"மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இவர் எழுதியுள்ள "மொட்டுக்களின் மெட்டுக்கள்" என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் 70 பக்கங்களில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியீடு செய்துள்ளது. கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் ஏற்கனவே 2015 இல் மௌனத்தின் சத்தங்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தனக்கான சிறந்த ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் தனது மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிரதேச போட்டிகள் தொடக்கம் பல்கலையில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள் வரை இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்;. அத்துடன் 2017 இல் ஏறாவூர்ப் பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார கீதம் இயற்றியமைக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் கே. நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "சிறந்த புரட்சிக் கவிஞராக மிளிர்ந்த புரட்சிக் கமால் பிறந்த ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், புரட்சிக் கமால் பரம்பரையின் இன்றைய கால கட்டத்து இளந்தலைமுறைக் கவிஞர்" என்று இவருக்கு மகுடம் சூட்டியுள்ளார். அத்துடன் ஏறாவூரைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அனலக்தர் அவர்கள் நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "அப்பழுக்கில்லாமல் என் அடிச் சுவட்டைப் பின்பற்றி, மாணவரை சமூக மயப்படுத்தும் மகத்தான சேவையை நௌஷாத் செய்து வருகின்றார். அத்துடன் கலையிலக்கியப் போட்டிகளில் மாணவரை வழிப்படுத்தி, மாகாண - தேசிய மட்டங்களில் துலங்கச் செய்துள்ளமையும் பாராட்டுக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த சிறுவர் பாடல்கள் நூலில் 55 சிறுவர் பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான சித்தரங்களையும் இந்த நூலில் சேர்த்துள்ளார். சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களின் மனதைக் கவரும் வகையில் எளிய நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதானது சிறுவர்களுடன் இவருக்குள்ள ஈடுபாட்டையும் இத்துறையில் இவருக்குள்ள புலமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. இத்துறையில் இவருக்குள்ள விரிந்த சிந்தனை, பரந்த அறிவு, மொழியாற்றல், வாசிப்பு மூலமான தேடல் போன்றவையே இவ்வகையான சிறந்த பாடல்களை இவர் எழுதக் காரணமாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்துடன் இவரது தந்தையும் ஒரு கவிஞராக இருந்;துள்ளார்.
சிறுவர் படைப்புகளை இலக்கியவாதிகள் எல்லோராலும் இலகுவாக எழுத முடியாது. ஏனென்றால் இதற்கென்று சிறுவர்களின் மனப்பாங்குகளையும் விருப்பங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ள ஒரு அலாதியான, மிகவும் மென்மையான மனம் இருக்க வேண்டும். அவை இந்த நூலாசிரியருக்கு வாய்த்திருக்கிறது. இவர் கலைமானிப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி மட்டுமல்லாமல் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியருமாவார். மாணவர்களுக்கு மத்தியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ப் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து நற்பெயரைப் பெற்றுள்ளார். எனவேதான் இவரால் அழகிய தமிழில், சிறந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தி சிறந்த படைப்புகளை சர்வ சாதாரணமாக முன்வைக்க முடிகிறது. 2019 ஃ 2020 ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது வழங்கல் விழாவில் மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த நூலுக்கு சான்றிதழ் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும்.
இந்த நூலில் உள்ளடங்கியுள்ள சிறுவர் பாடல்களைப் பொருத்தமட்டில் சிறுவர்களுடன் மிகவும் தொடர்பான தலைப்புகளில் அமைந்த பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பொம்மை, மலர்த் தோட்டம், மரம் நடுவோம், ஓடி விளையாடு, காலைக் காட்சி, காக்கை, உண்டியல், பூனை, அப்பா, புகைவண்டிப் பயணம், வானவில் ஜாலம், ஆசான் ஆகிய தலைப்புக்களில் அமைந்துள்ள பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
இனி நூலில் உள்ள சில பாடல்களை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.
புத்தகம் படிப்போம் (பக்கம் 15) என்ற பாடல் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசுகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப இன்று வாழ்க்கையும் மாறிவிட்டது. புதுமைகளோடு பயணித்துக் கொண்டு பழமையானவற்றைக் கைவிடும் இச்சூழலில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அருகிப் போய்விட்டது. ஆனாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தராத வாசிப்பின் இரசனையை புத்தகங்களே நிறைவாகத் தந்துவிடுகின்றன. புத்தகத்தை ஏந்திய படியும் புத்தகத்துக்கு மாத்திரமே உரித்தான வாசனையுடனும் வாசிக்கின்ற போதுதான் வாசிக்கும் விடயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிடுகின்றன என்று பின்வரும் வரிகள் மூலம் கவிஞர் நௌஷாத் வாசிப்பின் அவசியத்தை முன் வைக்கின்றார்.
தினம் தினம் புத்தகம் படிப்பதனால்
சிறந்த அறிவும் ஆற்றலும் பெருகிடுமே
நினைவில் அதனை நிலையாய் பதிப்பதனால்
நல்ல பழக்கங்கமும் வாழ்வில் வந்திடுமே
புவி மெச்ச கணிப்பொறி இலக்கியங்கள்
புத்தம் புதிதாய் வளர் அறிவியல்கள்
கவி தரும் ஆற்றல் சிறுகதைகள்
கலந்து பருக்கும் நல்ல நூல்கள்
இயற்கையின் அழகியலோடும் வனப்போடும் மிக நெருங்கியது மலர்களே ஆகும். பூக்களின் அழகு யாரையும் கட்டிப் போட்டுவிடும். வர்ண ஜாலங்கள் மனதை வசீகரிக்கும். பூக்களைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை. சிறுவர்களை மிகக் கவர்ந்த பூக்களாலும் பூக்களோடு கொஞ்சிக்குலாவும் வண்ணத்துப் பூச்சிகளாலும் அழகுறுகிறது மலர்த் தோட்டம். அவ்வாறான மலர்களின் அழைகைப்பற்றி மலர்த் தோட்டம் (பக்கம் 18) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அழகு மலர்கள் சிரித்து
மகிழும் கூட்டம்
உலகு விரும்பும் நிறங்கள்
நிறைந்த தோட்டம்
புலர்ந்த பொழுதில் வண்டின்
இசை பாட்டும்
இழந்த இன்பம் எல்லாம்
இணைந்து கூட்டும்
இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான் என்பதற்கு புத்திமதி (பக்கம் 30) என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது கைகள் இல்லாத குருவி தன் கூட்டினை எவ்வளவு அழகாகக் கட்டிவிடுகிறது? சிறுவயதில் இரசித்த இத்தகைய விடயங்கள் இப்பொழுது நினைக்கையில் மிக மிக வியப்பாக இருக்கின்றது. குருவியின் புத்திமதியை ஏற்று குரங்கு தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளப் புறப்படுவதாக நிறைவுறுகிறது புத்திமதி என்ற பின்வரும் பாடல்.
குருவி ஒன்று மரத்திலே.. கூடு கட்டி வாழ்ந்தது.. குடும்பமாக குஞ்சுகள்.. கூட்டினுள்ளே இருந்தன.. மழையில் நனைந்த குரங்கு ஒன்று.. மரத்தின் அடியில் நின்றது.. மரத்தின் கூட்டில் குருவிகள்.. மகிழ்ந்து வாழக் கண்டது.. அலகினாலே அருமைக் கூடு.. அமைத்து நாங்கள் வாழ்கிறோம்.. அதேபோல நீயும் உனக்கு.. கூடு கட்டி வாழுவாய்.. கையில்லாத நாங்களோ.. களிப்புடனே இருக்கிறோம்.. கையிருந்தும் கவலை ஏன்.. என்று குரங்கைக் கேட்டது.. குருவி சொன்ன யோசனைகள்.. குரங்கின் உள்ளம் தாக்கவே.. உருகி தலை நிமிராமல் வீடமைக்கப் போனது.
உண்டியல் (பக்கம் 38) என்ற பாடல் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது. சேமிப்பின் ஸ்திரத் தன்மையை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கு உண்டியல் மிகப் பிரதானமாக உள்ளது. சிறுவயதில் இருந்தே சேமிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உண்டியல் மிகச் சிறந்த உதாரணம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கேற்ப வளர்ந்த பிறகும் கையிருப்பை சேமிப்பதற்கான வழி வகையைக் கூறுவதாக கீழுள்ள பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.
உண்டியலாம் உண்டியல்
உடைபடாத உண்டியல்
உண்டு குடித்து மிகுதி போக
சேர்த்து வைக்கும் உண்டியல்
வாழ்க்கையில் எத்தகைய உயரத்துக்குப் போனாலும் அதைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்கள்தான். நம்மையெல்லாம் ஏற்றிவிட்ட ஏணியாகி, நம்மை ஆளாக்கிய அவர்களை வாழ்வின் கடைசி எல்லைவரை மறந்து விடவே கூடாது. ஆசிரியர்களின் ஆசியால் உயர்ந்த பல மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கிணங்க ஆசிரியர்கள் எம் வாழ்வு எனும் மரத்தின் மிக முக்கியமான வேர்கள்.; ஆசிரியர்கள் பற்றி ஆசான் (பக்கம் 58) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அன்னை தந்தை இருவரும்
இறைவன் தந்த அருளதாம்
அடுத்ததாக ஆசானும்
ஆண்டவனின் வரமதாம்
அறிவுக் கண்ணைத் திறக்கவே
அரிச்சுவடி தந்தவர்
விரிவுபட்ட உலகத்தை
விளங்கிக் கொள்ளச் செய்தவர்
கைத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களது வாசிப்பு ஆற்றலை மேம்படுத்த இவ்வகையான காத்திரமான நூல்களை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது இக்காலத்தின் தேவையாகவே உள்ளது. கவிஞர் கே. நௌஷாத்துக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!!
நூல் - மொட்டுக்களின் மெட்டுக்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்;
நூலாசிரியர் - ஏரூர் கே. நௌஷாத்
தொலைபேசி - 0778205177
முதற் பதிப்பு - 2019
வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்