Thursday, January 22, 2015

72. அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.

அனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..

'அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை'

திடீரென ஷெல் வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. எவ்விடத்தில் விழுந்து யார் யார் இறந்து கிடக்கின்றார்களோ என்ற பரபரப்பு இந்த நூலை வாசிக்கும் வாசகர்களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது. போய்ப் பார்த்தால் மாமா உடல் கருகி இறந்து போயிருப்பதாக கதை நிறைவடைகின்றது. சொந்தங்களை இழந்து தனியாளாக நிர்க்கதியாய் நிற்பதை விட, எல்லோரும் ஒரே நேரத்தில் இறந்தால் பரவாயில்லை என்ற மாமாவின் கூற்று அந்த நிலைமையில் இருப்பவர்களைப் பொறுத்தளவில் நியாயமே. யாருமற்ற அநாதைகளாக இருப்பதைப் பார்க்கிலும் குடும்பத்தோடு இறந்து போனால் பரவாயில்லை என்று எண்ணும் பாங்கு யுத்தத்தின் கோரத்தை தெட்டத் தெளிவாக்கியிருக்கின்றது.

நாயுண்ணிகள் (பக்கம் 09) என்ற சிறுகதையும் போரின் போது இருந்த வாழ்க்கை முறையை யதார்த்தமாய்ச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தேவகி என்ற பெண் மூன்று பிள்ளைகள் இருந்த போதும் மூத்த பிள்ளை இயக்கத்தில் சேர்ந்துவிட்டதால் இரு பிள்ளைகளுடன் கணவனின் துணையில்லாமல் சீவியம் நடத்தி வருகின்றாள். கணவன் அவளை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணமுடித்து இருப்பதுவும், அவளது மூத்த மகள் இயக்கத்தில் சேர்ந்து அவளைவிட்டுச் சென்றதாலும் தேவகி வாழ்க்கை கண்ணீரிலே கழிகின்றது. இரு பிள்ளைகளை கிடங்குக்குள் இருத்திவிட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றாள். இடம்பெயர்ந்து வரும்போது இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன்தான் அவள் வந்திருந்தாள். இப்படி காலம் கழிந்து கொண்டிருக்கையில் அவளது தூரத்து உறவுப் பெண் தன் இரு பிள்ளைகளுடன் அங்கு வந்து சேர்கின்றாள். அவள் தேவகியிடம் இவ்வாறானதொரு யோசனையை முன்வைக்கிறாள்.

'தேவகி அக்கா! நாங்கள் ஒண்டாய் சமைச்சு சாப்பிடுவமே? விறகுச் செலவு மிச்சம். கறி, புளிகளை நான் வேண்டித் தாறேன். நீங்கள் அரிசிச் சாமான்களை வேண்டிப் போடுங்கோவன்...'

இந்த யோசனை தேவகிக்கும் சரியாகவே பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து செலவுகளும் தேவகியின் தலையில் வந்து விழுகின்றது. தேவகியும் இரு பிள்ளைகளும் பசியாறிக்கொண்டிருந்த உணவு, உறவுப் பெண்ணுக்கும் அவளது இரு பிள்ளைகளுக்கும் என அதிகமாக செலவழிந்தது. அதாவது ஆறு பேரின் சாப்பாட்டுச் செலவையும் தேவகியின் தலையில் ஏற்றிவிடுகின்றாள் உறவுக்காரப் பெண். இரண்டு மாதங்களுக்குப் போதுமான உணவு விரைவில் தீர்ந்து போகின்றது. ஒருநாள் சமைப்பதற்கு எதுவுமின்றி தேவகி கவலையுடன் படுத்திருக்க அந்த உறவுக்காரப் பெண்மணி வந்து 

'இன்னும் சமைக்கவில்லையா?' என்று அதிகாரத் தொனியுடன் கேட்கின்றாள். 'இல்லை' என்று வெடுக்கென தேவகி பதில் சொல்லி சமைப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றாள். 'இல்லை என்றால் நேரத்துடன் சொல்லியிருக்கலாம் தானே?' என்று அவள் அதட்டி பதில் சொல்ல, தேவகிக்கும் கோபம் தலைக்கேறுகின்றது. 

'ஏன் உனக்குத் தெரியாதா? ஒரு வீட்டுக்குள்ள ஒரே பானைக்குள்ள சோறு காய்ச்சிச் சாப்பிடுறாய். இருக்கிறது இல்லாதது தெரிய வேணும் தானே'என்கின்றாள் தேவகி.

கோபமுற்ற உறவுப் பெண் தான் இருப்பது தேவகிக்கு பிடிக்கவில்லை என்று வீண் புரளியைக் கிளப்பிக்கொண்டு வேறொரு வீட்டில் போய்த் தஞ்சமடைகின்றாள். அவள் சாப்பாட்டுக்கு வழி இருந்தபோது தேவகியுடன் இருந்துவிட்டு, உணவு தீர்ந்ததும் வேறொரு வீட்டுக்கு சென்றுவிடுகின்றாள். 
நாயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகள் நாய் இறந்த பின் கழன்று விடுவதைப் போல அவளும் கழன்று போய்விட்டதாக கதை நகர்கின்றது.

சமூக மாறுதல்கள் (பக்கம் 51) என்ற சிறுகதையானது சாதி வெறிகளை அடியோடு ஒ(அ)ழிக்க பாடுபடும் ஒரு கதைக் கருவாக மலர்ந்துள்ளது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மனித சாதி என்ற ஒன்றிலிருந்து வேறுபட்டு அதற்குள்ளேயே உயர் சாதி, தாழ்ந்த சாதி என்று பல கோத்திரங்கள், குலங்கள் உருவாகியிருக்கின்றன. ஐந்தறிவு கொண்ட யானைக்குக் கூட மதம் பிடித்தால் சீக்கிரம் அடங்கிவிடும். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதன்தான் மதவெறி பிடித்து மனித இனத்தையே கொன்றுவிடுகின்ற அளவுக்கு போய்விடுகின்றான்.

கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள குருக்களின் மகனை ஷபயிற்சிக்காக| அழைத்துப் போகின்றார்கள். குருக்கள் அவனைத் தேடாத இடமில்லை. ஆனாலும் மகனைப் பற்றிய செய்திகள் எதுவுமில்லாமலேயே காலம் கடந்து போகின்றது. ஒரு நாள் குருக்கள் வழக்கம் போல பூசைக்கான ஆயத்த மணியை அடித்துவிட்டு திரும்பும்போது அவரது மகன் அங்கு நிற்பதைக் காண்கின்றார். அவரது கண்களில் நீர் ததும்புகின்றது. ஓடிச்சென்று மகனைக் கட்டிக் கொள்கின்றார். சிறுவர்களுக்கு கடலை, மோதகம் என்பவற்றை அள்ளி வழங்கிவிட்டு மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். 

மாலை வேளையில் கோயிலின் தர்மகர்த்தா குருக்களின் வீட்டுக்கு வருகின்றார். அவர் குருக்களிடம் மகனைப் பற்றி விசாரித்துவிட்டு அடுத்ததாக என்ன செய்ய உத்தேசம் என்கின்றார். அதற்கு குருக்கள் 'ஆசாரசுத்தி' செய்துவிட்டு கோயில் பணிகளில் தனக்கு உதவியாக மகனை வைத்துக்கொள்வதாகக் கூறுகின்றார். அதைக்கேட்டு சினமடைந்த தர்மகர்த்தா 'பயிற்சிக்கு' அழைத்துப்போன மகனுக்கு சைவ உணவுகளைத்தான் சாப்பிடக் கொடுத்திருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? எனவே அவனை கோயிலுக்குள் விட முடியாது என்கின்றார்.

தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காரணத்துக்காக தன்னை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை என்பதை அறிந்த அவரது மகன், பயணப் பொதியுடன் தாய் தந்தையை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து விடைபெறுகின்றான். அதைத் தடுக்க திராணியற்று இருவரும் கண்கலங்கி நிற்கின்றனர். கொஞ்ச காலத்துக்குப் பிறகு மகன் பற்றிய செய்தி ஒன்று கிடைக்கின்றது. குருக்களின் மனைவி அதை அறிந்து அழுகின்றார். அதை கண்ணுற்ற குருக்கள் அவளை இப்படி சமாதானம் செய்கின்றார்.

'அவன் கலியாணம் கட்டியிருக்கிறது நமக்கு உடுப்பு வெளுத்துத் தாற கட்டாடியின்ற மகள் என்டதும் எனக்குத் தெரியும். அந்தப் பிள்ளைக்கும் எங்கட மகனுக்குரிய பிரச்சின போலத்தானாம். அந்தப் பிள்ளை கம்பசில படித்துக்கொண்டிருந்தவளாம். அனாவசியமான சிலரது செயற்பாடுகளால அந்தப் பிள்ளையும் தடுப்பில இருந்துவிட்டு வந்திருக்கிறாள். தடுப்பில இருந்த ஒரு காரணத்துக்காக அவளின்ர சமூகத்துல அவளை ஒருத்தரும் கலியாணம் கட்ட மறுக்கினம். அதால அவளும் எங்கட மகளும் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திரிக்கினம் பொலக்கிடக்கு. இது என்னைப் பொறுத்தளவில நல்லதொரு முடிவு. இதை நான் வரவேற்கிறேன். இனி அவர்களிலிருந்து ஒரு பதிய தலைமுறை உருவாகட்டும். அப்பதான் தீட்டுக்களும் மறையும். இந்த சமூகமும் திருந்தும்...'

இவ்வாறு சமூக அக்கறை கொண்ட யதார்த்த விடயங்களை கதைகளாக்கியிருக்கின்றார் கதாசிரியர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள். கன்னித் தொகுப்பு என்று கூற முடியாத அளவுக்கு கதைகள் மிகவும் தத்ரூபமாகவும் காத்திரமாகவும் அமைந்திருக்கின்றன. சமூக அக்கறையுடன் கூடிய அவரது இலக்கிய முயற்சி தொடர்ச்சியாக செயற்படுவதற்காக வாழ்த்துகின்றேன்!!!

நூல் - அழுகைகள் நிரந்தரமில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment