"அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு
ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் அவர்கள். டிப்ளோமா முடித்து, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரான இவர் பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.
அடிமன அதிர்வுகள் என்ற கவிதைத் தொகுதிக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில் "அடிமன அதிர்வுகள்" என்ற கவிதைத் தொகுதி பேசு பொருள்கள் பலவற்றையும் பேசாப் பொருள்கள் சிலவற்றையும் கொண்டு அமைந்துள்ளது. பேசு பொருள்கள் என்ற விதத்திலே தமிழ் மொழி, இயற்கை, முதியோர் நிலை, காதல் முதலியன சார்ந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். பேசு பொருள்களாயிருப்பினும் அவற்றினூடே சில புதுமைகளை வெளிப்படுத்தியுமுள்ளார். தமிழ் மொழி பற்றி அமைந்த கவிதைகளுடாக தமிழிலக்கிய வரலாறு - முக்கியமான நூல்கள் பலவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் நவீன கவிதைத் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் பற்றிப் பாடாதவரில்லை என்றே குறிப்பிடலாம். கிழக்கிலங்கையைப் பொறுத்தளவிலே நீலாவணன், திமிலைத்துமிலன், அண்ணல் போன்ற மேலும் பலரும் தமிழ்மொழி பற்றிப் பாடியிருப்பினும் அவற்றினூடே இவ்வாறு தமிழிலக்கிய வரலாறு பேசப்படவில்லை..|| என்று குறிப்பிட்டுள்ளார். நூலுக்கான காத்திரமானதொரு பின்னட்டைக் குறிப்பை கிழக்குப் பல்கலைக்கழக, சிரேஷ்ட விரிவுiராளர் ஏ. ஜாபர் ஹுசைன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
ஆன்மீகம் சார்ந்தவை, மொழிப் பற்று, இயற்கை மீதான காதல், வறுமையின் கொடுமை, முதியோர் நிலை, சமூக நிலை, காதல் கவிதைகள் ஆகிய கருப்பொருட்களில் கவிஞருக்கான கவிதை வெளி, நூலெங்கும் பறந்து விரிந்து செல்கின்றன.
நூலிலுள்ள என் இறைவன் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை உலகத்தைப் படைத்துப் பரிபாலித்து இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமை பற்றிப் பேசுகின்றது. கோள் மண்டலத்தைப் படைத்து அவற்றை நேரம் பிசகாமல் சீராக இயக்குபவன் இறைவன். நாம் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து எமக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஏனைய உயிரினங்களுக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். மிக அழகாக எழுதப்பட்டுள்ள இக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறு:
அந்தரத்திற் கோள்களினை
எந்தவோர் இணைப்புமின்றி
பந்து போற் சுழல வைத்து
பாலனம் செய்கிறவன்
அற்பத் திரவத்தால்
ஆண் பெண்ணை உருவாக்கி
அரவணைத்து இரட்சிக்கும்
அன்பின் வடிவமவன்
கல்லிடைத் தேரை முதல்
கருப்பைச் சிசு வரையில்
எல்லாவுயிர்களுக்கும்
இரணம் கொடுக்கிறவன்
எம்மையெல்லாம் வாழ்த்தி வாழ வைத்திருக்கிறது நம் தமிழ் மொழி. சங்க கால இலக்கியம் தொட்டு இக்காலம் வரை எத்தனையெத்தனை எழுத்தாளர்கள் பல்வேறு விதமான படைப்புகளைத் தந்தாலும் எதிலும் புதுமையோடு இயைந்திருக்கக் கூடியது தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் மாயாஜாலம் செய்து எம்மை மெய் சிலிர்க்க வைக்கும் தமிழைப் பற்றியே கன்னித் தமிழ் மொழி (பக்கம் 05) என்ற கவிதை பேசுகிறது.
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தின் முன்தோன்றி
முதல் இடை கடையென
முச்சங்க மமைத்து
இயலிசை நாடகமாய்
இனிதே வளர்ந்த மொழி
செந்தமிழாம் நாம் பேசும்
கன்னித் தமிழ் மொழி
பெண்ணழகைப் பற்றிப் பாடாத ஆண் கவிஞர்கள் யாரும் இருக்க முடியாது. பெண்களின் விழிகள், வதனம், பற்கள், இதழ்கள் என்று எத்தனைப் பேர் எவ்வாறு எழுதினாலும் பெண்ணின் அழகை ஒவ்வொரு கவிஞரும் தத்தமது இரசனைக்கு ஏற்ப சொல்வதில் பெண்ணின் பெருமை அதிகரிக்கிறது. சுந்தரத் தமிழணங்கு (பக்கம் 11) என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் இதழோரப் புன்னகையைத் தோற்றுவிக்கிறது.
பாளை பிளந்து பளிச்சிடும்
பல்லழகுப் பாவையவள்
சொல்லாடச் செல்வோர்க்கு
கல்லாடங் கற்பிப்பாள்
வேல் விழியிரண்டும்
வில் வளைவுப் புருவங்களும்
ஏகலைவன் விரல் கொடுத்த
மா பாரதக் கதை கூறும்
சங்குக் கழுத்துடன்
அங்கந் தழுவிச்
சங்கமமாகி விட்டால்
சங்க காலப் பெருந்திணையாம்
இவர் ஏற்கனவே சுவனத்து மலர்கள் (சிறுகதைத் தொகுதி), பெண்ணியம் (கவிதைத் தொகுதி), ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்ப் பிரதேச செயலகம் இந்த நூலாசிரியரைப் பாராட்டி கௌரவித்துள்ளது. தனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளுக்காக பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் பல பரிசில்களையும் பெற்றுள்ள இவருக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இவரது இலக்கியப் பணிகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!
No comments:
Post a Comment