Monday, March 31, 2014

56. பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார்.

இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.

இந்த நூலுக்கு தமிழ்மாமணி, செந்தமிழ்ச் செம்மல், கவிச்சுடர், கலைக்காமாமணி, பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் நெய்திறம் மிக்க நெசவாளர் நெய்த நேரிய நூல் என்ற தலைப்பிட்டு தனது மதிப்புரையை பதிவு செய்துள்ளார். அதுபோல் முதுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு, குறும்பாவில் அமைந்து சுவைதரும் அங்கதப் பாக்கள் என்ற தலைப்பிலும், கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி கலைப் பெறுமானம் நிறைந்த பாலமுனை பாறூக் குறும்பாக்கள் என்ற தலைப்பிலும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பாலமுனை பாறூக் அவர்கள் குறும்பா விருந்து வைத்து என்ற தலைப்பில் தனதுரையை முன்வைத்துள்ளார். நவாஸ் சௌபி அவர்கள் நூலுக்குரிய பிற்குறிப்பை வழங்கியுள்ளார். இந்த பல்வேறுபட்ட மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்களை வைத்தே பாலமுனை பாறூக் அவர்களின் குறும்பாக்களை அவதானித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாய் அமையும் என்று கருதுகின்றேன்.

ஈழத் தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிட்டுப் பெயர் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக பாலமுனை பாறூக் அவர்கள் காணப்படுகிறார். 1987 இல் பதம் என்ற கவிதைத் தொகுதியையும், 2009 இல் சந்தனப் பொய்கை என்ற கவிதைத் தொகுதியையும், 2010 இல் கொந்தளிப்பு என்ற குறுங்காவியத்தையும், 2011 இல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத்தையும், 2012 இல் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு என்ற குறுங்காவியத்தையும் ஆக ஐந்து நூற்களை இலக்கிய உலகுக்கு தந்தவர், தனது ஆறாவது நூலாகவே இந்ந குறும்பாக்களைத் தொகுத்து முன்வைத்துள்ளார்.

காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா

என்ற வகையில் 90 குறும்பாக்களை அமைத்தும், ஏனைய குறும்பாக்களை வேறு யாப்பிலும் அமைத்துள்ளார். இயைபுத் தொடையும், மோனைத் தொடையும் குறும்பாக்களை அணிசெய்கின்றன. எதுகையும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. பல குறும்பாக்களில் எள்ளல் துள்ளி விளையாடுகின்றது.

குறும்பாவின் குணங்கள் என்ன? வெண்பா, குறள்வெண்பா போன்று கூரான பார்வை கொண்டது. கவிதைக்குரிய அழகும், ஆழமும், அடர்த்தியும், சுருக்கமும் கொண்டது. ஐந்தடி கொண்ட இப்பா மூலம் வாழ்வியலைப் பற்றிக் கலாபூர்வமாகப் பேசலாம். வார்த்தைக் கட்டமைப்புக்குள் வாழ்வியல் கலாச்சாரங்களை வடித்துத் தரலாம். ஈரடி எழுசீர் கொண்ட குறட்பா போலும் ஐந்தடி பதின்மூன்று சீர்களைக் கொண்ட குறும்பா மூலம் கவிஞர் தனது கருத்துக்களை அழகுபடச் சொல்லியுள்ளார். நகைச் சுவையும் எள்ளலும் நயந்து இரசிக்கத் தக்கவாறு இக்குறும்பாக்கள் அமைந்துள்ளன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பனுவலுக்கும் ஒவ்வொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. கவிச்சுவை கூட்டப்பட்டுள்ளது. ஐந்தடிப் பாவுக்குள் அர்த்தமும் அழகும் காட்டப்பட்டுள்ளது.

இந்நூலில் பல அறிவுரைகள் விரவிக் காணப்படுகின்றன. அநீதியான சமூகத்தோடு முரண்படுகின்ற அறிவாளிகளின் பேச்சு எப்போதும் அங்கதமாகவே இருக்கும். குறும்பாவின் இயல்பும் அங்கதம் சார்ந்ததே. மேற்கு நாடுகளில் இருந்த நுனறயசன டுநயச  இன் டுiஅநசiஉ (லிமறிக்;) ஆங்கில கவிதை வடிவமே இங்கு குறும்பாவாக வந்தது என்பது பலரது அபிப்பிராயம். இக் குறும்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மஹாகவி ஆவார். கேலியையும், கிண்டலையும், சமூக ஊத்தைகளையும் வெளிப்படுத்த மிகவும் பொருத்தமான வடிவமாக இந்த குறும்பாக்கள் இருந்தது. கேலியும், ஆபாசமும், நகைச் சுவையும் இதில் இருந்ததால் செம்மொழி இலக்கியத்துள் இதைப் பலர் இணைத்துக்கொள்ளவில்லை. இங்கும் அதே நிலைதான்.

1965 களில் வெளிவந்த மஹாகவியின் குறும்பாக்களிலும் இக்கேலியும் கிண்டலையும் காணலாம். 2002 இல் ஒலுவில் எஸ். ஜலால்தீன் சுடுகின்ற மலர்கள் என்ற தலைப்பில் ஒரு குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். அதுபோல் 2010 இல் ஒலுவில் ஜே. வஹாப்தீன் வெட்டுக்கற்கள் என்ற குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். இந்தத் தொடரில் நான்காவது நூலாகவே பாலமுனை பாறூக்கின் இந்த நூல் 2013 டிசம்பரில் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுதியில் சில குறும்பாக்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பிடித்துள்ளன. கவிஞர் அதற்கு காரணமாக, அந்த ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து புலக்கத்தில் உள்ளதாலும், நகைச்சுவை உணர்வை அந்த ஆங்கிலச் சொற்கள் கூட்டித் தருவதாலும் பொருத்தம் கருதி அவற்றை தான் சேர்த்திருப்பதாகக் கூறுகின்றார்.

இனி இரசனைக்காக கவிஞர் பாலமுனை பாறூக்கின் சில குறும்பாக்களை எடுத்து நோக்குவோம்.

அழகு, குணம், அறிவு என்ற எது இருந்தபோதிலும், இன்று திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயம் சீதனம் ஆகும். சீதனம் கொடுக்க வழியில்லை என்றால் எத்தகைய அழகிகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்ற நிலை தற்காலத்தில் தோன்றியிருக்கின்றது. அழகுக்காக மாத்திரம் திருமணம் செய்தல் கூட அண்மைய காலங்களில் வழக்கொழிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதுபற்றிய விடயங்களை உள்ளடக்கியே தேவை (பக்கம் 26) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அமைகிறது.

பக்கத்து வீட்டிலொரு பாவை
பால்நிலவு வதனத்தாள் பூவை
முப்பதையும் தாண்டிவிட்டாள்
முடியவில்லை திருமணமே
எப்படியும் சீதனமாம் தேவை!

தாய் தந்தையர் கஷ்டப்பட்டு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சொத்து சுகங்களைத் தேடி வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் முடித்த பிறகு சொத்தில் பாகப் பிரிவினை கேட்டு சண்டையிடுவார்கள். பிறகென்ன நடக்கும்? மொத்த சொத்தையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டு ஆளுக்காள் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய எண்ணமெல்லாம் தாய் தந்தையர்க்கு சிதறிப் போய்விடும். இறுதியில் அவர்களுக்கு வீடுமில்லை. பிள்ளைகளின் அன்பும் இல்லை என்ற பரிதாப நிலைமை உருவாகி விடுவதை இன்றுகளிலும் காணக்கூடியதாய் இருக்கிறது. சொத்து (பக்கம் 29) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அதை ஒட்டியே எழுதப்பட்டிருக்கின்றது.

பிள்ளைகளில் அவர்க்கதிகம் பற்று
பெருமளவில் சேர்த்தாராம் சொத்து
பிள்ளைகளோ சண்டையிட்டுப்
பிரிந்தனராம் தனித்தனியாய்
உள்ளதெல்லாம் வேறாக்கி, விற்று!

பெருங்குடி (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது. இதில் குடியின் கெடுதியைப் பற்றி சொல்லப்படடிருக்கின்றது. கணவன் குடியில் மூழ்கிவிட்டால் பால்மா வாங்குவதற்குக் கூட முடியாத நிலை தோன்றும். பிறகு குழந்தை பசியால் வாடி நிற்கும். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனமாக எழுதப்பட்டிருக்கின்றது.

தவழ்கிறது மதலையவள் மடியில்
தவழ்கின்றான் கணவனுமோ குடியில்
மதலையது பாலின்றி
மடியிலிருந் தழுகிறதே
குடிகுடியைக் கெடுத்திடுமோ முடிவில்!

இலஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். அப்படியிருக்க இன்றெல்லாம் சிறியதொரு காரியம் ஆக வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வாங்குபவர்களைவிட கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். காரணம் நேரத்துக்கு முடிய வேண்டிய காரியங்கள் பொடுபோக்குத் தனத்தால் பிற்போடப்படுகின்றன. அவற்றை சீக்கிரம் செய்துகொள்வதற்காக அலுவலக பியூன் முதல் மேலதிகாரி வரைக்கும் ஷகைக்குள் வைக்க| வேண்டும். அதை உணர்த்தி (பக்கம் 33) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கந்தோரில் கையூட்டுப் பெற்றான்
கடமைகளில் தவறியவன் கெட்டான்
வந்தவனை பொலிஸாரே
வலைவீசிப் பிடித்ததனால்
இன்றவனோ கூண்டிலகப் பட்டான்!

அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஒரு வகை முரட்டுத் தன்மையோடு பழகுவார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதற்குக் காரணம் தான் கந்தோரில் வேலை செய்கிறோம் என்ற பெருமையும், அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷனும் ஆகும். அவற்றை எல்லாம் உதறிவிட்டு எல்லோருடனும் இயல்பாக, அன்பாகப் பழகி, தமக்குக் கீழுள்ளவர்களிடமும் பணிவாக நடந்தால் எல்லாம் அழகாக இருக்கும் என்பதை அழகு (பக்கம் 39) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா விளக்கி நிற்கின்றது.

மக்களொடு அன்பாகப் பழகு
மதித்தவர்க்குப் பணிபுரிய இளகு
கட்டிவைத்த நாயாகக்
கடமையினில் குரையாமல்
ஒத்துழைப்பாய், உத்தியோகம் அழகு!

இலங்கையைப் பொறுத்தவரை எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகக் குறைவு. எழுத்தறிவு வீதம் இலங்கையில் உயர் மட்டத்தில் காணப்படுகின்றபோதும், வாசிக்கும் வீதம் மிகக் குறைவு என்றே சொல்லலாம். புத்தகங்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அதை புரிந்து கொள்ள இயலும், தமது கற்பனைளை உட்செலுத்தி படைப்புக்களை எழுதி ஒரு நூல் வெளியிட்டால் போதும். அந்த எழுத்தாளன் இனி வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே இருக்க வேண்டும் என்கிற நிலையும் காணப்படுகின்றது. அதைத்தான் வாட்டம் (பக்கம் 47) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா சுட்டி நிற்கின்றது.

இலக்கியநூல் வெளியீட்டுக் கூட்டம்
எத்தனைநாள் அதற்காக ஓட்டம்
பலவர்ண அழைப்பினிலே
பதவியொடு பெயர்பொறித்தும்
வரவிலையே எழுத்தாள்வோர், வாட்டம்!

கலாநிதி என்ற பட்டம் இன்று எல்லா துறைகளுக்கும் வழங்கப்படுகின்றது. குறித்த ஒரு துறையில் சாதனைகளை நிகழ்த்துவதனாலும் இப்பட்டம் வழங்கப்படுகிறதெனலாம். படித்து கலாநிதி ஆனவர்களுக்கும், புகழால் கலாநிதி ஆனவர்களுக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை காணப்படுவதை எடுத்துக்காட்ட, க(ல்)லாநிதி (பக்கம் 51) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கல்லாதான் ஆள்சும்மா வாட்டம்
கலாநிதியாம் இன்றவனோ கொட்டம்
பல்வேறு சங்கங்கள்
பலரகத்தில் விற்பதனால்
கல்லாதான் வாங்கினானாம் பட்டம்!

தேர்தல் மழைக்கு முளைக்கும் சில வேட்பாளர் காளான்களுக்கு போங்கையா... போங்க (பக்கம் 52) என்ற குறும்பா எழுதப்பட்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் வந்து அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் பிறகு யார் நீங்கள்? என்று கேள்வி கேட்பார்கள். வேடிக்கை என்னவென்றால் காலம் காலமாக இது நடைபெற்று வருவது தெரிந்தும் தமது மக்கள் இதைப் பற்றி பேசிப்பேசியே காலம் கழித்திருப்பதுதான். முன்னேற்றம், முயற்சி, மாற்றம் என்ற எதுவுமே இல்லாமல் தேர்தல் கால வேட்பாளர்களைப் பற்றி பேசிப் பேசியே நமது முன்னோர் வாழ்க்கை முடிந்திருக்கிறது. நமது வாழ்க்ககை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல்தான் வருகிறதா? வாங்க
தேனாக வாக்குறுதி தாங்க
பேர்புகழப் பேசிடுங்க
பேசிஎங்க வாக்கெடுத்தா
போயிடுங்க... வரமாட்டீர் போங்க!


அந்தம் (பக்கம் 55) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா நாட்டின் தேசியத்தை வலியுறுத்துகின்றது. யுத்தம் தின்ற நம் பூமியில் இப்போதுதான் சமாதான விதை நடப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் கூட இனவாதம், மொழிவாதம் பேசி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில தீய சக்திகள் நம்முள்ளும் ஊடுறுவித்தான் இருக்கின்றன. இதை கீழுள்ள குறும்பா வலியுறுத்தி நிற்கின்றது.

எல்லார்க்கும் நாடுஇது சொந்தம்
எவர்மறுப்பார் எமக்குள்ள பந்தம்
பொல்லாத இனவாதப்
பூசகரின் இடைமறிப்பால்
தொல்லையடா ஒற்றுமைக்கே அந்தம்!

எமக்கான ஒரு குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்தான், மக்கள் வாக்குகளை இட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களோ மக்களின் தீயில் சுகமாக குளிர் காய்கின்றனர். அவர்களால் உருவாகி, அவர்களையே அழிக்கின்றனர். சமூகத்தின் இருப்புநிலை குறித்த அக்கறை எதுமின்றி தானும் தன் குடும்பமும் என்ற வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்கின்றனர். கஷ்டப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கஷ்டமாகவே இருக்க, எம்.பி மார்கள் சொகுசான வாழ்க்கைக்குள் தங்களை உட்பொருத்திக் கொள்கின்றனர். இதைச் சொல்கிற குரல் (பக்கம் 57) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

எம்குரலே இவரென்று நம்பி
ஏமாந்தோம் போதுமடா தம்பி
எம்சமூகம் அழிகிறது
இருப்பெங்கோ தொலைகிறது
இவரெங்கோ? பிரதிநிதி.. எம்பி?

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது இலக்கியப் பங்களிப்புக்களைச் சிறப்பாகச் செய்துவருபவர். இவரது கொந்தளிப்பு என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2010 இல் அரச சாகித்திய மண்டல சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரது குறும்பாக்கள் அடங்கிய இத்தொகுதி நகைச்சுவை கலந்த விடயங்களை சுவாரசியமாக சொல்லியிருப்பதினூடாக மக்கள் மனதில் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. புது முயற்சிகளைக் கையாண்டு, ரசிக்கத்தக்க வகையிலும், சிரிக்கத்தக்க வகையிலும் குறும்பாக்களை எழுதி வெளியிட்ட நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
விலை – 200 ரூபாய்

Wednesday, March 19, 2014

55. நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஜீவநதியின் 31 ஆவது வெளியீடாக 100 பக்கங்களை உள்ளடக்கியதாக கவிஞர் ஷெல்லிதாசனின் நகர வீதிகளில் நதிப் பிரவாகம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்தக் கவிதைத் தொதியானது கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். இவரது முதலாவது கவிதைத் தொகுதியான செம்மாதுளம்பூ 2010 இல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரரும், சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி த. கலாமணி அவர்கள் தனது முன்னுரையில் ''1970 களின் பிற்கூறுகளில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவனாக இருந்த வேளை கவிதை எழுதத் தொடங்கிய ஷெல்லிதாசனின் நாற்பதாண்டு கால அறுவடைகள் 2010 இலேயே வெளிவர முடிந்தது என்ற ஆதங்கநிலை கடந்து, அதன் பின்பான மூன்றாண்டுகளில் அவர் எழுதிய படைப்புக்களின் தொகுப்பான இந்நூலின் வரவானது, கவிஞர் ஷெல்லிதாசனின் நிதானமான பார்வையையும், முற்போக்குச் சிந்தனைகளில் அவர் கொண்ட பற்றுறுதியையும் சமகால நடப்புகளைத் தீர்க்கமாக நுனித்தாயும் அவரது ஆற்றலையும் பதிவு செய்ய ஏதுவாகின்றது. ஈழத்து இடதுசாரி முன்னோடிகளில் முக்கியமானவராகக் கொள்ளப்படும் தோழர் மு.கார்த்கேசன் அவர்களின் அரசியல் வகுப்புக்களின் பால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனைகளில் பயிற்சி பெற்று, இடதுசாரி இயக்கத் தோழர்களான கே. டானியல், இளங்கீரன், யோ. பெனடிக்ற் பாலன் போன்ற படைப்பாளியாக வரவேண்டும் என்ற தன்னார்வத்தை வளர்த்துக்கொண்டவர் கவிஞர் ஷெல்லிதாசன்'' என்கிறார்.

இந்த நூலை, மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் அவர்களின் 18 ஆவது நினைவு தினத்தை நினைவுறுத்தி அன்னாருக்கு சமர்ப்பிப்பதில் கவிஞர் ஷெல்லிதாசன் மன நிறைவுகொள்கிறார்.

கவிஞர் தனதுரையில் ''அன்றாடம் எனது உணர்வுத் திரையில் பிம்பங்களாக விழுந்த செய்திகள், காட்சிப் படிமங்கள், அவற்றினூடாக நான் பெற்ற அனுபவங்கள் நகர வீதிகளில் நதிப் பிரவாகமாக அங்கு உங்களது கைகளில் தவழுகின்றது. பல்வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய கவிதைகளாக இவை அமைந்தாலும், மனித சமூகங்களிடையே புரையோடிப் போயிருக்கும் இன, மத, மொழி, சாதிய வேறுபாடுகள், அடக்குமுறைகள் என்பவற்றிற்கு எதிராக ஏதோ ஒரு விதத்தில் இவை பங்களிப்புச் செய்வதாகவே நான் நம்புகின்றேன்'' என்கிறார்.

இடதுசாரிச் சிந்தனைகள்தான் அவரின் கவிதைகளின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றன என்பதை இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் கட்டியம் கூறுகின்றன. மிகவும் இலகுவான மொழி நடையைக் கையாண்டு காத்திரமான முறையில் தனது கருத்துக்களை கவிதை வடிவில் கவிஞர் ஷெல்லிதாசன் அழகாக இந்தத் தொகுதியில் பதிவு செய்துள்ளார். இந்தத் தொகுதியில் 69 கவிதைகள் உள்ளன.

கண்ணில் ஒரு கங்கையாறு (பக்கம் 03) என்ற கவிதையானது மூதூரைச் சேர்ந்த சகோதரி ரிஸானா நபீக் பற்றிய பதிவை விதைத்துச் செல்கின்றது. குடும்ப நலன் கருதி தன் தலையை அடமானம் வைத்த அவளது தியாகம் உலகத்தையே கதிகலங்கச் செய்ததொன்று. அவளுக்கான மரண தண்டனை விதிக்கப்பட்டு விதியின் கைகளுக்குள் அவள் மூச்சடங்கிவிட்டபின், இலங்கையில் அவளது குடும்பத்தினருக்காக வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இவை எதுவுமே ரிஸானா என்ற தனியொருத்திக்கு ஈடாகாது என்பது யாவரும் அறிந்த உண்மை. ரிஸானாவைப் பற்றின கவிஞரின் பார்வை இவ்வாறு பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம்.

பாலை நிலத்தில்
கானல் நீரை
பருக விரைந்த மான்குட்டி

கங்கையாற்று வெள்ளம்
கரை புரள்கிறது கண்களில்
உனது சிரசு கொய்து
உயிர் உருவிய
அரபுச் சீமான்களின்
அபார மனதாபிமானத்தால்..

புனிதத்தைப் போற்றும் நிலங்கள்
மனிதத்தையும் மகிமைப்படுத்துமென
மனப்பால் குடிக்கும்
மடைத்தனம் - இந்த
மண்ணுக்கே உரியது.

நோட்டுக்களின் நோட்டம் (பக்கம் 05) என்ற கவிதையானது இன்று புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களைப் பற்றி பேசியிருக்கின்றது. வர்ணமயமான நோட்டுக்கள் இன்று அச்சடிக்கப்பட்டு வந்தாலும், அவற்றின் பெறுமதி குறைந்தே காணப்படுகின்றது. சில்லறை நாணயங்கள் கவிதையில் சொன்னாற்போல உண்டியல்களில்கூட காணக்கிடைப்பதில்லை. பொதுவாகப் பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் காணப்பட்டால் ஒரு நாளைக்கான அத்தியவசியப் பொருட்களை வாங்க அது போதுமானதாக இருக்கும். இன்றைய நிலைமையில் ஒரு பால் மா பைக்கற்றை வாங்கிவிட்டால் ஆயிரம் ரூபாயும் முடிந்து போகும். பணத்தின் பெறுமதியானது குறைந்து வரும் இக்காலத்தில் விலைவாசி மாத்திரம் ஏறிக்கொண்டே செல்வதுதான் வாடிக்கையானதும், வேடிக்கையானதுமான விடயமாகும்.

மரியாதை முகவரியை
இழந்து தவிக்கும்
மனித உரிமைகளைப் போல
கரன்சி நோட்டுக்களின் மதிப்புக்களும்
கடுகதி வேகத்தில் சரிந்தபடி

காணாமற் போய்விட்ட
நீதியாக
சதங்களின் சலசலப்பை
உண்டியல்களில் கூட
காணமுடியவில்லை..
துடுப்பாட்டத்தில் மட்டும்
சதம் - தனது பெயர்
உச்சரிக்கப்படுவதைக் கேட்டு
உள்ளுர ஆனந்தப்படுகிறது..

ஆயிரமான மயில் நோட்டின்
ஆட்டமும் உரு மாறியபோதும்
சந்தைக்குப் போனால்
ஒரு பொலித்தீன் பையில்
அடக்கமாகிவிடுகிறது..

இன்றைய வாழ்க்கையில் மனிதர்களிடம் மனிதநேயம் என்ற விடயம் மரித்துப்போய் காணப்படுகின்றது. காசுக்காக எதையும் செய்ய விளைபவர்கள் ஒரு மனிதனின் துன்பத்திற்குக்கூட உதவும் மனப்பாங்கு அற்றவர்களாகவே வாழ்கின்றார்கள். பண்பும், பாசமும் இன்று விலைமதிப்பில்லாமல் போய்விட்டது. செயற்கையாகப் பழகும் தன்மையே இன்று எம் சமூகத்தினர் மத்தியில் புரையோடிப் போயிருப்பது அவதானத்திற்குரியது. இன்;றைய சமூகத்தில் முனைப்பு பெற்றிருக்கும் இத்தகைய சிந்தனைகள் மனிதம் என்ற செல்நெறியிலிருந்து அனைவரையும் மாற்றியிருக்கின்றது என்பது நிதர்சனத்துக்குரியது. அந்தப் பண்புகளை மண் புதைத்த மனிதங்கள் (பக்கம் 11) என்ற கவிதை சுட்டிநிற்கின்றது.

குடிதானிருக்கு குடித்தனத்தைக் காணவில்லை சில குடும்பங்களில்.. அடிதானிருக்கு அன்பு பாசம் காணவில்லை பலர் வாழ்க்கையிலே.. பணந்தானிருக்கு பண்பு அங்கு பறந்து போச்சு காற்றினிலே.. படிப்புதானிருக்கு பகுத்தறிவைக் காணவில்லை சிலர் நடத்தையிலே.. பதவிப்படி ஏற ஏற பாறாங் கல்லின் கனமும் உடனேறிக் கொள்கிறது கனவான்களின் உச்சியிலே.. பசையிருந்தால் மட்டுமே அண்ணன் தம்பி உறவும் ஒட்டுகிறது பெரும் பாசத்திலே.. அசையும் அசையாச் சொத்துக்களையும் அந்தஸ்துக்களையும் ஆராய்ந்தே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட இன்று நிச்சயமாக்கப்படுகின்றன எமது இல்லங்களிலே..

அடிமையின் மோகம் (பக்கம் 15) என்ற கவிதையானது அடக்குமுறைக்கு எதிரான ஒரு கவிதையாக நோக்கத்தக்கது. இன்றைய சமுதாயத்தில் நலிவுற்றவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வியூகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு இனம் சார்ந்து அல்லது ஒரு மொழி சார்ந்து எழுகின்ற சில போக்குகள் அடிமட்ட மக்களின் வாழ்க்கையை மாத்திரமன்றி பணம் படைத்தவர்களிடையேயும் தாக்கம் செலுத்திவிடுகின்றது. இன, மத, குலம் போன்றவற்றைத் தவிர்த்து மனிதம் என்ற வட்டத்துக்குள் வைத்து எலலோரையும் நோக்கும் சமத்துவம் பேணப்படுமானால் நாட்டில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் வலுவற்றதாகிப் போய்விடக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். கீழுள்ள அடிகளில் தொழிலாளி வர்க்கத்தின் ஏக்கத்தையும் காண முடிகின்றது.

குதிரையாய் கழுதையாய்
முதுகினைக் கொடுத்தோம்
சவாரிகள் நடக்குதடா

அவர்
கொடுப்பதை உண்டு
அடிப்பதை வாங்கி
அடிமைச் சீவியம் தொடருதடா

மலையில் ஒரு பனித்திரை (பக்கம் 27) என்ற கவிதையானது மலையக மக்களின் வாழ்வு குறித்து பேசியிருக்கின்றது. தேயிலை மலையில் காலநிலைக் குளிராலும், சுட்டெரிக்கும் வெயிலினாலும் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சுமக்கின்ற பாரத்துக்கான கூலிச் சம்பளமோ மிகக்குறைவுதான். மலையக மக்கள் என்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினராக கருதி வந்த காலம், தற்போதைய இளைஞர் யுவதிகளின் கல்வியறிவினால் மாற்றப்பட்;டு வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனினும் அவர்களின் யதார்த்த வாழ்வியலை நோக்கும்போது அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். துரைமார்களோ சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க, தொழிலாளர்களின் பாடு அந்தோகதியாகத்தான் இன்னமும் இருக்கின்றது என்பதை கீழுள்ள வரிகள் தொட்டுக்காட்டியிருக்கின்றமை மனவேதனையைத் தரும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

நானோ திருமலையில்
நீயோ தேயிலை மலையில்
உன் நிலையைக் கண்டு
எனது மனோ நிலையோ
ஒரு நிலையிலில்லை தோழா

இருவருக்கும் சுதந்திரம்
ஏனோ கேள்விக் குறிதான்
இருவருமே பேசுமொழி
இன்பத் தமிழே அதனாலேதான்

ஐயாமார் சம்பளத்தில்
ஐந்து வீதமும் உனக்கில்லை நீ
கொய்யாமல் இருந்துவிட்டால் நாளை
குடி மூழ்கும் தேசமடா

அடிமைச் சீவியத்தை
அடி வருடி உனக்களித்து
பெருமை பேசுபவர்
பெருந்தவறை (நீ) உணர்வதெப்போ?

மனம்விட்டுச் சிரிக்க வா (பக்கம் 99) என்ற கவிதையானது சிரிப்பின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அழகான புன்னகை ஒன்றின் மூலம் பல விடயங்களை சாதிக்க முடியும். ஆறுதல் கேட்டு தவித்திருக்கும் ஒரு இதயத்துக்கு அன்பானவரின் புன்னகை ஒன்றே மருந்தாக ஆகிவிடுகின்றது. ஆனால் ஏழையின் சிரிப்பை வறுமை இல்லாமலாக்குகின்றது. கன்னியரின் சிரிப்பை சீதனம் பறித்துக்கொள்கின்றது. கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளியின் சிரிப்பை முதலாளிவர்க்கம் இல்லாமலாக்குகின்றது. இப்படி சிரிப்புகூட இன்று பணத்தில்தான் தங்கியிருக்கின்றது என்ற பேருண்மையை இக்கவிதை சொல்லி நிற்கின்றது.

சிரிக்காமலிருந்த நாள் பாழென ஆகுமாம்.. செம்மையாய் வாழ்ந்திட சிரித்திட வேண்டுமாம்.. அகத்தினிலே இருந்தெழும் புன்னகை மலர்களால் ஆனதான நோய்களும் அகன்றேதான் ஓடுமாம்..

ஏழையின் சிரிப்பதை இல்லாமை பறித்தது.. இருப்பவன் சிரிப்பதை, அவன் இருப்பு அதே பறித்தது.. கன்னியர் சிரிப்பினை சீதனம் பறித்தது.. காளையர் சிரிப்பதை காவலும் தடுத்தது.. உழைப்பவன் சிரிப்பினை உறிஞ்சுவோன் பறித்தனன்.. உயர்ந்தவன் சிரிப்பதை பொய்மையும் மறைத்தது..

மமதையில் இங்கே மத யானை சிரிக்குது.. மடிகளை நிரப்பியே மந்திகள் சிரிக்குது.. ஏமாற்றி உள்ளுர நரிகளும் சிரிக்குது.. இடையிடை ஓநாயும் சேர்ந்தேதான் சிரிக்குது.. கழுகுகள் பிணங்களைக் கொத்தியே சிரிக்குது.. கலர்களை மாற்றியே பச்சோந்தி சிரிக்குது..

மனிதனைத்தவிர இங்கு எல்லாமே சிரிக்குது.. அவன் மனம்விட்டுச் சிரிக்கின்ற நாள் எந்த நாளோ?

இலங்கையின் மூத்த கவிஞர்கள் வரிசையில் அழியாத நாமம் கவிஞர் ஷெல்லிதாசனுக்கும் உரியது. மனிதநேயம் சார்ந்த அவரது சிந்தனைகள் கவிதை வழியே பிரவாகிக்கின்றன. இளைய எழுத்தாளர்கள் இக்கவிஞரின் நூலை படிப்பதன் மூலம் தங்களது இலக்கியப் பாதையில் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரது கவிதைகள் தக்க சான்றாக அமைகின்றன. கவிஞர் ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - நகர வீதிகளில் நதிப் பிரவாகம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் -  ஷெல்லிதாசன்
வெளியீடு - ஜீவநதி
விலை - 250 ரூபாய்

Tuesday, March 11, 2014

54. ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்

வர்ணமயமான அட்டைகளுடன் பார்த்ததும் வாசிக்கத்தூண்டும் வகையில் இந்திய சஞ்சிகைககளே பெரும்பாலும் காணப்படுகின்றன. நம் நாட்டவர்களாலும் அப்படியானதொரு ஜனரஞ்சகமான சஞ்சிகையைக் கொண்டு வர முடியும் என்பதைப் பிரதிபலிப்பதாகவே பல வர்ணங்களுடன் கூடிய அட்டைப் படத்துடனும், வண்ணமயமான பக்கங்களிலும் பல சுவாரஸ்ய விடயங்களை உள்ளடக்கியதாக இல்லத்தரசிகளின் தோழியாக ஒளி அரசி சஞ்சிகையின் மூன்றாவது இதழ் 60 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

பெரியவர்களும், முன்பள்ளி மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் என்று பல்வேறு தரப்பினரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் மாதாந்த இதழாக வெளிவரும் ஒளி அரசி, இதுவரை மூன்று இதழ்களைக் கொண்டுவந்திருப்பது பாராட்டத்தக்கது. கல்வி, அறிவியல், சினிமா, குறுக்கெழுத்துப் போட்டி, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கி  மொத்தமாக ஒரே பார்வையில் வாசிக்கக் கூடியதாக இந்தச் சஞ்சிகையை வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்காலத்தில் பல்வேறு வகையான சஞ்சிகைகள் வெளிவருவது நாம் அறிந்ததே. ஆனால் பல்சுவை அம்சங்களைக் கொண்ட இவ்வகையான சஞ்சிகைகளை நாம் காண்பது அரிதாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இச்சஞ்சிகை அதற்குரிய  வெற்றிடத்தை சிறப்பாகப் பூரணப்படுத்துகிறது என்று துணிந்து சொல்லாம்.

இந்த இதழில் நட்சத்திர இல்லத்தரசி என்ற மகுடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களுடனான நேர்காணல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர். ராஜலிங்கத்தின் ஷகாதலி தேடிக் கொடுத்த மனைவி| என்ற தொடர்கதையின் பகுதியையும் காணமுடிகிறது.

சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் ஹாஜியானி ஹபீறா சலீம் அவர்கள் பாகுபாடின்றி மாணவர் சமூகத்திற்கு உழைத்ததால் கிடைத்த கௌரவமே அதிபர் பதவி என்று தனது நேர்காணல் மூலம் மனந்திறக்கின்றார். கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி ரம்யா உதயகுமாரின் பாரதீ குறுந்திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் காணலாம். காதலர் தின சிறப்புக் கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்திருக்கின்றன.

இவ்வாறாக அனைத்து தரப்பினரும் வாசித்து பயன்பெறக்கூடிய வகையில் ஒளி அரசி இதழின் பெப்ரவரி மாதத்துக்கான இதழ் வெளிவந்துள்ளது. ஒளி அரசிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

சஞ்சிகை - ஒளி அரசி
விலை - 60 ரூபாய்
முகவரி - 85, ஜயந்த மல்லிமாரச்சி மாவத்தை, கொழும்பு 14.
தொலைபேசி - 0115738003, 0115738855
மின்னஞ்சல் - oliarazi33@gmail.com

53. கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீ
ட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ``கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.''

பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ஷஷஇத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்|| என்கிறார்.

சாயம் போன சுவர் (பக்கம் 15) என்ற கவிதை போருக்கு பின்னரான சூழலை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகின்றது. பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள் ஆசை ஆசையாக கட்டிய வீடுகளும், வீடு போன்ற ஒன்றை கட்டிக்கொண்டு அன்றாடம் தமது வாழ்வைக் கழித்தவர்களும் இன்று எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சில வீடுகள் இருந்த தடயங்கள்; எதுவுமே இல்லாதிருப்பதையும், இன்னும் சில வீடுகள் இடிபாடுகளுக்கு மத்தியில் எப்படி உருக்குலைந்து இருக்கின்றது என்பதைப் பற்றியும் நன்கு உணர்த்துகின்றது இக்கவிதை. மனிதர் தவிர்ந்த ஏனைய ஜீவராசிகள் வாழ்ந்துவரும் ஒரு பாழடைந்த இடம் பற்றி அக்கவிதை மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

சாயம் போன சுவர்
ஆங்காங்கே,
மின்னல் கீற்றுக்களாய்
வெடிப்புக்கள்.

வெடிப்புக்களை நிறைத்தபடி
எறும்புகளின் ஊர்வலம்.

வர்ணப் பூச்சுக்கள்
பட்டை பட்டைகளாய் கிளம்பி
முகங்காட்டும்,
பல தோற்றங்கள்.

துடைப்பான் பட்டு
பலகாலம் ஆனதை உணர்த்தும்
தூசிப் படலம்..

நீ பற்றிய என் புரிதல் மொழி (பக்கம் 24) என்ற கவிதை காதலின் வலியையும், சுமையையும் உணர்த்தி நிற்கின்றது. காதலின் ஆழத்தை உணர்த்தும் இக்கவிதையில் அவள் பற்றிய புரிதலை, மௌனம் என்பது மொழியாக்கிவிடுமா? என்று கேட்டிருக்கும் விதம் ரசனைக்குரியது.

உனது இறுதிப் பார்வைகளை
இன்றும்,
மொழிபெயர்க்க முடியாதவனாய்
நான்.

என்னை நிறைக்கிறது
நீ தந்துபோன சுமை.
உன் ஞாபகங்களை
மீட்கிறது,
ஊதிப்பெருத்த வலி..

போர் நிகழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் ஒருவித அச்சத்தோடுதான் தமது வாழ்க்கையை கடத்தி வந்தார்கள். எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்கும் என்றே தெரியாத அந்த இக்கட்டான சூழ்நிலை சராசரி மனிதனது அன்றாட வாழ்வியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதையே கீழுள்ள வரிகளிலிருந்து புரிந்துகொள்ள இயலுகிறது. அதாவது நேரடியாக கண்ட அல்லது கேள்விப்பட்ட விடயங்கள் கனவிலும் வந்து அச்சமூட்டுவது இதன் மூலம் புலனாகின்றது. சொப்பனத்தில் ஒரு போர் (பக்கம் 29) என்ற அந்த கவிதையின் சில வரிகள் பின்வருமாறு...

இனந்தெரியாத் திசைகளில் இருந்து
ஏவப்பட்ட பல்வேறு குண்டுகள்
எனைச் சுற்றி
வீழ்ந்து வெடிக்கின்றன..

அப்பளம் பொரிவது போல்
சுற்று முற்றிலும்,
துப்பாக்கி ரவைகள்
வெடித்துக் கொண்டிருந்தன..

புரியாத பாஷைகளில் பேசியவாறு
மூர்க்கமாய் படைவீரர்கள்
எனை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்..

.... திடுக்கிட்டு எழுகிறேன்
படுக்கயறை பூட்டிக்கிடந்தது.

ஒரு இரவைத் தின்ற கிரவல் வீதிப் பயணம் (பக்கம் 38) என்ற கவிதை இரவுகளில் பயணம் செய்வதில் உள்ள அவஸ்தையைப்பற்றி அழகாக விளக்கி நிற்கின்றது. சிறிய கவிதை என்றாலும் அது சொல்லியிருக்கும் செய்தி ஆழ்ந்து நோக்கத்தக்கது. யுத்தத்தினால் சிதைவடைந்த வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் குன்றும் குழியுமாக இருப்பது நினைவில் இருந்தாலும், எதிர்பாராத இடங்களில் இருக்கும் குழிகளில் தடுக்கி விழப்போவது பற்றி கவிதை எடுத்துரைக்கின்றது. அத்துடன் பயந்து வருவதிலேயே பயணமும் முடிந்துவிடுகின்றது என சொல்கின்றார் கவிஞர் சிந்துதாசன்.

கடும்பனி குளிரெடுக்க
முன்னும் பின்னும் அசைந்தவாறு
உந்துருளியின் வேகத்தை
ஆரோகணிக்கிறேன்..
முடியவில்லை..
குளிரும் அதனுடன்
இணைகிறது..

கணக்கு வைத்திரந்த
சில குழிகளைத் தவிர
மற்றையவை எல்லாம்
எனைத் திடுக்கிடச் செய்தன..

எனது சேரிடம்
வந்தபோது
இரவைப் பயணம் தின்றிருந்தது!

உயிர்ப்புறம் ஞாபகங்களில் சமையும் கணங்கள் (பக்கம் 64) என்ற கவிதையும் போரின் வடுக்கள் பற்றியே பேசியருக்கின்றது. ஒரு வரலாற்றின் பக்கத்தையே மாற்றியமைத்த யுத்தமானது மக்களின் ஜீவிதத்தையே கேள்விக்குறியாக்கியது. எல்லாமே மாறிப்போன அந்த போர் சூழலில், நேற்று போல் இன்றும் மணம் வீசியபடியிருக்கும் காட்டுமல்லி மட்டும், இன்னும் அதேபோல் வாசம் வீசுகிறது என்று ஒரு உண்மைiயும் அழகாக சொல்லியிருக்கின்றார்.

விட்டுப்போன குடிவளவை எண்ணித் தேய்ந்த, நாட்களின்.. நம்பிக்கைகள்.. உடைந்து நொறுங்கிற்று.. கறையான்களுக்கு உணவளித்தபடி உருக்குலைந்து போகும் வளவு வேலிக் கம்பிக் கட்டைகள்.. எனைக் குடிபெயர்த்த இறுமாப்பில் மனை நிலத்தின் மையத்தில், இயந்திரத் தகடாய் ஒரு பேய்க் குடில், அதில் பல்லிளித்தபடி தெரிகிறது கோரமுகம்.. பேய்கள் தின்ற வாழ்வில் ஞாபகங்களை உயிர்ப்பிக்கிறது.. என் குடிமனை முற்றத்து ஆத்தி மரக் கொப்பில் தொங்கும், வெளிறிக் கிழிந்த உடுதுணி.. எல்லாமே மாறிற்று.. நேற்றுப் போல் இன்றும் மணம் வீசியபடி இருக்கும் காட்டுமல்லியைத் தவிர..

இந்தத் தொகுதியில் போரியல் சார்ந்த பல கவிதைகளும், அகம் சார்ந்த ஓரு சில கவிதைகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவரது எதிர்கால இலக்கியப் படைப்புக்கள் இன்னும் சிறப்பாக வெளிவர என வாழ்த்துக்கள்!!!

நூல் - கடலின் கடைசி அலை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பொலிகையூர் சு.க. சிந்துதாசன்
வெளியீடு - அலைகரை
விலை - 250 ரூபாய்