Thursday, October 31, 2013

50. நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.

நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.

சொந்தமில்லா பந்தங்கள் (பக்கம் 01) என்ற முதல் கதையின் தலைப்பே கதையை சொல்லிவிடுகின்றது. எந்த விதத்திலும் இரத்த சொந்தமே இல்லாத பிள்ளைகள் ஒரு பெண்மணியிடம் தஞ்சம் புகுகின்றன. அரக்கப்பரக்க அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்டு அப்பெண்ணின் இதயம் மிகவும் துன்பப்படுகின்றது. முகாமில் வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு மீண்டும் தன் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவளுடன் இருக்கும் இந்த மூன்று குழந்தைகளையும் அவள் அழைத்துப் போகலாம். ஆனாலும் தனக்கு ஏதாவது நடந்தால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று சிந்திக்கும் அவள் மூன்றாவது குழந்தையை மாத்திரம் தூக்கிக் கொண்டு மற்ற பிள்ளைகளிடமிருந்து துன்பத்துடன் விடைபெறுகிறாள். மற்ற இருவரும் அந்த அம்மம்மாவை குத்திட்டுப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதுதான் கதையின் பிரதான அம்சம்.

யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் என் தலைவிதி.

தலைவிதி என்றால் அதை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்துத்தான் இறைவன் எழுதுவானோ?

இந்த முட்கம்பி வேலிக்குள் சிறைப்பட்டிருக்கும் அனைவருக்குமே ஒரே தலையெழுத்து தானோ?| என்று இந்தக் கதையின் தொடக்கத்தில் கதாசிரியர் எழுதியிருக்கும் வரிகள் வலியை சுமந்து நிற்கின்றன.

திருப்பம் (பக்கம் 09) என்ற கதை கணவனை இழந்த பெண்ணின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. சந்திரமதி என்ற பெண்ணின் கணவன் அவளது கண் முன்னிலையிலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரைவிட்ட பின் அவளது வாழ்வு எப்படி பிரச்சனைகளுடன் கழிகிறது என்பதை அழகாக எழுதியுள்ளார் கதையாசிரியர். முகாமிலிருந்து வெளியேறிய பிறகு ஊறுகாய் போத்தல் விற்று தன் வருமானத்தைப் பார்க்கிறாள் அந்தப் பெண்.

ஒரு ஆண் துணையுமின்றி சைக்கிளில் அவள் போய் அவற்றை விற்பனை செய்வதைக் கண்டு சந்திரமதியின் தாயின் உள்ளம் தவிக்கிறது. சந்திரமதிக்கு மறுமணம் செய்து வைக்க முனைகிறாள் அந்தத் தாய். ஆனாலும் சந்திரமதியின் மனது அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவளது கணவனோடு அவள் வாழ்ந்த நாட்களை அவள் இன்னும் மறக்கவில்லை. ஆதலால் மறுமணம் என்ற பேச்சையே பேச வேண்டாம் எனத் தாய்க்கு உறுதியுடன் கூறுகிறாள். எனினும் அவளை குறிவைத்த பல கண்களை அவள் தினமும் காண்கிறாள். அவர்களிடமிருந்து தப்பித்து தன் மூன்று குழந்தைகளையும் அவள் இனி எப்படி வளர்ப்பாள்? என்ற கேள்வி வாசகருக்கு எழுகின்றது. ஆனாலும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராய் அவள் துணிவுடன் செயற்படுகிறாள் என்பது பெரும் ஆறுதலைத் தருகின்றது.

நினைவு நல்லது வேண்டும் (பக்கம் 17) என்ற மகுடக் கதையானது சாந்தினி என்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகத்தை எடுத்தியம்புகின்றது. அவளது கழுத்தில் பட்ட ஷெல் துண்டொன்று காலப்போக்கில் அவளுக்கு தாங்க முடியாத வலியைக் கொடுக்கின்றது. கொழும்புக்குப் போய்த்தான், அதற்குரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அதற்காக அவளிடம் செலவுக்குப் பணமுமில்லை. போய் வருவதற்கான துணையுமில்லை. அதனால் தமக்கென்றிருக்கும் காணியை விற்று தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சாந்தினியும், அவளது தாயும் கொழும்புக்கு வருகின்றனர். ஆனால் மொழிப் பிரச்சனையும், ஆட்களைத் தெரியாத பயமும் அவர்களை ஆட்கொள்கிறது. இறுதியில் ஒருவாறு வைத்தியசாலையை அடைந்து சாந்தினி அங்கே அனுமதிக்கப்படுகின்றாள். அங்கு தாதியாக தொழில் புரியும் ஒரு சிங்களப் பெண் மற்றவர்களை விழுந்து விழுந்து கவனித்தாலும், சாந்தினியைக் கண்டதும் கடுகடுப்பாகவே பேசுகிறாள். சாந்தினிக்கு இதுவொரு பெரும் மனக்குழப்பத்தைக் கொடுக்கின்றது.

அதாவது அந்தத் தாதியின் கணவன் யுத்த பூமியில் இறந்துவிட்டான். அந்த கோபத்தையே அவள் சாந்தினிக்கு காட்டுகிறாள் என்று அறிந்தபோது மிகவும் வருத்தப்படுகிறாள் சாந்தினி. சாந்தினியும் தன் இரு தம்பிகளை யுத்தத்தில் இழந்தவள்தான் என்று அந்தத் தாதி பின்பு அறிகின்றாள். அதற்குப்பிறகு அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகின்றது என்பதையும், யார் யாரோ செய்த தவறுகள் யார் யாரையெல்லாமோ பாதிக்கின்றது என்ற உண்மையையும் இக்கதை உணர்த்தி நிற்கின்றது.

விழித்திரு (பக்கம் 63) என்ற கதை பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவு பற்றிச் சொல்லுகின்றது. தனது தந்தை இறந்தவுடன், தனது தாயான மாலினியை திருமணம் செய்து கொள்வதால் பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு சித்தப்பாவாகின்றார் சிவநேசன். இவர் ஆரம்பத்திலேயே போரினால் ஒரு காலை இழந்தவர். அதனால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாது என்பதால் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். மாலினியும் தூர இடத்துக்கு கூலி வேலைக்கு செல்வதால் கணவனின் பொறுப்பிலேயே பிள்ளைகளை விட்டுச் செல்வது வழக்கம். முதலில் எந்தவித சலனங்களும் இல்லாதிருந்தபோதும், பிருந்தா பதின்மூன்று வயதில் பருவமடைந்த பின்பு சிவநேசனின் நடவடிக்கைகள் மாறிப் போகின்றது. சொந்தத் தகப்பன்களே இக்காலத்தில் பிள்ளைகளை வேட்டையாடும்போது சித்தப்பா எம்மாத்திரம்? வேலியே பயிரை மேய்கின்றது.

இது பற்றி தாயிடம் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றான் சித்தப்பன். சில நாட்களுக்குள் தனது மகள் கர்ப்பமான விடயத்தை மாலினி அறிந்து துடிக்கின்றாள். பின்பு இரவு முழுவதும் யோசித்துவிட்டு பிருந்தாவின் கருவைக் கலைப்பதற்காக மாலினி பிருந்தாவை அழைத்துச் செல்கின்றாள். தனக்கு என்ன நடந்தது? ஏன் தாய் இங்கே அழைத்து வந்தாள் என்றுகூட தெரியாமல் பிருந்தா யோசிக்கின்றாள். அவ்விடத்தில் பப்பாசிக்குழாய், சைக்கிள் சில்லுக்கம்பி ஆகியவற்றின் மூலம் மூடத்தனமான வைத்திய முறை நடக்கின்றது. சிறிது நேரத்தில் பிருந்தா என்ற சின்னப் பூ இறந்துவிடுகின்றது.

போர் தந்துவிட்டுப் போன காயங்கள் ஏராளம். அவற்றை சொல்லில் வடிக்க முடியாது. ஆனாலும் சமூகம் எதிர்கொண்ட சோகங்களை தன் பேனாவால் கதையாக்கித் தந்திருக்கும் ப. விஷ்ணுவர்தினி பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நினைவு நல்லது வேண்டும்
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ப. விஷ்ணுவர்த்தினி
விலை - 250 ரூபாய்
வெளியீடு - ஜீவநதி வெளியீடு

49. நினைவுகள் அழிவதில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய எனது பார்வை

நினைவுகள் அழிவதில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய எனது பார்வை

1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து  மேடும் பள்ளமும்  என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார்.

1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.

உழைக்கும் தொழிலாளியான விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டும், எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும், தமிழ்ப் போராட்டக் குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புக்களையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இவரது படைப்புக்கள்  யாவும் புனையப்பட்டுள்ளன. இவர் தனியல்லன். சுரண்டலையும், சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் ஆவார்.

சிறுகதைகளை நல்ல முறையில் படைக்க வேண்டும் என்றால் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களின் கதைகளை நாம் வாசித்திருக்க வேண்டும். அவ்வாறு வாசித்திருந்தால்தான் இளந்தலைமுறையினர் காத்திரமான கதைகளைப் படைக்க இயலும். அவ்வாறானதொரு காத்திரமான தொகுதிகளின் ஆசிரியர் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் விளங்குகின்றார்கள்.

நினைவுகள் அழிவதில்லை என்ற இத்தொகுதியில் பத்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன. நீர்வை பொன்னையன் அவர்கள் தன் இளமை வயது தொடக்கம் தனக்கென்ற தனிக் கொள்கையுடன் வாழ்ந்தவர், வாழ்ந்து வருபவர் என்பதை அவரது பல சிறுகதைகள் சுட்டி நிற்கின்றன. தலைசிறந்த ஒரு தலைவராக, மனித நேயம் மிக்க ஒரு மனிதராக அவர் இன்றும் எம்மத்தியில் காணப்படுகின்றார். அவரது கதைகளில் வரும் பாத்திரப் படைப்புக்கள் கூட, கோழைகளாக வாழாமல் துணிச்சல் மிக்க வீரர்களாக வாழ வேண்டும் என்ற அச்சமின்மையை வாசகர்களிடம் தோற்றுவிக்கின்றது.

நினைவுகள் அழிவதில்லை என்ற முதல் கதையானது ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான உரையாடலாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. கதையின் வர்ணனைகளில் அலாதி சிறப்புக்கள் காணப்படுகின்றன. முதலாவது மொழிநடை. அடுத்து உவமானங்கள். மொழிநடைகள் ஏனையவர்களின் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக காணப்படுகின்றது.  அதாவது இந்திய சிறுகதைகளை வாசிக்கும் உணர்வை இக்கதை ஏற்படுத்துகின்றது. நமஸ்கார் பாபுஜி என்ற முதல் சொல்லாடலே அக்கருத்தை வலியுறுத்திவிடுகின்றது. அதுபோல ஷகடலலையாய் நீண்டு வளர்ந்த கூந்தல்| என்ற உவமானம் சற்று வித்தியாசமான ரசனையை தோற்றுவிக்கின்றது. கார்மேகக் கூந்தல் என்பதுதான் வழமையான உவமானமாக இருப்பதால் மனதில் இது பதிந்துவிட்டதெனலாம். மெல்லிய காதல் உணர்வுகள் இக்கதையில் இழியோடியபோதும் கூட, இறுதியில் தோழமை உணர்வினால் அது இல்லாமல் போவதை உணர முடிகின்றது.
குருஷேத்திரம் என்ற கதை மிகவும் நயக்கத்தக்கதாகவும், ஹாஸ்ய உணர்வு கலந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. கந்த புராணப் படிப்புப் போட்டி ஒன்றிற்காக இரண்டு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.

முதல் தரப்பினர் பல வருடங்களாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருபவர்கள். இரண்டாவது கூட்டத்தினருக்கு இந்த முறை அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சந்தர்ப்ப வசத்தால் கிடைக்கின்றது. கிடாய் விசுவன் பெரிய தைரியசாலி போல போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கின்றார். ஏனையோருக்கு அச்சம். என்ன நடக்கப்போகிறதோ என்ற அவஸ்தையில் அவர்கள் தவித்திருக்க விசுவன் ஒரே ஒரு விடயத்தைத்தான் எதிரணியிடம் கேட்கின்றான். அதாவது, 'என்னையா? சீ இப்படியா பாட்டை வாசிக்கிறது? அந்தப் பாட்டைத் திருப்பி வாசியும்' என்கின்றார். இதுவரை காலமும் முதலிடம் பிடித்து வந்த குழுவினர் திகைக்கின்றனர். அவர்களுக்கு வியர்த்துவிடுகிறது. வெற்றிப் புன்னகையுடன் விசுவன் தன் நண்பர்களை நோக்கி வருகின்றான்.

இத்தனைக்கும் விசுவன் ஒரு எழுத்துத் தானும் படித்தவனில்லை என்பதை ஷஒருவரி கூட உனக்கு வாசிக்கத் தெரியாது. அப்படிப்பட்ட உன்னாலை இதை எப்படி சாதிக்க முடிஞ்சுது?| என்ற நண்பர்களின் கேள்வி மூலம் கதாசிரியர் வாசகருக்கு உணர்த்துகின்றார். வெற்றி எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விசுவன் இவ்வாறு விடையளிக்கின்றான். ஷஅவை கையாண்ட யுக்தியைத்தான் நான் அவையளுக்கெதிராய் பாவிச்சன்|.

இன்றைய சூழ்நிலையில் மக்கள் நீதி நேர்மை, கடமை என்ற எல்லாவற்றையும் மறந்து விட்டிருக்கிறார்கள். அன்பு, பிணைப்பு என்பதற்கெல்லாம் இன்று சக்தியே இல்லாமல் போய்விட்டது. பணம்தான் அனைத்து தரப்பினரையும் ஆட்சி செய்கின்றது. நீதி என்ற கதையும் அவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட ஒரு விடயம் பற்றியே பேசுகிறது.

பேதிரிஸ் முதலாளியின் மதுக்கடைக்கும், பேரம்பலம் முதலாளியின் நகைக் கடைக்கும் இடைநடுவே ஐந்தடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட ஒரு பரப்பில் வேலு என்பவன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றான். முதலாளிமார் இருவருக்கும் வேலுவை எப்படியாவது இவ்விடத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம். பலவாறு முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. தருணம் பார்த்து அவர்கள் காத்;திருக்கின்றனர். ஒருநாள் மழை பொழியும் நேரம். பேதிரிஸ் முதலாளி வேலுவை அழைத்து தனது கடையின் பெயர்ப் பலகை சரிந்துள்ளதாகவும், அதை சரிசெய்துதரும் படியும் கூறுகின்றார். அதற்கு வேலு தற்போது மழை பெய்கிறது என்பதால் கூரை ஈரலிப்பாக இருக்கும் என்பதாகவும், தான் நாளைக்கு அதை சரி செய்து விடுவதாகவும் கூறுகின்றான். அதிகார வர்க்கம் எல்லா இடங்களிலும் இருக்கின்றதுதானே. இப்போதே பலகையை சரி செய்து விடுமாறும், இல்லையேல் வேறு வழியை, தான் பார்ப்பதாகவும் பேதிரிஸ் முதலாளி மிகவும் கடுப்பாக கூறியதால், வேலு வேறு வழியின்றி கூரைக்கு மேல் ஏறுகின்றான். சற்று நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் கதறிக்கதறி வேலு இறந்துவிடுகின்றான்.

இதை அறிந்த வேலுவின் மகன் மாதவன் பொலிஸில் முறைப்பாடு செய்யும் போது அவனுக்கு நஷ்டஈடு தருவதாக பொலிஸ் அதிகாரி பேதிரிஸ் முதலாளிக்கு சார்பாக பேசுகின்றார். கதையின் இறுதிக் கட்டம் மனதை சல்லடையாக்குகின்றது. நெஞ்சுக்குள் வலியெடுக்கின்றது.

'நகைக் கடையை உடைத்துத் திருட முயன்ற செருப்பு தைக்கும் தொழிலாளி வேலு மின்சாரம் தாக்கி மரணம்' என பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் செய்திப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இந்தக் கதை என்னை மிகவும் பாதித்தது. யதார்த்தங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்பதை கதாசிரியர் நன்கு உணர்த்தியிருக்கின்றார்.

இன்றைய மாணவர்கள் மட்டுமல்ல அக்காலத்து மாணவர்களும் சேட்டை மிகுந்தவர்கள் என்பதை அவன் என்ற கதை சொல்கின்றது. வீரசிங்கம் என்ற மாணவன் வகுப்பில் குழப்படியாயிருந்து பின்பு பொலிஸ் அதிகாரியாக ஆன கதையை சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள். வளரும் பயிரை முளையில் தெரியும் என்றாலும் காலம் யார் யாரை எப்படி மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது. நன்றாக படித்தவர்கள் திருடர்களாக இருக்கின்றார்கள். குறும்புத்தனமாக இருந்தவர்கள் பொறுப்பான பதவியில் இருக்கின்றார்கள். எனவே யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இக்கதை வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு மோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கதையை அக்கரைப் பச்சை என்ற சிறுகதை விளக்குகின்றது. மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு மகனை கனடாவுக்கு அனுப்பி வைக்கின்றார் தேவநாயகம். பிறகு மகனின் அன்பு வற்புறுத்தலால் அவரும், மனைவியும், ஒரே மகளும் கனடாவுக்கு செல்கின்றனர். மகள் அங்குள்ள சுப்பர்மார்க்கட் ஒன்றில் தொழில் புரிகின்றாள். சில காலத்தின் பின் கனடா அரசாங்கத்தில் அகதிக் காசு வாங்குவதற்காக மூவரையும் தன் காரில் அழைத்துச் செல்கின்றான் மகன். தந்தை தேவநாயகம் அந்த அகதிக் காசை பிச்சைக் காசாகவே எண்ணுகின்றார். மனம் ரணமாகின்றது. வெட்கம் அவரை பிடுங்கித் தின்கின்றது. மனைவியும், மகளும் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதில் அக்கறை காட்டாதிருக்கவே தேவநாயகம் மீண்டும் தாயகம் திரும்பி விடுகின்றார். வீட்டுத் திறப்பு முன்வீட்டு ஓடிட்டரிடம் இருக்கின்றது. அவர் வெளியில் சென்றிருப்பதால் தேவநாயகம் ஒடிட்டர் வரும் வரை காத்திருக்கின்றார். அப்போது எதிர்பாராத விதமாக தேவநாயகத்தின் சகோதரியும், அவளது கணவனும் வருகின்றனர். அவர்கள் கூறிய கூற்றிலிருந்து, தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மை தேவநாயகத்துக்கு விளங்குகின்றது.

அதாவது தேவநாயகத்தின் மனைவியின் பெயரில் இருந்த காணியை, அவள் தேவநாயகத்துக்கு தெரியாமல் ஓடிட்டருக்கு விற்றுவிட்டாள். தற்போது அவளும், மகளும் கனடாவில் மகனுடன் இருக்கின்றனர். அவர்களது வெளிநாட்டு மோகம் தேவநாயகத்தை அநாதையாக்கி விடுகின்றது. உழைப்பை நம்பி வாழும் அவரது சகோதரியும், மச்சானும் இவரை அழைக்கின்றனர். அவர்களுடன் தேவநாயகம் புறப்படுவதாக கதை நிறைவடைகின்றது.

இன்று இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்கின்றன. எல்லா விடயங்களும் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுவதில்லை. சமூக அவலங்கள் இவ்வாறு வெளிப்படுமானால் அதுவே சிறந்த சிறுகதைகளுக்கு உதாரணமாகும். திரு நீர்வை பொன்னையன் அவர்கள் இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நூலின் பெயர் - நினைவுகள் அழிவதில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - நீர்வை பொன்னையன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய் 

Tuesday, September 3, 2013

48. குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா அவர்களின் 'குதிரைகளும் பறக்கும்' என்ற கன்னிச் சிறுகதைத் தொகுதி 127 பக்கங்களில் 12 சிறுகதைகளை உள்ளடக்கி கொடகே பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

குதிரைகளும் பறக்கும், குறியீடுகள், நிலா இல்லாத பௌர்ணமிகள், கோணல் சித்திரங்கள், அட்டைகள், முற்றுப்புள்ளி, சலனம், கனவுகளுக்கு விடுமுறை, இன்னொரு ஹிரோஷிமா, இட்லரின் இடைவேளை, பிளெக் மெஜிக், நகர்வு ஆகிய 12 கதைகள் இதில் காணப்படுகின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் கற்பனைகள் கலக்காதபடி மிகத் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டும், அவர்களின் வறுமை நிலையை புடம்போட்டுக் காட்டக் கூடியதாகவும் இச்சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


குதிரைகளும் பறக்கும் என்ற முதல் கதை தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளை தலை நகரங்களில் வீட்டு வேலைக்கு விடும் விடயம் பற்றிப் பேசுகிறது. அதில் கார்மேகம் என்பவனுடைய மகள் கோமதி அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள தங்க நகையை திருடிவிட்டதாக அந்த வீட்டு எஜமானி குற்றம் சுமத்துகின்றாள். ஏழைகள் என்பதால் எதையும் பேசி மனதைப் புண்ணாக்கும் எஜமானர்களின் சுயரூபம் தெளிவாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

'ஓ பச்சக் கொழந்தயா இவ? பச்சக் கொழந்தக்கி ஒரிஜினல் நகைய எடுத்து ஒழிச்சு வச்சிக்கிட்டு கொண்டு போக தெரயுமா?' என்ற வீட்டு எஜமானி கேட்கும் கேள்வியில் எத்தனை இளக்காரம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

'அம்மா.. ஒங்க கதைய நிப்பாட்டுங்க. நாங்க ஏழைகள்தான். எவனையும் ஏமாத்தி பொழப்ப நடத்தல. முடிஞ்ச மட்டும் நேர்மையாக இருக்கோம். பசி பட்டினியா இருந்தாலும் எங்கயும் நாம ஓடிப் போகல' என்று கார்மேகம் சொல்வதிலருந்து கோமதியினதும், கார்மேகத்தினதும் மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

கதை இறுதியில் தனது கணவரிடம் கொடுத்திருந்ததையும், அதை மறந்துவிட்டுத்தான் கோமதியை சந்தேகப்பட்டாள் என்றும் கதாசிரியர் உண்மையை வெளிக்காட்டுகின்றார்.

அட்டைகள் என்ற சிறுகதையானது களுத்தறை மாவட்டத்தின் மத்துகம டவுனுக்கு அருகேயுள்ள கிராமப்பற பாடசாலையின் அவலத்தை மிகச் சரியாக சுட்டிக்காட்டுகிறதெனலாம். ஆப்தீனும், இமாமும் காரில் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர்.

வழியில் ஒரு மூதாட்டியிடம் விசாரித்ததும் இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும் என மூதாட்டி சொல்கிறார். சற்று நேரத்தில் ஒரு கடைக்காரரிடம் நியுபோட் வத்த எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது அவன் இடத்தை கூறிவிட்டு ஒரு கட்டத்துக்கு மேல் காரில் பயணிக்க முடியாது என்று சொல்கிறான்.

கொஞ்சதூரம் காரில் செல்லும்போது பாதையில் நிரம்பியிருந்த நீர்நிலைகளிலும், குழிகளிலும் காரின் சில்லுகள் தடம் புரள்கின்றன. இமாம் ஆப்தீனிடம், 'இதுக்கு மேல போனா கார பஞ்சிகாவத்தக்கி குடுக்கோணும்' என்று சொல்லியிருக்கும் பதில் நகைச் சுவையாக இருப்பதுடன் பாதையின் சீரற்ற தன்மையையும் கண்முன் நிறுத்துகிறது.

அதுபோல ஆப்தீன், இமாம் ஆகியோரின் பிரதேச வழக்கில் அமைந்த பேச்சை நூலாசிரியர் அழகாக சொல்லியிருக்கும் பாங்கு அவர் பல்வேறுபட்ட மக்களுடனும் பழகுகின்றார் என்பதைக் காட்டி நிற்கிறது.

மழை நீர் மண்ணை பிரட்டிக் கொண்டிக்கும் நிலையை பால்தேத்தண்ணி போன்ற நிறம் என்ற உவமானத்துடன் சொல்லியிருப்பது ரசிப்புக்குரியது.

சப்பாத்துக்களில் நீர், சகதி எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு இருவரும் ஒருவாறு மலையுச்சியை அடைகின்றனர். அப்போது சாரம், பத்திக் சட்டை அணிந்து விரைவாக வரும் ஒருவரிடம் 'ஸ்கூல் எங்க இருக்கி?' எனக் கேட்டதும் அவர் இடத்தைக் காட்டிவிட்டு ஏன் என்று கேட்கின்றார். ஆப்தீனுக்கு அவரது கேள்வி வியப்பாக இருக்க பதிக் சட்டைக்காரர் அதற்கான விளக்கத்தை தானே சொல்கிறார்.அதாவது மழைக்காலம் என்றபடியால் அட்டைகள் நிறைய வருகின்றன. ஆதலால் ஸ்கூல் முடப்பட்டுள்ளது என்றதோடு அவசரமாக விடைபெற்றுக்கொள்கின்றார். இமாமுக்கும், ஆப்தீனுக்கும் பெரிய அதிர்ச்சி. அங்கே சிறியதொரு மாரியம்மன் கோவிலும், சில மனிதர்களும் காணப்படுகின்றனர். அவர்களிடம் பாடசாலையின் நிலை பற்றி விசாரித்தபோது அவர்கள் இப்பாடசாலை குறித்த தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். கல்வி கந்தோருகள், அரசியல் வாதிகள் என்று சொன்னாலும் இதற்கொரு தீர்வில்லை எனவும், அதிபர் விரும்பிய நேரம் பாடசாலை மூடம்படும் என்றும் ஊர்வாசிகள் கூறுகின்றனர். அதிபரின் வீடு எங்கே என ஆப்தீன் கேட்டதற்கு தூரத்தில் காணப்பட்ட கெசட், சீடி போன்றவற்றை விற்கும் கடையை அதிபர் நடத்துவதாகவும், பாடசாலை பையன்களை உதவியாக வைத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

என்ன அதிசயம். பத்திக் சட்டை போட்டவரை காட்டி 'ஐயா அந்தா போறாரு. ஸ்கூல் பிரின்சிபலு' என்று சொல்கின்றனர். இவற்றையெல்லாம் கண்காணித்துவிட்டு ஆப்தீன் சென்று ஒரு கிழமையில் அதிபரை தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யபட்டுள்ளதாக 'மேல் மாகான கல்வி அதிகாரி ஆப்தீன்' என கையெழுத்திட்டு அதிபருக்கு கடிதம் அனுப்புகிறார். விசாரணையின் போது அதிபர் பை நிறைய ரம்புட்டான் கொண்டு வந்து ஆப்தீனுக்குக் கொடுக்கப்போய் அதன் காரணமாக நிரந்தர சேவை நிறுத்தம் பெற்றதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அட்டைகள் ஒரு மனிதனின் இரத்தத்தை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதே போலத்தான் இந்த அதிபரைப் போன்ற சில அட்டைகளும் மாணவர்களின் நல்ல எதிர்காலத்தை உறிஞ்சி விடுகின்றன. அதிபருக்கு கிடைத்த தண்டனையானது பாடசாலைகளில் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாகவும். பாடமாகவும் அமைந்துள்ளது. அதிபர்கள் பொறுப்பின்றி இவ்வாறு நடந்து கொள்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகின்றது. சமூகத்தில் இன்று அநீதமாக நடக்கும் இது போன்ற விடயங்களை கதாசிரியர் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

இட்லரின் இடைவேளை என்ற கதை சமூகத்தினர் நன்கு அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு விடயம் பற்றிப் பேச முனைகிறது. முத்து என்பவனே இந்தக் கதையில் வரும் இட்லர் ஆவான். இட்லர் எத்தனைப் பேரின் வாழ்வை சிதைத்தவன் என்பதை வரலாறுகள் இயம்பி நிற்கின்றன.
முத்து என்பவன் மலையக சமுதாயத்தில் உலாவும் ஒரு விஷக்கிருமி. என்னவென்றால் மலையகத்தில் வாழும் குடும்பத்தில் உள்ள சிறுமியர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தொழில் அவனுடையது. பொய், புரட்டல்களைக் கூறி ஆசை வார்த்தைகளைக் காட்டி நகர்ப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு கொண்டுபோய் விடுவான். எனினும் அதன் பிறகு அந்த வீடுகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களைக் கூட அந்த வீட்டு எஜமானிடம் இருந்து காசு பெற்றுவிட்டால் அதனை மறைத்துவிடும் பேர்வழி அவன். அப்படிப்பட்டதொரு கொள்கை உடைய அவன் தனது மகளை உயர்தரம் வரை படிக்க வைக்கின்றமை கதைப் போக்கின் வளர்ச்சிக் கட்டமாகும். எனினும் ஒருநாள் அவன் எதிர்பாராத விதமாக மகளின் உபதேசத்துக்கு ஆளாகின்றான். மகளும், மனைவியும் இந்த இழிதொழிலை விட்டுவிடுமாறு கெஞ்சுகின்றனர். அதன் காரணமாக கொஞ்ச காலத்துக்கு இந்த தொழிலை விட்டுவிட்டு பிறகு தொடரலாம் என்று முத்து எண்ணுகிறான். இதைத்தான் இட்லரின் இடைவேளை என்ற கதை சொல்லி நிற்கிறது.

இப்படியாக பல உண்மை நிகழ்வுகளை வாசர்கள் அறியும் பொருட்டும், விழிப்புணர்வூட்டும் வகையிலும் சிறுகதைகளாக எழுதியுள்ள சேனாதிராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புக்களைத் தந்து வெற்றி பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - குதிரைகளும் பறக்கும்
நூலாசிரியர் - பதுளை சேனாதிராஜா
ஈமெயில் - gsenathy06@gmail.com
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

47. ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விசித்திரமான மனித மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் மனிதனின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்தது. மந்திர தந்திரங்களால் அதற்கு தீர்வு காணப்போய் மாட்டிக் கொண்ட வரலாறுகளும் இதற்குச் சான்று. ஒரு உளவியலாளரின் ஆலோசனைகள் இதற்கு புறம்பானவை. அவை பெரும்பாலும் மனிதனின் ஆழ் மனதை சம்பந்தப்படுத்தி நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்து வைத்தியம் செய்வதால் அந்த வைத்தியம் சாத்தியப்பாடானதாக அமைகின்றது.

நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களால் அத்தகையதொரு உளவியலாளரைப் பற்றிய ஒரு புத்தகம் அண்மையில் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. ஒரு ஈரு நெஞ்சனின் உளவியல் உலா என்ற தலைப்பிட்டு அல்ஹாஜ் யு.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

உளவியலாளர் ஆன்மீகவாதியாகவும், இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அளப்பரிய சாதனைகளை தொட்டு விடுவதும் உண்மை. அந்த அடிப்படையில் நௌபர் அவர்களும் தனக்கு அல்லாஹ் கொடுத்த மன வலிமையின் பிரகாரம் பலருக்கு தன்னால் இயன்ற அளப்பரிய சேவைகளைச் செய்து வருகின்றார்.

நௌபர் அவர்களின் உளவியல் சம்பந்தமான முழு விபரங்களும் இந்தத் தொகுதியல் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அவரது வைத்தியத்தின் மூலம் குணமாகியவர்களின் கருத்துக்களும் இந்தத் தொகுதியில் உள்வாங்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பு எனலாம்.

சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்தூல் 550 பக்கங்களை உள்ளடக்கி உளவியல் துறை சார்ந்த மேற்படிப்புகளில் நௌபர் அவர்கள் பெற்ற சான்றிதழ்களும் சான்றாதாரமாக இதில் அச்சாகியிருக்கின்றதுடன் முக்கியமான புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன.

ஷஉளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனிதனின் மன செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் இயலாகும். இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளோரை உளவியலாளர்கள் என அழைக்கிறோம். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்சானிகள் என அழைக்கப்படுவர்| (பக்கம் 54) என உளவியலாளர்கள் பற்றியும், உலகில் தலை சிறந்த உளவியல் அறிஞர்கள்; பற்றியும் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் தனது பரந்துபட்ட தேடல்களை எமக்கு வழங்கியிருக்கின்றார். எனவே அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஆளுமைகள் பற்றி அலசுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

நௌபர் அவர்கள் தனது பேணுதலான இறை பக்தியின் மூலமும், தன்னுடைய உளவியல் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டவர். சின்ன வயதிலிருந்தே பிரார்த்தனை மூலம் அல்hஹ்விடம் எதனையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. எந்தளவுக்கென்றால் தான் சிறுவனாக இருந்தபோது முதல் தவணையில் அவர் வகுப்பில் இரண்டாவது நிலை பெறுகிறார். அடுத்த தவணையில் முதல் நிலை பெற வேண்டும் என நினைப்பது சர்வ சாதாரணமான விடயம். ஆனால் இதில் பொதிந்துள்ள ஆச்சரியம் என்வென்றால் அவர் தனக்கு இன்ன இன்ன பாடங்களில் இத்தனை புள்ளிகள் வர வேண்டும், சராசரி நிலைப் புள்ளி இத்தனைதான் இருக்க வேண்டும் என்று கேட்டு பிரார்த்தித்தார். என்ன ஆச்சரியம் அடுத்த தவணையில் தான் கேட்ட அதே புள்ளிகள் அச்சு அசலாக அதே அளவில் வந்திருந்ததை இறைவன் அருள் இல்லாமல் வேறென்ன என்பது?

சிலபொழுதுகளில் அவர் காணும் கனவுகள் உண்மையாகவே நிகழ்ந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் அவரது உள்ளத்தில் தானாகவே உதித்திருக்கின்றன. அவை பற்றிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. கௌரவ ரணில் அவர்கள் பிரதமராகி இரண்டு வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடும், சுனாமிப் பேரலை பற்றிய எதிர்வு கூறல் போன்றவற்றை நௌபர் அவர்கள் முன்கூட்டியே கூறி இருக்கின்றார். அவை நடந்து முடிந்த விடயம் என்பதும் நாமறிந்ததே. அத்துடன் கர்ப்ப கால உபாதை, முள்ளந்தண்டு பாதிப்பு, தெளிவற்ற கண்பார்வை, பித்தப்பைக் கல், இதயத்தில் துளை, வயிற்றுப் புண் இன்னும் பல நோய்கள் என்று வந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை மூலம் சிகிச்சையளித்து குணமாக்கிய அதிசய ஆன்மீக சக்தி நௌபர் அவர்களிடம் இருக்கின்றது.

இலங்கையில் நமது இஸ்லாமிய சமூகத்தில் பக்தியை மாத்திரம் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்டு, இல்லாதவர்களுக்கு உதவி வரும் நௌபர் அவர்களை ஈருநெஞ்சன் என புன்னியாமீன் அவர்கள் விளித்திருப்பது சாலப் பொருத்தம். நௌபர் அவர்களைப் பற்றி அறியத் தந்த கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களையும், பிறர் நலனையே தன்னலனாகக் கொண்டு வாழ்ந்து வரும் மகான் அல்ஹாஜ் நௌபர் அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று பிரார்திக்கிறேன்!!!

நூலின் பெயர் - ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா
நூலாசிரியர் - கலாபூஷணம் புன்னியாமீன்
தொலைபேசி - 0812493749
வெளியீடு - சிந்தனை வட்டம்
விலை - 880 ரூபாய்

Friday, July 5, 2013

46. பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்தவர். முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான 'முஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்' என்ற கட்டுரை 1961 இல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் எம்.எம்.எம். யூசுப் நினைவுகள் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள் ஆகிய 03 நூல்கள் இவரால் எழுதி வெயிடப்பட்டுள்ளன. 2013 இல் இவர் எழுதிய பூவும் கனியும் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது.

முதலில் புத்தகத்தை பிரித்தால் அதனுள்ளிருக்கும் வசீகரத்தன்மை மனதை ஈர்த்து விடுகிறது. வர்ணத் தாள்களில் அச்சாக்கப்பட்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதற்கு அது உறுதுணை புரிகிறது என்பது உண்மை. 


சிறுவர்களிடம் இறை அச்சத்தை, இறை பக்தியை வளர்க்க வேண்டியது பெற்றோர்கள் மாத்திரமல்ல. உங்களை, எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் அது கடமையான விடயம். விசேடமாக சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தனது முதல் பாடலாக அல்லாஹ் என்ற தலைப்பிட்டு அத்தாஸ் அவர்கள் எழுதியிருப்பது, அல்லாஹ்வே முதன்மையானவன் என்பதை குழந்தைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் உணர்த்தி நிற்கின்றது.

இணையில்லா ஒருவனே அல்லாஹ்
இகம் தனைப் படைத்தவன் அல்லாஹ்
இறைவன் அவனே அல்லாஹ்
இனிதே வணங்குவோம் அல்லாஹ் 

என அந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு அடுத்தாக அவனது தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே நாம் நேசிக்கின்றோம். உத்தம நபி என்ற பெயரில் அமைந்திருக்கும் இரண்டாவது கவிதை அத்தாஸ் அவர்கள், குழந்தைகளின் மனதை இஸ்லாத்தின் பால் திசை திருப்புவது பற்றி உணர்ந்தவர் என்பதை எமக்கு காட்டி நிற்கின்றது. அந்தப் பாடலின் சில வரிகள் இதோ..

அல்லாஹ் அருளிய வேதம் தனை
அகிலத்தாருக்கு சொன்ன நபி
அல்குர்ஆனில் மொழிந்தபடி
வாழ்வில் செயலில் காட்டும் நபி

அகிலத்தை படைத்த அல்லாஹ் அதில் எமக்கு உற்ற துணையாக, பாதுகாப்பு அரணாக படைத்திருப்பது நமது தாயைத்தான். அதனால்தான் தாயின் பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது என்ற மேன்மையை எமக்கு அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். தூய நேசம் கொண்ட தாயின் புகழை மூன்றாவது பாடலில் பதிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

தந்தையின் நிழலில் வளரும் குழந்தைகள் தரணியில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறின்றி தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆனால் தாயும், தந்தையும் முதுமைப் பருவத்தை அடைந்ததும் எத்தனைப் பேர் அன்பாக, ஆதரவாக அவர்களைக் கவனிக்கின்றார்கள்? இன்றைய சமுதாயம் பணம், பட்டம், பதவி என்பவற்றில்தான் அதிக அக்கறை காட்டுகின்றதே தவிர பாசத்தில் அல்ல. தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை எனது அப்பா என்ற பாடலில் நூலாசிரியர் பின்வருமாறு சொல்லியிருக்கின்றார்.

எங்கள் அப்பா நல்லவர்
எல்லாம் சொல்லித் தருபவர்
எங்கும் கூட்டிச் செல்பவர்
எவரும் விரும்பும் உயர்ந்தவர்

சின்ன வயதிலிருந்து இன்றுவரை ராஜா ராணி கதைகள் கேட்பது சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை எமக்கு குழந்தைப் பருவத்திலே ஊட்டியவர்கள் எமது பாட்டி, பாட்டன். எனவே பாட்டி பற்றிய பாடலையும் எழுத மறக்கவில்லை நூலாசிரியர். 

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவிதைக்கு அப்பால் மிருகங்கள், இயற்கைக் காட்சிகள், மாம்பழம், வெள்ளைக் கொக்கு என்று சிறுவர்கள் விரும்பும் விடயங்கள் பற்றி எழுதியிருக்கும் அத்தாஸ் அவர்கள் பாடல்களுக்குரிய சிறிய படங்களையும் தந்திருப்பது சிறப்பம்சம் என கருதுகிறேன். எழுத்துக்களைவிட படங்கள் மனதில் பதிவதால் பாடலை சிறுவர்கள் வாசித்துணர அது வழிகோலும். 
காகம் என்ற பாடலில் அமைந்துள்ள சில வரிகள் பின்வருமாறு

நாடு நகர் எங்கும் நீ
கூடி வாழ்தல் காண்கின்றோம்
குடும்ப நன்மை அதுவன்றோ
கூட மாந்தர் அறிவாரோ

இந்த வரிகளில் ஒரு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பொதிந்திருக்கின்றது. இதை காகத்தின் மூலம் கவிஞர் உணர்த்தியிருக்கின்றார். ஆறறிவு பெற்ற மனிதர்களிடம் இல்லாத பண்புகள் காகத்திடம் காணப்படுகின்றது. இயற்கை நமக்கு பல பாடங்களை கற்பித்து தருகின்றது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும். 

நவமணி, தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் சிறுவர் பகுதியில் வெளிவந்த பாடல்களே இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது கவிஞரின் சிறுவர் இலக்கியப் புலமைக்கு சான்று பகர்வதாக அமைகின்றது. 

சிறுவர் இலக்கியத்தில் ஈடுபவர்கள் வெகு சிலரே. ஏனெனில் சிறுவர்களின் மனதைக்கவரும் படியாக, சிறுவர்களுக்கு புரியும் படியாக எழுதுவது சவாலான விடயம். எனினும் தன்னாலான இலக்கியத் தொண்டுகளை புரிவதற்கு ஏற்ற மனமுடையவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தர முடிகிறது. அந்த வகையில் சிறுவர் இலக்கியம் படைக்க முற்பட்டிருக்கும் வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - பூவும் கனியும் 
நூலின் வகை - சிறுவர் பாடல்
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ் 
முகவரி - 41A, Mudlim Road, Welippenna.
வெளியீடு - மொடன் ஸ்டடி சென்டர்
விலை - 150 ரூபாய்

Wednesday, June 12, 2013

45. பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் படைப்புக்கள், நூல் விமர்சனங்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்துள்ள இவர் சிகரம் தொடவா, தங்க மீன் குஞ்சுகள் ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைத் தொகுதி கிண்ணியா நெட்டினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 45 கவிதைகளை உள்ளடக்கியதாக 90 பக்கங்கில் அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது தேசிய நூலபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு அழகொளிரும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு காத்திரமானதொரு முன்னுரையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் வழங்கியுள்ளார். 

ஒரு கவிதை அது சொல்லப்படும் மொழி விதம் பொருள் ஆகியவற்றால் அழகும் உயிரும் பெறுகிறது. அவற்றை வாசிக்கும் போதெல்லாம் நமது உள்ளம் ஏதோ ஒரு உணர்வுத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் செதுக்கப்படும் ஒரு கவிதை நம்மை கிளர்ச்சியூட்டுகிறது. மகிழ்விக்கிறது. ஓர் இளம் பெண்ணின் நளினத்தை, ஒரு குழந்தையின் சிரிப்பை, ஒரு மலரின் மெண்மையை, ஒரு வாளின் கூர்மையை, இரத்தத் துளி ஒன்றின் கனதியை, கண்ணீர்த்துளி ஒன்றின் கவிதையை, வியர்வைத் துளி ஒன்றின் உழைப்பை நம்மீது படரவிட்டு பாடாய்ப் படுத்துகிறது. நவீன கவிதைகளில் அழகொளிரும் எழுத்துப் போக்கை சகோதரி பாயிஸா அலியின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். அவர் பேசும் கவிதை மொழி என்னை அசத்திவிட்டிருக்கிறது இன்று வெளிவரும் நவீன கவிதைகளில் இதுவரை நான் கண்டிராத அழகு அது என்று அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். 

நூலாசிரியர் பாயிஸா அலி அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'குடும்பம் வீட்டு வேலை பாடசாலை பத்திரிகைப் பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என் போன்றதோர் இல்லத்தரசிக்கு எல்லாம் கவிதை என்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணரடிக்கும் பாரச் சுமையாகவோ தான் அமைந்துவிடுகிறது. ஆனாலும் கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதானால் தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோன்றுகிறது. எனினும் இவ்வாறான மிகக் குறுகிய கணங்களுக்குள்ளே மிகப் பெரிய படைப்பாளியாக வெல்லாம் மாறிவிட முடியாதெனும் யதார்த்தம் உணர்ந்து சில கனங்களே உணர்வுகளுக்குள் உரைந்து கரையும் அக புற அனுபவங்களின் வெளிப்பாடாய் விரியும் சின்னச் சின்னப் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்'

கவிதை என்றாலே காதல் என்றாயிருந்தது. பிறகு ஒரு காலத்தில் யுத்தம் பற்றியே கவிதைகளில் பேசப்பட்டது. பாயிஸா அலியின் கவிதைகளில் அழகியல் சார்ந்த விடயங்கள் மிகையாக பேசப்பட்டுள்ளமை மனதுக்கு ரம்மியமாக இருக்கின்றது. வண்ணாத்தி, அணில் பிள்ளை, சிட்டுக்குருவி, கால் முளைத்த வெண் பஞ்சு மேகங்கள், தும்பி, பசுஞ் சோலை போன்ற சின்னச்சின்ன அழகியல் வசனங்களால் வாசகரை கட்டிப் போடுகின்றார். கனவுப் பூக்களும் கண்ணாடிக் கண்களும் (பக்கம் 20) என்ற கவிதையின் முதல் ஒரு சில வரிகளிலேயே அதை நாம் உணரலாம்.  

அது 
கனவுப் பூக்கள் மகரம் சிந்திய
கார்காலம்.
இலட்சியத் தேடல்களைத் 
தேசியக் கொடியாய் உயர்த்தி
நூலேந்திய வேளையிலே
ஈரத் தென்றலாய் கேசம் தழுவினாய்
விசாலித்த வான் பரப்பில்
உதிர்ந்து வீழும் விண்கற்களிடையே 
ஒற்றைச் சூரியனாய் ஜொலித்தாய்.

பொதுவாக யாருக்கும் தோன்றாத விடயங்கள் கூட நூலாசிரியரின் பார்வையில் கவிதையாக உருக்கொள்வது வியப்புத்தான். அயல்வீட்டு பீர்க்கங்கொடியையும், உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்கறியையும் இணைத்து எப்படியொரு கவிதையை யாத்திருக்கின்றார் என்று ரசியுங்கள்.  அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி (பக்கம் 22)

அந்தரத்தில் நடனமிடும்
பச்சைத் தேவதையாயும்
அணில் பிள்ளைகள் ஆடிமகிழும்
ஊஞ்சலாயும் 
பூ பிஞ்சுகளை அள்ளிச் சுமந்தவாறே
மெலிந்த தத்துக் கரங்கள் வீசியபடி
பிரிசுவர் தாண்டியும் மிகமென்மையாய்
நடைபயிலுது அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி.

நாவூறச் செய்கிறது
சின்ன வெங்காயமும் குடுகும் தாளித்த மணம்
கூரைக்கு மேலாயும் வழிந்தோட
வற்றாளையும் வெள்ளிறாலும்
சேர்த்தாக்கிய 
உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்க்கறிதான்

தனது தொடர் பயணத்தின்போது தினமும் காண்கின்ற சிறு சிறு விடயங்கள் கூட பாயிஸா அலி அவர்களின் கண்களில் பட்டுத் தெறித்துவிடுகின்றன. இலைக்குள் மறைந்து காணப்படுகின்ற ஒரு பூவைக்கூட அவரது கண்கள் அல்லது கவிதை மனம் விட்டு வைக்கவில்லை. மற்றவர்களின் வளர்ச்சியைக் காட்டாதிருக்க சிலர் தம்மை மாத்திரம் வெளிக்காட்டிக் கொள்வார்கள்.  சிலரோ எத்தகைய பெருமையும் இன்றி தம்பாட்டில் வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வார்கள். ஒளி விசிறும் சிறு பூ... (பக்கம் 32) என்ற கவிதை, வாழ்வின் அத்தகையதொரு தாற்பரியத்தை உணர்த்துவதற்காகத்தான்  எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றுகின்றது. 

தூரத்து வளைவில்
புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாச இதழ்களை 
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறு பூ...
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை 
என் வழிப் பயணத்தின் 
கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்...

மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் கவிதையாக இனியும் மொழியேன்... (பக்கம் 42) என்ற கவிதை காணப்படுகின்றது. ஆழ் மனக் காயங்களுக்கு மருந்தாவதும், அந்த காதலே வாழ்க்கையில் தழும்பாவதும் அவரவர் விதியைப் பொறுத்தது. புறக்கணிப்புக்களால் புண்பட்டுப்போன ஒரு ஆன்மாவின் சோகம்.. விரக்தி இந்த வரிகளினூடே வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது.

கத்தி முனையில் நடப்பதாகவும்
நொறுங்கும் மெலிதான 
கண்ணாடி இருக்கையில் அமர்வதுமான
நுண்ணிதானங்களோடும்
எச்சரிக்கையோடும்
அலுவலகத்தில் வேணுமென்றால்
தொடர்பாடலாம்.
ஆனாலும் உன்னோடுமா?

பகலவன் வெம்மையில் 
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புகளால்..

மிக மிக முக்கியமானதொரு அம்சத்தை உனக்கே உனக்காய்... (பக்கம் 65) என்ற கவிதை சொல்லி நிற்கின்றது. கல்விப் பெறுபேறுகள் போதாமையால் மனமுடைந்து தம் வாழ்க்கையை அழித்த எத்தனை மாணவர்களை பற்றி அறிந்திருக்கிறோம். பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.  பெற்றோரின் வசை பாடல், நண்பர்களின் கேலிப்பேச்சு, உறவினர்களின் ஏளனப் பார்வை போன்றவற்றை எல்லாம் தாங்க முடியாத பிஞ்சு மனங்களுக்கு ஒரு ஒத்தடமாக, காயத்தை போக்கும் மூலிகையாக இந்தக் கவிதை இருக்கின்றது. சமுதாயப் பிரச்சனை பற்றி பேசி விளிப்பூட்டியிருக்கின்றது.

இந்தப் பெறுபேறும் பொய்த்துப் போனதற்காய் வருத்திக் கொள்ளாதே உன்னுணர்வுகளை. கல்வித்தரம் வேண்டுமென்றால் உறுதிப்படுத்தப்படலாம் பெறுபேறுகளால் ஆனாலும் ஒருபோதும் தீர்மானித்து விடுவதில்லை. பெறுபேறு மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை. வடிந்து போகா வெள்ளமொன்றை வரலாறு சொல்லவில்லை. இந்தப் பாதை முடிந்தாலென்ன திரும்பிப் பார்
இன்னமும் ஆயிரம் பாதைகள் வாசல் கதவு திறந்து வைத்தே வழிபார்த்துக் காத்திருக்கு மாலைகளோடு உனக்கே உனக்காய்..

ஒரு ஆசிரியராகவிருந்து எப்படி தலைமைத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குகின்றாரோ அதே போல் கவிதை வழி நின்றும் நிறைய சாதித்து நல்ல புத்திஜீவிகளை உலகுக்குத்தர வேண்டுமென்று பாயிஸா அலி அவர்களை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - எஸ். பாயிஸா அலி கவிதைகள் 
நூலாசிரியர் - எஸ். பாயிஸா அலி 
முகவரி - முனைச்சேனை வீதி, குறிஞ்சாகேணி - 03, கிண்ணியா.
ஈமெயில் - sfmali@kinniyans.net , www.faiza.kinniya.net
வெளியீடு - கிண்ணியா நெட்
விலை - 250 ரூபாய்

44. எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்

எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்



கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். 

இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி  போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது. 


இந்த நூலுக்கு கனதியை சேர்க்கும் முகமாக தனது நேரத்தை ஒதுக்கி சிரமம் பாராது பாலமுனை பாறூக் அவர்களின் எல்லாப் படைப்புக்களையும் முழுமையாக அவதானித்து 17 பக்கங்களில் தனது அணிந்துரை ஒன்றை முதுநிலைப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில்,


``பாலமுனை பாறூக் 1970 களின் தொடக்கத்தில் கவிதைத் துறையில் காலடி வைத்தவர். இலங்கை இலக்கிய உலகில் முற்போக்குச் சிந்தனை முனைப்பாக இருந்த காலகட்டம் அது. பாலமுனை பாறூக்கும் அச்சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர் என்பதில் ஐயமில்லை. இஸ்லாமியப் பற்றும், சமூக உணர்வும் மிக்க ஓர் இடதுசாரியாக இவரை நாம் அடையாளங் காணலாம். இக்காவியத்தில் வரும் பிரதான பாத்திரத்துக்குப் பெயர் இல்லை. அவன், இவன் என்ற படர்க்கைப் பெயலாலேயே அவன் குறிப்பிடப்படுகிறான்'' என்கிறார். 

எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு, பாம்பை நோக்கிய பயணம், சிறகுப் பட்டை சிலுப்பிய சேவல், காலைத் தைத்த வேலிக்கு வைத்தமுள், பூட்டி இருந்த உறவினர் வீடு, எல்லை வீதி சொந்த வீதி, உறைந்து போய் இருந்த ஊர், கோழிக் காக்கா குஞ்சு முகம்மது, மாசிலா மணி மேசன், எடுபிடிகளும் கெடுபிடிகளும், வேலி போட முடியாத நட்பு, சமாதான சகவாழ்வு,  விழித்துக் கொண்ட பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பதின்மூன்று தலைப்புக்களில் இக்காவியம் விரிவடைந்து செல்கின்றது. 

பிரார்த்தனை மட்டுமே எஞ்சியிருந்தது
பேச்சு ஏனோ
அடைபட்டிருந்தது..

சொந்த வீட்டைப் பார்க்க வந்தவன்
சுற்றி வளைப்பில் 
அகப்பட்டிருந்தான்.. (பக்கம் 25)

என்று இந்தக் காவியம் தொடங்குகிறது. தனது சொந்த ஊருக்கு வரும் அவன் தன்னுடைய குடும்பத்தினரைக் காணாது அல்லாடுகின்றான். இலங்கையில் பிறந்தமையா அல்லது இலங்கையின் கிழக்குப் பகுதியில் பிறந்தமையா அவனை இவ்வாறு அல்லல்பட வைக்கிறது? சொந்தங்களும் இல்லாமல் சொந்த மண்ணும் அந்நியப்பட்டு கிடக்கும் அவனுக்கு ஆறுதல் என்ன என்ற கேள்வியை கவிஞர் முதலிலேயே நமக்குள் உருவாக்கி விடுகின்றார்.

நாலா பக்கமும் 
கடலாய்ச் சூழ்ந்துள 
இலங்கைத் தீவில் 
இவனொரு பொதுமகன் 

எப்பிழை செய்தான்?
எதனைக் கேட்டான்?
கிழக்கில் பிறந்தான்
இது பிழை யாகுமா? (பக்கம் 34)

வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளின்போது நாம் இறைவனிடமே முறையிடுகிறோம். அதாவது நமது துன்பத்தை, பிரச்சினைகளை நீக்கித்தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அந்த ஒரு பிரார்த்தனையைத் தவிர அவனிடம் இன்று எதுவுமே இல்லை. ஒரு ஜடம் போல அவனது நிலைமை ஆகிவிட்டது என்பதைக் கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றமையை அவதானிக்கலாம். 

எஞ்சி யிருந்தது
பிரார்த்தனை மட்டுமே
எங்குதான் செல்வான்?

எல்லை வீதி, சொந்த வீடு
வந்து சேர்ந்தான் 
நடைப் பிணமாக! (பக்கம் 40)

அவ்வாறு ஊருக்குள் வந்தவனை திடீரென கண்ணுற்ற பார்வதி அக்கா அவனை எழுப்புகிறாள். அவனது நிலையறிந்து உண்ணக்கொடுத்து, ஆறுதல் படுத்துகின்றாள். அந்தப் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவள். சகோதரர்கள் போன்று பழகியவர்கள் யுத்த வெறியனின் கண்பட்டதால் இன்று திக்குத் திசை தெரியாமல் மருளுகின்றனர். பார்வதி அக்காவின் மன வேதனை இவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது.

என்னடா தம்பி இப்புடிக் கிடக்க கண்ணீர் மல்கிக் கசிந்து கரைந்தாள். ஷஇன்னடா தம்பி ஒழும்பு ஒழும்பு| என்று அவனைப் பிடித்து எழுப்பி உண்ணக் கொடுத்தாள். கண்பட்டுப் பெய்த்திடா தம்பி என்னமா இருந்தம் ஒரு தாய்
வகுத்துப் புள்ளைகள் போல.. (பக்கம் 41)

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒன்றாகவே சேர்ந்து தொழில் செய்து தமது வணக்கஸ்தலங்களை உருவாக்கியதையும், ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பு காட்டி வாழ்ந்தததையும் கவிஞர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

வண்டிக்கார முஸ்லீம்கள் தமிழர் ஒன்றாய்ச் சேர்ந்து ஒற்றுமையாகவே காட்டினிற் சென்று கம்புகள் வெட்டி கோயிலைப் பள்ளியைக் கட்டிக் கொண்டதை.. ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்ததை இவ்வூர் கோயிற் பள்ளிக் குறிப்புகள் சொல்வதால் அப்பொழு தவரோ அடிக்கடி சொல்வார்.. (பக்கம் 42) 

ஆண்களை எல்லாம் படைக்கு அழைத்துச் செல்லும் நிலமை அன்று காணப்பட்டது. அவ்வாறு கோழிக் காக்கா குஞ்சு முகம்மதும், மேசன் மாசிலாமணியும். பலவந்தமாக ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பணயக் கைதிகளாய் அவர்கள் பிடிபட்டிருக்கின்றமையை வாசகர்கள் உணரலாம். அப்பாவி மக்கள் இவ்வாறு அடிக்கடி காணாமல் போவதைக்கண்டு உள்ளங்கள் துடித்துப் போவதைக் காவியத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை வாசிக்கையில் வாசகர்களின் மனதும் ஒருவித அச்சத்துக்கும், வேதனைக்கும் உட்படுவதை மறுக்க முடியாது.   

வடக்குத் திசையில் ஒரு கிலே மீற்றர் ஓடி முடித்தவன் வங்கி வளைவில் வாகை நிழலில் நின்று பார்த்தான். கூட்டம் இருந்தது பேச்சடிபட்டது. அந்தப் பக்கம் நேற்று கோழி வாங்கச் சென்ற முகம்மது காக்கா ஊரை வந்து சேரவில்லயாம். இந்தப் பக்கம் மேசன் வேலையாய் வந்த இருவர் பணயக் கைதியாய் பிடிபட்டிருப்பதாய் காற்று வந்து காதில் சொன்னது. கேட்டு மனசு துடியாய்த் துடித்தது. அப்பாவிகளும் தொழிலாளர்களும் அடிக்கடி இப்படி அமுங்கிப் போவதை அகதியாவதை எண்ணிப் பார்த்து மனசு துவண்டது.. (பக்கம் 49)

இவ்வாறு மனசை உலுக்கும் சம்பவங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு..
நூல் வகை - நவீன குறுங்காவியம்
நூலாசிரியர் - கவிஞர் பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்

Tuesday, May 14, 2013

43. தீ குளிக்கும் ஆண் மரம் - கவிதைத் தொகுதி

தீ குளிக்கும் ஆண் மரம் கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு

 இலக்கியத்தில் ஆழக் காலூன்றி வருகின்ற கிண்ணியாவில் இருந்து ஜே. பிரோஸ்கான் தனது இரண்டாவது தொகுதியாக தீ குளிக்கும் ஆண்மரத்தை வேரூன்றியிருக்கிறார். பேனா பத்திப்பகத்தின் வெளியீடாக 84 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது இந்தத்தொகுதி. இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தீ குளிக்கும் ஆண் மரம் கவிதைத் தொகுதி பிரோஸ்கானின் மனதைச் சொல்கிறது. பிரோஸ்கானின் கவிதைகள் அவரின் வாழ்க்கைச் சூழலைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கையின் நெருடல்களையும், அவலங்களையும் சொல்வதன் மூலம் சமூகம் உள்வாங்கியிருக்கின்ற அரசியலைக் காட்சிப்படுத்துகிறார்.'  என இந்தத்தொகுதி பற்றிய தனது உரையில் கவிஞர் நீறோ அவர்கள் குறிப்பிடுகின்றார்.


தான் இந்தத்தொகுதியை வெளியிடுவதற்குக் காரணம் என்ன என்பதை நூலாசிரியர் பிரோஸ்கான் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'நேற்றைய கவிதை வடிவங்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய கட்டாய வரம்புக்குள் காலம் என்னை மிக வேகமாக இழுத்துச் சென்றதன் பிரதிபலிப்பே இந்தப் படைப்பு. ஒரு படைப்பாளன் நீண்ட வாசிப்பின் நெருங்குதலால் கவரப்படுதல் என்பது ஆச்சரியமில்லை. அவ்வகையான குறிக்கோளுடன் நவீன படைப்புக்களை முயன்றவரை மேய்ந்ததன் விளைவே இந்தத் தீக்குளிக்கும் ஆண் மரம்' என்கிறார் நூலாசிரியர் பிரோஸ்கான்.

நாம் நினைப்பவை எல்லாம் நினைத்தவாறு நடந்துவிடுவதில்லை. ஆசை ஆசையாக கற்பனை பண்ணுபவை வெறும் கனவுகளாகவே ஆகவிடுகின்ற நிலமை யாவருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அத்தகையதொரு நிகழ்வை தனது முதல் கவிதையில் அழகாக வடித்திருக்கிறார் கவிஞர். காய்க்க ஆசைப்பட்டு பூத்த முருங்கைப்பூ (பக்கம் 09)

இரவுத் துயிலின் ராஜ கனவுடன் உறங்கி விழித்த போது
ராத்திரி பெய்த மழையில் உதிர்ந்து மடிந்து போயிருந்தது
எனதான கனவும்
காயாக மாறிவிடுவேன் என்ற கர்வத்தோடு
பூத்த முருங்கைப் பூவும்!

எந்த ஒரு விடயமும் நமக்கருகில் இருந்தால் அதன் பெறுமதி புரியாது. காலக்கிரமத்தில் அப்பொருளோ, அல்லது மனிதரோ நம்மைவிட்டு தூரமான பின்புதான் அதன் அருமை பெருமை புரிய ஆரம்பிக்கும். ஆனால் காலம் கடந்த நிலையில் அதை மீண்டும் பெறுவது முயற்கொம்பாகவிடும். இழப்பு (பக்கம் 13) என்ற கவிதை வரிகள் இதை நிதர்சனப்படுத்துவதைப் பாருங்கள்.

இப்படித்தானொன்று அருகாமையிலிருக்கும் போது
அதன் இருத்தலின் வலிமை புரியாது
அது இல்லாமல் போகும் போதுதான்
கஷ்டமும் கவலையும் காற்றைப் போல
வீசிக்கொண்டிருக்கும் போல!

தனக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை யாருமே அறிந்திருப்பதில்லை. எனினும் மற்றவர்களின் விடயங்களைப் பற்றி பல அபிப்பிராயங்களை நாம் சொல்லிக்கொண்டிருப்போம். வருத்தம் (பக்கம் 38) என்ற கவிதை கோழிகளுக்கு மட்டுமானதல்ல. அதை குறியிட்டுக் கவிதையாகக் கொண்டால் பல விடங்கள் புலப்படுவதை அவதானிக்கலாம்.

கிணற்றடிப் புழுக்களின் கனவு பற்றியும்
ஈசல்களின் வாழ்க்கைச் சுருக்கம் பற்றியும்
அறியாது போல
பாவம்தான் இன்று கல்யாண வீட்டிற்கு
கறியாகிப் போவது பற்றியும்
தெரிந்திருக்க நியாயமில்லை
பசிக்காகத் தீனி மேய்க்கின்ற கோழிகளுக்கு!

விபச்சாரிகள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களிலும் பலர் கண்ணீருக்குச் சொந்தமானவர்கள், விரும்பி வருபவர்கள் சிலர். வற்புறுத்தலில் அகப்பட்டவர்கள் சிலர். எந்த ரகமாயிருந்தாலும் சமூகத்தளத்தில் நின்றுகொண்டு அவர்களால் சுயமாக இயங்க முடியாது. முகமூடி அணிந்து கொண்டு சுதந்திரமாக வாழ இயலாது. ஆணின் முகம் தெரியாமலேயே அவனிச்சைக்கு உடன்படுபவர்கள் எல்லாம் விரும்பித்தான் இத்தொழிலை மேற்கொள்கின்றனரா? இல்லை என்கிறது கீழுள்ள வரிகள். இவ்வரிகள் அவர்களின் வேதனையை கூறுவதைப் போல் இல்லையா? மூன்று (பக்கம் 46)

மலர்ந்த பூக்களெல்லாம்
அவை பிரியப்பட்டு
பறிக்கப்படுவதல்ல,
பறிப்பவர்களெல்லாம் அவற்றைப்
பிரியத்தோடு பறிப்பதுமில்லை!

மனிதன் தவறு செய்கையில் யாரும் கண்டுவிடவில்லை என்று எண்ணித்தான் அதில் ஈடுபடுகின்றான். படைத்த இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதைக்கூட மறந்து பலர் தவறுகளைச் செய்கின்றனர். இறைவன் தண்டிப்பதற்கு முன்பே மனச்சாட்சி மனிதனைத் தண்டித்துவிடுகிறது. தப்பிப்பதென்பது யாது? (பக்கம் 79) என்ற பின்வரும் கவிதையில் பிரோஸ்கான் அதைத் தெளிவாக எடுத்தியம்புகின்றார்.

நேற்றுச் செய்த தவறிலிருந்து
எவர் கண்களுக்குள்ளும்
மாட்டிக்கொள்ளாமல்
வீடு வந்நதும்
மாட்டிக்கொண்டேன்
மனச்சாட்சியிடம்!

இரண்டு கவிதைத் தொகுதியை வெளியிட்டு, பேனா சஞ்சிகையையும் வெளியிட்டுவரும் ஜே. பிரோஸ்கான் இன்னும் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - தீ குளிக்கும் ஆண் மரம் 
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு – பேனா பப்ளிகேஷன்
விலை - 250 ரூபாய்

Tuesday, March 19, 2013

42. வேர் அறுதலின் வலி கவிதை நூலுக்கான இரசனைக் குறிப்பு

வேர் அறுதலின் வலி  கவிதை நூலுக்கான இரசனைக்குறிப்பு

யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வெளிந்துள்ள விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.

மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடகவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஏ.எம்.எம். அலி, ஜன்ஸி கபூர், எம்.எச்.எம். புஹாரி, கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, கே.எம்.ஏ. அஸீஸ், புத்தளம் எம்.ஐ.எம். அப்துல் லதீப், ஏ.எல்.எம். சத்தார், ஏ.எஸ். இப்றாஹீம், முஹம்மது இக்பால் காரியப்பர், ஏ.கே. முஜாராத், சபீனா சம்சுதீன், எம்.ஐ.எம். அஸ்ரப், எம்.ஐ.எம். நுஸ்கி, எச்.எப். ரிஸ்னா, முருகேசு பகீரதன், ஏ.எம். முகைதீன், பாத்திமா நுஸ்ரா, தம்பிராசா பரமலிங்கம், ஏ.எல்.எம். அஸாத், முஹம்மது நிஸ்றி, ரீ.எல். ஜவ்பர் கான், ஏ.எஸ்.எம். அப்துல்லாஹ், ஹலீமா அனீஸ், ஏ. நஸ்புல்லாஹ், அப்துல் ஹலீம், பாத்திமா தஸ்லிமா நசீர், மஃனாஸ் மஃறூப், பாத்திமா நஸ்லா ஷாமில், சம்சுதீன் சிபானா, பாத்திமா பஸ்லா, எம்.கே.எம். வசீம், உ. நிசார், எம்.எம். விஜிலி, கே.எம். நௌஷாட், அலியார் ஜிப்ரி, என். அப்துல் ரஹ்மான், அப்துல் கபூர் நுசைமியா, ஜே. சபீனா, சீவரட்ணம், எஸ். சிராஜுதீன், ரமீஸ் பாத்திமா ருஸ்தா, ஜெஸ்மினா மகாஸ், ஜமால்தீன் பிரோஸ்கான், மதனரூபன், எஸ்.எப். சப்னா, கவிஞர் யாழ். அஸீம், எம்.என்.எம். பாயிக், கலாபூஷணம் தமீமா ரஹீம், வீ. சிவராஜா, ஏ.என்.எம். இஜ்லான், எச்.எம்.எம். சப்வான், ஏ.யூ.எல்.எப். அரபா உம்மா, அபு அப்பாஸ், ஏ. பாத்திமா அப்கா, நீலா பாலன், மூத்த தம்பி மகாதேவன் ஆகியோரது கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரங்களைப் பதியும் கவிதைகளை இனி பார்ப்போம். 

கிண்ணியா ஏ.எம்.எம். அலியின் கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும்... என்ற (பக்கம் 20); கவிதை துப்பாக்கி முனையைக் காட்டி முஸ்லிம்கள் துரத்தப்பட்ட துயரத்தை காட்டி நிற்கிறது. 

தப்பேதும் புரியாமல் தயைகூர்ந்து வாழ்ந்தவரை
துப்பாக்கி முனைகொண்டு துரத்தியடித்திட்ட கதை
எப்போதும் மறக்கவொனா ஈனமிகுங் கதையாகி
இப்போதும் வடபுலத்து இசுலாமியரை எரிக்குதம்மா

வாருங்கள் பாங்கோசை கேட்கிறது (பக்கம் 27) கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனியின் கவிதை பின்வருமாரு அமைந்துள்ளது.

நபியவர்கள் மதீனாவுக்கு யாத்திரை செய்த ஹிஜ்ரத் வரலாறு யாவரும் அறிந்ததே. சொந்த மண்ணைவிட்டு அவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது போலவே முஸ்லிம்களும் தமது ஊரை, உடமைகளை விட்டு இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள். இரண்டையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் கவிதை சிறப்பானதாகும்.

சூழ்நிலை துரத்தியதால் சுந்தர நபியின் வாழ்வில் ஹிஜ்ரத் எனும் இடம்பெயர்வு ஏற்பட்டமை இஸ்லாமிய வரலாறு.. யாழ் மண்ணின் ஈமானிய இதயங்களை சூழ்ச்சி விரட்டியதால் இன்னொரு ஹிஜ்ரத் ஏற்பட்டமை இன்றைய முஸ்லிம்களின் சரத்திரம்.. பழங்கால வரலாறும் சமகால சரித்திரமும் இடவெளியில் இரண்டே தவிர எடையில் ஒன்றே தாம்..

பல சந்தக் கவிதைகளின் சொந்தக்காரியாக திகழும் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் கறுப்பு மாதம் (பக்கம் 48) என்ற  கவிதை பின்வருமாரு அமைந்துள்ளது.

வடபுலத்து முஸ்லிம்கள் படபடத்த நாளொன்று.. வருகின்ற அக்டோபர் வருடங்கள் இருபத்தொன்று! தீயவை அழித்துவிடல் மனிதகுல தர்மம் தான்.. இனமொன்றை துடைத்தழித்தால் அதற்கு பெயர் வன்மம் தான்! சொத்துக்கள் சொந்தங்கள் பலிகொடுத்தோர் ஏராளம்.. இனி வாழ்வில் எமக்கெல்லாம் இசைக்கலாமா பூபாளம்? 
ஒக்டோபர் மாதமிங்கு கறுப்பாக ஆயிற்று.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் இருட்டாகிப் போயிற்று!

ஒக்டோபர் மாதத்தில் இந்நிகழ்வு நடந்ததையொட்டி அவர் தனது கருத்துக்களை எழுதியிருக்கும் பாங்கு அழகானது. அந்த மாதம் கறுப்பாகிப் போனதால், வாழ்க்கை இருட்டாகிப் போனதாக கூறியிருக்கிறார்.

பாத்திமா நஸ்வா ஷாமிலின் கவிதை குறியீட்டுக் கவிதையாக சிறப்பு பெறுகிறது. இன சம்ஹாரம் என்ற தலைப்பில் (பக்கம் 77) அவர் யாத்திருக்கும் கவிதையில் வபுலத்து மக்கள் குருவிகளாக உவமிக்கப்;டுள்ளனர். இவர் தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னால் உப பீடாதிபதியும், மூத்த இலக்கியவாதிகளில் ஒருவருமான கலைவாதி கலீல் அவர்களின் புதல்வியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கவிதைகளின் சில வரிகள் இதோ..

குளக்கரை எல்லைகளில்
பஞ்சைப் பறவைகளும்
பிஞ்சுச் சிட்டுகளும்
கூடுகட்ட இடமின்றி
அவலப்பட்டன அல்லலுற்றன!
வேறு வழியின்றி 
திக்குக்கு ஒன்றாய்
தென்னிலங்கை நோக்கி
சிதற ஆரம்பித்தன
தேங்காய்ச் சிதறல்களாய்! 

கவிதை உலகுக்கு நல்ல பரிச்சயமானவர் கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள். கனவுகள் உன் கையில் (பக்கம் 105) என்ற அவரது கவிதை வாழ்விழந்து போனவனை மீண்டும் வாழ வைக்கும் சக்தியாக அமைந்திருக்கிறது. முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அதனால் மனதளவில் பாதிப்படைந்தவர்கள் பலபேர். இன்றுவரை சொந்தமாக வாழ்விடமின்றி அலையும் அவர்களுக்கு ஆறுதலையும், மன மாறுதலையும் தரக்கூடியதொரு கவிதையாக அவரது கவிதை காணப்படுகின்றது. 

முகாமிருளில் முடிந்ததென் வாழ்வு என்றெண்ணி... முகாரிதனை அசைபோடும் இளையவனே எழுந்து வா! இருண்டுவிட்ட எம் வாழ்வின் விடிவெள்ளியே விழித்துக்கொள்ளும் வேளையிது விரைந்து வா! சியோனிச சக்திகளின் சித்து விளையாட்டில் சிதறிவிட்ட சமூகத்தை செப்பனிட எழுந்து வா!

வேர் அறுதலின் வலிகளை உணர்த்தியுள்ள கவிஞர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்டு இஸ்லாமியரின் அடையாளத்தை மீண்டும் பதிய வைத்திருக்கும் யாழ் முஸ்லிம் வலைத்தளத்துக்கும், ஊடகவழியலாளர் அன்ஸிர் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வேர் அறுதலின் வலி 
நூலின் வகை - கவிதைத் தொகுதி
வெளியீடு - யாழ் முஸ்லிம் இணையம்
முகவரி - No. 48, Perci Dias Mw, Mabola, Wattala.
விலை - 300 ரூபாய்

Tuesday, January 1, 2013

41. சுவையான இலக்கியத் திறனாய்வுகள் - விமர்சனத் தொகுதி

சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.

இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்கு திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களை சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர்.

எழுத்தாளர்கள் தான் ஏன் எழுதுகிறோம்? எதனை எழுதுகிறோம்? எவ்வாறு எழுதுகிறோம்? என்றெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பிற்காலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புக்களை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளை ஒரே சீரில் இந்நூல்கள் மூலம் தேர்ந்தெடுத்து பரிசீலிக்க உதவுமுகம் இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'எனது சிற்றரிவும், சிற்சில அனுபவங்களும் என்னைத் தழுவியபோது அவற்றை விருத்திசெய்து பேரறிவுடையவர்களுக்காக எனது சிறிய அளவிலான பரிமாண வீச்சில் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக கடந்த அரை நூற்றாண்டாக எழுதி வருகிறேன்' என்கிறார்.

2007ம் ஆண்டின் தலைசிறந்த ஆங்கிலமொழிப் பத்தியாளராக விருது பெற்றிருக்கும் இவர் பல்நாட்டுக் கலைஞர்கள் பற்றியும், எழுத்தாளர் சிலரின் நூலுக்கு தான் எழுதிய முன்னுரைகளையும் இந்த நூலில் இணைத்திருக்கின்றார்.

ரா. நித்தியானந்தனின் மூன்றாம் பரிணாமம் என்ற  நூலுக்கு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதிய முன்னுரை இந்நூலில் ரா. நித்தியானந்தனின் சிறுகதைகள் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரியா தேசத்தவரான வோலே சொயின்கா என்பவரைப் பற்றிய தகவல்களை இந்நூல் சுமந்து வந்திருக்கிறது.  வோலே சொயின்கா மேற்குலக நாடுகளில் நன்கு அறியப்பட்ட நாடகாசிரியர்களில் ஒருவர்.  தனது கருத்துக்களை ஒழிவுமறைவின்றி வெளிப்படுத்தும் சொயின்கா கலை இலக்கியங்கள் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நம்புகிறவர்.

மு. பஷீர் அவர்களின் சிறுகதைகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவரது கதைகளை திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ரசித்தமைக்கான காரணத்தை நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

'இந்தக் கதைகளை முதலில் நான் படித்தபொழுது மகிழ்ச்சியுற்றேன். காரணம் மொழிவளம், விபரிக்கும் ஆற்றல், பிறர் அதிகம் தேர்ந்தெடுக்காத பாத்திரங்கள், சமூக விமர்சனம், யதார்த்த சித்தரிப்பு, மனித நேயம் ஆகிய பண்புகள் அடங்கியருந்தமையே'

இதழியல் என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். இன்று பேனை பிடித்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் எழுதும் எழுத்துக்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும் எனவும் உணர்த்தப்படுகின்றது.

இலங்கையின் மூத்த சஞ்சிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா அவர்களைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தனது வாழ்வை இலக்கியத்துக்காக அர்ப்பணித்தவர் திரு டொமினிக் ஜீவா அவர்கள். இன்றுவரை தொடர்ந்து மல்லிகை சஞ்சிகை வெளிவருவதற்கு முதுகெலும்பாக நின்று செயற்படுகின்றார். ஜீவா அவர்களின் அயராத உழைப்பே மல்லிகையின் வெற்றி எனலாம்.

சுங்கத் திணைக்களத்தில் உயர் அதிகாரியாக கடமையாற்றுபவரும் கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவருமான திரு. மு. தயாபரன் அவர்களைப் பற்றிய தகவல்களையும் இந்நூல் தாங்கியிருக்கின்றது. நினைவழியா நாட்கள்   என்ற நூலின் ஆசிரியான பரன் அவர்களே இந்த மு. தயாபரன் அவர்களாவார்.

சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் பல்வேறுபட்ட தகவல்களை உள்ளடக்கியதாகும். இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் -  சுவையான இலக்கியத் திறனாய்வுகள்
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06.
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
தொலைபேசி - 0112587617
விலை - 200 ரூபாய்