Sunday, December 23, 2012

40. கண்ணீரினூடே தெரியும் வீதி - சிறுகதைத் தொகுதி

கண்ணீரினூடே தெரியும் வீதி சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

காலச்சுவடு பதிப்பகம் பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் திரு. தேவமுகுந்தன் அவர்களின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற தொகுதி 10 சிறுகதைகளை உள்ளடக்கி 102 பக்கங்களில் காலச்சுவடு பதிப்பகத்;தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாய் கடமையாற்றி, தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் தேவமுகுந்தன் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களையே நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக எழுதியிருப்பதாக தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கியவர்களைத் தவிர, தலைநகர் உட்பட பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயநிலை அன்று காணப்பட்டது. அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இக்கதையினூடு அழகாக சித்தரித்து காட்டப்பட்டு இருக்கின்றது. அது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் பின்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'1980 களுக்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பெருள் இன முரண்பாடும் யுத்த அவலமும்தான். இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்தச் சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புக்கள் பேசுகின்றன என்கிறார்'.

கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்கால கட்டத்தில் எங்கும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை பறைசாற்றுகிறது. தமிழராயிருந்தாலென்ன, சிங்களவராயிருந்தாலென்ன யுத்தத்தில் தனது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் பயணிக்கும் பாதையாக கண்ணீர்ப் பாதையே எஞ்சிவிடுகிறது. தனது சகோதரனின் மரணம் நிகழ்திருக்கும்போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இந்தக் கதை நகர்கிறது.

வழிகாட்டிகள் என்ற சிறுகதை அதிகாரிகளின் அசமந்தப் போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றது. நிர்வாகம் ஒழுங்குசெய்யும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் பொடுபோக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றான். மதிய இடைவேளையின் போது குறிப்பிட்ட அதிகாரி இது சம்மந்தமாகக் கேட்க இன்னும் வேலையிருப்பதாய் கூறுகிறான் இந்திரன். அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது.

ஷஅது அவசரமில்லை தம்பி ஆறதலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களை தந்தீரென்டா நான் அதை புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப் போடுவன்.|

இடைவெளி என்ற சிறுகதை இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அன்பின் இடைவெளி என்றும் கூறலாம். கொழும்பில் அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் தமிழ் உத்தியோகத்தரின் அவலநிலை இதில் உணர்த்தப்படுகின்றது. எதேச்சையாக அவர் விடுமுறை எடுக்கும் சந்தர்ப்பங்கள் அவரை இனவாதியாக மற்றவர்களை எண்ண வைக்கின்றன. காரணம் கொழும்பில் குண்டு வெடிப்பு நடக்கும் சம்பவங்கள் சொல்லி வைத்தாற்போல அவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் துரதிஷ்டமாய் நிகழ, அலுவலகத்தில் வேலை செய்யும் ஏனைய சிங்கள நண்பர்களின் பார்வையும், பேச்சும் அவருக்கெதிராக அமைவதை இக்கதை இயம்புகிறது.

சின்ன மாமா என்ற கதை ஏனைய கதையம்சங்களில் இருந்து மாறுபடுகிறது. சொந்த தகப்பனின், சகோதரியின், சகோதரனின் இறந்தவீட்டுக்கு கூட வராமல் தானும், தனது குடும்பமும், வேலையும் என்றாகிவிட்ட சின்ன மாமா பற்றியது. ஒரு எழுத்தாளராக வாழ்ந்து இறந்தபின் அவரது குணநலன்களைப் பாராட்டி அவருக்கு கௌரவ விழாவில் புகழ்ந்து கூறப்படும் விடயத்தை சொல்லி நிற்கிறது.

இவன் என்ற கதை படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் ஒரு இளைஞனின் அன்றாட வாழ்க்கை எப்படி கழிகிறது? அவனது மனது புண்படும் சந்தர்ப்பங்கள், அவனது திண்டாட்டம் போன்றவற்றை மிகச் சிறப்பாக கூறுகின்றது. மொத்தத்தில் இத்தொகுதி மனதில் நிலைத்துவிடுகிறது. தேவமுகுந்தனுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கண்ணீரினூடே தெரியும் வீதி (சிறுகதை)
நூலாசிரியர் - தேவமுகுந்தன்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - இந்திய விலை 75 ரூபாய்

Saturday, December 15, 2012

39. வைகறை - சிறுகதைத் தொகுதி

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்.

மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்.

'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக்  குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'!!!

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.

மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222
விலை - 300 ரூபாய்

Friday, December 14, 2012

38. கண்திறவாய் - கவிதைத் தொகுதி

கண்திறவாய் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உடலில் ஏற்படும் ரணங்களை மருந்துகள் போக்கிவிடும். மனதில் தோன்றிய பிணிகளை நல்ல கவிதைகள் போக்கிவிடும். இறைவன் எல்லோருக்கும் எல்லா அருட்கொடைகளையும் கொடுப்பதில்லை. ஆனால் கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள் தொழில் ரீதியாக வைத்தியராயிருந்து பலரை குணப்படுத்துகிறார். மறுபக்கம் கவிஞராக இருந்து இதயப் பிணிகளை போக்குகின்றார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சாதாரண கவிதைகளை விட, ஆன்மீகம் சார்ந்த அல்லது நன்மை பயக்கும் விடயங்களைக் கற்றுத் தரக்கூடிய கவிதைகளை வாசிக்கையில் வார்த்தைகளில் விபரிக்க முடியாத திருப்தி மனதில் குடியேறி விடுவதுண்டு. அத்தகையதொரு மாமருந்தாக கண் திறவாய் என்ற கவிதைத் தொகுதி காணப்படுகின்றது. வெள்ளையில் ஒரு புள்ளி, சுழற்சிகள், ஆசுகவி போன்ற கவிதைத் தொகுதிகளை இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் கண் திறவாய் என்ற இந்நூலானது 136 பக்கங்களில் அமைந்துள்ளது. கண் திறந்தால், அரங்கக் கவிதைகள், முஸ்லிம் பெண்ணே, பாமடல் போன்ற தலைப்புக்களின் கீழ் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

'நான் எழுதியுள்ள பல்வேறு பாவினங்களில் அமைந்துள்ள கவிதைகளுள் இஸ்லாமிய எழுச்சிக் கவிதைகள்தாம் அதிகமானவை. அவற்றைத் தொகுத்து வெளியிடுவதற்கு தகுந்த சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தேன். அச்சந்தர்ப்பம் மலேசியாவில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது கிடைத்தது பெரும் பேறென கருதுகிறேன்' என்கிறார் நூலாசிரியர் தாஸிம் அகமது அவர்கள்.

அவன் என்ற தலைப்பிடப்பட்ட முதல் கவிதை ஏக இறைவனான அல்லாஹ்வின் அருட்கொடைகளை இயம்பி நிற்கின்றது. அல்லாஹ்வின் சக்தியை தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. அதன் சில வரிகள் இதோ..

இரவின் அமைதியிலே
இவ்வுலக முறங்குகையில்
ஒருவன் மட்டுந்தான்
உறங்காதிருக்கின்றான்

நீலக்கடலினிலே
நெளியும் அலையாகிக்
கோலச் செறிவுகளை
கொண்டு வருகின்றான்

சோலை மலர்களிலே
தூய வடிவாகிச்
சீலச் சுவைகளினைச்
சிந்தத் தருகின்றான்

கண் திறவாய் என்ற கவிதை நம்மையெல்லாம் நிறுத்தி வைத்து கேட்கும் கேள்விகளாக உள்ளன. கவிஞர் தொடுத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இருக்கின்றதா? பாருங்கள்.

நாம் இங்கே எதற்காகப் பிறந்துள்ளோம்
நரகத்தின் வாயில்களைத் திறப்பதற்கா?
தூய்மைமிகு வாழ்வு தந்த முன்னோரின்
சுவடுகளை அழித்திங்கே இன்புறவா?
நாமமது முஸ்லிமென இருந்துகொண்டு
நாசத்தின் எல்லைகளை மிதித்திடவா?

ஏக்கம் என்ற கவிதை ஓசை நயம்மிக்கதாகவும், கருத்துச் செறிவு உள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரே மூச்சில் முழுக் கவிதையையும் வாசிக்கத் தூண்டுகிறது.

நித்திரையை நாடுகையில் என் சமூகம் தூங்கும் - அந்த
நிலை கண்டு பொறுக்காது நெஞ்சமுமே ஏங்கும்
எத்தனையோ கனவுகளை என் மனதும் காணும் - அதில்
இஸ்லாத்தின் சமூகமொன்றே எப்பொழுதும் தோணும்

கண்ணிரண்டும் நல்லவற்றைக் காண்பதற்கே திறக்கும் - சில
காட்சிகளைக் கண்டிடவே மனங்கூசி வெறுக்கும்
உண்மையுள்ள இடந்தேடி பார்வையுமே போகும் - நெஞ்சில்
உறுதியுடன் சேர்ந்திடுமோர் அமைதியுண்டாகும்

இவ்வாறு காத்திரமான பல கவிதைகள் இந்தத் தொகுதியில் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் பெண்ணே என்ற மகுடத்தின் கீழ் காணப்படுகின்ற கவிதைகள் எல்லாம் அந்தாதிக் கவிதைகளாக காணப்படுகின்றன. அவை மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன.

முதல் பந்தியின் நாலாம் வரியில் தொடங்கும் சொல், இரண்டாம் பந்தியின் முதல் சொல்லாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இடியிலும் இவ்வாறு காணப்படுகின்றமை ஆச்சரியமளித்தது. உதாரணத்துக்கு முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையின் சில அடிகள் இதோ..

சாந்தியும் சமாதானமும் மலர்ந்திடுக
சன்மார்க்க வழி வந்த முஸ்லிம் பெண்ணே
சூழ்ந்திடும் பாவ இருள் நீக்கவே
தூயோனைப் பிரார்த்தனை செய் முஸ்லிம் பெண்ணே

தூய இஸ்லாத்தின் வழி நடந்து
துன்பங்கள் போக்கிடுவாய் முஸ்லிம் பெண்ணே
நாயனருள் கிட்டுமுன் வாழ்விலென
நம்பிக்கை வைத்திடுக முஸ்லிம் பெண்ணே

உலக மக்களுக்கு இறைவன் அளித்ததொரு பெரும் கொடை புனித அல்குர்ஆன். அதன்வழி நடப்பவர்கள் ஒருபோதும் வழிதவறமாட்டார்கள்.  குர்ஆனை வெறுமனே வீடுகளில் அடுக்கி வைத்தல் பெரும் பாவமாகும். புனித குர்ஆன் பற்றியும் இங்கே அந்தாதிக் கவிதைகள் நீள்கின்றன.

திருக்குர்ஆன் கூறுகின்ற வழி நடப்பாய்
தீமைகளை அகற்றிடுவாய் முஸ்லிம் பெண்ணே
பெருமானார் மனைவியரின் வரலாற்றை
பெருமையுடன் எடுத்தோது முஸ்லிம் பெண்ணே

பெருமையெல்லாம் பெண்களுக்கே என்கின்ற
பெருமானார் மொழியறிவாய் முஸ்லிம் பெண்ணே
அருமையெலாம் திருமறையின் அருள் மொழியில்
அமைந்துளதை நீ காண்பர் முஸ்லிம் பெண்ணே

முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையில் (பக்கம் - 113) சாந்தி என்று தொடங்கிய சொல் தெளிவு என்ற கவிதையிலும் (பக்கம் - 127) சாந்தி என்ற சொல்லால் நிறைவுற்றிருக்கிறது.

ஆற்றல் மிகு கொண்டவர்கள் சமூகத்தின்
ஆக்கத்துக் குதவுகின்றார் முஸ்லிம் பெண்ணே
போற்றிடுக அவர் பணியை இதனாலே
புத்துணர்வு அவர் பெறுவார் முஸ்லிம் பெண்ணே

புத்துணர்வு பெற்றவரை சமூகந் தன்னில்
புதியவரை உருவாக்க முஸ்லிம் பெண்ணே
ஒத்துழைத்த லுன் கடனாம் முஸ்லிம் பெண்ணே
உள்ளத்தைப் பண்படுத்து என்றும் சாந்தி!

தனது அன்றாட வேலைப்பளுக்களுக்கும் மத்தியில் இஸ்லாமிய சமூகம் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமிய கருத்துக்கள் உள்ளடங்கிய கவிதைகளை யாத்து இவ்வாறு புத்தகமாக்கியிருக்கிறார் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள். அல்லாஹ் அவருக்கு மென்மேலும் அறிவையும், ஆற்றலையும் வழங்குவாயாக!!!

நூலின் பெயர் - கண் திறவாய் (கவிதைகள்)
நூலாசிரியர் - தாஸிம் அஹமது
வெளியீடு - எஸ்.ஜே. வெளியீட்டகம்
தொலைபேசி - 0112438801
மின்னஞ்சல் - doctorthassim@gmail.com
விலை - 300 ரூபாய்

37. மாண்புறும் மாநபி - கவிதைத் தொகுதி

மாண்புறும் மாநபி கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்களாவார். இவர் ஏற்கனவே உணர்வூட்டும் முத்துக்கள்,  அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள், அஸீஸ் கவிதைகள் மேலதிக இணைப்பு, அஸீஸ் கவிதைகள் தாலாட்டுப் பாடல்கள், அஸீஸ் கவிதைகள் கிராமியக் கவிகள் ஆகிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதி எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி புகழ்பாடும் கவிதைகளால் நிறைந்துள்ளது. இந்த கவிதை நூலானது 81 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்கள்  ''எனது உடலுக்குள் இருக்கும் உயிரே நீங்கள் தாம் நாயகமே! நபி நாயகமே! என வியந்து போற்றிப் பாவாரஞ் சூட்டிப் பரவச மெய்துகின்றார் கவிஞர் பி.ரி. அஸீஸ். அவர் ஓத முனைந்துள்ள பாக்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் அடியாரும் அவனது ஹபீபுமாகிய அண்ணலார் மீதான புகழ்ச்சி மணம் வீசிக் கொண்டே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும், அன்னாரின் மாண்மியம் பற்றியும் அப் பாக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன'' என்கிறார்.

சிறப்புக்குரிய நபியவர்கள் கண்ணியம், மரியாதை, உயர்வு என பல இயல்புகளை தன்னகத்தே கொண்ட ஒரு மாபெரும் தலைவர். அத்தோடு அன்பு வெள்ளத்தின் உற்றும் அவர்களே. இத்தகைய நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லி, புகழ் பாடுவதென்பது பாராட்டப்படக்கூடிய விடயமாகும் என்கிறார் டாக்டர் ஹில்மி மகரூப் அவர்கள்.

வழிகள் செய்திடுவோம் என்ற கவிதையில் (பக்கம் - 23) நபி பெருமானாரை நினைத்தால் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது என்பதை நிதர்சனமாக தனது கவிதைகளினூடு சொல்கிறார் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள்.

நெஞ்சம் எல்லாம்
எங்கள் நபியின்
புகழைச் சொல்கிறது
கொஞ்சும் மொழியில்
அவர்கள் மீது
ஸலவாத் பொழிகிறது 

நபியவர்கள் மன்னிக்கும் மனம் படைத்தவர்கள். தனக்கு தீங்கு செய்தவர்களையும் தண்டிக்காத மேலானவர். அது பற்றி முத்தாய் என்றும் திகழ்வீர்கள் (பக்கம் 34) என்ற கவிதையில் இவ்வாறு அழகாக கூறப்பட்டிருக்கிறது.

குப்பைகள் கொட்டிய கொடியவளின்
குணத்தை மன்னித்த நாயகமே
தப்புகள் விளைந்த போதினிலும்
தண்டனை வழங்காப் பெருந்தகையே! 

வணக்கத்துக்குரிய அல்லாஹ்வின் தூதர் நபியவர்கள் மீது அனைவரும் ஸலவாத்து சொல்வது ஈடற்ற நன்மைகளைப் பெற்றுத்தரும் விடயமாகும். நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டால் அவர் மீது ஸலவாத்து சொல்வது எமது கடமையாகும். அதனால்தான் கவிஞர் அல்லாஹ் நேசிக்கும் அண்ணல் நபி (பக்கம் - 52) எனும் கவிதையில் அதைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

அல்லாஹ்வை நேசிக்கும் அன்பரெல்லாம்
உங்களை (நபியை) நேசிக்க வேண்டுமல்லோ
தங்களை (நபியை) நேசிக்கும் அனைவரையும்
அல்லாஹ் நேசிப்பான் உறுதி இதே! 

முஸ்லிம்கள் வாழும் இடமெல்லாம் நபியவர்களின் புகழ் இருக்கும். ஏனெனில் முஸ்லிம்கள் நபியவர்களை தமது உயிருக்கும் மேலாக நேசிக்கின்றவர்கள். அதனை பூக்களாய் மலரச் செய்தவர் (பக்கம் - 72) என்ற கவிதையின் கீழுள்ள வரிகளில் உணரலாம்.

முஸ்லிம் வாழும் இடமெல்லாம்
முஹம்மத் என்னும் பெயரொலிக்கும்
இஸ்லாம் இருக்கும் காலம் வரை
இகத்தில் அதுவும் நிலைத்திருக்கும்

இவ்வாறு அழகிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - மாண்புறும் மாநபி
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com
விலை - 250 ரூபாய்

Sunday, December 2, 2012

36. இருக்கும்வரை காற்று - கவிதை தொகுதி

இருக்கும்வரை காற்று கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஏ.எம். தாஜ் அவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராவார். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, ஒரு பாடகனாக, ஒலி ஒளி அறிவிப்பாளனாக, ஒரு சட்டத்தரணியாக பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்.

இவரது கன்னிக் கவிதை நூலே ஷஇருக்கும் வரை காற்று| ஆகும். அழகிய அட்டைப்படத்துடனும், அழகிய வடிவமைப்புடனும் மிகவும் கச்சிதமாய் சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியதாக 80 பக்கங்களில் கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையுடன் வெளிவந்து இருக்கிறது இவரது கவிதை நூல்.

வேதாந்தி என்ற புனைப் பெயரில் எழுதி வரும் கவிஞர் சேகு இஸ்ஸதீனின் முன்னுரை இந்த நூலுக்கு கனதியை சேர்க்கின்றது. சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனதுரையில்  

சமூக விடுதலைக்கான ஒரு சத்தியப் போராட்டத்தில் எனது தேர்ப்பாகர்களில்  ஒருத்தனாய் இருந்து எனது களைப்பைக் கலைத்து சலிப்பை ஆசுவாசப்படுத்தி வெற்றிகளைத் தேடித் தந்த ஒரு வித்துவக் கலைஞன்தான் தாஜ். மென்மையான அவனது உள்ளத்தைப் போர்த்திய மேலங்கியில் முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டத்துக்கான உணர்வுக் குண்டுகளைச் சுமந்து திரிந்தவன் அவன். மனித நேயம் அவனது மதம், ஜீவகாருண்யம் அவனது மார்க்கம், சமூக விடுதலை அவனது கொள்கை, சமத்துவம் அவனது கோட்பாடு, சகோதரத்துவம் அவனது பயிற்சிப் பாசறை என்று கவிஞர் ஏயெம் தாஜைப் பற்றி சொல்கிறார்.

விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அவர்களின் துயர் எத்தனைக் காலம் ஆனாலும் மறைந்துவிடப் போவதில்லை. உலகெங்கிலும் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாகிப்போன சமாச்சாரம். அதை உவமானமாக்கொண்டு ஒரு ஆண் பெண்ணிடம் அவளது இதயத்தை பெறுவது கஷ்டம் என்பதை விரக்தி என்ற கவிதையில் (பக்கம் 28) பின்வருமாறு சொல்கிறான். 

இழந்த மண்ணை
போராடிப் பெறுவதற்கு
பலஸ்தீனமா 
உன் இதயம்?

தவிப்பு (பக்கம் 40) என்ற கவிதை நிவாரணம் வழங்குவதைப் பற்றி நச்சென்று பேசுகிறது. அரசு வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குகிறது. தண்ணீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால் கண்ணீர் வெள்ளத்தில் மிதப்பவர்களுக்கு?

அரசு
வெள்ள நிவாரணம்
கொடுக்கப் போகிறதாம்
கண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கும்
நமக்குமா?

பல்கலைக்கழகங்களில் நடக்கும் ரெக்கிங் பற்றி வளாகத்தில் ஒரு போர்க்காலம் என்ற கவிதை பேசுகிறது. பகிடிவதை சரியா, பிழையா என்ற விவாதங்களுக்கு அப்பால் பகிடிவதை செய்யப்படுவதையும் இரசிக்கும் விதமாக கவிஞர் தாஜ் அவரது கவிதையில் (பக்கம் 51) பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

விற்பனைக்கு வரும்
பூக்களெல்லாம் 
ஒரு தோட்டத்தில் 
பூத்ததில்லை..

அதனால் 
கோபப் படாதீர்கள்
சந்தைப்படுத்தலுக்கு
தயார் செய்கிறோம்..

மரங்களில் மோதி
காற்றின் சிறகுகள்
உடைந்ததுமில்லை..
முகில்கள் மூடி 
ஒரு பௌர்ணமி இரவு
மறைந்ததுமில்லை..

ஆகையால் அஞ்சி ஓடாதீர்
மரணத்தைப் போல்
ரெக்கிங் நிலையானது!

சத்திய விசாரணை (பக்கம் 53) என்ற கவிதை தனிமையை பாடி நிற்கிறது. வாழ்வு இருட்டாகிப்போன பின் அதில் வெளிச்சம் ஊற்ற யாரிருப்பார் என்று கவிஞர் பின்வருமாறு அங்கலாய்க்கிறார்.

உறைந்து கிடக்கும்
வாழ்வின் ஒரு பகுதியும்
காய்ந்து கிடக்கும் மீதியும்
நிரந்தரமாயின்
மூச்செடுக்க முடியாத அழுத்தம்
எனக்குள் அடங்கிப் போக
என்கூட யாரிருப்பார்?

விடிவுகளில்லாத 
இரவின் விழிகளுக்குள்
சூரியனை உடைத்து ஊற்ற
என்னோடு யார் வருவார்?

ஒரு அழகான பெண்ணின் கண் வீச்சில் இன்னும் சிக்காத ஆண் அவளைப் பற்றி எறிகணை (பக்கம் 65) என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகிறான்.

உன்
கூர்மையான பார்வையால்
என்னை வேட்டையாட வந்தாய்!
உன் குறியில்
அதிகம் தப்பிப் பிழைத்தவன்
இனியும் என்னை 
அப்படிச் செய்ய வேண்டாம்!

உயிர்கொல்லும் 
உன் விழிகளின் சுற்றிவளைப்பில்
இன்னும் சிக்காத கைதி நான்!

வாழ்க்கையின் தத்துவத்தை நமக்குணர்த்தும் கவிதையாக வாழ்க்கை (பக்கம் 79) என்ற கவிதையைக் கொள்ளலாம். அடுத்த நொடி உயிருடன் இருப்போமா என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற சொற்ப காலத்தில் எத்தனைப் பேரை வீழ்த்தியிருப்போம்? அடுத்த வேளை உணவை உண்ண நம்முடலில் உயிர் இருக்குமா? சில வரிகள் இவ்வாறு...

அந்தக் கடைசிச் சொல்
என்னவென்று தெரியாது

இரணமும் தண்ணீரும் 
இன்னும் எவ்வளவென்று தெரியாது

தாயோடுதான் வந்தோம்
யாரோடு போவோம்?

நூலாசிரியர் கவிஞர் ஏயெம் தாஜுக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர்; - இருக்கும்வரை காற்று (கவிதைகள்)
நூலாசிரியர் - ஏயெம் தாஜ்
தொலைபேசி - 0777780807
மின்னஞ்சல் - amthajune@gmail.com
விலை - 300 ரூபாய்

Friday, November 30, 2012

35. நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர்

நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர் பற்றிய எனது பார்வை

தாம் வாழும் மண்ணுக்கு பெருமையும், புகழும் கிடைக்கச் செய்வதானது ஒரு மனிதன் தனது வாழ்வில் கண்ட மாபெரும் வெற்றியாகும். அந்த வெற்றியை தனது பன்முக ஆளுமைகள் மூலம் தனதாக்கி கொண்டவர் எமது வெலிகம மண்ணின் மாணிக்கங்களில் ஒருவரான ஹூசைன் சேர் அவர்கள்.

தான் வாழ்ந்த காலப்பகுதியில் பல்துறைகளில் தனது சேவைகளைப் புரிந்த மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றி, 188 பக்கங்களைக் கொண்ட நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் என்ற நினைவு மலரை ஓய்வு பெற்ற ஆசிரியரான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் மற்றும் முன்னால் அதிபரான ஏ.ஆர்.எம். இர்ஷாத் ஆகியோர் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் கட்டுரைகள், கவிதைகள், நினைவுரைகள் தவிர மர்ஹூம் ஹூசைன் அவர்களின் படைப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும். இதுபோலவே மர்ஹூம் ஹூசைன் அவர்களிடம் கல்வி பயின்று இன்று மதிப்புக்குரிய தொழில்களிலிருக்கும் பலர் அவரைப் பற்றிய தத்தமது அவதானங்கள், குறிப்புகள் போன்றவற்றை பகிர்ந்துள்ளமையும் புத்தகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது எனலாம். அதன் மூலம் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றிய தகவல்களை பிறரும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது.


ஓய்வு பெற்ற ஆசிரியரும், இலக்கியவாதியுமான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்-குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு (பாகப் பிரிவினை), மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தும் இறவா இன்னுறவே என்ற கவிதையை டாக்டர் எம். இப்லால் சுபைர் அவர்கள் யாத்திருக்கின்றார். அதில் ஹூசைன் சேரின் உயர்ந்த குணங்களை அழகாக குறித்து நிற்கும் கவிதையின் சில அடிகள் (பக்கம் 66)...

கல்விக் கரையை நாங்கள் அடைந்திட
கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்த உறவே
வல்லபம் மிக்கவோர் மானுடன் ஆக
கல்வியால் நானும் மேன்மையுற்றேன்

கல்விக்குயிர் கொடுத்தோன் மாள்வதில்லை
கனவானுங்களை மரணமும் மறைக்காது
நல்லோர் காணும் சுவர்க்க உலகத்தை
நீங்கள் காண இறையை இறைஞ்சினேன்

உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியும் மனிதனுக்கு மிக முக்கியம். இன்றைய காலத்தில் அதான் (தொழுகைக்கான அழைப்பு) ஒலிக்கும் போதும் பலர் அதனைக் கணக்கிலெடுக்காமல் வீணாக பொழுதைப் போக்குகின்றனர். ஆனால் கற்பிக்கும் நேரத்தில் கூட அதான் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்த உத்தமரைப் பற்றிய கல்விச் சோலையில் பூத்த ரோஜாவே (பக்கம் 108) என்ற தலைப்பில் எம்.எஸ்.எம். அப்ளல் ஹுஸைன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

பள்ளிவாசல்களில் பாங்கொலி கேட்கும் வேளை
பள்ளிக்கூடங்களில் மணியொலிக்கச் செய்தாய்
மனோரம்மியமான சூழல் வேண்டும் என்றாய்
மகிழ்ச்சி பொங்கும் சோலையாக கலாசாலைகளை மாற்றினாய்

மாணவருலகம் எழுச்சி பெற்றிட
மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
ஆசானாய் - அதிபராய் - பணிப்பாளராய் பணிசெய்து
அனைந்துவிட்டாலும் நிலைத்துவிட்டீர் எம்மகங்களில்!

மர்ஹூம் ஹூசைன் அவர்கள் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர். ஒரு ஏணியாக இருந்து கரம்கொடுத்து உதவியவர். கரந்ததே கல்விக் கதிரவன் என்ற தலைப்பில் (பக்கம் 133) எம்.எஸ். பஸ்லி ஸாலிம் ஆசிரியர் அவர்கள் அதனைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அணி உரையில் அண்ணாத்துரை அவர்
துணிச்சலில் யூலிய சீசருக்கு நிகர்
பணியே பரம் பொருளாய்க் கண்டவர்
ஏணியாக எம்மை ஏற்றி விட்டவர்

எரியும் வேளையில் கண்ணீர்
சொரிவது மெழுகுத்திரி ஆனால்
சிரித்துக் கொண்டே தன்னைக்
கரித்துக் கொண்ட வித்தகர்

எம்.ஜே.எம். மின்ஹாஜின் மறைந்தாலும் மங்காத ஒளித்தீபம் (பக்கம் 139) என்ற கவிதை மர்கூம் ஹுஸைன் அவர்கள் வெலிகமை மக்களின் உள்ளத்தில் என்றும் ஒளியாகத் திகழ்கிறார் என்பதையும், அவர் ஆற்றிய சேவைகள் மாணவர்களின் நினைவுகளில் என்றுமே நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இவ்வாறு இயம்பி நிற்கிறது.

தென்னிலங்கையின் தன்னிகர் முத்தாக
வெலிகமை வாழ் மக்களின் உள்ளத்தில்
என்றும் நீங்காத ஒளி விளக்காக
ஏற்றம் பெற்றவர் ஏயாரெம் ஹுஸைன்

அதே போல நூலில் இடம்பெற்ற பிரார்த்திப்போம் எந்நாளும் (பக்கம் 160) என்ற எனது கவிதையிலும் அவரது பல்துறைத் தொழில்களையும், சேவையையும் எழுதியிருக்கிறேன்.

நல்லாசானாய்
அதிபராய்
உயர் அதிகாரியாய்
பல பரிமாணங்கள் பெற்று
வெலிகமை மண்ணுக்கு
பெருமை சேர்த்தீரே!

மாணவச் செல்வங்கள்
மதிப்புடனே வாழ்ந்திட
பண்பாகப் படிப்பித்து
பார்போற்றச் செய்தீரே!

இது தவிர பல கட்டுரைகளைப் பிரபலம் வாய்ந்த பல்வேறு பட்டோர் எழுதியிருக்கின்றனர். அதில் வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் போன்ற பலர் எழுதியிருப்பது ஹூசைன் சேர் அவர்களின் மதிப்புக்கும், ஆளுமைக்கம் கட்டியங் கூறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் சமூக சேவை உள்ளம் மிக்க ஆசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களுக்கும எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள்     (நினைவு மலர்)
தொகுப்பாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711
விலை - குறிப்பிடப்படவில்லை

Friday, November 23, 2012

34. நாட்டார் / கிராமிய பாடல்கள் தொகுதி

நாட்டார் / கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு



நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது 52 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்த கவிஞர் கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள எஸ்.ஏ. முத்தாலிப் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் கிண்ணியாவின் இலக்கியப் பயணத்தில் பவனி வராதிருந்த ஒரு கலை வடிவம் கிண்ணியாவின் நாட்டார் கிராமிய பாடல்களாகும். அந்த இடைவெளியை பி.ரி. அஸீஸ் அவர்கள் நிரப்பியிருக்கின்றார். நாட்டார் பாடல்கள் என்றாலே கிராமிய மண் வாசைன கலந்த நடையிலே உணர்வுகள் வெளிப்படுவதாகும். பி.ரி. அஸீஸ் அவர்களின் நாட்டார் பாடல்களில் கிராமிய சொல் வழக்கு அங்காங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது என்கிறார்.

கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது. வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்னால் எழுதப்பட்டுள்ள இக் கிராமியக் கவிகள் நான் கண்டு ரசித்து அனுபவித்த விடயங்களே. நயமும் சுவையும் கருத்தாளமும் இளைந்தோடுகின்ற கவிகளாக இதைப் படைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியேற்பட்டது என்று நூலாசிரியர் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (பக்கம் 04) அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

காலயும் புலந்திருக்கு
கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
மாலையும் கையுமா
மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

வேலயும் இல்ல மச்சி
வருமானம் கொறஞ்சிரிச்சி
தோளிலே ஒன்ன வைக்க
தோது இல்ல என் கிளியே!

அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை (பக்கம் 05) பின்வரும் வரிகள் சுட்டி நிற்கிறன. அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சுற்றி வர நெருஞ்சி முள்ளு
சுருண்டிருந்து பாத்திருக்கேன்
தடை தாண்டிப் பாய்ந்து வர
நல்ல சப்பாத்துக்காய்
காத்திருக்கேன்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை (பக்கம் 08) பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

ஓடுகின்ற
தண்ணியிலே
ஆடுகின்ற
அலையெல்லாம்
தேடுகின்ற
என் மனதின்
ஏக்கங்களைக்
கூறாதோ!

தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல் (பக்கம் 20) இப்படி வருகிறது.

கழுத்திலே மின்னுகிற
கரிச மணிக் கோர்வையிலே
கைய வைத்து உருட்டி விடும்
என் ஆசைக் கண்ணாலா

தொழிலுக்கு தொலை தூரம்
போனவரே
நெடுநாளா சேதியில்ல
என் நெஞ்சம் வெடிக்குதுகா!

பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் (பக்கம் 28) இப்படி வருகிறது.

மாடுகள் வலய வலய
நெல் மணிகள் குலய குலய
பாடுகிறோம் பாட்டு
சூடடித்து முடியும் வர
சுகமாகக் கேட்டு!

நாடுகிறோம் அல்லாஹ்வை
நல் விளைச்சல் கெடச்சிடவே
தேடுகிறோம்
கடனெல்லாம் தீர
ஒரு நல் வாழ்வை!

மேற்படி அழகிய நாட்டார் கிராமிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போர் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இப் பாடல்கள் அனைத்தும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கிராமியக் கவிகளுக்கான ஆய்வில் சேர்க்கப்பட்டிருப்பதானது கவிஞருக்கு கிடைத்த பெரும் கௌரவமாகும். இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நாட்டார் / கிராமிய பாடல்கள்
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042 / 0752101556
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com

Saturday, October 6, 2012

33. குருத்துமணல் - கவிதைத் தொகுதி

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் `கன்னிக் கவிதை' என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வளியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் ஷஅன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை| என்கிறார்.

பாவாணர் அக்கரைப் பாக்கியன் குருத்துமணலில் ஒரு நண்டாக உலாவுதல் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஷஉணர்ச்சியின் வெளிப்பாடு கவிதை என்பார்கள். உள்ளத்தில் உள்ளது கவிதை என்றும் சொல்வார்கள். அவ்வாறெனில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி உண்டுதானே. உள்ளம் இருக்கின்றது தானே. ஏன் எல்லோரும் கவிதை எழுதுவதில்லை? என்பதெல்லாம் எமக்குள் எழும் வினாக்கள். கவிதை எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், அதனால் உந்தப்பட்டவர்கள் கவிதைகளைப் படிக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையாகத் தன்னிடமிருந்து பிரசவிக்கிறார்கள். இதனைத்தான் கவியரசு கண்ணதாசனும் படிக்க படிக்க வரும் கவிபோலே தினம் பழகப் பழக வரும் இசை போலே என்றும், ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா. இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா என எமக்குத் தந்த பாடல்களின் வரிகளிலே துல்லியமாகச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு தான் எமது கவிஞரிடமிருந்து வெளிப்பட்டது குருத்துமணல் கவிதைகள். கவிதைகளுக்குரிய படிமச் சிறப்பும், ஓசை நயமும் இவற்றில் உள்ளதை நாம் உணர்வோம் என்கிறார்.

இனி இப்றாஹீம் எம் றபீக் அவர்களின் கவிதைகளைச் சுவைத்துப் பார்போம்.

ஒரு பெண்ணாணவள் தாய்மையடைவதில் தான் பூரணமாகிறாள். பூரிப்பாகிறாள். குழந்தைச் செல்வம் இல்லாது போனால் வாழ்வே இருண்டது போல் ஆகிவிடும். மற்றவரிகளின் கேளிப் பேச்சுக்களாலும் முனசுடைந்து விடக் கூடிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறு உடைந்த ஒரு மனசின் ஓலம் (பக்கம் 17) பிரார்த்தனை என்ற முதலாவது கவிதையின் பின்வரும் வரிகளில் புலப்படுகிறது.

என் வாழ்வை எண்ணியெண்ணி
என்றும் நான் கலங்குகிறேன்
என் ஆசைக்கோர் குழந்தையின்றி
எந்நாளும் அழுகின்றேன்.

மாதர்கள் கூடி நின்று
மலடி யென் றழைக்கிறார்கள்.
அன்பிலோர் வார்த்தையின்றி
அனுதினமும் வதைக்கிறார்கள்..

ஆண்டவா எனக்கோர் மகவை
மடிதனில் நீ தர வேண்டும்.
அடியேன் குறைகள் தீர்த்து
அவனியில் வாழ வேண்டும்.

நித்தமும் சுத்தமாய் இரு (பக்கம் 27) என்ற தலைப்பில் அமைந்த கவிதை சுகாதாரம் பற்றி பேசுகின்றது. இன்று பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் சுகாதாரம் சுத்தம் இன்மையேயாகும். அதனால் டெங்கு, மலேரியா போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் சுத்தம், உடை சுத்தம் எவ்வாறு முக்கியமோ அதே போல் சூழல் சுத்தமாக இருப்பதும் அவசியம். அதை வழியுறுத்தும் கவிதை வரிகள் இதோ..

சுற்றுச் சூழலை
சுத்தமாக வைத்திரு
மா மனிதா - அச்
சூழல் உன்னை
சுத்தமாக வைத்திருக்கும்
மிக இனிதா
..........
டெங்கு வருவதை
தடுப்போம் மனிதா
அது சில நேரம் உயிரையும்
காவு கொள்ளும் பெரிதா

தண்ணீர் மனிதனுக்கு உயிர் போன்றது. ஆகாரம் இன்றி ஓரிரு நாட்கள் இருக்க முடியுமாக இருந்தாலும், நீர் இன்றி ஒரு மனிதனால் வாழ்வது மிக மிகக் கடினம். ஒரு சொட்டு நீருக்காக பல சண்டை சச்சரவுகள் நிகழ்வதைக் கூட கண்கூடாக காண இயலுமான காலகட்டம் இது. தண்ணீரின் பெருமை பற்றி பேசுகிறது தண்ணீர் (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை.

இயற்கையின் அருட்கொடைதான்
தண்ணீர்
அதை மாசுபடுத்தினால்
பொது நலவாதிகள்
விடுகின்றனர் கண்ணீர்
....................
அழுக்கான அத்தனையும்
தூய்மை செய்யும் தண்ணீர்
உன்னையும் என்னையும்
உயிர்வாழ வைப்பதும் தண்ணீர்

மக்கள் மனதில் மனதில் அன்பு ஊற்று வற்றிவிட்டதால் முதியோர்கள் அவசியமில்லை என்ற எண்ணம் தொற்றிவிட்டது. பெற்ற தாய் தந்தையர்களை வைத்து பார்க்க மனமில்லாததால் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன. கண் போல் காத்துவந்த பெற்றோரை நாம், கண் இமைக்குள் வைத்து காக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை சொல்லி நிற்கும் கவிதையாக முதியோர் இல்லங்கள் தேவையில்லை (பக்கம் 41) என்ற கவிதையைக் கொள்ளலாம்.

உன் கால்களால்
நீ உதைக்க
பாதங்களை
முத்தமிட்டாள் தாய்

இனிப்பூட்டிய
உன் தாய்க்கு - நீ
கசப்பூட்ட எண்ணாதே

உன் இதயக் கதவை
திறந்து கொள்
தாயை அதனுள் வைத்து
தாலாட்டப் பழகிக் கொள்

..........................
உன் தாயை முதியோர்
இல்லத்திற்கு அனுப்புவதை
நிறுத்திக்கொள்..

ஏனென்றால் உன்னை
உன் பிள்ளைகள்
அனுப்பத் தயங்காது...

கொடுத்த காசுக்கு மதிப்பாக இன்று பொருள் கிடைப்பது முயற்கொம்பாக இருக்கிறது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம். பாலில் நீரைக் கலக்கிறார்கள். அரிசியில் கல்லைக் கலக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவை இக்கலப்படங்கள். இவை தவிர இன்னும் எதிலெல்லாம் எதைக் கலக்கிறார்கள் என்பதை கலப்படக்காரன் (பக்கம் 47) என்ற கவிதை மூலமாக அறியலாம்.

பாலுக்குக்குள் நீரை
ஊற்றுகின்றோய்..
அதைப் பாடிப் பாடி விற்று
பையிலே பணத்தைப்
போடுகின்றாய்

சீனிப் பாகை தேன் என்று
சில மனிதர்களை
ஏமாற்றிப் பிழைக்கின்றாய்..

குரக்கனுக்குள் தவிட்டைக்
கலக்கிறாய்..

இவ்வாறான பல விடயங்களையும் தனது கவிதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியர் இப்றாஹீம் எம். றபீக் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர் - குருத்துமணல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இப்றாஹீம் எம். றபீக்
வெளியீடு - புதுப்புனைவு இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0715675585
விலை - 250 ரூபாய்

32. தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம்

தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் பற்றிய இரசனைக் குறிப்பு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கவிதைப் பங்களிப்புக்களை இலக்கிய உலகில் செய்துவரும் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதி பர்ஹா வெளியீட்டகத்தின் வெளியீடாக 87 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இது நூலாசிரியரின் நான்காவது நூல் வெளியீடாகும். இந்த நூலாசிரியர் ஏற்கனவே பதம் (கவிதை 1987), சந்தனப் பொய்கை (கவிதை 2009), கொந்தளிப்பு (குறுங்காவியம் 2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மரபு சார்ந்த கவிதைகளில் தன்னை அடையாளப்படுத்திக் காட்டிக் கொண்டாலும், நவீன கவிதைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். 

தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்)சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு என்ற தலைப்பிட்டு பேராசிரியர் சே. யோகராசா அவர்கள் இந்நூலுக்கு சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அவர் மிகவும் சுருக்கமாக இந்நக் காவியத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

நீண்டகாலமாக நிலவி வரும் சமூகப் பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும், கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது என்று குறிப்பிடுகிறார்.

பன்னூலாசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் தனதுரையில் இந்நூல் பற்றி பின்வருமாறு சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். சுமார் நூறு வருடங்களுக்கு முந்திய அதற்கு முன் பல நூறு வருடங்களாக உருவாகி வந்த நமது சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை, அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை, அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக் குறுங்காவியம் பதிவு செய்கிறது. செவ்வியல் பிரதித் தன்மையைப் பெறுவதற்கான அந்தஸ்தை இக் குறுங்காவியம் பெறுகின்றது. 

நெல் காய வைக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட பாயே இங்கு தோட்டுப்பாய் என்று குறிப்பிடப்படுகின்றது. தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற இக்காவியமானது, தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா, அகலக் கண் திறந்த அடக்கத்தலம், குடிசைக்கு வந்த குதூகலம், சிற்றூரில் பூத்த செய்னம்பூ, பெருமைகள் நிறைந்த பெரியம்பி, அதபாய் வளர்ந்த அழகு, பருவம் பூத்த பளபளப்பு, சுடுதண்ணி என்ற மறு நாமம், மஞ்சக் குருவி வடிவு, மருக் கொழுந்து வாசம், ஏர்வை வண்டி இசுமாயில், கலியாணம் பேசும் களிப்பு, மாற்றியெடுத்த மருதோண்டி, காவின் பதிந்த கலியாணம், மனம் பொருந்தாத மணம், ஒட்ட முடியாத உடைவு, மறுமணம் பூசிய மருக்கொழுந்து, பற்றூரில் இருந்து பயணிப்பு ஆகிய பதினெட்டுத் தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. 

யாரிந்த மூத்தம்மா? என்ற கேள்விக்கு கவிஞர் பின்வருமாறு பதில் சொல்லிக்கொண்டே போகின்றார். கைக் குத்தரிசியிலே இரவு உணவைத் தயாரிக்க எண்ணி அதை உண்ணாமல் போய்ச் சேர்ந்த மூத்தம்மா.. கன நாளாய் ஒரு நேர உணவினையே உண்டு கழித்திருந்த மூத்தம்மா.. மாப்பிள்ளையோடு மாட்டு வண்டியிலே வந்திங்கு சேர்ந்தவளாம்.. ஊரார் ஒரு துண்டு நிலம் உபயம் என அளிக்க வேர் பிடுங்கிக் காடழித்து வசிக்கவென இல்லிடத்தை ஏற்படுத்திக் கொண்டவளாம்.. மாப்பிள்ளையோடு மனமொன்றிச் சேர்ந்திருந்து பார்த்திருந்தோர் கண்படவே பாசத்தைப் பிழிந்தவளாம்.. கிளியும் மொழியும் எனப் பழகி அவள் அன்பினையே பொழிந்து அவரோடு பொருந்தியே வாழ்ந்தவளாம்.. இப்படி பாலமுனை பாறூக் அவர்கள் மிகவும் அழகாக இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா பற்றி மிகவும் ரசனையாக சொல்லிக் கொண்டு போகிறார்.

காத்தான்குடியைப் பின்புலமாகக் கொண்டு அப்துல் காதர் புலவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செய்னம்பு நாச்சியார் மாண்மியம் என்னும் மிகச் சிறந்த காவியம் முஸ்லிம் மக்களது திருமணச் சடங்கை மாத்திரமே எடுத்துரைத்தது. கலாபூஷணம் பாறூக் அவர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்று திருமணச் சடங்கை மட்டுமல்லாமல், மையத்துச் சடங்கு முறைமை, பிறப்புச் சடங்கு முறைமை, பெரிய பிள்ளைச் சடங்கு முறைமை முதலானவை பற்றியும் இக்காவியத்தில் சுவைபடக் கூறியுள்ளார். இதனால் இக்காவியம் விஷேடமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

செய்னம்புவை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்பவற்றைப் பதிவு செய்யும் படைப்பாகவே இக்குறுங் காவியம் அமைந்திருக்கின்றது. அதாவது இங்கு செய்னம்பு என்ற பெண் பாத்திரத்துக்கே மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் காவிய நூல் மிகவும் அற்புதமானது. அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜனாப் பாலமுனை பாறூக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்)
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்

Monday, September 17, 2012

31. மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - கவிதைத் தொகுதி

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஜீவநதி பதிப்பகத்தின் 10ஆவது வெளியீடாக வெ. துஷ்யந்தனின் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தொகுதி 73 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. வெ. துஷ்யந்தன் ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 2011 இலேயே தனது இரண்டாவது வெளியீடாக மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்து, கவிதைத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார். இவர் ஜீவநதி சஞ்சிகையின் துணையாசிரியருமாவார்.

போர்க்கால கவிதைகளை சொல்வதிலும், அகநிலை சார்ந்த கவிதைகளை சொல்வதிலும் துஷ்யந்தனுக்கென்று ஒரு தனிப்பாணியுண்டு. அவரது இரண்டு கவிதைத் தொகுதிகளை வாசிக்கும் வாசகர்கள் அதனைக் கண்டுகொள்ளலாம்.



இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அகவயமானவை. அதே வேளையில் அர்த்தம் எதனையும் பாதிக்காத வெறும் மனோரதியக் கற்பனை வடிப்புகளுமல்ல. மாறாக அந்தரப்படும் ஆத்மாவொன்றின் ஏக்கப் பெருமூச்சை இக்கவிதை வரிகளில் நாமும் சுவாசிக்கிறோம். நல்ல வேளையாக ஆழ்ந்த சோகத்தினூடாக விரக்தியும், ஏமாற்றமும் தோன்றாமல் வைர நெஞ்சமும், புத்துயிர்ப்பும் தோன்றுவதனால் கவிதைதான் பிறக்கிறது என்கிறார். மேலும் துஷ்யந்தன் போர்க்காலத்தில் வாழ்ந்து, அவதிப்பட்டு மனம் சோர்ந்த வடபுல இளைஞர்கள் பரம்பரையில் ஒரு வகைமாதிரி யுவன். இந்த மகனுக்குள் சொல்லாத செய்திகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றையேனும் சொல்லாமற் சொல்லி விளங்கப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் என்றும் குறிப்பிடுகிறார்.

துஷ்யந்தன் தனதுரையில் எனது இரண்டு கவிதைத் தொகுதிகளையும் வெளியீடு செய்யும் காலப்பகுதி சிறிது காலமாக (ஒரு வருடமாக) இருப்பினும் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆரோக்கியமான மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ...படைப்பு மனம் என்பது பறந்துபட்டது. படைப்புக்கான கருவைப் பொறுத்தவரை புனைவுகளையும், கற்பனாவாதத்தையும் புகுத்துவதில் எதுவித உடன்பாடுகளும் எனக்கில்லை. உள்ளதை உள்ளவாற எழுத வேண்டும் என்பதே எனது அவா என்கிறார்.

நமது மனதுக்குள் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விடயங்களை வெளியே சொல்ல முடியாது. இன்றைய சூழ்நிலையில் உள்ளத்தை உறுத்துகின்ற பல சம்பவங்கள் நடந்தேறியபோதிலும் அதைத் தட்டிக் கேட்கும் வழிகள் தெரியாமல் தத்தளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் எல்லாம் எமது இதயத்தில் உள்ள வலிகளை வெள்ளைத் தாள்களில் மாத்திரமே பதிவு செய்ய முடிகின்றன. வாழ்வு குறித்த ஐயப்பாடுகளை சொல்லி நிற்கும் கவிதையாக புதிர்களால் நிறையும் வாழ்வு என்ற கவிதையைச் சொல்லலாம்.

வாழ்க்கையின் மௌனம் வாழ்தலை தொலைப்பதற்கான ஆயத்தங்களை அறிந்தோ, அறியாமலோ மனிதனுக்கு உணர்த்தியபடியே.. நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கான வாழ்தலில் நிரம்பியிருக்கின்ற பதில்கள் ஏதும் அற்ற எண்ணற்ற புதிர்களால் எதிர்காலம் மீதான எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி பயணித்துக்கொள்கின்றது இந்த வாழ்வு. (பக்கம் 10)

யுத்தம் தந்துவிட்டுப்போன தாக்கம் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதையில் தெரிகின்றது. தெருநாய்கள் மாத்திரமே சத்தமிடக்கூடிய கொடிய இரவுகளில் மனிதர்கள் பயந்து பயந்தே செத்துக்கொண்டிருந்த அந்தக் காலங்கள் பயங்கரமானவை, எப்போது விடியும் என்ற ஏக்கத்தில் இரவுகள் கழிந்தன என்றவாறான கருத்துக்கள் இக்கவிதையினூடு சொல்லப்படுகின்றது. (பக்கம் 22)

இன்னல்களோடு
இரண்டரக் கலந்துவிட்ட
இருண்ட இவ்
இரவுகள்
விடியலின் வருகைக்காய்
தவமிருந்தபடியே..

தூக்கமில்லாத விழிகள்
தினமும் விழித்தவாறே
விடியலை எதிர்பார்த்துக்
காத்துக்கிடக்கின்றன..

எழுத முடியாத எழில்கள் என்ற கவிதையில் வார்த்தையால் வடிக்க முடியாத சிலவிடயங்கள் பற்றி சொல்லயிருக்கிறார் துஷ்யந்தன். சில அழகான காட்சிகளையோ அழகான பொழுதுகளையோ அப்படியே வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை. அத்தகைய பொழுதுகளை; கீழுள்ளவையாக அடையாளம் காட்டியிருக்கிறார் நூலாசரியர். (பக்கம் 26)

சூரிய அஸ்தமனம், நிலவொளியலான இராத்திரி, நட்சத்திரக் கூட்டங்கள், கரையைத் தழுவும் அலைகள், தென்றல் மோதும் தென்னங்கீற்று, அம்மாவின் தாலாட்டு, காதலியின் கண்கள், மழலையின் சிரிப்பு இவை எல்லாம் வார்த்தைகளால் எழுதப்பட முடியாத எழில்கள்.. எழுதப் போயினும் வார்ததைகளுக்கான பஞ்சங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன..

நீயாகிப்போன நான் என்ற கவிதை காதல் கவிதையாக பரிணமித்திருக்கின்றது. ஆரம்பத்தில் காதலி தன்னை விட்டுப் போனதாகவும், அவர்களுக்குள் இருந்த நேசம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு அண்மைக்காலமாக விசாரிப்பதுமாக இருக்கிறாள் என்றும் கூறப்படும் அதே வேளை காதலன் ஒருபோதும் தன்னிலையிலிருந்து மாறாததால் மீண்டும் காதலியின் அன்பை எதிர்கொள்கின்றான் என்ற அடிப்படையில் அமைந்தருக்கின்றது இந்தக் கவிதை. (பக்கம் 29)

வலுப்பெறும் வலிகளோடும்
உன் நினைவுகளால் விளையும்
வாழ்வனுபவ புதிர்களோடும்
புலர்ந்துவிடுகின்றது
எனக்கான விடியல்கள்..

இருப்பினும் சில
நிர்ப்பந்தங்களின்
நிமிர்த்தமாக
கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
எனது இருப்பும் நேசமும்..

என் மீதான உன் பிரியமும்
உன் மீதான என் நேசமும்
நம் நாட்டு
போர்க்கால அகதிகளாய்
அவஸ்தைப்பட்டுக்கொள்கின்றன..

பேசா மடந்தையாய் என்ற கவிதையும் அகநிலை சார்ந்த கவிதையாக இருக்கின்றது. தனது அசைவுகள் மூலம் ஆணை தவிர்க்கும் பெண் தனக்குத் தெரியாமலேயே அந்த ஆடவனை நோக்குகின்றாள். ஆண் அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கான ஒத்திகை பார்க்கும் போது பெண்ணோ ஏதும் தெரியாதவளாய் கேள்விகளைத் தொடுக்கின்றாள். பெண்ணின் காதலுக்காக காத்திருக்கும் ஒருவனின் கவிதையாக இக்கவிதையைக் கொள்ளலாம். (பக்கம் 52)

எனக்குள் குவிந்து கிடக்கும்
உனக்கான வார்த்தைகள்
உன்னோடு பேசிக்கொள்வதற்கான
ஆயத்தங்களை என்னுள்
நிகழ்த்திக்கொள்கிறது..

நம்மிடையே
ஊசலாடிக்கொண்டிருக்கும்
உறவு நிலையின் மீது
ஏதும் தெரியாதவளாய் நீ
கேள்விக் கணைகளை
தொடுத்துக்கொள்கின்றாய்..

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கி தனது இரண்டாவது தொகுதியைத் தந்திருக்கும் துஷ்யந்தன், இன்னும் பரந்துபட்ட பல விடயங்களையும் தொட்டுக்காட்டி காத்திரமான பல கவிதைத் தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
மின்னஞ்சல் - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி வெளியீடு
விலை - 200/=

Monday, August 13, 2012

30. இன்னும் உன் குரல் கேட்கிறது - கவிதைத் தொகுதி

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு



உதட்டில் ஒன்றோடும்
உள்ளத்தில் வேறொன்றோடும் 
புரட்டுக்கள் புரியாத 
புனித மனம் கொண்டோருக்கு 

இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. 


கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் தனது ஆசியுரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். 


மலையக மண்ணின் மங்கை - கவிஞை
செல்வி எச்.எப். ரிஸ்னா என்பா(ள்)ர்
நிலையிலா உலகில் தன் பெயர் நிலைத்திட
நெஞ்சமர் கவிதை நிறையவே தந்தார்.

திறந்த கதவுள் தெரிந்தவை என்ற தலைப்பிட்டு கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் தனது அணிந்துரையில் ஒப்பீடு, குறியீடு இவ்விரு முறைகளிலும் குறியீடுதான் கருத்தை செம்மையாக வெளிப்படுத்தும். இப்படிமம் வாசகனை உணரவைக்கும். இக்கருத்தை இத்தொகுதியில் அதிகம் காணலாம். ரிஸ்னாவின் கவிதைகளில் கற்பனை, புதிய பார்வை, பாதிப்பு மூன்றும் கலந்துள்ளன என்கிறார். 


நீ வாழ்வது மேல் (பக்கம் 13) என்ற கவிதை போலி முகம் காட்டிப் பழகும் மனிதர்களுக்கு சாட்டையடியாக விழுந்திருக்கிறது. தன்னை நல்லவன் என்று காட்டிக்கொண்டும், தனக்கு உதவியவர்களை மறந்தும் வாழும் பலருக்கு இக்கவிதை பொருத்தமான அறிவுரையைப் பகிர்ந்து நிற்கிறது. நாம் பழகும், அல்லது பழகிய பலரில் நமக்குத் தெரியாமலேயே பொறாமைக் குணம்கொண்டு குழிவெட்டுபவர்கள் இருக்கின்றார்கள். அத்தகையவர்களை கண்டாலே விலக வேண்டும் என்கிறார் கவிஞர்.

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக் காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு..
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!

கற்பு என்பது ஆண்வர்க்கத்துக்கும், பெண் வர்க்ககத்துக்கும் பொதுவானது. ஆனால் பெண்கள் சருக்கினால் சரித்திரம், ஆண்கள் சறுக்கினால் சம்பவம் என்று கணித்து வைத்திருக்கிறது இந்த குருட்டு சமூகம். எதுவென்றாலும் உத்தமமமானவர்கள் ஆண்களிலும் இருக்கிறார்கள். பெண்களிலும் இருக்கிறார்கள். அத்தகைய தூய மனம் கொண்ட ஒரு ஆணின் மனது மழை ப்ரியம் (பக்கம் 16) என்ற கவிதையில் இவ்வாறு திறந்திருக்கிறது. 

நகம் கூட உனைத் தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை..
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

பெற்Nறூரை, குடும்பத்தினரை, சொந்த ஊரை எல்லாம் விட்டு இன்று தலை நகரில் வந்து தமக்கான அடையாளத்தை பலர் பதிய வைக்கின்றார்கள். அவ்வாறு தனது ஆளுமையை பதிய முனையும் பலபேர்களில் கவிஞரும் ஒருவர் என்பது இக்கவிதையினூடே புலப்படுகின்றது. உம்மாவுக்கு (பக்கம் 17)

உம்மா!
பிடிக்கவில்லை..
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!
................
................
என் வாழ்க்கையின் 
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்..
அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!

ஒரு பெண் சுமங்கலியாய் வாழும் போது வாழ்த்தும் பலபேர் அவள் அமங்கலியாகிவிட்ட பின்பு திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற இடத்துக்கும் அண்ட விடுவதில்லை. சபிக்கப்பட்டவர்கள் போன்று அவர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். தனது துணைவிக்கு அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் மரண அவஸ்தையிலிருக்கும் அன்புக் கணவனின் வேண்டுகோளாக ஒரு வீணை அழுகிறது (பக்கம் 30) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய காலத்தில் விதவைகள் மறுமணம் புரிவது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். 

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகளில் பல சந்தக் கவிதையாக எழுதப்பட்டிருப்பவை. இது அவரது தனித்துவ அடையாளமாகும். ஓசை நயமும், சந்தமும் இணைந்து எழுதப்படும் கவிஞரின் எல்லா கவிதைகளும் தங்கு தடையின்றி எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. முதல் முறை வாசிக்கும்போதே மனதைத் தொட்டுவிடும் வல்லமை ரிஸ்னாவின் கவிதைகளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு கவிதையின் சில வரிகள் இதோ... (மரணத்தின் தேதி - பக்கம் 45)

இத்தனை நாள் 
பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம் 
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு 
என் உயிரின் 
அந்தம் வரை ஓடும்!

கவிதைத் தொகுதியின் மகுடக் கவிதையாக விளங்கும் இன்னும் உன் குரல் கேட்கிறது (பக்கம் 60) என்ற கவிதை ஓர் ஆத்மாவின் தேடலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கவிதையின் கருத்துக்களில் சொட்டும் ஈரம் மனதிலும் கசிந்துவிடுகிறது. இதோ சில வரிகள்... 

ஷநீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!

குயிலே! 
உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் 
கேட்டுக்கிட்டிருக்கு!

மனசாட்சி இல்லாமல், அல்லது சட்டத்து புறம்பான செயல்கள் நம் கண்முன் தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான சில விடயங்களைத் தொட்டுக்காட்டி கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 66) எனும் கவிதை எழுதப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து 
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படித்தான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

பூ மலர்வது, பொழுது புலர்வது... இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன என்று தனதுரையில் கூறியிருக்கும் நூலாசிரியர் கவிதைகளில் அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோஷம், மலையகம் சார் பிரச்சனைகள், சமூக அவலம், சீதனக்கொடுமை, சுனாமி போன்ற உணர்வுகளும் கலந்திருக்கின்றன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இன்னும் உன் குரல் கேட்கிறது 
நூலின் வகை - கவிதைகள்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
தொலைபேசி - 07750092220719200580
விலை - 180 ரூபாய்