Sunday, August 4, 2019

124. தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மூத்த எழுத்தாளர் 'லைட் ரீடிங்' புகழ் மானா மக்கீன் அவர்கள் எழுதி வெளியிடும் ஆய்வு நூலே இலங்கை - மலைக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற நூலாகும். கலாபூஷணம், மானா மக்கீன் அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிப் பணி புரிந்தவர். எம்.எம். மக்கீன் என்ற இயற்பெயரையுடைய இவரது இலக்கியச் சேவைகளை எழுதுவதென்றால் இந்தப் பக்கம் இதற்கு இடந்தராது. அந்தளவில் இவரது இலக்கியப் பணிகள் பரந்துபட்டது. மானா மக்கீன் என்ற ஒரு வித்தியாசமான எழுத்தாளரைத் தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவில் இவரது புகழ் நம்நாட்டில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் ஓங்கியுள்ளது. இவரது துணைவியார் நூர் மின்ஷா, ஒரே மகள் வைத்திய கலாநிதி அஞ்சானா, அதேபோல் ஒரே மகன் பொறியியராளர் அஸீம் அகமது. இவர்கள் யாவரும் இந்த நூலாசிரியரின் எழுத்து முயற்சிகளுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தவர்கள்.


நாடகப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு நிலவிய 1950 - 1960 களில் பேராசிரியர் சரத்சந்திரா சிங்கள அரங்கிற்கு வழங்கிக்கொண்டிருந்த சமயம் இதன்பால் கவரப்பட்டவரே இந்த நூலாசிரியர். 1937.05.29 ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர் மருதானை சாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தெடுத்தவர், எமது தென்னிலங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் திக்குவல்லை எம்.ஏ. முஹம்மத் என்பதில் நானும் பெருமையடைகின்றேன். 1955 இலேயே இவரது முதலாவது நாடகம் ரேடியோ சிலோன் (தற்போது இலங்கை வானொலி) சிறுவர் மலர் நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது.

அரச பத்திரிகையான தினகரனில் பத்தி எழுத்தாளராகவும், செய்தியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய இவர், தினகரனில் தொடர்ந்து எழுதிய 'லைட் ரீடிங்' என்ற பகுதி வாசகர்கள் பலரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது. 'நிலா' என்ற பெயரில் பல்சுவைச் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டு சஞ்சிகைத் துறையிலும் இவர் தனது பணியைத் திறம்படச் செய்துள்ளார். பன்னூலாசிரியராகத் திகழும் இவர் இதுவரை 40 நூல்களுக்கும் அதிகமாக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்திருப்பது பாராட்டத்தக்கது.

கல்கண்டு இதழால் கவரப்பட்ட இவருடைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், தினக்குரல் போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகளிலும் கண்ணன், பூஞ்சோலை, அமுதம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதோடு வாரா வாரம் ஒலிபரப்பாகும் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் களங்கண்டுள்ளன.

நாடகாசிரியராக, நெறியாளராக, மொழிபெயர்ப்பாளராக, இலக்கியவாதியாக, சஞ்சிகையாசிரியராக, ஆய்வாளராக, வானொலி நாடகப் பிரதி எழுத்தாளராக, பொப் இசை நிகழ்ச்சிகள் அமைப்பாளராக, ஊடகவியலாளராக என்று பல துறைகளிலும் இலக்கியப் பணிகளைப் புரியும் இவரது ஆளுமைமிக்க இலக்கியப் பங்களிப்புக்களுக்காக தாஜுல் உலூம் (1991), தமிழ் மணி (1992), தமிழ்க் குமரன் (1994), கலாபூஷணம் (2004), தேசத்தின் கண் (2005), இலக்கிய நிறைமதி (2007), வாழ்நாள் சாதனையாளர் (2017) ஆகிய பட்டங்களை நம் நாட்டிலும், தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கம் 'எழுத்து வேந்தன்' (1994), தமிழ்நாடு பண்பாட்டு நட்புறவு மன்றம் 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' (2007) என்ற விருதையும் மற்றும் 'முத்தமிழ் வித்தகர்' (1996), 'ஆய்வு இலக்கியச் சுடர்' (1999), 'சேவைச் செம்மல'| (2011) ஆகிய விருதுகளை தமிழ் நாட்டிலும் தமிழ்க் காவலன் (1996) என்ற விருதை தாய்லாந்து நாட்டிலும் 'இலக்கிய சிரோமணி' (1999) என்ற விருதை மலேசிய நாட்டிலும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

சிறுகதைத் துறையிலும் இவருடைய ஈடுபாடு அதிகம். முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'றகுமத்தும்மா' என்ற இவரது சிறுகதை இதற்குச் சான்று. பின்னாட்களில் இந்தச் சிறுகதையை தமிழக இதழ்களும் மீள்பிரசுரம் செய்திருப்பதும் முக்கியமான விடயமாக அமைகிறது.

இலங்கை - தமிழக இணைப்புப் பாலமான இவர் பன்முக ஆற்றலுள்ள ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதில் சந்தேகமேயில்லை. இவர் தொடாத துறை என்றால் அது கவிதைத் துறை மட்டுமே. கவிதைத் துறையில் இவருக்கு நாட்டமில்லாமல் போனமைக்கான காரணம் தெரியவில்லை. மட்டுமல்லாமல் கவிதைத் துறையை இவர் ஊக்குவிக்கவும் விரும்பவில்லை என்ற விடயம் கவிஞர்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக அமைகின்றது. எதனையும் மனதில் வைத்திராத குணம் இவருடையது. சிலவேளை பட்டாசு போன்று தனது கருத்துக்களை வெடித்துரைப்பார். புதுமையாகவும், புரட்சியாகவும், தனித்துவமாகவும் தனது பணிகளைச் செய்ய வேண்டும் என்ற இவரது ஆர்வத்தை கானக நிலா நூலிலும், இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் காண முடியும். இனி இவரது நூலிலிருந்து வாசகர்களுக்காகச் சில தகவல்களை தரலாம் என்று நினைக்கிறேன்.

சென்னை தாழையான் பதிப்பகம் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியிட்டுள்ள இந்த இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற ஆய்வு நூல் தமிழகத்திலிருந்து 1949 இல் இலங்கை வந்து 1962 வரை அதாவது 14 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து வந்த பீரங்கிப் பேச்சாளர் டியெம்பி என்று அழைக்கப்படும் டி.எம். பீர் முகம்மத் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். இலங்கையில் வாழ்ந்த 14 ஆண்டுகளும் கொழும்பு வாழைத் தோட்டம் மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய இரண்டு பிரதேசங்களிலுமே; இவர் வாழ்ந்துள்ளார்.

இந்த டியெம்பி தமிழகத்தின் நெல்லை மாவட்டம், திருநெல்வேலிச்சீமை, கல்லிடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆதனால்தான் இவர் கல்லிடைக்குறிச்சியார் என்று அழைக்கப்பட்டார். தொழிற்சங்கவாதியாகவும், சஞ்சிகையாசிரயராகவும், எழுத்தாளராகவும், பீரங்கிப் பேச்சாளராவும் தனது பங்களிப்புக்களைச் செய்த இந்தக் கல்லிடைக்குறிச்சியாரை தழிழகத்திலும் மலையகத்திலும் மறந்து போன நிலைமையில் இவர் பற்றிய ஆய்வாகத் தனது நூலை மானா மக்கீன் அவர்கள் வெளியிட்டிருப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த நூலில் கானக நிலா கல்லிடைக்குறிச்சியார் டியெம்பி பற்றி, 'மேடைகளில் முழுங்கிய பீரங்கி', 'இலங்கையில் நவஜீவனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த கல்லிடைக்குறிச்சியார்', 'கல்லிடைக்குறிச்சியாரின் கங்காணி மகளும் சதியில் சிக்கிய சலீமாவும்| ஆகிய மூன்று தலைப்புக்களிலேயே நூலாசிரியரினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த டியெம்பி நவஜீவன், நண்பன் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், தாரகை சஞ்சிகையில் எழுத்தாளராகவும் விளங்கியுள்ளார். கல்லிடைத் தம்பி, பீரங்கி, டியெம்பி, ஹமீதா பானு போன்ற புனைப் பெயர்களில் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.  நவஜீவன் சஞ்சகையில் நமது தீர்ப்பு, புத்தகத் திறனாய்வுகள் போன்ற பக்கங்களை இவரே எழுதியுள்ளார். சஞ்சிகையாசிரியராக மட்டும் இவரை மட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இவர் ஒரு எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இயங்கியுள்ளார்.

கொலைகாரி, திடீர்த் திருமணம், பருவத்தின் கோளாறு, வள்ளித் திருமணம், ஏமாந்தவன், குழந்தைகள் கட்டி வைத்த திருமணம் ஆகிய சிறுகதைகளை டியெம்பி நவஜீவனில் எழுதியுள்ளார். இவ்வாறு பல சிறுகதைகளை எழுதியுள்ள இவரது ஆறு சிறுகதைகளைத் தொகுத்து 'சிறுகதைகள் ஆறு' என்ற நூல் வெளிவந்துள்ளது. மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிப் பேசும் 'கங்காணி மகள்' (1955) என்ற நாவலும், முஸ்லிம்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் 'சதியில் சிக்கிய சலீமா' எனும் நாவல் 1953 களில் இலங்கையின் அக்கால முஸ்லிம் வார இதழ் தாரகையில் வெளிவந்து பல வாசகர்களையும் வசப்படுத்தியுள்ளது. 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றும் ஆயிரக் கணக்கில் சொற்பொழிவாற்றியவர் என்றும் இவர் பற்றிய குறிப்பொன்றும் இந்த நூலில் உள்ளது.

மலையக மக்கள் பலரையும் கவர்ந்த இவர், 'பீரங்கிப் பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல் 'ஈழத்து அண்ணா' என்றும் அவரது அபிமானிகளால் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அப்துல் அஸீஸ், கே.ஜி.எஸ். நாயர் ஆகியோரால் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்ஸை உருவாக்கியபொழுது டியெம்பி அவர்களுக்கு உதவியாக இயங்கியுள்ளார். இவரது இலக்கியத் திறமைக்காகவும் பேச்சுத் திறமைக்காகவும் பல்வேறு வகையான கூட்டங்களில் சிறப்பதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றும் பேறு இவருக்குக் கிடைத்துள்ளன. இவரது பேச்சைக் கேட்கவென்றே மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்படும். மட்டுமல்லாமல் மண்டபத்திற்கு வெளியேயும் சனக்கூட்டம் நிரம்பி வழியும். 1955.10.24 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அருணாச்சலம் மண்டபத்தில் 'வளரும் இலக்கியம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையும் 1960.11.13 இல் கொழும்பு விவேகானந்த மண்டபத்தில் ஆற்றிய உரையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, கலை இலக்கியம் சார்ந்த சொற்பொழிவு, இஸ்லாமியச் சொற்பொழிவு போன்ற தலையங்கங்களில் அவருடைய சிறப்புரை இடம்பெறும். தோட்டங்களிலேயே இவரது பீரங்கி முழக்கம் அடிக்கடி ஒலித்துள்ளது. என்னதான் பீரங்கிப் பேச்சாளராக இவர் இருந்தாலும், இவருக்கு சொற்பொழிவாற்ற ஒரு மணித்தியாலம் வழங்கப்பட்டால் கைக்கடிகாரத்ததைப் பார்க்காமல் சரியாகப் பேசி ஒரு மணித்தியாலத்துக்குள் தனது சொற்பொழிவைச் சரியாக நிறைவு செய்வார் என்பது இவரது விசேட தன்மையாகும். இன்றைய மேடைகளில் விழாக்களில் இப்படியானவர்களைக் காண்பது உண்மையில் அபூர்வமாக இருக்கிறது.

1958.11.16 இல் கொழும்பு வாலிபர் முன்னேற்றக் கழகம் டியெம்பிக்கு பாராட்டு விழா எடுத்துள்ளது. இந்தப் பாராட்டு விழாவுக்குப் பின்னரும் அதாவது 1962 வரை இவர் இலங்கையில் தங்கி அவரது சேவைகளை இந்நாட்டு மக்களுக்காகச் செய்துள்ளார். 1962 இல் அவர் இந்நாட்டை விட்டு திடீரென தமிழகத்தை நோக்கிச் சென்றுள்ளார். பின்னாட்களில் இவருடைய மணி விழா 1976 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தனது தாயகத்தில் எண்பது வயதைத் தாண்டியும் ஆன்மிக சொற்பொழிவாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.

இப்படி இந்தக் கல்லிடைக்குறிச்சியார் பற்றி ஒரு தெளிவான ஆய்வை மிகவும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் வழங்கியுள்ள மூத்த எழுத்தாளர், பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள் பாராட்டுக்குரியவர். இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

நூல் - 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - தமிழ்மணி மானா மக்கீன்
வெளியீடு - தாழையான் பதிப்பகம்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்