Sunday, February 11, 2024

150. கவிமணி என். நஜ்முல் ஹுசைனின் ''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 கவிமணி என். நஜ்முல் ஹுசைனின்

''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்கள், பனித்தீ (1992), இனிவரும் நாட்களெல்லாம் (2017), நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் (2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதை உலகில் முத்திரை பதித்தவர். கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களின் நான்காவது நூல் வெளியீடாகவே "வேறாகா வேர்கள்" என்ற சிறுகதைத் தொகுதி ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. 


சிறுகதைகள் பற்றி வாசுதேவன் என்ற இந்திய அறிஞர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரமாகும். அதேபோல வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்துவிட்டுக் கவனிப்பதாகவே சிறுகதை அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோ தர்மத்தைப் பொறுத்தது என்று சிறுகதையின் போக்கைப் பற்றி விளக்கியுள்ளார். கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் கதைக்கரு, கதைமாந்தர், விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.

மனிதத்தை நேசிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் கவிமணி நஜ்முல் ஹுசைன் ஒரு நயகரா நீர் வீழ்ச்சி என்று நூலின் பின்னட்டையில் நூலாசிரியர் பற்றி இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்கள் குறிப்பிடுவது ஈழத்துக் கவிதை வரலாற்றில் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தவிர்க்க முடியாத ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. 

நூலுக்கான அணிந்துரையை இந்திய நாட்டைச் சேர்ந்த பன்னுலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்மல் முகம்மத் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதேபோன்று நூலுக்கான வாழ்த்துரைகளை பிரபல திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நூலாசிரியர், கலாபூஷணம் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் எம்.எஸ்.எம். ஜின்னா ஆகியோரும் வழங்கியுள்ளார்கள். அடுத்து கரிகாற்சோழன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் மூ. சிவலிங்கம் அவர்கள் 'கவிஞர் எழுதிய கதைகள்' என்ற தலைப்பில் நூலுக்கான நயவுரையை வழங்கியுள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ் தென்றல் அலி அக்பர் அவர்கள் நூலுக்கான வெளியிட்டுரையை வழங்கியுள்ளார்.

நூலாசிரியரின் கதைகள் யாவும் நேர்கொண்ட இலட்சியப் பார்வையாகவே தோன்றுகின்றன. எல்லாமே மனிதத்தைப் பாடும் கவிதைகளைப் போன்றே உள்ளன. மனிதாபிமானமே பேசு பொருளாக எல்லாக் கதைகளுக்குள்ளும் மின்னுகின்றன. மதத்தின் போதனைகளை, மார்க்கச் சிந்தனைகளை வாசகனிடம் திணிக்க வராமல் அதன் தத்துவார்த்தங்களை கதை மாந்தர்கள் ஊடாகவே சொல்லிப் போகின்றார் என்று நூலாசிரியரின் கதைகள் குறித்து மு. சிவலிங்கம் அவர்கள் தனது நயவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக நூலாசிரியர் வழங்கியுள்ள என்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'நான் சிறுவயதில் வாசித்த நூல்கள், சஞ்சிகைகள் போன்றன நாம் எப்போதுமே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், நாங்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை நிறையவே போதித்துள்ளன. அவையே எனது சிறுகதைகளில் பெரும்பாலான கருப்பொருள்களாக அமைகின்றன. எனது எழுத்துகள் எப்போதுமே எவரையும் தவறான பாதைகளில் அழைத்துச் சென்று விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன். ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது என்பதைவிட இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே சில கதைகளின் கருக்களாகும். கதையைப் படிப்பவர்கள், நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பார்களாயின் அதனை எனது எழுத்தின் வெற்றியாகவே கருதுவேன்' என்று குறிப்பிடுகின்றார்.

"வேறாகா வேர்கள்" என்ற இந்த நூல் 87 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. அவனில்லாமல் நானில்லை, நிலைக் கண்ணாடி, எனக்குக் கிடைக்கும், இப்படி செஞ்சிட்டீங்களே, இதயக் கன்னிக்கு பர்தா போடு, நடந்தது என்ன?, மீண்டும் டயானா, அருமையான என்விலப், வேறாகா வேர்கள், ஏன் சொல்லவில்லை?, தீர்க்கமான முடிவு, யார் அநாதை?, உயிர் காப்பான் தோழன், எந்த சீட் வேண்டும்?, கொடுத்து வைத்தவன், அசோகன் பிறந்தான், புதிய திருப்பம், யாருக்குப் பாராட்டு, உடைந்த சைக்கிள், கொள்ளைக்காரர்கள், உதாசீனம், கல்யாணமாம் கல்யாணம், உழைத்து வாழ வேண்டும் என்ற தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான 23 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன.

இனி மேலே தரப்பட்டுள்ள தலைப்புக்களில் உள்ள நூலாசிரியரின் சிறுகதைகளில் சிலவற்றை வாசகர்களது இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

எனக்கு கிடைக்கும் (பக்கம் 10) என்ற சிறுகதையானது தவறவிடப்பட்ட ஒரு பவுன் தங்க நாணயத்தைப் பற்றிப் பேசுகிறது. வழமையாக சில்லறைகளை யாசகமளிக்கும் நசீர் தவறுதலாக தங்க நாணயத்தை யாசகர் ஒருவருக்குக் கொடுக்கிறான். பிரிதொரு நாளில் அதே வழியாகச் செல்கையில் அந்த யாசகர் நசீரை இடைமறிக்கிறான். அவசரமாகப் போய்க் கொண்டிருந்த நசீர் அவனைத் திட்டிவிடுகிறான். உள்ளம் கேட்காமல் மீண்டும் யாசகம் கொடுக்க முனைகையில் முன்பு கொடுத்த அந்தத் தங்க நாணயத்தை யாசகன் நசீரிடம் திருப்பிக் கொடுக்கிறான். என்றாலும் நசீர் கொடுத்தது கொடுத்தது தான் என்று நினைக்கிறான். வறுமையிலும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மிக அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

இதயக்கனிக்கு பர்தா போடு (பக்கம் 17) என்ற கதையில் ஒரு பெண்ணினைத்தால் எத்தகைய செயலையும் இலகுவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபணம் ஆக்கி இருக்கிறார் கதாசிரியர். ரவுடித்தனம் கொண்ட ஒரு இளைஞனாக வலம் வரும் பாரூக் எல்லோரிடமும் கப்பம் கேட்டு மிரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடாத்தி வந்தான். ஆனாலும் ஊர்ப் பொது வேலைகளுக்கு உதவி செய்வான். கொண்டால் பாவம் தின்றால் போச்சு என்ற கூற்றுக்கிணங்க செயல்பட்டு வருபவன். பெண்களைக் கேலி செய்வதிலும் பாரூக் பின் நிற்கவில்லை. அவ்வாறு கேலி செய்யப்பட்ட பெண்களில் ஒருத்தியான பாஹிரா பர்தா இட்டு தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டாலும் பாரூக்கை மணமுடிக்க விருப்பப்படுகிறாள். இதை அறிந்த பாரூக்கின் மனம் துணுக்குறுகிறது. தன்னை நம்பும் பெண்ணுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் மனந்திருந்தி பாஹிராவுடன் தன் வாழ்க்கையை மிகவும் அழகாக நடாத்திச் செல்கிறான்.

நடந்தது என்ன (பக்கம் 22) என்ற கதையானது தவறான புரிந்துணர்வின் விளைவை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. தனது தங்கையான நசீமாவுக்கு, நசீர் மிக அழகிய முறையில் திருமணம் செய்து வைக்கிறான். எனினும் ஓரிரு மாதங்களில் அவளது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. காரணம் மாமியார் - மருமகள் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. இறுதியில் நசீராவுக்கு மாமியார் நஞ்சூட்டிக் கொள்ளப்பார்த்ததாக தனது தாய் சொல்லிய போது நசீர பதறிப் போகிறான்;. தங்கையின் விவாகரத்துக்காக விண்ணப்பிப்பதற்குச் செல்லும்போதுதான் தனது வைத்திய நண்பனைச் சந்திக்கிறான். இறுதியில் ஃபுட் பாய்சன் என்பதே 'பொய்சன்' - நஞ்சு என்று தவறாக விளங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து திகைத்து நிற்கிறான். 

உயிர் காப்பான் தோழன் (பக்கம் 46) என்ற கதையில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. தனது உயிர் நண்பனான ஜெகனின் நோய்த் தன்மை பற்றி பதறிக் கொண்டிருக்கிறான் சுரேஷ். சுரேஷின் புகைப் பழக்கத்தினால் ஏற்பட்டதே ஜெகனின் நுரையீரல் பாதிப்பு என்று வைத்தியர் கூறியதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைகிறான். புகைப்பிடிப்பவரைவிட அதனை சுவாசிப்பவரே அதிகம் பாதிப்படைவர் என்பதை இக்கதை மூலம் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

உடைந்த சைக்கிள் (பக்கம் 71) என்ற கதையானது நடுத்தர பெற்றோரின் பொருளாதார நிலையை கண் முன்னால் கொண்டு வருகிறது. தனது நான்கு வயது மகனுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான் நியாஸ். அது தற்போது உடைந்து உள்ளதால் அதை பழைய இரும்பு சேகரிப்பவரிடம் கொடுத்து ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்கிறான். இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான மின்சார கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது அவனது தற்போதைய தேவையாக இருந்தது. ஆனால் பழைய இரும்பு சேகரிப்பவனோ முந்நூறு ரூபாய் தருவதாக கூறி அந்த சைக்கிளைக் கேட்கிறான். மேலும் தனது மகனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவனது நீண்ட நாள் ஆசையை அவன் சொன்னதும் நியாஸின் மனைவி அந்த சைக்கிளை இலவசமாகவே கொடுக்குமாறு தனது கணவனுக்குக் கூறுவதோடு அதைத் திருத்தி அமைக்க ஐந்நூறு ரூபாவையும் சேர்த்தே கொடுக்குமாறும் கூறுகிறார். இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வாசகர்கள் எளிதாக உணரும் வண்ணம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையுமே ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருக்களைச் சுமந்துள்ளமை மிகவும் சிறப்பு அலுப்புப் தட்டாத பாணியும் கதையின் இறுதி முடிவும் அடுத்த கதையை வாசிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளது. நூலாசிரியரிடமிருந்து இன்னும் இன்னும் பல சிறுகதைகளையும் பல படைப்புகளையும் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


நூல் - வேறாகா வேர்கள்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியரியர் - என். நஜ்முல் ஹுசைன்

வெளியீடு - ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்

விலை - 650 ரூபாய்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


குறிப்பு:- 

இந்த நூலுக்கான பத்திரிகை விமர்சனம் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழில் இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. 

நூல் விமர்சனத்தின் முதலாம் பகுதி 2024.01.28 செந்தூரம் இதழிலும் இதன் மிகுதிப் பகுதி 2024.02.11 செந்தூரம் இதழிலும் வெளிவந்தது. 




149. 'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்                   

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


1975 ஆம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் 'பூவும் பொட்டும் - மங்கையர் மஞ்சரி' என்ற நிகழ்ச்சி மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவரே கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள். 1977 ஆம் ஆண்டளவில் பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'உதயம்' பத்திரிகையில்தான் இவருடைய கன்னிக் கவிதையான 'பாவி நான் என்ன செய்வேன்?' என்ற தலைப்பில் அமைந்த கவிதை பிரசுரமாகியது.

இவர் 1980 முதல் 1990 வரையான காலப் பகுதியில் தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தில் பத்திரிகையாளராகவும் உதவி ஆசிரியராகவும் அத்துடன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சகப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஜனனி பத்திரிகையில் 'அரிவையர் அரங்கம்' என்ற மாதர் பகுதியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

1994 இல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக (Press Officer) நியமனம் பெற்ற இவர், 2000 ஆம் வருடத்தில் அரசாங்கத் தகவல் அதிகாரியாக (Information Officer) பதவி உயர்வு பெற்றார். அக்காலப் பகுதியில் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும், 'புத்தொளி' என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 

தவிர அத் திணைக்களத்தினால் 40 வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவரும் 'தெசத்திய' என்ற சிங்களச் சஞ்சிகையில் இவரால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட அரசியல் தலைவர்களின் நேர்காணல் தொடருக்காக 'இன ஐக்கியத்திற்கான ஊடகப் பங்களிப்பு' செய்தவர் என்ற வகையில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணிபுரிந்து வரும் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் பத்திரிகைகளில் வெளிவந்த தனது கட்டுரைகள் சிலவற்றையும் அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் சிலவற்றையும் ஒன்று திரட்டி, 1997 இல் தனது தலைப் பிரசவ நூலாக 'பண் பாடும் பெண்' என்ற நூலை வெளியிட்டார். 

பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பலரின் தகவல்களை ஒன்று திரட்டி மின்னும் தாரகைகள் என்ற பெயரில் கனதியான ஆய்வு நூலை 2018 ஆம் ஆண்டு வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டு திதுலன தாரக்கா என்ற பெயரில் மின்னும் தாரகைகள் நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்ப்புச் செய்து வெளியீடு செய்தார். இந்த நூல் வெளியீடானது சிங்கள மொழியில் இவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் புலமையினால் மட்டுமே சாத்தியமானது என்று குறிப்பிட்டுக் கூறலாம். 

கவிதை மீது இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பூஞ்செண்டு என்ற கவிதை நூல் இன்று வெளிவருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கவிதைப் பிரியர்களுக்கு இந்த பூஞ்செண்டு நூல் ஒரு விசேட பரிசாக அமையும் என்றே நினைக்கின்றேன்.

பத்திரிகைகளில் மலர்ந்து வெளியான கவிதைப் பூக்களை ஒன்று திரட்டி வெளியிடப்படும் 'பூஞ்செண்டு' என்ற கவிதை நூல் நானிலமெங்கும் நறுமணம் பரப்பி, இலக்கியவாதிகளின் இதயங்களைக் கவர்ந்திழுக்கும் என நம்பலாம். 

இந்த நூலில் நூலாசிரியர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட நட்புக்கு சுமார் 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 'உன்னிடத்தில் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் தேய்த்துப்பார்' என்கிறார் உலக மகாகவி அல்லாமா இக்பால் அவர்கள். 

இந்த மாபெரும் உலகக் கவிஞரின் கூற்றுக்கிணங்க இந்த 40 ஆண்டுகளில் அதாவது 1975 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது கவிதை என்று நான் கிறுக்கியவைகள் ஏராளம் தாராளம். அவற்றில் பெரும் எண்ணிக்கையானவை தினசரி நாளேடுகளிலும் வாராந்த, மாதாந்த பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலி தமிழ்ச் சேவை, முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும் இவை ஒலிபரப்பாகியுள்ளன. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எனது கவிதைகளை செப்பனிட்டது நான் கடமை புரிந்த தினபதி - சிந்தாமணி பத்திரிகைகள்தாம். படிப்படியாக பெரிய கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அக் கவிதைகள் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் நேரடி பார்வையுடன் பிரசுரமாகும் என்று தனதுரையில் கவிதைக்கும் தனக்குமான நெருங்கிய தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் என்னுயிர் பெற்றோருக்காகவும் மேலும் பலருக்காகவும் என்னால் பாடப்பட்ட கவிதைகள், நூல் வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய வாழ்த்துக் கவிதைகள், வானொலியிலும் தொலைகாட்சியிலும் சமீப காலமாக நான் பாடிய கவிதைகள் போன்றவைகளே இந்த பூஞ்செண்டை அலங்கரிக்கும் கவிப் பூக்களாகும் என்று நூலில் இடம் பிடித்துள்ள தனது 31 கவிதைகள் பற்றியும் அவர் கூறி நிற்கின்றார்.

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நம் கவிஞர் கவிதைகளை எழுதவில்லை. சில கவிதைகளைப் போட்டிகளுக்காகவும் எழுதி பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இனி இந்த நூலில் இடம் பிடித்துள்ள சில கவிதைகளை வாசகர்களுக்காக எடுத்து நோக்குவது பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வின் அருள் மழை! என்ற தலைப்பில் அமைந்த முதலாவது கவிதை உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ்வைப் பற்றிப் பேசுகிறது. 

நடப்பவை யாவும் இறைவனின் நாட்டம் என்ற எண்ணப்பாட்டில் வாழ்ந்து  வருபவர்கள் எதிலும் இறைவனின் திருப்பொருத்தத்தைத்தான் தேடுவார்கள். இன்பங்களுக்கு நன்றி கூறியும் துன்பங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்டும் தம் மனதை சமநிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இறை நம்பிக்கையாளர்களுக்கு காணப்படுகிறது. அந்த ஏகனைப் பற்றி பாடிய கவிதையின் சில வரிகள் இதோ:-

இல்லார்க் கிரங்கிடுவோன் அல்லாஹ்

இன்னல்களை போக்குபவன் அல்லாஹ்

கல்லார்க்கும் இரங்குவோன் அல்லாஹ்

கல்லாமையைப் போக்குபவனும் அல்லாஹ்


அன்பை வளர்ப்பவன் அல்லாஹ் - நல்ல

அறத்தினைக் காப்பவன் அல்லாஹ்

தீமையை வெறுப்பவன் அல்லாஹ் - நல்ல

தீர்வினை உடையவன் அல்லாஹ்

2001.06.05 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மீலாத் தின விசேட கவியரங்கக் கவிதையாக ஒலிபரப்பான மாதருக்கு விடுதலை வாங்கித் தந்த மாநபிகள்! என்ற தலைப்பில் அமைந்த கவிதை பூஞ்செண்டை அலங்கரித்துள்ள மற்றுமொரு கவிதையாகும்.

உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்தவர்தான் நம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இஸ்லாமிய மார்க்கம் தழைத்தோங்குவதற்கு தன்னாலான சகல தியாகங்களையும் செய்தவர் நம் நபியவர்கள். ஜாஹிலிய்யாக் காலக் கொள்கைகளை விட்டும் மக்களை நல்வழியின் பால் மாற்றியவர். மறுமை நாளிலும்கூட எல்லா நபிமார்களும் யா நப்ஸி என தன்னைப் பற்றி எண்ணும் போது யா உம்மத்தி என தன் கூட்டத்தாரைப் பற்றி மாத்திரம் எண்ணுகின்ற உத்தமர் நபியவர்கள். அத்தகைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய கவிதையின் வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

உலகத்தை உய்விக்க வந்த எங்கள்

உயர்வு நபி நாயகமே உரிமைத் தந்தார்

உலகத்து மாந்தருக்கு: அதனால் இன்று

உவகையுடன் வாழுகின்றார் பெண்கள் இங்கு

கலகத்தை உருவாக்கி மாந்தர் கூட்டம்

கவலையுடன் வாழ்ந்திருந்த அந்த நாளில்

நிலவொத்த குளிர்ச்சியுடன் வந்த அண்ணல்

நிலமெங்கும் பெண் பெருமை கூறி நின்றார்


ஜொலிக்கின்ற விண் மீனாய் மாதர் கூட்டம்

ஜகத்தினிலே இருக்கின்றார் அவர்கள் பெருமை

ஒலிக்கின்ற வேளைதான் உலகம் கூட

ஒப்பற்ற விடுதலையைக் கண்டு நிற்கும்

பலிக்கின்ற பயன் காண்பார் கனவு எல்லாம்

பெண்ணினத்தை பெருமையுறச் செய்தாரென்றால்

சிலிர்க்கின்ற வழியினிலே செம்மல் நபியும்

சீரான கருத்துக்கள் சொல்லி வைத்தார்


தமிழ்நாடு வளரி கவிதை இதழும் டென்மார்க் சிவமீரா அறக்கட்டளையும் 2016 ஆண்டு நடத்திய சிவமீரா கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதையாக மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப் போது? என்ற கவிதை அமைந்துள்ளது.

மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசாத கவிஞர்கள் இல்லை எனலாம். நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பெரும் துணை புரிகின்ற மலையகத்துப் பெண்கள் என்றும் கௌரவித்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சிலவேளைகளில் தேயிலை பறிக்கும் ஒரு இயந்திரமாகவும் மாத்திரமே பார்க்கப்படுகின்றார்கள் என்பது பெருங்கவலையாகும். மழை, வெயில் என்று பாராது உழைக்கும் அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னைய காலத்தைவிட தற்காலத்தில் ஒப்பிடும்போது மலையக மக்கள் இன்று தம்மளவில் முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்வான ஒரு விடயமாக அமைகின்றது. அவர்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இதோ:- 


மழை பெய்தால் மலையகத்தில் மண் சரிவாம்

தெரிந்த கதை தானிது? தீர்வுதான் எப்போது?

மண் சரிவால் ஒரு கிராமமே புதையுண்டது

கிராமம் மட்டுமா புதைந்தது?

கிராமத்தில் வாழ்ந்த மக்களுமல்லவா

புதையுண்டு போனார்கள்?

விருட்சமாய் வளர வேண்டியவர்கள்

வெறும் விதையாகிப் போனார்களே?

ஐயகோ பொறுக்குதில்லையே

எந்தன் நெஞ்சம்?

சொத்தில்லை சுகமில்லை

சொந்தங்களும் இல்லை

இனி யாருக்கு நிவாரணம்?

யாருக்கு நஷ்ட ஈடு?

கண் கெட்ட பின்னா சூரிய நமஸ்காரம்?


என்று அந்தக் கவிதை மலையக மக்களின் சோகங்களைத் தாங்கி நிற்கின்றது.

அடுத்து 2007.10.30 இல் காலமான தனது தந்தையின் நினைவாக தந்தைக்கோர் கண்ணீர்க் கவிதை! என்ற தலைப்பில் நெஞ்சத்தை உருக்கும் ஒரு கவிதையை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். இந்தக் கவிதை 2008.02.24 ஆம் திகதி நவமணிப் பத்திரிகையிலும் இடம் பெற்றிருக்கிறது. 

தொடர்ந்து 1999.02.05 இல் கொழும்பு கொம்பனித் தெரு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற தமிழ்மணி மானா மக்கீன் அவர்களின் ஷஷஇலங்கை கீழக்கரை இனிய தொடர்புகள்|| என்ற ஆய்வு நூல் அறிமுக விழாவின் போது நூலாசிரியரினால் பாடப்பட்ட மானா நானா கஸ்தூரி மானா? என்ற தலைப்பில் அமைந்த கவிதையொன்றையும் வாசகர்கள் தரிசிக்க வழி செய்துள்ளார் நூலாசிரியர்.

அடுத்து 2015.04.19 ஆம் திகதியன்று இறையடி எய்திய தனது தாயாரான மர்ஹூமா ஹாஜியானி உம்மு சல்மா ரஷீத் அவர்களின் நினைவாகவும் உம்மாவுக்கோர் கண்ணீர் கவிதை என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். இந்தக் கவிதை தினகரன் பத்திரிகையின் புதுப்புனல் பகுதியிலும் பிரசுரமாகியுள்ளது.


உதிரத்தைப் பாலாக்கி

சரீரத்தைச் சாறாக்கித்தானே - எமை

ஆளாக்கினீர்கள் உம்மா!

நாம் சூரியனாய்ப் பிரகாசிப்பதற்காய்

சந்திரனாய் தேய்ந்து போனீர்களே நீங்கள்..


பசித்திருந்து, விழித்திருந்து

உம்மா நீங்கள் எமக்காக

பட்ட கஷ்டம் ஒன்றா? இரண்டா?

நாம் எடுத்துச் சொல்ல?


வறுமை எனும் முள்

உம்மைக் குத்திய போதும்

மலராய் எமை

மணக்கச் செய்தீர்கள்!


என்று தாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலும் தம்மைச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கியமை பற்றி நன்றியோடும் கண்ணீரோடும் நினைவுகூருகின்றார் நூருல் அயின் அவர்கள்.

இந்தக் கவிதைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது போன்றேதான் எனது தாயாரைப் பிரிந்த சோகம் எனது தொண்டையை இந்த நிமிடம் வரை அடைத்து நிற்கிறது.


மீளாத் துயரில் எமை

ஆழ்த்தி விட்டு - நீங்கள்

மீளாத் துயில் கொண்டதேன் உம்மா! 


என்றே எனக்கும் சத்தமிட்டுக் கேட்கக் தோன்றுகின்றது.

பத்திரிகைத் துறையில் தனக்கு வழிகாட்டியாக இருந்த இரத்தின சிங்கம் ஐயா மற்றும் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் ஐயா ஆகியோர் பற்றியும் இருவர் நாமமும் வாழும்! என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். 

தனது எல்லாக் காரியங்களுக்கும் தன்னுடன் கைகோர்க்கும் தனது பாசமிகு கணவர் நஜ்முல் ஹுசைன் அவர்களுக்காகவும் என் சுவாசமே நீதான்! என்ற தலைப்பில் ஒரு கவிதையை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். 


என் வாழ்க்கைக்கு வரமானவரே

என் எழுத்துக்கு உரமானவரே


உள்ளத்தால் உயர்ந்தவரே

உம்மளவில் உளரோ யாரும்?

எறும்புக்கும் கருணை காட்டும்

கரும்புள்ளம் கொண்டவரே - உமை

கரம் பிடித்ததில் நானும்

களிப்புற்றேன் தினம் தினம்


என் உயிருக்கு உயிரானவரே!

உள்ளமெல்லாம் நிறைந்தவரே - என்

உதிரத்தில் கலந்தவரே - புவி

அதிரக் கூறுகிறேன்..

நீ தானே! எந்தன் உலகம்

நினைவெல்லாம் நீயே தான்

கனவெல்லாம் நீயே தான்!

மனமெல்லாம் நீயே தான்!


என்று தனது பாசக் கணவருக்காக கவிதை வரிகளில் மிகவும் உருகி நிற்கின்றார்.

2013.09.11 இல் இறையழைப்பை ஏற்றுக்கொண்ட தனது தம்பி மௌலவி அல்ஹாஜ் ரசீத் எம். ராஸிக் அவர்களுக்காகவும் மறுமையில் எங்களின் முதலீடு நீதான் தம்பி! என்ற ஒரு கவிதையை எழுதி கண் கலங்கி நிற்கின்றார் நம் நூலாசிரியர்.


ஒரு தாய்ப் பிள்ளையாக பிறந்தவர் நாம்

ஒரே கருப்பையில் உதித்தவர் நாம்

ஈருடலானாலும் ஓருயிராய் வாழ்ந்தவர் நாம்

இன்று உம் உயிர் பிரிந்ததனால்

வெறும் உயிரற்ற ஜடமாய் நான்


2016.03.20 இல் எனது நண்பி தியத்தலாவை எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் நூல் வெளியீட்டில் பாடிய வாழ்த்துக் கவிதையையும் இந்த நூலில் சேர்த்துள்ளார் நூலாசிரியர்.

ஊடகத் துறையில் உயர் பதவியில் நீண்ட காலம் பணிபுரிந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் என நூலாசிரியரைக் கூறுவதில் நம் சமூகம் பெருமைப்பட முடியும். அந்தளவுக்கு ஊடகத் துறைக்கும் இவருக்குமான தொடர்பு மிக நெறுங்கியதாகக் காணப்படுகிறது. இவரது இலக்கியப் பயணமும் ஊடகப் பயணமும் மேலும் சிறப்பாகத் தொடர எனது வாழ்த்துக்கள்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்