Sunday, February 11, 2024

150. கவிமணி என். நஜ்முல் ஹுசைனின் ''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 கவிமணி என். நஜ்முல் ஹுசைனின்

''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்கள், பனித்தீ (1992), இனிவரும் நாட்களெல்லாம் (2017), நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் (2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதை உலகில் முத்திரை பதித்தவர். கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களின் நான்காவது நூல் வெளியீடாகவே "வேறாகா வேர்கள்" என்ற சிறுகதைத் தொகுதி ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. 


சிறுகதைகள் பற்றி வாசுதேவன் என்ற இந்திய அறிஞர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரமாகும். அதேபோல வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்துவிட்டுக் கவனிப்பதாகவே சிறுகதை அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோ தர்மத்தைப் பொறுத்தது என்று சிறுகதையின் போக்கைப் பற்றி விளக்கியுள்ளார். கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் கதைக்கரு, கதைமாந்தர், விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.

மனிதத்தை நேசிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் கவிமணி நஜ்முல் ஹுசைன் ஒரு நயகரா நீர் வீழ்ச்சி என்று நூலின் பின்னட்டையில் நூலாசிரியர் பற்றி இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்கள் குறிப்பிடுவது ஈழத்துக் கவிதை வரலாற்றில் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தவிர்க்க முடியாத ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. 

நூலுக்கான அணிந்துரையை இந்திய நாட்டைச் சேர்ந்த பன்னுலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்மல் முகம்மத் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதேபோன்று நூலுக்கான வாழ்த்துரைகளை பிரபல திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நூலாசிரியர், கலாபூஷணம் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் எம்.எஸ்.எம். ஜின்னா ஆகியோரும் வழங்கியுள்ளார்கள். அடுத்து கரிகாற்சோழன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் மூ. சிவலிங்கம் அவர்கள் 'கவிஞர் எழுதிய கதைகள்' என்ற தலைப்பில் நூலுக்கான நயவுரையை வழங்கியுள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ் தென்றல் அலி அக்பர் அவர்கள் நூலுக்கான வெளியிட்டுரையை வழங்கியுள்ளார்.

நூலாசிரியரின் கதைகள் யாவும் நேர்கொண்ட இலட்சியப் பார்வையாகவே தோன்றுகின்றன. எல்லாமே மனிதத்தைப் பாடும் கவிதைகளைப் போன்றே உள்ளன. மனிதாபிமானமே பேசு பொருளாக எல்லாக் கதைகளுக்குள்ளும் மின்னுகின்றன. மதத்தின் போதனைகளை, மார்க்கச் சிந்தனைகளை வாசகனிடம் திணிக்க வராமல் அதன் தத்துவார்த்தங்களை கதை மாந்தர்கள் ஊடாகவே சொல்லிப் போகின்றார் என்று நூலாசிரியரின் கதைகள் குறித்து மு. சிவலிங்கம் அவர்கள் தனது நயவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக நூலாசிரியர் வழங்கியுள்ள என்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'நான் சிறுவயதில் வாசித்த நூல்கள், சஞ்சிகைகள் போன்றன நாம் எப்போதுமே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், நாங்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை நிறையவே போதித்துள்ளன. அவையே எனது சிறுகதைகளில் பெரும்பாலான கருப்பொருள்களாக அமைகின்றன. எனது எழுத்துகள் எப்போதுமே எவரையும் தவறான பாதைகளில் அழைத்துச் சென்று விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன். ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது என்பதைவிட இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே சில கதைகளின் கருக்களாகும். கதையைப் படிப்பவர்கள், நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பார்களாயின் அதனை எனது எழுத்தின் வெற்றியாகவே கருதுவேன்' என்று குறிப்பிடுகின்றார்.

"வேறாகா வேர்கள்" என்ற இந்த நூல் 87 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. அவனில்லாமல் நானில்லை, நிலைக் கண்ணாடி, எனக்குக் கிடைக்கும், இப்படி செஞ்சிட்டீங்களே, இதயக் கன்னிக்கு பர்தா போடு, நடந்தது என்ன?, மீண்டும் டயானா, அருமையான என்விலப், வேறாகா வேர்கள், ஏன் சொல்லவில்லை?, தீர்க்கமான முடிவு, யார் அநாதை?, உயிர் காப்பான் தோழன், எந்த சீட் வேண்டும்?, கொடுத்து வைத்தவன், அசோகன் பிறந்தான், புதிய திருப்பம், யாருக்குப் பாராட்டு, உடைந்த சைக்கிள், கொள்ளைக்காரர்கள், உதாசீனம், கல்யாணமாம் கல்யாணம், உழைத்து வாழ வேண்டும் என்ற தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான 23 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன.

இனி மேலே தரப்பட்டுள்ள தலைப்புக்களில் உள்ள நூலாசிரியரின் சிறுகதைகளில் சிலவற்றை வாசகர்களது இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

எனக்கு கிடைக்கும் (பக்கம் 10) என்ற சிறுகதையானது தவறவிடப்பட்ட ஒரு பவுன் தங்க நாணயத்தைப் பற்றிப் பேசுகிறது. வழமையாக சில்லறைகளை யாசகமளிக்கும் நசீர் தவறுதலாக தங்க நாணயத்தை யாசகர் ஒருவருக்குக் கொடுக்கிறான். பிரிதொரு நாளில் அதே வழியாகச் செல்கையில் அந்த யாசகர் நசீரை இடைமறிக்கிறான். அவசரமாகப் போய்க் கொண்டிருந்த நசீர் அவனைத் திட்டிவிடுகிறான். உள்ளம் கேட்காமல் மீண்டும் யாசகம் கொடுக்க முனைகையில் முன்பு கொடுத்த அந்தத் தங்க நாணயத்தை யாசகன் நசீரிடம் திருப்பிக் கொடுக்கிறான். என்றாலும் நசீர் கொடுத்தது கொடுத்தது தான் என்று நினைக்கிறான். வறுமையிலும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மிக அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

இதயக்கனிக்கு பர்தா போடு (பக்கம் 17) என்ற கதையில் ஒரு பெண்ணினைத்தால் எத்தகைய செயலையும் இலகுவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபணம் ஆக்கி இருக்கிறார் கதாசிரியர். ரவுடித்தனம் கொண்ட ஒரு இளைஞனாக வலம் வரும் பாரூக் எல்லோரிடமும் கப்பம் கேட்டு மிரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடாத்தி வந்தான். ஆனாலும் ஊர்ப் பொது வேலைகளுக்கு உதவி செய்வான். கொண்டால் பாவம் தின்றால் போச்சு என்ற கூற்றுக்கிணங்க செயல்பட்டு வருபவன். பெண்களைக் கேலி செய்வதிலும் பாரூக் பின் நிற்கவில்லை. அவ்வாறு கேலி செய்யப்பட்ட பெண்களில் ஒருத்தியான பாஹிரா பர்தா இட்டு தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டாலும் பாரூக்கை மணமுடிக்க விருப்பப்படுகிறாள். இதை அறிந்த பாரூக்கின் மனம் துணுக்குறுகிறது. தன்னை நம்பும் பெண்ணுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் மனந்திருந்தி பாஹிராவுடன் தன் வாழ்க்கையை மிகவும் அழகாக நடாத்திச் செல்கிறான்.

நடந்தது என்ன (பக்கம் 22) என்ற கதையானது தவறான புரிந்துணர்வின் விளைவை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. தனது தங்கையான நசீமாவுக்கு, நசீர் மிக அழகிய முறையில் திருமணம் செய்து வைக்கிறான். எனினும் ஓரிரு மாதங்களில் அவளது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. காரணம் மாமியார் - மருமகள் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. இறுதியில் நசீராவுக்கு மாமியார் நஞ்சூட்டிக் கொள்ளப்பார்த்ததாக தனது தாய் சொல்லிய போது நசீர பதறிப் போகிறான்;. தங்கையின் விவாகரத்துக்காக விண்ணப்பிப்பதற்குச் செல்லும்போதுதான் தனது வைத்திய நண்பனைச் சந்திக்கிறான். இறுதியில் ஃபுட் பாய்சன் என்பதே 'பொய்சன்' - நஞ்சு என்று தவறாக விளங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து திகைத்து நிற்கிறான். 

உயிர் காப்பான் தோழன் (பக்கம் 46) என்ற கதையில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. தனது உயிர் நண்பனான ஜெகனின் நோய்த் தன்மை பற்றி பதறிக் கொண்டிருக்கிறான் சுரேஷ். சுரேஷின் புகைப் பழக்கத்தினால் ஏற்பட்டதே ஜெகனின் நுரையீரல் பாதிப்பு என்று வைத்தியர் கூறியதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைகிறான். புகைப்பிடிப்பவரைவிட அதனை சுவாசிப்பவரே அதிகம் பாதிப்படைவர் என்பதை இக்கதை மூலம் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

உடைந்த சைக்கிள் (பக்கம் 71) என்ற கதையானது நடுத்தர பெற்றோரின் பொருளாதார நிலையை கண் முன்னால் கொண்டு வருகிறது. தனது நான்கு வயது மகனுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான் நியாஸ். அது தற்போது உடைந்து உள்ளதால் அதை பழைய இரும்பு சேகரிப்பவரிடம் கொடுத்து ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்கிறான். இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான மின்சார கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது அவனது தற்போதைய தேவையாக இருந்தது. ஆனால் பழைய இரும்பு சேகரிப்பவனோ முந்நூறு ரூபாய் தருவதாக கூறி அந்த சைக்கிளைக் கேட்கிறான். மேலும் தனது மகனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவனது நீண்ட நாள் ஆசையை அவன் சொன்னதும் நியாஸின் மனைவி அந்த சைக்கிளை இலவசமாகவே கொடுக்குமாறு தனது கணவனுக்குக் கூறுவதோடு அதைத் திருத்தி அமைக்க ஐந்நூறு ரூபாவையும் சேர்த்தே கொடுக்குமாறும் கூறுகிறார். இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வாசகர்கள் எளிதாக உணரும் வண்ணம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையுமே ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருக்களைச் சுமந்துள்ளமை மிகவும் சிறப்பு அலுப்புப் தட்டாத பாணியும் கதையின் இறுதி முடிவும் அடுத்த கதையை வாசிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளது. நூலாசிரியரிடமிருந்து இன்னும் இன்னும் பல சிறுகதைகளையும் பல படைப்புகளையும் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


நூல் - வேறாகா வேர்கள்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியரியர் - என். நஜ்முல் ஹுசைன்

வெளியீடு - ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்

விலை - 650 ரூபாய்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


குறிப்பு:- 

இந்த நூலுக்கான பத்திரிகை விமர்சனம் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழில் இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. 

நூல் விமர்சனத்தின் முதலாம் பகுதி 2024.01.28 செந்தூரம் இதழிலும் இதன் மிகுதிப் பகுதி 2024.02.11 செந்தூரம் இதழிலும் வெளிவந்தது. 




149. 'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்                   

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


1975 ஆம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் 'பூவும் பொட்டும் - மங்கையர் மஞ்சரி' என்ற நிகழ்ச்சி மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவரே கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள். 1977 ஆம் ஆண்டளவில் பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'உதயம்' பத்திரிகையில்தான் இவருடைய கன்னிக் கவிதையான 'பாவி நான் என்ன செய்வேன்?' என்ற தலைப்பில் அமைந்த கவிதை பிரசுரமாகியது.

இவர் 1980 முதல் 1990 வரையான காலப் பகுதியில் தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தில் பத்திரிகையாளராகவும் உதவி ஆசிரியராகவும் அத்துடன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சகப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஜனனி பத்திரிகையில் 'அரிவையர் அரங்கம்' என்ற மாதர் பகுதியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

1994 இல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக (Press Officer) நியமனம் பெற்ற இவர், 2000 ஆம் வருடத்தில் அரசாங்கத் தகவல் அதிகாரியாக (Information Officer) பதவி உயர்வு பெற்றார். அக்காலப் பகுதியில் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும், 'புத்தொளி' என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 

தவிர அத் திணைக்களத்தினால் 40 வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவரும் 'தெசத்திய' என்ற சிங்களச் சஞ்சிகையில் இவரால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட அரசியல் தலைவர்களின் நேர்காணல் தொடருக்காக 'இன ஐக்கியத்திற்கான ஊடகப் பங்களிப்பு' செய்தவர் என்ற வகையில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணிபுரிந்து வரும் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் பத்திரிகைகளில் வெளிவந்த தனது கட்டுரைகள் சிலவற்றையும் அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் சிலவற்றையும் ஒன்று திரட்டி, 1997 இல் தனது தலைப் பிரசவ நூலாக 'பண் பாடும் பெண்' என்ற நூலை வெளியிட்டார். 

பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பலரின் தகவல்களை ஒன்று திரட்டி மின்னும் தாரகைகள் என்ற பெயரில் கனதியான ஆய்வு நூலை 2018 ஆம் ஆண்டு வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டு திதுலன தாரக்கா என்ற பெயரில் மின்னும் தாரகைகள் நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்ப்புச் செய்து வெளியீடு செய்தார். இந்த நூல் வெளியீடானது சிங்கள மொழியில் இவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் புலமையினால் மட்டுமே சாத்தியமானது என்று குறிப்பிட்டுக் கூறலாம். 

கவிதை மீது இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பூஞ்செண்டு என்ற கவிதை நூல் இன்று வெளிவருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கவிதைப் பிரியர்களுக்கு இந்த பூஞ்செண்டு நூல் ஒரு விசேட பரிசாக அமையும் என்றே நினைக்கின்றேன்.

பத்திரிகைகளில் மலர்ந்து வெளியான கவிதைப் பூக்களை ஒன்று திரட்டி வெளியிடப்படும் 'பூஞ்செண்டு' என்ற கவிதை நூல் நானிலமெங்கும் நறுமணம் பரப்பி, இலக்கியவாதிகளின் இதயங்களைக் கவர்ந்திழுக்கும் என நம்பலாம். 

இந்த நூலில் நூலாசிரியர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட நட்புக்கு சுமார் 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 'உன்னிடத்தில் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் தேய்த்துப்பார்' என்கிறார் உலக மகாகவி அல்லாமா இக்பால் அவர்கள். 

இந்த மாபெரும் உலகக் கவிஞரின் கூற்றுக்கிணங்க இந்த 40 ஆண்டுகளில் அதாவது 1975 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது கவிதை என்று நான் கிறுக்கியவைகள் ஏராளம் தாராளம். அவற்றில் பெரும் எண்ணிக்கையானவை தினசரி நாளேடுகளிலும் வாராந்த, மாதாந்த பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலி தமிழ்ச் சேவை, முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும் இவை ஒலிபரப்பாகியுள்ளன. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எனது கவிதைகளை செப்பனிட்டது நான் கடமை புரிந்த தினபதி - சிந்தாமணி பத்திரிகைகள்தாம். படிப்படியாக பெரிய கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அக் கவிதைகள் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் நேரடி பார்வையுடன் பிரசுரமாகும் என்று தனதுரையில் கவிதைக்கும் தனக்குமான நெருங்கிய தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் என்னுயிர் பெற்றோருக்காகவும் மேலும் பலருக்காகவும் என்னால் பாடப்பட்ட கவிதைகள், நூல் வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய வாழ்த்துக் கவிதைகள், வானொலியிலும் தொலைகாட்சியிலும் சமீப காலமாக நான் பாடிய கவிதைகள் போன்றவைகளே இந்த பூஞ்செண்டை அலங்கரிக்கும் கவிப் பூக்களாகும் என்று நூலில் இடம் பிடித்துள்ள தனது 31 கவிதைகள் பற்றியும் அவர் கூறி நிற்கின்றார்.

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நம் கவிஞர் கவிதைகளை எழுதவில்லை. சில கவிதைகளைப் போட்டிகளுக்காகவும் எழுதி பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இனி இந்த நூலில் இடம் பிடித்துள்ள சில கவிதைகளை வாசகர்களுக்காக எடுத்து நோக்குவது பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வின் அருள் மழை! என்ற தலைப்பில் அமைந்த முதலாவது கவிதை உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ்வைப் பற்றிப் பேசுகிறது. 

நடப்பவை யாவும் இறைவனின் நாட்டம் என்ற எண்ணப்பாட்டில் வாழ்ந்து  வருபவர்கள் எதிலும் இறைவனின் திருப்பொருத்தத்தைத்தான் தேடுவார்கள். இன்பங்களுக்கு நன்றி கூறியும் துன்பங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்டும் தம் மனதை சமநிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இறை நம்பிக்கையாளர்களுக்கு காணப்படுகிறது. அந்த ஏகனைப் பற்றி பாடிய கவிதையின் சில வரிகள் இதோ:-

இல்லார்க் கிரங்கிடுவோன் அல்லாஹ்

இன்னல்களை போக்குபவன் அல்லாஹ்

கல்லார்க்கும் இரங்குவோன் அல்லாஹ்

கல்லாமையைப் போக்குபவனும் அல்லாஹ்


அன்பை வளர்ப்பவன் அல்லாஹ் - நல்ல

அறத்தினைக் காப்பவன் அல்லாஹ்

தீமையை வெறுப்பவன் அல்லாஹ் - நல்ல

தீர்வினை உடையவன் அல்லாஹ்

2001.06.05 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மீலாத் தின விசேட கவியரங்கக் கவிதையாக ஒலிபரப்பான மாதருக்கு விடுதலை வாங்கித் தந்த மாநபிகள்! என்ற தலைப்பில் அமைந்த கவிதை பூஞ்செண்டை அலங்கரித்துள்ள மற்றுமொரு கவிதையாகும்.

உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்தவர்தான் நம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இஸ்லாமிய மார்க்கம் தழைத்தோங்குவதற்கு தன்னாலான சகல தியாகங்களையும் செய்தவர் நம் நபியவர்கள். ஜாஹிலிய்யாக் காலக் கொள்கைகளை விட்டும் மக்களை நல்வழியின் பால் மாற்றியவர். மறுமை நாளிலும்கூட எல்லா நபிமார்களும் யா நப்ஸி என தன்னைப் பற்றி எண்ணும் போது யா உம்மத்தி என தன் கூட்டத்தாரைப் பற்றி மாத்திரம் எண்ணுகின்ற உத்தமர் நபியவர்கள். அத்தகைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய கவிதையின் வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

உலகத்தை உய்விக்க வந்த எங்கள்

உயர்வு நபி நாயகமே உரிமைத் தந்தார்

உலகத்து மாந்தருக்கு: அதனால் இன்று

உவகையுடன் வாழுகின்றார் பெண்கள் இங்கு

கலகத்தை உருவாக்கி மாந்தர் கூட்டம்

கவலையுடன் வாழ்ந்திருந்த அந்த நாளில்

நிலவொத்த குளிர்ச்சியுடன் வந்த அண்ணல்

நிலமெங்கும் பெண் பெருமை கூறி நின்றார்


ஜொலிக்கின்ற விண் மீனாய் மாதர் கூட்டம்

ஜகத்தினிலே இருக்கின்றார் அவர்கள் பெருமை

ஒலிக்கின்ற வேளைதான் உலகம் கூட

ஒப்பற்ற விடுதலையைக் கண்டு நிற்கும்

பலிக்கின்ற பயன் காண்பார் கனவு எல்லாம்

பெண்ணினத்தை பெருமையுறச் செய்தாரென்றால்

சிலிர்க்கின்ற வழியினிலே செம்மல் நபியும்

சீரான கருத்துக்கள் சொல்லி வைத்தார்


தமிழ்நாடு வளரி கவிதை இதழும் டென்மார்க் சிவமீரா அறக்கட்டளையும் 2016 ஆண்டு நடத்திய சிவமீரா கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதையாக மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப் போது? என்ற கவிதை அமைந்துள்ளது.

மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசாத கவிஞர்கள் இல்லை எனலாம். நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பெரும் துணை புரிகின்ற மலையகத்துப் பெண்கள் என்றும் கௌரவித்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சிலவேளைகளில் தேயிலை பறிக்கும் ஒரு இயந்திரமாகவும் மாத்திரமே பார்க்கப்படுகின்றார்கள் என்பது பெருங்கவலையாகும். மழை, வெயில் என்று பாராது உழைக்கும் அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னைய காலத்தைவிட தற்காலத்தில் ஒப்பிடும்போது மலையக மக்கள் இன்று தம்மளவில் முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்வான ஒரு விடயமாக அமைகின்றது. அவர்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இதோ:- 


மழை பெய்தால் மலையகத்தில் மண் சரிவாம்

தெரிந்த கதை தானிது? தீர்வுதான் எப்போது?

மண் சரிவால் ஒரு கிராமமே புதையுண்டது

கிராமம் மட்டுமா புதைந்தது?

கிராமத்தில் வாழ்ந்த மக்களுமல்லவா

புதையுண்டு போனார்கள்?

விருட்சமாய் வளர வேண்டியவர்கள்

வெறும் விதையாகிப் போனார்களே?

ஐயகோ பொறுக்குதில்லையே

எந்தன் நெஞ்சம்?

சொத்தில்லை சுகமில்லை

சொந்தங்களும் இல்லை

இனி யாருக்கு நிவாரணம்?

யாருக்கு நஷ்ட ஈடு?

கண் கெட்ட பின்னா சூரிய நமஸ்காரம்?


என்று அந்தக் கவிதை மலையக மக்களின் சோகங்களைத் தாங்கி நிற்கின்றது.

அடுத்து 2007.10.30 இல் காலமான தனது தந்தையின் நினைவாக தந்தைக்கோர் கண்ணீர்க் கவிதை! என்ற தலைப்பில் நெஞ்சத்தை உருக்கும் ஒரு கவிதையை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். இந்தக் கவிதை 2008.02.24 ஆம் திகதி நவமணிப் பத்திரிகையிலும் இடம் பெற்றிருக்கிறது. 

தொடர்ந்து 1999.02.05 இல் கொழும்பு கொம்பனித் தெரு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற தமிழ்மணி மானா மக்கீன் அவர்களின் ஷஷஇலங்கை கீழக்கரை இனிய தொடர்புகள்|| என்ற ஆய்வு நூல் அறிமுக விழாவின் போது நூலாசிரியரினால் பாடப்பட்ட மானா நானா கஸ்தூரி மானா? என்ற தலைப்பில் அமைந்த கவிதையொன்றையும் வாசகர்கள் தரிசிக்க வழி செய்துள்ளார் நூலாசிரியர்.

அடுத்து 2015.04.19 ஆம் திகதியன்று இறையடி எய்திய தனது தாயாரான மர்ஹூமா ஹாஜியானி உம்மு சல்மா ரஷீத் அவர்களின் நினைவாகவும் உம்மாவுக்கோர் கண்ணீர் கவிதை என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். இந்தக் கவிதை தினகரன் பத்திரிகையின் புதுப்புனல் பகுதியிலும் பிரசுரமாகியுள்ளது.


உதிரத்தைப் பாலாக்கி

சரீரத்தைச் சாறாக்கித்தானே - எமை

ஆளாக்கினீர்கள் உம்மா!

நாம் சூரியனாய்ப் பிரகாசிப்பதற்காய்

சந்திரனாய் தேய்ந்து போனீர்களே நீங்கள்..


பசித்திருந்து, விழித்திருந்து

உம்மா நீங்கள் எமக்காக

பட்ட கஷ்டம் ஒன்றா? இரண்டா?

நாம் எடுத்துச் சொல்ல?


வறுமை எனும் முள்

உம்மைக் குத்திய போதும்

மலராய் எமை

மணக்கச் செய்தீர்கள்!


என்று தாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலும் தம்மைச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கியமை பற்றி நன்றியோடும் கண்ணீரோடும் நினைவுகூருகின்றார் நூருல் அயின் அவர்கள்.

இந்தக் கவிதைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது போன்றேதான் எனது தாயாரைப் பிரிந்த சோகம் எனது தொண்டையை இந்த நிமிடம் வரை அடைத்து நிற்கிறது.


மீளாத் துயரில் எமை

ஆழ்த்தி விட்டு - நீங்கள்

மீளாத் துயில் கொண்டதேன் உம்மா! 


என்றே எனக்கும் சத்தமிட்டுக் கேட்கக் தோன்றுகின்றது.

பத்திரிகைத் துறையில் தனக்கு வழிகாட்டியாக இருந்த இரத்தின சிங்கம் ஐயா மற்றும் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் ஐயா ஆகியோர் பற்றியும் இருவர் நாமமும் வாழும்! என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். 

தனது எல்லாக் காரியங்களுக்கும் தன்னுடன் கைகோர்க்கும் தனது பாசமிகு கணவர் நஜ்முல் ஹுசைன் அவர்களுக்காகவும் என் சுவாசமே நீதான்! என்ற தலைப்பில் ஒரு கவிதையை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். 


என் வாழ்க்கைக்கு வரமானவரே

என் எழுத்துக்கு உரமானவரே


உள்ளத்தால் உயர்ந்தவரே

உம்மளவில் உளரோ யாரும்?

எறும்புக்கும் கருணை காட்டும்

கரும்புள்ளம் கொண்டவரே - உமை

கரம் பிடித்ததில் நானும்

களிப்புற்றேன் தினம் தினம்


என் உயிருக்கு உயிரானவரே!

உள்ளமெல்லாம் நிறைந்தவரே - என்

உதிரத்தில் கலந்தவரே - புவி

அதிரக் கூறுகிறேன்..

நீ தானே! எந்தன் உலகம்

நினைவெல்லாம் நீயே தான்

கனவெல்லாம் நீயே தான்!

மனமெல்லாம் நீயே தான்!


என்று தனது பாசக் கணவருக்காக கவிதை வரிகளில் மிகவும் உருகி நிற்கின்றார்.

2013.09.11 இல் இறையழைப்பை ஏற்றுக்கொண்ட தனது தம்பி மௌலவி அல்ஹாஜ் ரசீத் எம். ராஸிக் அவர்களுக்காகவும் மறுமையில் எங்களின் முதலீடு நீதான் தம்பி! என்ற ஒரு கவிதையை எழுதி கண் கலங்கி நிற்கின்றார் நம் நூலாசிரியர்.


ஒரு தாய்ப் பிள்ளையாக பிறந்தவர் நாம்

ஒரே கருப்பையில் உதித்தவர் நாம்

ஈருடலானாலும் ஓருயிராய் வாழ்ந்தவர் நாம்

இன்று உம் உயிர் பிரிந்ததனால்

வெறும் உயிரற்ற ஜடமாய் நான்


2016.03.20 இல் எனது நண்பி தியத்தலாவை எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் நூல் வெளியீட்டில் பாடிய வாழ்த்துக் கவிதையையும் இந்த நூலில் சேர்த்துள்ளார் நூலாசிரியர்.

ஊடகத் துறையில் உயர் பதவியில் நீண்ட காலம் பணிபுரிந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் என நூலாசிரியரைக் கூறுவதில் நம் சமூகம் பெருமைப்பட முடியும். அந்தளவுக்கு ஊடகத் துறைக்கும் இவருக்குமான தொடர்பு மிக நெறுங்கியதாகக் காணப்படுகிறது. இவரது இலக்கியப் பயணமும் ஊடகப் பயணமும் மேலும் சிறப்பாகத் தொடர எனது வாழ்த்துக்கள்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, November 6, 2022

148. "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலக்கிய இரசனை மற்றும் கவியாற்றலுடையவர்கள் அது சார்ந்த நூல்களை வெளியிடுவது வழமையாகும். அந்தவகையில் மக்கொனையூராள் என்ற புனைப் பெயரில் எழுதிவரும் பர்ஹானா அப்துல்லாஹ் தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக நிசாந்தம் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இவர் பாடசாலைக் காலத்திலேயே கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளார். அத்துடன் அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது படைப்புகளுக்காகப் பல சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்று பாடசாலைக்குப் புகழ் சேர்த்துள்ளார். 

பல்வேறு வகையான இலக்கிய வடிவங்கள் இருப்பினும் கவிதை பலரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு இலக்கிய வடிவமாகக் காணப்படுகிறது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவமாகும். மேலும், மொழியில் உள்ள ஒலியின் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. இன்றைய இளந்தலைமுறைப் படைப்பாளிகளையும் இந்தக் கவிதையென்ற இலக்கிய வடிவமே வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏனைய வகை இலக்கிய வடிவங்களை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேர காலங்களிலும் பார்க்க ஒப்பீட்டளவில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு குறுகிய நேர காலத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதே அதற்கான காரணமாகவும் இருக்கலாம்.

நிசாந்தம் கவிதைத் தொகுதி 30 கவிதைகளை உள்ளடக்கியதாக அக்கினிச் சிறகுகள் அமைப்பினரின் கை வண்ணத்தினால் வடிவமைக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலின் அட்டைப் படம் கவிதை வாசகர்களைக் கவர்வதாக அமைந்து கவிதை நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. நூலாசிரியர் பற்றிய சிறப்பானதொரு அறிமுகத்தை பின்னட்டையில் நூலாசிரியரின் ஆசிரியையான மக்கொனை, இந்திரிலிகொடயைச் சேர்ந்த திருமதி. ஏ.ஏ.என். ஸனீயா சிறப்பாக முன்வைத்துள்ளார். இந்த அறிமுகத்தில் நூலாசிரியருக்கும் கவிதைக்கும் உள்ள ஈடுபாட்டை தான் பாடசாலையில் கற்பிக்கும் காலத்திலிருந்தே கண்டுகொண்டதாகச் சொல்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமான கவிதை, கருத்து வெளிப்பாட்டுக்கான ஒரு முக்கிய ஊடகமாக எல்லாக் காலப் பிரிவுகளிலும் செயல்பட்டு வந்துள்ளது. கருத்துக்கள் கவிதையில் உருப்பெறும் போது அது மக்களின் உள்ளங்களில் உணர்ச்சியும் உயிரோட்டமும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு சாதனமாகக் கவிதைகளைக் கையாண்டுள்ளனர் என்று அவரது அறிமுகக் குறிப்பில் கவிதைக்கான முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான ஆசியுரையை முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் மிகவும் சுருக்கமாக வழங்கியுள்ளார். அத்துடன் கலாநிதி ஏ. அஸ்வர் அஸாஹீம் அவர்களும் ஆசியுரையொன்றை வழங்கியுள்ளார். நூலாசிரியர் எண்ணும் எழுத்தும் அறிமுகப்படுத்திய தன் தந்தைக்கும் தனது தாயாருக்குமே இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். 

நூலாசிரியர் தனதுரையில் "சிறுவயது முதல் என்னில் காணப்படும் எழுத்தாற்றல் மூலம் பாடசாலைக் காலப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து, பல வெற்றிகளைச் சுவீகரித்துக் கொண்டதோடு பத்திரிகை, வானொலி மற்றும் இணையம் ஊடாகவும் எழுத்துக்களுடன் சஞ்சரித்திருந்தாலும் கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற என்னுடைய நீண்ட பெருங்கனவு இன்று நனவாகக் கண்டதில் அகம் மகிழ்வடைகிறேன்" என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றார்.

இந்தக் கவிதை நூலில் நாம் இலங்கையர், இஸ்லாம் போற்றும் பெண்மை, ஆசிரியர் தினம், எது கவிதை, நிகற்பட ஆட்டம், காண்போம் புதிய உலகம், முள்ளோடுதான் ரோஜா, வேண்டாம் கொரோனா, மாறுவோம் மாற்றுவோம், மனிதா அது போதும், உயிர் பிரியும் அந்த நொடி, உயிரெழுத்துக் கவி, புத்தகங்களை காதல் கொள், தேடல், வாழ்க்கைப் படிகள், இளமையில் வறுமை, யார் அழகு, வியாபாரமா, கையர், செய்ந்நன்றி, வாழ்க்கைப் பாடம், தமிழ், செகத்திலே நிலவாய், வா..தோழா..வா.., அன்பினால், விரைவுணவும் விபரீதமும், அன்பு எதனாலானது, நீயும் ஜெயம் பெறுவாய், மனித உலகம் தவிக்கிறது, ஆதலால் தாமதம் வேண்டாம் ஆகிய தலைப்புக்களில் நூலூசிரியர் கவிதைகளை எழுதியுள்ளார். இந்தக் கவிதைகளில் இரசனைக்காகச் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

காணும் காட்சிகள் யாவற்றையும் கவிஞரின் மனக்கண் படம் பிடித்துவிடுகின்றது. பின்னர் அது கவிதையாக உருப்பெறுகிறது. இயற்கையாகக் காணக் கிடைக்கின்ற அத்தனை அழகுகளையும் இதுதான் கவிதையோ என எண்ணுகிறார் கவிஞர். பின்பு இவற்றையெல்லாம்விட குழந்தையின் குறும்புகளே கவிதையெனக் கூறி நிற்கின்றார். பக்கம் 11 இல் இடம்பிடித்துள்ள எது கவிதை? என்ற கவிதையின் அழகான சில வரிகள் இதோ:-


மலர்ப்பொழில் எழிலினில் 

என்னை மறந்தேன்.. 

மலர்களே கவிதையென 

நான் இருந்தேன்..


காற்றின் தழுவலில்

எனை மறந்தேன்..

காற்றுதான் கவிதையென 

நான் இருந்தேன்..


வானில் பல நிறம் பார்த்து 

என்னை மறந்தேன்..

வானமே கவிதையென 

நான் இருந்தேன்..


குழந்தையின் அழைப்பினில் இவை

அத்தனையும் மறந்தேன்..

குழந்தையே கவிதையென 

நான் உணர்ந்தேன்..


மனிதம் படிப்படியாக அருகிக்கொண்டு வருகின்ற இக்கால கட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் சிறந்த பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வைக்கிறது பக்கம் 13 இல் அமைந்துள்ள காண்போம் புதிய உலகம் என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை. இக்கவிதை மூலம் நம்மிடம் இருக்கின்ற எத்தனை சிறந்த இயல்புகளை நாம் இழந்து நிற்கின்றோம் என்ற ஆழமான வலியையும் ஊடுருவ வைக்கின்றது கவிஞரின் பின்வரும் வரிகள்..


பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் 

நல்லுள்ளங்களுடன் இணைவோம் 

நம் வாழ்வு சிறக்கும்..


வஞ்சனை செய்வோருக்கும் 

வந்தனம் செய்வோம் 

பசிக்கின்ற வயிற்றுக்கு 

பட்சணம் கொடுப்போம்..


அயல்வீட்டாரை 

அன்போடு பார்ப்போம்..

உறவினருடன் 

ஒத்தாசையாய் இருப்போம்..


பெண்ணியம் என்பது யாது என்று பலரும் கேட்கும் கேள்விக்கு பக்கம் 14 இல் அமைந்துள்ள முள்ளோடுதான் ரோஜா என்ற கவிதையின் வரிகள் மிக அழகான பதிலாக அமைந்திருக்கிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப கலிகாலத்தில் கால் வைத்து நொந்து போவதல்ல பெண்ணியம். மாறாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கீழுள்ள கவிதை வரிகள்; மூலம் கவிஞர் மிகவும் அருமையாகக் கூறிச் செல்கின்றார்.


வட்டத்துக்குள் வாழ்வதால் - நீ 

கிணற்றுத் தவளையாகிட முடியாது 

அந்த வட்டம்தான் - உனை

பல வாட்டங்களில் இருந்து 

காக்கும் காவலரண்.. 


நாணம் உனக்கு 

வேலியாக வேண்டும்.. 

நாணயம் உனக்கு 

தோழியாக வேண்டும்..

இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது 

இன்பங்கள் இல்லை 

இனியோர் சொல் கேட்டொழுகுதல் 

இன்பத்தின் எல்லை..


பக்கம் 20 இல் அமைந்துள்ள புத்தகங்களைக் காதல் கொள் என்ற கவிதையானது புத்தகங்களோடு வாழும் இன்பத்தை இயம்பி நிற்கின்றது. தனிமையில் சிறந்த துணையாகவும் மனசு கணத்த பொழுதுகளில் தாய் மடியாகவும் எமைத் தாங்கும் நூல்கள் இருள் சூழ்ந்த இரவுகளைக் கூட விளக்காக மாறி ஜொலிக்க வைக்கும் என்கிறார் கவிஞர்.


புத்துலகம் உன் வசமாகும்.

இத்தலத்தில் 

இனிமைகள் கரம் சேரும்..

உதயம் உன் மன வானில் 

காட்சியாகும்..

இதயம் தினம் புதுமைகளுக்கு 

சாட்சியாகும்..

புத்தகங்களைக் காதல் கொள்..


நினைவுகளில் எல்லாம் 

கார்கால மழை தூறும்..

கனவிலும் கவிதைகள் 

ஊர்கோலம் போக வரும் 

புத்தகங்களைக் காதல் கொள்..


மனசு கனத்த பொழுதுகளில்

தாய் மடியாய் மகிழ்விக்கும்..

புதுசு புதுசாய் எண்ணங்களை

சேய் போல ஒப்புவிக்கும்

புத்தகங்களைக் காதல் கொள்..


இவ்வாறு தனது கன்னிக் கவிதைத் தொகுதி மூலம் கவிதை வாசகர்களுக்கு விழிப்புணர்வுக் கவிதைகள், நாட்டுப் பற்று மற்றும் தமிழ்ப் பற்றுடன் கூடிய கவிதைகள், ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் போன்றவற்றை வழங்கி, விருந்து படைத்த கவிஞர் பர்ஹானா அப்துல்லாஹ் பாராட்டுக்குரியவர். எதிர்காலத்தில் மேலும் பல காத்திரமான கவிதை நூல்களை கவிதைப் பிரியர்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல் - நிசாந்தம்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்

வெளியீடு - அக்கினிச் சிறகுகள்




வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Saturday, December 25, 2021

147. "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

 "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இவர் எழுதியுள்ள "மொட்டுக்களின் மெட்டுக்கள்" என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் 70 பக்கங்களில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியீடு செய்துள்ளது. கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் ஏற்கனவே 2015 இல் மௌனத்தின் சத்தங்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தனக்கான சிறந்த ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் தனது மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிரதேச போட்டிகள் தொடக்கம் பல்கலையில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள் வரை இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்;. அத்துடன் 2017 இல் ஏறாவூர்ப் பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார கீதம் இயற்றியமைக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் கே. நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "சிறந்த புரட்சிக் கவிஞராக மிளிர்ந்த புரட்சிக் கமால் பிறந்த ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், புரட்சிக் கமால் பரம்பரையின் இன்றைய கால கட்டத்து இளந்தலைமுறைக் கவிஞர்" என்று இவருக்கு மகுடம் சூட்டியுள்ளார். அத்துடன் ஏறாவூரைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அனலக்தர் அவர்கள் நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "அப்பழுக்கில்லாமல் என் அடிச் சுவட்டைப் பின்பற்றி, மாணவரை சமூக மயப்படுத்தும் மகத்தான சேவையை நௌஷாத் செய்து வருகின்றார். அத்துடன் கலையிலக்கியப் போட்டிகளில் மாணவரை வழிப்படுத்தி, மாகாண - தேசிய மட்டங்களில் துலங்கச் செய்துள்ளமையும் பாராட்டுக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த சிறுவர் பாடல்கள் நூலில் 55 சிறுவர் பாடல்கள்  உள்ளடங்கியுள்ளன. இந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான சித்தரங்களையும் இந்த நூலில் சேர்த்துள்ளார். சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களின் மனதைக் கவரும் வகையில் எளிய நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதானது சிறுவர்களுடன் இவருக்குள்ள ஈடுபாட்டையும் இத்துறையில் இவருக்குள்ள புலமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. இத்துறையில் இவருக்குள்ள விரிந்த சிந்தனை, பரந்த அறிவு, மொழியாற்றல், வாசிப்பு மூலமான தேடல் போன்றவையே இவ்வகையான சிறந்த பாடல்களை இவர் எழுதக் காரணமாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்துடன் இவரது தந்தையும் ஒரு கவிஞராக இருந்;துள்ளார். 

சிறுவர் படைப்புகளை இலக்கியவாதிகள் எல்லோராலும் இலகுவாக எழுத முடியாது. ஏனென்றால் இதற்கென்று சிறுவர்களின் மனப்பாங்குகளையும் விருப்பங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ள ஒரு அலாதியான, மிகவும் மென்மையான மனம் இருக்க வேண்டும். அவை இந்த நூலாசிரியருக்கு வாய்த்திருக்கிறது. இவர் கலைமானிப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி மட்டுமல்லாமல் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியருமாவார். மாணவர்களுக்கு மத்தியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ப் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து நற்பெயரைப் பெற்றுள்ளார். எனவேதான் இவரால் அழகிய தமிழில், சிறந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தி சிறந்த படைப்புகளை சர்வ சாதாரணமாக முன்வைக்க முடிகிறது. 2019 ஃ 2020 ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது வழங்கல் விழாவில் மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த நூலுக்கு சான்றிதழ் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும். 

இந்த நூலில் உள்ளடங்கியுள்ள சிறுவர் பாடல்களைப் பொருத்தமட்டில் சிறுவர்களுடன் மிகவும் தொடர்பான தலைப்புகளில் அமைந்த பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பொம்மை, மலர்த் தோட்டம், மரம் நடுவோம், ஓடி விளையாடு, காலைக் காட்சி, காக்கை, உண்டியல், பூனை, அப்பா, புகைவண்டிப் பயணம், வானவில் ஜாலம், ஆசான் ஆகிய தலைப்புக்களில் அமைந்துள்ள பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

இனி நூலில் உள்ள சில பாடல்களை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

புத்தகம் படிப்போம் (பக்கம் 15) என்ற பாடல் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசுகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப இன்று வாழ்க்கையும் மாறிவிட்டது. புதுமைகளோடு பயணித்துக் கொண்டு பழமையானவற்றைக் கைவிடும் இச்சூழலில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அருகிப் போய்விட்டது. ஆனாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தராத வாசிப்பின் இரசனையை புத்தகங்களே நிறைவாகத் தந்துவிடுகின்றன. புத்தகத்தை ஏந்திய படியும் புத்தகத்துக்கு மாத்திரமே உரித்தான வாசனையுடனும் வாசிக்கின்ற போதுதான் வாசிக்கும் விடயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிடுகின்றன என்று பின்வரும் வரிகள் மூலம் கவிஞர் நௌஷாத் வாசிப்பின் அவசியத்தை முன் வைக்கின்றார். 


தினம் தினம் புத்தகம் படிப்பதனால்

சிறந்த அறிவும் ஆற்றலும் பெருகிடுமே

நினைவில் அதனை நிலையாய் பதிப்பதனால் 

நல்ல பழக்கங்கமும் வாழ்வில் வந்திடுமே


புவி மெச்ச கணிப்பொறி இலக்கியங்கள் 

புத்தம் புதிதாய் வளர் அறிவியல்கள்

கவி தரும் ஆற்றல் சிறுகதைகள்

கலந்து பருக்கும் நல்ல நூல்கள்


இயற்கையின் அழகியலோடும் வனப்போடும் மிக நெருங்கியது மலர்களே ஆகும். பூக்களின் அழகு யாரையும் கட்டிப் போட்டுவிடும். வர்ண ஜாலங்கள் மனதை வசீகரிக்கும். பூக்களைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை. சிறுவர்களை மிகக் கவர்ந்த பூக்களாலும் பூக்களோடு கொஞ்சிக்குலாவும் வண்ணத்துப் பூச்சிகளாலும் அழகுறுகிறது மலர்த் தோட்டம். அவ்வாறான மலர்களின் அழைகைப்பற்றி மலர்த் தோட்டம் (பக்கம் 18) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 


அழகு மலர்கள் சிரித்து

மகிழும் கூட்டம்

உலகு விரும்பும் நிறங்கள்

நிறைந்த தோட்டம்


புலர்ந்த பொழுதில் வண்டின்

இசை பாட்டும்

இழந்த இன்பம் எல்லாம்

இணைந்து கூட்டும்


இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான் என்பதற்கு புத்திமதி (பக்கம் 30) என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது கைகள் இல்லாத குருவி தன் கூட்டினை எவ்வளவு அழகாகக் கட்டிவிடுகிறது? சிறுவயதில் இரசித்த இத்தகைய விடயங்கள் இப்பொழுது நினைக்கையில் மிக மிக வியப்பாக இருக்கின்றது. குருவியின் புத்திமதியை ஏற்று குரங்கு தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளப் புறப்படுவதாக நிறைவுறுகிறது புத்திமதி என்ற பின்வரும் பாடல். 

குருவி ஒன்று மரத்திலே.. கூடு கட்டி வாழ்ந்தது.. குடும்பமாக குஞ்சுகள்.. கூட்டினுள்ளே இருந்தன.. மழையில் நனைந்த குரங்கு ஒன்று.. மரத்தின் அடியில் நின்றது.. மரத்தின் கூட்டில் குருவிகள்.. மகிழ்ந்து வாழக் கண்டது.. அலகினாலே அருமைக் கூடு.. அமைத்து நாங்கள் வாழ்கிறோம்.. அதேபோல நீயும் உனக்கு.. கூடு கட்டி வாழுவாய்.. கையில்லாத நாங்களோ.. களிப்புடனே இருக்கிறோம்.. கையிருந்தும் கவலை ஏன்.. என்று குரங்கைக் கேட்டது.. குருவி சொன்ன யோசனைகள்.. குரங்கின் உள்ளம் தாக்கவே.. உருகி தலை நிமிராமல் வீடமைக்கப் போனது.

உண்டியல் (பக்கம் 38) என்ற பாடல் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது. சேமிப்பின் ஸ்திரத் தன்மையை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கு உண்டியல் மிகப் பிரதானமாக உள்ளது. சிறுவயதில் இருந்தே சேமிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உண்டியல் மிகச் சிறந்த உதாரணம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கேற்ப வளர்ந்த பிறகும் கையிருப்பை சேமிப்பதற்கான வழி வகையைக் கூறுவதாக கீழுள்ள பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.


உண்டியலாம் உண்டியல்

உடைபடாத உண்டியல்

உண்டு குடித்து மிகுதி போக

சேர்த்து வைக்கும் உண்டியல்


வாழ்க்கையில் எத்தகைய உயரத்துக்குப் போனாலும் அதைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்கள்தான். நம்மையெல்லாம் ஏற்றிவிட்ட ஏணியாகி, நம்மை ஆளாக்கிய அவர்களை வாழ்வின் கடைசி எல்லைவரை மறந்து விடவே கூடாது. ஆசிரியர்களின் ஆசியால் உயர்ந்த பல மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கிணங்க ஆசிரியர்கள் எம் வாழ்வு எனும் மரத்தின் மிக முக்கியமான வேர்கள்.; ஆசிரியர்கள் பற்றி ஆசான் (பக்கம் 58) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


அன்னை தந்தை இருவரும்

இறைவன் தந்த அருளதாம்

அடுத்ததாக ஆசானும்

ஆண்டவனின் வரமதாம்


அறிவுக் கண்ணைத் திறக்கவே

அரிச்சுவடி தந்தவர்

விரிவுபட்ட உலகத்தை

விளங்கிக் கொள்ளச் செய்தவர்


கைத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களது வாசிப்பு ஆற்றலை மேம்படுத்த இவ்வகையான காத்திரமான நூல்களை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது இக்காலத்தின் தேவையாகவே உள்ளது. கவிஞர் கே. நௌஷாத்துக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!!


நூல் - மொட்டுக்களின் மெட்டுக்கள்

நூல் வகை - சிறுவர் பாடல்கள்;

நூலாசிரியர் - ஏரூர் கே. நௌஷாத்

தொலைபேசி - 0778205177

முதற் பதிப்பு - 2019

வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

146. "அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு

"அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு


ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் அவர்கள். டிப்ளோமா முடித்து, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரான இவர் பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். 

இளமைப் பருவத்திலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டிவந்த எழுத்தாளர் கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் கல்வி, மொழிப் பற்று, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் போன்ற விடயப் பரப்புகளில் எழுதி வந்த தனது ஆக்கங்களை தேசிய பத்திரிகைகளில் பல வருடங்களாக களப்படுத்தி வந்துள்ளார். பல்வேறு அமைப்புக்களின் மூலம் இதற்காகப் பல விருதுகளையும் பெற்று, பலரது பாராட்டுக்களையும் குறைவில்லாமல் பெற்றுள்ளார். தனது படைப்புககளை நூலாக வெளியிடும் முயற்சிகளில் அண்மைக் காலமாக இவர் ஈடுபட்டு வருகிறார். இந்தவகையில் இவரது மூன்றாவது நூலாக வெளிவந்திருப்பது அடிமன அதிர்வுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். 58 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்த நூலை காதியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

தனது உடன்பிறப்பான மர்ஹும் எம்.எச்.ஏ. செய்னுலாப்தீன் அதிபர் அவர்களுக்கு இந்த நூலை நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். மண்ணறையில் வாழும் தனது சகோதரனுக்காக நூலாசிரியர் அடிமன அதிர்வுகள் என்ற இந்த நூலில் எழுதியுள்ள சமர்ப்பணக் கவிதை மனதை ரணப்படுத்திச் செல்கிறது. 

அடிமன அதிர்வுகள் என்ற கவிதைத் தொகுதிக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில் "அடிமன அதிர்வுகள்" என்ற கவிதைத் தொகுதி பேசு பொருள்கள் பலவற்றையும் பேசாப் பொருள்கள் சிலவற்றையும் கொண்டு அமைந்துள்ளது. பேசு பொருள்கள் என்ற விதத்திலே தமிழ் மொழி, இயற்கை, முதியோர் நிலை, காதல் முதலியன சார்ந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். பேசு பொருள்களாயிருப்பினும் அவற்றினூடே சில புதுமைகளை வெளிப்படுத்தியுமுள்ளார். தமிழ் மொழி பற்றி அமைந்த கவிதைகளுடாக தமிழிலக்கிய வரலாறு - முக்கியமான நூல்கள் பலவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் நவீன கவிதைத் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் பற்றிப் பாடாதவரில்லை என்றே குறிப்பிடலாம். கிழக்கிலங்கையைப் பொறுத்தளவிலே நீலாவணன், திமிலைத்துமிலன், அண்ணல் போன்ற மேலும் பலரும் தமிழ்மொழி பற்றிப் பாடியிருப்பினும் அவற்றினூடே இவ்வாறு தமிழிலக்கிய வரலாறு பேசப்படவில்லை..|| என்று குறிப்பிட்டுள்ளார். நூலுக்கான காத்திரமானதொரு பின்னட்டைக் குறிப்பை கிழக்குப் பல்கலைக்கழக, சிரேஷ்ட விரிவுiராளர் ஏ. ஜாபர் ஹுசைன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

ஆன்மீகம் சார்ந்தவை, மொழிப் பற்று, இயற்கை மீதான காதல், வறுமையின் கொடுமை, முதியோர் நிலை, சமூக நிலை, காதல் கவிதைகள் ஆகிய கருப்பொருட்களில் கவிஞருக்கான கவிதை வெளி, நூலெங்கும் பறந்து விரிந்து செல்கின்றன. 

நூலிலுள்ள என் இறைவன் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை உலகத்தைப் படைத்துப் பரிபாலித்து இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமை பற்றிப் பேசுகின்றது. கோள் மண்டலத்தைப் படைத்து அவற்றை நேரம் பிசகாமல் சீராக இயக்குபவன் இறைவன். நாம் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து எமக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஏனைய உயிரினங்களுக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். மிக அழகாக எழுதப்பட்டுள்ள இக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறு:


அந்தரத்திற் கோள்களினை

எந்தவோர் இணைப்புமின்றி

பந்து போற் சுழல வைத்து

பாலனம் செய்கிறவன்


அற்பத் திரவத்தால்

ஆண் பெண்ணை உருவாக்கி

அரவணைத்து இரட்சிக்கும்

அன்பின் வடிவமவன்


கல்லிடைத் தேரை முதல்

கருப்பைச் சிசு வரையில்

எல்லாவுயிர்களுக்கும்

இரணம் கொடுக்கிறவன்


எம்மையெல்லாம் வாழ்த்தி வாழ வைத்திருக்கிறது நம் தமிழ் மொழி. சங்க கால இலக்கியம் தொட்டு இக்காலம் வரை எத்தனையெத்தனை எழுத்தாளர்கள் பல்வேறு விதமான படைப்புகளைத் தந்தாலும் எதிலும் புதுமையோடு இயைந்திருக்கக் கூடியது தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் மாயாஜாலம் செய்து எம்மை மெய் சிலிர்க்க வைக்கும் தமிழைப் பற்றியே கன்னித் தமிழ் மொழி (பக்கம் 05) என்ற கவிதை பேசுகிறது.


கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்தின் முன்தோன்றி

முதல் இடை கடையென

முச்சங்க மமைத்து

இயலிசை நாடகமாய்

இனிதே வளர்ந்த மொழி

செந்தமிழாம் நாம் பேசும்

கன்னித் தமிழ் மொழி


பெண்ணழகைப் பற்றிப் பாடாத ஆண் கவிஞர்கள் யாரும் இருக்க முடியாது. பெண்களின் விழிகள், வதனம், பற்கள், இதழ்கள் என்று எத்தனைப் பேர் எவ்வாறு எழுதினாலும் பெண்ணின் அழகை ஒவ்வொரு கவிஞரும் தத்தமது இரசனைக்கு ஏற்ப சொல்வதில் பெண்ணின் பெருமை அதிகரிக்கிறது. சுந்தரத் தமிழணங்கு (பக்கம் 11) என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் இதழோரப் புன்னகையைத் தோற்றுவிக்கிறது. 


பாளை பிளந்து பளிச்சிடும்

பல்லழகுப் பாவையவள்

சொல்லாடச் செல்வோர்க்கு

கல்லாடங் கற்பிப்பாள்


வேல் விழியிரண்டும்

வில் வளைவுப் புருவங்களும்

ஏகலைவன் விரல் கொடுத்த 

மா பாரதக் கதை கூறும்


சங்குக் கழுத்துடன்

அங்கந் தழுவிச்

சங்கமமாகி விட்டால்

சங்க காலப் பெருந்திணையாம்


இவர் ஏற்கனவே சுவனத்து மலர்கள் (சிறுகதைத் தொகுதி), பெண்ணியம் (கவிதைத் தொகுதி), ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்ப் பிரதேச செயலகம் இந்த நூலாசிரியரைப் பாராட்டி கௌரவித்துள்ளது. தனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளுக்காக பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் பல பரிசில்களையும் பெற்றுள்ள இவருக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இவரது இலக்கியப் பணிகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!


நூல் - அடிமன அதிர்வுகள்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம்
தொலைபேசி - 0775150127
வெளியீடு - காதியார் பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

145. 2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்தோறும் செல்வாய்க் கிழமை இரவு 8.15 மணிக்கு பாரம்பரியம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினோஸியா தயாரித்து வழங்க, சிரேஷ்ட கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா மிகவும் அருமையாகத் தொகுத்து வழங்குகின்றார். முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பினை நல்கிய கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியாகவே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி தொடர்ந்தும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


2021.01.19 ஆம் திகதியில் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சியில் முஸ்லிம் சேவையின் இலக்கிய பாரம்பரியம் என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும், கவிஞருமான கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களும், முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி பற்றிய தன் கண்ணோட்டம் என்ற தலைப்பில் சிரேஷ்ட வானொலிக் கலைஞர், நடிகர், சின்னத்திரை சினிமா புகழ், கலாபூஷணம் கே. சந்திரசேகரன் அவர்களும், முஸ்லிம் சேவையின் நாடக பாரம்பரியம் என்ற தலைப்பில் கவிஞரும் கலைஞருமான எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களும் உரையாற்றினார்கள்.

உண்மையில் இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி இலக்கிய நெஞ்சங்களையும் நாடக இரசிகர்களையும் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் நாடகங்களுக்காக குரல் கொடுத்தும் பிரதிகளைத் தயாரித்து வழங்கியும் தாங்களது பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார்கள். இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடமளவில் ஒலிபரப்பப்பட்ட ஒரு நாடகத்தின் சிறு பகுதியைக் கேட்க முடிந்தது. அந்த நாடகத்தை முழுமையாகக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அந்த நாடகத்தின் வரிகள் ஏற்படுத்தின.

ஆரம்ப காலங்களில் இலக்கிய மஞ்சரி, இளைஞர் இதயம், கவியரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் குரல் வளத்தாலும் எழுத்துக்களாலும் அளப்பெரும் பங்காற்றி நேயர் நெஞ்சங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டவர். இந்த நிகழ்ச்சியில் ஷஷமுஸ்லிம் சேவையின் கலை இலக்கியம் தொடர்பான பாரம்பரியம்|| தொடர்பாக தனது ஞாபகங்களை மீட்டிப் பல கருத்துக்களை அவர் முன்வைத்தார். 

ஜவாத் மரைக்கார் அவர்கள் முன்வைத்த கருத்துக்களைப் பார்க்கும் போது, மார்க்கம் சம்பந்தமானவை, சமூகம் தொடர்பான பொது விடயங்கள், கலை இலக்கியம் சார்ந்தவை ஆகிய முன்று தலைப்புக்களில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டார். அதாவது முழுக்க முழுக்க முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் பலவற்றின் விரிவான பார்வையாகவே அவரது உரை இருந்தது. 

அன்றைய நாட்களில் தென்னிந்தியா வரை புகழ் பெற்றிருந்த இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தற்காலங்களில் நவீன தொழில் நுட்ப வசதிகளின் காரணமாக சர்வதேச மட்டத்தில், பரவலான அமைப்பில் தமிழ் பேசும் மக்களைச் சென்றடைந்துள்ளது. கலை இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் உள்நாட்டுப் பாடகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பாடகர்களால் பாடப்பட்ட இஸ்லாமிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. தமிழ் மொழி தவிர அறபு, உருது, ஹிந்துஸ்தானி, மலாய் மொழிப் பாடல்களையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பியுள்ளது. அவ்வாறே கஸல், நாத், கவ்வாலிப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. 

பிற நாட்டு இசைக் கலைஞர்கள் வருகை தந்த போது அவர்களின் இசைத் திறனைக் கேட்பதற்கு அவர்களை நேர்காணல் செய்து அதனையும் ஒலிபரப்புச் செய்துள்ளார்கள். முஸ்லிம் சேவையில் தயாரித்து, ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நாடு கடந்து, மதங் கடந்து அனைவராலும் இரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளன. ஆற்றல் மிக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நாடக எழுத்தாளர்கள் ஆகியோரின் பங்களிப்பே இவ்வகையான நாடகங்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. வாரத்தில் ஒரு நாள் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நேயர்களின் நெஞ்சங்களில் நிலைத்தன. இந்த நிகழ்ச்சி வானொலி நாடக எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கவியரங்கங்கள், இசைச் சித்திரம், உரைச் சித்திரம் போன்ற நிகழ்;ச்சிகளும் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டுள்ளன. முன்னோர் அளித்துச் சென்ற பழம்பெரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக முதிசம் என்ற பெயரில் வாரந்தோரும் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இலக்கிய அலசல்களை உள்ளடக்கியதாக இலக்கிய மஞ்சரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றுவரை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. இன்றைய நாட்களில் கவிஞரும் எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார். இது ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாகும். அத்துடன் கவிதை தொடர்பாக கவிதைச் சுடர், கவிதைச் சரம், கவிஞர் மன்றம், கவிதா சாளரம், கவிதைக் களம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்ட பக்கீர் பைத் நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

கிராமிய இலக்கியமான நாட்டுப் பாடல்களின் தொடர் நிகழ்ச்சி கிராமத்து இதயம் என்ற பெயரில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. முத்தாரம் என்ற பெயரில் ஒரு பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சியும் வாராந்தம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. சதுரச் சங்கமம் என்ற பெயரில் வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றும் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் நேர்காணல்களும் அவ்வப்போது ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. நிலா முற்றம் என்ற பெயரிலும் சில நேர்காணல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 

புனைகதைகள் தொடர்பாக கதை கேளீர் என்ற நிகழ்ச்சி மற்றும் சிறுகதை என்ற வாராந்த நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. முஸ்லிம்களால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய நூல்கள் பற்றி நூல் உலா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் என்ற ஒரு நிகழ்ச்சியும் அந்நாட்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. மகரந்தம் என்ற பெயரில் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி ஒன்றும் வாராந்தம் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அருட்சுணை என்ற நிகழ்ச்சி முஸ்லிம்களால் ஆக்கப்பட்ட பக்தி இரசம் கொண்ட இலக்கியங்களின் சிறப்பை நயந்து அறிமுகம் செய்வதாக ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. ஊடுருவல் என்ற சமூகச் சித்திரம், சமுதாயம் தொடர்பான விமர்சனங்களை இலக்கிய நயத்துடனும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கும் சுவையான நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டுள்ளன என்றவாறு ஜவாத் மரைக்கார் அவர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் பற்றிய தனது பதிவை மீட்டிச் சென்றார்.

வாரா வாரம் சுமார் 05 வருடங்களாகத் தொடர்ந்தும் சனிக் கிழமை காலை 8.40 மணிக்கு ஒலிபரப்பப்பட்டு வருகின்ற ஜனரஞ்சகமான கலை இலக்கிய நிகழ்ச்சியே சஞ்சாரம் என்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிடப்படாமை ஒரு குறையாகும். இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்கி வருபவர்களுக்கு அதுபெருங்கவலையான விடயமாக அமைந்துள்ளது. அத்துடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சி பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான சில குறைபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளைப்பற்றி ஆய்வு செய்ய வருபவர்களுக்கு அது முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்பதையும் கருத்தில்கொள்வது நல்லது.

அடுத்து உரையாற்றிய முஸ்லிம் சேவையின் பேரபிமாணி கே. சந்திரசேகரன் அவர்கள் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மிகவும் சிறப்பாகவும் சுவையாகவும் முன்வைத்தார். அவர் தனதுரையில், பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது அந்நாட்களில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்களை நேர்காணல் செய்து அவர்களது அநுபவங்களை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் அருமையான நிகழ்ச்சியே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். நாடக நடிகர்கள் மற்றும் நாடகப் பிரதி எழுத்தாளர்கள் என்று பலரது பெரைப் பட்டியலிட்டு முன்வைத்த அவர், முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழ் பேசும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். சமுதாயச் சீரழிவுகளை எடுத்துச் நகைச் சுவையாகச் சொல்லும் நாடகத் தொடர்களாக சுவைக் கதம்பம் நிகழ்ச்சியை மஹ்தி ஹஸன் இப்றாஹீம் எழுதி, ஸில்மியா ஹாதியுடன் இணைந்து நடித்து வழங்கி பலரது மனங்களையும் கவர்ந்தார் என்றும் குறிப்பிட்டார். 

1992 ஆம் ஆண்டு குரல் தெரிவில் இலங்கை வானொலி, முஸ்லிம் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகத் தெரிவாகியவரே கலைஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள். தொடர்ந்து உரையாற்றிய அவர், முஸ்லிம் சேவையின் நாடகப் பாரம்பரியம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை முன்வைத்தார். 

முஸ்லிம் நிகழ்ச்சியின் ஆரம்ப காலங்களில் நாடகங்கள், உரைச் சித்திரங்கள், நடைச் சித்திரங்கள் ஒலிபரப்பாகவில்லை. அக்காலத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆசிரியராக இருந்த கலாநிதி அல்லாமா ஏ.எம். உவைஸ் அவர்கள், எழுதி என்ற புனைப் பெயரில் நடைச் சித்திரங்களையும் உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியர் புத்தளத்தைச் சேர்ந்த ஓ.எச். ஆப்தீன் அவர்களும் தொடர்ந்து நாடகங்களை எழுதியுள்ளார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியர் திக்குவல்லையைச் சேர்ந்த எம்.ஏ. முஹம்மத் அவர்களும் பல நாடகங்களை எழுதியுள்ளார். இவரது புயல் என்ற நாடகமே தமிழ் தேசிய ஒலிபரப்புச் சேவையில் முதன் முதலாக ஒலிபரப்பாகியுள்ளது. பின்னாட்களில் சூறாவளி என்ற பெயரில் இந்த நாடகம் முஸ்லிம் சேவையிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பல புனைப் பெயர்களில் பல நாடகங்களை இவர் எழுதி, நாடகத் துறையில் ஒரு தனித்துவமான பெயரைத் தனதாக்கிக் கொண்டார். தொடர் நாடகங்கள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யுமுகமாக முஹம்மது மாஸ்டர் எழுதி, 50 வாரங்கள் வரை ஒலிபரப்பான இவரது பௌஸியா தொடர் என்ற நாடகம் இங்கு குறிப்பிடத்தக்கது. 

சுரையா என்ற புனைப் பெயரில் எழுதிய மானா மக்கீனின் பாத்திமா மன்ஸில், எம்.ஏ. றஹ்மான் எழுதிய தாஜ்மகால் நிழலில், இளங்கீரன் சுபைர் எழுதிய வாழப் பிறந்தவர்கள், கல்பிட்டி எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பாரின் தொடர் நாடகம், தீன்ஷா என்ற புனைப் பெயரில் ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய நினைத்ததும் நிகழ்ந்ததும், எம். அஷ்ரப்கானின் சக்கரங்கள், தாய்மைக்கு என்ன விலை, காலச் சக்கரம், திக்குவல்லை கமாலின் மண்ணில் விழுந்த நிலவு, புர்கான் பீ இப்திகாரின் நிஜங்களின் நிழல்கள் போன்ற நாடகங்களை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களாகக் குறிப்பிடலாம். முஹம்மது மாஸ்டரைத் தொடர்ந்து நாடகம் எழுதியவர்களில் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த எம்.எம். சாகுல் ஹமீத், பொல்கஹவெல யூ.எல்.எம். தாஹா, கொழும்பைச் சேர்ந்த மானா மக்கீன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். 

எம். தாலிபின் விசித்திரப் பிறவி என்ற நாடகமும், ஸீ.பீ.எம். காஸிமின் கண்ணீரே காணிக்கை என்ற நாடகமும், எஸ். முத்துமீரானின் காதலும் கருணையும் என்ற நாடகமும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கே.எம்.ஏ. மொகிதீன் அவர்களின் நாடகப் பிரதிகளும் ஒவிபரப்பாகியுள்ளன.  

கவிதை நாடகம் இல்லாத குறையைத் தீர்க்கும் முகமாக எம்.ஏ. கபூர் என்ற பொத்துவில் யுவன் அழாதே சிரி என்ற நாடகத்தை எழுதியிருந்தார். கல்ஹின்னை எம்.ஸீ.எம். சுபைர், பஸீல் காரியப்பர் ஆகியோரும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். திக்குவல்லை எம்.எச்.எம். ஷம்ஸின் அன்பின் பரிசு, அஷ்ரப் சிஹாப்தீனின் திப்பு சுல்தானின் மனிதாபிமானம் ஆகிய நாடகப் பிரதிகள் ஒலிபரப்பப்பட்டன. நாவலாசிரியர்களும் வானொலி நாடகங்களுக்கான தனது பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். அந்தவகையில் அக்கரைப்பற்று அ.ஸ. அப்துஸ் ஸமத், யாழ்ப்பாணம் இளங்கீரன் சுபைர் ஆகியோரின் பங்களிப்புக்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

 1967 க்குப் பின்னர் நாடகங்கள் எழுதியவர்கள் வரிசையில் மன்னார் எச்.எம். சரீப், எம்.எச். பௌசுல் அமீர், எம். அஷ்ரப் கான், ரைத்தலாவளை எம்.என்.ஏ. அஸீஸ், போர்வையூர் ஜிப்ரி, ஏத்தாளை மொகிதீன் ஏ. றஸ்ஸாக், மன்னாரைச் சேர்ந்தவர்களான எஸ்.எச். நிஃமத் மற்றும் கலைவாதி கலீல், வாழைத்தோட்டம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதன் பின்னரான காலப் பகுதிகளில் நயீமா சித்தீக், ஜுனைதா ஷெரீப், எஸ்.ஏ.எம்.எம். அஷ்ரப், புத்தளம் எம்.எச்.எம். ஹஸன், கல்ஹின்னை சலீம், சோலைக்கிளி யூ.எல்.எம். அதீக், புர்கான் பீ இப்திகார், மஹ்தி ஹஸன் இப்ராஹீம், எஸ்.ஏ.ஸீ.எம். பிர்தௌஸி, தீரன் ஆர்.எம். நௌஷாத், மரீனா இல்யாஸ், ஹாஜா அலாவுதீன், எச்.ஐ.எம். ஹுஸைன், அஷ்ரப் சிஹாப்தீன், எம்.எஸ்.எம்.எஸ். நகீப், யாழ். பரீத் ஜாபிர், பௌஸியா யாஸீன், நஸீலா ஆதம், திக்குவல்லையைச் சேர்ந்தவர்களான கமால், ஸப்வான், ஸும்ரி, எம். அஸ்மி சாலி, அபுக்காகம பழீல் ஏ. கபூர், இர்சாத் கமால்தீன், பாலையூற்று அஷ்ரபா நூர்தீன், ஸில்மியா ஹாதி, சபானா ஜுனைதீன் ஆகிய பலரும் வானொலி நாடகங்களை எழுதியுள்ளதாக ஒரு பெரிய பெயர்ப் பட்டிலை முன்வைத்தார். 

முஸ்லிம் நாடகங்களை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் ஏனைய சமயத்தவர்களும் அந்நாட்களில் விரும்பிக் கேட்டு வந்துள்ளார்கள். அருமையான கருத்துக்களும் இஸ்லாமிய கலாசார விழுமியங்கள், மரபுகள் சார்ந்த விடயங்களும் இந்த நாடகங்களில் பிரதிபலித்துள்ளன. சமூகக் குறைபாடுகளும் இந்த நாடகங்களினூடாக சுட்டிக் காட்டப்பட்டு, இதற்கான தீர்வுகளும் இந்த நாடகங்கள் மூலமாக முன்வைக்கப்பட்டன. பெண் கல்வி, சீதனம், விதவை மறுமணம், ஆலிம்கள் முஅஸ்ஸின்களின் கண்ணியம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, கல்வியின் முக்கியத்துவம், ஸக்காத், ரமழான், ஹஜ் ஆகிய கடமைகளின் சிறப்பு, வாழ்வில் ஹராம் ஹலால் பேணல், பல்கலைக்கழக பகிடிவதை போன்ற சமுதாயச் சீர்திருத்த விடயங்கள் இந்த நாடகங்களினூடாக முன்வைக்கப்பட்டன. இந்த நாடகங்கள்; சமூகத்தில் பல தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. சமூக மேம்பாட்டக்கான நாடகங்களின் பங்களிப்புக்கள் மகத்தானவை. இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த பல நாடுகளிலும் இந்த நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப், மௌலவி யூ.எல். தாஸிம் போன்ற மார்க்க அறிஞர்களும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய பணமா பாசமா என்ற நாடகம், நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது. இவரது ஆயிரத்தொரு இரவுகள் என்ற தொடர் நாடகம் அந்நாட்களில் சிலாகித்துப் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் நாடகத் துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தவகையில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களின் தனிநபர் நாடகத்தைக் குறிப்பிடலாம். எம். அஸ்வத் கான் எழுதிய பயணம் என்ற நாடகம் ஒரு புகையிரதத்தில் பயணம் செய்யும் போதே நடிக்கப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பான நாடகம் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். 

நாடகத் தயாரிப்புத் துறையில் ஏ.எம். காமில் மரிக்கார், எம்.எச். குத்தூஸ், குலாம் ரஷீத், எம்.எம். இர்பான், ரஷீத் எம். ஹபீல், எம். அஷ்ரப் கான் ஆகியோருடன் ஏ.எல். ஜபீரும் இணைந்துள்ளார்கள். 

சிலாபத்தைச் சேர்ந்த எம். அஷ்ரப் கான் எழுதிய எது தியாகம் (1958) என்ற தனது முதல் நாடகத்தைத் தொடர்ந்து பல சமூக நாடகங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் ஆக்ராவின் கண்ணீர், முஹம்மது பின் துக்லத், மாமன்னர் பாபர் போன்ற பல சரித்திர நாடகங்களையும் எம். அஷ்ரப் கான்; எழுதியுள்ளார். இவரது இந்த நாடகங்களை நேயர்கள் இன்றும் மறக்கவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். பரதேசி என்ற இவரது நாடகம் பல தடவை முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. 

நாடகத் துறையில் பங்களிப்புச் செய்த வானொலி முஸ்லிம் நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்ற வகையில் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு மிகவும் நீண்ட பெயர்ப் பட்டியலொன்றும் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. 

எம் நெஞ்சங்களில் தனியான ஒரு இடம்பிடித்து நிலைத்து நிற்கும் எமது முஸ்லிம் சேவையின் தனித்துவம் நிறைந்த நிகழ்ச்சி பாரம்பரியம் நிகழ்ச்சியாகும் என்பது மிகையான கூற்று அல்ல. முஸ்லிம் சேவையின் சமூகம் தொடர்பான கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் பாரம்பரியத்தினை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாரம்பரியம் நிகழ்ச்சி தங்கு தடைகளில்லாமல் தொடர்ந்தும் ஒலிபரப்பாக வேண்டும் என்று பிரார்த்தித்தவளாக, இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வானொலிக் கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!


Wednesday, May 13, 2020

144. திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

நாடறிந்த எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சினிமா தொடர்பான நூலே ''திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்'' என்ற நூலாகும். இந்த நூலானது சென்னை மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 196 பக்கங்களில் வெளிவந்துள்ளது. உலக சினிமா பற்றிய நூலாசிரியரின் மனப்பதிவுகள், துணுக்குகள், தகவல்கள், உலகத் திரைப்பட செல்நெறி, சர்வதேச ரீதியில் திரைப்படக் கலையின் போக்கும் வளர்ச்சியும் போன்ற பல்வேறு விடயங்களை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இந்த நூலில் விரிவாகப் பதிகிறார்.

பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஊடகம் என்ற பொதுத் தலைப்பில் கற்கும் மாணவர்கள் திரைப்படத்துறை சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. அத்துடன் பல்கலைக்கழகங்களின் இதழியல் துறையில் கற்கும் மாணவர்களும் இத்துறைபற்றி கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நான் அறிந்த வகையில் தம்பி ஐயா தேவதாஸ் இத்துறையில் பல நூல்களை வெளியிட்டு இத்துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.

இலங்கை வானொலியில் பல்லாண்டு காலம் பணிபுரிந்த சிறந்த ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த இவர், தனியார் ஆங்கிலப் பாடசாலைகளில் தனது ஆசிரியப் பணியை செவ்வனே செய்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தைப் பெற்றுள்ளார். தற்போது முழு நேர எழுத்தாளராக தேசிய பத்திரிகைகள் யாவற்றிலும் பல்வேறு தலைப்புக்களில் மிகவும் பெறுமதியான விடயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.

1953களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்து, மொழிபெயர்ப்பு, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகள், செய்தித்துறை, தூதரக தொடர்பாடல், விளம்பர பிரதி எழுதுதல், பத்திரிகை ஆசிரியத் துறை, கல்லூரி ஆசிரியம் ஆகியவற்றில் நிறையவே அனுபவங்கொண்ட இவர் இந்நூலை எழுதுவதற்கு தனது அவதானிப்புக்களையும் அறிவையும் செவ்வனே பயன்படுத்தி சிறப்பாக எழுதியுள்ளார்.

''திரைப்படத் திறனாய்வு'' என்ற முதலாவது கட்டுரையில் ''திரைப்படம் என்பது நெறியாளர் ஒருவரின் படைப்பு. அதனை நுகர, பார்வையாளர் முனைகிறார். தொடர்பாடலில் இவ்விரு தரப்பினரும் முக்கியமான பங்காளிகள். திரைப்படத் திறனாய்வாளரும் ஒரு பார்வையாளர்தான். ஆயினும் அவர் ஏனைய பார்வையாளரைவிடச் சிறிது வேறுபட்டவர். திரைப்பட விமர்சகரின் குறிப்புரைகளினால் ஏனைய பார்வையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் பயனடைகின்றனர். திரைப்படத் திறனாய்வு மூலம் திரைப்படம் ஒரு கலைச் சாதனமாக வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது'' என்று தனது பார்வையை ஆழமாகப் பதிகின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

''டொக்யூமென்டரி என்றால் என்ன?'' (பக்கம் 09) என்ற கட்டுரையில் ''திரைப்படத் திறனாய்வுத் துறையில் பயன்படுத்தப்படும் பதங்களில் ஒன்று டொக்யூமென்டரி (னுழஉரஅநவெயசல) இந்த ஆங்கிலச் சொல். ஒரு ரக திரைப்படத்தைக் குறிக்கும். தமிழில் இதனை நாம் மொட்டையாக விவரணப் படங்கள் என்று கூறி வந்தோம். ஆனால் இது இந்தத் துறைப் படங்களைக் குறிப்பிடப் பொருத்தமான சொல் அல்ல என்பதைப் பின்னர் உணர்ந்துகொண்டோம். விவரணம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (யேசசயவழைn) அல்லது (யேசசயவiஎந) என்பார்கள். இலக்கியத் திறனாய்வுத் துறையில் யேசசயவiஎந போல னுநளஉசipவiஎந என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். விவரணம் யேசசயவiஎந என்றால் கதை, ஓவியம், திரைப்படம் போன்றவற்றில் நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல் என்பார்கள்'' என்று விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

''இரு சிங்கள நெறியாளர்கள்'' (பக்கம் 35) என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோர் பற்றிய தகவல்களை முன்வைத்துள்ளார். சிங்களத் திரையுலகில் இந்த நெறியாளர்கள் குறிப்பிடத்தக்க படங்களைத் தந்துள்ளனர். இப்படங்களில் சில அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

திரைப்படத் திறனாய்வு, டொக்யூமென்டரி என்றால் என்ன?, திரைப்படக் கலை பற்றித் தமிழில் ஓர் அருமையான நூல், தென்னிந்தியத் திரைப்படங்கள், கல்கத்தா திரைப்பட விழாவில் குறிப்பிடத்தக்க படங்கள், இரு சிங்கள நெறியாளர்கள், மெல்லெனக் காமத்தைத் தீண்டும் ஐரோப்பியப் படங்கள் இரண்டு, மேலை இசை விற்பன்னர், கன்னட சினிமா, மலையாள சினிமா, நான்கு மலையாளத் திரைப்படங்கள், அஸ்ஸாமிலிருந்து ஓர் அழகிய பெண்ணியப் படம், ஹிந்தி சினிமா பிக்ரம் சிங்கின் படம், தமிழ் சினிமா பூமணியின் படம், சிங்கள சினிமா எச்.டி. பிரேமரத்னவின் படம், சமஸ்கிருத மொழி சினிமா, இந்திய சினிமா, பம்பாய் பட விழா, பல மொழி நடிகை, குறுந்திரைப்படங்கள், பிரிட்டிஷ் சினிமா, கனேடிய சினிமா, உலக சினிமா, தமிழ் சினிமா ஆகிய தலைப்புக்களிலான பல்வேறு கட்டுரைகள் இந்த நூலை அலங்கரித்;துள்ளன. ஈழத் தமிழ் இலக்கிய வெளியில் திரைப்படத்துறை சார்ந்த நூல்கள் மிகவும் அரிதாகவே வெளிவந்துள்ளன. அந்தவகையில் சினிமாப் பிரியர்களுக்கும் இதுதொடர்பான ஆர்வலர்களுக்கும் இந்த நூல் வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம். இந்த நூல் தவிர நூலாசிரியர் முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், அசையும் படிமங்கள் ஆகிய நூல்களையும் இதற்கு முன்னர் இத்துறையில் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழப் பிரார்த்திப்பதுடன் அவரது எழுத்துப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். இன்னும் பல காத்திரமான நூல்களை தமிழுலகுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - திரைப்பட விழாக்களின் படங்களும் 
அவை தொடர்பான சுவையான செய்திகளும்
நூலின் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
ஈமெயில் - sivakumaran.ks@gmail.com
வெளியீடு; - மணிமேகலைப் பிரசுரம்
விலை; - 300 ரூபாய்