Monday, September 17, 2012

31. மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - கவிதைத் தொகுதி

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஜீவநதி பதிப்பகத்தின் 10ஆவது வெளியீடாக வெ. துஷ்யந்தனின் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தொகுதி 73 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. வெ. துஷ்யந்தன் ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 2011 இலேயே தனது இரண்டாவது வெளியீடாக மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்து, கவிதைத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார். இவர் ஜீவநதி சஞ்சிகையின் துணையாசிரியருமாவார்.

போர்க்கால கவிதைகளை சொல்வதிலும், அகநிலை சார்ந்த கவிதைகளை சொல்வதிலும் துஷ்யந்தனுக்கென்று ஒரு தனிப்பாணியுண்டு. அவரது இரண்டு கவிதைத் தொகுதிகளை வாசிக்கும் வாசகர்கள் அதனைக் கண்டுகொள்ளலாம்.



இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அகவயமானவை. அதே வேளையில் அர்த்தம் எதனையும் பாதிக்காத வெறும் மனோரதியக் கற்பனை வடிப்புகளுமல்ல. மாறாக அந்தரப்படும் ஆத்மாவொன்றின் ஏக்கப் பெருமூச்சை இக்கவிதை வரிகளில் நாமும் சுவாசிக்கிறோம். நல்ல வேளையாக ஆழ்ந்த சோகத்தினூடாக விரக்தியும், ஏமாற்றமும் தோன்றாமல் வைர நெஞ்சமும், புத்துயிர்ப்பும் தோன்றுவதனால் கவிதைதான் பிறக்கிறது என்கிறார். மேலும் துஷ்யந்தன் போர்க்காலத்தில் வாழ்ந்து, அவதிப்பட்டு மனம் சோர்ந்த வடபுல இளைஞர்கள் பரம்பரையில் ஒரு வகைமாதிரி யுவன். இந்த மகனுக்குள் சொல்லாத செய்திகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றையேனும் சொல்லாமற் சொல்லி விளங்கப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் என்றும் குறிப்பிடுகிறார்.

துஷ்யந்தன் தனதுரையில் எனது இரண்டு கவிதைத் தொகுதிகளையும் வெளியீடு செய்யும் காலப்பகுதி சிறிது காலமாக (ஒரு வருடமாக) இருப்பினும் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆரோக்கியமான மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ...படைப்பு மனம் என்பது பறந்துபட்டது. படைப்புக்கான கருவைப் பொறுத்தவரை புனைவுகளையும், கற்பனாவாதத்தையும் புகுத்துவதில் எதுவித உடன்பாடுகளும் எனக்கில்லை. உள்ளதை உள்ளவாற எழுத வேண்டும் என்பதே எனது அவா என்கிறார்.

நமது மனதுக்குள் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விடயங்களை வெளியே சொல்ல முடியாது. இன்றைய சூழ்நிலையில் உள்ளத்தை உறுத்துகின்ற பல சம்பவங்கள் நடந்தேறியபோதிலும் அதைத் தட்டிக் கேட்கும் வழிகள் தெரியாமல் தத்தளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் எல்லாம் எமது இதயத்தில் உள்ள வலிகளை வெள்ளைத் தாள்களில் மாத்திரமே பதிவு செய்ய முடிகின்றன. வாழ்வு குறித்த ஐயப்பாடுகளை சொல்லி நிற்கும் கவிதையாக புதிர்களால் நிறையும் வாழ்வு என்ற கவிதையைச் சொல்லலாம்.

வாழ்க்கையின் மௌனம் வாழ்தலை தொலைப்பதற்கான ஆயத்தங்களை அறிந்தோ, அறியாமலோ மனிதனுக்கு உணர்த்தியபடியே.. நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கான வாழ்தலில் நிரம்பியிருக்கின்ற பதில்கள் ஏதும் அற்ற எண்ணற்ற புதிர்களால் எதிர்காலம் மீதான எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி பயணித்துக்கொள்கின்றது இந்த வாழ்வு. (பக்கம் 10)

யுத்தம் தந்துவிட்டுப்போன தாக்கம் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதையில் தெரிகின்றது. தெருநாய்கள் மாத்திரமே சத்தமிடக்கூடிய கொடிய இரவுகளில் மனிதர்கள் பயந்து பயந்தே செத்துக்கொண்டிருந்த அந்தக் காலங்கள் பயங்கரமானவை, எப்போது விடியும் என்ற ஏக்கத்தில் இரவுகள் கழிந்தன என்றவாறான கருத்துக்கள் இக்கவிதையினூடு சொல்லப்படுகின்றது. (பக்கம் 22)

இன்னல்களோடு
இரண்டரக் கலந்துவிட்ட
இருண்ட இவ்
இரவுகள்
விடியலின் வருகைக்காய்
தவமிருந்தபடியே..

தூக்கமில்லாத விழிகள்
தினமும் விழித்தவாறே
விடியலை எதிர்பார்த்துக்
காத்துக்கிடக்கின்றன..

எழுத முடியாத எழில்கள் என்ற கவிதையில் வார்த்தையால் வடிக்க முடியாத சிலவிடயங்கள் பற்றி சொல்லயிருக்கிறார் துஷ்யந்தன். சில அழகான காட்சிகளையோ அழகான பொழுதுகளையோ அப்படியே வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை. அத்தகைய பொழுதுகளை; கீழுள்ளவையாக அடையாளம் காட்டியிருக்கிறார் நூலாசரியர். (பக்கம் 26)

சூரிய அஸ்தமனம், நிலவொளியலான இராத்திரி, நட்சத்திரக் கூட்டங்கள், கரையைத் தழுவும் அலைகள், தென்றல் மோதும் தென்னங்கீற்று, அம்மாவின் தாலாட்டு, காதலியின் கண்கள், மழலையின் சிரிப்பு இவை எல்லாம் வார்த்தைகளால் எழுதப்பட முடியாத எழில்கள்.. எழுதப் போயினும் வார்ததைகளுக்கான பஞ்சங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன..

நீயாகிப்போன நான் என்ற கவிதை காதல் கவிதையாக பரிணமித்திருக்கின்றது. ஆரம்பத்தில் காதலி தன்னை விட்டுப் போனதாகவும், அவர்களுக்குள் இருந்த நேசம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு அண்மைக்காலமாக விசாரிப்பதுமாக இருக்கிறாள் என்றும் கூறப்படும் அதே வேளை காதலன் ஒருபோதும் தன்னிலையிலிருந்து மாறாததால் மீண்டும் காதலியின் அன்பை எதிர்கொள்கின்றான் என்ற அடிப்படையில் அமைந்தருக்கின்றது இந்தக் கவிதை. (பக்கம் 29)

வலுப்பெறும் வலிகளோடும்
உன் நினைவுகளால் விளையும்
வாழ்வனுபவ புதிர்களோடும்
புலர்ந்துவிடுகின்றது
எனக்கான விடியல்கள்..

இருப்பினும் சில
நிர்ப்பந்தங்களின்
நிமிர்த்தமாக
கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
எனது இருப்பும் நேசமும்..

என் மீதான உன் பிரியமும்
உன் மீதான என் நேசமும்
நம் நாட்டு
போர்க்கால அகதிகளாய்
அவஸ்தைப்பட்டுக்கொள்கின்றன..

பேசா மடந்தையாய் என்ற கவிதையும் அகநிலை சார்ந்த கவிதையாக இருக்கின்றது. தனது அசைவுகள் மூலம் ஆணை தவிர்க்கும் பெண் தனக்குத் தெரியாமலேயே அந்த ஆடவனை நோக்குகின்றாள். ஆண் அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கான ஒத்திகை பார்க்கும் போது பெண்ணோ ஏதும் தெரியாதவளாய் கேள்விகளைத் தொடுக்கின்றாள். பெண்ணின் காதலுக்காக காத்திருக்கும் ஒருவனின் கவிதையாக இக்கவிதையைக் கொள்ளலாம். (பக்கம் 52)

எனக்குள் குவிந்து கிடக்கும்
உனக்கான வார்த்தைகள்
உன்னோடு பேசிக்கொள்வதற்கான
ஆயத்தங்களை என்னுள்
நிகழ்த்திக்கொள்கிறது..

நம்மிடையே
ஊசலாடிக்கொண்டிருக்கும்
உறவு நிலையின் மீது
ஏதும் தெரியாதவளாய் நீ
கேள்விக் கணைகளை
தொடுத்துக்கொள்கின்றாய்..

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கி தனது இரண்டாவது தொகுதியைத் தந்திருக்கும் துஷ்யந்தன், இன்னும் பரந்துபட்ட பல விடயங்களையும் தொட்டுக்காட்டி காத்திரமான பல கவிதைத் தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
மின்னஞ்சல் - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி வெளியீடு
விலை - 200/=