Monday, February 26, 2018

119. உன் மொழியில் தழைக்கிறேன் - கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

உன் மொழியில் தழைக்கிறேன் -  கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

மருதமுனை ஹரீஷாவின் கன்னிக் கவிதைத் தொகுதியே ஷஷஉன் மொழியில் தழைக்கிறேன்|| என்ற கவிதைத் தொகுதியாகும். கல்முனை, தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் இரண்டாவது வெளியீடாக 49 கவிதைகளை உள்ளடக்கியதாக 64 பக்கங்களில் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கியதாக இந்த நூல் வெளிவந்துள்ளது. ஊடகவியலாளர், பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதர் - எம்.எல். ஹவ்லத் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியும், ஊடகவியலாளர் சமீமின் மனைவியுமான இவர் தற்போது நூலகராகக் கடமையாற்றுகின்றார். இந்தப் பின்னணி இவரை ஒரு கவிதாயினியாக பரிணமிக்க வைத்திருக்கிறது..

1999 களில் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர் மருதமுனை ஹரீஷா. கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள் என்று தேசியப் பத்திரிகைகள் பலவற்றிலும் தனது படைப்புக்களைக் களப்படுத்தியவர். மட்டுமல்லாமல் சக்தி எப்.எம். மற்றும் பிறை எப்.எம். ஆகிய வானொலி அலைவரிசைகளினூடாகவும் தனது கவிதைகளை காற்றில் கலக்கச் செய்துள்ளார். 

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஷஷதழைத்து வரும் பெண் மொழி|| என்ற தலைப்பில் இந்த நூல் பற்றிய தனது கருத்தை முன்வைத்துள்ளார். அவரது உரையில் ஷஷமருதமுனை இலக்கிய மணம் கமழும் ஊர். கிழக்கின் மருத வாசலால்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வெளியே வருகிறது. புலவர் மணியின் பாரம்பரியத்தில் இருந்து இன்றைய இளம் கவிஞர்கள் வரை அது நீண்டு செல்கிறது. அந்த ஒற்றை முகம் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தது. ஹரீஷா எனும் பெண் மொழியாயும் இன்று தழைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது|| என்று குறிப்பிட்டுள்ளார். 

ஷஷமிக நெருக்கமான உறவின் இடைவெளி அதிகமாகிப் போக தொடர்ந்தும் அது நீளுமோ என்று அச்சமுற்றிருந்த பொழுதுகள்.. வாழ்வு எந்தவித சுவாரஸ்யங்களுமற்றது என்ற முடிவோடு கடத்த எத்தனித்த வாழ்வின் தொடக்க காலங்கள்.. இப்படி.. இப்படி.. வாழ்வின் சவால்களை முறியடிக்கத் தெரியாத அப்பாவித் தனமான குழந்தைத் தனமான எனக்குள்.. வாழ்வின் உச்சகட்ட சுவாரஸ்யங்களையும் ரசனைகளையும் பல பக்குவங்களையும் ஏற்படுத்தியது எனது குழந்தைகள்தான், அவர்கள் பேசிய மொழிதான். வீணி வழியும் அந்த வாயிலிருந்து வரும் மணத்தைப்போல அந்த மொழியும் எனக்குள் மணம் பரப்பியது. போனால் திரும்பி வர முடியாத அந்தக் குழந்தைப் பருவத்தையும், மொழியையும் ஏக்கங்களையும் அப்படியே அள்ளி எடுத்திருக்கின்றேன்|| என்று தன் கவிதை மொழி பற்றி மனந்திறக்கிறார் ஹரீஷா.

ஷஷஎன் மனசு|| (பக்கம் 02) என்ற கவிதை மனசின் எல்லாவித செயற்பாடுகளையும் சொல்லி நிற்கின்றது. மனம் என்பது நிலையில்லாதது. சதாவும் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணமே இருக்கும். சோகமான சிந்தனைகள் அதிகரிக்கும்போது மனித மனம் விரக்தியடைகின்றது. இனிமையான சிந்தனைகள் ஏற்படும்போது பரவசமடைகின்றது.  

எக்காளமிடும்.. எரிமலையாய் வெடிக்கும்.. கத்திக் கதறும்.. காகம் போல் கரையும்.. சேவல் போல் கூவும்.. கொக்கரிக்கும்.. கனைக்கும்.. ஓ.. வென்று அழும்.. அலறும் துடிக்கும்.. குதிரை போல கனைக்கும்.. பாய்ந்து ஓடும்.. பின் பறவை போல்.. சிறகு முளைத்துப் பறக்கும்.. வட்டமிடும்.. வாய் முளைக்கும்.. வார்த்தைகள் பேசும்.. வசனங்கள் எழுதும்.. வசீகரிக்கும்.. வசப்படாதவற்றுக்காய் ஏங்கும்.. இறுதியிலே சும்மா கிடக்கும்!

இந்தக் கவிதையை வாசிக்கும் போது நான் எனது ஷஷதென்றலின் வேகம்|| என்ற கவிதை நூலில் எழுதியுள்ள ஷஷகண்ணீர்க் காவியம்|| என்ற தலைப்பிலமைந்த கவிதை நினைவுக்கு வருகிறது. பொதுவாக கவிஞர்கள் மென்மையான மனது படைத்தவர்கள் அதனால்த்தான் என்னவோ மனது ரணப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இப்படியான கவிதைகளை எழுதி சற்று ஆறுதலடைய முடிகிறது. ஹரீஷாவின் ஷஷஎன் மனது|| கவிதையும் எனது ஷஷகண்ணீர்க் காவியம்|| என்ற கவிதையும் ஒரே மன அதிர்வுகளைக் கொண்டு வௌ;வேறு மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளாகும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஷஷகாணவில்லை|| (பக்கம் 05) என்ற கவிதை மீனவ வாழ்க்கையின் சோக நிலையை தத்ரூபமாக காண்பிக்கின்றது. மீன் பிடிக்கச் சென்ற கணவரின் வருகையை ஆவலோடும், தவிப்போடும் எதிர்பார்க்கும் மனைவியின் ஆதங்கம் நாட்டுப்புறப் பாடல் சாயலில் இங்கு கவிதைiயாக பரிணமிக்கின்றது.

எண்ணிரெண்டு நாளாக 
என்னவரைக் காணவில்லை
கடலுக்கு மீன் பிடிக்க 
வலையோடு போனவரு

வாடியில வீடு கட்டி
வசதியோடு வாழவேணும்
என்று சொல்லிச் சென்றவரு
இதுவரைக்கும் காணவில்லை

கால் கடுக்கக் காத்திருக்கேன் 
கண்ணிரெண்டும் பூத்திருக்கேன்
கடுங் கவலையில தோய்ந்திருக்கேன்
கண்டவங்க சொல்லிடுங்க

ஷஷஅழகுக் குறிப்புகள்|| (பக்கம் 28) என்ற கவிதை செல்ல மகளின் குறும்புத் தனங்களை அடியொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. மழலைகள் பேசுவதைக் கேட்டிருப்பதும் சுகம்.. அவர்களின் செயல்களை ரசிப்பதும் ஒரு சுகமே. அடுக்கி வைத்த துணிகளை இழுத்துப் போடுவது, சுவர்களில் கிறுக்குவது, விழுவது, அழுவது, எழுவது என்ற அனைத்து செயற்பாடுகளிலும் ஒரு குட்டிக் கவிதை ஒளிந்திருக்கின்றது. நூலாசிரியர் தன் இரு மகள்மாரைப் பற்றி எழுதிய கவிதைகளே இந்நூலில் அதிகமாக விரவிக் கிடக்கின்றன. அந்தக் குழந்தைச் செல்வங்கள் செய்கின்றவற்றின் வசந்த வருடல்கள் பின்வரும் கவிதை வரிகளில் காணப்படுகின்றன.

உன் சுண்டல் 
மிக ருசியாக இருக்கும்
அழகாய்ப் பூத்திருந்த
முற்றத்துப் பூச்செடியின்
பூக்களைப் பறித்துச் சுண்டி - நீ
சிரட்டையில் வைக்கும் போது

மிக நேர்த்தியாய்
அடுக்கி வைத்த
ஆடைகளையெல்லாம்
அலங்கோலப்படுத்தி வைக்கும் போது
தனி அழகு தரும் 
உடுப்பு அலுமாரி

வீட்டின் 
வண்ணப் பூச்சைவிட
அந்த வண்ணத்தின் மேல் 
நீ வரையும் ஓவியம் 
ஒரு காவியமாயிருக்கும்

ஷஷபுன்முறுவல் தொலைத்த முற்றம்|| (பக்கம் 42) என்ற கவிதை தாய் தந்தையின் அருமையை நன்கு உணர்த்துகின்றது. இருந்த இடத்தை விட்டு வேறொரு வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்ட தாயையும் தந்தையையும் எண்ணி எழுதப்பட்ட கவிதையாக இது காணப்படுகின்றது. தாயின் அன்புக்கும், தந்தையின் அரவணைப்புக்கும் ஈடாக உலகில் எதுவுமில்லை என்பதை கீழ்வரும் கவிதை வரிகள் உணர்த்தி நிற்கின்றன.

எட்டிக் கடந்து வரும்.. பின் கம்பி வேலி.. கரள் பிடித்துக் கிடக்கிறது.. கொடியில் கழுவிக் காயப்போடும் ஆடைகள்.. நனைந்து தொப்பாகிப் போகிறது.. ஒவ்வொரு பாட்ட மழையிலும்.. கறிக் கோப்பையோடு.. உம்மாவை அழைத்து அழைத்து.. தொண்டை கிழிந்து போனது.. உம்மா வரவே இல்லை.. உம்மா வளர்த்த பூனைதான் வந்தது.. வாப்பாவின் செருமல் தரும்.. தைரியம்.. முற்றாக விலகிப் போனது.. இப்போதெல்லாம்.. என் முற்றத்தின் புன்முறுவல்.. தொலைந்து கிடக்கிறது.. எனக்கு அருகிலிருந்த நீங்கள்.. மிகத் தொலைவில்.. வாடகை வீட்டுக்குச் சென்றதிலிருந்து..

அழகியல் கவிதைகளை இலக்கிய உலகத்துக்குப் பரிசளித்திருக்கும் நூலாசிரியர் மருதமுனை ஹரீஷாவின் படைப்புக்கள் இன்னுமின்னும் தொடராக வெளிவர வேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!

நூல்                 - உன் மொழியில் தழைக்கிறேன்
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர்         - மருதமுனை ஹரீஷா
வெளியீடு         - தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம்,                                                                                                                                               கல்முனை
விலை         - 300 ரூபாய்

Thursday, August 10, 2017

118. ''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''பெண்ணியம்'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்


ஏறாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் என்பவராவார். இவர் 'அல்-கையிஸ்' என்ற புனைப் பெயரிலும் தனது படைப்புக்களை எழுதியுள்ளார்.  பயிற்றப்பட்ட கலைமானி பட்டதாரி ஆசிரியராக தனது சேவையை சிறப்பாகச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக சேவை, ஆன்மீகத் துறை போன்றவற்றிலும் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்துள்ளார்.

1990 காலப் பகுதிகளில் இவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே மீண்டும் கலை இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். சமூகத்தின் மீது அதிக அக்கரை கொண்டு தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் தனது படைப்புக்களால் ஆளுமையை வெளிப்படுத்தி வந்த இவரை இனங்கண்டு 2012 ஆம் ஆண்டு பிரதேச கலை இலக்கிய விழாவில், ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இவரது 'சுவனத்து மலர்கள்' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியிட்டுக் கொடுத்துள்ளது. யாப்பிலக்கண விதிமுறைகளுக்குட்பட்டு கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற இவரது இரண்டாவது நூல் வெளியீடே 'பெண்ணியம்' என்ற கவிதை நூல் வெளியீடாகும்.

''பெண்ணியம்'' என்ற இந்தக் கவிதை நூல் 77 பக்கங்களில் 37 கவிதைகளை உள்ளடக்கியதாக எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது. இந்நூலில் அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களது மனப்பதிவுகளையும் அழகிய கவிதைகளாக இவரால் எழுதப்பட்டுள்ளன.

இந்நூலின் சிறப்பம்சமாக இஸ்லாமியக் கவிதைகளைக் கொள்ளலாம். வரலாற்றுச் சம்பவங்களை, இஸ்லாத்தின் போதனைகளை, இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கத்தை எல்லாம் பெண்ணியம் என்ற இந்நூலிலுள்ள கவிதைகள் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை முறையை இறைத்தூதர் முஹம்மத் நபியவர்கள் வந்தே சீர்திருத்தினார்கள் என்பது நாம் அறிந்த விடயம். அக்காலத்தில் காணப்பட்ட பல வழக்கங்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் பாரியளவில் மாற்றமுறத் தொடங்கின. அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி 'மனிதம் விதைத்தவர்கள்' (பக்கம் 01) என்ற தலைப்பில் அமைந்த கவிதையின் மூலம் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பெருமைக்காக மதுவுண்டு
பெண் சிசுக்குள் புதையுண்டு
இருளாம் குப்ரும் இணையுடனும்
ஈமான் இழந்து வாழ்ந்தவர்கள்

சாதிப் பெருமை வலுவாகி
சமுதாயம் பல பிளவாகி
சாதனையாப் பழி வாங்கி
சரித்திரம் படைத்த சண்டாளர்

அக்காலத்தில் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஒழித்துக்கட்டுவதற்காக பல சதிகள் நடத்தப்பட்டன. இஸ்லாத்தை ஏற்றவர்களை வதைத்து அவர்களுக்கு காபிர்கள் கொடுமை செய்தனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் சளைத்துவிடாமல் இஸ்லாத்துக்காக உயிர் நீத்தவர்கள் பலர். பெற்ற பிள்ளையைக்கூட இஸ்லாத்துக்காக வாழ்வதற்கு பயிற்வித்ததை உணர்த்துமுகமாக 'வீரத் தாய்மார்கள்' (பக்கம் 05) என்ற கவிதை எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொள்கையிலே உறுதி பூண்ட
சுமையா அன்னை
கொடியவனாம் அபூ ஜஹ்லின்
கொடுமைகளைத் தாங்கி
அடிமனதில் தௌஹீது
நிலை கொண்டதாலே
அபத்தினிலே ஈட்டி பாய
ஆருயிரை நீத்தார்..

சமூகத்தின் வேரையே ஆட்டங் காணச் செய்யும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று சீதனம். சீதனத்தை வாங்குபவர்களை ஏளனமாகச் சொன்னபோதும் சீதனம் கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வீடு, வீட்டுப் பொருட்கள், கார், நகைகள், லட்சங்கள் என்று அவற்றின் எல்லை விரிவடைந்தவாறு செல்கின்ற அவல நிலைக்கு தற்கால சமூகம் முகங்;கொடுத்து வருகிறது. அதை கவிஞர் மிகவும் கண்டித்து 'சீதனமா? சீச்சீ...' (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு சாடுகின்றார்.

கட்டழகு மேனியும் கற்புடனே நற்குணமும்
பட்டப் படிப்பும் பதவியும் - கட்டாக
வேதனமும் மாதாந்தம் வேறாகப் பெற்றிருந்தும்
சீதமுங் கேட்கின்றான் சீச்சீ..

பேர் புகழைத் தேடுதற்காய்ப் போராடும் செல்வந்தர்
ஊர் புகழும் வீட்டுடனே ஊர்திகளும் - காரிருள் போல்
பெண்ணுக்குச் சீதனமாய்ப் பெருந்தொகையுந் தள்ளினால்
என் செய்யும் இல்லாத ஏழை?

ஒரு மெல்லிய காதல் கதையை 'ஒரு தனிப் பறவை' (பக்கம் 30) என்ற கவிதையில் காண முடிகின்றது. சிறு வயது தொடக்கம் அன்பாக இருந்துவிட்டு பல்கலைக்கழகம் சென்றதும் தன்னை மறந்துவிட்ட காதலனிடம் காதலி கேட்கும் கீழுள்ள வரிகள் மனதில் வலியை ஏற்படுத்தி நிற்கின்றன.

பட்டப் படிப்பிற்காய் - நீங்கள்
பல்கலைக்கழகஞ் சென்ற பின்னே
ஒட்டு மொத்தமாய் - நம்
உறவை மறந்தீர்களா?
நுனிக்கரும்பாய் இருந்தபோது
நேசமுடன் இருந்துவிட்டு - நான்
அடிக்கரும்பாய் ஆனபோது
அனைத்தையும் மறந்தீர்களா?

'ஆணாதிக்கம்' (பக்கம் 32) என்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களைப் பல ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் பிரச்சினையாகக் கொள்ளலாம். சிலர் இதற்கு விதிவிலக்காக இருப்பது கண்கூடு என்றாலும் பெரும்பாலானவர்களால் பெண்கள் படும் வேதனையை கவிஞர் இந்தக் கவிதையில் சிறப்புற சுட்டிக்காட்டியுள்ளார்.

எறும்பெடுத்த அளையிலே
பாம்பு குடியிருப்பது போல்
இவனிருக்கும் வீடும்
இவனுடையதல்ல
இருந்துமவன்
இறுமாப்புடுன் பேசுகிறான்
என் வீடு என் வாசலென

................
அகப்பையொரு கையிலும்
அழுங் குழந்தை
மறு கையிலுமாய் - அவள்
அவதியுறும்போது
சமைத்து முடியலையா? என்னுஞ்
சத்தம் எழுகிறது..

பெண்ணியம் என்ற இந்நூலில் சமூகக் கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. சமூகத்தின் எழுச்சிக்காக குரல் கொடுக்கும் மிக முக்கிய கவிஞர் பட்டியலில் கலாபூஷணம் அப்துல் ஹலீம் அவர்களும் இணைந்திருக்கின்றார். மென்மேலும் கவியெழுதி சமூகத்தாகம் தீர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - பெண்ணியம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர - கலாபூஷணம் அப்துல் ஹலீம்
வெளியீடு - எஸ்.எல்.எம். காதியார் பதிப்பகம் 
விலை - 200 ரூபாய்

Tuesday, June 13, 2017

117. தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

 புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது. 

தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 

இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். 

சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.

இந்நாவலின் பிரதான பாத்திரமான ஐங்கரன் இலங்கையைவிட்டு வெளிநாடு போய் பத்து வருடங்கள் கழித்து தன் சகோதரியைப் பார்ப்பதற்காக இலங்கை வருகின்றான். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஐங்கரனுக்கு அவனது அண்ணன் பாஸ்கரனுக்கும் தாயாக தந்தையாக இருந்தவர்களும் அவர்களது அக்காவான ஈஸ்வரமும் அவளது கணவன் பசுபதியும்தான். 

நாட்டில் நிலவிய பயங்கர சூழலில் தன் உடன்பிறப்பை இழந்துவிடக்கூடாது என்ற உந்துதலில் பசுபதியின் வற்புறுத்தலில் ஈஸ்வரம் தன் தாலிக்கொடியை அடகுவைத்து ஐங்கரனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றாள். அத்தகைய அக்காவையும் அவளது கணவனையும் தன் பெற்றோரைப் போல எண்ணி மரியாதை செய்யும் ஐங்கரன் பத்து வருடங்கள் கழித்து நாட்டுக்கு வந்து தன் நண்பன் அழகேந்திரனின் உதவியோடு அக்காவைச் சந்திக்க முனைகின்றான்.

அக்காலத்தில் இருந்த சில வரைமுறைகளை மேற்கொண்டு அக்காவுக்காகக் காத்திருக்கும் அவன் தூரத்தே வெள்ளைப் புடவையணிந்து ஆடியாடி நடந்து வரும் பெண்ணைக் கண்டு மனதுக்குள் மிகவும் வேதனைப்படுகின்றான். இந்த யுத்தம் எத்தனைப் பேரின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது. அதில் எத்தனை விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் என்றெல்லாம் எண்ணி வருந்தியவன் அருகே வந்த பெண், தன் அக்கா என்று அறிந்ததும் ஆடிப்போய் கதறி அழுகின்றான். அவளது கணவன் பசுபதி ஷெல்லடிபட்டு இறந்துவிட்ட செய்தியை அறிந்து பெருமூச்சு விட்டவாறு தங்கள் மாமாவான மாயவரை பார்க்க அழைத்துப் போகின்றார்.

மாயவரின் மகள் கனகாவைத்தான் ஐங்கரனின் அண்ணாவான பாஸ்கரனுக்குத் திருமணம் முடிக்க பேசியிருக்கின்றார்கள். ஆனால் அவனோ அடுத்த மாதம்.. அதற்கடுத்த மாதம்.. என்று காலத்தைக் கடத்தி சுமார் ஒரு வருடங்கள் கனகாவைக் காக்க வைக்கின்றான். பாஸ்கரன் கனகாவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஐங்கரனுக்கு அறிவிக்க அவன் அதைத் தன் அக்கா ஈஸ்வரம் மூலம் மாயவருக்கு புரிய வைக்கின்றான். அத்தோடு தான் கனகாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றான் ஐங்கரன்.

ஒருத்தரால் வஞ்சிக்கப்பட்ட கனகா அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட விரும்பாமல் பிடிவாதம்  பிடிக்க அந்தத் துயரம் தாங்காமல் மாயவர் இறந்து போகின்றார். வாழ்க்கையை இழந்த கனகா ஏமாற்றத்தோடு மனமுடைந்து காணப்படுகின்றாள்.

தன் சகோதரன் செய்த தவறுக்கு தான் பிராயச்சித்தம் தேடி கனகாவை மணமுடிக்க தயாரான ஐங்கரனுக்கு தற்போது என்ன செய்வது என்ற தெரியாத நிலையில் இருக்கின்றான். 

கனகாவின் தோழி மைதிலி. யுத்தத்தின்போது ஒரு காலை இழந்துவிட்டு தற்போது கொழும்பில் வேலைத் தேடிக் கொண்டிருக்கின்றாள். அழகேந்திரனின் வற்புறுத்தலாலும் மைதிலியின் அழகு, அறிவாலும் கவரப்பட்ட ஐங்கரன் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பதாய் எண்ணி மைதிலியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றான். 

யுத்தம் பலரது வாழ்வை சின்னாபின்னப்படுத்தியதற்கு உதாரணம் பாஸ்கரன் வெளிநாட்டில் வெள்ளைக்காரப் பெண்ணை மணமுடித்து குழந்தையும் இருக்கத்தக்க கனகாவை மணமுடிப்பதாக ஏன் பொய் சொல்ல வேண்டும்? தன்னால் முடியாது என்றும் தான் ஏற்கனவே திருமணம் முடித்தவன் என்றும் ஏற்கனவே பாஸ்கரன் சொல்லியிருந்தால் மாயவர் கனகாவுக்கு வேறு துணையைத் தேடியிருக்கக் கூடும். 

கனகாவின் வாழ்க்கை போல் எத்தனை பேதைப் பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருப்பார்கள் என்று எண்ணுகையில் மனதில் துயர் மேகம் படகின்றது.
அதுபோல உறவுகளை மறந்துவிடாமல் தன்னைக் கரையேற்றிய அக்காவைப் பார்க்க பத்து வருடங்கள் கழிந்த நிலையில்  அதே பாசத்துடன் திரும்பி வந்த தம்பி ஐங்கரனால் நாவலின் துயரம் சற்று மட்டுப்படுத்தப்படுகின்றது. மைதிலிக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டமை சற்று ஆறுதலான விடயம்.

ஐங்கரனின் நண்பன் அழகேந்திரனின் உதவியால் ஈஸ்வரத்தின் மகனும் வெளிநாடு செல்லக் கூடிய நிலமை உருவாகியமை நட்பின் புனிதத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இந்நாவலில் காணப்படும் ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றது. முன்னால் நடந்துகொண்ருக்கும் சம்பவத்தைப் பார்ப்பது போன்ற தத்ரூபத்தை நூலாசிரியரின் கதைசொல்லும் பாங்கு ஏற்படுத்துகின்றது. தெளிவான எழுத்தோட்டம். அலட்டல்களில்லாலத சொற்பிரயோகங்கள் நாவலை இறுதிவரை வாசிக்கத் தூண்டுகின்றது.

சிறுகதை, நாவல் துறைகளில் இன்னும் சிறப்பாக செயற்பட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென பிரார்த்தித்து நூலாசிரியர் மா. பாலசிங்கம் அவர்களை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - தழும்பு
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - மா. பாலசிங்கம்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா

Tuesday, April 18, 2017

116. உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

வெலிகம மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற நூல். இந்நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் வெலிகமையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள். இவர் ஏற்கனவே கணிதப் பயிற்சி (வெள்ளி மலர்), வெலிகாமத்தில் கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் சிறப்பு மலர், மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் (மறைந்த உலமாக்களின் விபரம்), பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு, மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர், நெஞ்சைவிட்டும் நீங்காத நினைவலைகள் (மர்ஹும் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைவு மலர்), அருள் மழை பொழியும் ரமழான் ஆகிய நூல்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற இந்த நூலானது, தப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலில் காணப்படுகின்ற பலரது கவிதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட பெருமதிவாய்ந்த நூலாகும். இறைவனின் வல்லமை, இறையச்சம், இறைவனின் கருணை, முஹம்மது நபியின் முன்மாதிரி, வாழ்க்கை, மரணம், நீதி, நிதானம், நன்மை – தீமை ஆகிய பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கவிதைகளையே நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார்.

கவிதைகள் இதயத்துக்கு உற்சாகமளிக்கக் கூடியவை. ஆன்மாவுக்கு உயிரூட்டக்கூடியவை. சிறிய கவிதைகள் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். அவ்வாறான கவிதைகள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இலகுவாகக் காணப்படுவதால் அவற்றை வாசிப்பவர்களின் தொகையும் அதிகமாகும்.

இத்தொகுப்பில் காணப்படும் கவிதைகளும் அத்தகையவை தாம். சிற்சில வரிகளினூடாக ஆழமான விடயங்களைக் கூற விழைந்துள்ளன. இறையச்சத்தையும், வாழ்வியல் யதார்த்தத்தையும் ஆணித்தரமாக மனதில் விதைக்கக் கூடியன.

நீ உடைத்த எலும்பை
ஒட்டுவார் யாருமில்லை
நீ இணைத்த எலும்பை
உடைப்பவரும் யாருமில்லை

என்ற வரிகள் இறைவனின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இறைவன் நாடினால் மாத்திரமே இலைகூட அசையும் என்பது நாம் அறிந்த விடயம். அதே போல வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்கின்ற சகல விடயங்களும் இறைவனின் தீர்ப்பே அன்றி வேறெதும் கிடையாது என்பது இதனால் புலனாகின்றது.

அகத்திலுள்ளதை மறைக்காதீர்
அல்லாஹ் அறியக் கூடாது என்பதற்காக
எப்படி மறைத்தாலும்
அல்லாஹ் அறியவே செய்வான்

மனிதர்களிடம் நாம் வேண்டியதை மறைத்து ஏமாற்றிவிடலாம். ஆனால் அல்லாஹ்வை ஏமாற்றவே முடியாது. எமது உள்ளத்தில் நாம் நினைக்கின்ற விடயங்களைக்கூட அல்லாஹ் நன்கறிந்தவனாகக் காணப்படுகின்றான். எனவே அவனது தண்டனைக்குப் பயந்துகொள்ள வேண்டும். அவனது அருளுக்காய் பாடுபட வேண்டும் என்ற சிந்தனையை மேலுள்ள கவி வரிகள் ஏற்படுத்துகின்றன.

நாம் இரவில் கண்ணயர்ந்து உறங்குகின்றோம். காலையில் எழுந்து குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால் மரணம் என்பது எமது செருப்புக்களின் வாருகளைவிட எம் அருகே இருக்கின்றது. அந்த மரணத்தை நாம் ஒருபோதும் விரட்டியடிக்க முடியாது. எமக்கான தவணை வந்தால் நாம் இறைவன்பால் மீண்டுவிட வேண்டும். இதனை கீழுள்ள வரிகளில் காணலாம்.

காலை விடியலுடன்
குடும்பத்தாரோடு
விடியலை அடைகிறேன்..
செருப்புவாரைவிட
அருகில் இருக்கிறது மரணம்

இஸ்லாமிய மணம் கமழக்
கூடிய இச்சிறு கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நூலாசிரியரின் இந்த முயற்சியை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! மேலும் பல காத்திரமான நூல்களை வெளியிட்டு தமிழ்ப்பணி மற்றும் ஆன்மீகப் பணியாற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள்
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711

Wednesday, January 25, 2017

115. இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

பாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.

குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

தனது சிறுவயது முதற்கொண்டு  கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.

தனது சூழலில் அன்றாடம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.

ஈரமுள்ள நெஞ்சம் (பக்கம் 01) எனும் கதை உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் ஒருசில மாணவர்கள்தான் போட்டிக்கு படிப்பார்கள். பெரும்பாலானவர்கள் நன்றாக படிப்பவர்கள் மீது பொறாமை கொண்டவர்களாகவும், அவர்களை ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும்தான் காணப்படுவார்கள். இது மாணவர்களின் இயல்பு. தான் செய்வதே சரி என்ற ஆதிக்கத்தில் சிலர் இருப்பார்கள். மற்றவர்களை பற்றி சதாவும் குறைகூறியபடி இருக்கும் மாணவர்கள் இருப்பார்கள். இவற்றையெல்லாம் ஆசிரியர்கள் தம் கழுகுப் பார்வையாலே உணர்ந்து கொள்வதுண்டு. இக்கதையிலும் அவ்வாறான மனநிலை கொண்ட சில மாணவிகளதும், அன்புள்ளம் கொண்ட ஒரு மாணவியினதும் செயற்பாடுகள் சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளன.

மலர் என்ற மாணவி பாடசாலைக்கு வர தாமதமாகிறது. மாணவிகள் எல்லோரும் மலர் இன்று வகுப்பறையை சுத்தம் செய்யவிருப்பதால் நேரம் பிந்தி வருவாள் என்று ஆசிரியரிடம் சொல்லுகின்றனர். வகுப்பறை குப்பைகள் நிறைந்து அழுக்காக காணப்படுகின்றது. சிறிது நேரத்தில் வகுப்புக்கு தாமதமாக வரும் மாணவி மலரிடம் ஏன் தாமதம் என ஆசிரியர் கேட்கின்றார். அதற்கு மலர் அழுதவாறே கால் இழந்த ஒரு மனிதருக்கு தன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு தண்ணீர் அருந்தச் செய்த பின் வருவதற்கு சற்று சுணங்கிவிட்டதாகக் கூறுகின்றாள்.

அதற்கு ஆசிரியர், நீ நல்ல பிள்ளையம்மா. நல்ல காரியம் ஒன்றை செஞ்சிட்டு வந்து ஏம்மா அழுரே? உன்னப் போல எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த இரக்கம், பாசம், உதவி செய்யும் உள்ளம் இருந்தால் இண்டக்கி வகுப்பறை இப்படி இருந்திருக்குமா? என்று கேட்கின்றார்.

ஆசிரியர் இவ்வாறு சொன்னதும் மற்ற மாணவிகளுக்கு தாம் செய்த தவறு விளங்குகின்றது. உடனே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வகுப்பறையைச் சுத்தம் செய்வதாகவும், மலரோடு அன்பாக இருப்பதாகவும் கதை நிறைவடைகின்றது.

மனித நேயம் (பக்கம் 06) எனும் கதை பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இன்று பஸ்களில் பயணம் செய்பவர்களைப் பார்க்கும்போது மனிதநேயம் மரணித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

வயதானவர்கள் வந்தால் இடம் கொடுக்க விருப்பமின்றி அசட்டையாக அப்பால் திரும்பிக்கொள்வது, தூங்குவது போல நடிப்பது அல்லது கர்ப்பிணித் தாய்மார்கள் வந்தால் வேறு யாராவது இடம் கொடுக்க மாட்டார்களா என்று சுற்று முற்றும் பார்ப்பது, அல்லது பொதிகளை வைத்திருப்பவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் தெரியாதது போல பாவனை பண்ணுவது போன்றவற்றை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இனி இல்லை என்றால் சிலர் அவ்வாறு எழுந்து இடம்கொடுப்பதும், பொதிகளை வாங்கி உதவி செய்வதும் அத்தி பூத்தாற்போல காணக் கிடைக்கின்ற காட்சிகளாகும்.

இக்கதையில் வருகின்ற அருண் என்ற மாணவன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவனருகில் நின்றுகொண்டு வந்த பெரியவரின் தோற்றமும், உடையும் அவர் மீது அவனுக்கு மிகுந்த மரியாதையை வரவழைக்கின்றது. எனவே அவருக்கு இருக்க இடம்கொடுத்துவிட்டு அவன் நின்றபடி வருகின்றான். மற்ற நண்பர்கள் அவனைப் பார்த்து கேலி செய்கின்றனர்.

அருண் படிக்கும் பாடசாலையில் அன்று இலக்கிய விழா. அதில் பேச்சுப் போட்டியில் மனித நேயம் என்ற தலைப்பில் பேசி முதலாமிடம் பெற்ற அருணுக்கு பரிசில்களை வழங்கி வைத்தவர் காலையின் அருண் பஸ்ஸில் கண்ட அந்தப் பெரியவர். அவர் அருணுக்கு பரிசிலை வழங்கியதுடன் ``இந்தச் சிறுவன் மனித நேயம் என்ற தலைப்பில் பேசியவன். பேச்சில் கூறப்பட்டது போல் செயலிலும் காட்டியவன். அருணுக்கு எனது அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கி அவனை கௌரவிக்கிறேன்'' என்கின்றார். வாய்ப் பேச்சால் மட்டும் உலகை வெல்ல முடியாது. உண்மையான செயற்பாடு மூலமே உயர்வடையலாம் என்று கதாசிரியர் இறுதியில் கூறியிருக்கும் கூற்று நிதர்சனமானது.

நழுவிய சந்தர்ப்பம் (பக்கம் 13) என்ற கதையில் கல்வியின் சிறப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. சாதாரண பரீட்சையில்  சித்தியடைந்த நபீஸ் உயர் தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிவெடுக்கின்றான். ஹரூஸின் பெறுபேறுகள் போதாமல் இருப்பதால் அவன் மிகவும் கவலையடைகின்றான். ``நானும் இன்னும் கவனமாகப் படித்திருந்தால் உன்னைப் போல உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிந்திருக்குமே. இனி அதைப்பற்றி எவ்வளவு சிந்தித்தும், அழுதும் பயனில்லை. நீயாவது படித்து ஊரில் உயர்ந்த அந்தஸ்திற்கு வா. நான் கலைப் பிரிவில் படித்து ஏதோ ஒரு சிறு தொழிலையாவது செய்ய முயற்சிக்கிறேன்'' என்று ஹரூஸ் கூறும் கூற்றில்

''ஏதோ ஒரு சிறு தொழிலையாவது'' என்ற சொல்லாடல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையவில்லை. ஏனெனில் கலைப்பிரிவில் கற்றவர்கள் படிக்க முடியாதவர்கள் என்று அர்த்தமாகிவிடாது. கலைப் பிரிவில் கற்ற எத்தனையோ பேர் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, கலாநிதிகளாக, பிரபல எழுத்தாளர்களாக ஏன் சட்டத்தரணிகளாகக்கூட உருவாகி இருக்கின்றார்கள். எனவே கலைப் பிரிவு என்பதை தாழ்வாக சித்திரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒழிந்தது பிடிவாதம் (பக்கம் 16) என்ற கதை சிறுவர்கள் அடம்பிடித்து தம் காரியங்களை செய்து கொள்வதில் வல்லவர்கள் என்பதையும் அதனால் பெற்றோர்கள் மனக் கவலைக்கு ஆளாகிவிடுகின்றனர் என்பதையும் திறம்பட சொல்லியிருக்கின்றது. இக்கதையில் வரும் சிறுமியான பாத்திமா தன் பிறந்த நாளுக்கு தங்கச் சங்கிலி வேண்டும் என்று அடம்பிடிக்கின்றாள். ஆனால் அதைச் செய்து கொடுக்குமளவுக்கு பாத்திமாவின் பெற்றோர் வசதியானவர்கள் கிடையாது. ஒருநாள் பாத்திமா பாடசாலை விட்டு வரும்போது மழை பெய்த காரணத்தால் ஒரு குடிசையருகில் ஒதுங்குகின்றாள். அந்தக் குடிசையில் இருந்த சிறுமியின் அப்பாவுக்கு சுகமில்லை. அதனால் அம்மா வேலைக்குச் சென்று காசு சம்பாதித்து தன் மகளை சுற்றுலாவுக்கு அனுப்ப காசு தருகிறேன் என்று மகளிடம் கூறுகின்றாள். அதற்கு அந்தச் சிறுமி நீங்கள் இருவரும் கஷ்டப்பட வேண்டம். நான் அடுத்த வருடம் சுற்றுலா போகிறேன் என்று நிலைமையுணர்ந்து கூறுகின்றாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாத்திமாவின் உள்ளம் தெளிவாகின்றது. தானும் இனிமேல் தன் பெற்றோருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று உணர்ந்து திருந்துகின்றாள். அருமையானதொரு கதை இது.

பிறந்த நாள் பரிசு (பக்கம் 25) என்ற கதையும் மாணவர்களுக்கு படிப்பினையான ஒரு கதையாகும். பிறந்த நாளுக்காக இன்று ஆடம்பரமாக செலவு செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இதைத் தவிர்த்து இக்கதையில் வரும் சிவா என்ற சிறுவன் பாடசாலை வாசிகசாலைக்கு புத்தகங்களைப் பரிசளிக்கின்றான். அவனது செயலைப் பாராட்டி பாடசாலையில் அவனையும், அவனது பெற்றோரையும் கௌரவிக்கின்றார்கள். நாம் வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும். இவ்வாறான காரியங்கள் எம்மை எமக்கும் மற்றவர்களுக்கும் பறைசாற்றும். இவ்வாறான நல்லவற்றை நாமும் செய்து பிறரையும் செய்யத் தூண்ட வேண்டும். ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறான பயன்மிகு கதைகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வாசிப்பதற்கு ஏற்றன. அவ்வாறான கதைகளை ஒரு தொகுதியாக்கி வெளியிடும் வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் பஸீலா அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் - இளந்தளிர்
நூலின் வகை - சிறுவர் கதைகள்
நூலாசிரியர் - பஸீலா அமீர்
விலை - 140 ரூபாய்

114. அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும் நூல் பற்றிய சுவையான கண்ணோட்டம்

அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும் நூல் பற்றிய சுவையான கண்ணோட்டம்


கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இலக்கிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவர். திறனாய்வுகளை திறம்பட எழுதி வருவதுடன், மொழிபெயர்ப்புக்களையும், பத்தி எழுத்துக்களினூடாக பலரைப் பற்றிய, பல்துறை சார்ந்தவை பற்றிய அறிமுகங்களையும் செய்து வருகின்றார். இவருடைய ஆளுமை, விசேடமாக கடல் தாண்டி விரிவடைந்திருக்கின்றமை இலங்கையர்களான நம் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும். 

ஒரு பத்தி எழுத்தாளராகவும், மதிப்புரையாளராகவும், கட்டுரையாளராகவும் செயற்படும் இவர் ஏனையவர்களைப் பற்றி மனம் திறந்து எழுதுவது பாராட்டப்படக்கூடியது. அதற்கான காரணம்; மற்றவர்களின் படைப்புக்களை முழுதாக நேரம் ஒதுக்கிப் படித்துவிட்டு, அந்த முயற்சியைப் பாராட்டி, அதிலுள்ள நல்லவற்றை எடுத்துக்காட்டி, பிழைகளை இங்கிதமாக சுட்டிக்காட்டி எழுதியவரை இன்னும் ஊக்கப்படுத்தும் பணியை இவர் செய்து வருவதாகும். பரந்துபட்ட திறந்த மனதுடையவர்களால்தான் மற்றவர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல முடியும். அதே போல் மற்றவர்களின் படைப்புக்களை திறந்த மனதுடன் அணுக முடியும். அந்த வகையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மென் மனம் படைத்த ஒரு இலக்கியவாதியாவார்.

பல நூல்களுக்கு சொந்தக்காரரான இவர், ''அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்'' என்ற இன்னொரு திறனாய்வு நூலை வெளிக் கொணர்ந்திருக்கின்றார். 110 பக்கங்களில் அமைந்துள்ள இத்தொகுதி மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்திருக்கின்றது.

திறனாய்வு, மதிப்பீடு, விமர்சனம் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் இவ்வார்த்தைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒத்த கருத்தைத் தருவதில்லை. அதற்கான அர்த்தத்தை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கீழுள்ளவாறு அருமையாக விளக்குகின்றார்.

Review என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மதிப்புரை என்று தமிழில் கூறுகின்றோம். கலை இலக்கியங்களின் தரம் பற்றிய கருத்து அல்லது கணிப்பு மதிப்புரை எனலாம். திறனாய்வு, விமர்சனம் என்ற சொற்களும் மதிப்புரையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான திறனாய்வு மதிப்புரையையும் சற்று கடந்தது. விரிவானது. ஆழமானது. Critisism என்ற வார்த்தைக்கு சிலர் கண்டனம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். குணதோஷங்களை காரணங்களுடன் சான்றுகளுடன் வெளிப்படுத்தும் முறைமையை Criticism எனலாம்.  பாடல்களில் உள்ள நயங்களைக் காணல் என்பது Appreciation என்பார்கள்.....'

இலங்கையில் வெளிவந்த விடிவு என்ற தொலைத் திரைப்படம் பற்றி கே.எஸ். சிவகுமாரன் தனது கருத்துக்களை இந்த நூலில் (பக்கம் 15) எழுதியிருக்கின்றார். அந்தத் திரைப்படத்துக்கான கதை, வசனம், நெறியாள்கை என்பவை பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படம் அங்கவீனம் பற்றி பின்வருமாறு பேசுகின்றது. அங்கவீனர்கள் தாழ்த்தபட வேண்டியவர்கள் அல்லர். உடலில் ஊனம் இருப்பதைவிட மனதில் ஊனம் இருப்பதுதான் வெட்கப்படக் கூடியதொரு விடயமாகும். அந்த வகையில் பரிகாசத்துக்கும், கிண்டலுக்கும் அங்கவீனர்கள் ஆளாகிவிடக் கூடாது. உடலளவில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இன்று பாதையோரங்களில் அவ்வாறான பலரை நாம் தினசரி சந்திக்கின்றோம். அவர்களில் எத்தனைப் பேருக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இலங்கை வரலாற்றில் கறை படிந்த பக்கங்களில் யுத்த காலம் பிரதான இடத்தை வகிக்கின்றது. உயிர்ச் சேதம், உடல் சேதம், பொருட் சேதம் என்று பல வகைகளிலும் மனிதனின் வாழ்க்கையோடு விளையாடிவிட்ட யுத்தத்தின் எச்சங்களாக இன்று பல அங்கவீனர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய சம்பவங்களைத் தொகுத்தே இந்த விடிவு என்ற திரைப்படம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் எந்த இனமும் இன்னொரு இனத்தைச் சாராமல் வாழ முடியாது என்ற கருவும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. மூவினங்களைக் கொண்ட இலங்கையில் யாரும் யாரையும் விலக்கி வைத்துவிட்டு கருமமாற்ற முடியாது என்பது கண்கூடான விடயம். இத்திரைப்படம் திருப்திகரமானது என்பதை கே.எஸ். சிவகுமாரன் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

மாதுமை சிவசுப்பிரமணியத்தின் தூரத்துக் கோடை இடிகள் என்ற நூல் பற்றியும் இத்தொகுதியில் எழுதப்பட்டிருக்கின்றது. மாதுமை திருகோணமலையைச் சேர்ந்தவர். பாடசாலைக் காலத்திலேயே சிறுகதைகள் எழுதி பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டவர். மாதுமை, பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்களின் புதல்வியாவார். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் துன்பங்கள் குறித்த பிரச்சினைகளை அவர்களது மொழிப் பாணியிலேயே எழுதியுள்ளார். இவரைப் பற்றிய நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'முதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்திய – மத்திய தர மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இன வேறுபாடுகளுக்கும் அப்பால் மனித உறவுகளின் அன்னியோன்னியம், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர் சிலரின் கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப்பெண் வயோதிபருக்கும், அநாதைப் பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கண நேரக் காதலை வெளிப்படுத்த முடியாத அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின் உதாசீனம், குருவை உதாசீனஞ் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மண வாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி, தோல்விகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப் பலவிதமான நிகழ்ச்சிகளை அவர் வாசகர் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க அம்சம்'.

இலக்கிய உலகத்தின் ஜாம்பவானாக என்றும் விளங்குபவர் டொமினிக் ஜீவா அவர்கள். உழைப்பால் உயர்ந்த அவர் பலருக்கு முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். மல்லிகை என்ற சஞ்சிகை மூலம் பலரை இனங்காட்டியவர். மக்களை மதிப்பவர். இயல்பாகப் பழகக் கூடியவர். அதே போல முகத்திற்கே எதையும் கேட்டுவிடும் போக்குடையவர். பின்னாலிருந்து மற்றவர்கள் பற்றி பேசாதவர். இவர் பற்றி நூலாசிரியரின் கருத்து இவ்வாறு அமைந்திருக்கின்றது.

'டொமினிக் ஜீவா கீழ் மட்ட வாழ்க்கை அனுபவங்களை இளமையிலேயே எதிர்கொண்டவர். சுய நம்பிக்கை, விடா முயற்சி, அறிவுத் தாகம், பிரயாசை, கடின உழைப்பு, ஜீவ காரூண்யம், சிறுமை கண்டு வெகுண்டெழும் தார்மீகக் கோபம், வரித்துக்கொண்ட அரசியல் தத்துவார்த்தக் கோட்பாடு போன்றவை அவர் தளத்தை உயர்த்தியிருக்கின்றது. இவர் பல மட்டங்களிலும் பரிச்சயமுள்ளவர் - சமுதாய மட்டங்களில் மாத்திரமல்ல வாழ்க்கையின் இதர மட்டங்களிலும் தளங்களிலும் பரிச்சயமும் கொண்டவர். வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்திலே சிறப்புப் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர். சிறுகதை எழுத்தாளனாக ஆரம்பித்து மல்லிகை என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியனாக மலர்ந்து, இன்று நூல் வெளியீட்டாளனாகவும் பரிணமித்திருக்கின்றார். இவரில் குழந்தைத் தன்மை இயல்பாய் அமைந்திருக்கின்றது. இதுவே இவரருடைய வெற்றியின் இரகசியம்'

தான் ரசித்த புத்தகங்கள், சினிமாக்கள், தான் சந்தித்த மிக முக்கியமான மனிதர்கள் பற்றியெல்லாம் வாசகருக்கு அறியத் தரும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் பவள விழா கண்ட மூத்த ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்
நூல் வகை - ஆய்வு 
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன் 
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 120 இந்திய ரூபாய்

113. அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

 எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார்.

புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார்.

ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார்.

நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.

அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.

கொழுந்து கொய்து
கொழுந்து கொய்து
வெடித்துப் போன - என்
விரல் இடுக்கைப் பாராதே..

கங்காணி திட்டுவதைப் பாராதே
கணக்குப்பிள்ளை
கடிவதைப் பாராதே..

தேயிலைக்குள் மாண்ட
தலைமுறை என்னோடு முடங்கட்டும்
கலாம் சொன்னதைப் போல
காத்திருக்கிறது உலகம்
அக்கினியாய் வெளியே வா
என் அக்கினிக் குஞ்சே

நான் அநாதையா? (பக்கம் 17) என்ற கவிதை வித்தியாசமான முறையில் அமைந்திருக்கின்றது. எதுவும் இல்லாதவன் அநாதை என்று சொல்லப்படுவதை எதிர்த்து, எனக்கு நான் இருக்கும் வரை அநாதை இல்லை என்ற மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது இந்தக் கவிதை.

குப்பைக்குழி உண்ட
எச்ச உணவை
என் குடல் நிரப்பும்

கொக்கு குடித்து வளரும்
குளத்து நீர்
என் தாகம் தீர்க்கும்

அழுக்குத் துணிகள்
என் அந்தரங்கம் மறைக்கும்

என் இலக்குகளை
நித்திரைக்குள் தள்ளிவிடாதீர்கள்
ஊனப் பார்வை பார்த்து
என் உள்ளததை
ஊனமாக்கி விடாதீர்கள்

கானல் நீர் (பக்கம் 25) என்ற சிறிய கவிதை அழகிய உவமானங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பருவ கால மழையை காதலுக்கு உவமித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றது.

தொடர் மழையாய் வந்த
உன் காதல் மழை
பருவ மழையாகி பின்
பார்த்துவிட்டுப் போகும் மழையானது
இப்போது பாலைவன
மழையாகக்கூட இல்லையே
பாலைவனக் கானல் நீரைப் போல
உன் காதலும் என்னை ஏமாற்றுகிறது

லயம் பார்க்க வாருங்கள் (பக்கம் 55) கவிதையில் மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கை முறையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரே அறைக்குள் ஏழெட்டு ஜீவன்கள், ஆடு, மாடு, கோழிகளோடு வாழ்ந்திடும் வாழ்க்கை, அடிப்படை சுகாதார வசதிகளற்ற நிலைமை போன்றவை கவிதையை வாசிக்கையில் மனக் கண்ணில் நிழலாடி மனதை கனக்கச் செய்கிறது.

வீட்டெரு கூட்டெரு மாட்டெரு மனித எரு
எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பார்க்க வேண்டுமா?

குருவிக் கூடு கோழிக்கூடு ஆட்டுப்பட்டி பாட்டிப்பட்டி
ஆதங்க அழுகைப்பட்டி பார்க்க வேண்டுமா?
ஐந்து பேர் ஆறு பேர் ஏழு பேர் எட்டு பேர்
ஒன்றாய் ஓரிரு அறையில்
மூன்று சகாப்தமாய்
முடங்கி வாழ்வதைப் பார்க்க வேண்டுமா
லயித்து வாழ்ந்தவர்களே
முகம் சுளித்துப் பார்க்க லயம் பார்க்க வாருங்கள்

தன் கவிதைகளுக்கூடாக சமூக எழுச்சியை ஏற்படுத்த நினைக்கும் நூலாசிரியர் தயானியிக்கு என்வா ழ்த்துக்கள்!!!

நூல் - அக்கினியாய் வெளியே வா
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - இராகலை தயானி
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்