் இருந்தும் ஒவ்வொரு சம்பவங்களிலிருந்தும் சில பாடங்களைக்  கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கையை நாம் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். கவிஞர் 'கற்றுக்கொள்' (பக்கம் 33) என்ற தன் கவிதையில் கூறும் விடயங்கள் எமக்கும் நெருக்கமான விடயங்களாகவே அமைந்துள்ளன. கவிஞர், தனது அனுபவத்தில் தான் கண் கூடாகக் கண்டவற்றை பின்வரும் வரிகளினூடாக ஆழமாகப் பதிவு செய்கின்றார்.

பொறுமையைக் கற்றுக்கொள் 
எல்லா சுமைகளையும் தாங்கிடும் பூமியிடம்
விடாமுயற்சியைக் கற்றுக்கொள்
ஓயாது அலை வீசும் கடலிடம்!

சுறுசுறுப்பைக் கற்றுக்கொள் 
ஓய்வில்லாமல் இயங்கும் தேனீக்களிடம்
நம்பிக்கையை கற்றுக்கொள்
பசியுடன் சென்று
இறையுடன் கூடு திரும்பும் பட்சிகளிடம்!

அவதானத்தைக் கற்றுக்கொள் 
தொலைதூரத்திலிருக்கும் இரையை
இலக்கு வைக்கும் பருந்திடம்!

பக்கம் 35 இல் உள்ள 'வா - சிக்கலாம்' என்ற கவிதையின் மூலம், வாசிப்பு மழுங்கிப் போன இக்காலத்தில் இணையத்தில் மணிக் கணக்கில் மூழ்கி நேரத்தைக் கழித்துவிடும் மனோபாவம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கு முக்கியமான, மிகவும் அருமையான கருத்தை முன்வைக்கிறார் கவிஞர். வாசிப்பு என்பது இன்று செயல் வடிவம் அற்றதாக ஆகிவிட்டது. நூல் ஒன்றை பிரித்து வாசிக்கும் அந்த சுகானுபவம் இன்றைய இளையோர்களுக்கு இருக்கின்றதா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு தொலைபேசியும் இணையமும் மனிதர்களைத் தன்வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டது. இதிலிருந்து இனி உலகம் மீண்டுவிடும் என்ற நம்பிக்கைச் சுடர் அணைந்து விடும் காலம் வெகு தூரத்திலில்லை. அந்த ஆதங்கத்தை நூலாசிரியரின் கவிதை இவ்வாறு கோடிட்டுக் காட்டுகின்றது.

வாசிக்கலாம் என்கிறது 
புத்தகம்..
வா சிக்கலாம் என்கிறது 
கைப்பேசி..

ஒன்றில் நாம் 
தொலைந்து  விடுவோம்..
மற்றையது நம்மைத் 
தொலைத்து விடும்..

காகிதமோ தொடுதிரையோ 
சிக்குவது எதிலாயினும் 
பிரதிபலன் - பாவனை 
முறையைப் பொறுத்தே!

பக்கம் 68 இலுள்ள 'சாயங்கள் தருவாயா?' என்ற கவிதையானது அழகியல் பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் பாங்கு சிலாகிக்கத்தக்கது. தன் மனதில் தோன்றிய ஒரு உருவத்திற்கு இயற்கையிடம் வர்ணங்களைக் கேட்டு நிற்கின்றார் நூலாசிரியர். இவரது கற்பனைத்திறன் இந்தக் கவிதையினூடாகப் புலப்படுகின்றது.

மணக்கண் தோன்றிய ஓர் ஓவியத்திற்கு உருவம் கொடுக்க நினைக்கின்றேன்.. அதற்கு வர்ணம் தீட்ட சாயங்கள் மட்டும் இயற்கையிடம் வேண்டி நிற்கின்றேன்.. இரா வானின் இளவரசனாகிய பால் நிலாவிடம் கொஞ்சம்.. மங்கையவள் கயல் விழியின் கண்மணியிடம் கொஞ்சம்.. நறுமுகையோடு மலர்ந்திடும் செவ்விதழ் ரோஜாவிடம் கொஞ்சம்.. கற்பாறையைப் பிளந்து துளிர்விடும் இளந்தளிரிடம் கொஞ்சம்.. நீந்தும் மேகங்கள் நிலவிடும் நீலவானிடம் கொஞ்சம்.. பொழுது சாய பொற்கரம் நீட்டும் செங்கதிரவனிடம் கொஞ்சம்.. மழை மறைய மெல்லமாய் முகம் காட்டும் வானவில்லிடம் கொஞ்சம்.. இயற்கையுடன் ஒன்றித்த எனது ஓவியம் வெளுத்திடாதல்லவா..? என்று கவிஞர் கேட்கும் பாங்கு இரசிக்கத்தக்கது.

இது நூலாசிரியர் கன்னி முயற்சி. இனிவரும் காலங்களில் இன்னும் கனதியான கவிதைத் தொகுதிகளை இவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு, நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்!!!

நூல்                 - இப்படிக்கு என் இதயம்;
நூல் வகை         - கவிதை
நூலாசிரியர் - பாத்திமா சில்மியா
தொலைபேசி - 0758119819
வெளியீடு         - ஏட்டுலா கனவாக்கம்;
விலை         - 650 ரூபாய்