Wednesday, April 6, 2011

01. நிழல் தேடும் கால்கள் - கவிதைத் தொகுதி

நிழல் தேடும் கால்கள் கவிதைத் தொகுதி மீதான விமர்சனப் பார்வை

தென்கிழக்கு பல்கலைக்கழகம், பல கவிஞர்களின் உருவாக்கத்திந்கு கருவாயிருந்து, மெல்ல வளர்கையிலே குருவாயிருந்து அவர்களை வேர்விட்டு பிரகாசிக்கச் செய்திருப்பதில் சந்தோஷமாக மார்தட்டிக்கொள்ளலாம். அந்தவகையில் கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் மூன்றாவது கவிதை நூலான நிழல் தேடும் கால்கள் கவிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே விடியலின் விலாசம், நெஞ்சம் நிறைந்த மாமனிதர் அஷ்ரப் ஆகிய தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

வனிதைகளைப் பற்றியே யோசிக்கும் இளைஞர்கள் மத்தியில் மிக வித்தியாசமாக கவிதைகளை நேசிக்கும் இக்கவிஞரின் நிழல் தேடும் கால்களில் சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத் தீவில் தரித்திரமாய் இடம் பெற்று, சரித்திரம் படைத்திருக்கும் இன ரீதியான போராட்டத்தையும், அதனால் ஊற்றெடுக்கும் கண்களின் நீரோட்டத்தையும் அவலமாகிப் போன சமூகத்தையும், சுமுகமாய் இல்லாத நாட்டின் சூழ் நிலையையும், ஆங்காங்கே காதலையும் பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

``எம்மைச் சூழ்ந்த...'' என கவிஞர் என்னுரையில் எழுதியிருப்பதிலிருந்து அவை எத்தகைய தாக்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி அவர் அவர் மனதைப் புரட்சி செய்தது மட்டுமன்றி வரட்சியாயிருக்கும் சில வாசகரின் மனசிலும் நர்த்தனம் செய்யும் என்பதை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

``இன்னும் வெழுக்கவில்லை'' என்ற கவிதையில் நினைவுகளில் நிழலாடும் சில துளி நம்பிக்கைகளால் மட்டுமே நீள்கின்றன எம் சுவாச நிமிஷங்கள்... எனும் வரிகள் மக்களது உள்ளத்திலே ஆழமாக ஊடுருவி, நீளமான வலி தந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. கவிதைகளிலே கற்கண்டு சொற்கொண்டு அவர் யாத்துள்ள வசனங்கள் இயல்பாகவே இதயத்தை தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கின்றது.

ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை, கத்தியால் சொருகுவது போல தடம் பதிக்க வேண்டும். அவை வாசகர்கள் உள்ளத்தில் இடம்பிடித்து மீண்டும், மீண்டும் வாசிக்க இதயம் அவர்களிடைமே அடம்பிடிக்க வேண்டும். நீயா பிரமையா என்ற கவிதையில் உள்ள வரிகளில் மேற்சொன்ன கருத்தை நிதர்சனமாகக் காணலாம்.

மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களையே சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் சிந்திப்புகள் எப்படிப்பட்டவை என்பதை நானும் ஒரு பெண், திசைகளின் வாசல்களில் தடுப்புகள் என்ற கவிதைகளில் சந்திக்கலாம். மோதல் தந்த காதல் பற்றி அர்த்தமில்லாத அவஸ்தை, அறுந்து போன சிறகுகள் என்பவற்றில் தரிசிக்கலாம். வார்த்தையாடல்களை அள்ளியெடுத்து ருசிக்கலாம்.

புதுக் கருத்துக்களையே கூற விளைவதன் மூலம் ஒருபோதும் வெறுத்துப் போகாமல், இளங்குருத்துப் போல் கவிதைகள் ஊஞ்சல் கட்டி உலா வருகிறது. அதனால் ஆசையோடு தழுவ வந்த தூக்கம் கூட துக்கத்துடன் விடைபெற்றுவிடுவதால் இன்பமாக (சு)வாசிக்க முடிகிறது.

படைப்பாளிகளின் இலக்கியத் தேடல்களுக்கு இவரின் முத்தான கவிதைகள் நிச்சயம் சத்தாக அமையும். ஷிப்லியின் முன்னோடிக் கவிவரிகளுக்குள் மூச்செடுத்தால் இளம் படைப்பாளிகளின் திறமைக்கு களம் அமைத்துத் தரக்கூடிய கண்ணாடியாகவும் அது இருக்கும்.

``தன் குழந்தை தன் மார்பில் முதந்பால் அருந்தும் போது தாய் அனுபவிக்கின்ற சுகமான வலிபோலவே ஒரு கவிஞன் தனது எழுத்தின் மீதான மோசமான முதல் விமர்சனத்தின் போதும் அடைந்துகொள்கின்றான். அதற்காக வலிக்கிறது என்று சொல்லி எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு பால்கொடுக்க மறுத்தது கிடையாது. இது போலத்தான் மற்றையதும்...'' என்ற தென் கிழக்கு பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். அஸாரினதும், மொழித்துறைத் தலைவர் அ.ப.மு. அஷ்ரப் அவர்கள் ஷஷதமது சமூகத்தின் பிறிதொரு முகத்தினை அவர் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு கவிஞர்களும் பலமுறை பேசிப் பேசி அலுத்த விடயங்களானாலும் ஷிப்லியின் கைகளில் அவை புதியதொரு பொலிவினைப் பெற்றிருக்கின்றன....'' மற்றும் வ.ஐ.ச. ஜெயபாலனின் ``தன்னைச் சூழ பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட ஒரு சூழலில் அன்றாட முரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்துவிடாமல் நிமிர்வதுதான் ஒரு கவிஞனுக்குப் பெருமை. அந்தப் பெருமை கவிஞர் ஷிப்லிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது...'' என்ற அணிந்துரைகளால் புத்தகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது.

எழுத்தை தன் கழுத்தாகவே கருதும் ஷிப்லி, சுமார் ஒரு தசாப்த காலமாக இலக்கியத்துக்குள் தன்னைத் தொலைத்தவர். தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி உட்பட இணையத்தளங்களிலும் எழுதிவருவதோடு, முகாமைத்துவத்தைவிஷேட பாடமாகப் பயிலும் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர். எதிர்கால இலக்கிய உலகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத்தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும்!!!

நூலின் பெயர் - நிழல் தேடும் கால்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - நிந்தவூர் ஷிப்லி
வெளியீடு - தமிழ்ச் சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
முகவரி - 50, Hajiyar Road, Ninthavur - 18.
தொலைபேசி - 071 6035903, 067 2250404
விலை – 120/=

No comments:

Post a Comment