Wednesday, May 13, 2020

133. மனசெல்லாம் மகிழ்கிறது கிராமிய கவிகளின் தொகுதி பற்றிய பார்வை

மனசெல்லாம் மகிழ்கிறது கிராமிய கவிகளின் தொகுதி பற்றிய பார்வை

பீ.ரீ. அஸீஸ் எழுதிய  மனசெல்லாம் மகிழ்கிறது என்ற நூல் கிராமிய கவிகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. இதில் 12 தலைப்புக்கள் அடங்கிய கிராமிய கவிகள் 124 பக்கங்களில் அமைந்தி ருக்கின்றது.

கிராமிய கவிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. ரசனை மிகு கற்பனைகளை உள்ளடக்கக் கூடியவை. காதல், பல்சுவை, தாலாட்டு, சோகம், சேனை, வயல், நகைச் சுவை, மீனவர், மாட்டு வண்டி, ஏக்கம், விளையாட்டு, வாழ்த்து ஆகிய பிரிவுகளை முன்னிருத்தி இத்தொகுதியில் பல கிராமிய கவிகள் காணப்படுகின்றன.

இந்தத் தொகுப்பு பற்றி வெளிவருவதற்கான காரணத்தை நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'கிராமியக் கவிகள் மனித இனம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றது என்பது இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளுகின்ற ஆய்வாளர்களின் கருத்தாகும். எழுத்து அறிமுகமாகும் முன்னர் பேச்சு மொழியே வழக்கில் இருந்திருக்க வேண்டும். பேச்சுமொழி தொடங்கப்பட்ட காலம் முதல் வாய் மொழியிலான இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவை கவி, பாடல், கதை, நொடி என பல்வேறு வடிவங்களில் காணப்பட்டனு. மனித வாழ்வியலையும் ஆற்றலையும் இத்தகைய படைப்புக்கள் பறை சாற்றி நிற்பதை இவற்றைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே இதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் ஆழ வேரூன்றத் தொடங்கியது'.

சங்க காலம் தொட்டு இந்தக் காலம் வரை காதல் பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை. காதல் சுவையை உணரும், உணரத் துடிக்கும் யாவரும் காதல் சம்பந்தமான படைப்புக்களில் அதிக நாட்டங் கொள்வர். இந்தத் தொகுப்பில் உள்ள காதல் பாடல்களும் ஆண்களை நினைத்துப் பெண்களும், பெண்களை நினைத்து ஆண்களும் பாடும் பாடல்களாக அமைந்திருக்கின்றன. இவை தூதுப் பாடல்களாகவும், ஏக்கத்தின் வெளிப்பாடாகவும், காதல் இன்பத்தை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குகின்றன.  ஆண் மூலம் வெளிப்படுத்தப்படும் காதலை கீழுள்ள கவிகளில் (பக்கம் 13) காணலாம்.

மச்சாளே
மனசு இனிக்கின்ற கற்கண்டே
உச்சால
நெலவு சாய ஒன்னிடத்தில்
நான் வருவேன்
கலங்காதே

**

காத்தாக நான் வாறேன்
கன்னி ஒன்ன தழுவிடவே
ஆத்தோரம் வந்து நில்லு
அங்கே உந்தன் சேதி சொல்லு

பெண் மூலம் வெளிப்படுத்தப்படும் காதல் உணர்வுகள் கீழுள்ள (பக்கம் 18) கவிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதம் வருமாறு..

வீடெல்லாம் வெளக்கேத்தி
தெருவாசல் அழகூட்டி
முத்தத்திலே பாய் போட்டு
அவர் வரப் பாத்திருந்தேன்
அவசரமாக் காத்திருந்தேன்

**

கொளத்து மீனைப்
பொறிச்சி வெச்சி
கொழ கொழயா
பழம் பறிச்சி
தலை நிறையப் பூவோடு
காத்திருக்கேன் ராசா

கிராமங்களில் சோளம் விளைந்திருக்கின்ற அழகே தனி. அதன் சுவையும் மணமும் நெஞ்சை விட்டு அகலாதவை. சோள விற்பனைப் பாடலாக (பக்கம் 88) கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

பால் வத்தாப்
புதுக் கதிர்கள்
பக்குவமா வெச்சிருக்கேன்
கை நிறைய எடுத்துப் போங்க
தோதுப்பட்டா மீண்டும் வாங்க

ழூழூ
கமகமக்கும் வாசம் தரும்
கலகலப்பை மனசில் தரும்
சீமை இன சோளக் கதிரு
இது சிவந்த நல்ல பெரிய கதிரு

மீனவப் பாடல்களும் கிராமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓசைநயமிக்க இப்பாடல்கள் (பக்கம் 102) இன்றும் மீனவர்களிடம் நிலைத்து நிற்கின்றன..

மீன் பிடிக்கப் போய் வருவோம்
எல்லோரும் ஐசலக்கடி ஏலேலோ
பாய் மரத்தை விரிச்சிடுங்க
பார்வையிலே மீன் படுது
போய் வரவே புறப்படுங்க
சீக்கிரமாய் எல்லோரும்

இத்தொகுப்பில் காணப்படும் ஏக்கப் பாடல்களுள் (பக்கம் 115) குழந்தைப் பாக்கியம் இல்லாமல் ஏங்கும் தாயின் துயரம் நன்றாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு உலகத்தில் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய அந்தஸ்து தாய்மை. மிகப் பெரிய சொத்து குழந்தை. அது இல்லாதவர்களின் ஏக்கம் இவ்வரிகளில் வழிந்தோடுகின்றது.

அடுக்கி வெச்ச சாமான்களை
பிரிச்சி விளையாட ஒரு புள்ளே இல்லே
வாய் நெற பேர் சொல்லி கூப்பிடவும்
எனக்கு ஒரு புள்ள இல்லே

இலக்கிய வித்தகர் பீ.ரீ. அஸீஸ் பல்துறைகளில் தன் படைப்புக்களை நல்கி வருகின்ற ஒரு இலக்கியவாதி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மனசெல்லாம் மகிழ்கிறது 
நூலின் வகை - கிராமியக் கவி
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

132. இரண்டும் ஒன்று கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

இரண்டும் ஒன்று கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

''இரண்டும் ஒன்று'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஆவார். இவரது முதல் தொகுதியான இந்த நூல் சிறியதும் பெரியதுமான 84 கவிதைகளை உள்ளடக்கியதாக 113 பக்கங்களில் வெளிவந்துள்ளது. குருணாகலை மாவட்டத்தின் பானகமுவவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது (முன்னாள் அதிபர்) - மர்ஹுமா கே.ரீ. ரஹ்மா உம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா தற்போது பஸ்யால, எல்லலமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றார்.

இலக்கிய ஆர்வம்மிக்க இவர் அண்மைக் காலமாக தேசிய பத்திரிகைகளில் தனது கவிதைகளை அதிகளவில் களப்படுத்தி வருகின்றார். கவிதா உலகிற்கு அண்மையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இவர். ''இரண்டும் ஒன்று'' என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எளிமையான மொழி நடையோடு, சமூக அக்கரை கொண்டு எழுதப்பட்ட பல கவிதைகளைக் காணலாம். கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாசகர்களை மிரட்டாமல் எல்லோரும் வாசித்து இரசிக்கும் வகையில் இவரது கவிதை நூல் ராஜ நடைபோடுகிறது.

நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை பின்னட்டைக் குறிப்பில் கலாபூஷணம், கவிஞர், இலக்கிய வித்தகர் பி.ரீ. அஸீஸ் அவர்கள் அழகிய மொழி நடையில் தந்துள்ளார்.

முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைமதி என். அகமது யாசீன் அவர்கள், ''இக்கவிதை நூலாசிரியர் ஓர் ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக கல்வித் துறையின் பல்வேறு படிகளிலும் பாதம் பதித்தவர். ஒவ்வொரு நிலையிலும், அடுத்தவருக்கு முன்மாதிரியாக தாம் மேற்கொண்ட பணியைச் சிறப்புற நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். எனது குழுவில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுகையில் இவரது உத்வேகமும் உழைப்பும் கருத்துக்களைத் தயங்காது முன்வைக்கும் இயல்பும் எமது இலக்குகளை அடைந்து கொள்வதில் பெரிதும் உறுதுணையாய் அமைந்தன. ஆங்கிலம், தமிழ், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளிலும் இவர் கொண்டுள்ள புலமை பாராட்டுக்குரியது. எளிமையான சொல் வடிவங்கள் கொண்டு எவரும் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் இவர் படைக்கும் கவிதைகள் சராசரி மனிதர்களில் கூட சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தக் கூடியவை. பல்வேறு நாளேடுகளிலும் வெளியான இவரது கவிதைகளின் இத்தொகுப்பானது இவரது முதலாவது அச்சுருவிலான வெளியீடாகும். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா என்ற ஒரு படைப்பாளியின் அறிமுக நூல் இதுவென்றாலும் இலக்கியப் பாதையில் தொடரும் பயணத்தின் ஓர் ஆரம்பப் பதிவேடாக இந்நூல் அமையுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

முதலாவது கவிதையான ''எல்லாமே கவிதை'' (பக்கம் 15) என்ற கவிதையில் நூலாசிரியர் தான் எழுதும்  கவிதை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

கவிதை எங்ஙனம் எனக்கேட்க இங்ஙனம் எனப் பதில் எங்ஙனம் நான் கொடுக்க.. சிந்தனையின் உச்சம்.. தூர நோக்கு.. தென்றலின் மென்மை.. பார்வையின் விசாலம்.. மனிதாபிமான போக்கு.. மார்க்கப் பற்று.. உலகப் பற்றின்மை.. வேதனையின் குரல்.. இன்பத்தின் அவஸ்தை.. உள்ளக் குமுறல்.. தேடலின் ஊடல்.. ஊடலின் கூடல்.. வினாவின் விடை.. விடையில்லா வினா.. முடிவில் ஆரம்பம்.. ஆரம்பத்தில் முடிவு.. இனிதான வலி.. வலியில் சுகம்.. சுகத்தில் சுமை.. தேடிப் பெறுவது.. தேடாமல் கிடைப்பது.. சொற்கள் செயலாக.. எண்ணங்கள் எழுத்தாக.. எனக்கு நீயாக எல்லாமே கவிதை!

''பிரார்த்திக்கிறேன் ஏக நாயனை'' (பக்கம் 19) என்ற கவிதை தன்னைப் பெற்று வளர்த்த தாயின் பாசத்துக்கு பரிசாக எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு குழந்தை முதன்முதலாக அழும்போது மட்டுமே ஒரு தாய் சிரிக்கின்றாள். அதன் பிறகு ஒரு குழந்தைகள் அழுவதை எந்தவொரு தாயாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஒரு தாயானவள் பல தியாகங்கள் செய்து குழந்தையை வளர்த்து சமூகத்தில் சிறந்த பிரஜையாக வாழ வழி காட்டுகின்றார். தாயின் ஒரு துளிப் பாலுக்கு ஒரு ஜென்மம் முழுவதும் கைமாறு செய்தாலும் ஈடாகாது.

முதன் முறையாக நான் அழ
சிரித்தவர் நீர் - என் தாயானதால்

மொழி தெரியாத எனக்கு
மொழியறிவும் கற்றுக் கொடுத்து
மொழியில்லா என் மழலையில்
மொழியும் நீர் அறிந்து
முறையாய் பேணுதலாய்
எனைத் தவமாய் பெற்றீரே

வழி தெரியாத என்னை
நேர் வழிப்படுத்தியவர்
சுமைகள் பலவும் தாங்கினீரே
என்னைப் பெற்றிடத்தான்
தியாகங்கள் பலநூறு செய்தீரே

''என் வாழ்வின் அச்சாணி'' (பக்கம் 22) என்ற தலைப்பில் தனது தந்தைக்காகவும் ஒரு கவிதையை வடித்திருக்கிறார். ஒரு தாய் பத்து மாதம் தன் பிள்ளையை வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தையோ பெரியவனா(ளா)கும் வரை தோளிலும் மார்பிலும் சுமக்கின்றார். ஒரு வரலாறு கற்றுத் தராத பாடத்தை தந்தையின் வாழ்க்கை முறை கற்றுத் தந்துவிடுகின்றது.

முதலும் முதன்மையுமான
மதிப்பிற்குரிய என் குருவே
மாந்தருக்கு கல்வி கற்கச்
சொல்லிக் கொடுத்த - என்
கலங்கரை விளக்கே என்
அன்புத் தந்தையே

உம் பாதத்தின் மேல் ஏற்றி
குறு குறு வென்று தத்தித் தத்தி
நடக்கவும் கற்றுத் தந்தீர்

நானும் வளர்ந்திடவே
விரல் பிடித்துப் பின்னர்
சுயமாய் நடக்கவும்
சொல்லிக் கொடுத்தீர்

''வாசிப்பை நேசி'' (பக்கம் 31) என்ற கவிதை புத்தக நண்பர்களை கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உண்மையைத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. புத்தகத்தை நேசிப்பவன் மக்களால் நேசிக்கப்படுவான். தலை குனிந்து வாசிக்கப்படும் புத்தகம் கண்டிப்பாக இன்னொருநாள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டும். வாசிப்பின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் அலாதியானவை. வாசிப்பை நேசிக்க வேண்டும் என்று நூலாசிரியர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

கண்ணிருந்தும் குருடர்
கற்காதார்

கல்விக் கண் திறக்க
பழைய பண்பாடு வளர்க்க
புதிய பண்பாடு சிறக்க
வாசி யோசி
வாசிப்பை நேசி

வாசிப்பு
தனிமையை
பகைமையை
வென்றிடும் கேடயம்

வாசிப்பு
தம்மைத் தாம் - ஏன்
பிறரையும் தான்
புரிய வைக்கும் மகுடம்

''தற்காப்புக் கேடயம்'' (பக்கம் 40) என்ற கவிதையில் குடை பற்றி எழுதப்பட்டுள்ளது. வெய்யில், மழை, பனி ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமன்றி, சில பொழுதுகளில் நம்மை தற்காத்துக்கொள்ளும் கேடயமாகவும் குடை மாறி விடுவதுண்டு. அடை மழை நேரத்தில் ஒதுங்கி இருந்தபடி, குடைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு சிறைப்பட்டிருந்த அனுபவம் பெரும்பாலும் நம்மெல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த நினைவுகளை மீட்டித் தருவதாக கீழுள்ள கவிதை வரிகள் அமைந்திருக்கின்றன.

வெய்யிலில் மழையில்.. எமைக் காக்கும் குடை.. எட்டுக் கால் சிலந்தி போல்.. எட்டுக் கம்பிக் குடை.. வண்ண வண்ணக் குடை.. கண்ணைக் கவரும் குடை.. அவை பற்பல நிறங்களில்.. அவை பற்பல அளவுகளில்.. காற்று வேண்டி.. கடற்கரையோரமும்.. பூப்பூவாய் பூத்திருக்கும்.. குடைகளும் நகர்ந்திடும்.. குடைகளும் கொடையாய்.. மெல்லிடையால் காக்க.. குடையும் ஓர் ஆயுதமாய்.. தற்காப்புக் கேடயமாய்!

''இரண்டு பக்கங்கள்'' (பக்கம் 48) என்ற கவிதையானது நாணயத்தை மையமாக வைத்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகின்றது. விளையாட்டில் நாணயம் சுண்டிப் பார்த்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது. அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விடயங்களும் நல்லது -  கெட்டது, அறிவு - அறிவீனம், இருப்பு - இல்லாமை போன்றவற்றில் தங்கியிருக்கின்றது. ஆனால் சுண்டிப் பார்த்து அவற்றை விளங்கிக் கொள்வதற்கு இது விளையாட்டல்ல வாழ்க்கை என்று இங்கு ஆணித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வாழ வேண்டிய வாழ்க்கையை சந்தோசமாகவும் இனிமையாகவும் கழிக்க வேண்டும்.

ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்
பூ தலை

இளமை முதுமை
இம்மை மறுமை
உண்மை பொய்
ஏற்றம் இறக்கம்
பிறப்பு இறப்பு
வாழ்வு தாழ்வு
மேடு பள்ளம்
குறை நிறை
யதார்த்த உலகின்
நிஜங்கள் இவை

சுண்டிவிட்டு
தெரிந்து எடுக்க
இது விளையாட்டல்ல
இது வாழ்க்கை!

யதார்த்த விடயங்களை அழகிய கவிதையாக வடிவமைக்கும் திறன் கவிஞருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. இவரது கவிதா ஆற்றல் மென்மேலும் சிறப்புற்று மேலும் பல படைப்புக்களைத் தர வேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!

நூல் - இரண்டும் ஒன்று
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர் - எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா
தொலைபேசி - 0771768386
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 300 ரூபாய்

131. மூன்றாம் சாமத்து புன்னகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

மூன்றாம் சாமத்து புன்னகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஒன்பதாவது ஆவது வெளியீடாக கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம். யூனுஸ் எழுதிய ன்றாம் சாமத்து புன்னகை'' என்ற கவிதைத் தொகுதி 116 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இது எம்.ரி.எம். யூனுஸ் அவர்களின் கன்னி நூல் வெளியீடாகும். ஆனாலும் கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி கூறுவதைப் போல தானும் ஒரு கவிஞன் என்று வார்த்தைகளைத் தேடிப் பிடித்து சேர்க்கின்ற கவிஞர்கள் மத்தியில் உணர்வுகளை கவிதையாக்கும் உண்மைக் கவிஞனாகவே காத்தநகரான் எம்.ரி.எம். யூனுஸ்ஸைக் காணலாம்.

''மூன்றாம் சாமத்து புன்னகை'' என்ற கவிதைத் தொகுதியில் கலாநிதி றமீஸ் அப்துல்லா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கிழக்கிலங்கைக் கவிதைப் பாரம்பரியத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்ததில் கவிஞர் அப்துல் காதர் லெப்பைக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. சமயத்தையும் பண்பாட்டையும் நவீன உலகிற்குள் இழுத்துவந்த பெருமை அவருக்கு இருக்கிறது. அவ்வாறு காத்தான்குடியின் இலக்கியவாதிகளுக்கு இலக்கியப் பரப்பிலே பேசப்படத்தக்க தனியான வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றுக்கு இன்னுமொரு கதியால் ஆக காத்தநகரான் யூனுஸ் என்ற கவிஞர் வந்திருக்கிறார்.''

எந்தன் இதயத்தில் ஊறிய வார்த்தைகள் என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் என்னுரையில், ''எந்தன் மனக் கிடக்கையில் ஊசலாடிய உணர்வுகளை சராசரி மனிதனாய் சமூகத்தில் தொங்கி எனக்கோ புரிந்த பாஷையில் கவிதையாக்கி, ''மூன்றாம் சாமத்து புன்னகை'' பிரசவத்தை வாசக நெஞ்சங்களின் கரங்களில் ஒப்புவிப்பதில் மட்டில்லா பரவசம் அடைகின்றேன். எந்தன் ஆறாம் விரலாக சின்ன வயதிலிருந்தே ஒட்டிய காகிதமும் பேனாவும் இன்னு(று)ம் இணைபிரியா உறவாகவே உரசிக் கொண்டிருக்கிறது. எழுத்தும் பேச்சும் எனக்குள் ஊறி வசமாகிய தருணத்தில் அகக்கண் திறந்து ஆட்டுப் பிழுக்கையாக ஆங்காங்கே கொட்டுண்டு கிடந்த அடாவடிகளை... அடக்குமுறைகளை... கபடங்களை... சாக்கடைகளை கொட்டி வைக்க சிறந்த சாதனமாகவும் ஆயுதமாகவும் கை கொடுத்தது கவிதையெனும் சின்னக் கீறல்களே. கவிதையென்பது கற்பனா சக்தியோடும் இயற்கை மீதான பிடிப்போடும் சமூகத்தின்பால் ஏற்படுகின்ற கவர்ச்சியாலும் தன்னில் ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளை மையப்படுத்தி கிறுக்கப்படுகின்றதொரு கிறுக்கலென்பது என் நிலைப்பாடு'' என்று குறிப்பிடுகின்றார்.

இந்தக் கவிதை நூலில் பல்வேறு தலைப்பிலமைந்த கவிஞரது 51 கவிதைகளை வாசகர்கள் தரிசிக்க முடியும். இங்கு இரசனைக்காக சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

முதலாவது கவிதையான ''தேகக் கூட்டில் அடைபட்ட ஆன்மா'' (பக்கம் 25) என்ற கவிதை மரணத்தின் பின்னரான ஆன்மாவின் நிலையை அழகிய முறையில் எடுத்துக் கூறியுள்ளது. வெள்ளை ஆன்மா இதுவரை சிறைப்பட்டிருந்த இடம் தேகக்கூடு என்று உவமிக்கப்பட்டிருகின்றது. இறை அழைப்பை ஏற்று விடுதலை பெற்ற உயிர் இறைவனின் சந்நிதானத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறும் கவிஞரின் கவி வரிகள் இதோ:-

கூசாவில் அடைக்கப்பட்ட
வெள்ளை ஆன்மா
இறைவனின்
சன்னிதானத்திற்குப்
பறந்து சென்றிருக்கிறது

அவன் வரைந்த
எல்லைக் கோடுகளின்
பட்டியல்கள் புரட்டப்பட்டு
ஆன்மா மரண வானவர்களால்
ஆய்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது

நாற்றிசையும்
அலைமோதிய ஆன்மாவில்
அத்தனை ஆசைகளும்
பிரதியெடுக்கப்பட்டு
விடுகைப் பத்திரத்தில்
ஊஞ்சலாடியது உயிர்!

பலஸ்தீனத்தில் அவதிப்படும் மக்களை நினைத்து கவிஞர் ''தீப்பொறியைக் குடித்த குட்டிப் பிசாசு'' (பக்கம் 45) என்ற கவிதையில் மனம் உருகுகின்றார். நாளுக்கு நாள் அம்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் கரையாத கல் மனதையும் கலங்க வைத்திருக்கின்றது. விடியும் பொழுதுகள் எத்தனை துன்பங்களைச் சுமந்து வருமோ என்ற அம்மக்களின் எண்ணங்கள் இனிவரும் காலங்களில் மாறி, அழகிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நம்மைப் போலவே கவிஞரின் மனமும் எதிர்பார்க்கின்றது.

குர்ஆனைப் போர்த்திய
குட்டி தேசத்தின்
குரல் வளையில்
கையைப் புதைத்து
சல்லாபம் புரிகையில்
சரிந்து போனது
சரித்திர தேசம்

குமருகளின் பூ மேனியில்
நீ பூசை நடாத்தி
குடும்பம் நடாத்துகையில்
எங்களது
உணர்வுகள் உசும்பி
கண்ணீரைக் கட்டியாக
கிலோக் கணக்கில் தள்ளி
கொந்தளித்தது நெஞ்சம்!

குடும்பத்தைப் பிரிந்து குழந்தைச் செல்வங்களைப் பிரிந்து ஒட்டக தேசத்தில் தொழில் புரியும் ஆண்கள் படும் மன வேதனையை ''ஆண் பனைக் கூடு'' (பக்கம் 62) என்ற கவிதையில் தரிசிக்க வைக்கின்றார் கவிஞர் யூனூஸ். பணம் இன்று அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்தும் இக்காலத்தில் பணத்தை சம்பாரிப்பதற்கு வெளிநாடுகளுக்கு ஆளாய்ப் பறக்கிறார்கள் குடும்பத் தலைவர்கள். இவர்கள் அங்கு துயரத்தின் முழு வலியையும் அனுபவித்து வாழ்கின்றார்கள். சொந்த நாட்டிலிருந்து புறப்பட்டுப் போய் புழுதிக் காட்டில் தம் வாழ்க்கையை நகர்த்துபவர்களின் கனவுகளும் அந்தப் பாலைவன பூமி போல வரண்டே கிடக்கின்றது. இந்தத் துயரத்தை கீழுள்ள வரிகள் ஆத்மார்த்தமாக உணர்த்துகின்றது.

உணர்வுகள் உடைந்து
உறவுகள் தொலைத்து
உச்சத்தில் பறக்கையில்
உருவம் மாறி
உருகு நிலையில்
உயர்கிறது வாழ்வு

தந்தி வந்தும்
தங்கையின் திருமணத்தில்
தலைகாட்ட முடியாமல்
ஒட்டக தேசத்தில்
ஆசைகளை ஒட்டிவைத்து
பாலைவனக் கட்டையில்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது பாசம்!

''தவளைகளின் பாய்ச்சல்'' (பக்கம் 79) என்ற கவிதையில் அரசியலை தவளைகளுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. மாரிக் காலத்தில் தவளைகள் கணக்கின்றி வீதிகளில் திரிவதை, தேர்தல் காலங்களின் வேட்பாளர்களுக்கு ஒப்பிட்டிருப்பது நயக்கத்தக்கது.

இப்போதெல்லாம் தவளைகள் தயாளமாக வீதியில் இறங்கி கனத்த குரலில் சத்தங்களை எழுப்பிக் குதூகலிக்கிறது.. யாரிடம் கேட்டாலும் ஒருமித்த வார்த்தைகளையே ஒப்புவிப்பு செய்கிறார்கள்.. தவளைகள் மாரிகாலத்தில் அதிகமதிகம் சினுங்கித்தான் வேதனைகளை இறக்கி வைக்குமென.. மலிந்திருக்கும் மோக்கைகள் மொக்குத்தனமாய் கத்துகையில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் முச்சந்தியில் தோரணம் போட்டு கத்துவது ஞாபகத்தை தொட்டுப் பார்க்கிறது.. தவளைகள் சந்து பொந்து பாராமல் வயிறு நனைக்க சந்திக்குப் படையெடுக்கையில் வாகனத்தில் அகப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வதும் பாமரனின் கால்களுக்குள் மிதிபட்டும் சுயமிழக்கிறது.. மழை இல்லத்தில் தேங்கிக் கிடக்கும் தவளைக் குஞ்சுகள் சீசனில் மட்டுமே பாய்ந்து துள்ளிக் குதித்து வாக்குப் பிச்சை கேட்டு அரசியல் புரிகிறது.. தருணம் பார்த்து நிறங்கள் மாற்றிட உரத்த குரலில் ஓசைகளை எழுப்பிட அதிசய வார்த்தைகளை இறக்கி வாசிக்க அரசியல் தவளைகளுக்கே அவசரமாய் முடிகிறது!

''மூப்பின் மீதான போராட்டம்'' (பக்கம் 84) என்ற கவிதையில் முதுமை தரும் நினைவுகளையும், நினைவில் ஒளிந்துள்ள கவலைகளையும் காண முடிகின்றது. நாளை நாளை என சேமித்த கனவுகள் யாவும் வயோதிபக் காலத்தில் நினைவுக்கு வரும்போது அந்தக் கனவை நிறைவேற்ற முடியாமல் போகின்றது. ஓய்வூதியப் பணம் வைத்தியச் செலவுக்கே போதாமல் போகிறது என்ற துன்பியலைக் கீழுள்ள வரிகளில் உணர முடிகின்றது.

காய்ந்த சருகாகவே
இளமை இடம் மாறி
தேகத்தில் தேய்வுகளை
தயாளமாக
அறுவடை செய்கிறது

நடந்தவை அத்தனையும்
நினைப்பானில் மிஞ்சாது
மறதியென்னும்
நெடுங்கயிற்றை விழுங்க
நாதியற்ற வாழ்வு
அலைபாய்கையில்
நா கூடத் தட்டியது திட்டமாக

இவ்வாறான சமூகக் கவிதைகள் பலவற்றை எளிமையாகவும் வலிமையாகவும் தனது தொகுதி முழுவதிலும் முன்வைத்துள்ள நூலாசிரியரின் முயற்சிகள் இன்னும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மூன்றாம் சாமத்து புன்னகை
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - எம்.ரி.எம். யூனுஸ்
தொலைபேசி - 0779345640
ஈமெயில் - yoonusmtm@gmail.com
வெளியீடு - காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம்
விலை - 300 ரூபாய்

130. குருதிக் காடும் குழலிசையும் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

குருதிக் காடும் குழலிசையும் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் கொண்டுள்ள இவர் இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், வணிக ஆய்வியல், முதுகலை வணிக நிர்வாகவியல், வணிக நிர்வாக ஆய்வியல் ஆகியனவற்றைக் கற்று தற்போது உதவிப் பேராசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு இனத்தின் குரலாக 65 பக்கங்களில் வெளிவந்துள்ள இவரது குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலில் 56 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

துன்பங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என்பதே மானிடர் விருப்பமாகும். சிலரது வாழ்க்கை விதியின் வசத்தால் இன்பமாகவே கழிந்தாலும், சிலரது வாழ்க்கையும் அதே விதி வசத்தால் துன்பகரமானதாகவே அமைந்துவிடுகின்றது. அதனை விட்டுத் தூரமாகி சந்தோச மழையில் நனைய வேண்டும் என்ற கவிஞரின் ஆதங்கங்கள் விடியும் (பக்கம் 13) என்ற தலைப்பில் அமைந்துள்ள கீழுள்ள கவிதை வரிகளால் நன்கு உணர்த்தப் படுகின்றது.

என்றோ விடியுமென்றே
இன்றும் எதிர்பார்ப்பு
நன்றே வாழ்ந்துவிட
நாளும் உயிர்காத்து
வென்றே சென்றுவிடும்
கனவும் நிதமாச்சு!

ஒருநாள் எங்கள்
கனவும் நனவாகும்
என்றெண்ணும்போது
மனமும் நலமாகும்.

யுத்தம் தின்ற பூமியில் எஞ்சிய வடுக்களாக வாழும் மக்களின் மனப்போராட்டம், வடுக்கள் (பக்கம் 14) என்ற கவிதையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காயங்கள் ஆறிவிட்டாலும் வடுக்கள் அழிவதில்லை. அந்த வலியை கீழுள்ளவாறு பதிந்திருக்கிறார் நூலாசிரியர்.

ஆறாத காயங்களோடே
ஆதரவற்ற வாழ்க்கை
உறுப்பிழந்த வாழ்விலே
உறுதிகளும் போனது

குருதித் துளிகளில்
குறிப்பெடுத்தவர்களே
இவர்கள் எதிர்காலத்தையும்
இனி நினைவில் கொள்ளுங்கள்!

மலர்களின் வாசனை, மென்மை பற்றியெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கும் எமக்கு, சாட்டையடியாக விழுந்திருக்கின்றது செம்பூக்கள் (பக்கம் 16) என்ற கவிதை. இந்தக் கவிதையில் ஒரு வரலாற்றின் சோகமே அப்பிக் கிடக்கிறது. இந்தச் சிறிய கவிதை சொற்செறிவுடன், கருத்துச் செறிவும் பெற்று அமைந்திருப்பது சிறப்பானது.

எங்கள் மண்ணில் மட்டும்
வெள்ளைப் பூக்கள்
பூப்பதேயில்லை!
மலர்வதற்கு முன்பே
குருதிக் குளியலில்
அவைகள் நிறம் மாறிப்
போய்விடுவதால்!

யாழில் எரிக்கப்பட்ட நூலகம் அம்மக்களின் வரலாற்றை                    அழித்ததற்கு ஒப்பானது எனச் சொல்லப்படுகின்றது. இனவெறியர்களின் இத்தகைய செயற்பாடுகள் அப்பாவி மக்களின் வாழ்க்கை முறையை அடிமட்டமாக்கிவிட்டதை எரிக்கப்பட்ட அடையாளம் (பக்கம் 17) எனும் கவிதையில் ஆணித்தரமாகப் பதிகிறார் நூலாசிரியர் ரேகா.

எரித்தது நூலகமல்ல
எங்கள் வரலாறு..
அழிந்தது நூல்கள் அல்ல
எங்கள் உடமைகள்..

சாம்பலான வரலாறுகளோடு
சாய்ந்துவிட மாட்டோம்..
புதிதாய்ச் சரித்திரம் படைப்போம்
புவியே வியக்க வளர்வோம்!

இடி விழுந்த மண் (பக்கம் 18) எனும் கவிதையிலும் போரின் அவலமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இடி விழுந்த மரம், இடி விழுந்த இடம் என்ற சொற்களுக்கெல்லாம் அப்பால் இடி விழுந்த மண் என்று தனது இதய சோகத்தை சொல்லில் வடித்திருக்கிறார் கவிஞர் ரேகா. அவ்வரிகளின் வலிகள் பின்வருமாறு அமைந்துள்ளது.

உப்புக் கடல் நடுவே
உப்புக் கரிக்கும் வாழ்விங்கே
கரை தொடும் அலைகள் கூட
கறையாகும் கொடுமையிங்கே

கருவறையையும் கல்லறையாக்கும்
கயவர்களின் கூடமிது
கடவுள்களையும் கைதியாக்கும்
கடுமையான தீவிது

கதவடைத்த உலகமிது
கதறல்களும் கேட்கவில்லை.
இடி விழுந்த மண்ணிலே
இயல்பு வாழ்க்கை இன்றுமில்லை

ஒரு மணித்தியாலம் கெடு விதித்து வெளியேறுமாறு ஒரு இனத்துடைப்பு செய்தபோது அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்ட பதற்றத்தை, எதை எடுக்க? (பக்கம் 40) என்ற கவிதையில் தத்ரூபமாகக் காண முடிகின்றது. தலையெழுத்தின் வழிகாட்டலில் பாதை மாறிப் பயணிக்க வேண்டும் என்ற நிலையானது அவர்களை எந்தளவு பாதித்திருக்கும். பின்வரும் வரிகளில் அதனை நன்கு உணரலாம்.

எதை எடுப்பது
எதை விடுவது
ஒரு மணி நேரத்துள்
ஓடிவிட வேண்டுமாம்

உயிருக்குப் பயந்து
ஊர்விட்டு ஓடிட
உடமைகள் வேண்டுமா
உணவு மட்டும் போதுமா

பரம்பரை ஆவணங்களை
பத்திரமாய் எடுக்கவா
அடுத்த ஊரில் பிழைக்க
அனைத்தையும் எடுக்கவா

கையில் கிடைத்தவற்றை
கணப் பொழுதில் பற்றிக் கொண்டு
ஓடத் தொடங்கிவிட்டோம்
ஓய்வில்லா வாழ்வை நோக்கி

உயிருக்குப் பயந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோருக்கு சொந்த மண்ணின் ஏக்கம் எப்போதும் இருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து, சொந்த நாட்டின் காற்றைச் சுதந்திரமாகச் சுவாசிக்க வேண்டும் என்ற கனவு எப்போதும் இருக்கும். அவர்களது ஏக்கம், அடங்கும் உயிர்கள் (பக்கம் 58) எனும் கவிதையில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை மண் விட்டு வந்த
வெறுமை வாழ்வில்
ஆயிரமாய் உழைத்தாலென்ன
அடுத்தடுத்து வென்றாலென்ன

மறுமுறை பார்ப்போமா என்ற
ஏக்கத்துடனேயே
அடங்கிப் போகுது உயிர்கள்
அயல் நாட்டிலே!

புலம்பெயர்ந்த நிலையில் தாய் மண்ணின் மீது கொண்ட அதிக பற்றால் அதன் விடிவுக்காக அங்கிருந்து குரல் கொடுக்கும் இளந் தலைமுறைக் கவிஞர் ரேகா பாராட்டுக்குரியவர். அவரது எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்!!!

நூல் - குருதிக் காடும் குழலிசையும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பொலிகையூர் ரேகா
வெளியீடு - கீதம் பப்ளிகேஷன்ஸ்
விலை - 60 ரூபாய் (இந்திய விலை)

129. வலிகள் சுமந்த தேசம் கவிதைத் தொகுதி

வலிகள் சுமந்த தேசம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத்தும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிரும் வழங்கியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக  இலக்கியப் பணியாற்றி வந்த இவர் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களை எழுதி அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றார்.

அநியாயங்களுக்கு எதிரான காட்டமாகவும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கான சாடல்களாவும் முயற்சி செய்து முன்னேறாமல் சோம்பேறிகளாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும் மானிடர்களுக்கு சாட்டையடியாகவும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு படும் மானிடனின் அவலக் குரல்களை படம் பிடித்துக் காட்டும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதாகவும் இப்படி பல கருக்களை வைத்தே ''வலிகள் சுமந்த தேசம்'' என்ற கவிதை நூலை மருதூர் ஜமால்தீன் யாத்துள்ளார்.

மிகவும் எளிய வடிவில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதி சுடும் நெருப்பாக பல விடயங்களை கக்கி நிற்கின்றமை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றன. இந்த நூலில் நெருப்பாகச் சுடும் சில வரிகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

* மறக்க முடியவில்லை என் தாய் நிலத்தை கொத்தியெறிந்து விட்டு குதூகலிக்கின்றீர்.. உமக்கென்ன தெரியும் என்னுயிர் அங்கிருப்பது..
* உன் முகமூடி கிழித்தெறியப்படும் ஒரு நாளில் மனிதப் போர்வைக்குள் எத்தனை உருவங்களில்தான் உலா வருகின்றாய்?
* உனது ஒவ்வொரு மூச்சுக்களுக்கும் கேள்வி காத்திருக்கிறது. தெளிந்து கொள் மௌத்தின் வரவு உனக்கு அருகிலிருக்கிறது..
* என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு எம்மைத் துவம்சம் செய்திட எத்தனிக்கும் உங்கள் கால்களை உசுப்பிவிட்டது யார்?
* குதர்க்கப் பேச்சாலும் குண்டாந் தடிகளாலும் அதர்மத்தைத் தூவியா அஹிம்சை வளர்ப்பது?
* நேற்றுக் கண்ட கனவு போல நேசத்தைப் பறிகொடுத்து போற்றத்தகு வளங்களை போக்கிரிகளின் புகலிடமாக்கிய அந்தக் காலங்கள் அந்திப் பொழுதுகளாய் மறையும் தருணத்தில் துவேஷ விளக்கைத் தூண்டுகிறீர்கள்..
* போர்க் கவசங்களால் பொன்னான உயிர்களை வேரற்று இடமற்று வெதும்பி வாழ்ந்து துன்பமே நாவலாகத் தொடர்கையில் இன்னுமே நீங்கள் பாடம் கற்கவில்லை.
* காலக் கவசத்தைக் கைப்பற்றி தனக்குக் கீழே ஏனைய சமூகம் கொத்தடிமைகளென்று கொக்கரித்தே உங்களின் கழுத்தறுபட்டதை மறந்துவிட்டீர்கள்.
* நினைவிருக்கட்டும் இந்த நாடு உங்கள் நீதிமன்றமல்ல நீங்கள் தீர்ப்பளிக்க எல்லா மக்களினதும்..
* இரவே நீயும் ஏனோ விடிகிறாய்? கடித்துக் குதறும் கழுகுப் பார்வை நடித்துப் பறிக்கும் நாடகசாலை கிடைத்தது லாபமாய் கொத்தியே செல்லும் பறவையாய் மிருகமாய் பாதையில் மனிதம் பாய்வன கண்டும் ஏனோ விடிகிறாய்?
* எனது வளவுக்குள் விழா எடுக்கின்றன சில வல்லூறுகள்.. அகிம்சைப் போதனைக்கு அத்திவாரமிடுவதாய் ஆளுமைகளை சுமக்கும் ஆத்மாக்களுக்கு பொறி வைக்கின்றன.. வன்மைக் குணத்துடன் வந்து இடம்பிடித்தும் சொந்தம் தமக்கு மட்டுமாய் சொதப்புகின்றன..
* வாழ்வுப் பாதையை பீதி வெள்ளத்திலாக்கி உயிர்க் கூடுகளை உடைக்க முயல்கின்றன..
* மானுடங்கள் மனித நேயத்திற்காய் விண்ணப்பிக்கும் நவீன யுகத்திலா இந்த வல்லூறுகள் வன்மம் புரிய வேண்டும்?

மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞரின் சுட்டுக் கொதிக்கின்ற இதயத்தையும் வெம்பி நிற்கின்ற மனதையும் கண்டு கொள்ளலாம். வாசிக்கின்ற எமக்கும் அதே மனநிலை ஏற்பட்டு இதயம் கனத்துவிடுகின்றது. எப்படியோ எல்லா இனங்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் மற்றவர்களுக்குப் பிரச்சினையில்லாமல் வாழ முயற்சிப்போமாக என்று ஒவ்வொருவரும் பிரார்த்தித்துக்கொள்வோம். சமாதானம் ஒன்றின் மூலமே நாடு முன்னேற்றமடையும். இனத்துவேச காய் நகர்த்தல்கள் ஒரு நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும்.

ஷவலிகள் சுமந்த தேசம்| ஒரு சமூகத்தின் சோகத்தை சுமந்து நிற்கின்றது என்று சொல்வது பொருத்தமானது. வாசகர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் கவிஞரின் மனதில் உள்ள ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இலக்கியப் பிரியர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலைக் கட்டாயம் வாங்கி வாசிக்கவும்.

மருதூர் ஜமால்தீன் இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - வலிகள் சுமந்த தேசம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
தொலைபேசி - 0775590611
வெளியீடு - ஏறாவூர் வாசிப்பு வட்டம்
விலை - 100 ரூபாய்

128. விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி

விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நுஸ்கி இக்பால். கட்டிடத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றாலும் கவிதைமீது தான் கொண்ட தீராத ஆர்வம் காரணமாக பல கவிதைகளை 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து எழுதி தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவற்றை களப்படுத்தி வருகின்றார். அவ்வாறு களப்படுத்திவந்த கவிதைகளில் 46 கவிதைகளைத் தொகுத்து 'விடியல் உனக்காக...' என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை  வெளியிட்டுள்ளார். 85 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலை காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் வெளியீடு செய்துள்ளது.

என்னை விதையிட்ட இக்பாலுக்கும், விளைத்திட்ட றஸீனாவுக்கும் என்று இந்த நூலைத் தனது பெற்றோருக்கே நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த ரீ.எல். ஜவ்பர்கான் நூலுக்கான அணிந்துரையை வழங்கியுள்ளார். அதேபோல் நூலுக்கான வாழ்த்துரையை மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் வழங்கியுள்ளதோடு நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ரி.எம். யூனுஸ் ஜே.பி. யும் வழங்கியுள்ளார்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியிலிருந்து பல படைப்பாளிகள் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கிறார்கள். அந்தவகையில் 'விடியல் உனக்காக...' என்ற கவிதை நூலை வெளியீடு செய்ததன் மூலம் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நுஸ்கி இக்பால். அகம் சார்ந்தவை, இயற்கைமீது தான்கொண்ட பற்று, வாழ்வியல் அனுபவங்கள், துயரங்களின் வெளிப்பாடு, அராஜகத்துக்கெதிரான கர்ஜிப்பு, அகதி வாழ்க்கை, சமூக அக்கih, போலி அரசியல் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியதாக அவரது கவிதைகளின் கருப்பொருட்கள் காணப்படுகின்றன.

தன்னுரையில் நுஸ்கி இக்பால் தான் கவிதைமீதுகொண்ட ஆர்வத்தையும் தனது நூல் வெளியீடு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''ஆயிரம் கவிகளை எழுதுவதைவிட அவற்றில் சிலதை ஒரு நூலாக வெளியிடுவது சிறந்தது. என் கவிகளை என் உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கின்றேன். எத்தனை பேர் எத்தனை கவிகள் படைத்தாலும் அவற்றிலிருந்து சிறிதளவேனும் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதே எனது அவா. கவிகளில் பலவிதம் இருந்தாலும் என் கவிகளை எல்லோராலும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது மற்றுமொரு ஆசை. என் கவிகள் எத்தனை உணர்வுகளை பகிர்ந்தாலும் அனைத்தும் எனது பல்கலைக்கழக வாழ்வில் நான் கண்ட சம்பவங்கள், தனிமையின் அனுபவங்கள் அனைத்தினதும் பிரதிபலிப்பே.''

இந்த நூலில் 46 தலைப்புகள் பல்வேறு வகையான கருப்பொருட்களில் அமைந்துள்ளன. இக்கவிதைகளில் ஒருசிலவற்றை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

நீ மட்டும் போதும் அம்மா (பக்கம் 07) என்ற கவிதை நம்மனைவரினதும் முதல் உறவான தாயைப் பற்றி பேசுகின்றது. கருவில் இருக்கும்போதே தாய்க்கும் சேய்க்குமான உறவு தொடங்கிவிடுகின்றது. குழந்தையின் அசைவுகளைத் தாய் உணரக்கூடிய அற்புதத்தை இறைவன் வகுத்து வைத்திருக்கின்றான். அந்த ஒற்றை உறவின் சக்தி இந்த உலகத்தையே இயக்க வல்லது. அதுபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மல்லிகை மணத்தாலும்
முல்லை மலரும் மணத்தாலும்
உன் சேலை முகர்ந்து தூங்கும்
அந்த வாசம் வருடுது அம்மா

எந்தன் ஸ்பரிசம் சுடுகையில்
உன் ஸ்பரிசத்தோடு என்னை அணைத்து
உச்சி முகர்ந்து எனக்குத் தரும்
அந்த முத்தம் போதும் அம்மா

தள்ளாடும் வயது (பக்கம் 17) என்ற கவிதை நன்றி மறந்த பிள்ளைகள் பற்றியும் பெற்றோரின் ஏக்கம் பற்றியும் எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பிறகு பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுவதும், அவர்களை மதிக்காமல் விடுவதும் கண்கூடாக நாம் அறிந்திருக்கின்றோம். அத்தகையவர்கள் எதிர்காலத்தில் தம் பிள்ளைகளாலேயே கைவிடப்படும் நிலைமைகளையும் கண்டு வருகிறோம். பெற்றோரின் ஏக்கம் கீழுள்ளவரிகளில் நன்கு பளிச்சிடுகின்றது.

தள்ளாடும் வயதும் கூன் விழுந்த முதுகும் என் கதை சொல்லும்.. எலும்போடு சேர்ந்த தோலும் எழுந்திருக்க முடியா காலும் என் விதி பாடும்.. பாசத்தோடு வளர்த்த பிள்ளை பாவி நீ எனக்கு தொல்லையென்று தனியே விட்டுப் போகும்.. என் சாண் வயிறு சேதி ஒன்றும் அறியாமல் என்னை அள்ளித் தின்னும்.. பொறுக்கி வந்த மீனை பிரித்து அறுக்கும் போது பூனையும் அதற்கு ஏங்கும் இந்த வயோதிபம் உலையிலே வேகும்!!!

அண்ணா நீ ஒரு அன்னை (பக்கம் 52) என்ற கவிதை ஒரு பாசமிகு அண்ணாவைப் பற்றி தங்கை கூறுவதாய் அமைந்துள்ளது. அண்ணன் என்பவன் தந்தைக்கு சமம். தங்கை திருமணமுடித்து நான்கு குழந்தைகள் ஆனபோதும் அவர்களின் நெருக்கமும் இறுக்கம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. சமூகத்தில் இவ்வாறான உறவுகளை இக்காலத்தில் காண்பது அரிது. இத்தகைய உறவு வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அண்ணாவுக்காக தங்கை உருகும் பாசம் கீழே வரிகளாக..

ஒரு கருவறையில் ஒன்றாய் பிண்டமாய் இருந்தவர்கள் நாம்.. ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பால் அருந்தி பசி தீர்த்தவர்கள் நாம்.. இச்சைக்காய் நம்மை பிரிந்து தந்தை சென்றபோது என் தந்தையாய் உருவெடுத்தவன் நீ.. என் பாதம் வெயிலில் சுடும் என்று உன் தோள்களில் என்னை சுமந்தவன் நீ.. கண்ணில் பட்டதெல்லாம் நான் அடம்பிடிக்க முகம் சுழிக்காமல் என் ஆசை தீர்த்தவன் நீ.. என்னை அம்மா அடித்து என் இமைகள் நனைகையில் உன் மடி சாய்த்து என்னை அரவணைத்தவன் நீ..

தொழிலாளி (பக்கம் 61) என்ற கவிதை அவர்களின் சேவையைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொழிலாளர்களும் எம் சமூகத்தின் தூண்கள். அவர்களுக்கு பிரதியீடாக யாரும் அமைந்துவிட முடியாது. மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வரை எந்தத் தொழிலும் இழிவல்ல.ஆதலால் தொழிலாளர்கள் யாவரும் எம் நண்பர்கள் என்பதை நூலாசிரியர் ஆழமாக இக் கவிதையினூடாக பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

உதிரத்தை வியர்வையாக்கி
வியர்வையை உரமாக்கி
மண்ணைப் பொன்னாக்கும்
வித்தை தெரிந்தவன்
தொழிலாளி

மழைவெயில் பாராது
அலை கடல் பாராது
உப்பு நீரில் முத்து சுமப்பவன்
தொழிலாளி

பட்ட மரத்தில்
பச்சையம் சுரக்க வைப்பவன்
வெடித்த நிலத்தில்
வேர் பிடிக்க வைப்பவன்
இந்த தொழிலாளி

இவைதவிர 'வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும், கண்ணாலே பேசி பேசி, அடியே அழகி, உன் பதில கொஞ்சம் சொல்லுமா, என் வர்ணனைக்குரியவள், என் அன்பு மனைவி போன்ற தலைப்புக்களில் 06 காதல் கவிதைகளும் நூலில் இடம்பிடித்துள்ளன. புதிதாக எழுதுபவர்கள் அதிகமாக காதல் கவிதைகளை எழுதுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் நுஸ்கி இக்பாலின் இந்த ஷவிடியல் உனக்காக..' என்ற நூலில் காதல் கவிதைகள் சொற்ப அளவிலேயே இடம்பிடித்துள்ளன. இனிவரும் தொகுதிகளையும் சமூக அக்கறை கொண்டு கனதியான கவிதைகளை உள்ளடக்கியதாக வெளியிடுவார் என்று நம்புகிறேன். நுஸ்கி இக்பால் இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - விடியல் உனக்காக...
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - நுஸ்கி இக்பால்
தொலைபேசி - 0770390869
ஈமெயில் - nuskymim@gmail.com
வெளியீடு - இஸ்லாமிய இலக்கிய கழகம் - காத்தான்குடி
விலை - 300 ரூபாய்

127. மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி

மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஜனாப் கே.எம். ஹலால்தீன்  - திருமதி. பீ.யூ. நஸீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரிந்த எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது நூலாகும். 78 கவிதைகளை உள்ளடக்கியதாக 120 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை பூங்காவனம் இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்), மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) ஆகிய நூல்களை இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் ''ஊவாவின் கவிதை இலக்கிய வரலாற்றில் ரிஸ்னாவுடைய கவிதைகளும் நிச்சயம் ஆராயப்படும். இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் இந்நூலாசிரியர் பல பங்களிப்புகளைச் செய்து வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை நிறைவு செய்துள்ள இவர் பல இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார். ஒரு சிறந்த கவிஞன் என்பவன் தக்க சொல்லை, தக்க இடத்தில், தக்கவாறு கையாள்பவன் என்றும் - சிறந்த கவிதை என்பது நல்ல சொற்கள், நல்ல ஒழுங்கில் அமைவது என்றும் கொள்ளலாம். இக்கவிஞரின் கவிதைகளில் இப்பண்புகளைத் தொடர்ந்து காணலாம் என்பதற்கு 78 இற்கும் மேற்பட்ட கவிதைகளில் பல உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. கவிதைக்காகக் கற்பனையில் ஆழ்ந்துவிடாமல் தன்னைச் சூழ உள்ள சமூகம், அதில் வாழும் மனிதர்கள்.. இவற்றையே பொருளாகக் கொண்டு தனது கவிதா ஆற்றலைச் சிறப்புறக் காட்டியுள்ள நூலாசிரியரின் இந்நூல், சகல தமிழ் பேசும் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் நிச்சயம் பெறும்.'' என்று கூறியுள்ளார்.

அதுபோல இந்த நூலுக்கு நயவுரை வழங்கியுள்ள முன்னாள் அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''இலக்கியத் தடத்தில் கால்பதித்து அதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இளையவர்களில் முக்கியமான ஒருவராகவே தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவை நான் பார்க்கிறேன். ஒருசில கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்து போவோர்களாய் பல இளையவர்கள் இருக்கையிலே தான் சார்ந்த இலக்கியத் துறையில் ஒரு திடமான தடத்தைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் நிறையவே காணப்படுவதை நான் அறிவேன். இலக்கியத் துறையிலுள்ள மூத்தோருடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, அவர்களை அணுகும் முறை என்பனவுடன், இளையவர்களுடன் இருக்கும் சுமுக உறவு போன்றன இத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் ரிஸ்னாவை ஈடுபட வைக்கிறது என்று சொன்னால் அது பிழையல்ல. ஏறக்குறைய இலங்கையின் எல்லா பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது பதிவினைச் செய்துள்ள எச்.எப். ரிஸ்னா, கடல் கடந்தும் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். அவருக்கென்றே பல பிரத்தியேக அழகான வலைப்பதிவுகள் சர்வதேசமெங்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருக்கும் தேடல் முயற்சிகள் அவரை பண்படுத்திக் கொண்டிருக்கின்றன.''

கருத்துரை வழங்கியுள்ள சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்கள் ''எழுத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்புகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். எழுத்தின் சமூக பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா உன்னதமான நோக்கங்கள் நிறைந்தவராகக் காணக்கூடியதாய் உள்ளார். இவரது உறைப்பான வார்த்தைககள், உபதேசங்கள், போதனை கல்வி போன்றன நிச்சயம் சமுதாயத் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன. நெருப்பு வாழ்க்கை, இதயமும் பழஞ்செருப்பும், பெரிய புள்ள, போலி மனிதர்கள், சீதனம் தின்னும் கழுகுகள், ஏழைத் தாய் போன்ற கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துச் செறிந்த அவரது உன்னத எழுத்துக்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கிறது எனலாம்'' என்று ரிஸ்னாவின் கவிதைகள் பற்றி சிலாகித்துள்ளார்.

'மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு' இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இந்த நூலில் உள்ள 78 கவிதைகளில் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

'சீற்றம்' (பக்கம் 21) என்ற கவிதை வெள்ள அனர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அந்த அனர்த்தம் மனிதனுக்குப் புகட்டக்கூடிய பாடங்களையும் இக்கவிதை கற்பிக்கின்றது. எமனைப் போல மழை பெய்து அதனால் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் அழிந்துவிட்டதாகக் கூறும் நூலாசிரியர் அவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட வீடுகளுக்குள் சென்று திருடுவோரையும் இக்கவிதையில் சாடியிருப்பது அவ்வாறு நடப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.

கொல்லும் எமனாய் வானவெளி
துன்ப மழையைப் பொழிந்ததம்மா
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
பார்த்திருக்க அழிந்ததம்மா!

வெள்ளம் என்ற சொல் கேட்டு
உள்ளம் தீயாய் எரிந்ததம்மா
கனவில் பூக்கும் தோட்டத்தில்
கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!

கூரை வரையும் நீர் வந்து
பதறச் செய்து வதைத்ததம்மா
ஓடி ஒழிய வழிகளின்றி
பின்னால் வந்து உதைத்ததம்மா!

'எனது ஊரும் தலைநகரும்' (பக்கம் 43) கவிதை சொந்த ஊரின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதோடு, தலைநகரில் செயற்கை வாழ்க்கை வாழுகின்ற மனக்கிலேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. சொந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு தலைநகரம் அபயமளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றதென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மன வாட்டத்தைக் கொடுப்பதும் உண்மையே. காரணம் வீட்டைவிட்டு தொழிலுக்காக, படிப்புக்காக என்று தலைநகரில் வந்தேறு குடிகள்தான் அதிகம். அவ்வாறு காலச் சக்கரத்தின் காய் நகர்த்தலுக்கு ஆட்பட்டு வந்தவர்களின் மனவோட்டத்தை, ஊர் பற்றிய பிரக்ஞையை இக்கவிதை மூலம் நன்கு உணரலாம்.

அங்கு...
நான் ஓடித் திரிந்த மேட்டுநிலம்..
குளிர் பூசும் காலநிலை..
பசுமைமிகு பச்சை மரம்..
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!
மொட்டை மாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை..
மரத்தடி நிழலின் ஈரலிப்பு..
பலாப் பழத்தின் வாசனை..
என் சமையலை ருசித்தவாறே
கலாய்த்த உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா..
செல்லத் தங்கை.. சுட்டித் தம்பி!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்..
பச்சையம் மறந்த பொட்டல் வெளி..
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்..
வாகனங்களின் தொடர் இரைச்சல்..
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி..
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!

'லயத்து வீடும் கரத்தை மாடும்' (பக்கம் 66) என்ற கவிதை காலாகாலமாக மலையக மக்கள் படுகின்ற துயரத்தை பிரதிபலிக்கின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்பவர்கள் மழை வெயில் பாராது, கஷ்டப்படுகி;ன்றனர். ஆனாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு ஷலயத்துக் காம்பறா| என்று சொல்லப்படும் சிறு அறையில் பல தலைமுறைகள் வாழ்ந்து வருகின்றார்கள். வாக்குகள் கேட்டு காலடி தேடிப் போகும் அரசியல்வாதிகள் கூட, அம்மக்களின் பிரச்சிகைளைத் தீர்த்து வைக்கப் பாடுபடுவதில்லை. ரொட்டியும் சம்பலும், தேயிலைச் சாயமும்தான் அவர்களது உணவு. இந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையை இக்கவிதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு!

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழாப் போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி!

மானியம், கடனுதவி
அர்த்தமெல்லாம் பிழச்சிப் போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சிப் போச்சி!

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தொரே மாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி!

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட நெலச்சிப் போச்சி!

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

இளம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராக எச்.எப். ரிஸ்னாவைச் சொல்லலலாம். இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிளும் காலூன்றி வெற்றி பெறக்கூடிய திறமை இவருக்கு நிறையவே இருக்கின்றது. இவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சந்தக் கவிதைகளில் மனம் லயிக்கச் செய்யும் எழுத்தாற்றல் கைவரப் பெற்ற இவரது இலக்கியப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்!!!


நூல் - மழையில் நனையும் மனசு 
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com 
விலை - 400 ரூபாய்