Sunday, February 1, 2015

78. அமைதிப் பூக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அமைதிப் பூக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அமைதிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் ஆவார். இவர் ஓர் இலக்கியப் பாரம்பரியத்தில் வந்தவர். சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்குத் தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப் புத்திரர். அவரின் இலக்கியப் பார்வையும் சொற்களை இலாவகமாகக் கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல. ஏன் என்றால் இலக்கியப் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்பட வேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப் பற்றம் தந்தை வழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு. இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக் கவிதைத் தொகுதியில் தரிசிக்க முடிகிறது.

புதுக் கவிதைத் தாத்தா மூ. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் கவிதைத் தொகுதியை இவரது அமைதிப் பூக்கள் என்ற கவிதை நூலின் தலைப்பு ஞாபகப்படுத்திப் போகிறது. 62 பக்கங்களில் ஜெஸ்கொம் பிரிண்டர்ஸின் மூலம் வெளிவந்துள்ள இந்த நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல், சமூக சீர்திருத்தங்கள், மனித நேயம், ஜீவகாருண்யம் பற்றி பேசும் கவிதைகளாக மட்டுமே உள்ளது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். சிறியதும் பெரியதுமான 46 கவிதைகளே இந்த நூலில் இடம்பிடித்துள்ளன.

இந்த நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமென்று அயராது உழைத்துவரும் முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவரான அல்ஹாஜ் எம்.என்.எம். அமீனுக்கே தனது நூலை நூலாசிரியர் அனஸ் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான முன்னுரையை வாசக நோக்கு என்ற தலைப்பில் மூதூர் இலக்கிய வட்டத் தலைவர் கலாபூஷணம் எம்.எஸ். அமானுல்லா எழுதியுள்ளார்.

நூலாசிரியர் தனதுரையில் ``உலகையே அழிவின் விளிம்பிற்குக் கொண்டுசென்ற அணுஆற்றலைக் கண்டுபிடித்த உலகப் பெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனை நிருபர்கள் பேட்டி கண்ட போது உலகத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஏதேனும் வழியண்டா? எனக் கேட்டபோது, ஆம் இருக்கிறது. அதுதான் சமாதானம் என்று கூறிய வரலாற்று நிகழ்வும் என் இதயப் பறப்பில் சமாதானத்திற்கான விதையைத் தூவிக்கொண்டிருந்தன. அதன் அடையாளமாகத்தான் அமைதிப் பூக்கள் எனும் இந்நூல் என்னால் எழுதப்பட்டது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி இந்நூலில் இடம்பிடித்துள்ள சில கவிதைகளைப் பார்ப்போம்.

உள்ளத்திலும், உலகத்திலும் அமைதியை வேண்டாதவர்கள் எவருமே இல்லை. இன்று உலகெங்கும் பொதுவாக சமாதானம் எட்டாக்கனியாக இருக்கும் வேளையில் அதை வேண்டி தினமும் மக்கள் துடியாய்த் துடிக்கின்றனர். மனதுக்கு அமைதி கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி பிறந்துவிடுகின்றது. ஆனால் அமைதி என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவரவரின் எண்ணங்கள் என்றும் கூறலாம். அழுக்கு எண்ணங்களை மனதிலிருந்து அகற்றிவிட்டாலே அமைதி பிறந்துவிடுகின்றது. அமைதி பற்றிக் கூறும் அமைதிப் பூக்கள் (பக்கம் 08) என்ற மகுடத் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகள்...

உலகெங்குமுள்ள உன்னத மக்கள் உவக்கும் உயரிய பூக்கள் இவை. கோடான கோடி உள்ளங்கள் இவற்றை நுகர்வதற்கான வழியைத் தேடி வருந்திக்கொண்டிருக்கின்றன. வேண்டிய வேளையெல்லாம் இலகுவில் எல்லோரும் பெற்றுவிடக்கூடிய பூவல்ல இவை. இவற்றைப் பெறுவதற்கு மனப்பக்குவம், விட்டுக்கொடுப்பு, பொறுமை போன்ற வெகுமதிகளை வழங்க வேண்டும். அமைதிப் பூக்களின் அவதாரத்தை மக்கள் வெண்புறாக்களின் உருவில் பார்ப்பதுமுண்டு. 

ஒடிக்கப்பட்ட மனுதர்மத்தின் கரங்கள் (பக்கம் 13) என்ற கவிதையில் பின்வரும் கருத்து சொல்லப்படுகிறது. நிகழ்காலத்தில் நிலவும் சில அசம்பாவித நிகழ்வுகள் சமாதானத்தின் கதவுகளை மெதுமெதுவாக மூடிக்கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலங்கள் இன்னு(று)ம் ஈரமுள்ள நெஞ்சங்களுக்குள் பாரமாக இருக்கின்றன. அமைதியான வாழ்வைத் தொலைத்துவிட்டு அவலக்குரல் எழுப்பும் இன்றைய வேளையில் அமைதியின் தேவை நன்றாக உணரப்பட்டிருக்கின்றது. இவற்றை மையப்படுத்திய வரிகளை கவிஞர் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

இன்று நாட்டு நந்தவனத்தில் புரிந்துணர்வுப் பூக்கள் துவேசச்சுடர்களால் சுட்டெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனுதர்மத்தின் கரங்கள் ஒடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தினமும் மரண ஓலங்களே.. எங்கள் காதுகள் வாங்கும் கதைகளாக உள்ளன.

வீரம் என்பது ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதல்ல. மாறாக கோபத்தைக்கூட அடக்கிக்கொள்வதுதான் என்று கூறப்படுகின்றது. சமாதானம் பற்றி பேசுகையில் பேசுபவரை பயந்தாங்கொள்ளியாக எண்ணுவதும்,  அமைதி பற்றி கதைக்கையில் அவரை ஆண்மையற்றவன் என்பதும், புரிந்துணர்வு பற்றி பேசுகையில் புரிந்துகொள்ளாமல் நடப்பதும் தொடர்கதையானதால் என் பயணம் (பக்கம் 16) என்ற கவிதையில்

இப்போது சமாதானம் பற்றிக் கதைப்பதங்கு எனக்குத் தயக்கமாய் இருக்கிறது. சமாதானம் பற்றி கதைக்கும் போது சண்டையிடச் சக்தியற்றவன் என்று எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறேன்.. என்று கவிஞர் கூறுகின்றார். இதனால் சமாதானம் பற்றி கதைப்பதற்கே தயக்கமாக இருக்கின்றது என்பதிலிருந்து கவிஞரின் உள்ளத்து வேதனை நன்கு புலப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

நூலின் தலைப்புக்கு ஒப்ப அநேகமான கவிதைகள் மனிதநேயம், துவேசமில்லாத நாடு, போரில்லாத வாழ்வு என்பவற்றை யாசித்தே புனையப்பட்டிருக்கின்றன. யுத்தப் புயல்கள் ஓயுமா? (பக்கம் 26) என்ற கவிதையும் சமாதானம் பற்றியே பேசியிருக்கின்றது. இக்கவிதையில் காணப்படும் படிமங்கள் ரசிப்புக்குரியதாக காணப்படுகின்றது. அதில் சில வரிகள் பின்வருமாறு..

போர் இருளால் போர்த்தப்பட்டிருக்கும் எம் மண்ணை மீண்டும் சமாதான உதயம் உவக்குமா? நாட்டு நந்தவனத்தில் மனித மலர்களை உதிரச் செய்யும் யுத்தப் புயல்கள் ஓயுமா? துப்பாக்கி வானின் குண்டு மழையில் நனையாதிருக்க சமாதானம் இங்கு குடை பிடிக்குமா? 

நூல்கள் (பக்கம் 57) என்ற கவிதை நல்ல புத்தகங்களின் அத்தியவசியம் பற்றி எடுத்துரைக்கின்றது. அறியாமை எனும் இருளை அகற்றி மக்களின் வாழ்வில் வெளிச்சம் தருவது கல்வியாகும். அக்கல்வியைப் பெறுவதற்கு வாசிப்பு மிக முக்கியமாகும். அதுபோல உள்ளத்தில் ஏற்படுகின்ற கசப்பான நிகழ்வுகளை மறக்கச்செய்வது இலக்கியமாகும். அவ்வாறான இலக்கிய நூல்களை வாசிக்கையில் இதயம் இலேசாகும். எனவே புத்தகங்கள் ஒரு மனிதனை செதுக்குகின்றன. கவிஞர் கீழுள்ள வரிகள் மூலம் இதனை நிதர்சனமாக்குகின்றார்.

மனிதனின் அறியாமைச் சுமையை அகற்ற உதவும் நெம்புகோல்.. வாழ்க்கைக் காரிருளில் மானுடத்திற்கு வழிகாட்டும் ஒளிச்சுடர்.. மனிதக் களனியின் செழுமைக்கு அறிவு மழை பொழியும் கார் மேகம்.. அறிவுப் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரம்.. உலகை ஞான வலம்வர உதவும் ஊன்றுகோல்.. இது அறிஞர்களின் அனுபவக் களஞ்சியம்..

நூலாசிரியர் எம்.எம்.ஏ. அனஸ் அமைதிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தவிர ஊர் துறந்த காவியம், மனிதம் என்ற நூல்களை வெளியிட்டுள்ளதுடன், மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் அதனை வெளியிட்டுள்ளார். இந்ந அடிப்படையில் இலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வரும் நூலாசிரியரிடம் மேலும் பல கனதியான தொகுதிகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இவரது இலக்கியப் பணிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - அமைதிப் பூக்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எம்.எம்.ஏ. அனஸ்
வெளியீடு - ஜெஸ்கொம் பிரிண்டர்ஸ்
விலை - 240 ரூபாய்

No comments:

Post a Comment