Tuesday, November 24, 2026

164. 'சிறார் பாடல்கள்' தொகுதி மீதான இரசனைப் பார்வை

 ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் 'சிறார் பாடல்கள்' தொகுதி மீதான இரசனைப் பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.


'சிறார் பாடல்கள்' நூலின் ஆசிரியர், ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா (ஜமாலியா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா) அவர்களாவார். இவர் இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள, வெலிகமயிலிருந்து இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள வெலிப்பிட்டி என்னும் சிற்றூரில் பிறந்தார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்து, அகுரஸ்ஸை எனும் ஊரில் உள்ள போர்வை எனும் கிராமத்தில் ஒரு பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய அவர், காலியில் இருந்த அரசினர் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஒன்றில் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் வெலிகம அறபா பாடசாலையில் கற்பித்தார். பின்னர் இடமாற்றம் கிடைத்து, குருநாகலிலுள்ள பண்டார கொஸ்வத்தை எனும் ஊரில் உள்ள தமிழ்ப் பாடசாலையில் தலைமையாசிரியராகக் (அதிபராக) கடமை புரிந்தார். பின்னர் பதவி உயர்வு கிடைத்து, சிலாபத்திலுள்ள கல்விப் பணிப்பகம் சென்று, அங்கு வட்டாரக் கல்வி அதிகாரியாக ஐந்து வருடங்கள் பணி புரிந்தார். அதன்பின் அநுராதபுரத்திலுள்ள கல்விப் பணிப்பகத்திற்கு மாற்றம் பெற்று, அங்கும் பதினொரு வருடங்கள் பணிபுரிந்தும் இடமாற்றம் கிடைக்கவில்லை. அதனால் தொழிலைத் துறந்து 'தமிழ்த் தாய்க்குப் பணிசெய்து கிடப்பதே என் கடன்' எனும் உயர் நோக்கில் தமது சொந்த ஊரான வெலிகமைக்குத் திரும்பினார்.

சிறுவர் இலக்கியம் என்பது குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்க்கும் மகத்தான கருவியாகத் திகழ்கிறது. குறிப்பாகச் சிறுவர் பாடல்கள் எளிய சொற்கள், சந்த நயம், எதுகை மோனைகள் மற்றும் ஓசை நயங்களோடு அமைவதால், அவை சிறுவர்களின் மனதைக் கவர்வதோடு அவர்களின் கற்பனைத் திறனையும் பேசும் ஆற்றலையும் பெருமளவில் உயர்த்துகின்றன. சிறுவர்களுக்கான படைப்புகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமன்றி, மொழிப் பற்றையும் இயற்கை நேசிப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் ஊட்டும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டும். பிஞ்சு உள்ளங்களில் நற்சிந்தனைகளை விதைத்து, அவர்களின் சிந்தனை எல்லையை விரிவடையச் செய்வதில் சிறுவர் பாடல்களுக்கு என்றும் முதன்மையான இடமுண்டு. இத்தகைய காத்திரமான சிறுவர் இலக்கியப் படைப்புகள் குழந்தைகளின் ஆரம்பகால மன வளர்ச்சியிலும், அழகியல் உணர்வை வளர்ப்பதிலும் தவிர்க்க முடியாத பங்காற்றி வருகின்றன.

ஆசிரியராக பல்வேறு ஆண்டுகள் சேவை புரிந்த அனுபவத்தில் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தவராக பல்வேறு வகையிலான இலக்கிய நூல்களையும் வெளியீடு செய்வதில் ஆர்வம் காட்டிய மௌலானா அவர்கள், சிறுவர்களுக்கான தனது தமிழ் அறிவைப் பயன்படுத்தி 'சிறார் பாடல்கள்' நூலை வெளியிட்டார். தமிழ் என்றும் எங்கும் தூய்மையுடன் வலம் வரவேண்டும் என்பதே நூலாசிரியரின் பெரு விருப்பமாக இருந்தது. இந்த நூலை வெளியிடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் சிறுவர் பாடல்களைத் தொகுத்து அவற்றை மாத இதழ்களில் அவ்வப்போது வெளியிட்டார். அவற்றை ஒருங்கிணைத்து மேலும் பல பாடல்களையும் சேர்த்து இக்காலத்திற்கு ஏற்றவாறு பத்து பாடல்கள் உள்ள இந்தச் 'சிறார் பாடல்கள்' தொகுதியை கோர்வையாக எழுதி  அன்னார் நிறைவு செய்துள்ளார். இந்த நூலை வாசிக்கும் சிறுவர்களின் மனதில் தமிழின் பற்று ஆழமாய்ப் பதிந்து, இனிதாய்த் துளிர்விடும். 24 பக்கங்களில் எழிலாக அச்சிடப்பட்டுள்ள இந்நூலில், பாடல்களையும் ஓவியங்களையும் சிறுவர்கள் எளிதாக அடையாளம் கண்டு ரசிக்கும் வண்ணம் பக்க எண்களும் சேர்க்கப்பட்டிருந்தால், நூலின் கட்டமைப்பு இன்னும் பூரணத்துவமும் செம்மையும் அடைந்திருக்கும். எதிர்காலப் பதிப்புகளில் இந்தச் சிறிய கவனிப்பும் சேர்க்கப்படும்போது, இது சிறுவர்களுக்கான முழுமையான வழிகாட்டி நூலாக மிளிரும் என்று உறுதியாக நம்பலாம்.

பூனை, கொக்கு, காகம், மாம்பழம், கிளி, பட்டம், தங்கத் தட்டு, பள்ளிக்கூடம், எங்கள் வீட்டுத் தோட்டம், எங்கள் வீடு ஆகிய 10 தலைப்புகளில் அமைந்த சிறுவர் பாடல்களே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இனி வாசகர்களின் ரசனைக்காக இந்த நூலில் இடம்பித்துள்ள சில சிறுவர் பாடல்களை எடுத்து ஆராய்வோம். அந்தவகையில் நூலின் முதலாவது பாடலாகப் பதிவாகியுள்ள 'பூனை' என்ற தலைப்பில் அமைந்த சிறுவர் பாடலை இங்கு எடுத்து நோக்குவோம்.


நல்ல நல்ல பூனையாம்

நாம் வளர்க்கும் பூனையாம் 

மெல்ல மெல்ல மீனையே 

மென்று மென்று தின்னுமாம் 


வெள்ளை நிறப் பூனையாம் 

வீரமான பூனையாம்

துள்ளி ஓடும் எலிகளைத்

துரத்திப் பிடித்துக் கொல்லுமாம் 


நாயைக் கண்டாற் சீறிடும்

நகர்ந்து மெல்ல ஓடிடும்

தீய பாம்பு போன்றவை

தீண்டிடாது காத்திடும்!


இந்தப் பாடலில் வரும் நல்ல நல்ல, மெல்ல மெல்ல, மென்று மென்று போன்ற அடுக்குத் தொடர்களும், எதுகை மோனைகளும் குழந்தைகள் இப்பாடலைப் பாடுவதற்கும் மனனம் செய்வதற்கும் ஏற்ற வகையில் மிக எளிய ஓசை நயத்தைத் தருகின்றன. பூனைக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே சிறுவர்களைக் கவரும் பாணியில் மீனை ஆசையோடு, பூனை மெல்ல மெல்ல மென்று தின்னும் அழகை முதல் பத்தியில் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல பூனை வெள்ளையாகவும் மென்மையாகவும் இருந்தாலும், அது துள்ளி ஓடும் எலிகளைத் துரத்திப் பிடிக்கும் வீரம் செறிந்த ஒரு விலங்கு என்பதை பாடலின் இரண்டாம் பத்தி உணர்த்துகிறது. நாயைக் கண்டால் பயந்து சீறிக்கொண்டு ஒதுங்கி ஓடும் பூனை, வீட்டிற்குள் ஆபத்தான பாம்புகள் போன்ற தீய உயிரினங்கள் வராமல் காக்கும் அரணாகவும் திகழ்கிறது என்பதை இப்பாடலின் இறுதி வரிகள் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. குழந்தைகளுக்கு விலங்குகள் மீதான அன்பையும், அவதானிக்கும் திறனையும் வளர்க்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. எளிமையான வரிகளில் பூனையின் குணநலன்களை, அழகிய காட்சிகளாக நம் கண்முன்னே நிறுத்துவதே இப்பாடலின் பேரழகாகும். 

அடுத்து 'மாம்பழம்' என்ற தலைப்பில் அமைந்த பாடலை நோக்கும் போது இப்பாடலானது குழந்தைகள் எளிதில் படித்துப் பாடி, மனனம் செய்யும் வகையில் மிக எளிய தமிழ் சொற்களால் அமைக்கப்பட்டுள்ளது.


சின்னச் சின்ன மாம்பழம் 

சிவந்த நல்ல மாம்பழம் 

தின்னத் தின்ன இனித்திடும் 

சிறிய நல்ல மாம்பழம் 


வண்ண வண்ண மாம்பழம் 

மரத்திற் பழுத்த மாம்பழம் 

உண்ண உண்ண நாவெல்லாம் 

ஊரும் நல்ல மாம்பழம் 


நல்ல நல்ல மாம்பழம் 

நாம் விரும்பும் மாம்பழம் 

மெல்ல மெல்லத் தின்று நாம் 

மிக்க மகிழும் மாம்பழம்


இப்பாடலில் வருகின்ற சின்னச் சின்ன, தின்னத் தின்ன, வண்ண வண்ண, உண்ண உண்ண, நல்ல நல்ல, மெல்ல மெல்ல போன்ற அடுக்குத் தொடர்களும், சந்த அமைப்புகளும் பாடலுக்குத் துள்ளலான இசையையும் ஓசை நயத்தையும் தருகின்றன. இப்பாடலின் வரிகள் மாம்பழத்தை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. இப்பாடலுக்காக நூலில் சேர்க்கப்பட்டுள்ள படம் மாம்பழத்தின் இயற்கை நிறத்தையும், அது நன்றாகப் பழுத்திருப்பதையும் காட்சிப்படுத்துகிறது. மரத்திலேயே இயற்கையாகப் பழுத்த பழத்தின் தன்மையை படம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. மாம்பழத்தின் சுவையை நினைத்தாலே வாயில் எச்சில் ஊறும் அளவுக்குப் பழத்தின் தித்திப்பை பாடல் வரிகளும், படமும் மிகவும் அழகாக உணர்த்துகிறது. மாம்பழத்தை அவசரப்படாமல் மெதுவாக ரசித்து உண்ணும் போது குழந்தைகளுக்கே உரிய அந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் வழங்கக்கூடிய அருமையானதொரு பாடலாக அமைந்துள்ளது. பாடும்போதே நாவில் இனிப்பை உணர வைப்பதே இப்பாடலின் மிகப்பெரிய வெற்றியாகும்.

குழந்தைப் பருவத்தின் மிக ஆனந்தமான தருணங்களில் ஒன்று, வண்ண வண்ணக் காகிதப் பட்டங்களை வானில் பறக்கவிடுவது. அந்த எளிய விளையாட்டு தரும் பரவசத்தை, குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் ஏற்படுகின்ற துள்ளலை மிக அழகாகவும் இயல்புமாகவும் வெளிப்படுத்துகிறது கவிஞர் எழுதியுள்ள 'பட்டம்' என்ற தலைப்பில் அமைந்த இந்தப் பாடல்.


வண்ண வண்ண பட்டமொன்று

வானிற் பந்து ஆடுது

சின்னச் சின்ன குழந்தைகள் நாம்

சிறு கை கொட்டிப் பாடுவோம்


ஆடியாடிப் பட்டம் பார்த்து 

பாடிப் பாடி மகிழுவோம் 

நாடி நாடிப் பட்டங்கட்டி 

வானிலிட்டு மகிழுவோம்


நல்ல நல்ல பட்டமெல்லாம் 

வெள்ளி வானிற் பறக்குமே

வல்லவன்றன் அருளை நாடித்

துள்ளித் துள்ளி ஆடுவோம்


பல வண்ணப் பட்டங்கள் நீல வானத்தில் காற்றோடு போராடி தடம் மாறி, எகிறி மேலேறிச் செல்லுவதைக் காணுவதே கண்கொள்ளாக் காட்சியாகும். தனது பட்டம் பறக்கும்போது குழந்தைகள் அடையும் குதூகலம் தனித்துவமானது. நண்பர்களுடன் சேர்ந்து கைகொட்டிப் பாடுவதும், பட்டம் மேலேறும்போது ஆர்ப்பரிப்பதும் குழந்தைகளுக்கே உரிய பண்பாகும். இது குழந்தைகளின் மனதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்பாடல் பெரியவர்களையும் அவர்களின் குழந்தைப் பருவ நினைவுகளுக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஓர் இனிய பாடலாக அமைந்துள்ளது.

அடுத்து 'எங்கள் வீட்டுத் தோட்டம்' என்ற தலைப்பில் அமைந்த பாடலை அவதானிக்கும் போது கவிஞர் மிகவும் எளிய, இனிமையான சொற்களால் எழில் கொஞ்சும் வீட்டுத் தோட்டத்தின் அழகையும் வளத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.


எங்கள் வீட்டுத் தோட்டத்தில் 

இனிய வாழை மாபலா 

எங்கும் நிறைந்து கனிகளை 

எங்களுக்கு தந்திடும் 


தென்னை கமுகு பனைகளும் 

தேன்கரும்பு மாதுளம் 

இன்னும் வேறு மரங்களும் 

ஈங்கு நிறையவுள்ளன 


மல்லிகையும் முல்லையும் 

மற்றும் ரோஜாப் பூக்களும் 

மல்கி விரிந்து தோன்றுமெம் 

வண்ணமிக்க தோட்டமே


தோட்டத்திலுள்ள பயன் தரும் பல மரங்கள் பற்றிய அழகிய வர்ணனைகளோடு பாடல் தொடங்குகிறது. வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளும் எங்கும் நிறைந்து இனிப்பான பழங்களைத் தருகின்றன என்பதை பாடலின் முதல் அடி உணர்த்துகிறது. தென்னை, பாக்கு (கமுகு), பனை போன்ற பயன்தரும் உயரமான மரங்களும், தேன் போன்ற இனிமையான கரும்பும், சுவையான மாதுளையும் தோட்டத்தில் செழிப்பாக வளர்ந்துள்ளதை இரண்டாம் பத்தி விவரிக்கிறது. மல்லிகை, முல்லை போன்ற நறுமணம் வீசும் வெண்மலர்களும், ரோஜா போன்ற பல்வேறு வண்ண மலர்களும் செடிகளில் நிறைந்து, மலர்ந்து தோட்டம் முழுவதையும் 'வண்ணமிக்க தோட்டமாக' மாற்றுகின்றன என்பதை பாடலின் மூன்றாம் பத்தியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு ஏற்ற எளிய நடையில் கடினமான சொற்கள் ஏதுமின்றி, சிறுவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையிலும் மனனம் செய்யும் வகையிலும் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் மனதில் வீட்டுத் தோட்டத்தில் மரங்களை நட்டு தோட்டம் அமைக்கும் ஆர்வத்தை விதைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மர்ஹும் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா அவர்களின் 'சிறார் பாடல்கள்' தொகுதி, சிறுவர் இலக்கிய உலகில் ஒரு நல்வரவாக மிளிர்கிறது. எளிமையான சொற்கள், துள்ளலான ஓசை நயம் மற்றும் எழிலான ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் தொகுதி, சிறுவர்களின் பிஞ்சு உள்ளங்களில் தமிழ்ப் பற்றையும் இயற்கை நேசிப்பையும் ஆழமாக விதைக்கிறது. நூலாசிரியர் இன்று நம்மிடையே இல்லை என்ற போதிலும், அவர் விட்டுச்சென்ற இந்த ஆக்கபூர்வமான சிறுவர் பாடல்கள் தொகுதி வழியாகச் சிறுவர் மனதில் என்றும் நிலைத்து வாழ்வார். இத்தகைய காத்திரமான படைப்பு, சிறுவர் இலக்கிய வரலாற்றில் என்றும் அழியாப் புகழ்பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை. நல்லதொரு பங்களிப்பைச் செய்தமைக்காக நூலாசிரியருக்காகக் கரமேந்திப் பிரார்த்திப்போம்.


வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.



நன்றிகள்:- தினகரன் 2026.10.21 (புதன் கிழமை)


பிஞ்சு உள்ளங்களில் தமிழ்ப் பற்றை ஆழமாக விதைக்கும் மௌலானாவின் "சிறார் பாடல்கள்"

Text View:-
https://epaper.thinakaran.lk/article/2110dfc9f216

Image View:-
https://epaper.thinakaran.lk/article/2110dfc9f216






163. பஸ்லி ஹமீடின் 'வாப்பா' நாவல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 பஸ்லி ஹமீடின் 'வாப்பா' நாவல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 

'வாப்பா' - குடும்பத்தின் இதயத் துடிப்பை உணர்த்தும் வாழ்வியல் நாவல்



நூல் கண்ணோட்டம்:-

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலங்கையில் வசிக்கும்  நடுத்தர மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை 185 பக்கங்களில் விவரித்துச் செல்கின்ற வகையில் 'வாப்பா' என்ற மகுடமிட்டு நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் பஸ்லி ஹமீட். இந்த நாவல் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் 24 அத்தியாயங்களாக விரிந்து வாசிப்பைத் தூண்டிச் செல்கிறது. இது தர்காநகரைச் சேர்ந்த பஸ்லி ஹமீட் எழுதிய நான்காவது நூல் வெளியீடாகும். 

ஒருமுறை வங்கிக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு வயதான தாய் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை எழுத்தாளர் பஸ்லி ஹமீட் கண்டுள்ளார்.
அப்போது அந்தத் தாயின் அயலவர் ஒருவர், 'இவரது மகன் குடும்பத்தோடு அமெரிக்காவிலும், மகள் குடும்பத்தோடு லண்டனிலும் இருக்கிறார்கள். வீட்டில் இந்தத் தாயுடன் இரண்டு வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்; அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்' என்று கூறினார். பஸ்லி ஹமீடின் மனதைப் பெரிதும் பாதித்த இந்தச் சம்பவத்தை மையமாக வைத்தே 'வாப்பா' என்ற இந்த நாவலைப் புனைந்ததாக அவர் தனதுரையில் குறிப்பிடுகிறார். மேலும் 'முஸ்லிம் சமூகத்தில் முதியோர் இல்லங்கள் இல்லை' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், நடைமுறையில் பலரின் வீடுகளே முதியோர் இல்லங்களாக மாற்றப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, வயதான பெற்றோர்களைத் தனியாக விட்டுவிடாமல், வெளிநாடுகளுக்குச் செல்லும் பிள்ளைகள் தங்களோடு அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முக்கியக் கருத்தை இந்த நாவலில் அவர் பதிவு சிறப்பாகப் செய்துள்ளார்.

 'வாப்பா' என்ற நாவலின் தலைப்பே வாசகரின் மனதில் பாசம், பொறுப்பு, தியாகம், பாதுகாப்பு ஆகிய உணர்வுகளை ஒரே நேரத்தில் எழுப்புகிறது. இந்த நாவல் ஒரு மனிதரின் கதையாக மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தின் வரலாறாகவும், ஒரு சமூகத்தின் வாழ்வியலாகவும் விரிந்து செல்கின்றது. இந்த நாவலின் மிகப்பெரிய பலம் அதன் இயல்பான பாத்திரங்களே. ஒவ்வொரு கதாபாத்திரமும் கற்பனைக் கதையின் நிழல்களாக அல்லாமல், நமது அயலவர்கள், நமது குடும்ப உறவினர்கள் அல்லது நமது குடும்ப உறுப்பினர்களைப் போல மிகவும் நெருக்கமாகத் தோன்றுகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழைப் பெற்றோர்களின் வாழ்க்கைப் போராட்டம், குறிப்பாக பெண்களின் பொறுப்புணர்வு, கல்விக்கான போராட்டம், குடும்பச் சுமைகள் ஆகியவை மிகுந்த யதார்த்தத்துடன் இந்த நாவலில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த நாவல் முழுவதும் தென்னிலங்கையின் தர்கா நகருக்குரிய தனித்துவமான சோனகத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் மொழிநடையில் எவ்விதச் செயற்கைத்தனத்தையும் காண முடிவதில்லை. அன்றாட கிராமிய வாழ்வின் எளிமையான பேச்சுமொழி, இலக்கிய நயத்தோடு நாவல் முழுவதும் இழையோடியிருக்கிறது. இதனால், வாசகர்கள் இக்கதையை வெறும் புத்தகமாகப் படிக்காமல், அந்தப் பாத்திரங்களோடு சேர்ந்து வாழும் உணர்வையே பெறுவார்கள். நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சிறந்த நாவலை வாசித்த அனுபவத்தோடு, இந்நாவல் உலகிற்குள் உங்களையும் அழைத்துச் செல்கின்றேன்.

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கும் இந்த நாவல், மிகுந்த வறுமையிலும் அன்பும் ஒற்றுமையும் நிறைந்த வாழ்க்கை வாழும் காசிம் காக்காவின் குடும்பத்தை மையமாகக் கொண்டது. காசிம் காக்காவுக்கும் அவரது மனைவி ஸொஹரா உம்மாவுக்கும் பரீஸா, நஸீரா, சபீனா, றிஸானா ஆகிய நான்கு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பரீஸா பருவமடைந்ததிலிருந்து பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாள். நஸீரா பத்தாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மிகவும் கடுமையான தலைவலியினால் வைத்தியர்களின் ஆலோசனையில் படிப்பை நிறுத்தியிருந்தாள். சபீனா ஆசிரியையாகப் பணியாற்றினாள். இளையவளான றிஸானா கல்வியில் சிறந்து விளங்கி உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருந்தாள். பழைய வானொலிப் பெட்டியும், கயிற்றினால் வேயப்பட்ட கட்டில் ஒன்றும், பழைய அலுமாரியும், பொத்தல் விழுந்த இரண்டு மூன்று பாய்களுமே அவர்கள் வீட்டில் காணப்பட்டன. மின்சாரமில்லாத சிறிய வீட்டில் வாழ்ந்தாலும், அந்தக் குடும்பம் வறுமையைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியுடனும் சகோதர பாசத்துடனும் வாழ்ந்தது. காசிம் காக்கா நான்கு கோடுகள் வந்துள்ள தொப்பியைத்தான் வழமையாக அணிவார். நான்கு பிள்ளைகளின் நினைப்போடு அவர் தலையிலிருந்த தொப்பியைக் கையிலெடுத்து அதிலிருந்த நான்கு கோடுகளையும் அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொள்வார். நாற்பது ஆண்டுகளாக இல்லியாஸ் துரையின் பலசரக்குக் கடையில் நேர்மையான ஊழியராக காசிம் காக்கா பணியாற்றி வந்தார்.

மூத்த மகள் பரீஸாவுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியில் இருந்த காசிம் காக்கா, தான் பணிபுரியும் கடையில் சாரதியாக இருக்கும் முபாரக்கின் நற்குணங்களை சரக்கு விநியோகப் பயணத்தின் போது நெருக்கமாக அறிகிறார். இந்தப் பயணத்தினிடையே முபாரக் பரீஸாவைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, திருமணச் செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறான். முபாரக் அனாதை இல்லத்தில் வளர்ந்தவனாக இருந்தாலும் உழைப்பும் நற்குணமும் கொண்ட இளைஞன். அனாதையான அவனைப் பற்றி தீவிரமாக விசாரித்த காசிம் காக்கா அதில் திருப்தியடைந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். பரீஸாவின் திருமணத்துக்காக காசிம் காக்காவின் உறவினர்களும், இல்லியாஸ் துரையின் மகனும், கடை ஊழியர்களும் அவருக்கு பொருளாதார உதவிகளைச் செய்கின்றனர். அந்த உதவியால் பழைய வீடு புதுப்பிக்கப்பட்டு புதிய அறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. நிக்காஹ் மற்றும் வலீமாவுடன் பரீஸா - முபாரக் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகும் பரீஸா தினமும் தாய் வீட்டிற்கு வந்து உதவுகிறாள். முபாரக்கின் ஊக்கத்தால் தனது வீட்டின் முன்பாக ஒரு சிறிய கடையை ஆரம்பித்து, நீண்டகால ஊழியராக அனுபவம் பெற்ற காசிம் காக்கா முதலாளியாக மாறுகிறார். 

இதற்கிடையில் சபீனாவின் சக ஆசிரியரான மபாஸ், நஸீராவைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்க, அவனைப் பற்றி விசாரித்த பின்பு நஸீராவுக்கும் மபாஸுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். காசிம் காக்கா தனது இரண்டு மகள்களின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று முடிந்ததில் நிம்மதியடைகிறார். 

றிஸானா உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடமும் நாடளாவிய ரீதியில் ஏழாம் இடமும் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிறாள். வறுமை கல்விக்கு தடையல்ல என்பதைக் கூறி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கிறாள் அவள்.

இந்த மகிழ்ச்சிக்கிடையே முபாரக் வாகன விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பல மாதங்கள் சிகிச்சை பெற்றும் முழுமையாகக் குணமடையாததால், இல்லியாஸ் துரையின் மூத்த மகன் றிஸ்வானின் உதவியுடன் மேலதிக சிகிச்சைக்காக முபாரக் பரீஸாவோடு ஜேர்மனிக்கு அனுப்பப்படுகிறான். பின்னர் மருத்துவரின் ஆலோசனையின்படி முபாரக் அமெரிக்காவுக்குச் சென்று தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுகின்றார்.

றிஸானா ருஹுணு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியைத் தொடரும் நிலையில், நஸீராவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. மபாஸிரா எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை குடும்பத்தின் மகிழ்ச்சியாகிறது. ஆனால் சில ஆண்டுகளிலேயே கடுமையான தலைவலிக்குக் காரணமாக நஸீராவுக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தாலும் அவள் நினைவு திரும்பாமல் மரணமடைகிறாள். அந்த இழப்பு காசிம் காக்காவின் குடும்பத்தைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

நஸீரா இறப்பதற்கு முன்பு, தன் மகள் மபாஸிராவை சபீனா வளர்க்க வேண்டும் என்றும், மபாஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தாள். அதனை நிறைவேற்றும் வகையில், காசிம் காக்காவின் சம்மதத்துடன் சபீனாவும் மபாஸும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.

இதற்கிடையில் றிஸானா மருத்துவராகப் பட்டம் பெற்று, இல்லியாஸ் துரையின் இளைய மகன் றிபாஸைத் திருமணம் செய்கிறாள். காசிம் காக்காவின் பழைய கடை, றிஸானா மற்றும் சபீனாவின் முயற்சியால் 'நஸீரா ஞாபகார்த்த நூலகம்' ஆக மாற்றப்படுகிறது. குடும்பம் மீண்டும் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் நிலையில், ஸொஹரா உம்மா தண்ணீர் எடுக்கச் சென்று கிணற்றருகே வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழக்கிறார். தாயின் மரணம் அனைவரையும் உலுக்குகிறது.

பின்னர் றிஸானாவுக்கு இங்கிலாந்திலுள்ள எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முதுநிலைப் படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு வருடத்திற்குள் தந்தையைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறி, கணவர் றிபாஸுடன் இங்கிலாந்துக்குச் செல்கிறாள். அதேவேளை சபீனாவுக்கும் கட்டார் நாட்டில் வேலை கிடைக்கிறது. சில மாதங்களில் றிஸானா தந்தையை அழைத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில், காசிம் காக்காவை ஓர் உதவியாளரின் பொறுப்பில் விட்டுவிட்டு சபீனாவும் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் செல்கிறாள். அந்தப் பிரிவு காசிம் காக்காவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.

நாவலின் இன்னொரு காலவரிசை 2009ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. இப்போது பரீஸா அமெரிக்காவிலும், நரம்பியல் மருத்துவராக றிஸானா இங்கிலாந்திலும் வசிக்கிறார்கள். சபீனா கட்டார் நாட்டுக்குச் சென்று பின்னர் சர்வதேசப் பாடசாலையின் அதிபராக ஓமானிலும் வசிக்கிறாள். பல ஆண்டுகளாக சகோதரிகள் ஒருவருடனொருவர் தொடர்பின்றி வாழ்ந்த நிலையில், தந்தை யாருடனும் இல்லை என்பது தெரியவருகிறது. இதனால் அனைவரும் குற்ற உணர்வோடு வேதனைப்படுகின்றனர். தாங்கள் பணம், தொழில், வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றுக்காக தந்தையை தனிமையில் விட்டுவந்ததை உணர்ந்து வருந்துகின்றனர். பின்னாட்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரைத் தேடினாலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதேகாலத்தில், தெஹிவளையில் வசித்த ஹனீபாவும் அவரது மனைவி நஸீராவும் (காசிம் காக்காவின் மகள் நஸீரா அல்ல, அதே பெயருடைய வேறொரு பெண்) காரில் சென்றபோது, திடீரென காரின் குறுக்கே வந்த முதியவர் அதிர்ச்சியடைந்து மயங்கிக் கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, உடல்நலம் சீரானாலும் கடந்த ஏழு ஆண்டுகளின் நினைவுகளை அவர் இழந்திருந்தது தெரியவந்தது. அவரது அடையாள அட்டையில் இருந்த பெயரின் அடிப்படையில் அவரை 'அஹமத் அங்கள்' என்றே அவர்கள் அழைத்தனர். அவரது உறவினர்கள் என்று யாரும் கண்டுபிடிக்கப்படாததால், ஹனீபாவும் நஸீராவும் அந்த முதியவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அன்போடு பராமரித்தனர். காலப்போக்கில் அஹமத் அங்கள் அந்தக் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே வாழ்ந்தார்.

மருத்துவரான றிஸானா இலங்கைக்குத் திரும்பிய பின்னர், மாதர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அந்த அமைப்பின் செயலாளரான நஸீரா அவரை இரவு விருந்திற்காகத் தனது வீட்டிற்கு அழைத்தார். இரவு விருந்துபசாரத்திற்குப் பின்னர் நஸீரா, அஹமத் அங்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளின் நினைவுகள் இல்லையென்றும், பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா என்றும் டொக்டர் றிஸானாவிடம் கேட்டாள்.

அதற்கு முன்பே, அஹமத் அங்கள் அடிக்கடி சில பெயர்களை உச்சரிப்பதாக நஸீரா கூறியிருந்ததால், அவர் கூறும் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருக்குமாறு றிஸானா ஆலோசனை வழங்கியிருந்தார். அந்தநேரத்தில் சபீனாவிடமிருந்து வாப்பாவைப் பற்றிய தொலைபேசி அழைப்பு வந்ததால் றிஸானா அவசரமாகப் புறப்பட முயன்றார். அப்போது மேசையிலிருந்த மலர்ச் சாடிக்கருகே நான்கு கோடுகள் கொண்ட ஒரு பழைய தொப்பியைக் கண்டார். அது தனது வாப்பா காசிம் காக்கா எப்போதும் அணியும் தொப்பி என்பதை உடனே அடையாளம் கண்டார். உடனே அஹமத் அங்கள் அடிக்கடி உச்சரிக்கும் பெயர்கள் எழுதப்பட்டிருந்த தாளைக் கேட்டுப் பார்த்தார். அதில் 'சபீனா, நஸீரா, பரீஸா, றிஸானா, ஸொஹரா' என்று தனது குடும்பத்தினரின் பெயர்களே எழுதப்பட்டிருந்தன. அந்தக் கணமே 'அஹமத் அங்கள்தான்' தனது வாப்பா காசிம் காக்கா என்பதை றிஸானா உணர்ந்தார். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வுடன், 'வாப்பா எங்கே?' என்று நஸீராவிடம் கேட்டார்.

நஸீரா, 'அவர் முன் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியதும், றிஸானா அந்த அறைக்குச் சென்று அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது வாப்பாவைக் கண்டார். பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தந்தையை உடனே எழுப்பாமல், அவர் கண் விழிக்கும் வரை அருகில் அமர்ந்து காத்திருந்தார். இவ்வாறு பல ஆண்டுகளாகத் தேடிய காசிம் காக்காவை றிஸானா இறுதியில் நஸீராவின் வீட்டிலேயே மீண்டும் கண்டுபிடிக்கிறார்.

மிகவும் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாகத் தேடிய தந்தையை இறுதியாகக் கண்டுபிடித்த மகள்கள், அவரைச் சுற்றி மீண்டும் குடும்பமாக ஒன்றிணையத் தயாராகின்றனர். இதன்மூலம், பொருளாதார முன்னேற்றம், வெளிநாட்டு வாழ்க்கை, தொழில் வெற்றி ஆகிய அனைத்தையும்விட பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் உயர்ந்தவை என்பதை இந்த நாவல் சிறப்பாக வலியுறுத்துகிறது. இன்னொரு கோணத்தில் சொல்வதானால், வயதான காலத்தில் தாய் தந்தையரை அநாதரவாகத் தவிக்கவிட்டுப் பிள்ளைகள் அடையும் எந்தவொரு முன்னேற்றமும் உண்மையான வெற்றியாகாது.

குடும்பப் பாசம், தியாகம், கல்வியின் மகத்துவம், மனிதநேயம், பொறுப்பு உணர்வு மற்றும் முதிய பெற்றோரைப் பேணுவதன் அவசியம் ஆகியவை இந்நாவலின் மையக் கருத்துகளாக விளங்குகின்றன. இந்த நாவல் குடும்ப உறவுகளைப் பற்றி மட்டுமே பேசவில்லை. வறுமை, கல்வி, மதிப்பீடுகள், சமூக மாற்றங்கள், பெற்றோரின் தியாகம், போராட்டங்கள், பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகள் போன்ற பல அடுக்குகளைக் கொண்ட வாழ்வியல் ஆவணமாகவும் விளங்குகிறது.

ஒரு நல்ல நாவல் வாசித்து முடிந்த பிறகும் வாசகர் மனதில் வாழ வேண்டும். 'வாப்பா' அந்த வகையைச் சேர்ந்த படைப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த நாவலை வாசித்து முடித்த எனக்கு காசிம் காக்காவின் மூன்றாவது மகளான சபீனாவுடன் பல நாட்களாகக் கோபம் ஏற்பட்டது. இதனை நாவலின் வெற்றியாகவே கருத முடியும். ஏனெனில், ஒரு பாத்திரம் வாசகரின் உணர்வுகளோடு கலந்து, அவனை சிந்திக்கவும் கோபப்படவும் வைக்கிறது என்றால், அது நாவலாசிரியரின் எழுத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த வெற்றியாகும்.

இந்த நாவலின் கதாபாத்திரங்கள் வாசகரின் நினைவில் நீண்ட காலம் தங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. குடும்பம் என்பது இரத்த உறவுகளின் கூட்டுத்தொகை மட்டுமல்ல. அன்பு, பொறுப்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியவற்றின் உயிர்ப்புமிக்க வடிவம் என்பதை இந்த நாவல் சிறப்பாக உணர்த்துகிறது.

'வாப்பா' ஒரு குடும்ப நாவல் என்ற எல்லையைத் தாண்டி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலையும், குடும்ப உறவுகளின் உன்னதத் தன்மையையும், மனித நேயத்தின் ஆழத்தையும் பதிவு செய்யும் சிறந்த சமூக நாவலாக நோக்கத்தக்கது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துகள்.


நூல்                 :- வாப்பா

நூல் வகை         :- நாவல்

நூலாசிரியர் :- பஸ்லி ஹமீட்

தொலைபேசி :- 0714120721

மின்னஞ்சல் :- fazlyhameed@gmail.com

வெளியீடு         :- வன்டீம் கிரபிக்ஸ்

விலை         :- 700 ரூபாய்




நூல் கண்ணோட்டம்:-

வெலிகம ரிம்ஸா முஹம்மத்