Monday, May 9, 2011

08. 'சுனாமியின் சுவடுகள்' - கவிதைத் தொகுதி

'சுனாமியின் சுவடுகள்' கவிதைத் தொகுதி மீதான விமர்சனக் குறிப்பு

2004 ஆம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் திகதி உலகிலுள்ள மக்கள் தொகையின் கணிசமான பகுதியினரை தன் அகோரப் பசிக்குள் இரையாக்கிக் கொண்ட நிகழ்வை நினைத்தால் இன்றைக்கும் பயங்கரமாகத் தான் இருக்கிறது. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலத்திலும் கூட வீடு வாசல்கள் அற்று அவதிப்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சம்பவம் நடந்த காலப் பகுதிகளின் ஆரம்பத்தில் மாத்திரம் அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகளும், கவிதைகளும், புகைப்படங்களும் என்று ஏராளம் எழுதப்பட்டாலும், பேசப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டனவோ என்னவோ? தென் மாகாணத்தின் கரையோரப்பகுதியைச் சேர்ந்த வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட நான் நேரடியான சுனாமியின் பாதிப்புக்களுக்கு உள்ளாகாவிட்டாலும் கூட சுனாமி விளைவித்து விட்டுப்போன சோகங்களால் நன்கு தாக்கப்பட்டவள். ஆதலால் சுனாமியின் சுவடுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியினுள் பொதிந்திருக்கும் ஆத்மார்த்தமான வலிகள் என்னிலும் ஊடுருவிவிடுகிறது.

இத்தகைய விடயங்களை வைத்து நானாட்டான் எஸ். ஜெகன் தனது உணர்வுகளை சுனாமியின் சுவடுகளுடாக தந்திருப்பது பாராட்டத்தக்கது.

அவஸ்தைகள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியரான ஜெகன் தனது இரண்டாவது தொகுதியாக சுனாமியின் சுவடுகள் என்ற இத்தத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் வெளியீடாக, 65 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 52 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு சுனாமிப் பேரலைகள் கொடூரமாகத் தாக்கவில்லை. எனினும் தமிழர் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரம் இப்பேரலையின் சீற்றத்தால் சீரழிந்தமையும், அங்கு வாழ்ந்த மக்கள் தமது இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றமையும் எம் இதயத்தை உருக்கியதே. எனவே கவிஞர் சகோதரப் பாசத்துடன் எம் உறவுகளின் இன்னல்களையும், அவஸ்தைகளையும் கவிதைகளாக வடித்துள்ளார்' என்று தனது வாழ்த்துரையில் அ. பத்திநாதன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் தனது அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். 'பாரதிக்குப் பிறகு புதிய போக்கு ஒன்று கவிதையில் தோன்றி வளர்ந்து வர அதற்குத் துணை நிற்பவர்கள் பலராயினர். புதுக் கவிதை என்று சொல்வது கூட அதன் அமைப்பு வடிவத்தில் பண்டைய காலத்தில் இல்லாமல் இல்லை. கருத்தை வேகமாக சொல்ல, வேகமாக வாசகனிடம் பதிய வைக்க புதுக் கவிதை வடிவம் துணை நிற்கிறது என்பது அதன் ஆதரவாளர்கள் கூறும் கருத்து. ...ஆக மரபுக் கவிதையிலும் புதிய போக்குண்டு. புதுக் கவிதையிலும் மரபின் சாயலுண்டு. ... கவிஞர் ஜெகன் தனக்கேயுரிய பார்வையுடனும் சொல் வீச்சுடனும் மனித நேய மாண்பு கொப்பளிக்க இக்கவிதைகளைத் தந்துள்ளமை பாராட்டத்தக்கது'

நட்பென்ற போர்வையில் நாடகமாடும் நரிகள் மலிந்த இந்த யுகத்தில் நாம் வாழ்வதே பெரும் போராட்டம்தான். வெட்டும் குத்தும், குழிபறிப்புகளும் அடுத்தவன் சொத்தை அபகரிப்பதும் கொடுத்த கடனுக்கு ஆப்படிப்பது மாத்திரமன்றி, கடனைத் திருப்பிக் கேட்டால் கடன் கொடுத்தவரையே பழிவாங்குவதும், இறுதியில் தான் கொடுத்த கடனை எப்படியேனும் பெற்றுக் கொள்ளவதற்காய் காவல்நிலையம் வரை போக வேண்டிய சூழ்நிலையும் அன்றாடம் நிகழ்கின்றன.

நல்லவர்களாக வேஷமிட்டுப் பழகி இடையில் நயவஞ்சகக் கத்தி வைப்பவர்களும், தம் தவறை மறைப்பதற்காய் நல்லவர்கள் மேல் பழிபோடும் பொய் மனிதர்களும் தான்; இன்று பரவலாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக நடப்பது மாத்திரமன்றி நல்ல உள்ளங்களைப் பிரிப்பதற்காக சதித்திட்டங்களும் தீட்டுகிறார்கள். உண்மையில் இவ்வாறானவர்கள் நல்லவர்களின் சாபத்தைத் தவிர வேறெதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்? ஆறறிவு படைத்த மனிதர்களே இப்படி இருக்கும் போது அவர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமியைச் சுற்றிக் காணப்படும் கடல் மாத்திரம் எவ்வாறு வேறுபட முடியும்? வஞ்சகம் (பக்கம் 08) என்ற கவிதையும் கடலின் துரோகத்தையே சுட்டி நிற்கின்றது.

கவலை(க்) கட்டுக்கள் அவிழும் பொழுது புதிய கட்டுக்கள் போட்டு புலம்ப வைத்தாய் - தாய் போல எமை சுமந்து தாலாட்டி தூங்க வைத்தாய் - அசந்து தூங்கிய வேளை உயிர் குடித்தாய் - உப்புக் கடலே எம் உதிரம் அவ்வளவு சுவையா? என்று வினாதொடுக்கிறார் கவிஞர் நாளாட்டான் ஜெகன்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்தவை வீடுகளும் காணிகளும் மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலான சொந்த பந்தங்களையும்;தான். கண்கள் பார்த்திருக்க அலைகளின் ராட்சதப் பிடியில் சிக்கி உயிரிழந்த உறவுகளை நினைத்து சோகத்தில் வாடும் மனிதர்கள் ஒரு புறம் இருக்க, அடித்தது அதிர்ஷ்டம் என்று எண்ணி திறந்த வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட திருடர்கள் மறுபுறமாய்... இது கூடப் பரவாயில்லை. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென உலக நாடுகள் ஒருங்கிணைந்து அனுப்பிய நிவாரணப் பொருட்களை நம் நாட்டு சில சுண்டெலிகள் சுரண்டிக்கொண்டதை சில பல்லவிகள் (பக்கம் 10) என்ற கவிதையில் இவ்வாறு கூறுகிறார்.

அலையில்
அகப்பட்ட நாங்கள்
அவதியுற்ற வேளை
பலர்
பங்கு கொண்டார்கள்
எம் சோகத்தில் அல்ல
சுனாமி நிவாரணத்தில்...

பதில் கூறு (பக்கம் 13) என்ற கவிதையினூடும் கவிஞர் ஷஎத்தனை காதலுக்கு கவிதை சொல்லிய நீ - எத்தனை இதயங்களுக்கு ஆறுதல் தந்த நீ - எத்தனை கண்களுக்கு கனவு கொடுத்த நீ - எத்தனை மௌனங்களுக்கு வார்த்தை கொடுத்த நீ - அத்தனை உயிர்களுக்கும் ஏன் மரணத்தைக் கொடுத்தாய் என்று கடலிடமே கேள்வியெழுப்புகிறார்.
சுனாமியால் வாழ்வின் ரணங்கள் (பக்கம் 24) என்ற கவிதையில் கவிஞரின் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்.

மாமிச அரக்கியே வந்து பார் - உன் மமதைக்குப் பலியான மனித உயிர்களை - மாடிக் கட்டிடங்களை மண் குடிசைகளை... கடலால் சூழ்ந்த கன்னித் தீவை கடனால் சூழவைத்தாய் - சுனாமியே வந்து பார் அடுப்பில் நெருப்பு எரியவில்லை எம் அடிவயிறு எரிகிறது - உலை கொதிக்கவில்லை எம் உள்ளம் கொதிக்கிறது...!

ஊனம்+சமூகம் என்ற கவிதையானது (பக்கம் 39) கலைந்து போன கனவுகளைப் பற்றிக்கூறுவதுடன் அவற்றால் தான் ஒருபோதும் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதையும் தன்னம்பிக்கையோடு கூறியிருக்கிறார் நூலாசிரியர் நானாட்டான் ஜெகன்.

எங்கோ இருந்து ஏவப்பட்ட அம்புகளால் தமது சமூகம் எழ முடியாமல் தவிக்கின்றபோது, தவிப்புக்களையும் தாகங்களையும் தாங்கிய தனது உள்ளம் தளரவில்லை என்கிறார். உறவுகள் பறிபோனாலும் உணர்வுகளை இழக்கவில்லை என்றும், கடலால் கனவுகளைத்தான் பொசுக்க முடியுமே தவிர கண்களை அல்ல என்றும் கூறும் கவிஞர், விழுந்த அலை மீண்டும் எழுவது போல் தானும் ஆகாயமாக எழுவதாகவும், அப்போது சுனாமி என்ன சூரியனால் கூட தன் வேட்கையை வேக வைக்க முடியாது என்றும் கூறுவதினூடாக தன்னை மாத்திரம் திடப்படுத்திக்கொள்வதன்றி சுனாமியினால் நொந்து போனவர்களுக்கு இதய ஒத்தடமாகவும் இக்கவிதையை யாத்திருக்கின்றமை சிறப்பானதாகும்.

வலுவிழந்து போனேன் நண்பா (பக்கம் 41) என்ற கவிதை சுனாமியால் இறந்து போன ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டிருக்கும் விதம் எம்நெஞ்சிலும் துன்பத்தை தந்துவிடுகிறது. நீ என் அருகில் இருக்கும்வரை வானம் எனக்கருகில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்றும், பூமி எனக்கருகில் பூத்துக் குலுங்கியது என்றும் சொல்லும் ஜெகன், இருவரின் இரகசியங்களையும் ஒட்டுக் கேட்கும் கட்டுமரம் உட்பட கடற்கரை மணல் எல்லாமே நண்பனை ஞாபகப்படுத்திப்போகிறது என்கிறார். இறுதியில் எல்லோருக்கும் பிடித்த தன் நண்பனை, ஆழிப்பேரலையும் விரும்பி கொண்டு சென்றுவிட்டதாக கூறி எம் உள்ளத்தையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறார்.

கடல் அலையாய்க் காதல் (பக்கம் 59) என்ற கவிதையில் காதலை கடலலைக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. 'கடலலையைப்பார் என்னைப்போலவே ஏதேதோ சொல்ல வருகிறது, ஆனால் கரை கூட உன்னைப்போலவே கேட்காமல் போய்விடுகிறது' என்றவாறு கவிதை தொடர்கிறது. மேலும் அலை நுரைபோல் அழுவதாகவும், அதற்கு ஒப்பீடாக நான் அழுகிறேன் கண்ணீராய் என்றும் குறிப்பிடுகிறார். இறுதியில் அலையின் காதல் கடலுக்குள் மூழ்கி விடுவதாகவும், தன் காதல் கனவாய் கலைந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

சுனாமி என்ற கருவை வைத்து ஒரு புத்தகத்தையே போட்டுவிடும் திறமை வாய்ந்த நானாட்டான் ஜெகன், சமூகத்தில் மிகைந்து கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் பல கவிதைத்தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - சுனாமியின் சுவடுகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - எஸ். ஜெகன்
வெளியீடு - கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம்
தொலைபேசி - 077 8062696
விலை - 150/=



மேலுள்ள கவிதைத்தொகுதியின் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14476%3A2011-05-09-04-36-33&catid=4%3Areviews&Itemid=267

Thursday, May 5, 2011

07. 'விழி தீண்டும் விரல்கள்' - கவிதைத் தொகுதி

'விழி தீண்டும் விரல்கள்' கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடிக்கிறார் இளம் பட்டதாரி ஆசிரியரான கவிஞர் அமல்ராஜ். கவிதைத் தொகுதியின் தலைப்புக்கு மிகப் பொருத்தமான அட்டைப் படத்தோடு தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக விழி தீண்டும் விரல்கள் என்ற கவிதைத் தொகுதியை பேசாலை அமல்ராஜ் வெளியிட்டிருக்கிறார். இளம் படைப்பாளிகளான விக்கிரம் தீபநாதன், மன்னார் அமுதன், நானாட்டான் ஜெகன், தமிழ்நேசன் அடிகளார், எஸ். ஏ. உதயன் போன்றோர்கள் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் கவிஞர் அமல்ராஜூம் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை வெளியீடாக, 74 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 28 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


பேசாலை ஊர்க்காரி, தூரத்து வெளிச்சம், நம்பிக்கை, ஈ.வே.ரா. ராமசாமி, நீ பயணித்த சாலைகளில்..., பூமிப் பெண்ணே, அப்பா, கனி - மாங்கனி, கருவாடு, முத்துக்குமார், சிகரெட், குடை, வானத்துச் சுவருக்கு, செருப்பு, மை, கரைவலை, தமிழன், இ(ப்) போ(தே) ச(சா) என, மன்னார் மானிடரே, போர்வை, வாக்குறுதி, பொலித்தீன் பை, தமிழ் இருண்ட நாடு, சுருக்கு வலைக்கு போற மச்சான், சாதி, ஏதிலியர்கள், கற்பகத்தரு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'மன்னார் பிரதேசத்தைப் பொறுத்தவரை அதுவொரு கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசம். கடந்த காலத்தில் நவீன கலை இலக்கியம் வழியாகக் கலை இலக்கியப் பணிகள் செய்வதில் பின் நிற்காத ஒரு பிரதேசம். அந்த வரிசையில் விழி தீண்டும் விரல்கள் எனும் இத்தொகுப்பின் மூலம் அமல்ராஜ் இணைகிறார். இன்றைய தமிழ்க் கவிதை வளர்ச்சிப் போக்கில் புதிய தலைமுறையினர் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இப்பங்களிப்பின் ஊடாகத் தமிழ்க் கவிதை செழுமை அடைந்திருப்பது இன்னும் சிலரால் ஒத்துக்கொள்ள முடியாத உண்மையாகவே இருக்கிறது. இச்செழுமைக்கு வெறுமனே அவர்கள் புதிய தலை முறையினராக இருப்பது மட்டுமே காரணம் அல்ல. மாறாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகமும், அது கொண்டு வந்து சேர்த்த அனுபவங்களும் காரணங்களாகின்றன. ஓர் இலக்கிய உருவத்தின் செழுமை என்பது வெறுமனே அதன் உருவச் செழுமையில் மட்டுமே தங்கி நிற்பதில்லை. அதனோடு அவ்விலக்கிய உருவத்தினூடாக பேசப்படும் விடயமும் பாரிய பங்காற்றுகிறது என்பது நாம் அறிந்த உண்மை. ... மன்னார் பிரதேசத்தைச் சார்ந்த சமீப கால கவிஞர்கள் கவனம் செழுத்தாத, ஒரு சில புதிய விடயங்களைப் பற்றி அமல்ராஜ் பேசியிருக்கிறார் என்ற வகையில் இத் தொகுப்பு நமது கவனத்தை ஈர்க்கிறது' என்று மேமன் கவி அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் மதிப்பீட்டுரை வழங்கியிருக்கும் எஸ்.டேவிட் அவர்கள் '...இக்கவிதை நூலில் உள்ள கவிதைகளின் பரிமாண வீச்சுக்களை மதிப்பீடு செய்ய உள் நுழைந்த எனக்கு கவிதைக்கு சொந்தக்காரரான அமல்ராஜின் சிவந்த சிந்தனைகள் கனிந்த உண்மையான அறிவுத்தளத்தை இனங்கான முடிந்தது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் அமல்ராஜின் கவிதைகளில் அமல்ராஜ் என்ற மனிதனின் மனிதத்துவப் பண்புகள் பிரதிபலிப்பதை தரிசிக்க முடிந்துள்ளது' என்கிறார்.

'... நான் ஆசிரியனாக இருந்த போதும் கவிதைத் துறைக்குள் நானொரு மாணவன் போல இருக்கின்றேன். கல்லூரிக் காலங்களில் தமிழ் நாட்டில் கல்கி, நந்தன் போன்ற இதல்களில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். கல்லூரி விழாக்களில் கவிதைகளை படைத்திருக்கிறேன். ஆனால் எமது நாட்டில் கவிதை எழுத முனைந்தபோதெல்லாம் அதற்குரிய சூழல் அமையவில்லை. எம்மினத்தின் துயரங்களை பக்கம் பக்கமாக எழுத முடியும். ஆண்டாண்டு காலமாக நாம் பட்ட அவலங்கள், துன்பங்கள், ஆதங்கங்கள் எல்லாவற்றையும் கவிதைகளாகக் கொட்டியிருக்க முடியும். ஆனால் தக்க சூழல் அதற்குக் களம் அமைத்துத் தரவில்லை. ... கவிதைத் துறை என்பது பெருங்கடல். அதில் இது ஒரு துளி. என் கண்கள் கண்ட விடயங்களை விரல்கள் தீண்டியிருக்கின்றன. அந்த வகையில் இப்படைப்பு என் உன்னம் சார்ந்த, நான் நாடுகின்ற இடது சாரித்துவக் கொள்கையினை ஓரளவு தொட்டுச் செல்வதை இங்கே நீங்கள் காணலாம். இக் கவிதைத் தொகுப்பு மூலம் என் இனிய தாய் மொழி சிறப்படையுமாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். இறுதியாக வீழ்வது நாமாக இருந்தாலும் எழுவது தமிழாக இருக்கட்டும் என்ற அசையாத நம்பிக்கையோடு இந்தக் கவிதையைத் தொகுத்துப் படைக்கின்றேன்' என்று தனது ஆதங்கத்தையும் அதே நேரம் நம்பிக்கையையும் அமல்ராஜ் தனதுரையில் முன்வைக்கிறார்.

இத்தொகுதியில் காதல், தனி மனித உணர்வுகள், சமூகம், அழகியல், போர்ச்சூழல், மீனவச் சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

பேசாலை ஊர்க்காரி, சுருக்கு வலைக்குப் போற மச்சான் போன்ற கவிதைகள் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற சாயலில் மிகவும் ரசனையுள்ளதாக அமைந்திருக்கின்றன.

பேசாலை ஊர்க்காரி என்ற கவிதையில் (பக்கம் 01) பேசாலை ஊர்க்காரி பேசாமப் போறியே... காளை மனசில திருக்கை வாலால குத்தியவளே...! வாவல் மீனப் போல வளவளப்பு உடம்புக்காரி சுறா மீனப் போல சூப்பரடி உன்னழகு...! நீ வளைஞ்சு நெளிஞ்சு நடக்கையில வாளை போல வளவளப்பு நீ பார்த்த பார்வை சுள்ளென்று சுங்கானாய் குத்துதடி...! என்று மீனவச் சூழலில் உள்ள விடயங்களை ஒப்பிட்டு அவற்றைப் படிமங்களாக, உருவகங்களாகப் பயன்படுத்தி மிகவும் அழகாக இக் கவிதையை முன்வைத்துள்ளார்.

இதே போன்ற சாயலில் அமைந்த கவிதை தான் சுருக்கு வலைக்குப் போற மச்சான் (பக்கம் 61) என்ற கவிதையும். சுருக்கு வலைக்குப் போற மச்சான் - வாக்கு சறுக்காம வந்திடுங்க அலவாக்கரை போல ஆறாம நானிருக்கேன்.. அந்தியில வந்திடுங்க - நேரம் பிந்திடாம வந்திடுங்க மடி நிறைய மீனைப் பிடிச்சிடுவ - இந்த மச்சா கழுத்த - எப்ப நிறைச்சிடுவ?

காதலை பாடாத கவிஞர்களில்லை என்ற கருத்து மாறி தற்போதுகளில் யுத்தத்தைப் பற்றிப் பேசாத கவிஞர்கள் நம் நாட்டில் இல்லை என்று கூறுமளவுக்கு யுத்தம் தனது அகோரத்தைக் காட்டிச் சென்றுவிட்டது. இருந்தாலும்; அதனால் ஏற்பட்ட வடுக்களும், காயங்களும் இன்னும் மாறாமல் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கின்றது. அமல்ராஜூம் நம்பிக்கை என்ற கவிதையில் யுத்தம் பற்றி பேசியிருக்கிறார். ஆமைகள் அசுரவேகத்தில் ஓடினாலும், குயில்கள் கூடு கட்டினாலுங்கூட தமிழனின் தலையெழுத்து மாறுமா என்ற சந்தேகக் கணைகளை வாசகர்களின் நெஞ்சிலும் ஏவி விட்டிருக்கிறார். அந்த கவிதையின் இடையில் வரும் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. (பக்கம் 10)

..குண்டு வீச்சில்
குழந்தையும் குடிசையும்
சிதறிக்கிடந்த கோரமது
மறைந்துவிடும் என்பதில்
நம்பிக்கையில்லை...!

இறைவன் நமக்கு அளித்திருக்கும் கொடைகளை எண்ணிப்பார்த்து நாம் என்றாவது நன்றி செலுத்தியிருக்கிறோமா என்பது கேள்விக்குறியான விடயம். அது ஒரு புறமிருக்க இயற்கையின் நியதிகளை சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தவிர யாராலும் அசைக்க முடியாது என்பது உண்மை நிலையாகும். உதாரணத்திற்கு யாரும் நினைத்து மழை பெய்வதில்லை. யாரும் சொல்லி சூரியன் உதிப்பதில்லை. இந்த வரிசையில் யாருக்குமே தோன்றாத சின்ன விடயமொன்றை கருவாடு (பக்கம் 30) என்ற தலைப்பில் கூறியிருக்கிறார் கவிஞர். அதாவது உப்பு கரிக்கின்ற கடல் நீரில் பிறந்தாலும் மீன் உப்பாக பிறப்பதில்லை. அதை எடுத்து உப்பிட்டு காயவைத்தால் தான் அது உப்புக்கருவாடு எனப்படுகின்றது. இந்த விடயத்தை நறுக்கென்று சொல்லியிருக்கிறார் இப்படி.


உப்பான தண்ணீரில்
உப்பில்லா மீன்பிடிச்சு
உப்பிட்டு உலரவிட்டால்
கருவாடு

காலுக்கு போடுகின்ற செருப்பை அதிக விலைகொடுத்து வாங்குவோரும் எம்மத்தியில் இருக்கின்றனர். அதுபோல செருப்பே இல்லாமல் ஊர்சுற்றி வயிற்றுப் பசிபோக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் விலைகூடிய செருப்புக்கள் காலைவாரிவிடும் சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாததாகின்றது. செருப்பு என்பது எமது கால்களுக்குரிய கவசமாக இருந்தாலும் நாம் அன்றாடம் பாவிக்கையில் அது படும் வேதனை குறைவு என்பதை பின்வரும் கவிதை வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. அதாவது தினந்தோறும் பாவிப்பதைவிட எங்காவது கல்யாண வீடுகளில் செருப்புகளின் பரிதாபகரமான நிலையைப்பற்றி யோசித்திருக்கிறார் கவிஞர் அமல்ராஜ். கவிதை வரிகள் இவைதான். (பக்கம் 40)

காலுக்குக் கவசம்
கல்யாண கச்சேரிகளிலும்
கருமாதி வீடுகளிலும்
நீ துவம்சம்

விஞ்ஞான வளர்ச்சி பாரிய அளவில் விருத்தியடைந்தாலும் நம்மவர்கள் அதில் எதை சரியாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது சிந்திக்கத்தக்க விடயம். கணனிசார் விடயங்களில் அதிக சிரத்தை எடுத்தக்கொள்ளும் இவர்கள் சமுதாய அக்கறையில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்பது கண்கூடு. இன்று வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்களிலும் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டிருக்கின்றமை நாம் அறிந்ததே. அதற்கு மாற்றீடாக கடதாசிப்பைகளை பாவிக்கலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. எத்தனைக் காலங்கள் சென்றாலும் உக்கிவிடாத ஒரு பொருளாக பொலித்தீன் காணப்படுவதாலேயே இவ்வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பொலித்தீன் பைகளை உட்கொண்டு இறந்துபோன விலங்கினங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருந்தாலும் கூட, அத்தகைய சமூகத்துரோகம் செய்யும் பொலித்துPன் பாவனைகளில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பது கசப்பான உண்மை. அதை எண்ணி ஆவேசத்துடன் பொலித்தீன் பை என்ற கவிதையை அமல்ராஜ் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ.. (பக்கம் 59)

பாலான பாரை - நீ
சேறாக்க வந்தாயோ?
பூக்கடையான
பூமியை வேக்காடாக்கி
வேதனை தர வந்தாயோ?

இவ்வாறு பல கோணங்களில் இருந்தும் சமுதாய அக்கறைப்பற்றியும், காதல், போர்ச்சூழல் மற்றும் இன்னோரன்ன விடயங்களைப் பற்றியும் சிந்தித்து கவிதை யாத்திருக்கும் கவிஞர் அமல்ராஜ் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு தமிழ்ப்பணி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விழி தீண்டும் விரல்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - அமல்ராஜ்
முகவரி - 08 வட்டாரம், பேசாலை, மன்னார்.
தொலைபேசி - 077 5382544
வெளியீடு - புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை
விலை - 100/=




மேலுள்ள கவிதைத்தொகுதியின் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14432%3A2011-05-04-04-36-08&catid=4%3Areviews&Itemid=267