Friday, January 30, 2015

76. இரும்புக் கதவுக்குளிருந்து கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இரும்புக் கதவுக்குளிருந்து கவிதைத் தொகுதி பற்றிய  இரசனைக் குறிப்பு

விவேகானந்தனூர் சதீஸின் இரும்புக் கதவுக்குள்ளிருந்து என்ற கன்னிக் கவிதைத் தொகுதி 119 பக்கங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண கலை இலக்கியக் கழகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.  தான் வாசிப்பின் மீது காட்டிய நேசிப்பின் காரணமாக உள்ளத்தில் ஏற்பட்ட அருட்டுணர்வினால் 66 கவிதைகளை வாசகர்களுக்கு இந்நூலின் மூலம் தருகின்றார்.

இந்நூலுக்கு யாழ்ப்பாணம் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆசியுரையையும், யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அணிந்துரையையும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் மு. கோமகன் வாழ்த்துரையையும், வவுனியா க. சத்தியசீலன் முன்னுரையையும், கலாநிதி நல்லையா குமரகுருபரன் நூலுக்கான பிற்குறிப்பையும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் சதீஸ் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஷஷசங்கத்தமிழ் இலக்கணத்தையோ, தொல்காப்பிய இலக்கணத்தையோ நான் தொட்டுப் பார்க்கவில்லை. கண்டதையும் வாசிக்க காலம் இடங்கொடுக்காததால் கையில் கிடைத்தவற்றை வாசித்தேன். எமது சமுதாயம் எதிர்கொள்ளும் சடுதியான மாற்றங்களும் எனக்குள்ளே கணன்று கொண்டிருக்கும் குறிப்பிட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளும் நான் எழுத கால்கோளிட்டது. ... என்னுடைய வாழ்க்கையின் துன்பங்களும், எதிர்பார்ப்புக்களும், கற்பனையும் இக்கவிதைத் தொகுப்பில் அடங்கியிருந்தாலும் வாசிப்போரின் மனதில் சமூக உணர்வுடனான நற்பண்புகளை மீள் நிறைக்க உதவுமென என்னுள் எண்ணுகிறேன்.|| என்று குறிப்பிடுகின்றார்.

உலகில் தாயின் அன்புக்கு ஈடாக எதனையும் குறிப்பிட முடியாது. தன்னைப் பெற்ற தாயை கவிஞரும் மறவாமல் இந்நூலின் முதல் கவிதையை, பிரசவித்த பேரன்னையை வாழும்போதே வாழ்த்துகின்றேன் (பக்கம் 02) என்ற தலைப்பிட்டு தனது தாய்க்காகவே எழுதியுள்ளார். அக் கவிதையில் உள்ள சில வரிகள் இதோ..

ஐயிரண்டு திங்கள்
அகவயிற்றில் எனைத்தாங்கி
அழகாய் ஈன்றெடுத்து
உலகைக் காண்பித்த 
உத்தமி நீயே அம்மா!

குருதியைப் பாலாக்கி
வியர்வையை நீராக்கி
நிறைவான அமுதூட்டி - நீ
பசியோடிருந்த நாட்களை 
மறக்கவில்லை அம்மா!

விவேகானந்தனூரில் 
விபரமாய் எனை வளர்த்து
கனகாம்பிபையூரில்
கச்சிதமாய் கல்வி நல்கிய
முதற் குரு நீதான் அம்மா!

கண்கள் சொன்னவை (பக்கம் 15) என்ற கவிதை காதலின் வலியைப் பறைசாற்றுகின்றது. சிறையில் வாடும் தலைவனின் காதல் உணர்வுகள் இச்சிறிய கவிதையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. பல சித்திரைகள் கடந்தும் கம்பிக்கூட்டு வாழ்வு விடியவில்லை என்ற வரிகள் மனதில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. 

நித்திரையின்றி
நித்தமும் துடிக்குமென்
கண்கள் - பல
சித்திரைகள் கடந்தும்
கம்பிக்கூட்டு வாழ்வில்
விடியா வினாவாகவே
விளைகின்றது!

மணி (பக்கம் 23) என்ற கவிதை வாழ்வின் யதார்த்த நிலையை ஒப்புவித்திருக்கின்றது. பாடசாலைக் காலங்களில் எல்லா பாடவேளைக்கும், இடைவேளைக்கும் மணி ஒலிக்கும். மணியோசைக்கு பழக்கப்ட்டு விட்ட வாழ்வு சிறையினுள்ளும் தொடருவதை கீழுள்ள வரிகளின் மூலம் கவிஞர் உணர்த்துகின்றார். 

அன்று மணிக்குப் பணிந்தேன் பள்ளியில் பாடம் கற்பதற்கு.. இன்று மணிக்குப் பணிகின்றேன் சிறையில் வாழ்க்கைப் பாடம் கற்பதற்கு.. கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு - என்ற அரும்பதத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன் நன்றாய்!

பு(ப)கை வேண்டாம் (பக்கம் 40) என்ற கவிதை சிகட்டுகளால் சீரழிவோருக்காக எழுதப்பட்டிருக்கின்றது. சிகரட் பெட்டியில் காணப்படும் ஷபுகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்| என்ற வாசகத்தை வாசித்து வாசித்தே புகைத்தலை மேற்கொள்பவர்களை என்னவென்பது? எத்தனையோ ஆய்வுகள் செய்து, எவ்வளவோ கருத்தரங்குகள் வைத்து, எத்தனையோ கட்டுரைகளை எழுதி சமூக சீர்திருத்தத்தை செய்ய முனைந்தபோதும் அது தோல்வியாகவே இன்று வரை காணப்படுகின்றது. புகைத்தலின் பால் நாளாந்தம் இளைஞர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். புகைத்தலில் தொடங்கி போதை வரை செல்கின்றார்கள். அதனால் மற்றவர்களிடம் மதிப்பை இழக்கின்றார்கள். குடும்ப வாழ்வில் தன் மனைவியை இழக்கின்றார்கள், மொத்தத்தில் வாழ்வையே இழக்கின்றார்கள்.

புகைக்காதே தம்பி
புகைக்காதே
புகைத்தலின் ஈரலை
இழக்காதே
தன்னாலே 
புற்று நோய் வரும்
புகைக்காதே
சுருள் புகை நீவிட்டு
திரியாதே
சுற்றத்தார் 
சுவாசிக்க வைக்காதே
நீ தினம் புகைப்பது
நிக்கொட்என் 
நஞ்சென்பதை அறிவாயா?

கொலை வெறி (பக்கம் 63) என்ற கவிதை இன்றைய வாழ்வியல் சார் விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது. வாகன நெரிசல், விபத்துகள், விலையேற்றம், ஆர்ப்பாட்டம், கண்ணீர் புகை என்று பல விடயங்கள் இக்கவிதையில் உள்ளடக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

வாகனங்களின் பெருக்கம்
வீதிகளின் நெருக்கம்
பயணிகளின் கலக்கம்
சாரதிகளின் மயக்கம்

விபத்துக்கள் அதிகரிப்பு
வீணான உயிரிழப்பு
தரமற்ற ஊர்திகளின்
தரமான புகைப்பு
தாரில்லா வீதிகளில்
தினம் புளுதி குளிப்பு

எண்ணெய் விலையேற்றம்
மக்கள் தடுமாற்றம்
வீதிகளில் ஆர்ப்பாட்டம்...

எப்படி இருக்கிறார்கள்? (பக்கம் 71) என்ற கவிதை நடந்து முடிந்த யுத்த கால நினைவுகளை ஞாபகப்படுத்தி மனதை ரணப்படுத்துகிறது. சொந்த பந்தங்களை, வீடு வாசல்களை எல்லாம் இழந்து அகதிகளாக்கப்பட்டவர்களின் சோகம் இதில் தத்ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. நன்றாக வாழ்ந்தவர்கள் நாய்படதா பாடுபடுவதை இதிலுள்ள வரிகள் நமக்கு உணர்ந்துகின்றன. அரவணைத்த உறவுகளை இழந்து, அரிசி தந்த வயல் காணிகளை இழந்து, தனி மரமாக, அதுவும் பட்ட மரமாக தவிக்கும் பலருக்கு இந்தக் கவிதை வடிக்கப்பட்டுள்ளது.

உங்களை காணாத கண்ணொன்று
கண்ணீர் சொரிகிறது
கன்னங்கள் பழுக்க கதறி அழுகிறது
என்னினமே என் உறவுகளே
எப்படி இருக்கிறீர்கள்?
அன்னையில்லையாம்
அம்மாவோடு
குடும்பமே செத்ததாம்
அப்பா காணாமல் போனாராம்
ஆவி துடித்தேன்
ஆரத்தழுவிய கரங்கள் இல்லையாம்
ஆனந்தக் கண்ணீர் வடித்த
கண்கள் இல்லையாம்
ஊன்று கோலிலே உங்கள் கால்களாம்...

இத்தொகுதியில் உள்ள அநேக கவிதைகள் சிறையில் வாடும் உள்ளத்தின் வேதனை வெளிப்படுத்தலாகவும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அவை கடந்து போன காலத்தின் தழும்புகளாகவும் இருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையை கவிதையாக சித்தரித்திருக்கும் சதீஸை வாழ்த்துகிறேன்!!!

நூல் - இரும்புக் கதவுக்குள்ளிருந்தது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - விவேகானந்தனூர் சதீஸ்
வெளியீடு - யாழ். கலை இலக்கியக் கழகம்
விலை - 230 ரூபாய்

75. கடைசி வேரின் ஈரம் - சிறுகதைத் தொகுதி

கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள்.

இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக்கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.

ஊரார் சொத்தை அநியாயமாக அபகரித்து வாழும் உசனாருக்கு எதிராக  ஊரிலுள்ள ஒருவன் வழக்குத்தாக்கல் செய்கின்றான். அதை முறியடிக்க நல்லதொரு வக்கீலைத் தேடி பட்டணத்துக்கு வருகின்றார் உசனார். இனிமேல்தான் கதையின் உச்சகட்டம் நடைபெறுகிறது. ஒருகாலத்தில் உசனாரைத்தேடி தஸ்லீம் போனான். இப்போது தஸ்லீமைத் தேடி உசனார் வந்திருக்கிறார். இதுதான் இறைவனின் நியதி என்பதை இக்கதை எடுத்துணர்த்துகிறது. இன்றும் மனிதர்கள் இப்படித்தான். மற்றவர்களை மதிக்காமல், அவர்களை இளக்காரமாக எண்ணிக்கொண்டு கண்டபடி பேசி மனதை புண்ணாக்குவார்கள். காலத்தின் கோலத்தால் அவர்களிடமே கையேந்தும் நிலையை இறைவன் ஏற்படுத்தி விடுவான் என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.

இந்துஜா என்ற கதை காலத்துக்கு பொருத்தமான அம்சத்தை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இனத்தாலும், மதத்தாலும் வேறுபட்டு ஐக்கியம், சமாதானம் எல்லாவற்றையும் மறந்து வாழும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் இக்கதை இருப்பதை அவதானிக்கலாம்.

அமரதாச என்ற வக்கீலும், மஸாஹிர் என்ற வக்கீலும் நல்ல நண்பர்கள். அமரதாச மக்களுடன் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர். அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் கிடைக்கின்றன. மஸாஹிர் தம்பதியருக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இதை வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது. 

ஒருநாள் சகோதரரின் மரணத்துக்காக, அமரதாச மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் செல்கின்றார். வழியில் பெரியதொரு விபத்து ஏற்பட்டு கணவனும், மனைவியும் இறந்துவிட குழந்தை உயிரோடு இருக்கிறது. எதிர்பாராமல் அவ்வழியால் வந்த சுதாகரன் என்பவர் இதைக்கண்டு விடுகின்றார். அவர் குழந்தையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, எதுவும் தெரியாதவர்போல் சென்றுவிடுகின்றார். ஏனெனில் அவரும் குழந்தைப் பாக்கியம் அற்றவர். மற்ற குழந்தை மஸாஹிரிடம் கையளிக்கப்படுகிறது.

நாட்கள் நகர்ந்து இரு பிள்ளைகளும் உயர்தரம் எழுதி கலைப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றனர். இருவரில் ஒருவர் மஸாஹிரின் மகள் வாஜிதா. மற்றவள் சுதாகரனின் மகள் இந்துஜா. இருவரின் உருவ அமைப்பு எல்லோருக்கும் வியப்பளிக்க, மஸாஹிருக்கு ஏதோ இடிக்கிறது. சுதாகரனை அழைத்து விசாரிக்க அவரும் உண்மையை கூறுகின்றார். எப்படியோ பௌத்த மதப்பிள்ளைகள் மற்ற இரு மதங்களிலும் வாழ்கின்றனர். சாதி மத பேதம் எதுவுமே, எதற்குமே தடையில்லை என்பது இக்கதை சொல்ல வரும் படிப்பினை எனலாம்.

அறுந்த உறவு அறுந்ததுதான் என்ற சிறுகதையும் சமூகப் பிரச்சனை பற்றியே எடுத்தியம்புகிறது. மகன் சுக்ரிக்கு வந்த திருமண அழைப்பை பார்த்த தாய் ஆபிதாவுக்கு ஆச்சரியம். மணமகள் ஆபிதாவின் அண்ணனின் மகள். அண்ணா, அண்ணி, அம்மா எல்லோரையும் காதலின் பெயரால் பிரிந்து வந்தவர் ஆபிதா. 

ஆபிதாவைக் கைப்பற்றிய ரஸ்மி ஆபிதாவின் மேல் அளவு கடந்த அன்புடையவர். ஆதலால் வீட்டாரின் நினைவு ஆபிதாவுக்கு மறந்துபோய் இதோ இப்போது திருமண அழைப்பை பார்த்ததும்தான் கடந்த கால ஞாபகங்கள் நினைவு வருகின்றன.

திருமண வீட்டிற்கு வெளியே நின்று தாய் உட்பட அனைவரையும் பார்த்துவரவென புறப்படுகின்றார் ஆபிதா. மணமகனின் தோழனாக தனது மகன் சுக்ரி இருப்பதைக்கண்டு ஆபிதாவுக்கு இதயத்தில் வலி. ஒருவேளை குடும்பம் பிரியாமல் இருந்திருந்தால் உண்மையான மாப்பிள்ளைக் கோலத்தில் தனது மகன் இருந்திருக்கக்கூடும் என நினைத்து வருத்தப்படுகின்றார். ஓடிச்சென்று சகோதரனிடம் பேச வேண்டும் என இதயம் துடித்தாலும், ஆழ்மனம் எச்சரிக்கிறது. கணவன் அறிந்தால் அவர் வருத்தப்படுவார் என்று உணர்ந்த ஆபிதா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு 'அறுந்த உறவு அறுந்ததுதான்' என எண்ணுகின்றார்.

உண்மையில் உறவுகளை மறந்து, அவர்களின் சகவாசமே இல்லாமல் போய்விடின் அதை மீண்டும் உயிர்ப்பிப்பதென்பது இலகுவானதல்ல. அதனால்தான் உறவினரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்றும், ஒருவருடன் மூன்று நாட்களுக்கு மேல் கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றும் நம் மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது.

அவளின் விதி அப்படி என்ற கதை அழகான காதல் கதையாகும். மலீஹா என்ற பெண்ணைக் காதலிக்கிறார் அவ்வூருக்கு வந்த மாஸ்டர். அவரது பயிற்சிக் காலத்துக்காக இரண்டு வருடங்கள் பிரிந்திருக்கிறார். இடையிடையே தொடர்ந்த கடித உறவு, இடையில் தடைப்பட்டாலும் இப்போதைக்கு யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும் என எண்ணி தனது பயிற்சிக்காலம் முடிந்த பிறகு வந்து பார்க்கிறார் மாஸ்டர். தனது தாயாரின் மரணத்துக்குப் பின் மலீஹா சித்த சுவாதீனம் அற்றவளாக மாறியிருப்பதை அப்போதுதான் அறிகின்றார்.  கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்த மாஸ்டருக்கு அவளைப் பார்த்ததும் கடுங் கவலை தோன்றுகிறது. என்ன செய்ய அவளின் விதி அப்படி என்றவாறு மலீஹா இருக்கும் திசை நோக்கி நகர்கிறார் மாஸ்டர்.

இவ்வாறான சமூக தளங்களில் நின்று எழுதும் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள் இன்னும் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - கடைசி வேரின் ஈரம் 
நூலாசிரியர் - எம்.எம். அலி அக்பர்
வெளியீடு - பேனா பப்ளிகேஷன்
விலை - 300 ரூபாய்

Thursday, January 29, 2015

74. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


பல்துறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தொகுதி, ஆழ்ந்த வாசிப்பின் தேடலின் பிரதிபலனாக இலக்கிய உலகுக்கு கிடைத்ததொரு காத்திரமான - கனதியான  நூலாகும். வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ரிஸ்னாவின் இந்த நூல், நூலாசிரியரின் ஏழாவது நூல் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இதற்கு முன்னர் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் இன்னும் உன் குரல் கேட்கிறது (2012) என்ற கவிதை தொகுதியையும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வைகறை (2012) என்ற சிறுகதைத் தொகுதியையும், ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் காக்காக் குளிப்பு (2012), வீட்டிற்குள் வெளிச்சம் (2012), இதோ பஞ்சுக் காய்கள் (2012), மரத்தில் முள்ளங்கி (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இலக்கியத் துறையில் அதிக முனைப்புடன் ஈடுபாடு காட்டி கடந்த ஒரு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஈழத்தில் வெளிவரும் பல முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும், ஒளி(லி)பரப்பாகும் தொலைக்காட்சி, வானொலிகளிலும்; மட்டுல்லாமல் வலைப்பூக்கள் பலவற்றிலும் கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதிவருகிறார். அத்துடன் பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் என்பது இவரது ஆளுமையின் அடையாளமாகும்.

அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கலாபூஷணம் மாவனல்லை மன்ஸுர் அவர்கள் எழுதியுள்ளார். கொடகே வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 248 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில், ரிஸ்னா பத்திரிகையில் எழுதி வெளிவந்த 40 நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 08 கவிதை நூல்களையும், 11 சிறுகதை நூல்களையும், 06 நாவல்களையும், 09 சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களையும், 06 ஏனைய நூல்களுமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களினால் எழுதி வெளியிடப்பட்டதுமான, முக்கியமான மூத்த இலக்கியவாதிகளின் நூல்கள் உட்பட மொத்தம் 40 நூல்களையே இந்த நூலில் நூலாசிரியர் திறனாய்வு செய்துள்ளார். இதில் படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, கருத்துக்கள், படைப்பாளிகள் பற்றிய விபரங்கள், நூல் பற்றிய இரசனைப் பாங்கான குறிப்புக்கள் மிகவும் தெளிவான முறையில் நூலாசிரியரினால் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவே இந்த நூலைப் பார்க்க முடியும். ஒவ்வொரு திறனாய்வாளரும், இலக்கியவாதியும் வாங்கி வாசிப்பது மாத்திரமல்லாமல் தன்னிடம் பாதுகாத்து வைக்கவும் தகுந்த ஒரு அருமையான பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் நூல்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்நூல் அமைந்துள்ளது.

தான் வாசித்த புத்தகங்களில் காணப்படும் விடயங்களை ஆழமாகவும், அர்த்தபூர்வமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு வாசகரைக் கவரும். தனக்கென்ற ஒரு பாணியில் இலக்கியம் படைத்து, தெளிவான மொழி நடையில் வாசகர்களைக் கவர்வது இலக்கிய முயற்சியில் வெற்றிபெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ரிஸ்னாவின் பயணம் அப்படியே தொடர்ந்து செல்கிறது. அலட்டல்களில்லாத எளிமையான மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கின்றமை, வாசகர்களுக்கு புத்தகத்தை சிரமமில்லாமல் வாசிக்க உதவியாய் அமைகிறது.

`இலக்கியத் திறனாய்வின் மற்றொரு பரிணாமம்' என்ற தலைப்பில் அணிந்துரை வழங்கியுள்ளார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ``இலக்கியத் திறனாய்வு என்ற பெரியதொரு படுதாவினுள் பற்பல கூறுகள் உள்ளன. இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியப் பிரகிருதிகள், தொடர்பான பிரத்தியேகப் பார்வைகள், இலக்கியக் கால கட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள், பொதுவான திறனாய்வுகள், மதிப்புரைகள், இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், காராசாரமான விமர்சனங்கள், அங்கதக் கண்டனங்கள், இரசனைப் பாங்கான திறனாய்வுகள், பொழிப்புரைகள், விபரிப்புகள், விவரணங்கள் - இவை போன்றவை திறனாய்வு (Literary Studies  அல்லது Literary Critisms) என்ற பெரும் துறைக்குள் அடங்கும். பழைய இலக்கியங்களுக்கான உரையாசிரியர்களன் விளக்கக் கட்டுரைகளும் ஒரு விதத்தில் திறனாய்வுகளே.

கொழும்பைப் பொறுத்தமட்டில், மா. பாலசிங்கம், தம்பு சிவா என்ற சிவசுப்பிரமணியம், வெலிகம ரிம்ஸா முஹம்மத், வைத்திய கலாநிதி எம்.கே. முரகானந்தன், செ. முரகானந்தம், கே.எஸ். சிவகுமாரன் மற்றும் பல்வேறு இடங்களில் உமர வரதராஜன், ரஞ்ச குமார், அ. யேசுராசா, சே. யோகநாதன் போன்றவர்கள் திறனாய்வில் மற்றொரு பாங்கில் திறனாய்வு சார்ந்த இரசனைக் கட்டுரைகளை எழுதி வருபவர்கள். இவர்களைவிட மார்க்;சிய, மற்றும் தலித் சார்பான விமர்சகர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் யுஉயனநஅiஉள எனப்படும் பல்கலைக் கழக மட்ட சிமர்சகர்களாவார். இவர்களுக்கு முன்னோடியாக இலக்கிய வரலாறுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதிய க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் விளங்கினார்கள். இந்தப் பின்னணியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெலிகம ரிம்ஸா முஹம்மதும் பின்பற்றி வரும் இரசனைப்பாங்கான திறனாய்வு முறை திறனாய்வின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது|| என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இவ்வகையான விமர்சனங்களை ஏன் எழுதியுள்ளார் என்ற கேள்விக்கு நூலாசிரியரே தனதுரையில் பின்வருமாறு காரணம் கூறுகின்றார். ``சமகாலத்தில் எழுதப்படுகின்ற ஈழத்து இலக்கியவாதிகளின் நூல்களை வாசித்ததன் நிமித்தம் அவற்றைப் பற்றிய கருத்துக்களை, அந்த தொகுதிகளில் நான் சுவைத்த விடயங்களை ஏனையவர்களுக்கு சொல்ல நினைத்ததால் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வந்தேன்''
என்று குறிப்பிடுகின்றார்.

இடைவெளிவிடாது இலக்கியத் தொண்டாற்றிவரும் நூலாசிரியர், ஏழு படைப்புக்களைத் தந்து இளம் படைப்பாளிகள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் தனக்கென்று ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. பல்வேறுபட்ட தளங்களில் நின்று இலக்கியப் பணி புரியும் ரிஸ்னா, எதிர்வரும் காலங்களிலும் இலக்கிய உலகம் பெருமிதமடையும் வகையில் பல்துறைப் படைப்புக்களையும் வெளியிட வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222
வெளியீடு; - கொடகே பதிப்பகம்
விலை; - 600 ரூபாய்

73. திறனாய்வு தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திறனாய்வு தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திறனாய்வு என்றாலே கண்டன விமர்சனம் என்று பலர் எண்ணுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவ்வாறுதான் விமர்சனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஒரு படைப்பின் ஆழத்தையும், அது எழுதப்பட்ட நோக்கத்தையும் சரிவர உணர்ந்து தனது கருத்துக்களை மிகக் கனிவாக விளக்கும் ஆளுமை மிக்கவர். அது மாத்திரமின்றி காணப்படும் பிழைகளைத் திருத்தி படைப்பாளர்களை உற்சாகப்படுத்துபவர். 

அவரது திறனாய்வு என்ற புத்தகம் 234 பக்கங்களைக் கொண்டு மீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மீரா பதிப்பகத்தின் 100 ஆவது வெளியீடாக இந்தத்தொகுதி வெளிவந்துள்ளமை இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். அதிலும் மீரா பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் கே.எஸ். சிவகுமாரன் அவர்களது 13வது நூல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

`இந்த நூலை கொண்டு வருவதன் நோக்கம் கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களுக்கு முன் எனது திறனாய்வுப் பார்வை எப்படியிருந்தது என்பதை வரலாற்றுச் செய்தியாக பதிவு செய்தல். அடுத்ததாக புதிய பரம்பரையினருக்கு அக்கால கலை இலக்கிய செய்திகளை நினைவூட்டுதல்' என நூலாசிரியர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

யதார்த்தவாதம் என்றால் என்ன என்ற தலைப்பில் அருமையான விடயங்களை எமக்கு விளங்கிக்கொள்ளலாம். யதார்த்தவாதம் என்பதற்கு ஆங்கிலத்தில் திட்டவட்டமான அர்த்தம் இல்லை என்று கூறும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஷரியலிசம் என்ற பதம் மிக நுண்ணிய அர்த்தத்தைக் கொடுக்கின்றது. 
ஆனால் இலக்கியத்தில் இது இடம்பெறும் பொழுது விசேட அர்த்தத்தையோ தத்துவத்திலுள்ளதுபோல் நுண்ணிய அர்த்தத்தையோ கொடுப்பதில்லை. மேலோட்டமாக கூறினால் யதார்த்தவாதம் என்பது பிரத்தியேட்ச நிதர்சன, உண்மைத் தோற்றமான, வெளிப்படையானது, உள்ளது உள்ளபடியானவற்றின் பிரதிபலிப்பு எனக் கூறலாம்| என்ற விளக்கத்தை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். இதில் நாவலில் யதார்த்தவாதம், சமூக யதார்த்தவாதம் என்று உப தலைப்பிட்டு அது சம்பந்தமாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

ஈழத்து உடனிகழ்கால இலக்கியம் என்ற மகுடத்தில் சமகால எழுத்தின் தன்மைகள் பற்றி விரிவாக விளக்கியிருக்கின்றார் நூலாசிரியர். அன்றைய இலக்கிய வடிவம் அகம், புறம் சார்ந்த விடயங்களில் அதுவும் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே எழுதப்பட்டன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இலக்கியத்தின் வடிவம் மாறியுள்ளது. இதிலும் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவதானித்தால் தமிழின் வடிவ மாற்றம் நமக்குப் புரியும்.

இன்றைய இலக்கியங்களில் அதுவும் விசேடமாக சிறுகதைகள், நாவல்களில் பேச்சு வழக்கைக் கையாண்டு வருகின்றார்கள். பேச்சு வழக்கிலும் பிரதேச வழக்கு என்ற ஒன்று முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றது. எழுத்து வடிவில் விவரிக்க இயலாத உணர்ச்சிகளை பேச்சு மொழியில் ஏற்ற இறக்கங்களோடு கூற விளையும் போது படைப்பின் தரம், சுவை கூடிவிடுகின்றது. 

இவற்றின் அடிப்படையில் நிகழ்கால இலக்கியத்தின் போக்கு பற்றி நூலாசிரியர் தனது கருத்தாக இன்று யாழ்ப்பாணத்தவர்கள் போரின் கொடுமைகள் பற்றியும், மலையகத்தார் தோடத் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியும், மட்டக்களப்பினர் தமிழ்நாட்டுப் பாணியில் எழுதுகிறார்கள் என்ற கருத்தை எழுதியிருக்கின்றார். 

ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறக்கவியலாத, அழியா நாமம் கொண்ட கைலாசபதி அவர்களைப் பற்றியும் ஒரு ஆக்கம் பிரசுரமாகியிருக்கிறது. ஒரு பேராசிரியராக, பத்திராதிபராக, நல்ல விமர்சகராக இருந்த கைலாசபதி அவர்கள் தனது எழுத்துக்கள் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். 

`இலக்கியத்தின் சமூகவியலுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு விமர்சகராகவும், மார்க்ஸியத்தை தழுவியவராகவும் கைலாசபதி தன்னை இனம்காட்டிக் கொள்கிறார். எனவே இலக்கிய கொள்கைகள் பலவற்றில் ஒன்றாகிய சமுதாயக் கொள்கையை கைலாசபதி அனுஷ்டிக்கிறார் என்பது தெளிவாகிறது' என நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இத்தகைய அரும்பெரும் விடயங்களை இலக்கியவாதிகளுக்காக தொகுத்துத் தரும் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இன்னும் இலக்கியச் சேவை புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - திறனாய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Thursday, January 22, 2015

72. அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.

அனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..

'அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை'

திடீரென ஷெல் வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. எவ்விடத்தில் விழுந்து யார் யார் இறந்து கிடக்கின்றார்களோ என்ற பரபரப்பு இந்த நூலை வாசிக்கும் வாசகர்களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது. போய்ப் பார்த்தால் மாமா உடல் கருகி இறந்து போயிருப்பதாக கதை நிறைவடைகின்றது. சொந்தங்களை இழந்து தனியாளாக நிர்க்கதியாய் நிற்பதை விட, எல்லோரும் ஒரே நேரத்தில் இறந்தால் பரவாயில்லை என்ற மாமாவின் கூற்று அந்த நிலைமையில் இருப்பவர்களைப் பொறுத்தளவில் நியாயமே. யாருமற்ற அநாதைகளாக இருப்பதைப் பார்க்கிலும் குடும்பத்தோடு இறந்து போனால் பரவாயில்லை என்று எண்ணும் பாங்கு யுத்தத்தின் கோரத்தை தெட்டத் தெளிவாக்கியிருக்கின்றது.

நாயுண்ணிகள் (பக்கம் 09) என்ற சிறுகதையும் போரின் போது இருந்த வாழ்க்கை முறையை யதார்த்தமாய்ச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தேவகி என்ற பெண் மூன்று பிள்ளைகள் இருந்த போதும் மூத்த பிள்ளை இயக்கத்தில் சேர்ந்துவிட்டதால் இரு பிள்ளைகளுடன் கணவனின் துணையில்லாமல் சீவியம் நடத்தி வருகின்றாள். கணவன் அவளை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணமுடித்து இருப்பதுவும், அவளது மூத்த மகள் இயக்கத்தில் சேர்ந்து அவளைவிட்டுச் சென்றதாலும் தேவகி வாழ்க்கை கண்ணீரிலே கழிகின்றது. இரு பிள்ளைகளை கிடங்குக்குள் இருத்திவிட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றாள். இடம்பெயர்ந்து வரும்போது இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன்தான் அவள் வந்திருந்தாள். இப்படி காலம் கழிந்து கொண்டிருக்கையில் அவளது தூரத்து உறவுப் பெண் தன் இரு பிள்ளைகளுடன் அங்கு வந்து சேர்கின்றாள். அவள் தேவகியிடம் இவ்வாறானதொரு யோசனையை முன்வைக்கிறாள்.

'தேவகி அக்கா! நாங்கள் ஒண்டாய் சமைச்சு சாப்பிடுவமே? விறகுச் செலவு மிச்சம். கறி, புளிகளை நான் வேண்டித் தாறேன். நீங்கள் அரிசிச் சாமான்களை வேண்டிப் போடுங்கோவன்...'

இந்த யோசனை தேவகிக்கும் சரியாகவே பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து செலவுகளும் தேவகியின் தலையில் வந்து விழுகின்றது. தேவகியும் இரு பிள்ளைகளும் பசியாறிக்கொண்டிருந்த உணவு, உறவுப் பெண்ணுக்கும் அவளது இரு பிள்ளைகளுக்கும் என அதிகமாக செலவழிந்தது. அதாவது ஆறு பேரின் சாப்பாட்டுச் செலவையும் தேவகியின் தலையில் ஏற்றிவிடுகின்றாள் உறவுக்காரப் பெண். இரண்டு மாதங்களுக்குப் போதுமான உணவு விரைவில் தீர்ந்து போகின்றது. ஒருநாள் சமைப்பதற்கு எதுவுமின்றி தேவகி கவலையுடன் படுத்திருக்க அந்த உறவுக்காரப் பெண்மணி வந்து 

'இன்னும் சமைக்கவில்லையா?' என்று அதிகாரத் தொனியுடன் கேட்கின்றாள். 'இல்லை' என்று வெடுக்கென தேவகி பதில் சொல்லி சமைப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றாள். 'இல்லை என்றால் நேரத்துடன் சொல்லியிருக்கலாம் தானே?' என்று அவள் அதட்டி பதில் சொல்ல, தேவகிக்கும் கோபம் தலைக்கேறுகின்றது. 

'ஏன் உனக்குத் தெரியாதா? ஒரு வீட்டுக்குள்ள ஒரே பானைக்குள்ள சோறு காய்ச்சிச் சாப்பிடுறாய். இருக்கிறது இல்லாதது தெரிய வேணும் தானே'என்கின்றாள் தேவகி.

கோபமுற்ற உறவுப் பெண் தான் இருப்பது தேவகிக்கு பிடிக்கவில்லை என்று வீண் புரளியைக் கிளப்பிக்கொண்டு வேறொரு வீட்டில் போய்த் தஞ்சமடைகின்றாள். அவள் சாப்பாட்டுக்கு வழி இருந்தபோது தேவகியுடன் இருந்துவிட்டு, உணவு தீர்ந்ததும் வேறொரு வீட்டுக்கு சென்றுவிடுகின்றாள். 
நாயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகள் நாய் இறந்த பின் கழன்று விடுவதைப் போல அவளும் கழன்று போய்விட்டதாக கதை நகர்கின்றது.

சமூக மாறுதல்கள் (பக்கம் 51) என்ற சிறுகதையானது சாதி வெறிகளை அடியோடு ஒ(அ)ழிக்க பாடுபடும் ஒரு கதைக் கருவாக மலர்ந்துள்ளது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மனித சாதி என்ற ஒன்றிலிருந்து வேறுபட்டு அதற்குள்ளேயே உயர் சாதி, தாழ்ந்த சாதி என்று பல கோத்திரங்கள், குலங்கள் உருவாகியிருக்கின்றன. ஐந்தறிவு கொண்ட யானைக்குக் கூட மதம் பிடித்தால் சீக்கிரம் அடங்கிவிடும். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதன்தான் மதவெறி பிடித்து மனித இனத்தையே கொன்றுவிடுகின்ற அளவுக்கு போய்விடுகின்றான்.

கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள குருக்களின் மகனை ஷபயிற்சிக்காக| அழைத்துப் போகின்றார்கள். குருக்கள் அவனைத் தேடாத இடமில்லை. ஆனாலும் மகனைப் பற்றிய செய்திகள் எதுவுமில்லாமலேயே காலம் கடந்து போகின்றது. ஒரு நாள் குருக்கள் வழக்கம் போல பூசைக்கான ஆயத்த மணியை அடித்துவிட்டு திரும்பும்போது அவரது மகன் அங்கு நிற்பதைக் காண்கின்றார். அவரது கண்களில் நீர் ததும்புகின்றது. ஓடிச்சென்று மகனைக் கட்டிக் கொள்கின்றார். சிறுவர்களுக்கு கடலை, மோதகம் என்பவற்றை அள்ளி வழங்கிவிட்டு மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். 

மாலை வேளையில் கோயிலின் தர்மகர்த்தா குருக்களின் வீட்டுக்கு வருகின்றார். அவர் குருக்களிடம் மகனைப் பற்றி விசாரித்துவிட்டு அடுத்ததாக என்ன செய்ய உத்தேசம் என்கின்றார். அதற்கு குருக்கள் 'ஆசாரசுத்தி' செய்துவிட்டு கோயில் பணிகளில் தனக்கு உதவியாக மகனை வைத்துக்கொள்வதாகக் கூறுகின்றார். அதைக்கேட்டு சினமடைந்த தர்மகர்த்தா 'பயிற்சிக்கு' அழைத்துப்போன மகனுக்கு சைவ உணவுகளைத்தான் சாப்பிடக் கொடுத்திருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? எனவே அவனை கோயிலுக்குள் விட முடியாது என்கின்றார்.

தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காரணத்துக்காக தன்னை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை என்பதை அறிந்த அவரது மகன், பயணப் பொதியுடன் தாய் தந்தையை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து விடைபெறுகின்றான். அதைத் தடுக்க திராணியற்று இருவரும் கண்கலங்கி நிற்கின்றனர். கொஞ்ச காலத்துக்குப் பிறகு மகன் பற்றிய செய்தி ஒன்று கிடைக்கின்றது. குருக்களின் மனைவி அதை அறிந்து அழுகின்றார். அதை கண்ணுற்ற குருக்கள் அவளை இப்படி சமாதானம் செய்கின்றார்.

'அவன் கலியாணம் கட்டியிருக்கிறது நமக்கு உடுப்பு வெளுத்துத் தாற கட்டாடியின்ற மகள் என்டதும் எனக்குத் தெரியும். அந்தப் பிள்ளைக்கும் எங்கட மகனுக்குரிய பிரச்சின போலத்தானாம். அந்தப் பிள்ளை கம்பசில படித்துக்கொண்டிருந்தவளாம். அனாவசியமான சிலரது செயற்பாடுகளால அந்தப் பிள்ளையும் தடுப்பில இருந்துவிட்டு வந்திருக்கிறாள். தடுப்பில இருந்த ஒரு காரணத்துக்காக அவளின்ர சமூகத்துல அவளை ஒருத்தரும் கலியாணம் கட்ட மறுக்கினம். அதால அவளும் எங்கட மகளும் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திரிக்கினம் பொலக்கிடக்கு. இது என்னைப் பொறுத்தளவில நல்லதொரு முடிவு. இதை நான் வரவேற்கிறேன். இனி அவர்களிலிருந்து ஒரு பதிய தலைமுறை உருவாகட்டும். அப்பதான் தீட்டுக்களும் மறையும். இந்த சமூகமும் திருந்தும்...'

இவ்வாறு சமூக அக்கறை கொண்ட யதார்த்த விடயங்களை கதைகளாக்கியிருக்கின்றார் கதாசிரியர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள். கன்னித் தொகுப்பு என்று கூற முடியாத அளவுக்கு கதைகள் மிகவும் தத்ரூபமாகவும் காத்திரமாகவும் அமைந்திருக்கின்றன. சமூக அக்கறையுடன் கூடிய அவரது இலக்கிய முயற்சி தொடர்ச்சியாக செயற்படுவதற்காக வாழ்த்துகின்றேன்!!!

நூல் - அழுகைகள் நிரந்தரமில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

Wednesday, January 21, 2015

71. அண்ணல் வருவானா? கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

அண்ணல் வருவானா? கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எஸ். முத்துமீரான் அவர்கள். தொழில் ரீதியாக இவர் ஒரு வழக்கறிஞராக்  கடமையாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, வானொலி நாடகம், கிராமிய இலக்கிய ஆய்வுகள் எனப் பல்வேறு துறைகளிலும் மிகவும் கரிசனையோடு நீண்டகாலமாக ஈடுபாடு காட்டி வருகிறார். யாப்பு மரபையும், புதுக் கவிதை மரபையும் ஒன்றிணைத்து படைப்புக்களை படைப்பது இவரது விசேட தன்மையாகும். நிந்தவூரான், லத்திபா முத்துமீரான், நிந்தன், முத்து ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவரும் எஸ். முத்துமீரான் அவர்கள் தனது கவிதைகளைப் புனையும்போது விசேடமாக மட்டக்களப்பு முஸ்லிம்களின் மொழி வழக்கையை கையாள்கிறார்.

இவர் 200 க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும், 100 க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 100 க்கு மேற்பட்ட உருவகக் கதைகளையும், 250 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளதுடன் 30 க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இந்த அடிப்படையில் பல நூல்களையும் இவர் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. உருவகக் கதைகள் (1982), முத்துமீரான் சிறுகதைகள் (1991), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991), முத்துமீரான் கவிதைகள் (1993), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் (1997), இயற்கை - உருவகக் கதை (1999), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் (2005), மனிதம் சாகவில்லை - கவிதை (2005), கருவாட்டுக் கஸ்ஸா - கவிதை (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள் (2007), கக்கக் கனிய... - சிறுகதை (2007), அண்ணல் வருவானா? - கவிதை (2008), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள் (2011), என்னடா கொலமும் கோத்திரமும்? - சிறுகதை (2013), கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும் (2013) ஆகிய 15 நூல் தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ளார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் என்ற ஆய்வு நூலுக்கு 1997 ஆம் ஆண்டிற்கான வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலபட பரிசு கிடைத்துள்ளது.

இந்திய நாட்டின் நேர் நிரை வெளியீடு எஸ். முத்துமீரானின் அண்ணல் வருவானா? என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. 126 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 62 கவிதைகள் இடம் பிடித்துள்ளன.

இந்த நூலுக்கு மதத்தினூடாக - மதங்கடந்து மானுடம் தேடி என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை இன்குலாப் அவர்கள் வழங்கியுள்ளார். இதில் அவர் ''இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் நாட்டுப்புற வழக்காற்றுப் பாடல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியதில் திரு முத்துமீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. சென்னை வரும் போது சந்தித்து உரையாடியதில் அவருடைய குழந்தை முகமும் மனமும் எனக்குப் பிடித்துப் போயின. போரால் அலைக்கழிக்கப்படும் ஒரு மண்ணில், ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் கலைஞர் இவர்'' என்கிறார். 

ஒரு சொட்டுக் கண்ணீராவது என்ற தலைப்பட்டு தனதுரையில் எஸ். முத்துமீரான் அவர்கள் ''இயற்கை அன்னையின் இனிய தாலாட்டில், இன்புறும் கிராமத்தின் சொந்தக்காரன் நான். என் கிராமத்து மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, அவர்களோடு ஒன்றித்து, நகமும் சதையுமாய் வாழும், ஒரு படித்த பட்டிக்காட்டான். இந்நூலில் உள்ள கவிதைகள் எல்லாம் என் கிராமமும், அதில் வாழும் மக்களின் அவலங்களும், ஆசைகளும், அடக்க முடியாத வெப்புசாரங்களும், வெறுப்புகளுமேயாகும். இவை இனத்துவெசிகளையும், இரக்கமில்லா சமூகத் துரொகிகளையும், காம வெறிபிடித்த கயவர்களையும் காறி உமிழ்ந்து, கடித்துக் குதறி எறிவதை, நீஞ்கள் படிக்கும் போது அறியலாம். அரக்க குணம் படைத்த ஆட்சியாளர்களையும், அவர்களின் அவலங்களையும், அறிவையும் மதத்தையும் விற்றுப் பிழைக்கும் வேடதாரிகளையும் முற்றாக வெறுக்கும் ஆளுமையும் துணிவுமுள்ள வழக்கறிஞன் நான். இதனால்தான் என் கவிதைகள் வீச்சாகவும், வீரியமுள்ளவையாகவும், உங்களிடம் வாதிட வந்துள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் உள்ள 62 கவிதைகளில் ஒரு சில கவிதைகளை இனி பார்ப்போம்.
வானில் பறக்கவிடு (பக்கம் 17) என்ற கவிதை ஏழைகளின் துயரைப் பாடி நிற்கின்றது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிவன. மனிதர்களுக்கு போல் அவைகளுக்கு கவலை, துன்பம், குரோதம், பொறாமை போன்றவை இருப்பதில்லை. அவை கிடைத்ததை உண்கின்றன. தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கும் இரை தேடி வருகின்றன. அதிகாலையில் இனிமையாக கீச்சிட்டுக்கொண்டு அதே தொழிலை செய்கின்றன. தான் ஒரு குருவியாக படைக்கப்பட்டிருந்தால்.. என்ற கற்பனையை கவிஞர் இந்தக் கவிதையினூடாக கூறியிருக்கின்றார்.

வண்ணக் குருவியாய் என்னைப் படைத்து நீ, வானில் பறக்கவிடு - நான் கண்ணீரில் வாடிக் கதறி அழும் மக்கள் கவலையைப் போக்கி வர.. ஏழைகள் வாழ்க்கையைக் குதூகலமாக்கும் எத்தர் அழிவதற்கு - நான் வித்தைகள் கற்று விதியினை, மாற்றிட சக்தியைத் தந்துவிடு.. வையம் செழித்து வளங்கள் பெருகிட வாழ்த்தி, என்னையனுப்பு - நான் வாரிவளங்களைக் கோரியே வந்திங்கு பாரை நிரப்புதற்கு கொடிய துவேசிகள் கொடுமையழித்திட கொடுவாளைத் தந்துவிடு - நான் வெட்டியழித்து வேரோடு சாய்த்துடன் கெட்டியாய் வந்துவிட.. படைப்புகளெல்லாமே பரமனின் சொத்தென்று பறையை அடிப்பதற்கு - நான் பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட பாதையைக் காட்டிவிடு.. மானிட நேசம் மனித மனங்களில் மலர்ந்து ஒளிர்வதற்கு - நான் ஆனந்தமாக அங்கு பறந்து போய் அன்பினைக் கூட்டிவர!!

அண்ணல் வருவானா? (பக்கம் 19) என்ற கவிதை நடைமுறை வாழ்வில் அரங்கேறும் அநியாயங்களையும், அசிங்கங்களையும் பற்றி எடுத்துரைக்கின்றது. ஏழை உழைப்பில் வயிறு வளர்த்து, தம் உல்லாச ஆசைகளுக்காக ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி வாழும் மனித மிருகங்களை அம்பால் எய்து அழிப்பதற்கு அண்ணல் வருவானா என்று கேட்டு நிற்கும் கவிஞர், அதே வேளை சாதி வெறியைக் கிளப்பிவிட்டு மக்கள் துயரில் குளிர் காய்பவர்களையும், மதம் என்ற பெயரில் மகா தவறு புரிந்து பொது மக்களை ஏமாற்றுபவர்களையும் அழித்து உலகத்தைக் காப்பாற்ற அண்ணல் வருவானா என்று கேட்டு நிற்கும் விதம் இதோ..

வானில் தெரியும் வளர் பிறையை, வளைத்து வில்லாய் எடுத்து வந்து, ஏழை உழைப்பை சுரண்டி வைத்து, இரவும் பகலும் கூத்தியுடன், கூடிக்குலாவி மதுவெறியில், ஆடித் திரியும் கொடியவரை, அம்பால் எய்தி அழிப்பதற்கு, அண்ணல் ஒருவன் வருவானா? சாதி வெறியால் துவேசத்தால் சண்டை குழப்பம் செய்பவரை, பொய்யைச் சொல்லி ஏமாற்றும் போலித் தலைவர் கயவர்களை மதத்தைவிற்று உடல் வளர்க்கும் மாயப் போலிச் சாமிகளை அடித்து உதைத்து அழிப்பதற்கு அண்ணல் ஒருவன் வருவானா? 

பாவிகள் (பக்கம் 31) என்ற கவிதை நன்றி கெட்ட மனித வர்க்கம் பற்றி பேசியிருக்கின்றது. பாவங்களை புரிபவர்கள் மாத்திரம் பாவிகள் அல்லர். உயிரை, உடலை மட்டுமன்றி அதைப் பேணிப் பாதுகாக்க உணவையும், மானிடர்கள் சிறந்துவாழ்வதற்காக உயிரை விடவும் மேலான அண்ணல் நபி அவர்களையும் அருளித்த தந்தவன் அல்லாஹ். அவனை மறந்தும் இணை வைத்தும் வாழ்கின்றவர்கள் பாவிகளே. மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானின் கூட்டாளிகளாக வாழ்ந்து ஏழை எளியவரை இழிவாக நோக்குபவர்களும் பாவிகளே. இரு கண்களைப் போன்ற தாய் தந்தையரையும், சகோதரர்களையும், சுற்றத்தாரையும் ஒதுக்கிவிட்டு வாழ்பவர்களும் பாவிகளே என்பதை கீழுள்ள கவிதை வரிகள் உணர்த்தியிருக்கின்றன.
உடல்தந்து உயிர் தந்து உறுதியோடு உலகத்தில் வாழ்வதற்கு உணவும் தந்து, அருட்கொடையாய் அண்ணலரை எங்களுக்கு அழகான பரிசாக ஆக்கித்தந்த, அல்லாஹ்வை மறந்துலகில் வாழுகின்ற எல்லோரும் இவ்வுலகில் பாவிகளே. வல்லவனாம் அல்லாஹ்வை வாழ்நாளிலே வணங்காது சாத்தானின் கூட்டாளியாய், அண்ணல் நபி பொன்மொழிகள் போதனைகள் அத்தனையும் புறத்தொதுக்கி, எப்பொழுதும் ஏழைகளை எளியவரை ஏய்த்து வாழும் இரக்கமில்லா எல்லோரும் பாவிகளே.. ஒழுக்கத்தை விலைபேசி விற்பவரும் உயர்பண்பை மறந்துலகில் வாழ்பவரும் பாவிகளே!!

ஆசான்கள் (பக்கம் 36) என்ற கவிதை ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைப் பற்றி விளக்கியிருக்கின்றது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கூற்றிலும் தாய் தந்தைக்கு அடுத்து ஆசிரியரே நோக்கப்படுகின்றார். ஆசிரியர்களின் ஆசி, ஒரு மாணவனின் வாழ்க்கையையே உயர்த்திவிடுகின்றது. மற்றவர்களின் பிள்ளைகள் நன்றாகப் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதற்காக தாம் கற்ற அறிவை அள்ளி வழங்குபவர்கள் ஆசிரியர்களே. ஒரு குழந்தைக்கு இரண்டாவது வீடாக பாடசாலை ஆகிவிடுகின்றது. பல மணி நேரங்களை பாடசாலையில் கழிக்க நேர்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தாயும் தந்தையுமாக நின்று செயற்படுபவர்கள் ஆசிரியர்கள் தாம். ஆசிரியர்களின் மனதை நோவினை செய்யாமல் சிறந்த மாணவரக பெயரெடுத்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக ஆகிவிட்ட சந்தர்ப்பங்கள் கண்கூடு. அத்தகைய ஆசிரியர்கள் பற்றிய கவிதை இவ்வாறு அமைந்துள்ளது.

கல்விக்கு வித்திட்டு காலமெல்லாம் நல்லவனாய் வாழ்வதற்கு வழியும் காட்டி.. கண்ணியத்தின் இருப்பிடமாய் வாழுகின்ற நல்லாசான் எல்லோர்க்கும் இரஞ்சுவோமே.. எத்தனையோ ஆசிரியர் இருந்திட்டாலும் சத்தியத்தின் வழிநடந்து சான்றோனாக பக்தியுடன் வாழ்ந்துலகில் சேவை செய்த பண்பாளர், நல்லவரே குருவாவார்கள்.. அடுத்தவரின் பிள்ளைகளின் தலைதடவி அன்போடு கல்வியினை ஊட்டுகினற ஆசிரியர் ஒருபோதும் அழிவதில்லை அவர் நாமம் எப்பொழுதும் நிலையானதே.. ஊணின்றி உறக்கமின்றி உழைத்துழைத்து ஓடாகிப் போனபின்பும் மாணவர்க்காய் ஓயாது பாடுபடும் ஆசான்களை ஒருபோதும் மறவாது உலகமென்றும்!!

தண்டனைகள் போதும் (பக்கம் 64) என்ற கவிதை இன்றுகளில் மிகப் பொருந்திப் போகின்றது. சுனாமியின் கோரப் பசிக்கு மனிதர்கள் ஆளாகி இன்றைக்கு பதினொரு வருடங்கள் கழிந்துவிட்டது. ஆனாலும் சுனாமி, இதயத்தில் தந்துவிட்டுப் போன தழும்புகள் இன்னுமே மாறவில்லை. பெற்றோரை, பிள்ளைகளை, சொந்த பந்தங்களை, சொத்து சுகங்களை எல்லாம் இழந்து நிர்க்கதியாகிவிட்ட பலர் இன்றும் தாம் நன்றாக வாழ்ந்த காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றமை பொய்யல்ல. அது மாத்திமா? சுழல் காற்றும், தொடர் மழை விழ்ச்சியும் மண் சரிவினை தோற்றவித்துள்ளது. அந்த அயற்கை அனர்த்தத்தில் பலியானவர்கள் ஏராளம். மலைகள் இடம்பெர்ந்து வீடுகளையும், வாகனங்களையும் அதில் இருந்தவர்களையும் பலியெடுத்துக்கொண்ட சோக நிகழ்வுகளை வரலாறு சொல்லும். இவை எல்லாம் இறைவனின் கோபத்தால் ஏற்பட்டதா? அல்லது மக்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டதால் வந்த வினையா? பூமியில் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள், தீய குணங்களுடன் ஒள்றிணைந்து அடுத்தவர்களை விழ வைத்துப் பார்த்து சந்தோசமடைவதால் இயற்கை அல்லது இறைவன் கொண்ட கோபத்தால் வந்த சோதனையா? எது எப்படியென்றாலும் மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் தளர்ந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு இறைவன் சக்தியைக் கொடுக்க வேண்டும். இறை நம்பிக்கையற்று வாழ்வோருக்கு பக்தியைக் கொடுக்க வேண்டும். கவிதை இதை இவ்வாறு கூறியிருக்கின்றது.

எங்கள் இறைவா! ஏனுனக்கு இக்கோபம்? ஆழி அலைகளுக்கு அத்தனையும் பறிகொடுத்து கேள்விக்குறியாய் கிடக்குமெங்கள் வாழ்க்கையிலே, புயலும், மழையும், பூமி அதிர்வுகளும், தொடர்ந்து வந்து எங்களுக்கு தொல்லை தருவதென்ன? எலும்போடு தோல்ஓட்டி இருக்கின்ற எங்களிடம் கண்ணீர்தான் மிச்சம் கதியென்றும் இல்லையப்பா! கஞ்சிக்காய் நாங்கள் கதறி, அழுவதை நீ பஞ்சத்தின் ஓலமென்று வஞ்சித்து விட்டாயா? தஞ்சமென்று உன்னிடத்தில் தவித்துக் கிடக்கின்ற ஏழையெங்கள் வாழ்க்கையிலே ஏனிந்த சோதனைகள்? கருணையுள்ள ஆண்டவனே கல்லாகிப் போனாயா? நித்திரையும், நிம்மதியும் நீர்மேல் எழுத்தாகப் போனதினால் நாங்கள் புழுங்கிக் கிடக்கின்றோம். சீறிச் சினத்தெங்கள் சீவியத்தை சீரழித்த 'சுனாமி' அலையும் சுழற்காற்றும் அதிர்வுகளும் இனிவேண்டாம் எங்களுக்கு இரங்கியெம்மை காத்துவிடு! தண்டனைகள் போதும் தாள் பணிந்து கேட்கின்றோம்.. நிம்மதியைத் தந்தெம்மை நித்தியனே வாழவிடு!!

சமூக நிலைப்பாட்டை எடுத்துக்கூறும் இத்தகைய கவிதைகள் இத்தொகுதியில் உள்ளடங்கியிருக்கின்றன. கவிஞர் அவற்றை அழகிய முறையில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கும் விதம் மிகவும் சிறப்பானது. தாஜுல் அதீப், கலாபூஷணம், தமிழ் மணி, கவிக் குரிசில், இலக்கியத் திலகம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவரது இலக்கியப் பணிதொடர வாழ்த்துகிறேன்!!!

நூல் - அண்ணல் வருவானா?
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
வெளியீடு - நேர் நிரை வெளியீடு