Sunday, September 22, 2019

126. பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்

பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்

"சித்தி ஸர்தாபி" என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸா 1933ஆம் ஆண்டில் ஹட்டனில் பிறந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த இவரது தந்தையார் மொஹிதீன் பாவா. இவரது தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்ந்தவர். இலங்கைப் பொலிஸ் சேவையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது  தந்தையாரின் இடமாற்றம் காரணமாகவே ஷர்புன்னிஸா பல்வேறு பிரதேசப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். காலப்போக்கில் கன்ஸுல் உலூம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தனது துணைவராக ஏற்றுக்கொண்டார். இலக்கியத்திலான ஈடுபாடே இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துள்ளது. இந்த இணைப்பே இவர்களை மென்மேலும் எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தது.

1948களில் எழுத்துலகில் பிரகாசித்தவரே ஷர்புன்னிஸா. முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி நினைத்தும் பார்க்காத அந்தக் காலத்தில் எழுத்துலகில் ஈடுபாடுகாட்டி வந்தார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாய் அமைந்த பெண்மணியான இவர், காலத்தின் தேவை கருதி கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் இவரது எழுத்து முயற்சியை செவ்வனே செய்து வந்தார். மட்டுமல்லாமல் 1948 – 1952 காலப் பகுதிகளில் இவரது தந்தையாரின் பிறப்பிடமான திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கிராமியப் பாடல்களைச் சேகரிப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபட்ட இவர் அவற்றை தனது கதைகளில் சேர்த்தும் கட்டுரைகளில் நயந்தும் நிறையவே எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் பேராதனை ஷர்புன்னிஸா என்ற யெரிலேயே தனது படைப்புக்களைக் களப்படுத்தி வந்துள்ளார். "பேசாமடந்தை" என்ற புனைப் பெயலிலும் சிலவற்றை எழுதியுள்ளார். தற்போது கண்டி மாவட்டத்திலுள்ள ஹீரஸ்ஸகல என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.

இவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்துப் ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் நிறையவே எழுதிவந்துள்ளார். "முஸ்லிம் பெண்களின் கல்வி", "முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும்", "முஸ்லிம் பெண்களும் அரசியலும்" போன்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை இவர் வீரகேசரிப் பத்திரிகையின் வனிதா மண்டலத்தில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் எதிர்கொண்டார். இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் மூத்த ஆளுமையான இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உடுநுவர தொகுதியின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட "மின்னும் தாரகைகள்" என்ற இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலில் இரண்டாவது ஆளுமையாக இவர் பற்றிய தகவல்களே காணப்படுகின்றன.

வாய்மொழியாக இருந்து வந்த இவர் நாட்டார் பாடல்களை நூலாக்கும் விருப்பத்துடன் 1996 இல் "கிராமிய மணம்" என்ற நூலை வெளியிட்டுள்ளார். கிராமிய மணங்கமழும் சிறந்த நாட்டார் பாடல்களை இந்த நூலில் வாசகர்கள் இரசிக்கலாம். தான் எழுதிய பல்வேறு சிறுகதைகளிலேயே இந்த நாட்டார் பாடல்களை மிகப் பொருத்தமான முறையில் உட்புகுத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். ஒரு கிராமத்தின் வெள்ளை இதயத்தை இவரது "கிராமிய மணம்" படம் பிடித்துக் காட்டுகிறது.

"எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி வாயிலாக எழுந்த இப்பாடல்களில் காணப்படும் இயற்கைச் சூழல், அதனோடு ஒட்டிய மண்வாசனை, இன்ப துன்ப உணர்வுகள், உறவுகள், உவமை உருவக அணிகள் என்பன கல்வி உலகையே கலக்கி நிற்கின்றதெனலாம். இதனால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டதன் விளைவே கிராமிய மணம்|| என்னும் இந்நூல்" என்று ஷர்புன்னிஸா தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுவதிலிருந்து அவரது நாட்டார் பாடல்கள் மீதான அதீத ஈடுபாட்டைக் கண்டுகொள்ள முடியும். 1950 - 1960 களில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சிந்தாமணி; ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும் தமிழ்நாட்டின் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த கிராமியக் கவிதைகளை அடக்கிய கதை, கட்டுரை வடிவங்கள் சிலவே இந்தக் "கிராமிய மணம்" நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

வாதம், புதிது, உறவு, உருக்கம், நினைவு, தவிப்பு, பிரிவு, இணைப்பு, ஒளி, ஒழுங்கு, மசக்கை, அமுது ஆகிய 12 தலைப்புக்களில் கிராமியப் பாடல்கள் கலந்த சிறுகதைகளை நூலில் காணலாம். இக்கதைகளுக்கெல்லாம் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வைரமுத்து, மருதகாசி, வாலி போன்ற பிரபல்யமான இந்தியக் கவிஞர்களது கவிதைத் துணுக்குகளைத் தலைப்பிட்டுள்ளதுடன் இலங்கைக் கவிஞர்களான பரீத் ஏ. ஜவ்ஸகி, அக்கரையூர் அப்துல் குத்தூஸ், அக்கரைப்பாக்கியன், கவிஞர் ஏ. இக்பால் ஆகியோரது இசைக் கவிதைகளையும் தலைப்பாக இட்டுள்ளார்.

இரசனைக்காக "புதிது" என்ற தலைப்பில் அமைந்த கதையைத் தருகின்றேன்.

"ஒரு மடமாது உருகுகின்றாளே
உனக்கேன் புரியவில்லை - இது
சோதனையா நெஞ்சில் வேதனையா - உன்
துணையேன் கிடைக்கவில்லை"

என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளோடு தொடங்குகிறது இந்தக் கதை.

உதுமா நாச்சி புதுமணப் பெண். அவளது கணவன் ஸாலிஹ். கரத்தையைக் கட்டிக்கொண்டு சுபஹுக்கு முன்பு போன கணவனை இரண்டு நாட்களாகியும் காணவில்லை. எங்கு போனார்? என்ன ஆனார்? ஒன்றுமே தெரியாது தவித்தாள் புதுமணப் பெண் உதுமா நாச்சி. மிகுந்த வேதனையால் அவள் துடிதுடித்தாள். இன்று வருவார், இப்போ வருவார் என்று தினமும் அரிசியைக் கொட்டி ருசியாக சமைத்து வைப்பாள். ஈற்றில் ஏமாந்த உள்ளம் உண்ண மனமில்லாமல் வெப்புசாரம் நெஞ்சடைத்துப் போவாள். ஆக்கிய சோற்றையும் கறியையும் கொட்டி அடுத்த வீட்டு பாத்தும்மாவுக்கு கொடுத்தே விடுவாள்.

அடுத்த நாளும் இன்றாவது கணவன் வருவார் என்ற ஏக்கத்துடன் நாவுக்கு ருசியாய் மீண்டும் ஆக்கி வைப்பாள். பாவம் பதுமைப் பெண், மீண்டும் ஏமாற்றமடைவாள். கணவனின் நினைவுகளாளே நாள் முழுவதும் உந்தப்பட்டிருந்த உதுமா நாச்சிக்கு அவ்வப்போது கணவன் வரும் கரத்தையின் ஓசை கேட்பது போலவும் நினைவு வரும். காதைக் கூர்மையாக்கி கதவின் ஓட்டை வழியே பார்த்து நிற்பாள். அவளுக்கு ஒன்றுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. கோபமும் கவலையும் அவளை ஆட்கொண்டன. மனது வெடித்தே போய்விடும் போலிருந்தது அவளுக்கு. இருளின் போர்வை எங்குமே இழுத்து மூடப்பட்டதான உணர்வு. எமது மனதை உருக்குகிறதல்லவா? பாவம் பேதை என்ன செய்வாள்?

கரத்தையைக் கட்டிக் கொண்டு ஸாலிஹ் தொழிலுக்கு சென்றாள் என்றால் மீண்டும் அவன் திரும்பி வர இரண்டு மூன்று நான்கு நாட்கள் என்று அவனது வேலைக்கேற்ப நாட்கள் கழியும். இந்தப் பிரிவே புதுமணப் பெண் உதுமா நாச்சியை மிகவும் வருத்திவிடும். இரவோடு இரவாக ஸாலிஹ் வந்தால் விடியும் முன்பே போய்விடுவான்.

இஷாவையும் தாண்டிய பொழுதொன்றில் வீட்டு வாசற் கதவு தட்டப்படும் ஓசை. உதுமா நாச்சி ஆசையோடு கதவருகே ஓடோடி வந்து அப்படியே கதவோரம் நின்றுவிட்டாள்.

".. பொடு பொடுத்து மழை பொழிந்து
பூமி எங்கும் தண்ணி ஓடக்
குடை பிடித்து வந்து சேர்ந்தும்
குணமணியே தூங்கிறியோ ..?"

கணவனது கவிக் குரல் அவளை எதிர்பார்த்திருந்தது. அவளோ ரோசக்காரி. கதவருகே நின்றபடி தன்னையே மறக்கிறாள்.

".. நித்திரைதான் கொண்டியளோ – என்
நினைவை மறந்தியளோ
கதவு திறக்காத
கருத்து என்ன என் கிளியே ..?"

மீண்டும் அவனின் கவிக் குரல். உதுமா நாச்சி ஆவலுடன் கதைவைத் திறக்கிறாள். ஏக்கமாய் கணவனைப் பார்த்த அவளது மனது கவியாகப் பறக்கிறது.

".. ஆக்கின சோத்தி லொரு
கல்லிருந்து மின்னுதல் போல்
போக்கணங் கெட்ட ராசாக்கு - ஒரு
பொண்ணிருந்து மின்னுதுகா .."

தன்னை மறந்து தொழிலே கதியென்று தன்னைப் பிரிந்து சென்ற நாட்களுக்காக கணவனைக் கடிந்து கொண்டாள் அவள். அவனும் என்ன செய்வான் அவளுக்காகத் தானே ஓடியோடி உழைக்கிறான்.

".. கண்டுக் கிளியே
கதை பழகும் நங்கணமே
இன்பக்கடலே என்னை
என்ன செய்யக் காத்திருந்தாய் ..?"

கணவனது இந்தக் கவிக் கணையால் உதுமா நாச்சி கன்னங்கள் சிவந்து நாணங்கொண்டாள். அவனது கரங்களில் புதைந்து கொண்டாள் அவள்.

இப்படி ஒரு யுகத்தின் சோகத்தையே இந்தக் கதை அப்பி நிற்கின்றது. இப்படி 12 கதைகள் நாட்டார் பாடல்கள் கலந்ததாய் வாசகர்கள் இரசித்து வாசிக்கலாம்.

பல்வேறு வகையான மன அழுத்தங்களால் மிகவும் இறுகிவிட்ட மனித மனங்களை இவ்வாறான சுவை ததும்பிய இலக்கியங்கள் இலேசாக்கிவிடும் என்பதில் ஐயமேயில்லை. இவ்வகையான இலக்கியங்கள் காலத்தின் தேவையாகும்.

கலாசார அமைச்சின் இந்து கலாசாரப் பகுதி 'தமிழ் ஒளி' எனும் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இவர் இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் அதிகமாகப் பெற்றுள்ளார் என்பது போற்றத்தக்கது. மலையக கலாசார பேரவை 'இரத்தின தீபம்' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கை அரசும் இவரது இலக்கிய சேவையை கௌரவித்து 'கலாபூஷணம்' விருதையும் வழங்கியுள்ளது.

ஷர்புன்னிஸா அவர்களின் இலக்கியப் பணி மகத்தானது. அந்தக் காலத்தில் நிகழ்த்திய இவரது மேடை உரைகள் கூட மிகவும் காத்திரமானதாகும். இஸ்லாமிய மகளிரின் கல்விக்காக குரல்கொடுத்த ஒரு மூத்த ஆளுமை இவர். 86 வயதுகளையும் தாண்டிய இவரது இலக்கியத் தொண்டுகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!

நூல் - கிராமிய மணம்
நூல் வகை - நாட்டார் கவிகளுடன் கூடிய சிறுகதை
நூலாசிரியர் - பேராதனை ஷர்புன்னிஸா
வெளியீடு - பேசும் பேனா வெளியீட்டகம்


125. வல்லூறின் வானம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

வல்லூறின் வானம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பல நூற்களுக்குச் சொந்தக்காரரான மருதூர் ஜமால்தீன் 'வல்லூறின் வானம்' எனும் கவிதைத் தொகுப்பிற்கும் இப்போது சொந்தமாகிவிட்டார். நூலாசிரியரின் 10 ஆவது நூலாகவே இந்த நூல் வெளிவந்துள்ளது. ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தடயங்கள், தாலாட்டு, வலிகள் சுமந்த தேசம், தீ நிலம் போன்ற கவிதை நூல்களையும் ரமழான் ஸலவாத், கிழக்கின் பெருவெள்ளக் காவியம், முஹம்மத் (ஸல்) புகழ் மாலை, இஸ்லாமிய கீதங்கள், பத்ர் யுத்தம் (ஸலவாத் மாலை) போன்ற படைப்புக்களையும் ஏற்கனவே இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்.

அண்மையில் வெளிவந்துள்ள 'வல்லூறின் வானம்' எனும் கவிதைத் தொகுப்புப் பற்றி கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் குறிப்பிடுகையில், ''இறை சிந்தனையில், இலங்கும் கவிஞர் சமூகப் பிரச்சினைகள் கண்டு, சங்கடங்கள் கொண்டு உள்ளக்கிடக்கைகள் கொட்டி, சமூக விளிப்புணர்வைத்தட்டி, உள்ளது உள்ளபடியே கண்ணாடியாய் நின்று முன்னாடி நடக்கின்ற அநியாயங்களை, அத்துமீறல்களை, அரசியல் நாடகங்களை, அடாவடித்தனங்களை குத்திக்காட்டும் குத்தீட்டியாய், வெட்டிவிட நினைக்கும் வீர வாளாய்த் தனது வரிகளை வடிவமைத்திருக்கிறார்| எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ஷஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் இருக்க வேண்டிய சமய சமூக ரீதியிலான பற்றுதலும் பிடிமானமும், அநீதி கண்டு பொங்கியெழும் ஆழ்ந்த பார்வையும் கவிஞரிடத்தில் அபரிமிதமாகவே காணப்படுகிறது'' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது சமூகப் பற்று நன்கு புலனாகின்றது.

வல்லூறின் வானம் என்ற இந்தக் கவிதை நூலானது சமூகத்தில் நிலவும் இனவாதச் செயல்களை சுட்டிக் காட்டுவதாகவும் தட்டிக் கேட்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இனப் பகையைக் கலைந்து ஒற்றுமையை நிலைநிறுத்த தனது கவிதைகள் மூலம் மருதூர் ஜமால்தீன் அவர்கள் அரும்பாடுபடுகின்றார். மரபு வடிவில் அமைந்த நூலாசிரியரின் இந்தக் கவிதைகள் நூலில் பல தலைப்புக்களில் அமைந்துள்ளன.

'எவர் கண்பட்டதோ?' என்ற கவிதையில், எத்தனை எத்தனையோ இழப்புக்கள், சோதனைகள் எம் தாய்த்திரு நாட்டில் வந்திருந்தும் அத்தனை அவலங்களையும் தீர்த்துக்கொண்டு வருகின்றவேளை இன்னுமொரு இனத்தீ புகைத்திட வேண்டுமா எனக் கேட்கின்ற இவர் பின்வருமாறு தனது ஆதங்கத்தை இறைவனிடம் கூறி நிற்கின்றார் கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்கள்.

ஒற்றுமையென்ற உயர்கொடியை
உயர்த்திப் பிடிக்கும் நிலைதவறி
பற்றுக்கள் வளரா பகை விளைத்து
பரிதவித்திடவே வினை தூவும்
புற்றுள நெஞ்சோர் வன்முறையை
புதிதாய் விதைக்கும் முறையென்ன
இற்றரை மீதில் மீண்டுமொரு
இனவன்செயலா இறையோனே!

'மனிதம் வாழ வேண்டும்' என்ற கவிதையில் சமூகத்தில் தீய செயல்களை விதைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயற்படுவோரை உள்ளம் மாசடைந்து கெட்டுப் போனவர்களாகக் குறிப்பிடும் இவர், அவர்கள் உண்மையான நேர்வழியில் முட்களைத் தூவி அதில் பயணிப்போரை இடர்படுத்துவதாக விபரிக்கும் இவர் அதன் ஈற்றில் மனிதாபிமானத்தையும் மனித நேசத்தையும் கொண்ட மனிதர்களை, பின்வருமாறு போற்றுகின்றார்.

மக்கள் வாழவுழைத்திங்கு
மனிதம் வாழ பதிசெழிக்க
தக்கோர் உறவில் கரம்கோர்த்து
தன்மைத் தூய மனங்கொண்டு
மிக்கோர் பணிகள் புரிவதுவே
முனையும் நன்மைச் செயலாகும்
இக்காலையாம் சிந்திப்போம்
இனிய மனிதம் போற்றிடுவோம்!

'ஒன்று சேர்வோம்' என்ற பின்வரும் கவிதையின் மூலம் சமூக ஒற்றுமைக்கு பாலமிடுகிறார் கவிஞர்.

இத்தரை வாழ்ந்திடும் பல்லினத்தோர்
இன்புற்று வாழ்ந்தி;டவும் ஒற்றுமைக்கு
சுத்தான விதை தூவி நல்லதோர் வழியை
சாதி மத குலப் பகையைத் தூர வீசி
புத்தியில் நல்லறிவோடு கருத்தைச் சிந்தி
புதியதொரு சமூக நல்லெழுச்சிக்காய்
நித்தமும் உழைத்திடக் கரங்கள் சேர்த்து
நலம் நாடு பெற்றிட ஒன்று சேர்வோம்!

விரிசல் அடைந்துள்ள இன ஒற்றுமையை மறுசீரமைக்க இவ்வாறான கவிதைகள் காலத்தின் தேவையாக அமைந்துள்ளன.  தலைவிரித்தாடும் இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே கவிஞரின் தலையாய நோக்கமாகும், இதனையே மேற்படி கவிதை வரிகள் பறைசாற்றுகின்றன.

பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு, இறுதி வெற்றி என்பன இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்த இவர், இறுதியாக ஷதுஆ ஏற்பாய்| என்ற கவிதையில் பகைவனிடமிருந்து காத்திடுமாறு படைத்தவனையே பின்வருமாறு வேண்டி நிற்கிறார்.

கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொழுந்துவிட்டுக் குளிர்காய
சிலைவாழ்வில் பயணிக்கும்
சிந்தையிலாத் தீயோரின்
நிலையற்ற வன்செயலால்
நிம்மதியைக் கெடுத்தெம்மைக்
கலைத்துவிடத் துடிக்கின்றார்
காத்திடுவாய் ரஹ்மானே!

மருதூர் ஜமால்தீன் தனது இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து மேலும் காத்திரமான நூல்களை வெளியிட வாழ்த்துகிறேன்.

நூல் - வல்லூறின் வானம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
விலை - 100 ரூபாய்
தொலைபேசி - 0775590611

Sunday, August 4, 2019

124. தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மூத்த எழுத்தாளர் 'லைட் ரீடிங்' புகழ் மானா மக்கீன் அவர்கள் எழுதி வெளியிடும் ஆய்வு நூலே இலங்கை - மலைக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற நூலாகும். கலாபூஷணம், மானா மக்கீன் அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிப் பணி புரிந்தவர். எம்.எம். மக்கீன் என்ற இயற்பெயரையுடைய இவரது இலக்கியச் சேவைகளை எழுதுவதென்றால் இந்தப் பக்கம் இதற்கு இடந்தராது. அந்தளவில் இவரது இலக்கியப் பணிகள் பரந்துபட்டது. மானா மக்கீன் என்ற ஒரு வித்தியாசமான எழுத்தாளரைத் தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவில் இவரது புகழ் நம்நாட்டில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் ஓங்கியுள்ளது. இவரது துணைவியார் நூர் மின்ஷா, ஒரே மகள் வைத்திய கலாநிதி அஞ்சானா, அதேபோல் ஒரே மகன் பொறியியராளர் அஸீம் அகமது. இவர்கள் யாவரும் இந்த நூலாசிரியரின் எழுத்து முயற்சிகளுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தவர்கள்.


நாடகப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு நிலவிய 1950 - 1960 களில் பேராசிரியர் சரத்சந்திரா சிங்கள அரங்கிற்கு வழங்கிக்கொண்டிருந்த சமயம் இதன்பால் கவரப்பட்டவரே இந்த நூலாசிரியர். 1937.05.29 ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர் மருதானை சாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தெடுத்தவர், எமது தென்னிலங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் திக்குவல்லை எம்.ஏ. முஹம்மத் என்பதில் நானும் பெருமையடைகின்றேன். 1955 இலேயே இவரது முதலாவது நாடகம் ரேடியோ சிலோன் (தற்போது இலங்கை வானொலி) சிறுவர் மலர் நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது.

அரச பத்திரிகையான தினகரனில் பத்தி எழுத்தாளராகவும், செய்தியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய இவர், தினகரனில் தொடர்ந்து எழுதிய 'லைட் ரீடிங்' என்ற பகுதி வாசகர்கள் பலரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது. 'நிலா' என்ற பெயரில் பல்சுவைச் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டு சஞ்சிகைத் துறையிலும் இவர் தனது பணியைத் திறம்படச் செய்துள்ளார். பன்னூலாசிரியராகத் திகழும் இவர் இதுவரை 40 நூல்களுக்கும் அதிகமாக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்திருப்பது பாராட்டத்தக்கது.

கல்கண்டு இதழால் கவரப்பட்ட இவருடைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், தினக்குரல் போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகளிலும் கண்ணன், பூஞ்சோலை, அமுதம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதோடு வாரா வாரம் ஒலிபரப்பாகும் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் களங்கண்டுள்ளன.

நாடகாசிரியராக, நெறியாளராக, மொழிபெயர்ப்பாளராக, இலக்கியவாதியாக, சஞ்சிகையாசிரியராக, ஆய்வாளராக, வானொலி நாடகப் பிரதி எழுத்தாளராக, பொப் இசை நிகழ்ச்சிகள் அமைப்பாளராக, ஊடகவியலாளராக என்று பல துறைகளிலும் இலக்கியப் பணிகளைப் புரியும் இவரது ஆளுமைமிக்க இலக்கியப் பங்களிப்புக்களுக்காக தாஜுல் உலூம் (1991), தமிழ் மணி (1992), தமிழ்க் குமரன் (1994), கலாபூஷணம் (2004), தேசத்தின் கண் (2005), இலக்கிய நிறைமதி (2007), வாழ்நாள் சாதனையாளர் (2017) ஆகிய பட்டங்களை நம் நாட்டிலும், தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கம் 'எழுத்து வேந்தன்' (1994), தமிழ்நாடு பண்பாட்டு நட்புறவு மன்றம் 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' (2007) என்ற விருதையும் மற்றும் 'முத்தமிழ் வித்தகர்' (1996), 'ஆய்வு இலக்கியச் சுடர்' (1999), 'சேவைச் செம்மல'| (2011) ஆகிய விருதுகளை தமிழ் நாட்டிலும் தமிழ்க் காவலன் (1996) என்ற விருதை தாய்லாந்து நாட்டிலும் 'இலக்கிய சிரோமணி' (1999) என்ற விருதை மலேசிய நாட்டிலும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

சிறுகதைத் துறையிலும் இவருடைய ஈடுபாடு அதிகம். முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'றகுமத்தும்மா' என்ற இவரது சிறுகதை இதற்குச் சான்று. பின்னாட்களில் இந்தச் சிறுகதையை தமிழக இதழ்களும் மீள்பிரசுரம் செய்திருப்பதும் முக்கியமான விடயமாக அமைகிறது.

இலங்கை - தமிழக இணைப்புப் பாலமான இவர் பன்முக ஆற்றலுள்ள ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதில் சந்தேகமேயில்லை. இவர் தொடாத துறை என்றால் அது கவிதைத் துறை மட்டுமே. கவிதைத் துறையில் இவருக்கு நாட்டமில்லாமல் போனமைக்கான காரணம் தெரியவில்லை. மட்டுமல்லாமல் கவிதைத் துறையை இவர் ஊக்குவிக்கவும் விரும்பவில்லை என்ற விடயம் கவிஞர்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக அமைகின்றது. எதனையும் மனதில் வைத்திராத குணம் இவருடையது. சிலவேளை பட்டாசு போன்று தனது கருத்துக்களை வெடித்துரைப்பார். புதுமையாகவும், புரட்சியாகவும், தனித்துவமாகவும் தனது பணிகளைச் செய்ய வேண்டும் என்ற இவரது ஆர்வத்தை கானக நிலா நூலிலும், இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் காண முடியும். இனி இவரது நூலிலிருந்து வாசகர்களுக்காகச் சில தகவல்களை தரலாம் என்று நினைக்கிறேன்.

சென்னை தாழையான் பதிப்பகம் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியிட்டுள்ள இந்த இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற ஆய்வு நூல் தமிழகத்திலிருந்து 1949 இல் இலங்கை வந்து 1962 வரை அதாவது 14 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து வந்த பீரங்கிப் பேச்சாளர் டியெம்பி என்று அழைக்கப்படும் டி.எம். பீர் முகம்மத் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். இலங்கையில் வாழ்ந்த 14 ஆண்டுகளும் கொழும்பு வாழைத் தோட்டம் மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய இரண்டு பிரதேசங்களிலுமே; இவர் வாழ்ந்துள்ளார்.

இந்த டியெம்பி தமிழகத்தின் நெல்லை மாவட்டம், திருநெல்வேலிச்சீமை, கல்லிடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆதனால்தான் இவர் கல்லிடைக்குறிச்சியார் என்று அழைக்கப்பட்டார். தொழிற்சங்கவாதியாகவும், சஞ்சிகையாசிரயராகவும், எழுத்தாளராகவும், பீரங்கிப் பேச்சாளராவும் தனது பங்களிப்புக்களைச் செய்த இந்தக் கல்லிடைக்குறிச்சியாரை தழிழகத்திலும் மலையகத்திலும் மறந்து போன நிலைமையில் இவர் பற்றிய ஆய்வாகத் தனது நூலை மானா மக்கீன் அவர்கள் வெளியிட்டிருப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த நூலில் கானக நிலா கல்லிடைக்குறிச்சியார் டியெம்பி பற்றி, 'மேடைகளில் முழுங்கிய பீரங்கி', 'இலங்கையில் நவஜீவனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த கல்லிடைக்குறிச்சியார்', 'கல்லிடைக்குறிச்சியாரின் கங்காணி மகளும் சதியில் சிக்கிய சலீமாவும்| ஆகிய மூன்று தலைப்புக்களிலேயே நூலாசிரியரினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த டியெம்பி நவஜீவன், நண்பன் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், தாரகை சஞ்சிகையில் எழுத்தாளராகவும் விளங்கியுள்ளார். கல்லிடைத் தம்பி, பீரங்கி, டியெம்பி, ஹமீதா பானு போன்ற புனைப் பெயர்களில் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.  நவஜீவன் சஞ்சகையில் நமது தீர்ப்பு, புத்தகத் திறனாய்வுகள் போன்ற பக்கங்களை இவரே எழுதியுள்ளார். சஞ்சிகையாசிரியராக மட்டும் இவரை மட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இவர் ஒரு எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இயங்கியுள்ளார்.

கொலைகாரி, திடீர்த் திருமணம், பருவத்தின் கோளாறு, வள்ளித் திருமணம், ஏமாந்தவன், குழந்தைகள் கட்டி வைத்த திருமணம் ஆகிய சிறுகதைகளை டியெம்பி நவஜீவனில் எழுதியுள்ளார். இவ்வாறு பல சிறுகதைகளை எழுதியுள்ள இவரது ஆறு சிறுகதைகளைத் தொகுத்து 'சிறுகதைகள் ஆறு' என்ற நூல் வெளிவந்துள்ளது. மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிப் பேசும் 'கங்காணி மகள்' (1955) என்ற நாவலும், முஸ்லிம்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் 'சதியில் சிக்கிய சலீமா' எனும் நாவல் 1953 களில் இலங்கையின் அக்கால முஸ்லிம் வார இதழ் தாரகையில் வெளிவந்து பல வாசகர்களையும் வசப்படுத்தியுள்ளது. 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றும் ஆயிரக் கணக்கில் சொற்பொழிவாற்றியவர் என்றும் இவர் பற்றிய குறிப்பொன்றும் இந்த நூலில் உள்ளது.

மலையக மக்கள் பலரையும் கவர்ந்த இவர், 'பீரங்கிப் பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல் 'ஈழத்து அண்ணா' என்றும் அவரது அபிமானிகளால் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அப்துல் அஸீஸ், கே.ஜி.எஸ். நாயர் ஆகியோரால் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்ஸை உருவாக்கியபொழுது டியெம்பி அவர்களுக்கு உதவியாக இயங்கியுள்ளார். இவரது இலக்கியத் திறமைக்காகவும் பேச்சுத் திறமைக்காகவும் பல்வேறு வகையான கூட்டங்களில் சிறப்பதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றும் பேறு இவருக்குக் கிடைத்துள்ளன. இவரது பேச்சைக் கேட்கவென்றே மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்படும். மட்டுமல்லாமல் மண்டபத்திற்கு வெளியேயும் சனக்கூட்டம் நிரம்பி வழியும். 1955.10.24 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அருணாச்சலம் மண்டபத்தில் 'வளரும் இலக்கியம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையும் 1960.11.13 இல் கொழும்பு விவேகானந்த மண்டபத்தில் ஆற்றிய உரையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, கலை இலக்கியம் சார்ந்த சொற்பொழிவு, இஸ்லாமியச் சொற்பொழிவு போன்ற தலையங்கங்களில் அவருடைய சிறப்புரை இடம்பெறும். தோட்டங்களிலேயே இவரது பீரங்கி முழக்கம் அடிக்கடி ஒலித்துள்ளது. என்னதான் பீரங்கிப் பேச்சாளராக இவர் இருந்தாலும், இவருக்கு சொற்பொழிவாற்ற ஒரு மணித்தியாலம் வழங்கப்பட்டால் கைக்கடிகாரத்ததைப் பார்க்காமல் சரியாகப் பேசி ஒரு மணித்தியாலத்துக்குள் தனது சொற்பொழிவைச் சரியாக நிறைவு செய்வார் என்பது இவரது விசேட தன்மையாகும். இன்றைய மேடைகளில் விழாக்களில் இப்படியானவர்களைக் காண்பது உண்மையில் அபூர்வமாக இருக்கிறது.

1958.11.16 இல் கொழும்பு வாலிபர் முன்னேற்றக் கழகம் டியெம்பிக்கு பாராட்டு விழா எடுத்துள்ளது. இந்தப் பாராட்டு விழாவுக்குப் பின்னரும் அதாவது 1962 வரை இவர் இலங்கையில் தங்கி அவரது சேவைகளை இந்நாட்டு மக்களுக்காகச் செய்துள்ளார். 1962 இல் அவர் இந்நாட்டை விட்டு திடீரென தமிழகத்தை நோக்கிச் சென்றுள்ளார். பின்னாட்களில் இவருடைய மணி விழா 1976 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தனது தாயகத்தில் எண்பது வயதைத் தாண்டியும் ஆன்மிக சொற்பொழிவாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.

இப்படி இந்தக் கல்லிடைக்குறிச்சியார் பற்றி ஒரு தெளிவான ஆய்வை மிகவும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் வழங்கியுள்ள மூத்த எழுத்தாளர், பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள் பாராட்டுக்குரியவர். இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

நூல் - 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - தமிழ்மணி மானா மக்கீன்
வெளியீடு - தாழையான் பதிப்பகம்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்