'என்னை மீட்டும் வீணை' கவிதைத் தொகுதி மீதான இரசனைப் பார்வை
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
'என்னை மீட்டும் வீணை' என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் இவர் அண்மைக் காலமாக எழுதிய 60 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அக உணர்வுக் கவிதைகளோடு அன்பு, கருணை, நட்பு, நேசம், பெண்மையின் சுபாவம், பெண் வலிமை, எழுத்தின் முக்கியத்துவம், பிரிவுத் துயரம், போலி அரசியல், வறுமை, இயற்கை எழில், வாசிப்பின் தேவை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், நோன்பின் மாண்பு, தந்தைப் பாசம், மனித உறவுகள் போன்ற பல கருப்பொருட்களில் அமைந்த கவிதைகள் 64 பக்கங்களில் காணப்படுகின்றன.
கனதியான சொற்களைக் கொண்டு, எளிமையான முறையில் இவர் கோர்க்கும் கவிதைகள் மனதைக் கவர்கின்றன. பர்ஹானா அப்துல்லாஹ் ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட கவிஞர் என்பதால் இவர் பற்றிய அறிமுகத்தை வாசகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பர். எனவே இவருடைய கவிதைகளைப் பற்றிய எனது பார்வையை இங்கு நேரடியாகவே பதிவு செய்கின்றேன்.
'பொழுதுகளோடு போராடுதல்' (பக்கம் 06) என்ற கவிதை ஏமாற்றங்களையும் நிராகரிப்புகளையும் தாங்கும் உள்ளத்தின் பலம் பற்றிப் பேசுகிறது. வேதனைகளோடு நகரும் வாழ்க்கையைக் கடக்க பொழுதுகளோடு போராட வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது. விடையில்லா கேள்விகளுக்குக்கூட வழி தேடும் உயிர்ப்பே மனித வாழ்க்கையின் உண்மையான போராட்டம் என்பதை இக்கவிதை நன்கு உணர்த்துகிறது.
எல்லா பொழுதுகளிலும் மலராக இருத்தல் முடியாது
சில பொழுதுகளில் மரித்தாக வேண்டும்
போலிப் புன்னகை தரித்தாக வேண்டும்
சில ஏமாற்றங்களை சகித்தாக வேண்டும்
முட் சொற்களை ஏந்தியாக வேண்டும்
கற் பொழிவுகளை தாங்கியாக வேண்டும்
கதவடைப்புகளை வாங்கியாக வேண்டும்
நிராகரிப்புகளில் நீந்தியாக வேண்டும்
மௌனத்தின் கரம்பற்றி மொழியாக வேண்டும்
பெருவனத்திலும் தனித்தாக வேண்டும்
விடையில்லா கேள்விகளுக்கும் பதிலாக வேண்டும்
பதில் இல்லா பொழுதொன்றில் வழி காண வேண்டும்
துணிந்திருக்கவும் வேண்டும் பணிந்திருக்கவும் வேண்டும்
மொத்தத்தில் வாழாமல் வாழ வேண்டும்
பொழுதுகளோடு போராடுதல் தானே வாழ்க்கை!
'என் மேகமே' (பக்கம் 32) என்ற கவிதை மேகத்தை ஒரு நெருங்கிய துணையாக எண்ணி, மனத் துயரங்களை அதனோடு பகிரும் ஒரு அழகியல் சார்ந்த கவிதையாகும். கவிஞர் தனது மனத் துயரம், தனிமை, ஆறுதல் ஆகியவற்றை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்து, மேகத்திடம் தஞ்சமடைவதாக இரசனையோடு இக்கவிதையை அமைத்துள்ளார். பரந்த வானத்திலுள்ள மேகத்தோடு எல்லை இல்லாத நேசத்தைப் பேசும் உணர்வானது கவிதைக்கு நித்தியமான காதல் ஒளியைக் கொடுக்கிறது.
வெண் பஞ்சு மேகங்களே
என் தஞ்சம் ஆகுங்களே
நான் கொஞ்சம் தோள் சாயவே
பொன்மஞ்சம் தாருங்களே
என் நெஞ்சின் வலி தீரவே
மென் பூ கொஞ்சம் தூவுங்களே
நான் துஞ்சும் துயர் நீங்கவே
தேன் கொஞ்சப் பேசுங்களே
வழிகின்ற விழிநீர் எல்லாம்
மறைந்தோடச் செய் மேகமே
நீள்கின்ற என் கைகளில்
இதழ் பதித்துப் போ மேகமே
ஓடாதே நில் மேகமே
தாளாதே என் தேகமே
உன்னோடு எனை ஏந்தியே
விண்ணோடு செல் மேகமே
எல்லை இல்லாத நீல்வானிலே
தொல்லை இல்லாது தினம் நீந்த வா
சொல்லில் முடியாத நம் நேசத்தை
நில்லாமல் நிதம் பேச வா!
'அன்பே இன்ப ஊற்று' (பக்கம் 43) என்ற கவிதையில் அன்பு என்பது ஒரு சொல் அல்ல. அது ஒரு வாழ்வியல் என்கிறார் கவிஞர். அன்பு மனிதர்களை ஒன்றாக்கும் மென்மையான இணைப்பு. அன்பு உலர்ந்து போன மனங்களை ஈரலிக்கச் செய்கின்ற ஒரு மழை. அன்பு ஒரு பரிசுப் பொருள். இங்கு பெறுபவர் மட்டுமல்லாமல் வழங்குபவரும் மகிழ்ச்சியடைகிறார். சுமைகளை நீக்கும் சுகமாக அன்பு காணப்படுகிறது. அன்பு நதியில் நீச்சலடிக்கும்போது மனிதன் புதிதாகப் பிறக்க முடியும். இக்கவிதையில் அன்பானது பயணம், மழை, கீதம், கவிதை, பரிசு, விருந்து, மொழி, காற்று, சுவாசம், நதி, சிறகு ஆகிய பல உருவங்களில் உருவெடுத்து, மனித வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது என்பதை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளார்.
அன்பின் பாதை தேடு அதில் பயணம் செய்
அன்பை வலையாய் வீசு உறவுகளைப் பிடி
அன்பை மழையாய்ப் பொழி இதயம் நனை
அன்பு கீதம் பாடு பிறரை இரசிக்க வை
அன்புக் கவிதை எழுது பரிசளித்து விடு
அன்புத் தேநீர் தயாரி பருகக் கொடு
அன்பை ஆகாரமாக்கு விருந்து வை
அன்பை மொழியாக்கு பேசிச் சுவை
அன்பைக் காற்றாக்கு சுவாசம் கொடு
அன்பை நதியாக்கு மூழ்கி எழு
அன்பை கைக்குள் திணி பற்றிக்கொள்
அன்புச் சிறகு விரி அகிலத்தைச் சுற்று
அன்பை விதை அன்பளித்து விடு
அன்பால் ஆள் அன்பால் வாழ் - வாழ வை!
'முதுமை' (பக்கம் 49) என்ற கவிதை முதுமையின் மகிமையைப் பேசுகின்றது. இன்றைய காலங்களில் இளவயது மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முதுமையை அடைவது பலருக்குக் கிடைக்காத ஒரு வரமாக அமைந்துள்ளது. இப்போதைய சூழ்நிலைகளில் காலத்தை வென்று இந்நிலையை அடைவது பெரிய சாதனையாகவே காணப்படுகிறது. முதுமையின் நரைத்த முடி வாழ்வின் அனுபவங்களைச் சொல்கிறது. உடல் பலவீனமடைந்தாலும், முதியோரின் உள்ளத்தில் இனிமையான நினைவுகள், வாழ்க்கைச் சுவைகள், அனுபவக் கதைகள் நிரம்பிக் காணப்படும்.
முதுமை கடந்த கால வாழ்வுக்கான
நற்சான்றுப் பத்திரம்
முதுமை சாபமல்ல வரம்
மூப்பெய்து முன்னரே முடிந்து போகின்றது
பலரது வாழ்க்கை
கூன் விழுந்த தேகத்திலும்
தேன் ஒழுகும் கதைகள் காணலாம்
நரைத்த முடியெல்லாம்
உரைக்கும் அனுபவப் பாடம்
இளமை நதி சங்கமிக்கும் கடல் முதுமை
அங்கே கொஞ்சம் நீந்திப் பார்த்தால்
அனுபவ முத்துக்களை அள்ளி வரலாம்
வாழ்வியலின் வலியறியவும்
தோல்விகளின் வலியறியவும்
புதினங்களைப் புரிந்து கொள்ளவும்
கவனமாய் வாழ்வை வெல்லவும்
முதுமையின் கையில் இருக்கும்
புதுமையின் முகவரி
தேடிப்போய் கண்டுபிடி
உன் வெற்றிக்கான முதல் வரி!
'என்னை மீட்டும் வீணை' சமூகப் பெறுமானம் மிக்க கவிதைகளின் தொகுதியாகும். சோர்ந்து போய் இருக்கின்ற ஆன்மாக்களைத் தடவி, ஆறுதல் படுத்தக்கூடிய பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை சிறப்பு. இத்தகைய அழகிய, அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி வருகின்ற இவருடைய எழுத்துக்கள் உயிரோட்டமிக்கதாக அமைந்திருக்கின்றன. அவை நிச்சயமாக சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். 'என்னை மீட்டும் வீணையின் நாதம் உங்களில் எழுப்பட்டும் இனிமையின் கீதம்' என்ற நூலாசிரியரின் வரிகளை இங்கு சுட்டிக்காட்டி, சொற்களை இலாவகமாகப் பயன்படுத்தி கவிதைகளை யாத்திருக்கும் பர்ஹானா அப்துல்லாஹ் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட்டு இலக்கிய வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!
நூல் - என்னை மீட்டும் வீணை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்
விலை - 400 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:-
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:
Post a Comment