பர்ஹானா அப்துல்லாஹ்வின் "நான் முகிலாகிறேன்"
கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இயல்பிலேயே எழுத்தார்வமும் எழுத்து வளமும் கொண்டவர்களின் கவிதைகளில் மூழ்கி வாசிக்கும் போதே தெரிந்துவிடும் இவை முத்தான கவிதைகள் தான் என்று. அந்தவகையில் நூலாசிரியரின் கவிதைகள் அவரது தேர்ந்த வாசிப்பையும் கவிப் புலமையையும் காட்டி நிற்கின்றது.
'மக்கொனையூராள்' என்ற புனைப் பெயரில் எழுதி வரும் பர்ஹானா அப்துல்லாஹ் பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதைத் துறையில் மிகவும் ஆர்வங்கொண்டவர். அதனால் தான் அக்காலங்களில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில் மிகவும் ஆர்வமாகக் கலந்துகொண்டு பல வெற்றிகளையும் பெற்றுள்ளார். தன் படைப்புகளை இஸ்லாம் இயம்பும் நெறிமுறை தவறாமல் முன்வைப்பதில் இவர் மிகவும் கரிசனை காட்டுகின்றார். கவிதை தவிர சிறுகதை, பேச்சு, கட்டுரை, பாடல், நாடகம் போன்ற துறைகளிலும் இவருக்கு ஈடுபாடுகள் அதிகம்.
பாடசாலைக் காலத்தில் தொடர்ந்த இவருடைய எழுத்தார்வம் குடும்பப் பெண்ணாக மாறிய பின்பும் இன்றுவரை தொடர்கின்றது என்பதில் உண்மையில் இவருடைய கணவரையும் இவரது குடும்பத்தாரையுமே பாராட்டியாக வேண்டும்.
72 பக்கங்களை உள்ளடக்கி அண்மையில் வெளிவந்திருக்கும் "நான் முகிலாகிறேன்" பர்ஹானாவின் இரண்டாவது கவிதைத் தொகுதி. நானறிந்த வகையில் இந்தக் கவிதைத் தொகுதியில் மானிட நேயம், இயற்கையின் வனப்பு, நாட்டு நடப்பு,போலி மனிதர்களுக்கான சாடல், பொறுமையின் வெகுமதி, பிள்ளைப் பாசம், தாய்ப் பாசம், நட்பின் ஏக்கம், பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், மிகுந்த போராட்டங்களுடன் வாழ்வதற்கு எத்தனிக்கும் அடிப்படை வசதிகளற்ற மலையக மாதுவின் மனக்குமுறல்கள், நட்பின் அருமை, ஆன்மீகம், தமிழ் மொழிப் பற்று, நோன்பின் மாண்பு, தந்தைப் பாசம் போன்ற பாடுபொருள்களே பெரும்பாலும் இக்கவிதைத் தொகுதியின் மூச்சாக அமைகிறது. இக்கவிதைகளின் ஊடாக கவிஞர் முன்வைக்கும் கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்க விடயங்களாகும்.
பொதுவாக பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற கவிதைகள் என்ற அடிப்படையிலும் பர்ஹானாவின் கவிதைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று ஐயமில்லாமல் கூறலாம். இந்தக் கவிதைகளுக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுகின்ற மானிட நேயம் இங்கு கவனிக்கத்தக்கது. பர்ஹானாவின் "நிசாந்தம்" கவிதை நூலுக்குப் பின்னரான இடைக்கால எழுத்தின் முதிர்வு "நான் முகிலாகிறேன்" கவிதைத் தொகுதியில் விரவியுள்ளதை நன்கு அவதானிக்கலாம்.
நூலில் இடம்பிடித்துள்ள "நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" (பக்கம் 01) என்ற இவரது முதலாவது கவிதை பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது. பெண் என்பவள் சிலவேளைகளில் பூவைப் போலவும் சில வேளைகளில் தீயைப் போலவும் இருக்கக்கூடியவள். வீட்டிற்குள் பூவாகவும் வெளியே தீயாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வேறு எவரும் அணுவளவும் அசைக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. பெண்களின் மேன்மையைப் பற்றி எடுத்தியம்புவதாக அமைந்துள்ள இக்கவிதையின் சில வரிகள் இதோ:-
அழுதிருந்த இருவிழி கண்ணீர் துடைத்து
அகத்தினுள் அடைத்திட்ட எண்ணங்கள் எடுத்து
அழகாய் அவள் இன்று வண்ணங்கள் படைத்து
அரங்கேற்றுகிறாள் சுயமாய் அவளாக ரசித்து
தரமான பொழுதுகளுக்காய் எழுத்துக்களை வளைத்து
தனக்கான அடையாளம் அழகாக விதைத்து
ஆளுமை திறன்களால் சிறகுகள் விரித்து
ஆற்றல்களால் ஒளிர்கின்றாள் தடைகளை உடைத்து
காதல் கவிதைகளைப் படைக்க இக்கவிஞர் முயற்சிக்கவில்லை. மாறாக வாழ்க்கையை, போராட்டங்களுடன் கடக்கும் மனிதர்களை ஆசுவாசப்படுத்தும் கவிதைகளை முன்வைக்கவே பெரிதும் எத்தனிக்கின்றார். "இனிமேலும் கேட்பாயா...?" (பக்கம் 33) என்ற தலைப்பில் அமைந்த கவிதையினூடாக இதனைப் பறைசாற்றி நிற்கின்றார்.
காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை என்ற பொது வழக்கை அவ்வப்போது சில கவிஞர்கள் தகர்த்தி புதிய விதி படைக்கிறார்கள். சமூகத்தின் அடிநாதமாக ஒலிக்கின்ற அவர்களின் கவிதைகளில் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்தவகையில் நூலாசிரியரும் தன் கவிதைகளின் பல்வேறுபட்ட கருப்பொருட்களை எடுத்து நோக்கியுள்ளார் என்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
"விழி நிரப்பிய கனவுகள்" (பக்கம் 42) என்ற தலைப்பில் அமைந்த கவிதை மலையகத்தில் அன்றாட வாழ்வாதாரத்திற்காக கொழுந்து பறித்துச் சீவிக்கும் மலையக மாந்தர் பற்றிப் பேசுகிறது. காலம் காலமாக பேசப்பட்டு வரும் முக்கியமான பிரச்சனைகளில் இதுவுமொன்று. பலராலும் எடுத்து நோக்கப்பட்ட இந்த விடயம் இன்றளவிலும் முன்னேற்றம் காணவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அதிகாலையில் துயில் களையும் ஒரு மலையக மாதுவின் வாழ்வியலை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற இந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-
காலையில கண்விழிச்சு கொழுந்து பறிக்கப் போறவளே
ஆலையில கரும்பு போல ஆனதடி உன் வாழ்வு
தோட்டத்தில இலை பறிச்சு கூடயில போடுறியே
வாட்டத்தில மனசிருக்க கூடயத்தான் நினைக்கிறியே
பனிமறையாக் காலையில பணிபுரியப் போறவளே
விழிநிறையக் கனவடுக்கி விடியலைத் தேடுறியே
மழைப்பொழுது வந்துவிட்டால் வீடெல்லாம் நீராச்சு
மலைமேடு சரியுமென்று அச்சமே வாழ்வாச்சு
உலகில் தோன்றியுள்ள எத்தனையோ மொழிகள் கால வெள்ளத்தைக் கடக்க முடியாமல் அழிந்துவிட்டன. உலகில் இன்றும் பயன்பாட்டிலுள்ள பழமையான 10 மொழிகளில் தமிழும் இடம் பிடித்துள்ளது. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்றார் பாரதியார். தமிழ் என்றால் எளிமை, தமிழ் என்றால் அழகு, தமிழ் என்றால் அமிர்தம். தேனிலும் இனியதே நம் பைந்தமிழ் மொழி. செம்மொழியாம் தமிழ் மொழி மீது அதிக பற்றுக் கொண்ட காரணத்தினால் "இன்பத் தமிழ் தேனருவி"(பக்கம் 47) என்ற கவிதையைத் தமிழை நேசிக்கும் வாசகர்களுக்காக மிகவும் அருமையாகப் படைத்துள்ளார் கவிஞர். உங்கள் இரசனைக்காக சில வரிகள் இதோ:-
தாய்மொழியாய் வாய்த்தது செந்தமிழ் எனக்கு
வாய்மொழிய வழிந்தோடும் சுவைத்தேன் அடுக்கு
தாயவளின் நேசம் நான் என்றும் உனக்கு
தூயதமிழில் எழுதுவதே என் சீரிய இலக்கு
மோகமேனோ பிறமொழிமேல் தமிழ்மொழி மறந்து
மறவாயோ உன் தாயை நீ வேற்றாளில் வியந்து
மலர் நாடும் வண்டினம்போல் நீ தேன்தமிழ் அருந்து
மகிழ்ச்சியுடன் நாம் படைப்போம் நற்றமிழ் விருந்து
மக்கொனையூராள் பர்ஹானா அப்துல்லாஹ்வின் "நான் முகிலாகிறேன்" கவிதைத் தொகுதி நிச்சயமாக கவிதை இரசிகர்களைக் கவரும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. இவரது இலக்கியப் பணிகள் சிறப்பாகத் தொடரவும் மேலும் காத்திரமான பல கவிதைத் தொகுதிகளை வெளியிடவும் எனது பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு. பர்ஹானா அப்துல்லாஹ்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
நூல் - நான் முகிலாகிறேன்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்
தொலைபேசி இலக்கம் - 0774476621
விலை - 550 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:-
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நன்றிகள்:-
தினகரன் பத்திரிகை - 2024.10.04 (பக்கம் 17)
No comments:
Post a Comment