வேர் அறுதலின் வலி கவிதை நூலுக்கான இரசனைக்குறிப்பு
யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வெளிந்துள்ள விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.
மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடகவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஏ.எம்.எம். அலி, ஜன்ஸி கபூர், எம்.எச்.எம். புஹாரி, கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, கே.எம்.ஏ. அஸீஸ், புத்தளம் எம்.ஐ.எம். அப்துல் லதீப், ஏ.எல்.எம். சத்தார், ஏ.எஸ். இப்றாஹீம், முஹம்மது இக்பால் காரியப்பர், ஏ.கே. முஜாராத், சபீனா சம்சுதீன், எம்.ஐ.எம். அஸ்ரப், எம்.ஐ.எம். நுஸ்கி, எச்.எப். ரிஸ்னா, முருகேசு பகீரதன், ஏ.எம். முகைதீன், பாத்திமா நுஸ்ரா, தம்பிராசா பரமலிங்கம், ஏ.எல்.எம். அஸாத், முஹம்மது நிஸ்றி, ரீ.எல். ஜவ்பர் கான், ஏ.எஸ்.எம். அப்துல்லாஹ், ஹலீமா அனீஸ், ஏ. நஸ்புல்லாஹ், அப்துல் ஹலீம், பாத்திமா தஸ்லிமா நசீர், மஃனாஸ் மஃறூப், பாத்திமா நஸ்லா ஷாமில், சம்சுதீன் சிபானா, பாத்திமா பஸ்லா, எம்.கே.எம். வசீம், உ. நிசார், எம்.எம். விஜிலி, கே.எம். நௌஷாட், அலியார் ஜிப்ரி, என். அப்துல் ரஹ்மான், அப்துல் கபூர் நுசைமியா, ஜே. சபீனா, சீவரட்ணம், எஸ். சிராஜுதீன், ரமீஸ் பாத்திமா ருஸ்தா, ஜெஸ்மினா மகாஸ், ஜமால்தீன் பிரோஸ்கான், மதனரூபன், எஸ்.எப். சப்னா, கவிஞர் யாழ். அஸீம், எம்.என்.எம். பாயிக், கலாபூஷணம் தமீமா ரஹீம், வீ. சிவராஜா, ஏ.என்.எம். இஜ்லான், எச்.எம்.எம். சப்வான், ஏ.யூ.எல்.எப். அரபா உம்மா, அபு அப்பாஸ், ஏ. பாத்திமா அப்கா, நீலா பாலன், மூத்த தம்பி மகாதேவன் ஆகியோரது கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரங்களைப் பதியும் கவிதைகளை இனி பார்ப்போம்.
கிண்ணியா ஏ.எம்.எம். அலியின் கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும்... என்ற (பக்கம் 20); கவிதை துப்பாக்கி முனையைக் காட்டி முஸ்லிம்கள் துரத்தப்பட்ட துயரத்தை காட்டி நிற்கிறது.
தப்பேதும் புரியாமல் தயைகூர்ந்து வாழ்ந்தவரை
துப்பாக்கி முனைகொண்டு துரத்தியடித்திட்ட கதை
எப்போதும் மறக்கவொனா ஈனமிகுங் கதையாகி
இப்போதும் வடபுலத்து இசுலாமியரை எரிக்குதம்மா
வாருங்கள் பாங்கோசை கேட்கிறது (பக்கம் 27) கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனியின் கவிதை பின்வருமாரு அமைந்துள்ளது.
நபியவர்கள் மதீனாவுக்கு யாத்திரை செய்த ஹிஜ்ரத் வரலாறு யாவரும் அறிந்ததே. சொந்த மண்ணைவிட்டு அவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது போலவே முஸ்லிம்களும் தமது ஊரை, உடமைகளை விட்டு இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள். இரண்டையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் கவிதை சிறப்பானதாகும்.
சூழ்நிலை துரத்தியதால் சுந்தர நபியின் வாழ்வில் ஹிஜ்ரத் எனும் இடம்பெயர்வு ஏற்பட்டமை இஸ்லாமிய வரலாறு.. யாழ் மண்ணின் ஈமானிய இதயங்களை சூழ்ச்சி விரட்டியதால் இன்னொரு ஹிஜ்ரத் ஏற்பட்டமை இன்றைய முஸ்லிம்களின் சரத்திரம்.. பழங்கால வரலாறும் சமகால சரித்திரமும் இடவெளியில் இரண்டே தவிர எடையில் ஒன்றே தாம்..
பல சந்தக் கவிதைகளின் சொந்தக்காரியாக திகழும் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் கறுப்பு மாதம் (பக்கம் 48) என்ற கவிதை பின்வருமாரு அமைந்துள்ளது.
வடபுலத்து முஸ்லிம்கள் படபடத்த நாளொன்று.. வருகின்ற அக்டோபர் வருடங்கள் இருபத்தொன்று! தீயவை அழித்துவிடல் மனிதகுல தர்மம் தான்.. இனமொன்றை துடைத்தழித்தால் அதற்கு பெயர் வன்மம் தான்! சொத்துக்கள் சொந்தங்கள் பலிகொடுத்தோர் ஏராளம்.. இனி வாழ்வில் எமக்கெல்லாம் இசைக்கலாமா பூபாளம்?
ஒக்டோபர் மாதமிங்கு கறுப்பாக ஆயிற்று.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் இருட்டாகிப் போயிற்று!
ஒக்டோபர் மாதத்தில் இந்நிகழ்வு நடந்ததையொட்டி அவர் தனது கருத்துக்களை எழுதியிருக்கும் பாங்கு அழகானது. அந்த மாதம் கறுப்பாகிப் போனதால், வாழ்க்கை இருட்டாகிப் போனதாக கூறியிருக்கிறார்.
பாத்திமா நஸ்வா ஷாமிலின் கவிதை குறியீட்டுக் கவிதையாக சிறப்பு பெறுகிறது. இன சம்ஹாரம் என்ற தலைப்பில் (பக்கம் 77) அவர் யாத்திருக்கும் கவிதையில் வபுலத்து மக்கள் குருவிகளாக உவமிக்கப்;டுள்ளனர். இவர் தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னால் உப பீடாதிபதியும், மூத்த இலக்கியவாதிகளில் ஒருவருமான கலைவாதி கலீல் அவர்களின் புதல்வியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கவிதைகளின் சில வரிகள் இதோ..
குளக்கரை எல்லைகளில்
பஞ்சைப் பறவைகளும்
பிஞ்சுச் சிட்டுகளும்
கூடுகட்ட இடமின்றி
அவலப்பட்டன அல்லலுற்றன!
வேறு வழியின்றி
திக்குக்கு ஒன்றாய்
தென்னிலங்கை நோக்கி
சிதற ஆரம்பித்தன
தேங்காய்ச் சிதறல்களாய்!
கவிதை உலகுக்கு நல்ல பரிச்சயமானவர் கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள். கனவுகள் உன் கையில் (பக்கம் 105) என்ற அவரது கவிதை வாழ்விழந்து போனவனை மீண்டும் வாழ வைக்கும் சக்தியாக அமைந்திருக்கிறது. முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அதனால் மனதளவில் பாதிப்படைந்தவர்கள் பலபேர். இன்றுவரை சொந்தமாக வாழ்விடமின்றி அலையும் அவர்களுக்கு ஆறுதலையும், மன மாறுதலையும் தரக்கூடியதொரு கவிதையாக அவரது கவிதை காணப்படுகின்றது.
முகாமிருளில் முடிந்ததென் வாழ்வு என்றெண்ணி... முகாரிதனை அசைபோடும் இளையவனே எழுந்து வா! இருண்டுவிட்ட எம் வாழ்வின் விடிவெள்ளியே விழித்துக்கொள்ளும் வேளையிது விரைந்து வா! சியோனிச சக்திகளின் சித்து விளையாட்டில் சிதறிவிட்ட சமூகத்தை செப்பனிட எழுந்து வா!
வேர் அறுதலின் வலிகளை உணர்த்தியுள்ள கவிஞர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்டு இஸ்லாமியரின் அடையாளத்தை மீண்டும் பதிய வைத்திருக்கும் யாழ் முஸ்லிம் வலைத்தளத்துக்கும், ஊடகவழியலாளர் அன்ஸிர் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் - வேர் அறுதலின் வலி
நூலின் வகை - கவிதைத் தொகுதி
வெளியீடு - யாழ் முஸ்லிம் இணையம்
முகவரி - No. 48, Perci Dias Mw, Mabola, Wattala.
விலை - 300 ரூபாய்
No comments:
Post a Comment