Saturday, October 11, 2025

158. 'ஹீரா இசை அமுதம்' (ஞான கீதங்கள்) நூலாய்வு

 'ஹீரா இசை அமுதம்' (ஞான கீதங்கள்) நூலாய்வு


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்கள் வரிசையில் இறை ஞானிகளின் நேசரான, ஸூஃபி கவி எம்.டப்ளியு.எம். றியாழ் அவர்களும் இணைந்துகொள்கின்றார் என்பதில் தென்னிலங்கையைச் சேர்ந்தவள் என்ற வகையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். றியாழ் ஆசிரியர் அவர்களும் நானும் வெலிகமையைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ஒரே தெருவில் (புதிய தெரு) வசித்து வந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இவர் வெளியிட்டுள்ள ஹீரா இசை அமுதம் (ஞான கீதங்கள்) என்ற இந்த நூல் அஸ்ஸித்தீகீ மலர் மன்றத்தினால் 63 பாடல்களை உள்ளடக்கிய வகையில் 70 பக்கங்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாடல்களை இனிமையான பழைய, இடைக்கால தமிழ் சினிமாப் பாடல்களின் மெட்டிலும் மற்றும் சிலவற்றை ஹிந்திப் பாடல்களின் மெட்டிலுமே நூலாசிரியர் எழுதியுள்ளார். மெட்டுக்களின் இராகம் மாறாமலும் சந்தம் பிசகாமலும் இவர் யாத்துள்ள இந்தப் பாடல்கள் மிகுந்த இரசனைக்குரியதாக அமைந்துள்ளன என்பதைப் பாராட்டியாக வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் பாடல்கள், கீதங்கள், இசைநயம் கொண்ட படைப்புகள் போன்றவை மனித மனதிற்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பாடல்களைத் தாங்கி வெளிவந்திருக்கும் பனுவலாகவே இந்த நூலைக் குறிப்பிடலாம். பாடல்களின் வரிகளைப் பொதுவாக நோக்கும் போது நூலாசிரியரின் இலக்கிய ஆர்வம், கற்பனையாழம், ஆன்மீகச் சிந்தனை, தமிழ் மொழி மீதுள்ள பற்று, இத்துறைகளில் அவருக்குள்ள விருப்பம் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. 

இந்த நூலின் தனிச் சிறப்பு இசைநயமாகும். ஒவ்வொரு பாடலும் எளிதாக பாடக் கூடிய வகையில் பழைய பாடல்களின் மெட்டில் எழுதப்பட்டுள்ளன. பாடல்களின் ஓசை, ஒத்திசை, சொல் இனிமை போன்றவை வாசகனை ஈர்த்து, பாடல்களை மெட்டுக்கு ஏற்ப பாடும் போது இன்பம் தருவதாக அமைகின்றன. பாடல்களில் வெளிப்படும் உணர்ச்சிகளான பக்தி, அன்பு, ஏக்கம், நம்பிக்கை, அமைதி - அனைத்தும் மனதைக் கவர்கின்றன. வாசிக்கும் போது மட்டுமல்ல, பாடும் போதும் அந்த உணர்வுகள் ஆழமாக அனுபவிக்கப்படுகின்றன. பாடல் வரிகளை எளிமையான சொற்களாலும் ஆழமான சிந்தனைகளையும் வெளிப்படுத்தி அமைத்திருப்பது எழுத்தாளரின் திறமைக்குச் சான்றாகும். பாடல்கள் கவிநயம் கொண்டதால் அவை இலக்கியச் சுவையையும் வாசகனுக்கு அளிக்கின்றன.

நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற மேல் மாகாண சங்கீத ஆசிரிய ஆலோசகர் வைத்திலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் நூலாசிரியர் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'எம்.டபிள்யு.எம். றியாழ் அவர்கள் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் பணியை ஆரம்பித்து ஆசிரியராக பல பாடசாலைகளில் கற்பித்து வந்துள்ளார். அச்சந்தர்ப்பங்களில் அக்குறித்த பாடசாலையின் பாடசாலைக் கீதங்களை வடிவமைத்து தமது கவிப்புலமையை ஆரம்ப காலத்திலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நிர்வாகத்திலும் கலைத் துறையிலும் காணப்படும் ஆர்வம் காரணமாக இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் (SLPS 1) கடமையாற்றினார். இவர் அதிபராகக் கடமையாற்றிய வெலிகம அறபா தேசிய பாடசாலைக் கீதத்தை வடிவமைத்துக் கொடுத்த பெருமை றியாழ் அவர்களின் இந்த நூலாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது' என்று பாராட்டியுள்ளார்.

நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள தென் மாகாண ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எம். ஹிஷாம் அவர்கள் நூலாசிரியருக்குள்ள இலக்கிய மற்றும் இசை மீதான ஈடுபாடு குறித்தும் அவருடைய நூல் உருவாக்கம் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இலக்கிய வானில் கட்டுக்கடங்காத எல்லைகளை மீறி, தமிழின் அழகைத் தரணியில் விதைத்து வருவது கவிதை என்றால் அது மிகையாகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிதைகளை இராகம், தாளம், பாவம் சார்ந்த இசை மூலம் உயிரூட்டி ஆன்மீகம், லௌகீகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் பாடல்களாக அமையப்பெற்றுள்ள இந்த நூலை நோக்கும் போது உள்ளம் பூரிப்படைகின்றது. இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஓர் அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும் உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகுச் சாதனம்தான் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். இன்பம், துன்பம், சோகம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால்தான் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை, 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைக்கின்றனர் சான்றோர். இலக்கிய ஆர்வமும் இசை இன்பமும் கொண்ட றியாழ் அவர்கள் தனது கற்பனையில் உதித்த இலக்கியச் செழுமைகளை ஆத்மீக ஞானத்தை ஒட்டியும் லௌகீகம் மூலம் ஆன்மீக வழியை அடையக்கூடிய விதமாகவும் தத்துவ ரீதியான பாடல்களை ஏட்டிலே சிதற விட்டுள்ளார்.' 

நூன் முகம் என்ற தலைப்பில் நூலாசிரியர் தனக்கும் இசைக்குமான தனது இளமைக் கால தொடர்பைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றார். 'இசைக்குத் தெரியும் எனது இளமைப் பருவம். அப்பருவத்தில் வானொலியில் இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சியைத் தவறாது கேட்டு வருவேன். அப்பாட்டுக்குரிய பாடல் புத்தகங்களையும் வாங்கிப் படித்து மகிழ்வேன். இது என்னை இத்துறையில் ஈடுபடச் செய்தது. இதன் காரணமாக இசைப் போட்டிகளிலேயே நான் பங்குபற்றி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் மீலாத் விழாக்களிலும் இஸ்லாமிய கீதங்களைப் பாடிப் பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது ஆசிரியர் தொழிலில் நான் கடமை புரிந்த எல்லாப் பாடசாலைகளிலும் இசை அமுதத்தினைப் பொழிவதற்குக் களமாய் அமைத்துக்கொண்டேன். எனவேதான் இன்பத் தேனையும் வெல்லும் இசையை அவ்வப்போது அசைத்துப் பாடல்களையும் அமைத்துக் கொடுத்து வருடா வருடம் நடைபெறும் தமிழ் மொழித் தினத்திற்கும் எனது பங்களிப்பினை வழங்கியுள்ளேன். இசை ஒலியால் ஆனது. செவியால் உணர்வதற்கு உரியது. இலக்கியத்தின் வகைகளுக்குள் சிறந்ததாகிய பாட்டு என்பது இசையுடன் கூடியது.'

நூலுக்கான கவி வாழ்த்தை டாக்டர் எம்.எச். நூர்டீன் அவர்களும், வாழ்த்துரையை இந்தியாவைச் சேர்ந்த பிலாலிய்யா நபி புகழ் கவிதாயினி எம். சலீமா பானு மற்றும் அஷ்ஷேய்க் மௌலவி முஹம்மது பாயிஸ் முஹியத்தீன் அவர்களும் வழங்கியுள்ளார்கள். 

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே, வா வா வசந்தமே சுகந்தரும் சுகந்தமே, நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது, பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை, கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே, வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு,  யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது, நான் ஒரு சிந்து காவடிச் சிந்து, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே, பாடவா உன் பாடலை, மேகமே மேகமே பால் நிலா தேயுதே, பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே, உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை, நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே, சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம், நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை, ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போhர்க்களமே போன்ற நெஞ்சம் கவரும் பழைய மற்றும் இடைக்கால சினிமாப் பாடல்களின் மெட்டுக்கு இசைவான நூலாசிரியரின் பல  பாடல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. பழைய ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்கு இசைவான ஒரு சில பாடல்களும் இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. இவ்வகையான பழைய மற்றும் இடைக்காலப் பாடல்கள் காற்றலைகளில் தவழும் போது இரசித்துக் கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

இனி பாடலாசிரியர் றியாழ் அவர்களின் நூலில் இடம்பிடித்துள்ள 63 பாடல்களில் ஒரு சில பாடல்களைத் தொட்டுக்காட்டி ஹீரா இசை அமுதத்தில் நனைய வாசகர்களையும் அழைத்துச் செல்கின்றேன். 

'மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே' என்ற பாடலின் மெட்டில் நூலின் முதலாவது பாடலாக அமைந்துள்ள 'மண்ணில் வந்த ஒளியே இறை ஒளியில் பூத்த மலரே' என்ற பாடல் வரிகள் தாஹா நபிக்கான தாலாட்டாக எழுதப்பட்டுள்ளது. தாஹா நபியை 'மண்ணில் வந்த ஒளி' எனக் கொண்டாடி, இறைவனின் அருளால் பிறந்த தூய்மையான மலராக சித்தரிக்கின்றது இந்தப் பாடல் வரிகள். மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்களின் பிள்ளைப் பருவத்தை விண்மீன்களும் மேகங்களும் தாலாட்டுகின்றன என்று பாடலாசிரியர் அழகாக வர்ணித்துள்ளார். நபியின் அழகு, நறுமணம், அருள் அனைத்தும் உலகிற்கு தெய்வீக ஒளியாய் விளங்குவதாகக் குறிப்பிட்டு இறைவன் அளித்த அருளும் அழகும் நபியின் உருவத்தில் ஒளிர்வதாக வெளிப்படுத்தியுள்ளார்.


மண்ணில் வந்த ஒளியே 

இறை ஒளியில் பூத்த மலரே - 2

அன்பு கொண்ட அன்பின் ஒளி 

கண்ணில் எங்கும் மின்னும் ஒளி ஒன்றன்றோ 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே 

(மண்ணில்)


எட்டி நிற்கும் வானம் பக்கம் வந்து நின்று 

பிள்ளையினைத் தாலாட்டும் 

விண்ணின் குளிர் மேகம் பக்கம் வந்து நின்று 

பிள்ளையினைச் சீராட்டும் - 2

விழிகளில் ஒளிமயம் உடலினில் நறுமணம்

இங்கே நூராகும் 

உறங்கிடும் வரையினில் அன்பின் தாய்மடி 

மகிழ்ந்திடும் சேயாகும் 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே

(மண்ணில்)


தங்க நிறப்பாதம் சின்ன மணிப்பாதம் 

மண்ணைத் தொடக்கூடாது 

பொன்னழகு மின்னும் இன்முகம் பார்த்து 

கண்கள் படக்கூடாது - 2

உலகினில் ஒளிகளில் மின்னும் அழகினை 

இறையோன் தந்தானோ 

மணிக்கதிர் மின்னிடும் உடுக்களின் அழகினை 

இறையோன் தந்தானோ 

இறையே அருளே 

இறையே அருளே அருளின் ஒளியே ஒளியின் விளக்கே

(மண்ணில்)


அடுத்து பக்கம் 13 இல் இடம் பிடித்துள்ள 'நான் ஒரு சிந்து காவடிச் சிந்து' என்ற மெட்டிலமைந்த 'நான் ஒரு வித்து ஏகனின் சொத்து' என்ற பாடல் மனித வாழ்வின் நிலையின்மை, ஆன்மீகத் தேடல் மற்றும் இறை அருளின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறது. உலகப் பயணத்தின் அர்த்தமறியாமை, அறிவின் வரம்பு, ஆன்மாவின் நிலையைக் கண்டு பிடிக்கும் தேடல் ஆகியவை கவியுணர்வாக ஒலிக்கின்றன. இப்பாடல் மெட்டில் ஒலிக்கும் ஓசை பாடலைப் பாடும் போது ஒரு வகையான உற்சாகத்தைத் தருகிறது. வாழ்வின் ஆழமான கேள்விகளை எளிய கவிப்பாங்கில் வெளிப்படுத்திய சிந்தனைப் பாடல் இது வெளிப்படுகின்றது.


நான் ஒரு வித்து ஏகனின் சொத்து 

ஞானம் தெரியவில்லை 

இந்தக் கோலம் புரியவில்லை

மண்ணில் இருந்தும் வானில் பறந்தும் 

அர்த்தம் புரியவில்லை 

அதை எண்ண அறிவுமில்லை

(நான் ஒரு வித்து)

 

நில்லாத உலகிற்கு என்னென்ன பேரோ 

நாடோடி வாழ்வுக்கு நானிங்கு யாரோ 

மண்ணோடு போராடும் அலையாட்டம் பாரு 

நிலையாத வாழ்விற்கு விதைபோட்ட யாரு? 

தேடிப் படிச்சா சந்நிதி உண்டு 

ரூஹுக்குள்ளேயும் சங்கதி உண்டு 

கண்டுபிடி...

(நான் ஒரு வித்து)


வித்தொன்று வழி தேடி பார்க்கின்ற வேளை

அல்லான்னு சொல்லவும் அறிவாளர் இல்லை 

இக்கதி அப்போது தெரிந்திருந்தாலே 

சொர்க்கத்தில் நானே இருந்திருப்பேனே

இறையெழுத்தென்ன 

முடிவெழுத்தின 

சொல்லுங்களே...

(நான் ஒரு வித்து)


பக்கம் 35 இல் இடம்பிடித்துள்ள 'உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை' என்ற பாடலின் மெட்டில் அமைந்த 'வரவுகள் தொடர் நிலை முடிவுகள் மறு நிலை' என்ற பாடல் வாழ்வின் வரவுகளும் முடிவுகளும் சுழற்சி போல தொடர்வதைக் கூறுகின்றது. மனத்துயரமும் பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கி கடந்து செல்லும் வலிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் என்பதையும் வாழ்க்கையின் துயர நிலைகள் இன்பம் நோக்கி செலுத்தும் என்பதையும் காட்டுகிறது. துன்பத்தைக் கடந்து இன்பம் பிறக்கும் என்ற நம்பிக்கையை இப்பாடல் வரிகள் உறுதிப்படுத்துகிறது.


வரவுகள் தொடர்நிலை 

முடிவுகள் மறுநிலை 

ஒரு நிலை என்றும் முடியலாம் 

முடிவிலும் நன்மை தொடரலாம் 

இது எல்லாம் சுகமே 

(வரவுகள்)


எந்நெஞ்சிலே பாரம் எனக்காகவே நானும் 

சுமைக் கோலமாய்த் தாங்குவேன் 

என் கண்களின் ஓரம் எந்நாளுமே ஈரம் 

கண்ணீரை நான் மாற்றுவேன் 

வேதனை தீரலாம் வெண்பனி விலகலாம் 

என் கோலமே புது வடிவிலே 

நானும் மறையலாம்

(வரவுகள்)


வாழ்வென்பதே மாயம் தொடர்கின்றதோ ஏகம் 

நாற்றிசையிலும் ஆனந்தம்

நான் கண்டதோ துன்பம் இனிவாழ்வெல்லாம் இன்பம்

அவனேகமே ஆரம்பம் 

நம்மிலே புது எழில் எங்குமே கலந்தது 

எம் சொந்தமே எங்கும் இணைந்தது 

இன்பம் பிறந்தது

(வரவுகள்)


பக்கம் 45 இல் இடம்பிடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை' என்ற மெட்டில் அமைந்துள்ள 'என்றும் நிலைப்பதில்லை புவி நிலையும் நிலைப்பதில்லை' என்ற பாடல் உலகின் நிலையாமையை உணர்த்துகிறது. மனிதன் வாழ்வில் பொய்மையும் துன்பமும் நிலையானவை அல்ல என்பதைக் கூறுகிறது. உண்மையான அமைதி என்பது இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்று வலியுறுத்துகிறது. இறைவனைத் துதித்து வாழும் வாழ்க்கையில் சோகம், மாயை எதுவும் இருக்காது என்று இப்பாடல் சிறப்பாக அறிவுறுத்துகிறது.


என்றும் நிலைப்பதில்லை 

புவி நிலையும் நிலைப்பதில்லை

நாம் வாழ்ந்து வந்தோம் 

பொய்யில் வீழ்ந்திருந்தோம் 

மனதிலும் சாந்தியில்லை 

எம் மனதிலும் சாந்தியில்லை

(என்றும் நிலைப்பதில்லை)


வான் மறை கூறும் அறிவினைத் தேடி 

கலங்கும் நல் மனமே

மனச் சாந்தியையும் மன அமைதியையும் - நாம் 

பெறுவது அதனிடமே -  என்றும் 

நாம் பெறுவது அதனிடமே

(என்றும் நிலைப்பதில்லை)


வாழும் உலகில் இறைவனைத் துதித்து 

மதித்தே வாழ்ந்திடுவோம் 

மனச் சோகம் இல்லை 

முக வாட்டம் இல்லை 

மண்ணின் மாயங்கள் என்றும் இல்லை 

எம்மில் மாயங்கள் என்றும் இல்லை

(என்றும் நிலைப்பதில்லை)


நூலாசிரியரின் சில பாடல்களுக்கு இசை வடிவமும் சேர்க்கப்பட்டு பாடலுக்கான கனதியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வரிகள் வரிகளாக மட்டுமில்லாமல் இசை சேர்க்கப்பட்டு சிறந்த பாடகர்களால் பாடப்படும் போதே அவை முழுமையாகக் கேட்போரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெறுகின்றன. இந்தப் பனுவலில் உள்ள நூலாசிரியர் றியாழ் அவர்களின் பல பாடல்களை மீலாத் நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பல உள்நாட்டுப் பாடகர்கள் பாடியுள்ளார்கள். மட்டுமல்லாமல் இந்தியா தமிழ்நாட்டு 'சுப்பர் சிங்கர்' இசைப் போட்டியில் தெரிவான பிரபலமான பாடகி பரீதா பேகம் அவர்கள் நூலாசிரியரின் ;யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது', 'மேகமே மேகமே பால் நிலா தேயுதே', 'நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை' ஆகிய மெட்டுக்களில் அமைந்துள்ள நூலாசிரியரின் மூன்று பாடல்களைப் பாடிட்டுள்ளார். மிகவும் இனிமையான குரலில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடல்களைக் கேட்கும் போது மனதுக்கு இதம் தருவதாக அமைகிறது. இதற்காக பாடகி பரீதா பேகத்தையும் இந்த இடத்தில் பாராட்ட வேண்டும். 

மொத்தத்தில் 'ஹீரா இசை அமுதம் (ஞான கீதங்கள்)' என்பது பாடல்களால் ஆன்மீகத்தையும், இசையால் நெகிழ்ச்சியையும், ஞானத்தால் சிந்தனையையும் தரும் ஓர் அரிய படைப்பாக அமைந்துள்ளது. இது வெறும் பாடல்களை உள்ளடக்கிய நூல் மட்டுமல்ல. வாசகனை ஆன்மீகப் பயணம் நோக்கி அழைக்கும் விதமாகவே இந்நூல் அமைந்துள்ளன. எனவே வாழ்க்கை வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. எனவே இப்படைப்பு வாசகனின் மனதில் மகிழ்ச்சியையும் இறை பக்தியையும் ஊட்டும் படைப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.

80 வயதுகளைக் கடந்த  நிலையில் இருக்கும் தனது தந்தை றியாழ் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மகனார் எம்.ஆர். ஸபீர் அஹமத் அவர்களும் இந்த இடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே. ஏனெனில் இவருடைய இந்த முயற்சியின் விளைவாகவே ஓசை நயம் கொண்ட கவித்துவமான அழகிய பாடல்களை எமக்கு நுகரக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது. பாடலாசிரியர் றியாழ் அவர்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறவும், அவருடைய தேக ஆரோக்கியதுக்காகவும் பிரார்த்தனை செய்வதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!


நூல்:- ஹீரா இசை அமுதம்

நூல் வகை:- ஞான கீதங்கள்

நூலாசிரியர்:- ஸூஃபி கவி எம்.டப்ளியு.எம். றியாழ்

வெளியீடு:- அஸ்ஸித்தீகீ மலர் மன்றம்

விலை:- 300 ரூபாய்


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment