Monday, April 22, 2024

152. கலாபூஷணம் மானா மக்கீனின் "ஒரு முண்டாசு கவிஞரின் முஸ்லிம் நேசம்" நூல் பற்றிய சிறு கண்ணோட்டம்

 கலாபூஷணம் மானா மக்கீனின்

"ஒரு முண்டாசு கவிஞரின் முஸ்லிம் நேசம்" 

நூல் பற்றிய சிறு கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

எழுத்துத் துறையில் பல தசாப்தங்களாக இலக்கியப் பணி புரிந்து வரும் மானா மக்கீன் அவர்கள் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒருவர்.  இத்துறையில் இவர் 40 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு  இலக்கியத் துறைக்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

மகாகவி பாரதியார் மீது அதிக ஈடுபாடுடைய மானா மக்கீன் அவர்கள் "ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்" என்ற பெயரில் மகாகவி பாரதியாரின் முஸ்லிம் நேசம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 132  பக்கங்களை உள்ளடக்கியதாக மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள  இந்த நூலில் உள்ள அருமையான பல தகவல்களில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கு முன்வைக்கிறேன்.

மானா மக்கீன் அவர்கள் தனது  இந்த நூலுக்கான உள்ளடக்கங்களை - ஆரம்பிக்கிறேன், தொடர்கிறேன்,  தொட்டுத் தருகிறேன், ஆய்ந்து பார்க்கிறேன், இந்தியாவைத் தொடுகிறேன், இவர் பார்வையில் இஸ்லாம், பாடல்களில் இஸ்லாமியத் தாக்கம், விஜயாவைக் கண்டுபிடித்த வெங்கடாசலபதி, தமிழ் இதழியலில் புதுசு - புரட்சி, நிறுத்துகிறேன் - நெருடல்களை நேர் செய்து, விடைபெறும் வேளை, உசாத்துணை நூல்கள் ஆகிய 12 தலைப்புகளில் மிகவும் அழகாக முன்வைக்கின்றார்.

முண்டாசுக் கவிஞர், இளசை சுப்பிரமணியன் என்று சொன்னால் புரியாதவர்களுக்குக்கூட மகாகவி பாரதியார் என்றால் சட்டென்று புரிந்துவிடும். மகாகவி பாரதியார் அவர்களை பலரும் பல்வேறு வகையாக விமர்சித்தாலும்கூட அவருடைய மனிதப் பண்பாட்டுடன் கூடிய எழுத்துக்களை யாரும் மறுதலிக்க முடியாது என்று முனைவர் பா. இறையரசன் (தஞ்சாவூர்) தமது 'இதழாளர் பாரதி' (1995 வெளியீடு) என்ற  நூலில் 197 - 198 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் ஓய்வுறக்கத்திலிருக்கும் பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் (தொண்டி) மற்றும் பேராசிரியர், முனைவர் மு. சாயபு மரக்காயர் (காரைக்கால்) போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இந்த முண்டாசுக் கவிஞருக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள் என்ற தகவலையும் முன்வைக்கின்றார் நூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள்.

1983 ஆம் ஆண்டுகளில் 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற பெயரில் ஒரு சிறு நூல் வெளிவந்ததாக  அறிய முடிகின்றது. இந்த நூலுக்கு மர்ஹும் அப்துர் ரஹீம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலாசிரியர் மு.சாயபு மரக்காயர் பொதுவாக இஸ்லாமிய தத்துவங்கள் மீதும், திருநபியவர்கள் மீதும் பாரதியார் பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை பல சான்றுகளுடன் அந்த நூலில் முன்வைத்துள்ளார். 

அத்துடன் 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி எழுதி இருக்கின்றாரா? என்று தனது நண்பர்கள் மிகுந்த வியப்போடு கேட்டதாகக் குறிப்பிட்டு, கதை, கட்டுரை, கவிதை போன்ற எல்லாத் துறைகளிலும் பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி பேசியிருப்பதாக தான் சுட்டிக் காட்டியதாகக் கூறுகின்றார்.

பாரதியின் இஸ்லாமிய படைப்புகளைப் படித்த போதே உண்மையில் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்புக் கூடியது என்று குறிப்பிட்டு, சாதி மதங்களுக்கு அப்பால் பாரதியின் மனித நேயமே இந்த 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற நூலை எழுதுமாறு தன்னைத் தூண்டியதாக மு.சாயபு மரக்காயர் அவர்கள் தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுகின்றார்.

மகாகவி பாரதியார் இந்து சமயத்தில் அழுத்தமான பிடிப்பும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர். ஆயினும் பிற சமய தெய்வங்களை வெறுத்தவர் அல்லர். ஏக இறைவனாகிய அல்லாஹ்வையும் இயேசு கிறிஸ்துவையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். பாரதியாரின் சமயப் பொதுமைக்கும், சமரச நோக்கிற்கும் அவருடைய பல பாடல்கள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறான பின்னணியுடைய ஒரு  மகாகவி பாரதியாரைத் தோன்றாத் துணையாக வைத்துக் கொண்டு அவர் மறைந்து கால் நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் முண்டாசுக் கவிஞருக்கு நானும் ஒரு முண்டாசு கட்ட விழைகின்றேன் என்று மானா மக்கீன் அவர்கள் குறிப்பிடுவது போற்றத்தக்கது. அந்தவகையிலேயே முஸ்லிம் அபிமானிகளுக்குத் தெரியாத மகாகவியின் முஸ்லிம் நேசம் பற்றிய பல தகவல்களைத் திரட்டி தனது பதிவை முன்வைக்கின்றார் நூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள். முண்டாசுக் கவிஞரின் முழு வாழ்க்கையையும் இங்கு நோக்காமல் தனது இதழியல் வாழ்க்கை மற்றும் மேடைகளில் முஸ்லிம் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதே இங்கு எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

தனது இதழியல் வாழ்க்கையில் பின்வரும் இதழ்களின் மூலம் பாரதியார் அவர்கள் தனது இதழியல் ஆளுமையைப் பதிவு செய்துள்ளார்.


சுதேசமித்திரன் (சென்னை) - 1904, ஆசிரியர்

சக்கரவர்த்தினி (சென்னை) - 1905, ஆசிரியர்

இந்தியா (சென்னை) - 1906, ஆசிரியர்

பாலபாரதா (சென்னை) - 1906, ஆசிரியர்

இந்தியா (புதுவை) - 1908, ஆசிரியர்

விஜயா (புதுவை) - 1909, ஆசிரியர்

கர்மயோகி (புதுவை) - 1910, ஆசிரியர்

தர்மம் (புதுவை) - 1910, ஆசிரியர்

சூரியோதயம் (புதுவை) - 1910, ஆசிரியர்

பாலபாரதா (புதுவை) - 1910, ஆசிரியர்

சுதேசமித்திரன் (சென்னை) - 1916, துணை ஆசிரியர்


சுதேசமித்திரனில் பாரதியார் செய்துள்ள பங்களிப்பை முதன்மையானதாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 1904 இல் ஆரம்பித்த பாரதியாரின் இதழியல் பணி 1921 இல் முற்றுப் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்திய அரசியலில் இந்து - முஸ்லிம் நிலைமை பற்றியும், பின்னர் இஸ்லாம் பற்றியும், இறைவன் (அல்லாஹ்) பற்றியும், இறைத் தூதர் (நபிகள் நாயகம்) குறித்தும் அவர்கள் தம் அடியார்கள் (மக்கள்) சம்பந்தமாகவும் வழங்கியுள்ள விடயங்களுக்காக ஒரு பட்டியலைக் குறிப்பிட்டு தனது ஆய்வை முன்வைக்கிறார் நூலாசிரியர்.


இதில் "நமது மகமதிய சகோதரர்கள், வேலூர் மகமதிய கான்ஃபரன்ஸ், ஹிந்து - மகமதிய ஒற்றுமை, இந்து - மகமதியர், இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, அல்லா.. அல்லா.." போன்ற தலைப்பில் அமைந்த பாரதியாரின் கட்டுரை, கதை, கவிதை, பாடல், சொற்பொழிவு ஆகியவற்றின் சாராம்சம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

சுதேசமித்திரனில் (1906 ஆகஸ்ட் 11) இடம் பிடித்த, "நீரோ சக்கரவர்த்திக் கல்லறை மீது ஓர் புஷ்பம்" என்ற தலைப்பில் அமைந்த பின்வரும் வரிகள் இங்கு கவனிக்கத்தக்கது.  "இந்தியா" ஹிந்துவுக்கு மட்டிலும் சொந்தமில்லை. மகமதியனுக்கும் சொந்தமே. அநாகரீக இடைக் காலங்களில் நமது மூதாதையர்கள் சண்டையிட்டுக் கொண்டதாக அன்னிய தேசத்துப் பொய் சரித்திரக்காரர் கூறும் கதைகளை நாம் கருத வேண்டியதில்லை. பொது மாதாவாகிய பாரத தேவியின் பொது நன்மையை கவனிக்க வேண்டுமேயல்லாமல் ஜாதி, மத, குல, பேதங்களைப் பாராட்டி தேசத்தை மறக்கும் மனிதனை பாரத தேவி சர்வ சண்டாளராகவே கருதுவாள்.

முண்டாசுக் கவிஞரின் "இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை" என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவின் சாராம்சம் இந்த நூலின் 20 ஆம் பக்கம் 30 ஆம் பக்கம் வரை இடம் பிடித்துள்ளது. அந்த சொற்பொழிவில் ஒப்புவிக்கப்பட்ட கருத்துக்களை அவதானிக்கும் போது முண்டாசுக் கவிஞருக்கு முகமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது மிகுந்த பற்றிருந்ததை அறிய முடிகிறது. இதன் முழுமையான சொற்பொழிவு இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று குறிப்பிடுக்கின்றார் நம் நூலாசிரியர்.

முண்டாசுக் கவிஞர் பாரதியார் தமது துணைவியாரின் ஊராகிய கடையத்தில் தங்கிய காலத்தில் நெல்லை மாவட்டத்து பொட்டல் புதூரிலே முஸ்லிம்களின் ஏக இறைவன் அல்லாஹ்வைப் பற்றிய அருமையான பாடல் ஒன்றைப் பாடிய பின்னர் நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம் அன்றைய சுதேசமித்திரனில் இடம்பெற்றிருந்தன.

பிற்காலத்தில் பலராலும் தொகுக்கப்பட்ட பாரதியாரின் கவிதை நூல்களில் மூன்று சரணங்களைக் கொண்ட இந்தப் பாடல் முழுமையாக இடம்பெறவில்லை. 1920.06.24 இல் வெளிவந்த சுதேசமித்திரன் இதழில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் 'கதாரத்னாகரம்' 1920 ஜுலை இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மூன்று சரணங்களைக் கொண்ட பாரதியாரின் "அல்லா" பாடலை வாசகர்களின் இரசனைக்காக இங்கு பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.


(பல்லவி)

அல்லா.. அல்லா.. அல்லா!


சரணம் 01

பல்லாயிரம் பல்லாயிரங் கோடி கோடி யண்டங்கள் 

எல்லாத் திசையினுமோ ரெல்லையில்லா வெளிவானிலே

நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன் 

சொல்லாலு மனத்தாலுந் தொடவொணாத பெருஞ்சோதி 

(அல்லா)


சரணம் 02

கல்லாதவ ராயினு முண்மை சொல்லாதவ ராயினும் 

பொல்லாதவ ராயினுந் தவமில்லாதவ ராயினும் 

நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும் 

எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங்கெடச் செய்பவன்

(அல்லா)


சரணம் 03

ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர்பிதா 

கோழைகட்கும் வீரருக்குங் குறைதவிர்த்திடும் ஓர்குரு 

ஊழி, யூழி, அமரராயிவ் வுலகின் மீதிலின்புற்றே 

வாழ்குவீர் பயத்தை நீக்கி வாழ்த்துவீர் அவன் பெயர் 

(அல்லா)


- சுதேசமித்திரன் 1920.06.24

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சரணங்களிலும் முதலாவது சரணமானது முண்டாசுக் கவிஞருக்கு இருந்த அல்குர்ஆன் பற்றிய அறிவை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. அதாவது அல்குர்ஆனில்  சூரா அல்அன்பியாவில் (நபிமார்கள்)  உள்ள 33 ஆவது வசனம் பின்வரும் கருத்தைக் கூறி நிற்கின்றது.

"இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன" (அல்குர்ஆன் - 21 : 33)

மேலுள்ள அல்குர்ஆன் வசனக் கருத்தையே பாரதியாரின் அல்லா என்ற பாடலில் உள்ள முதலாவது சரணம் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இந்தப் பாடல் மூலம் பாரதியார் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழக முஸ்லிம் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.

நூலின் 39 முதல் 51 ஆம் வரையான பக்கங்களை பாரதியார் அவர்களின் முஸ்லிம் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட "ரயில்வே ஸ்தானம்" என்ற சிறுகதை அலங்கரித்துள்ளது. இந்தச் சிறுகதையானது 1920.05.22 ஆம் திகதியில் பிரசுரமான சுதேசமித்திரன் இதழில் பிரசுரம் கண்டுள்ளது. 

இந்தக் கதையில் கதாநாயகன் ஏக காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்வதனால் வரும் பிரச்சினைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் முரணான ஒரு விடயமாகும். அதாவது சட்டப்படியாக மணம் புரிந்த மனைவி உயிருடன் இருக்கையில் அவளது சகோதரிகளை ஏக காலத்தில் திருமணம் செய்வது இஸ்லாத்தில் ஹராமான (கூடாத) விடயமாகும். இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலம் பின்னர் அதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்ட பாரதியார்,  தான் எழுதிய கதையில் கருத்துப் பிழையொன்று இருப்பதாக சுதேசமித்திரனில் குறிப்பொன்றை எழுதி, ஒரே குடும்பத்துப் பெண்கள் என்ற விபரத்தை மாற்றி தன் இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைத் திருமணம் செய்ததாகத் திருத்தி வாசிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் பாரத நாட்டில் ஹிந்துக்களும் மகமதியர்களும்  பகைமைகளற்று சினேகபூர்வமாக சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் பாரதியார் தனது எழுத்துக்களின் மூலம் மிகவும் உறுதியாக முன்வைத்தார். அத்துடன் மகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்கள் இல்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவுக்கு மகமதியர்களுக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். "இந்தியா" இதழில் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி மேலும் வலியுறுத்த விரும்பிய பாரதியார், தமிழ் ஆண்டு - மாதம் - நாள் ஆகியவற்றுடன் முஸ்லிம் ஆண்டு - மாதம் - நாள் முதலியவற்றையும் முதன் முதலாக ஷஷஇந்தியா|| இதழில் பொறித்து இதழியல் துறையில் அதிசயம் புரிந்தார். எனவே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பிடித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பெரும் விருப்புடையவராகவே முண்டாசுக் கவிஞர் திகழ்ந்துள்ளார்.

இன்றைய பரந்த பாரதத்திலும் இலங்கையிலும் வாழுகின்ற இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ கரம் கோர்த்து விடுவார்களேயானால் அதுவே நம் நூலாசிரியரின்  பேனாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டு இந்த நூலை நிறைவு செய்கின்றார் மானா மக்கீன் அவர்கள்.

இதுவரை நான் வாசித்த இலக்கிய நூல்கள் பலவற்றில் மானா மக்கீன் அவர்களின் "ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்" என்ற இந்த நூல் என்னை பிரமிக்கச் செய்த ஒரு நூல் என்றுதான் குறிப்பிட வேண்டும். இவ்வகையான நூல்கள் இக்காலத்தில் இன ஒற்றுமையை வலுப்படுத்தத் தேவையான ஒரு நூலாகவே அமைந்துள்ளது.  மறுபதிப்புச்  செய்ய வேண்டிய தேவையையும் இந்த நூலுக்கு இருக்கிறது. நூலாசிரியர் அதனையும் கருத்திற்கொள்வார் என்று நினைக்கின்றேன். நூலாசிரியர் நீடூழி வாழ்ந்து, இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையுடன், எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்!!!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


151. தர்காநகர் மர்ஹுமா ஷஹ்னா ஸப்வானின் "எரியும் நட்சத்திரம்" - கவிதை நூல் விமர்சனம்

 தர்காநகர் மர்ஹுமா ஷஹ்னா ஸப்வானின் 

"எரியும் நட்சத்திரம்" - கவிதை நூல் விமர்சனம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத் (பன்னூலாசிரியர்)


சங்க காலத்தில் தமிழ் இலக்கிய மரபானது செய்யுள் இலக்கியமாகப் படைக்கப்பட்டு வந்துள்ளன. அக்கால புலவர்களின் கவிதைகள் கருத்துச் செறிவும் சொற் செறிவும் மிக்கனவாகக் காணப்பட்டன. அதன்பின்னரான காலப்பகுதிகளில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ கவிதை என படித்தரங்கள் மாற்றமடைந்து வந்துள்ளன. 

செய்யுள் இலக்கியங்கள் கற்றோருக்கு மாத்திரமே புரிந்த காலம் மாறி பாரதியாரின் காலத்தில் எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகள், பெரும்பாலான மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்தில் பிரதேச மொழி நடையில் எழுதப்படும் படைப்புகள், வாசிப்பின் மீதுள்ள ஆர்வத்தைத் தூண்டியது எனலாம். 

தென் மாகாணத்தைப் பொறுத்தளவில் எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் பாரியளவு வித்தியாசங்கள் காணப்படுகின்றது. சில சமயங்களில் பேச்சினிடையே சிங்களச் சொற்களும் ஊடுருவிக் காணப்படுகிறது. படைப்பாக்கத்தின் போது பிரதேச மொழி வழக்கை வாசகர்கள் விரும்புவதால் படைப்பாளர்கள் அதில் அதிக கவனம் செலுத்தலாயினர். அதேபோல தென்னிலங்கைப் படைப்பாளிகள் கவிதைகள் மீது அதிக முனைப்புக்காட்டி வந்துள்ளனர். இதில் ஆன்மீகம் சார்ந்த அதாவது பக்தி இலக்கியங்களே மிகவும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டன.

தென்னிலங்கை என்ற வரையறைக்குள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களே உள்ளடங்குகிறது. எனினும் மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் 'ஈழத்து தமிழ் இலக்கியத் தடம்|| என்ற தனது நூலில் தென்னிலங்கை என்பது இலக்கிய ரீதியாக பாணந்துறை முதல் திக்குவல்லை வரையான பிரதேசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையின் முன்னோடிக் கவிஞர்கள் என்று நோக்கும் போது அதில் மிக முக்கியமான கவிஞர்களாக கவிஞர் ஏ. இக்பால் மற்றும் திக்குவல்லைக் கமால் ஆகியோர்களைப் பிரதானமாகக் குறிப்பிடலாம்.

ஆக்க இலக்கியங்களைப் படைப்பதிலும் அதனை இரசிப்பதிலும் மிகவும் சுருங்கிப்போன வாசிப்பு வட்டத்தைக் கொண்டுள்ள இன்றைய காலகட்டங்களில் அதிலும் பல்வேறு வகையான வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் பெண்களின் ஈடுபாடு இத்துறையில் மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் இலக்கியத் துறையில் சிறப்பாகத் தடம் பதித்து தனக்கென்று ஒரு தனியான இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்புகள் தேவைப்படுகின்றது. இத்துறையில் தொடர்ந்து இயங்குவதாலேயே நிலைத்து நிற்க முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இன்று வெளியிடப்படுகின்ற  'எரியும் நட்சத்திரம்'  கவிதை நூலாசிரியர் தர்காநகர் ஷஹ்னா ஸப்வானும் தென்னிலங்கையைச் சேர்ந்தவராகின்றார். இவர் சிறுவயதிலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை அவருடைய  'எரியும் நட்சத்திரம்'  கவிதைத் தொகுதி மூலம் தெரிந்து கொண்டேன். பாடசாலைக் காலத்திலிருந்தும் அதற்குப் பின்னரான காலப் பகுதியிலிருந்தும் இவருக்கு கவிதைத் துறை மீது ஒரு அலாதியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அத்துடன் இத்துறையில் தனது பெயரையும் பதிக்க வேண்டும் என்பதுவும் ஷஹ்னா ஸப்வானின் ஆசையாக இருந்திருக்கிறது. இவருடைய இந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே  'எரியும் நட்சத்திரம்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி 113 பக்கங்களை உள்ளடக்கியதாக இன்று வெளிவருகிறது.

இந்தப் பெண் கவிஞர் எங்கள் எல்லோரையும் விட்டு மறைந்துவிட்டார். இனி எங்களுக்கென்ன என்று நினைக்காமல் இவருடைய கவிதைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தெடுத்து, இவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் வகையில் 'இளம் தாரகையின் தூரிகை' என்ற குழும உறுப்பினர்களான இவருடைய நண்பர் குழாம் இந்தக் கவிதை நூலை வெளியிட்டு வைப்பது பெரும் மகிழ்வுக்குரியது, பாராட்டுக்குரியது. இந்தப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த  களுஃ ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபரான, நூலாசிரியரின் தந்தை ஏ.எச்.எம். ஸப்வான் அவர்களும் பாராட்டுக்குரியவர்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள வலம்புரி கவிதா வட்டத் தலைவர் கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் நூலாசிரியர் ஷஹ்னா ஸப்வான் பற்றிக் குறிப்பிடும் போது,

விடை கொடுத்துச் சிறகடித்தாள் ஷஹ்னா ஸப்வான்..

கவிதை நடைக்குள்ளே சிறைப்பிடித்துத் தொட்டாள் தொடுவான்..

என்று குறிப்பிட்டு நூலாசிரியரின் சில கவிதைகளை நயந்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். நஜ்முல் ஹுசைன் அவர்களின் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல எம்மை விட்டும் பிரிந்து சென்ற, அதுவும் இளமையில், அதுவும் திருமணம் முடித்து ஆறே மாதங்களில் இந்த உலகிற்கு விடை கொடுத்த இந்தப் பெண் கவிஞர் ஷஹ்னா ஸப்வான் அவர்களை நினைக்கும் போது உண்மையில் எனது மனதும் கனத்தே போகின்றது. மட்டுமல்லாமல் இந்தக் கவிதை நூலினூடாக கவிதை உலகில் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பதிவு செய்து ஷஹ்னா ஸப்வான் எனது விழிகளிலும் கண்ணீரைத் தேங்க வைத்துவிட்டார்.

அடுத்து தமிழ் நெஞ்சம் சஞ்சிகையாசிரியர் அமீனின் 'மனதினிலே நிலைத்திருப்பாய் நீண்டு' என்ற தலைப்பில் அமைந்த நீண்ட கவிதை வாழ்த்து இந்த நூலை அலங்கரிக்கின்றது. அந்தக் வாழ்த்துக் கவிதையின் சில பகுதிகள் இதோ:-

போட்ட விதை எல்லாம் புவியில் பரிணமித்து

பாட்டு மலராக பவனி வர - ஏட்டிலுள்ள

சங்க மொழி வாசமுன்னை சந்திக்கத் தேடியதே

எங்கு நீ சென்றாய் இயம்பு?


காயத்தைத் தந்து  கடந்தமையால் பாட்டாலுன்

நேயத்தைத் தந்து நிறைந்தமையால் - நீயளித்த

பங்கில் உனை வையும், பாராட்டும் சப்தத்தை

எங்கிருந்து கேட்பாய் இயம்பு?

என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு எம் மனதையும் கவலையில் ஆழ்த்துகின்றார் தமிழ்நெஞ்சம் அமீன் அவர்கள்.

தர்காநகர் களு/ அல் ஹம்றா மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம். நயீம் அவர்கள், அல் ஹம்றாவின் 'பழைய மாணவி' ஷஹ்னா ஸப்வான் என்று குறிப்பிட்டு தனது ஆசியுரையை வழங்கியுள்ளார். அதில் ஷஹ்னா ஸப்வான், கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் தனது ஓய்வு நேரத்தை முழுமையாகக் கவிதை புனைவதில் ஈடுபடுத்தி வந்தார். அவரது கவிதைகள் புதுமையும் ஆழமான கருத்துக்களையும் கொண்டு விளங்கின. இவர் தேசிய மட்டத்திலான கவிதைப் போட்டிகளில் பங்கு கொண்டு பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்றும் ஒரு வாழ்த்துரையை  நூலாசிரியருக்கு கற்பித்த ஆசிரியையான தர்காநகர் களு/ அல் ஹம்றா மகா வித்தியாலயத்தின் உப அதிபர் எம்.எம்.எஸ். பரூஸா வழங்கியுள்ளார். ஷஹ்னாவின் முதலாம், இரண்டாம் தர ஆசிரியையாய் கற்பித்த அவர் - அந்தப் பிஞ்சுப் பூவின் இதழ் விரல்களைப் பற்றிப் பிடித்து அச்சரம் பழக்கிய ஞாபகம் என்  உள்ளத்திலே இன்றும் ஆழப் பதிந்துள்ளது. என் உள்ளத்தோடு ஒன்றித்த ஷஹ்னாவின் கவிதைகளும் கவிதைகள் வெளிப்படுத்திய கருத்துகளும் உலகமே படித்து வியந்தபோது இரண்டாம் தாயாய் நானும் வியந்து  பெருமிதம் அடைந்தேன் என்கிறார்.

அடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் ஆசிரியையுமான ஸில்மியா ஹாதி அவர்களும் ஒரு வாழ்த்துரையை வழங்கியுள்ளார். அதில். 'இது இலை மறைத்த காயல்ல. மரம் மறைத்த வித்து. எழுந்து ஒவ்வொன்றாய் பளபளக்கும் பச்சைத் தளிர்களை உலகுக்கு நீட்டி, அழகு காட்டி, துளிர்விடும் போது தானா உலர்ந்து போக வேண்டும்? காலடியில் வைரங்கள் ஒளிர்ந்திருப்பது பூமியை மிதித்துச் செல்லும் எங்களுக்கு தெரியாமலே போயிற்றே' என்று ஆதங்கப்படுகின்றார்.

'எரியும் நட்சத்திரம்' கவிதைத் தொகுதியின் உள்ளடக்கமானது - எழுத்துலகம், மனதோடு கொஞ்சம், நேசம், குடும்பம் ஆகிய நான்கு உப தலைப்புக்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. நூலில் இடம்பிடித்துள்ள இவருடைய கவிதைத் தலைப்புகளைப் பொதுவாக நோக்கும் போது காலத்துக்குத் தேவையான, யதார்த்தமான பாடுபொருள்களைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு வகையான தலைப்புகளில் அமைந்துள்ளது. 

'எரியும் நட்சத்திரம்' ஷஹ்னா ஸப்வானின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். இந்த நூலிலுள்ள பல கவிதைகள் இது கன்னிக் கவிதைத் தொகுதி என்பதைப் பறை சாற்றி நின்றாலும்கூட சில கவிதைகள் கவிதைக்கேயுரிய இலக்கணங்களைப் பின்பற்றி கனதியான முறையில் சிறப்பாக அமைந்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். அகம் சார்ந்த மன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற கவிதைகளைத் தேடி வாசிப்போர் நிச்சயமாக தர்காநகர் ஷஹ்னா ஸப்வானின் கவிதைகளையும் வாசிக்க முடியும்.

இவர் சில கவிதைகளினூடாகத் தனது மனப்பாரங்களை மொழிபெயர்க்கிறார்.. தனது எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.. அத்துடன் சக மனிதர்கள் மூலமாக தனக்குக் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.. இயற்கை வனப்பையும் கவிதைக் கண்களால் பார்த்து இரசிக்கிறார்.. சிலவற்றில் வாழ்க்கைத் தத்துவங்களையும் முன்வைக்கிறார்.. மறுபக்கம் தனது தாயாருக்காக கண்ணீரும் வடிக்கின்றார்.. 

மொத்தத்தில் தமிழின் சிறப்பு, மானிட அவலம், நாட்டு நடப்பு, அனுபவப் பாடம், இயற்கையின் வனப்பு, போலி முகம், வாழ்வின் யதார்த்தம், ஆன்மீகம், துரோகம், நட்பின் தூய்மை, பெண்மையின் கண்ணியம், உணர்வுகளின் வெளிப்பாடு, தாய்ப் பாசம் போன்ற கருப்பொருட்கள் இவருடைய கவிதைவெளியை வியாபித்து நிற்கின்றன.

இனி இவருடைய கவிதை நூல்களில் விரிந்து கிடக்கும் கவிதைகள் பலவற்றில் சில கவிதைகளை எடுத்து நோக்குவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பக்கம் 01 இல் இடம்பிடித்துள்ள 'எழுதுகோல்' என்ற முதலாவது கவிதை ஒரு மனிதனின் சிந்தனை சக்தியை எழுத்து வடிவமாக மாற்றும் எழுதுகோலின் பங்களிப்பு பற்றி பேசி நிற்கின்றது. ஒரு கருவியாக எழுதுகோல் காணப்பட்டாலும் அதன் மைத்துளிகள் மனதின் பிரதிபலிப்பாக இருப்பதுவே நிதர்சனமாகின்றது.  


தலை குனிந்து எழுதும்

எழுதுகோலினால் தான்..

இங்கு பலரின் வாழ்க்கை  

தலை நிமிர்ந்து நிற்கின்றது..


சில நேரங்களில் அவரவர் வரிகள்

அவரவருக்கே ஆறுதலாகின்றன..

எழுத்தாளனின் எழுதுகோல் சிந்திய

எழுத்துக்கள் ஒரு பொழுதும் திகட்டாது..


கையெழுத்தை சீராக்கி

தலையெழுத்தை உயர்வாக்கி

மையெழுத்தை அழகாக்கும்

அகிலத்தையயே சிறப்பிக்கும்..


என்ற கவிஞரின் வரிகள் மூலம் 'எழுதுகோல்|| பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்கின்றார்.


அடுத்ததாக பக்கம் 7 இல் அமைந்துள்ள 'யாவும் எனக்கு கவிதை தான்' என்ற கவிதையினூடாக நமது கவிஞர் எல்லாவற்றையும் தனது கவிதைக் கண் கொண்டு பார்க்கின்றார்.


பாரதி தொட்டு அத்துனையுமே இங்கு எனக்குக் கவிதை தான்..

காற்று, மரங்கள், பூக்கள் இவையெல்லாம் எனக்குக் கவிதை தான்..

சுட்டெரிக்கும் சூரியனும் எனக்கு கவிதை தான்..

கலைந்து செல்லும் மேகங்களும் எனக்குக் கவிதை தான்..

இரவில் எரியும் விண்மீன்களும் எனக்குக் கவிதை தான்..

இரவை துவைக்கும் விடியலும் எனக்குக் கவிதை தான்..


என்று இவர் அனைத்தையும் தனது கவிதைக் கண் கொண்டே பார்க்கின்றார்.

அடுத்ததாக பக்கம் 28 இலுள்ள 'அடையாளங்கள்' என்ற கவிதை மிகவும் எளிமையான சொற்களால் பின்னிப் பிணையப்பட்டுள்ளது. பாமர மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வாழ்வியல் தத்துவங்களைப் பிரதிபலிப்பதாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.


வியர்வைத் துளிகள் உழைப்பிற்கான அடையாளங்கள்..

பசியும் தாகமும் கஷ்டத்தின் அடையாளங்கள்..

நண்பர்கள் நேசத்திற்கான அடையாளங்கள்..

காத்திருப்புகள் பொறுமையின் அடையாளங்கள்..


என்று குறிப்பிட்டு இறுதியாக முகத்தின் சுருக்கங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று  தனது கவிதையை நிறைவு செய்கின்றார்.

அடுத்ததாக பக்கம் 38 இல் அமைந்துள்ள 'முகமூடி உலகம்' என்ற கவிதையானது சிலர் அணிந்துள்ள முகமூடிகளைக் கழற்றுவதாகவே அமைந்துள்ளது. மேலும் சுயநலமிகளாக வாழ்கின்ற சிலரின் போலி முகங்களை  தோலுரித்துக் காட்டுவதாகவும் இக்கவிதை அமைந்துள்ளது. அத்துடன் மாய உலகின் அற்ப ஆசைகளில் மூழ்கி மனிதத் தன்மைய இழந்து வாழ்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாக இக்கவிதை அமைந்துள்ளது. கவிதையின் சில வரிகள் இதோ:-


உண்மையாக சிலரோடு உயிராகப் பழகினாலும்

மென்மையாய் சில நேரம் மெதுவாக அணுகினாலும்

தன்மையே இல்லாமல் தரமாக மதிப்பதில்லை..

வசந்தத்தின் வாசலில் வழிமூட முளிக்கின்றார்..

அசைந்திடும் தென்றலுக்கும் அணை போட முயல்கின்றார்..


அடுத்ததாக பக்கம் 44 இல் அமைந்துள்ள 'நேசம்' என்ற கவிதை யதார்த்த வாழ்வை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 


இருளை நேசி விடியல் தெரியும்..

தோல்வியை நேசி வெற்றி தெரியும்..

மக்களை நேசி மனிதாபிமானம் தெரியும்..

தாயை நேசி அன்பு தெரியும்..

அன்பை நேசி அடிமைத்தனம் தெரியும்..

தந்தையை நேசி உழைப்பு தெரியும்..

உழைப்பை நேசி உயர்வு தெரியும்..

உன்னையே நீ நேசி

உலகம் உனக்கு அழகாய் தெரியும்..


இக்கவிதையில் நேசத்தின் மூலம் நாம் அடையும் பிரதிபலன்கள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இனிமையான சொல்லாடல்களால் இக்கவிதை ஆக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. 

அடுத்து பக்கம் 55 இல் அமைந்துள்ள 'புன்னகை' என்ற கவிதை மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதாய் அமைந்துள்ளது. புன்னகைக்கக்கூட மறந்து போன அவசரமான ஒரு உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புன்னகை பற்றிய கவிதையின் சில வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது. 


மொழிகளால் நொறுக்கப்படாத பொதுமொழி புன்னகை..

வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய்மொழி புன்னகை..

உள்ளத்தின் விதைகளை உதட்டில் விரிக்கும் உன்னத மொழி புன்னகை..

பல் இல்லாக் குழந்தைக்கும் அழகு புன்னகை..

உதடுகளை விரியுங்கள்.. புன்னகை புரியுங்கள்..


இக் கவிதை புன்னகையின் பரிணாமங்களை எடுத்துச் சொல்வதாகவே அமைந்துள்ளது. புன்னகையே ஒரு மனிதனின் அழகுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. இறுக்கமான சூழ்நிலைகளை இலகுவாக்குகிறது. 

ஹிஜாப் எனது கண்ணியம், விடைபெறும் ரமழான், தியாகத் திருநாள், வருடத்திற்கொரு முறை பூக்கும் ரமழானே போன்ற ஆன்மீகம் சார்ந்த கவிதைகளையும் இந்த 'எரியும் நட்சத்திரம்' கவிதை நூலில் காணலாம்.

அடுத்து பக்கம் 69 இல் அமைந்துள்ள 'தியாகத் திருநாள்' என்ற கவிதை நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகத்தை நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது. 


தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் இப் பெருநாள்..

நம் தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்..

உலகெங்கும் ஒளியேற்றும் தியாகத் திருநாள்..

குர்பானி கொடுத்திடும் சங்கைமிகுத் திருநாளாம்..  

இப்ராஹிம் நபியின் மகத்தான தியாகத்தை

உலகெங்கும் நினைவூட்டும் பெருநாள் இதுவாம்..


அடுத்ததாக பக்கம் 75 இல் அமைந்துள்ள 'மழை நாள்' என்ற கவிதையானது மழையை இரசிக்கும் கவிஞரின் மனதைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. மழையை இரசிக்காத கவிதையுள்ளம் இருக்க முடியாது. மழை தரும் இன்பத்தையும், அழகியலையும் வார்த்தைக்குள் உள்ளடக்கும் திறமை கவிஞர்களுக்கே உரியது. 'மழை நாள்|| என்ற கவிதையின் சில வரிகள் இதோ:- 


மழை வரும் நேரம்

மனதில் இன்பம் ஊறும்

சாலை எங்கும் நீரும்

சாகசம் காட்டி ஓடும்..


மழையை இரசித்தே எனக்கும்

கவி கோர்க்கத் தோணும்..

நித்திரா தேவி என்னை அழைக்க

மை கக்கி, எழுத்துச் சிக்கி,

அடிக்கும் காற்றில்

என் வெள்ளைக் காகிதம்

சிறகு முளைத்துப் பறக்கும்..


அடுத்து பக்கம் 92 இல் உள்ள 'நம்பிக்கையுடன் இவள்' என்ற கவிதையில் உள்ள இரண்டு வரிகள் கவிஞர் என்னுடன் பேசுவதாகவே என் மனதுக்குத் தோன்றுகின்றது. அதாவது அந்தக் கவிதையில் வருகின்ற இரண்டு வரியான 'தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற வரி கருத்தொன்றைத் தொக்கி நிற்பதாக எனக்கு நினைக்கத் தோன்றுகின்றது. அதாவது ஷஷதயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எனது கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் சுதந்திரமாகச் சொல்லுங்கள். அது உங்கள்  சுதந்திரம்' என்று ஷஹ்னா ஸப்வான் எம் அனைவருக்கும் சொல்வதாகவே நினைக்கத் தோன்றுகின்றது.

இந்த நூலின் கடைசிப் பகுதியில் தனது தாயாருக்காகவும் 'தாய் மடியைத் தேடுகிறேன்||, 'நீ இல்லாத என் உலகம்', 'நான் தவிக்கின்றேன் தாயே' ஆகிய மூன்று கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.

பக்கம் 97 இல் அமைந்துள்ள 'நீ இல்லாத என் உலகம்' என்ற கவிதை என் மனதை மிகவும் பாதித்த ஒரு கவிதையாகவே இருக்கின்றது. அதற்குக் காரணம் எனது இருபது வயதுகளில் எனது தாயாரை இழந்த, அந்தத் துயரம் என் மனதை இன்றும் வதைத்துக் கொண்டே இருக்கின்றது. ஷஹ்னாவின் இந்தக் கவிதை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எனது தாயாரின் நினைவுகள் மற்றும் எனது தாயாரைப் பிரிந்த மனத் துயரங்களை மொழிபெயர்ப்பதாகவே அமைந்துள்ளது. இக்கவிதையின் சில வரிகளைப் பார்ப்போம்.


பாசமுடன் நீ அளித்த உந்தன் 

ஒற்றைப் பிடிச் சோற்றுகாக

இப்பொழுதும் நான் ஏங்குகிறேன் உம்மா..

நெற்றி வியர்வை சிந்திப் பரிமாறும்

உந்தன் கைப்பக்குவ உணவு

நானறிந்த அமுதத்தின் அசல்தான்

இருந்தும் தவறவிட்டேன் பல நாட்கள்..


இப்படி எத்தனையோ தொலைத்துவிட்ட மனக் கவலைகள் எனக்கும் உண்டு. இங்கே இந்தக் கவிதையோடு என் மனம் மிகவும் ஒன்றித்துப் போய்விட்டது.

இந்தக் கவிதை நூலை வாசிக்கும் அனைவரும் மறைந்த கவியாளுமை ஷஹ்னா ஸப்வானுக்காக கரமேந்திப் பிரார்த்திப்பார்கள் என்பது உறுதி. எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனத்தை வழங்குவானாக என்று நானும் இரு கரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்!!!