Saturday, October 6, 2012

33. குருத்துமணல் - கவிதைத் தொகுதி

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் `கன்னிக் கவிதை' என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வளியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் ஷஅன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை| என்கிறார்.

பாவாணர் அக்கரைப் பாக்கியன் குருத்துமணலில் ஒரு நண்டாக உலாவுதல் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஷஉணர்ச்சியின் வெளிப்பாடு கவிதை என்பார்கள். உள்ளத்தில் உள்ளது கவிதை என்றும் சொல்வார்கள். அவ்வாறெனில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி உண்டுதானே. உள்ளம் இருக்கின்றது தானே. ஏன் எல்லோரும் கவிதை எழுதுவதில்லை? என்பதெல்லாம் எமக்குள் எழும் வினாக்கள். கவிதை எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், அதனால் உந்தப்பட்டவர்கள் கவிதைகளைப் படிக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையாகத் தன்னிடமிருந்து பிரசவிக்கிறார்கள். இதனைத்தான் கவியரசு கண்ணதாசனும் படிக்க படிக்க வரும் கவிபோலே தினம் பழகப் பழக வரும் இசை போலே என்றும், ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா. இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா என எமக்குத் தந்த பாடல்களின் வரிகளிலே துல்லியமாகச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு தான் எமது கவிஞரிடமிருந்து வெளிப்பட்டது குருத்துமணல் கவிதைகள். கவிதைகளுக்குரிய படிமச் சிறப்பும், ஓசை நயமும் இவற்றில் உள்ளதை நாம் உணர்வோம் என்கிறார்.

இனி இப்றாஹீம் எம் றபீக் அவர்களின் கவிதைகளைச் சுவைத்துப் பார்போம்.

ஒரு பெண்ணாணவள் தாய்மையடைவதில் தான் பூரணமாகிறாள். பூரிப்பாகிறாள். குழந்தைச் செல்வம் இல்லாது போனால் வாழ்வே இருண்டது போல் ஆகிவிடும். மற்றவரிகளின் கேளிப் பேச்சுக்களாலும் முனசுடைந்து விடக் கூடிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறு உடைந்த ஒரு மனசின் ஓலம் (பக்கம் 17) பிரார்த்தனை என்ற முதலாவது கவிதையின் பின்வரும் வரிகளில் புலப்படுகிறது.

என் வாழ்வை எண்ணியெண்ணி
என்றும் நான் கலங்குகிறேன்
என் ஆசைக்கோர் குழந்தையின்றி
எந்நாளும் அழுகின்றேன்.

மாதர்கள் கூடி நின்று
மலடி யென் றழைக்கிறார்கள்.
அன்பிலோர் வார்த்தையின்றி
அனுதினமும் வதைக்கிறார்கள்..

ஆண்டவா எனக்கோர் மகவை
மடிதனில் நீ தர வேண்டும்.
அடியேன் குறைகள் தீர்த்து
அவனியில் வாழ வேண்டும்.

நித்தமும் சுத்தமாய் இரு (பக்கம் 27) என்ற தலைப்பில் அமைந்த கவிதை சுகாதாரம் பற்றி பேசுகின்றது. இன்று பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் சுகாதாரம் சுத்தம் இன்மையேயாகும். அதனால் டெங்கு, மலேரியா போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் சுத்தம், உடை சுத்தம் எவ்வாறு முக்கியமோ அதே போல் சூழல் சுத்தமாக இருப்பதும் அவசியம். அதை வழியுறுத்தும் கவிதை வரிகள் இதோ..

சுற்றுச் சூழலை
சுத்தமாக வைத்திரு
மா மனிதா - அச்
சூழல் உன்னை
சுத்தமாக வைத்திருக்கும்
மிக இனிதா
..........
டெங்கு வருவதை
தடுப்போம் மனிதா
அது சில நேரம் உயிரையும்
காவு கொள்ளும் பெரிதா

தண்ணீர் மனிதனுக்கு உயிர் போன்றது. ஆகாரம் இன்றி ஓரிரு நாட்கள் இருக்க முடியுமாக இருந்தாலும், நீர் இன்றி ஒரு மனிதனால் வாழ்வது மிக மிகக் கடினம். ஒரு சொட்டு நீருக்காக பல சண்டை சச்சரவுகள் நிகழ்வதைக் கூட கண்கூடாக காண இயலுமான காலகட்டம் இது. தண்ணீரின் பெருமை பற்றி பேசுகிறது தண்ணீர் (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை.

இயற்கையின் அருட்கொடைதான்
தண்ணீர்
அதை மாசுபடுத்தினால்
பொது நலவாதிகள்
விடுகின்றனர் கண்ணீர்
....................
அழுக்கான அத்தனையும்
தூய்மை செய்யும் தண்ணீர்
உன்னையும் என்னையும்
உயிர்வாழ வைப்பதும் தண்ணீர்

மக்கள் மனதில் மனதில் அன்பு ஊற்று வற்றிவிட்டதால் முதியோர்கள் அவசியமில்லை என்ற எண்ணம் தொற்றிவிட்டது. பெற்ற தாய் தந்தையர்களை வைத்து பார்க்க மனமில்லாததால் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன. கண் போல் காத்துவந்த பெற்றோரை நாம், கண் இமைக்குள் வைத்து காக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை சொல்லி நிற்கும் கவிதையாக முதியோர் இல்லங்கள் தேவையில்லை (பக்கம் 41) என்ற கவிதையைக் கொள்ளலாம்.

உன் கால்களால்
நீ உதைக்க
பாதங்களை
முத்தமிட்டாள் தாய்

இனிப்பூட்டிய
உன் தாய்க்கு - நீ
கசப்பூட்ட எண்ணாதே

உன் இதயக் கதவை
திறந்து கொள்
தாயை அதனுள் வைத்து
தாலாட்டப் பழகிக் கொள்

..........................
உன் தாயை முதியோர்
இல்லத்திற்கு அனுப்புவதை
நிறுத்திக்கொள்..

ஏனென்றால் உன்னை
உன் பிள்ளைகள்
அனுப்பத் தயங்காது...

கொடுத்த காசுக்கு மதிப்பாக இன்று பொருள் கிடைப்பது முயற்கொம்பாக இருக்கிறது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம். பாலில் நீரைக் கலக்கிறார்கள். அரிசியில் கல்லைக் கலக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவை இக்கலப்படங்கள். இவை தவிர இன்னும் எதிலெல்லாம் எதைக் கலக்கிறார்கள் என்பதை கலப்படக்காரன் (பக்கம் 47) என்ற கவிதை மூலமாக அறியலாம்.

பாலுக்குக்குள் நீரை
ஊற்றுகின்றோய்..
அதைப் பாடிப் பாடி விற்று
பையிலே பணத்தைப்
போடுகின்றாய்

சீனிப் பாகை தேன் என்று
சில மனிதர்களை
ஏமாற்றிப் பிழைக்கின்றாய்..

குரக்கனுக்குள் தவிட்டைக்
கலக்கிறாய்..

இவ்வாறான பல விடயங்களையும் தனது கவிதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியர் இப்றாஹீம் எம். றபீக் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர் - குருத்துமணல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இப்றாஹீம் எம். றபீக்
வெளியீடு - புதுப்புனைவு இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0715675585
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment