Saturday, February 28, 2015

81. வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.

திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.

வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

மகனுக்கு பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பெற்றோரான முஜீன் நானாவும், நஜிமுன்னிஸாவும். தமது மகன் மௌலவியாகப் போகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. மௌலவி கரீம் அவர்கள் ஊருக்குள் வருகையில் ஊரே கூடி நின்று மௌலவியையும் அவரது தந்தையான முஜீன் நானாவையும் பள்ளிவாயலுக்கு அழைத்துப்போய் பாராட்டி கௌரவிக்கின்றார்கள். வேறு ஊர்களில் இருந்தெல்லாம் வந்து தங்கள் ஊர் பள்ளியில் கரீம் மௌலவி தொழில் செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கின்றார்கள். அப்போதெல்லாம் மௌலவியின் பெற்றோருக்கு பெருமிதமாக இருந்தது. ஆனாலும் ஊர்ப் பள்ளியை விட்டுவிட்டு வேறு பள்ளிகளில் தொழில் செய்வதை நியாயமாகக் கருதாமையினால் ஊர்ப் பள்ளியிலேயே உதவி  ஹஸரத்தாக கரீம் மௌலவி இருக்கின்றார். 

இருபத்தைந்து வயதான மௌலவியைக் குறிபார்த்து பல இடங்களில் இருந்தும் திருமண அம்புகள் பாய்ந்து வந்தன. ஆறுமாத சேவையில் அவரது மதிப்பு எங்கும் பரவியிருந்தது. எனவே மௌலவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றார்கள். மௌலவி சீதனமாக எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்துகொண்டதை அனைவரும் பெருமையாக பேசிக்கொள்கின்றார்கள்.

முஜீன் நானாவுடைய அந்தச் சிறிய வீட்டில் தற்போது இரண்டு குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிவிட்டன. இடப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பொறுத்துப்போக வேண்டிய நிலைமையில் அனைவரும் இருக்கின்றனர். வெளியில் சீதனம் தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் சுளைசுளையாக வாங்குபவர்கள் மத்தியில் கரீம் மௌலவி உண்மையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வதை,
  
'இந்த நகநட்டு எங்களயன் அம்ரிதா?' அவர் வியந்து போய்தான் கேட்டார்.

'ஏன்டதான்' அவளுக்கு அந்தக் கேள்வியே ஆச்சரியமாகவிருந்தது.

'ஒங்கடயென்டா?'

என்ன கேட்கிறாரென்று அவளுக்கு தெளிவாக விளங்கிவிட்டது.

'இது கலியாணத்துக்கு எடுத்ததில்ல. நான் தையல் வேல செஞ்சி ஒன்டொன்டா வாங்கினது'

'மெய்யா நான் பயந்த அம்ரிதா. ஒன்டும் எடுக்கியல்லயெண்டு சொல்லிப்போட்டு..'

எனும் வரிகளினூடாக விளங்கிக்கொள்ளலாம். எல்லோருக்கும் சமைத்துப்போட வேண்டிய பொறுப்பு நஜிமுன்னிஸாவுக்கு சுமத்தப்படுகின்றது. அது அவளுக்கு பிரச்சினையே இல்லை. வீட்டில் பொருட்கள் இருந்தால் சட்டியில் வேகும். ஆனால் அதுதான் இல்லையே. மௌலவி தனியாளாக இருந்தபோது கிடைத்த வருமானம் அவர் குடும்பமான பிறகு போதவில்லை.
இது தொடர்பாக மகனிடம் பேசுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லாதிருந்தபோதும் மருமகளுக்குத் தெரியாமல் பேசுவதில்தான் சிக்கல் இருந்தது. எனவே தருணம் பார்த்து முஜீன் நானா மௌலவியிடம் இவ்வாறு கூறுகின்றார்.

'மகன் இப்ப பதினஞ்சி வருசத்துக்கு முந்தீம் ஹஸரத்துக்கு பத்தாயிரம்தான் சம்பளம் குடுத்தாங்க... ம்.. இப்பேம் அதே கணக்கா.. ஜாதியாயீக்கும். சாமான் சட்டீட வெளக்கி எப்பிடியன் காலம் போற. கூட்டிக் கேக்காம சரிவராது... நான் வாய் போடியது சரில்ல...'

இதைக் கேட்ட மௌலவியும் ஷநானும் யோசிச்சி யோசிச்சி நின்ட விசயம்தான் வாப்பா. நான் இன்டக்கி நாளெக்கே பெரிய மத்திச்சத்தப் பெய்த்து சந்திக்கியேன்| என்கிறார்.

ஆனால் மௌலவியின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைகின்றன. பெரிய மத்திச்சம் வெட்டொன்று துண்டிரண்டாக ஷஊர் வருமானம் இல்லாப் போனதுக்கு எங்களுக்கு ஒன்டும் செய்யேல. சம்பளம் பத்தாயிரம்தான் தரேலும்| என்கின்றார்.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து செல்ல மௌலவியின் மனைவி அம்ரிதா கர்ப்பமடைகின்றாள். அவளது பெற்றோரும் மௌலவியின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். இந்தச் சந்தரப்பத்தில் நஜிமுன்னிஸா சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சாதுரியமாக இப்படிச் சொல்லிவிடுகின்றாள்.

'ஓ இனி அல்லா லேசாக்கி வெக்கோணும். உம்ம வாப்பாமாருதான் கிட்டேக்க நின்டு பாக்கக் கேக்கோணும்'

இது அம்ரிதாவின் தாயான ஐனுள் மர்லியாவுக்கு சுள்ளென்று தைத்தது. மகளை மட்டுமா பார்க்க முடியும்? மருமகனையும் சேர்த்தல்லவா பார்க்க வேண்டும்?

'எங்கட புள்ளய நாங்க கையுடுகியல்ல' என்று அம்ரிதாவின் தந்தையான பக்கீர் நானாவும் விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றார்.

இதற்கிடையில் மௌலவியின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் விடயமும் தொடங்கிவிட்டது. தாய் தந்தையரின் ஆசைப்படி தங்கைக்கு நல்லதொரு மணமகன் கிடைக்க வேண்டும். அதனால் மௌலவியோடு ஒன்றாக ஓதி, மத்ரஸா காலங்களில் சீதனமில்லாமல் திருமணம் முடிப்போம் என்று முழங்கிய அவரது தோழரான தாரிக் மௌலவியை தங்கைக்கு மணமகனாக்கும் யோசனையில் தாரிக் மௌலவியை சந்தித்துப் பேசுகின்றார் கரீம் மௌலவி.  'இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்' என்கிறார் தாரிக். ஆனால் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்துவிடுகின்றது.

இப்படியிருக்க அம்ரிதா தாய் வீட்டுக்குச் சென்று கொஞ்ச நாட்களில் அவளுக்கு குழந்தை கிடைத்துவிடுகின்றது. உறவினர்கள் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தார்கள். மகளும் மருமகனும் தங்கள் வீட்டில் தொடர்ந்து இருந்துவிடுவார்களோ என்பது பற்றி மர்லியாவும் பக்கீர் நானாவும் குசுகுசுக்கத் தொடங்கினார்கள். அதுபற்றி அம்ரிதாவின் தலையிலும் போட்டுவிடுகின்றார்கள். சீதனம் வேண்டாம் என்று அம்ரிதாவை மணமுடித்துவிட்டு அம்ரிதா தன் பெற்றோர் வீட்டில் தங்கிவிடுதல் முறையில்லை அல்லவா?

இதுபற்றி பக்குவமாக அம்ரிதா கரீம் மௌலவியிடம் கூற, அவரும் நாற்பதாம் நாள் விருந்து முடிந்த கையோடு தங்கள் வீட்டுக்கு போய்விடலாம் என்று எதுவுமறியாமல் கூறுகின்றார். 
காலம் நகர்கிறது. மௌலவியின் தங்கைக்கும் திருமணம் நடக்கின்றது. அதற்காக அம்ரிதா தனது நகைகளை விற்று காசு கொடுத்து உதவுமாறு கரீம் மௌலவியிடம் கூறுவதினூடாக அவளது சிறந்த பண்பு மேலோங்குகின்றது. 

மௌலவிக்கும் வருமானம் போதவில்லை. ஆதலால் காலியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலுக்குப் போவதாக முடிவெடுக்க அனைவரும் அதை ஆமோதிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசிப் பார்த்ததில் சம்பளம் உட்பட அவரது மனைவி பிள்ளை வந்து தங்கக் கூடிய தங்குமிட வசதியும் செய்து கொடுக்கப்படுகின்றது.

திடீரென நஜிமுன்னிஸாவுக்கு உடம்புக்கு முடியாமல் போகின்றது. எனவே கரீம் மௌலவியை ஊரோடேயே தங்கிவிடுமாறு அவரது தாய் கேட்டுக்கொள்கின்றாள். அவருக்கும் அதுவே சரியாகப்பட்டது. ஆனாலும் தங்கையின் குடும்பம் அங்கிருப்பதால் தங்குவதற்கான சிக்கல்கள் ஏற்பட்டது. ஆகவே கூலிக்கு வேறொரு வீடு பார்த்துக்கொண்டு போகும் வரை தனது மாமாவான பக்கீர் நானாவின் வீட்டிலும் தகப்பனின் வீட்டிலும் மாறி மாறித் தங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டாவது குழந்தையும் கிடைத்துவிடுகின்றது.

தனது சம்பளம் குடும்பத்தைக் காப்பாற்ற போதவில்லை என்பதால் வியாபாரம் செய்யத் தலைப்படுகின்றார் கரீம் மௌலவி. அது ஓரளவுக்கு சுதந்திரமாகவும், வருமானம் கூடியதாகவும் இருப்பதால் அவருக்கு பிடித்துப் போகின்றது.

பக்கீர் நானா இருப்புக்கொள்ளாமல் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருப்பதை ஐனுள் மர்லியா காண்கின்றாள். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று அம்ரிதாவுக்கு விளங்கவில்லை. தங்கையிடம் கேட்கிறாள். அவளுக்கும் தெரியவில்லை என்கிறாள். பிறகு தந்தை இப்படி கடுமையாக இருப்பதற்குக் காரணம் என்னவென்று ஐனுள் மர்லியா கூறும் கூற்று வாசகரை அதிர்ச்சியுறவும், சமுதாயம் பற்றி சிந்திக்கவும் வைக்கின்றது.

'இல்ல மகள்.. ஊடு தேடிக்கொண்டு போற.. ஆங்காட்டிம் இங்கேம் அங்கேமா நிக்கியென்டேன் சென்ன. இப்ப ஒரு வருசம் பிந்தீம் ஊடு தேடல்லயாண்டு வாப்பா என்னத் தின்னப் போற...'
இதைக் கேட்ட அம்ரிதாவுக்கு மிகவும் கவலையாகின்றது. கணவனிடம் பக்குவமாகக் கூறி குறைந்த கூலிக்கு, சரியாக வேலை பூரணப்படுத்தப்படாத வீடொன்றுக்கு அவசரமாக  செல்கின்றார்கள். 

வருடங்கள் கழிகின்றன. கரீம் மௌலவியின் மகள் பெரிய மனுசியாகின்றாள். இப்போது அந்த சுமையும் மௌலவிக்கு கூடிவிட்டது என்றவாறு கதை முடிவடைகின்றது.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதற்குத்தான். சொந்த பிள்ளைகளே என்றாலும் திருமணம் முடித்த பிறகு அவள் வளர்ந்த வீடு ஷதாய் வீடு| தானே தன் வீடல்ல. அதே போல ஆண் பிள்ளை என்றால் வேறொரு வீடு பார்த்துக்கொண்டு மனைவி மக்களை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இடமும் பிரச்சினைகள் தலை தூக்கவே செய்யும். 

வீடு இல்லாவிட்டால் எப்படியெல்லாம் மற்றவர்களிடம் தலைகுனிய வேண்டி வரும் என்பதை மிக தத்ரூபமாக விளக்கிக் காட்டுகின்றார் திக்குவல்லை கமால் அவர்கள். சமுதாய பிரச்சினைகள் தன் படைப்புக்களினூhக வெளிப்படுத்தியும், ஊர் பாஷையை அழகாக உட்செருகி இலக்கியம் படைத்தும் வரும் அவரை மனமார வாழ்த்துகிறேன்!!!

நூல் - வீடு
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - கலாசார அலுவல்கள் திணைக்களம்
விலை - குறிப்பிடப்படவில்லை

80. அன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சப்ரா அக்ரம், தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவியாவார். இவரது கன்னிக் கவிதைத் தொகுதி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது. 52 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சிறியதும் பெரியதுமான 42 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவர் பாடசாலைமட்ட கவிதைப் போட்டிகளிலும், மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நோக்குமிடத்து சிறு வயது தொடக்கம் முதுமை வரை பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் படும் துன்பங்கள் ஏராளம். குடும்ப வாழ்க்கைக்குள்ளும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக்கூடிய வலிமை பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்ததல்ல. தொடர் போராட்டங்களினால் கற்றுக்கொண்ட பாடங்களாக அவை அமைந்துவிடுகின்றன. சிறந்த மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஒரு பெண் பல பரிணாமங்களைப் பெறும்போதும் தனக்கேயுரிய தனித்துவத்தில் அவள் தலைசிறந்து விளங்குகின்றாள். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் படிக்கல்லாகத் திகழ்கின்றாள். 

பூவை இவளோடு மலரும் நாளை (பக்கம் 04) எனும் கவிதை வரிகள் இதை உணர்த்துகிறது இவ்வாறு...

பனித்துளிகளைத் தாங்கும் 
மெல்லிய இதழ்களைப் போல
பழிகளைத் தாங்கும் இதயம் இங்கே..
இமைகளைக் கொஞ்சம் மூடிட்ட போதிலும்
இதயத்தில் நாளங்கள் துடித்திடுமே
உன் வழியில் தடைகள் தடுத்திட்ட போதும்
உன் வலிமை தடைகளை வென்றிடுமே!

தம்மைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டும். முடியும் என்ற சொல்லை முன்னோர் சொன்ன வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். என்னால் முடியாது - எனக்குத் தெரியாது போன்ற எதிர்மறை எண்ணங்களை அடியோடு விட்டொழித்தால்தான் சாதனைகளை நம் தோழனாக்கலாம். சாதிப்பதற்கு உறுதியான குறிக்கோளும், விடாமுயற்சியும் இருத்தல் அவசியமாகும். 

இது நடக்குமா? என்னால் முடியுமா? போன்ற தயக்கங்களின் காரணமாக பலருக்கு எத்தனையோ வெற்றிகள் எட்டிப் பறிக்க முடியாத கனியாகவே இருக்கின்றன. வாழ்க்கையில் சாதித்துவிட்டுப் போனவர்கள் எல்லாம் போராடாமல் அதனைப் பெறவில்லை. வருடங்களை தியாகம் செய்து கண்டுபிடிப்புளை உலகறியச் செய்த விஞ்ஞானிகள் தொடக்கம், இமய மலையில் ஏறி வெற்றியைப் பெற்றவர்கள் வரை அனைவரும் சாதனை எனும் படிக்கட்டுக்களில் தவழ்ந்துபோய் வெற்றியெனும் உச்சத்தைத் தொட்டவர்கள்தாம். எளிதில் எதுவும் கிடைத்து விடுவதில்லை. அவ்வாறு கிடைப்பவை நிலைத்துவிடுவதுமில்லை. நம்பிக்கை (பக்கம் 06) என்ற கவிதையினூடாக நம்பிக்கையீனங்களை நம்மத்தியிலிருந்து தகர்தெறிய வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ஷப்ரா.

நம்பிக்கை என்ற சக்தி உள்ள
எந்த மனிதனும்
சவால்களுக்கு முகங்கொடுக்க அஞ்சுவதில்லை!

கடலைத் தாண்டி கரையைத் 
தொட்டால்தான்
அதற்குப் பெயர் அலைகள்..
தடைகள் தாண்டி 
வெற்றி பெற்றால்தான் சாதனைகள்!

தாயைப் பாடாத கவிஞர்கள் இல்லை. தாயன்புக்கு ஈடு இணையில்லை. உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளிலும் நமக்காக உண்மை அன்பை உதிரக்கூடிய ஒரு உறவுகளில் தாய் முக்கியமானவர். ஒரு குழந்தையின் வளர்ப்பு தொடக்கம் அனைத்து விடயங்களிலும் கரிசனை காட்டி நல்லவனாக அவனை வளர்த்தெடுப்பதில் தாயின் பங்கே அதிக பங்களிப்புச் செய்கின்றது. ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதில் தாயின் பிரார்த்தனைகள் மிகவும் கண்ணியத்துக்குரியவை. மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றிலும் தாய்க்குத்தான் முதலிடம். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற அடிகளிலும் தாயைப் பற்றியே முதலில் சொல்லப்படுகின்றது. தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு என்ற நபி பெருமானின் கூற்றும் தாயின் சிறப்பை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. அன்னையைப் பற்றிய நூலாசிரியரின் பல கவிதைகளில் தாய் (பக்கம் 07) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உந்தன் உறவால்
எந்தன் இரவுகள்
பகல்போல் ஆனதே..
உன் வழிகளில்
என் வாழ்விற்கான வழியை
நான் அறிந்தேன்..

நான் வலிகொண்ட போது
உன் விழி நீர் சிந்திய வேளை
அதுவே என் வாழ்க்கை வானத்தில்
நீராவியாய் சேர்ந்து
என் திறமைகள் மழைத் துளியாக்கி
என் நிகழ்காலத்தை நிறம்பெற வைத்து
வருங்கால வானவில்லை
வசந்தமாய் வர வைத்ததே!

அமாவாசை ஆசைகள் (பக்கம் 09) என்ற அழகிய குறியீட்டுக் கவிதை தன்னகத்தே பல செய்திகளைக் கெண்டுள்ளது. நிலவு காட்டிச் சோறு ஊட்டும் நிகழ்வினூடாக வாழ்க்கையை சித்திரித்துக் காட்டுகின்றார். முழு பிரபஞ்ச சோகம் இந்தக் கவிதையில் இழையோடியிருக்கின்ற பாங்கு இரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. ஒரு வனாந்தர இருட்டுக்குள் சிக்குப்பட்ட ஜீவன் வெளியே போவதற்கு வழியற்று தவிக்கும் தவிப்பை இந்தக் கவிதை தந்துவிடுகின்றது.

அசையாத மொட்டைமாடி
தூண்களிடையே அமர்ந்து
அமாவாசையில் அழிந்துபோகும்
அம்புலியைக் காட்டி
அன்னம் அளித்தாய்
ஏனென்று இன்றுதான் புரிகிறது..

என்னுள்ளே துளிர்விடும் ஆசைகளும்
அன்பு ஏக்கங்களும்.. எண்ணங்களும்
அழிந்து அடிச்சுவடே மாறிப்போகும்
என்பதை எச்சரிப்பதற்காகவா அன்னையே..?

ம்.. நீ அன்னம் இட்ட தோரணையிலே
கூறிவிட்டாய் எனக்காக அகழிகள் 
வெட்டப்பட்டுள்ளது என்பதை..
அட நான்தான் புரிந்துகொள்ளவில்லை!

நட்புக்காக உயிரைக் கொடுப்பது எளிது – ஆனால் உயிரைக் கொடுக்கக் கூடிய நட்பு கிடைப்பதுதான் அரிது என்று சொல்வார்கள். நட்பு என்ற பெயிரில் நடிக்கும் சில விஷமிகளால் நட்பின் கற்பே சூறையாடப்பட்டுவிட்டது. நட்பு தாயன்புக்கு ஈடானது. அதில் மாசு இருப்பதில்லை. வாழ்க்கை எனும் பாதையில் எதிர்ப்படும் பள்ளங்களை நிவர்த்திக்கக்கூடிய சக்தி நட்புக்கு உண்டு. சந்தோசத்தை இரட்டிப்பாக்குவதும், சோகத்தை பாதியாக்குவதும் நட்புக்கு கிடைத்த வரம். தோழனின் தோள் சாய்ந்து கண்ணீர் விடும் சுகம் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எதிர்பார்ப்புகள் இன்றி தொடரும் புனித நட்புபற்றி மகுடத் தலைப்பில் அமைந்த அன்புள்ள தோழியே (பக்கம் 23) கவிதை பின்வருமாறு இயம்புகின்றது.

அன்னை தந்தைபோல் - நீ
எந்தன் சொந்தமா?
இரத்த பந்தமாய்
உடன்பிறந்த சொந்தமா?

விழுகின்ற நிழலை
நிலம் தாங்குவதுபோல்
தவறி விழும்போது
தாங்கும் கைகள் உனதே!

கன்னித்தொகுதி என்று சொல்ல முடியாதளவுக்கு ஷப்ராவின் கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. கவிதையின் கருக்களில் பொதிந்துள்ள சமுதாயக் கருத்துக்கள் படிப்பினையாக இருக்கின்றன. கவிதை எழுதும் திறமை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதை அழகாக பயன்படுத்திக்கொள்வதே நம் திறமை. இலக்கிய உலகுக்குப் புதியவரான ஷப்ராவை வரவேற்பதுடன் எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த  படைப்புகளைத் தர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - அன்புள்ள தோழியே
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அக்ரம் சப்ரா
வெளியீடு - கலாசார அலுவல்கள் திணைக்களம்
விலை - குறிப்பிடப்படவில்லை

Monday, February 9, 2015

79. சுட்ட பழமே சுவை அமுதே தாலாட்டுப் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சுட்ட பழமே சுவை அமுதே தாலாட்டுப் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்கள் 1972 இல் இலக்கிய உலகில் கால்பதித்தவர். நீண்டகாலம் மௌனித்திருந்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார். தேசகீர்த்தி, காவிய பிரதீப, கவிச்சுடர் போன்ற பட்டங்களைத் தனதாக்கிக் கொண்டுள்ள இவர், கலை இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றில் பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பரிசில்களும் விருதுகளும் வென்றுள்ளார்.


தனக்கென தனியிடம் பதித்து தனது இலக்கிய ஆளுமைகளை வெளிக்காட்டி நிற்கும் இவரது ஒன்பதாவது நூலாக சுட்ட பழமே சுவை அமுதே எனும் இத்தாலாட்டுப் பாடல்கள் நூல் வெளிவந்துள்ளது. சின்னச் சின்னச் சொற்களை வைத்து சிறந்த கவிதைகளை ஆக்குவதில் வல்லவரான இவரின் நல்ல கவித்துவத்திற்கு இந்த தாலாட்டுப் பாடல் தொகுதி சான்றாக அமைந்துள்ளது.

தாலாட்டு என்பது வாய்மொழி வழியாக ஆரம்ப காலம் தொட்டு பாடப்பட்டு வரும் ஒரு உன்னதமான பாடல்களாகும். அவற்றில் ஒரு சில தாலாட்டுப் பாடல்கள் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்ட - வேறுபட்ட மதம் சார்ந்த சொற்களைக் கொண்டு பாடப்பட்டு வந்தாலும் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்கள் அடிப்படையில் தாய்க்கும் சேய்க்குமான அன்புப் பரிபாஷையாகவே கொள்ளப்படுகிறது. அழும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி தூங்க வைப்பதில் தாலாட்டுப் பாடலுக்கு தனியிடம் இருக்கிறது.

தாலாட்டுப் பாடல்கள் மேற்கூறியது போன்று வாய்மொழிப் பாடல்களாக பாடப்பட்டு வந்ததால் எழுத்து வடிவமின்றி தற்காலத்தில் அருகிவிட்ட சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே அதை உயிரூட்டும் விதமாக பி.ரி. அஸீஸ் அவர்கள் தாலாட்டுப் பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றையே வெளியிட்டிருப்பது பாராட்;டத்தக்க விடயமாகும்.

இத்தொகுதிக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் ஹில்மி மஹரூப் அவர்கள் `இந்நூலில் அடங்கியிருக்கும் தாலாட்டுப் பாடல்கள் அனைத்தும் சிறப்பானதாகவும் மகிழ்ச்சியூட்டுவனவாகவும் அமைந்துள்ளன. நிச்சயமாக இது குழந்தைகளுக்கும் ஏனையவர்களுக்கும் சந்தோசத்தைக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு ஏற்பாடாகும். கவிஞரின் இத்தகைய கிராமிய முயற்சியானது மிகவும் பாராட்டத்தக்கது' என வாழ்த்தியிருக்கின்றார்.

சுட்ட பழமே சுவை அமுதே என்ற இந்தத் தாலாட்டுப் பாடல் தொகுதியில் 19 தாலாட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மல்லிகைப் பந்தல் (பக்கம் 12) என்ற தாலாட்டுப் பாடல் ஓசைநயம் மிக்க அழகியல் பொதிந்த பாடலாகும். குழந்தையின் சிரிப்பை சிதறிய முத்துக்களாக கவிஞரின் மனம் எண்ணுகின்றது. கவிஞனின் பார்வையில் எல்லாமே அற்புதமானவைதான். இதிலிருந்து சில வரிகள் இதோ..

மல்லிகைப் பந்தலில்
மணக்கும் தொட்டிலில்
அல்லிப் பூவே - நீ
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..

நீ சிந்தும் சிரிப்பினிலே
சிதறும் முத்துக்கள் - என்
சிந்தையைக் கிளறும்
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..

கண்ணில் நிறைந்து - என்
கல்பினில் பதிந்த
வண்ணப் பட்டே - நீ
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..

குழந்தைகளின் உலகம் அழகானது. அவர்கள் அதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பசித்தால் அழத்தெரிந்த அவர்களின் அழுகையை நிறுத்தும் வல்லமை தாலாட்டுக்கு உண்டு. அந்தத் தாலாட்டின் இதம் சுட்ட பழமே சுவை அமுதே (பக்கம் 14) என்ற இந்தப் பாடலில் இவ்வாறு கலந்திருக்கிறது.

கண்கள் மலர்ந்த கனியமுதே
களங்கம் இல்லா ஒளிச் சுடரே
மன்னவர் சூடும் மணி முடியே
மங்கை எந்தன் உயிர் மூச்சே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..

தென்றலின் சுகமே தேனமுதே
தெளிந்த ஓடை நீரழகே
புன்னகை சிந்தும் புது மலரே
பூவை எந்தன் பூ முகமே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..

பட்டுத் தளிரே பசுங்கொடியே
மொட்டு விரிந்த பூவிதழே
சுட்ட பழமே சுவை அமுதே
சுகந்தமான புது மலரே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..

பெறுமதிமிக்க பொருள்களை உவமானமாகக்கொண்டே தாலாட்டுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனாலும் அவற்றை விடவும் குழந்தைகள்தான் ஒரு தாய்க்கு முதல்நிலை. கொடியில் மலர்ந்த பூங்கொத்து (பக்கம் 18) என்ற தாலாட்டுப் பாடலிலும் அத்தகைய உவமானங்கள் லாவகமாக கையாளப்பட்டுள்ள விதம் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அதன் சில வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன.

செம்புக் குடமே சித்திரமே
செம்பவள வாய் அழகே
கொம்புத் தேனே குலக் கொழுந்தே
கொடியில் மலர்ந்த பூங்கொத்தே
ஆராரோ ஆரிவரோ.. ஆராரோ ஆரிவரோ..

மாணிக்க மாலை நீ தானே
மணக்கும் மல்லிகை அதில் தானே
தேனின் சுவையில் கலந்தவனே
தெவிட்டாய் இன்பம் தருபவனே
ஆராரோ ஆரிவரோ.. ஆராரோ ஆரிவரோ..

நூலாசிரியர் பி.ரி. அஸீஸ் அவர்களின் இலக்கிய முன்னேற்றம் மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவிதை, சிறுகதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல்கள், கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து நிற்கும் கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்களின் இலக்கிய முயற்சிகள் மேலும் வெற்றிபெற மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!!!

நூல் - சுட்ட பழமே சுவை அமுதே
நூல் வகை - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஸ்தா பதிப்பகம்
விலை - 150 ரூபாய்

Sunday, February 1, 2015

78. அமைதிப் பூக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அமைதிப் பூக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அமைதிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் ஆவார். இவர் ஓர் இலக்கியப் பாரம்பரியத்தில் வந்தவர். சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்குத் தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப் புத்திரர். அவரின் இலக்கியப் பார்வையும் சொற்களை இலாவகமாகக் கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல. ஏன் என்றால் இலக்கியப் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்பட வேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப் பற்றம் தந்தை வழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு. இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக் கவிதைத் தொகுதியில் தரிசிக்க முடிகிறது.

புதுக் கவிதைத் தாத்தா மூ. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் கவிதைத் தொகுதியை இவரது அமைதிப் பூக்கள் என்ற கவிதை நூலின் தலைப்பு ஞாபகப்படுத்திப் போகிறது. 62 பக்கங்களில் ஜெஸ்கொம் பிரிண்டர்ஸின் மூலம் வெளிவந்துள்ள இந்த நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல், சமூக சீர்திருத்தங்கள், மனித நேயம், ஜீவகாருண்யம் பற்றி பேசும் கவிதைகளாக மட்டுமே உள்ளது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். சிறியதும் பெரியதுமான 46 கவிதைகளே இந்த நூலில் இடம்பிடித்துள்ளன.

இந்த நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமென்று அயராது உழைத்துவரும் முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவரான அல்ஹாஜ் எம்.என்.எம். அமீனுக்கே தனது நூலை நூலாசிரியர் அனஸ் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான முன்னுரையை வாசக நோக்கு என்ற தலைப்பில் மூதூர் இலக்கிய வட்டத் தலைவர் கலாபூஷணம் எம்.எஸ். அமானுல்லா எழுதியுள்ளார்.

நூலாசிரியர் தனதுரையில் ``உலகையே அழிவின் விளிம்பிற்குக் கொண்டுசென்ற அணுஆற்றலைக் கண்டுபிடித்த உலகப் பெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனை நிருபர்கள் பேட்டி கண்ட போது உலகத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஏதேனும் வழியண்டா? எனக் கேட்டபோது, ஆம் இருக்கிறது. அதுதான் சமாதானம் என்று கூறிய வரலாற்று நிகழ்வும் என் இதயப் பறப்பில் சமாதானத்திற்கான விதையைத் தூவிக்கொண்டிருந்தன. அதன் அடையாளமாகத்தான் அமைதிப் பூக்கள் எனும் இந்நூல் என்னால் எழுதப்பட்டது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி இந்நூலில் இடம்பிடித்துள்ள சில கவிதைகளைப் பார்ப்போம்.

உள்ளத்திலும், உலகத்திலும் அமைதியை வேண்டாதவர்கள் எவருமே இல்லை. இன்று உலகெங்கும் பொதுவாக சமாதானம் எட்டாக்கனியாக இருக்கும் வேளையில் அதை வேண்டி தினமும் மக்கள் துடியாய்த் துடிக்கின்றனர். மனதுக்கு அமைதி கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி பிறந்துவிடுகின்றது. ஆனால் அமைதி என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவரவரின் எண்ணங்கள் என்றும் கூறலாம். அழுக்கு எண்ணங்களை மனதிலிருந்து அகற்றிவிட்டாலே அமைதி பிறந்துவிடுகின்றது. அமைதி பற்றிக் கூறும் அமைதிப் பூக்கள் (பக்கம் 08) என்ற மகுடத் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகள்...

உலகெங்குமுள்ள உன்னத மக்கள் உவக்கும் உயரிய பூக்கள் இவை. கோடான கோடி உள்ளங்கள் இவற்றை நுகர்வதற்கான வழியைத் தேடி வருந்திக்கொண்டிருக்கின்றன. வேண்டிய வேளையெல்லாம் இலகுவில் எல்லோரும் பெற்றுவிடக்கூடிய பூவல்ல இவை. இவற்றைப் பெறுவதற்கு மனப்பக்குவம், விட்டுக்கொடுப்பு, பொறுமை போன்ற வெகுமதிகளை வழங்க வேண்டும். அமைதிப் பூக்களின் அவதாரத்தை மக்கள் வெண்புறாக்களின் உருவில் பார்ப்பதுமுண்டு. 

ஒடிக்கப்பட்ட மனுதர்மத்தின் கரங்கள் (பக்கம் 13) என்ற கவிதையில் பின்வரும் கருத்து சொல்லப்படுகிறது. நிகழ்காலத்தில் நிலவும் சில அசம்பாவித நிகழ்வுகள் சமாதானத்தின் கதவுகளை மெதுமெதுவாக மூடிக்கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலங்கள் இன்னு(று)ம் ஈரமுள்ள நெஞ்சங்களுக்குள் பாரமாக இருக்கின்றன. அமைதியான வாழ்வைத் தொலைத்துவிட்டு அவலக்குரல் எழுப்பும் இன்றைய வேளையில் அமைதியின் தேவை நன்றாக உணரப்பட்டிருக்கின்றது. இவற்றை மையப்படுத்திய வரிகளை கவிஞர் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

இன்று நாட்டு நந்தவனத்தில் புரிந்துணர்வுப் பூக்கள் துவேசச்சுடர்களால் சுட்டெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனுதர்மத்தின் கரங்கள் ஒடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தினமும் மரண ஓலங்களே.. எங்கள் காதுகள் வாங்கும் கதைகளாக உள்ளன.

வீரம் என்பது ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதல்ல. மாறாக கோபத்தைக்கூட அடக்கிக்கொள்வதுதான் என்று கூறப்படுகின்றது. சமாதானம் பற்றி பேசுகையில் பேசுபவரை பயந்தாங்கொள்ளியாக எண்ணுவதும்,  அமைதி பற்றி கதைக்கையில் அவரை ஆண்மையற்றவன் என்பதும், புரிந்துணர்வு பற்றி பேசுகையில் புரிந்துகொள்ளாமல் நடப்பதும் தொடர்கதையானதால் என் பயணம் (பக்கம் 16) என்ற கவிதையில்

இப்போது சமாதானம் பற்றிக் கதைப்பதங்கு எனக்குத் தயக்கமாய் இருக்கிறது. சமாதானம் பற்றி கதைக்கும் போது சண்டையிடச் சக்தியற்றவன் என்று எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறேன்.. என்று கவிஞர் கூறுகின்றார். இதனால் சமாதானம் பற்றி கதைப்பதற்கே தயக்கமாக இருக்கின்றது என்பதிலிருந்து கவிஞரின் உள்ளத்து வேதனை நன்கு புலப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

நூலின் தலைப்புக்கு ஒப்ப அநேகமான கவிதைகள் மனிதநேயம், துவேசமில்லாத நாடு, போரில்லாத வாழ்வு என்பவற்றை யாசித்தே புனையப்பட்டிருக்கின்றன. யுத்தப் புயல்கள் ஓயுமா? (பக்கம் 26) என்ற கவிதையும் சமாதானம் பற்றியே பேசியிருக்கின்றது. இக்கவிதையில் காணப்படும் படிமங்கள் ரசிப்புக்குரியதாக காணப்படுகின்றது. அதில் சில வரிகள் பின்வருமாறு..

போர் இருளால் போர்த்தப்பட்டிருக்கும் எம் மண்ணை மீண்டும் சமாதான உதயம் உவக்குமா? நாட்டு நந்தவனத்தில் மனித மலர்களை உதிரச் செய்யும் யுத்தப் புயல்கள் ஓயுமா? துப்பாக்கி வானின் குண்டு மழையில் நனையாதிருக்க சமாதானம் இங்கு குடை பிடிக்குமா? 

நூல்கள் (பக்கம் 57) என்ற கவிதை நல்ல புத்தகங்களின் அத்தியவசியம் பற்றி எடுத்துரைக்கின்றது. அறியாமை எனும் இருளை அகற்றி மக்களின் வாழ்வில் வெளிச்சம் தருவது கல்வியாகும். அக்கல்வியைப் பெறுவதற்கு வாசிப்பு மிக முக்கியமாகும். அதுபோல உள்ளத்தில் ஏற்படுகின்ற கசப்பான நிகழ்வுகளை மறக்கச்செய்வது இலக்கியமாகும். அவ்வாறான இலக்கிய நூல்களை வாசிக்கையில் இதயம் இலேசாகும். எனவே புத்தகங்கள் ஒரு மனிதனை செதுக்குகின்றன. கவிஞர் கீழுள்ள வரிகள் மூலம் இதனை நிதர்சனமாக்குகின்றார்.

மனிதனின் அறியாமைச் சுமையை அகற்ற உதவும் நெம்புகோல்.. வாழ்க்கைக் காரிருளில் மானுடத்திற்கு வழிகாட்டும் ஒளிச்சுடர்.. மனிதக் களனியின் செழுமைக்கு அறிவு மழை பொழியும் கார் மேகம்.. அறிவுப் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரம்.. உலகை ஞான வலம்வர உதவும் ஊன்றுகோல்.. இது அறிஞர்களின் அனுபவக் களஞ்சியம்..

நூலாசிரியர் எம்.எம்.ஏ. அனஸ் அமைதிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தவிர ஊர் துறந்த காவியம், மனிதம் என்ற நூல்களை வெளியிட்டுள்ளதுடன், மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் அதனை வெளியிட்டுள்ளார். இந்ந அடிப்படையில் இலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வரும் நூலாசிரியரிடம் மேலும் பல கனதியான தொகுதிகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இவரது இலக்கியப் பணிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - அமைதிப் பூக்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எம்.எம்.ஏ. அனஸ்
வெளியீடு - ஜெஸ்கொம் பிரிண்டர்ஸ்
விலை - 240 ரூபாய்

77. உயிர் வலித்த கணம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உயிர் வலித்த கணம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சுந்தர மூர்த்தி செந்தூரன் என்ற இயற் பெயரைக்கொண்ட வன்னியூர் செந்தூரனின் இரண்டாவது தொகுப்பாக மலர்ந்திருக்கிறது உயிர் வலித்த கணம் என்ற கவிதைத்தொகுதி. கிழக்கு பல்கலைக்கழக மாணவனான இவர் நிலவைத் தேடும் வானம் என்ற கவிதைத் தொகுதியை 2013 இல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

66 பக்கங்களை உள்ளடக்கியதாக செந்தணல் வெளியீடாக வெளிவந்துள்ள உயிர் வலித்த கணம் என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் 29 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இதிலுள்ள இவரது அநேகமான கவிதைகள் யுத்த கால நிலவரங்களை எடுத்தியம்புகின்றன. ஒரு சில கவிதைகள் காதல் நினைவுகளை மீட்டிச் செல்வதுடன் சமூகப்பாங்கான கவிதைகளும் இதில் காணப்படுகின்றன. பரவலாக நோக்குமிடத்து கடந்து வந்த கற்பாதைகள் இவர் கவிதைகளுக்கு கருவாயிருக்கின்றன. பட்ட அடிகள் அடித்தளமிடுகின்றன.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் தனதுரையில் ``பொதுவாக கவிதை வடிவங்களை செய்யுள், கவிதை, புதுக்கவிதை, பின்னவீனத்துவக் கவிதைகள் என்று வகைப்படுத்திக் கொள்கின்றனர் இன்றைய நவீன இலக்கிய வல்லுனர்கள். எப்படியிருந்த போதும் கவிதைகள் மொழிகளால் திரட்சியுறும் போது அவை வாசகர் நெஞ்சங்களில் ஒரு மிளிர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டும். அந்த மிளிர்ச்சியானது உளம் சார்ந்து ஆய்வு செய்யப்படும் ஒன்றாகவே இருந்துவிடப் போகின்றது. அதாவது குறித்த கவிதைகளை வாசிக்கின்றபோது ஒரு சிலிர்ப்பு அல்லது சிரிப்பு அல்லது வியப்பு அல்லது நெஞ்சை நெருட்டும் விம்மல் அல்லது ஒரு கேள்வி என்று பலவித அருட்டுணர்வுகளைத் தோற்றுவித்தாக வேண்டும். இதில் ஏதோ ஒன்று சம்பவிக்கவில்லை எனின் நாம் வாசித்தது ஒரு சம்பவத்திற்கான கட்டுரைப் பந்தி அமைப்பாகவே இருக்க வேண்டும். ...முல்லைத்தீவு மண் அரிய பல இலக்கிய ஜாம்பவான்களைத் தந்த இலக்கியப் பொழில் பூமி. அப்படியான வீர மண்ணிலிருந்து இன்று இளைய கவிஞர்கள் பலரும் முகிழ்ந்து எழுந்து வருகின்றார்கள். அவர்களுள் ஒருவராகவே வன்னியூர் செந்தூரனும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.'' என்று குறிப்பிடுகின்றார்.

மு/கற்சிலைமடு அ.த.க. பாடசாலை அதிபர் திரு சி. நாகேந்திரராஜா நட நட முன்னேறு நடை தளர்வின்றி... என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை பின்வருமாறு முன்வைத்துள்ளார். ``வன்னியில் வாழ்ந்து போரில் மீண்ட மாந்தர் ஒவ்வொருவருக்கும் உயிரின் பெறுமதி நன்கு தெரிந்திருக்கும். அதிலும் உயிர் வலித்த கணங்கள் எத்தனையோ...??? கணக்கிட முடியாத, எழுதப்படாத கணங்களுள் ஒரு கணத்தை தன் பேனா முனைகளால் எம்மிடம் தருகிறான் செந்தூரன். வேர்களில் பாய்ச்சப்பட்ட வேல்களால் விருட்சம் இலை கொட்டிப்போக, நிழலின்றி நாணல்கள் துவண்டு நிற்கின்ற போதும் வேரிலிருந்து வழியும் ஈரத்தால் நாணல் சருகாகாது உயிர் வாழ்கிறது வேல்கள் வேர்களில். அதனால் வேதனையும் வலியும் வேர்களுக்கு மட்டுமே. வேல்களைப் பாய்ச்சியோர் யாராகிலும் விருட்சம் மொட்டையாகிப் போனபோது அவர்கள் வலியை அறிந்திருக்கவேயில்லை. மொட்டையாய் போனது விருட்சங்கள் மட்டுமல்ல... ஆக கவிஞர்கள் வலிகளை வரிகளால் வார்த்திருக்கிறார்கள். சமகாலக் கவிஞர்களின் இவ்வரவுகள் இன்று புதிய படைப்புக்கள், இவை நாளை வரலாற்று ஆவணங்கள். செந்தூரனின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் பேச வைக்கும்.''

நூலுக்கான வாழ்த்துரைகளை கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு மு. இரவீந்திரனும், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், எழுத்தாளருமான ரிம்ஸா முஹம்மதும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் வன்னியூர் செந்தூரன் தனதுரையில் ``அவலம் சுமந்த மண்ணில் தினம் அழுகின்ற, துயரம் சுமக்கின்ற கனமான மனக் கவலைகளோடு வாழுகின்ற எம்மவர்க்கு என் கவிகள் ஓர் திடமூட்டி வலுச் சேர்க்கும் என நம்புகிறேன். கலைகளின் அரசியான கவிதையை கற்பனையின் ஊற்றில் வடிவெடுப்பன என சிலர் சொல்லுவார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி வாழ்க்கை சொல்லுகின்ற பாடங்கள், வலிகள் கற்றுத் தருகின்ற அனுபவங்கள் ஆனது  சமூகத்திற்கு பயனுள்ள சிறந்த கவிப் படைப்பாளிகளை உருவாக்கும் என்பது என் கருத்து. மரணத்தின் வலியை உணர்ந்தவனாலேயே அதன் நிலை பற்றிப் பேச முடியும். எதிர்கால சந்ததிக்கும் ஏதோவோர் நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியும். உண்மையிலேயே அந்த இரத்தக் கறை படிந்த தொலையாத நினைவுககள் மறையாத கறையாகி இன்றும் மனதை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இவற்றை இலக்கியப் பதிவாக்கும் போது ஓரளவாவது மனச் சுமை குறையும் என நம்புகிறேன்.'' என்கிறார்.

இனி இவரது கவிதைகளுள் ஒரு சிலவற்றை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

யாரது நடுநிசியில் (பக்கம் 18) என்ற கவிதை மர்ம உலகத்துள் அழைத்துச் செல்வது போன்ற உணர்வை உருவாக்கிவிடுகின்றது. ஆவிகள் அலைகின்ற அமானுஷ்ய உலகத்தை உணர்த்துமாற்போல கவிதைப் பாங்கு அமைந்துள்ளது. மரத்தடியில் காதலும் நடக்கின்றது, கதைச் சத்தமும் கேட்கிறது ஆனால் உருவம் இல்லை என்று சொல்வதினூடாக இதை உணர முடிகின்றது. அவர் கவிதையை கையாண்டுள்ள விதம் வியப்பு தருகின்றது.

ஆலம் மரத்தடியில்
காதலும் நடக்குது
கதைச் சத்தமும் கேட்குது
ஆட்களின் உருவமில்லை
அலையுதோ ஆவிகள் ?

சிரிப்பொலிகள் சிலநேரம்
அழுகை ஓலம் சிலநேரம்
அன்றைய பதுங்கு குழியோரம்
அடிக்கடி வருகுது சாமத்தில்
அலையுதோ ஆவிகள்?

அழியா நிமிடங்கள் (பக்கம் 21) என்ற கவிதை போரினால் ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசுகின்றது. கூரையில் நெருப்பும், வீட்டுக்குள் பிணங்களுமாய் கழிந்த காலங்களின்  வலி இக்கவிதையிலே தெரிகின்றது. மழலைகள் தம் செல்லப் பிராணிகள் இறந்ததற்காய் அழுகின்றனர். ஆனால் தன் தாய் தந்தையர் சந்தியடியில் வைத்து குண்டு துளைத்து இறந்ததை எப்படித்த தாங்குவர்? என்று வாசகர்களிடம் கேள்வி கேட்கிறார் கவிஞர் செந்தூரன்.

குண்டு மழை நனைக்க
கந்தகக் காற்று தாலாட்ட
சோக கீதம் ராகமிசைக்க
இரத்த நதியில் குளித்து
சாவு வாசல் தினம் தொட்டோம்

பானையிலே உணவு
அடுப்பிலே நெருப்பு
அடுக்களையில் கண்டிடலாம்
கூரையில் நெருப்பு
வீட்டுக்குள் பிணங்கள்
போர் மழையில் கண்டோமே

சுவரில் துளைச்ச குண்டு
மைபூச அது மறஞ்சிடும்
மனசில் விதைச்ச சோகமும்
மண்ணுள் போன மாணிக்க
மழலைகளின் ஏக்கங்களும்
எதை பூச மறையுமிங்கு...?

இப்படியும் இன்று (பக்கம் 26) என்ற கவிதை தற்காலத்தில் ஏற்ப்டும் சில காதல்கள் பற்றி சிறப்பாக எடுத்தியம்புகின்றது. தெய்வீகமாக நேசிக்கப்பட்ட காதல்கள் இன்று உணர்ச்சிகளின் உந்துதலாக மாறியிருக்கின்றது. பவ்வியமாக பார்க்கப்பட்ட காதல்கள் பள்ளியறைக் காதல்களாக ஆக்கப்பட்டிருக்கும் அசிங்கம் ஒருசிலரால் இன்று நடந்தேறுகின்றது, அத்தகையவர்களால் கற்புக்கான பெறுமதி காணாமல் போயிருக்கிறது. இத்தகைய விடயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் பின்வரமாறு..

நாகரீகம் சிகரத்தில் பெண்
நாணம் பள்ளத்தில்
தமிழ் மானம் பதியுது
பாவாடை கட்டையாகுது

கைபேசிக் காதலால்
காசிழந்தார் காளையர்கள்
காலவோட்டக் காதலால்
கற்பிழந்தார் சில காரிகையர்

ஒருத்தியின் பதறல் (பக்கம் 64) என்ற கவிதையிலும் போர் தந்து சோகம் பற்றியே சொல்லப்பட்டிருக்கின்றது. சைக்கிளை விற்று மூன்று கிலோ அரிசி வாங்கியும், மோதிரத்தை விற்று ஒரு தேங்காய் வாங்கியும் பிழைப்பை ஓட்டும் துயரமான வாழ்க்கை போர்ச் சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கிருந்தது. சேர்த்து வைத்த சொத்துப் பத்துக்கள் வீணாக தீக்கிரையாகின. சாமம் சாமமாக இடம்பெறும் இத்தகைய கொடுமையால் நாளை விடிவதற்கு முன் எத்தனை உயிர்கள் வீணாக மாய்ந்திருக்குமோ என்று ஏக்கம் கொள்வதாக அமைந்த அக்கவிதையின் சில வரிகள் இதோ..

மரணம் தின்ற
மரணியா நிமிடங்கள்
மறையாத கறையாகி
மனதை அறிக்கும் துயர்

துள்ளித் திரிந்த குழவிகள்
துருத்துருவாய் ஆன கதை
பள்ளிக் கட்டடங்கள்
மனித இறைச்சிக் கடைகள்

சேலைப்பை மண்மூட்டைகளும்
கூரைமரக் கட்டுகளும்
மண்மூடிக் கவசத்துடன்
அக்கால வசந்த மாளிகையாய்

மோட்டார் சைக்கிள் விற்று
மூன்று கிலோ அரிசி வாங்கினோம்
மாத்து மோதிரத்தை விற்று
தேங்காய் ஒன்றும் வாங்கினோம்

காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை என்பதற்கேற்ப இந்த கவிதை நூலிலும் என்னவளே... (பக்கம் 66) என்ற கவிதை இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கவிதையில் பள்ளிக்காதல் பற்றிய நினைவுகள் இழையோடுகின்றது.

ஆதிமுதல் அந்தம் வரை
அழகு நிறை அணங்கே
சோதியாய் உணர்வெழுப்பும்
சொர்க்க மலர்த்தேனே

அந்தி அரும்பும் வேளை
அன்னமுன் விழிவேலை
எந்தன் மீது எறிவாய்
எழில் சிந்தும் மானே

பள்ளியில் படிக்கும் போதே
பக்கப் பார்வை வீசுவேன்
பாவையுன் நினைவில் மூழ்கி
பாரிலென் நினைவை மறப்பேன்

காலம் தந்த சந்தோஷங்களும், காலத்தால் தரப்பட்ட காயங்களும் சிலரை சந்தர்ப்ப் கவிஞர்களாக மாற்றியிருந்தாலும், அடிப்படையில் இரசனை உள்ள அனைவருமே கவிஞர்கள்தான். தாம் பார்த்து, கேட்டு ரசித்தவற்றை தம் உணர்வுகள் வழியாக, கவிதைகளினூடாக சொல்லி முடிக்கும் திறனில்தான் கவிஞன் முழுமையடைகின்றான்.

அந்த வகையில் வன்னியூர் செந்தூரன், சமூகத்தின் இருப்பு நிலை குறித்த கவிதைகளையும், இறந்த கால நினைவுகளையும் தத்ரூபமாக சொல்லி வாசகர் மனதை கவர்ந்து விடுகின்றார். எதிர்காலத்தில் கவிதைத் துறையில் மட்டுமல்லாது சிறுகதை, நாவல், சிறுவர் பாடல், சிறுவர் கதைகள் யாவற்றிலும் அக்கரை செலுத்தி பல்துறைப் படைப்பாளியாக மிளிர வேண்டும் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றேன். இவரது இலக்கியப்பணி சிறப்புப் பெற முழுமனதுடன் இவரை வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - உயிர் வலித்த கணம்
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர் - வன்னியூர் செந்தூரன்
ஈமெயில் - vanniyoorsenthuran@gmail.com
வெளியீடு - செந்தணல் வெளியீடு
விலை - 240 ரூபாய்