Wednesday, May 13, 2020

138. துணிந்து நில் சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

துணிந்து நில் சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

கவிஞர் பீ.ரீ. அஸீஸின் 11 ஆவது நூல் துணிந்து நில் என்ற சிறுவர் பாடல் நூலாகும்.  சிறுவர் இலக்கியத் தொகுதியாக வர்ணப் படங்களை உள்ளடக்கி 28 பக்கங்களில் சிறுவர் விரும்பும் பாடல்களைக் கொண்டு அழகாக அமைந்திருக்கின்றது இந்த நூல்.

சிறுவர்களின் போக்குக்கு ஏற்ப பாடல்களை எழுதி அதை சிறுவர்கள் வாசிக்கும் அந்தத் தருணம் ஒரு எழுத்தாளனுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிடுகின்றது. சிறுவர்களுக்கு சொல்ல விரும்பும் நற் செய்திகளை, அவர்களுக்குள் விதைக்க நினைக்கும் நல்ல பழக்கங்களை காட்சிப்படுத்தல்களுடன் கூடிய பாடல்களாக சொல்லும்போது அதை சிறுவர்கள் மிகவும் விரும்புவார்கள். அந்த யுக்தியை நூலாசிரியர் இந்நூலில் கையாண்டிருப்பது சிறப்புக்குரியதெனலாம்.

துணிந்து நில் என்ற அறிவுரை கூறும் தலைப்பு இந்நூலுக்கு சூட்டப் பட்டிருப்பதானது எந்நேரமும் உறுதியாக நின்று கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதை சிறுவர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இது அவசியமானதொரு அறிவுறுத்தலாகக் காணப்படுகின்றது. இதை நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவது நாளாந்த செய்திகளில் முக்கிய பங்கினை வகித்து நிற்பது குறித்து நாம் எல்லோரும் கவலையும் வெட்கமும் அடையக் கூடிய நிலையில் இருக்கின்றோம். இத்துஷ்பிரயோகங்கள் சமூகத்தை விட்டும், நாட்டை விட்டும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவை ஒழிக்கப்பட வேண்டுமானால் சிறுவர்களின் மனோ நிலையிலும் அதற்கெதிரான நிலைப்பாடு இருக்க வேண்டும். இதனை முன்வைத்தே அவர்களைப் பார்த்து துணிந்து நில் என்று சொல்லி ஒரு தைரியத்தை வரவழைக்க முயற்சித்துள்ளேன். இம்முயற்சி வெற்றி பெறும்போது சிறுவர்களுக்கெதிரான  செயற்பாடுகளில் ஒரு தளர்வு நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் மகிழ்;ச்சியும் சந்தோசமும் கொண்ட சுதந்திர சிறுவர் சமுதாயம் தோற்றம் பெறும்'.

தலைப்புக்கான காரணம் வாசகரை மிகவும் மகிழ்விக்கின்றது. காரணம் இன்றைய சிறுவர்கள் தான் நாளைய சமுதாயத்தின் தூண்(தலைவர்)களாவர். அவர்களின் மனோநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுடன் கல்வியிலும் அவர்களை நிலைத்து நிற்க வழியமைக்க வேண்டும். நிறைய நல்ல நூல்களை வாசிப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள் என்பதை அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். அவ்வாறு பதிப்பதற்கு இத்தகைய சிறுவர்களுக்கு ஏற்ற நூல்களை சிறுவர்களின் வாசிப்புக்காக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறு வயது ஞாபகங்கள் மிகவும் பசுமையானவை. அந்த பசுமையை நாம் எமது சிறுவர்களுக்கும் வழங்குவதற்கான நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர்கள் நிலவை அதிகம் விரும்புவார்கள். நிலா நிலா வா வா (பக்கம் 09) என்ற முதல் பாடல் பின்வருமாறு அமைந்திருக்கின்றது.

நிலா நிலா வா வா
நீல வானில் நீந்தி வா
பாலர் எம்மைக் காண வா
பார்த்திருக்கோம் ஓடி வா

வான வெளி மீதிலே
தவழ்ந்து வரும் குழந்தை நீ
உன் பூரிப்பில் பூ மலரும்
பூப்பறிக்க ஓடி வா!

மலரும் மொட்டுக்கள் (பக்கம் 11) என்ற பாடல் சிறுவர்களின் மனதில் உள்ள வலிகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகின்றது. வெளியில் சொல்ல பயந்துகொண்டு சில சிறுவர்கள் தமக்கு நடந்த கொடுமைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் வலியை கீழுள்ள வரிகளில் காணலாம்.

மலரும் மொட்டுக்கள் நாங்கள்
எம்மை சிதைக்காதீர்கள்
புலரும் பொழுதுகள் நாங்கள்
எம்மைத் தடுக்காதீர்கள்

வளரும் அரும்புகள் நாங்கள்
எங்களைக் கொய்யாதீர்கள்
வதைத்து எம்மைக் கொடுமைப்படுத்தும்
செயலையும் செய்யாதீர்கள்

துணிந்து நில் (பக்கம் 15) என்ற மகுடத் தலைப்பு முன்னர் குறிப்பிட்டது போல சிறுவர்களிடம் துணிவையும் தைரியத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளன. சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் அவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கின்ற அரக்கர்கள் வாழும் உலகம் இது. அத்தகைய கொடியவர்களிடமிருந்து பிஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. அந்த வகையில் ஒரு எழுத்தாளனின் பங்களிப்பாக இவ்வரிகள்...

துணிவிருக்கும் உனக்குள் - அதை
துணையாய் கொள்ளு நீயும்
அடங்கிப் போகும் எண்ணம் - உன்னை
அடக்கியாளும் திண்ணம்!

சிறுவர் உம்மைச் சிதைக்க
சிறுத்தை பின்னால் தொடரும் - நீ
உறுமிக் கொண்டு பாய்ந்தால் - அது
ஓடி ஒழிந்து கொள்ளும்!

பாரில் அழிவே மிஞ்சும் (பக்கம் 20) என்ற பாடல் நற் சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக அமைந்துள்ளது.  நற்குணங்களைப் பேணி நடக்காவிட்டால் பாரில் அழிவே மிஞ்சும் என்கிறார் கவிஞர்.

உண்மை பேசி உத்தமராய்
நன்மைசெய்து வாழுவோம்
அன்பை மனதில் இருத்தியே
அறங்கள் செய்து உயருவோம்

இன்பம் பொங்கும் வாழ்வை
இணைந்து நாமும் பெறுவோம்
துன்பம் செய்யும் எண்ணம்
தொடர்ந்தால் துடைத்து எறிவோம்

சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் படைப்பாளிகள் வரிசையில் கவிஞர் பீ.ரீ அஸீஸும் சிறந்த பங்களிப்புக்களை நல்கி வருகின்றார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - துணிந்து நில்
நூலின் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

No comments:

Post a Comment