Tuesday, December 16, 2014

70. தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதி பற்றிய பார்வை

தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதி பற்றிய பார்வை

நிகழ்காலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை  ஒரு படைப்பாக வெளிக்கொணரும் போது அது மனதுக்கு ஓரளவு திருப்தியையும், மனிதர்களிடத்தில் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகின்றது. இப்படைப்புக்களை காலம் கடந்து வாசிக்கின்றபோது கடந்துபோன சமுதாயத்தின் அல்லது காணாமல் போன வரலாற்றின் எச்சங்களை நிரூபிக்கின்றது. காலத்தின் கண்ணாடியாக இலக்கியம் கொள்ளப்படுவது இதனாலேயாகும். குறிப்பிட்ட காலத்தில் வாழும் கவிஞர்கள் அந்தந்த காலத்தில் நிகழ்ந்தவை பற்றி படைப்பு இலக்கியங்களினூடாக பதிவு செய்திருப்பதால் அந்தந்த காலத்து மக்களின் மனநிலைகள், வாழ்க்கைப் போக்குகள், எண்ணப்பாடுகள், கொள்கைகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியும். பிரகாசக்கவி எம்.பீ அன்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் தடம் தொலைத்த தடயங்கள் என்ற இந்தத் தொகுதி இலங்கையில் நடந்த யுத்த சூழலையும், அது தந்த வடுக்களையும், அரசியல் கள நிலவரங்களையும் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் எழுச்சிக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றது.  

ஓவியா பதிப்பகத்தின் மூலம் 112 பக்கங்களை உள்ளடக்கியதாக  பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் தடம் தொலைத்த தடயங்கள் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அட்டைப்படம் மிகவும் அழகான முறையில் அமைந்து வாசகர்களை வசீகரித்துக்கொள்கிறது. 

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சென்னை, அண்ணாநகர் கிழக்கு, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் ப. பானுமதி (ஆதிரா முல்லை) அவர்கள்,  சரித்திரம் படைக்கும் சமுதாயக் கவிஞர் என்ற தலைப்பிட்டு தனது கருத்துக்களை வழங்கியுள்ளார். அதில் ஷஷகவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின் பெருமை பேசுவதோ அல்லது சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த விவேகம் நிறைந்த, எழுச்சிமிகுந்த கருத்தால் சிறுமையை களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக்கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்|| என்று குறிப்பிடுகின்றார். 

வாழ்த்துரை வழங்கியுள்ள கவிஞர் றியாஸ் குரானா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஷஷமிகவும் எளிமையான கவிதை அமைப்பு. வாழைப் பழத்தை உரித்து ஊட்டிவிடுவதைப் போன்ற கவிதை சொல்லல், மரபின் இசைத் தன்மை கூடிவருகிற வசனங்கள். வாசிக்கவும், நினைவில் பதிந்துவிடவுமான ஒருவகை கவிதை சொல்லல். நமது மூதாதையரின் கவிதை மனமும், கவிதைக்கான சொல்லுதலும் இந்த இசைத் தன்மையும், எளிமையும் நிறைந்தவைதான். அதைத்தான் நாம் நாட்டார் பாடல் என இன்று அழைக்கிறோம். அதன் தொடர்ச்சியை இன்று நிகழ்த்திக் காட்டினால், அநேகமாக இவருடைய கவிதை செயல் போலவே அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. நமது பாரம்பரிய அல்லது சாதாரண மக்களின் கலைப் பங்களிப்பு, கலை ஈடுபாடு இந்த நாட்டார் தன்மையையே அதிகம் அக்கறை கொண்டிருப்பதாகும். அவர்கள் தங்களின் பாட்டையும் பதையத்துக்களையும் எளிமையாகவும் கிண்டலாகவும், சிறு கோபங்களாகவும் வெளிப்படுத்தினார்கள். அதைத் தொடர்வதாகவே இவருடைய கவிதைச் செயல் அமைந்திருக்கிறது||.

பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் தனதுரையில் ஷஷசமூகத்தில் புரையோடிப் போயுள்ள மடமைகளை, அடிமைத் தனங்களை, பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை, எமது இலங்கைத் திருநாட்டில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பீடித்திருந்த கொடிய யுத்தம் ஏற்படுத்திய யுத்த வடுக்களை எளியோரை எள்ளி நகையோடும் வலியோரின் ஈனச் செயல்கள் மீதான என் அதிருப்திகளை, இந்த உலக வாழ்வின் மீதான நிலையாமையினை, சாக்கடை அரசியலை, யுத்தத்துக்கு பின்னரான இலங்கைத் தீவில் சிறுபான்மை சமூகங்களுக்கு (முஸ்லீம்களுக்கு) எதிரான இனவாத, மதவாத அடக்குமுறைகளை கண்டு சாந்தி, சமாதானம், இன ஒற்றுமை, சகவாழ்வு என்பவற்றை விரும்பும் ஒரு சராசரி மனிதனாய் என் மனம் கொண்ட ஆற்றாமையினை, சீற்றத்தினை அவற்றின் ரணங்களை இந்த தடம் தொலைத்த தடயங்கள் என்னும் கவிதை தொகுப்பின் பிம்பமாய் செதுக்க முயற்சித்துள்ளேன்||

இனி இந்தத் தொகுதியிலுள்ள 53 கவிதைகளில் ஒரு சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம். 

வாழ்க்கையின் யதார்த்த நிலையில் மிக அழகாக சுட்டிக்காட்டும் கவிதையாக நீயும் மனிதன் (பக்கம் 20) என்ற கவிதையைக் கொள்ளலாம். நிச்சயமற்ற வாழ்க்கையின் மீது மனிதன் கொண்டுள்ள ஆசையானது வெறும் கற்பனையே தவிர வேறில்லை. மரணம் வந்து இதையெல்லாம் மறக்கடித்துவிட்டால் போலியாக வாழ்ந்த வாழ்க்கை மாத்திரம்தான் மிச்சமாகும். இறந்த பின் எம்மைச் சுற்றியிருந்த உறவுகள் எல்லாம் விலகிவிட, நாமும் எமது செயல்களும்தான் எம்முடன் வரும். ஒரு கறுத்த போர்வையால் மூடப்பட்டிருக்கும் உலக இன்பம் என்ற ஆசையை ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மைக்காக உண்மையாக வாழ வேண்டும் என்கிறார் கவிஞர்.

நிலையில்லா - உன் வாழ்க்கையெனும் பயணத்தின் வசந்த காலத்தரிப்பிடம் இந்த உலகம்.. அதில் கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீடு மனிதா நீ..! இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! அலை வந்து உடைத்துச் செல்லும் மணல் வீடாய் உன் மரணம்.. அதில் அழுகிப் போகும் மாம்பழம் உன் உடல் இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! தேநீரில் சேர்க்கும் சர்க்கரையாய் கரைந்து போவது உன் சொத்துக்கள்.. அதில் தேன் குடித்ததும் பறந்து செல்லும் தேனீக்களாய் உன் உறவுகள் இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..! இத்தனையும் புரியாத கிணற்றுத் தவளையாய் இன்பங் காணும் மானுடனே.. இத்தனைக்கும் இன்பத்தின் போர்வைகள் என்பதனை நீயும் உணர்ந்திட்டால் நீதான் என்றும் மனிதனடா..!!

தூரத்துப் பயணம் (பக்கம் 22) என்ற கவிதை தூரதேசம் சென்று தொழில் செய்பவர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது. வருடங்கள் பல கடந்தாலும் வாழ்க்கையில்; முன்னேற்றங்கள் இல்லை என்ற காரணத்தா வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கின்றார்கள் பலர். பணம் சம்பாதிப்பதற்காக வேண்டி தாய் தந்தையை மனைவி பிள்ளைகளை உற்றார் உறவினர்களை எல்லாம் விட்டுவிட்டு கனவுகளையும், ஏக்கங்களையும் மாத்திரம் சுமந்துகொண்டு கடல்தாண்டி வேறு தேசம் செல்கின்ற அத்தகையவர்களின் வேதனைக் குரலை காதுகளில் ஒலிக்கச் செய்கின்றது இக்கவிதை.

இலட்சியங்களின் முதுகிலேறி ஒட்டக தேசத்துக்கான பயணமிது! அம்மாவும் அப்பாவும் அழுது ஆசிகள் பல கூற.. அண்ணனும் தங்கையும் முத்தங்கள் பரிமாற.. ஏக்கத்தோடு மனைவியும் பாசத்தோடு பிள்ளைகளும் பாவமாய் பார்த்திருக்க.. விரும்பியும் விரும்பாமலும் விரைந்து செல்லும் பயணமிது.. ஓராயிரம் இலட்சியங்கள் முதுகில்.. ஒற்றை வீரனாய் பணமெனும் பள்ளத்தாக்குகளைத் தேடிய பயணமிது! ஒருவேளை அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிருக்கலாம்..! மனைவி பிள்ளைகள் நோயினால் நொந்து போயிருக்கலாம்..! ஏன் எனக்குக் கூட வழுக்கை விழுந்துவிடலாம்..! ஆனால் நானும் என் கனவுகளும் முடிவிலியாய்.. பணமெனும் பள்ளத்தாக்குகளை நோக்கி..!!

தேர்தல் காலம் (பக்கம் 26) என்ற கவிதை சம காலத்துடன் பொருந்தி நிற்கும் ஒரு கவிதையாகும். மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசும் கயவர்கள் உருவாகியிருக்கும் காலம் இது. வீடு தேடி வந்து மிகவும் பணிந்து தனது கைகளினால் வெற்றிலை தந்து கும்பிட்டவர்களே பிறகு அநியாயங்களை மேற்கொள்கின்றார்கள். பொருட்களுக்கெல்லாம் முடிந்தவரையில் விலைகளை அதிகரித்துவிட்டு தேர்தல் நெருங்கும்போது வெறும் கண் துடைப்புக்காக விலைகளில் வீழ்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள். இவர்களின் வார்த்தைகளுக்குள் சிக்கிவிடாமல் இருப்பதற்கான கவிதை இது.

மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடும் மூடர்களும், ஓடுகின்ற மாட்டில் இறைச்சி உண்ணும் ஓநாய்களும், ஓசியில் வயிறு வளர்த்து ஏவுரை விடும் காக்காய்களும், வீர வசனம் பேசும் தேங்காய்ப்பூ சண்டியர்களும், உங்கள் வீடு தேடிவரும் காலம் இது.. என் சமூகமே தூங்கியது போதும் விழித்தெழு.. பசுத்தோல் போர்த்திய புலிகளின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விட்டால் அரசியலில் அபிலாசைகளை மட்டுமல்ல அப்பத் துண்டுகளைக்கூட பெற முடியாது நம்மால்..!!

இன்றைய காலத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் அது அத்தியாவசியச் செலவுகளுக்குப் போதாமலேயே இருக்கின்றது. அதிகரித்துவிட்ட விலையேற்றங்களும் அத்தியவசியமாகிப்போன ஆடம்பரப் பொருட்களும் இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம். அத்துடன் புதிது புதிதாக பாவனைக்கு வருகின்ற தொழில்நுட்பக் கருவிகளும், விளம்பரங்களும் கூட உழைக்கும் பணத்தை ஏப்பம்விடும் முதலைகளாக ஆகிவிடுகின்றன. யானைப் பசியும் சோளப் பொறியும் (பக்கம் 68) என்ற கவிதை அத்தகையதொரு மனக் குழப்பத்தை எடுத்துக்காட்டும் கவிதையாகும்.

தொலைபேசி தொல்லை தரும்.. தெரு வாயில் தீ மிதிக்கும்.. மாத பட்ஜெட் மனைவி கையில் மல்லுக்கட்டும்.. மகனுக்கும் மகளுக்கும் மனசெல்லாம் மத்தாப்பூ வெடி வெடிக்கும்.. ஓடி ஆடி உடலைப் பிழிந்து உறக்கம் தொலைத்தாலும் ஊனப்பட்டுத்தான் போகிறது.. ஹிரோஷிமா ஈன்றெடுக்கும் இதயங்கள் போல.. என் முயற்சியெனும் முடிவிலிகள்.. ஓடுவது நான் ஆயினும் துரத்துவது கடன் ஆயிற்றே??

இரவு (பக்கம் 112) என்ற கவிதை உழைத்துக் களைத்த ஒருவனின் கீதமாக இருக்கின்றது. பகலில் எல்லாம் இரைச்சலில்; இருந்த செவிகளை இரவில் நிம்மதியாக வைத்திருப்பது பற்றியும், சத்தம் சந்தடிகளற்ற ஒரு நெடிய பயணத்தில் திளைத்திருக்கவும் நாடும் மனசை கவிஞர் இக்கவிதையினூடாக அழகாக கூறியிருக்கின்றார்.

இரைச்சல்களின் சாலைகளில் தினம் நடந்து இரத்தம் சொட்டிய காதுகளை ஓர் ஆமைக்குஞ்சு போல் போர்வைக்குள்ளிழுத்து ஒட்டகங்களைப் போல் ஓய்வின்றி நீண்ட நிசப்தங்களின் மேல் பயணிக்க ஒத்திகை பார்க்கிறது ஊமை மனசு.. உருளுதல் உலாத்துதல் என்று சில சரசரப்புகளினூடே விழிகள் கதவடைக்க பற்றிக்கொள்கிறது பயணம் ஏகாந்தத்தின் ஸ்பரிசங்களில்.. அமைதிக் கிண்ணங்களில் மெய் கரைந்துருக இதயம் வெடித்த இலவம் பஞ்சு போல காற்றோடு கைகோர்க்கிறது கனவு.. மற்றுமொரு பொழுதின் பிரசவம் ஒன்றிற்காய்..!!

வாழ்வியல் பற்றிய நிஜங்களோடு கைகோர்த்த சமுதாயம் குறித்த தன் ஆழமான அக்கறையை வெளிக்காட்டியிருக்கின்றார் கவிஞர் எம்.பீ. அன்வர். இந்தத் தொகுதியில் காணப்படும் அநேக கவிதைகள் வெளிநாட்டில் வசிப்பவர்களின் இதய ஏக்கங்களை புடம்போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. தடம் தொலைத்த தடயங்கள் என்ற இந்தத் தொகுதியை வெளியிட்டிருக்கும் எம்.பீ. அன்வர் அவர்களுக்கு மனமார்;ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - தடம் தொலைத்த தடயங்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பிரகாசக்கவி எம்.பீ. அன்வர்
வெளியீடு - ஓவியா பதிப்பகம்
விலை - இந்திய விலை 120 ரூபாய்

Friday, October 17, 2014

69. தியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

தியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

வெலிப்பன்னை அத்தாஸின் ஐந்தாவது நூலே தியாகம் என்ற சிறுகதைத் தொகுதியாகும். மொடர்ன் ஸ்டடி ஸென்றர் மூலமாக 76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 12 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. தியாகம், அலிமா விமானத்தில் பறக்கிறாள், பெட்டிஷன் பிறந்தது, காய்த்த மரம், கணித பாடம், வாழ்க்கை, குழந்தை மனம் பேசுகிறது, தாய்க்காக, அழகு இல்லாதவள் வாழ்வு, ஐம்பது ரூபா, கண் திறந்த பின், பெருநாள் பரிசு ஆகிய தலைப்புக்களிலேயே அந்த 12 சிறுகதைகளும் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் யாவும் ஏற்கனவே நவமணி, மல்லிகை, செங்கதிர், படிகள், பூங்காவனம், முஸ்லிம் குரல், முஸ்லிம் முரசு, வார உரைகல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஓர் ஆசிரியராக – அதிபராக (முதலாம் தர அதிபர்) கடமை புரிந்தவர். அந்த அனுபவங்களை வைத்தும் தனது ஒரு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். முதலாந் தர அதிபராக சிறப்பாக பணிபுரிந்த இவருக்கு மேல் மாகாண கல்வித் திணைக்களம் ஷவித்யா நிகேதாலங்கார| என்ற கௌரவப் பட்டத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இவர் ஒரு சமாதான நீதவானும் கூட.

1961 இல் முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான ஷமுஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்| என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை தேசிய பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை பெரும்பாலும் வெலிப்பன்னை அத்தாஸ் என்ற பெயரிலும், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன், ஏ.எச்.எம். அத்தாஸ் ஆகிய பெயர்களிலும் எழுதிவருகின்றார். அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் இவருக்கு காவிய பிரதீப (கவிச் சுடர்) பட்டத்தையும், இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷணம் பட்டத்தையும், விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. 1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் அதிபர் மர்கூம் எம்.எம்.எம். யூசுப் நினைவு மலர் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள், 2013 இல் பூவும் கனியும் ஆகிய நான்கு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

தியாகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் மூத்த உறுப்பினர், தலைவர் திரு நீர்வைப் பொன்னையன் அவர்கள் சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அதில் அவர் பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார். 'கதைகள் பலவிதம். நாட்டார் கதைகள், பாட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், திகிலூட்டும் பேய்க் கதைகள், தேவதைக் கதைகள், விகடக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், மொக்காஷியோவின் கதைகள், முன்ஷி கதைகள், அந்திரேக் கதைகள், ஈசாப் கதைகள், சிறுகதைகள், அதி நவீன சிறுகதைகள் போன்ற பல வகையான கதைகள் உண்டு. ஆனால் சிறுகதைகள் ஏனைய கதைகளைவிட உருவம், உள்ளடக்கம், கதை கூறும் பாங்கு, கதை ஓட்டம், கதை ஆரம்பம், கதை முடிவு ஆகியன முற்றிலும் வேறுபட்டனவாக உள்ளன. சிறுகதை ஒரு நவீன வடிவமாகும். இலக்கியத்தில் முதலில் உதித்தது கவிதை. மனிதன் தனது உணர்வுகளை கவிதைகள் மூலம்தான் வெளிப்படுத்தினான். அடுத்தது நாவல். கடைக்குட்டிதான் சிறுகதை. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகத்தான் இருக்கும். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது''

மூத்த எழுத்தாளர், ஆசிரியர் ப. ஆப்தீன் அவர்கள் இந்த நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் கதைகள் காத்திரமானவை. கதைக் கருவைத் தழுவிய இலாவகமான மொழிநடை மூலம் செய்திகளை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். கதைக் கருவுக்கு அப்பால் அனாவசிய விடய வர்ணிப்புக்கள் இல்லை. நீண்டகால ஆசிரிய அனுபவம் பளிச்சிடுகிறது.''

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஷஷமனித வாழ்வின் அம்சங்களின் தொனிப்பொருளாகச் சிறுகதைகள் அமைய வேண்டும் என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். மனித வாழ்வின் கூறுகள், பிரச்சினைகள், தேவைகள் போன்ற வாழ்வம்சங்களையே தான் சிறுகதையாக்கியுள்ளதாக|| தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். 

தியாகம் (பக்கம் 01) என்ற மகுடத் தலைப்பில் அமைந்த கதையானது ஹஸீனா என்ற பெண்ணின் ஏழ்மையை எடுத்துக்காட்டுகின்றது. குடும்ப கஷ்டத்துக்காக வெளிநாடு சென்று உழைக்கும் பெண்கள், தம் வறுமையைப் போக்குவதற்காக தமது வாழ்க்கைiயே அர்ப்ப்பணிக்கின்றார்கள். அதில் ஒரு சிலர்தான் கொஞ்சமாவது முன்னேறி நாடுகளுக்கு திரும்புகின்றார்கள். பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பல்தரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வெளிநாடு செல்வதற்கு கட்டிய காசும் இல்லாமல், வெளிநாட்டில் உழைத்த காசும் இல்லாமல் கண்ணீரை மட்டும் சம்பாதித்துக்கொண்டு வருகின்றார்கள். இந்த கதையில் வருகின்ற ஹஸீனாவும் வெளிநாட்டுக்குச் சென்றதில் ஒரு சிறிய காணித்துண்டும் அதில் ஒரு சிறிய வீடும் அவளது குடும்பத்துக்கு என்று மிஞ்சியிருக்கின்றது. கணவன் அஸ்ஹார் மற்றும் அவனது குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள். சிறிய சிறிய கூலித் தொழில்களை செய்பவன். ஒருநாள் கூலி வேலைக்காக சென்றபோது தவறி கீழே விழுந்து கால் உடைந்தது. அதன் பின்னர் பழையபடி அவனால் கூலி வேலைகளைச் செய்ய முடியவில்லை. இறுதியில் 'குவைத் நட்ட ஈடு' கிடைத்தில் ஹஸீனாவுக்கும் பணம் கிடைக்கின்றது. பல்வேறு கஷ்டங்கள் இருந்தேபாதும் தனது கணவனின் தங்கையின் திருமணத்துக்காக அவளுக்குக் கிடைத்த பணத்தில் பாதியையே கொடுத்துவிடுகின்றாள். அவர்களுக்கு உதிவியதில் அவளது உள்ளம் மிகவும் சந்தோசப்படுகின்றது. ஹஜ் பெருநாளைக்கு முதல்நாள் அவளும் தியாகத்தை செய்த திருப்தியில் இருப்பதாக கதை நிறைவடைகின்றது.

கணித பாடம் (பக்கம் 30) என்ற கதையானது மாணவர்களின் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றது. அதாவது கணிதபாடம் என்றால் பொதுவாக எல்லோருடைய அபிப்பிராயம் அது கடினமான பாடம் என்பதாகும். தமது நிம்மதியையே கொன்று போடும் பாடமாக மாணவர்கள் கருதுவதற்குக் காரணம் அவர்கள் அதில் நாட்டம் கொள்ளாமையாகும். ஒருசில மாணவர்களே கணக்கில் புலியாக இருந்தபோதும் பெரும்பாலானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையத் தவறிவிடுகின்றார்கள். நன்றாக படிக்கின்ற மாணவர்கள் கணித பாடத்தில் கோட்டை விடுவதால் உயர்தரம் செய்ய முடியாமல் திண்டாடும் நிலையும் கண்கூடு. ஆனபோதும்; ஷஎண்ணும்; எழுத்தும் கண்ணெனத் தகும்| என்பதற்கொப்ப கணிதம் பயில வேண்டியது அவசியமாகும். இந்தக் கதையில் கூட கணிதத்தின் அவசியமே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதையறிந்து அதற்கு ஏற்றாற்போல படிப்பிக்க வேண்டும். மாறாக தனக்குத் தெரிந்தவை எல்லாம் மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. மாணவர்கள் கசப்பாக கருதுவது கணித பாடத்தைத்தான் என்றிருக்கும் போது, அதை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கடுமையாக நடந்துகொண்டால் மாணவர் மனதளவில் பாதிக்கப்படுவது இயல்பாகும் என்பது பொதுவான கருத்தாகும். 

குழந்தை மனம் பேசுகிறது (பக்கம் 42) என்ற கதை சுமார் மூன்று, நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையின் மன உணர்வை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அற்புதமான கற்பனைக் கதை. குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தொழிலுக்கு செல்கின்ற பெற்றோர் கட்டாயம் படிக்க வேண்டிய கதை இது. தனது உம்மும்மாவடன் நேரத்தை கழிக்கும் குழந்தையிடம் இயல்பாகக் காணப்படும் ஏக்கங்கள் தத்ரூபமாக இக்கதையில் பதியப்பட்டுள்ளது. இவர்கள் சிறுபிள்ளைகள் தானே என்று சிலர் கண்டபடியெல்லாம் நடந்துகொள்வார்கள். ஆனால் பெரியவர்களைவிட சிறுவர்களுக்குத்தான் மனதில் பதியும் திறன் அதிகம் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றார்கள். எனவே சிறுவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இக்கதை வலியுறுத்துகின்றது.

அழகு இல்லாதவள் வாழ்வு (பக்கம் 50) என்ற கதை சமூகத்தில் நிலவுகின்ற கல்யாணப் பிரச்சனை பற்றி பேசியிருக்கின்றது. இதில் பரீனா என்ற பாத்திரம் கருமை நிறம் கொண்டவள். அவளுக்குத்தான் திருமணம் நிச்சயமாகியிருக்கின்றது. தனது கருமை நிறமும், அவலட்சனமாக அவளே கருத்திக் கொள்ளும் அங்க அமைப்புக்களும் அவள் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தையே இல்லாமல் செய்கின்றது. அதனால் திருமணத்தன்று அவளது கணவனிடம் நிமிர்ந்து பார்த்து பேசாமல் அழுதுகொண்டிருக்கின்றாள். அவளை அறிந்த மணமகன் ரஸ்ஸாக் அவளது மனக்குறைகளைக் களைந்து தான் அவள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றான். கறுப்பாக பிறந்தவள், மிக உயரமாக, அல்லது பருமானகாக இருப்பவள், பல்வரிசை முன்தள்ளி இருப்பவள் என்ற அங்க இலட்சணங்கள் ஒரு பெண்ணை அசிங்கமானவளாக காட்டுவது பொதுவியல்பாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அதில் இல்லாத அழகு ஒரு பெண்ணின் நடத்தையிலும், ஒழுக்கத்திலும், குடும்பப் பின்னணியிலும் இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை என்பதை இக்கதை உணர்த்துகின்றது..

பெருநாள் பரிசு (பக்கம் 67) என்ற கதை நவாஸ் என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பி.கொம் பட்டதாரியான நவாஸ் தற்போது காமெண்டஸ் ஒன்றை நடத்துகின்றான். அத்துடன் மார்க்கத்தில் அதிக பேணுதலை உடையவன். அவன் தனக்கான இலட்சிய மனைவியே வேண்டுமென்ற கொள்கைப் பற்றுடையவன். இதை அறிந்த நவாஸின் தந்தையான ஹுஸைன் ஹாஜியார் தள்ளுவண்டி வியாபாரியான ஜௌபர் நானாவின் பட்டதாரி மகளைப் பற்றி அறிகின்றார். அவர் முஅத்தினுடன் ஜௌபர் நானாவின் வீட்டுக்கு சென்று தனது மகனுக்கு ஜௌபரின் மகளை கல்யாணம் பேசுகிறார். நவாஸுக்கு முப்பது வயது. ஜௌபரின் பட்டதாரி மகளுக்கு இருபத்தியெட்டு வயது. வயதுப் பொருத்தம் உட்பட தனது மகனின் விருப்பத்துக்கு ஏற்ற மருமகள் கிடைத்தில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. நோன்புப் பெருநாளைக்கு முதல்நாள் காரில் வரும் ஹுஸைன் நானா, மருமகள் உட்பட அவள் குடும்பத்தினருக்கும் பெருநாள் பரிசாக ஆடைகள், தீன் பண்டங்கள் முதலியவற்றைக் கொண்டுவந்து கொடுத்து தமது சம்மதத்தை தெரிவிப்பதாக கதை நிறைவடைகின்றது.

சமூக விடயங்கள் உட்பட தான் ஒரு அதிபராக இருந்ததால் மாணவர்களின் நிலைப்பாடுகளையும் அறிந்து சிறுகதைகளை எழுதியிருக்கின்றார் நூலாசிரியர். இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிடுமாறு வெலிப்பன்னை அத்தாஸைக் கேட்டுக்கொள்வதுடன் அவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!!!

நூல் - தியாகம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ்
வெளியீடு - மொடர்ன் ஸ்டடி சென்றர்
விலை - 225 ரூபாய்

68. கலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் பாடல் தொகுதி பற்றிய ஒரு விசேட பார்வை

கலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் பாடல் தொகுதி பற்றிய ஒரு பார்வை

கலாபூஷணம் பி.ரி. அஸீஸின் எட்டாவது நூல் வெளியீடே தென்றலே வீசி வா என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தின் மூலம் 24 பக்கங்களில் 16 சிறுவர் பாடல்களை உள்ளடக்கியதாக சிறுவர்களுக்கேற்ற விதமான அழகான அட்டைப் படத்துடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. பி.ரி. அஸீஸ் அவர்கள் இலக்கியத்தின் மீது தீவிர பற்றுக்கொண்டவர். இந்த அடிப்படையில் இவர் ஏற்கனவே கவிதை நூல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமியக் கவிகள் என்று பல நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்யக் கூடியவர்கள் எமது நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். சிறுவர் ஆக்கங்களை அதாவது சிறுவர் கதைகளையோ, பாடல்களையோ அல்லது கட்டுரைகளையோ படைக்கும் படைப்பாளிகள் முதலில் சிறுவர்களது வயது, எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள், ஆசைகளை எல்லாம் தெரிந்துகொண்டு நுட்பமான முறையிலேயே தனது படைப்புக்களை முன்வைக்க வேண்டும். எந்தத் துறையில் இலக்கியம் படைத்தாலும் சிறுவர் இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளன் அல்லது படைப்பாளி தனது பங்களிப்பைச் செய்யும் போதுதான் ஒரு முழுமையான மனநிறைவை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும். அந்த வகையில் சிறுவர்களுக்கு தனது பங்களிப்பை வழங்கும் முகமாக கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள, இந்தத் தொகுதியில் உள்ள அணைத்துப் பாடல்களும் சிறுவர்களுக்குப் பயனுடையதாக அமைந்து அவர்களது வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கும்.

இந்தத் தொகுதிக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள டாக்டர் ஹில்மி மகரூப் அவர்கள் தனதுரையில் ''அன்று எனது பதவியேற்பு வைபவத்தின் போது வாழ்த்துக் கீதம் பாடியவர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள். அதன் பின்னரான மூன்றாண்டுகளில் இலக்கியத் துறையில் எவ்வளவோ முன்னேறிச் சென்றுவிட்டார். இவரது விடாமுயற்சியும், ஆற்றலும் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கைவிட்டுப் போன காலங்களைப் பற்றிக் கவலைப்படாது எதிர்காலத்தை நினைத்து தன்னம்பிக்கையோடு செயற்படும் கவிஞர் அஸீஸ் இலக்கியத்தில் கவிதையோடு மட்டும் நின்றுவிடாது அதன் பல்வேறு பிரிவுகளையும் தொட்டு நின்று பிரகாசிக்கின்றார். குறுகியதொரு காலத்துள் தன்னை நாடறியச் செய்த இவரின் ஆளுமையை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். ''  என்று தனது வாழ்த்துப் பூக்களைத் தூவுகின்றார்.

அதுபோல் நூலுக்கான சிறந்ததொரு முன்னுரையை நிகழ்காலம் சஞ்சிiயின் ஆசிரியர் ஜனாப் நாஸிக் மஜீத் சிறுவர்களுக்கான பாடல் ஆக்க முயற்சி என்ற தலைப்பிட்டு வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு தனது கருத்தை முன்வைத்துள்ளார். ''இலக்கியம் என்பது எப்போதுமே உள்ளத்திற்கு இதமானது. இந்த இலக்கியத்தை இயற்றுவதற்கு இரசனை என்ற விடயம் மிக முக்கியமான ஒன்றாகும். சாதாரண ஒரு மனிதனின் பார்வைக்கும் இலக்கியக்காரன் ஒருவனின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒரு இலக்கியக்காரன் தன்னைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் கவிதையை, சிறுகதையை, சிறுவர் பாடலை, நாவலை, கட்டுரையைக் காண்கிறான். இலக்கிய இரசனையற்ற ஒரு மனிதன் அவற்றை சாதாரண நிகழ்வுகளாகவே பார்க்கிறான்.''

சிறுவர் பாடல்கள் ஆக்கத்திற்கான தனது நோக்கத்தை பி.ரி. அஸீஸ் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''சிறுவர் பாடல்கள் பலவற்றைக் கொண்ட இந்த நூல் நடுநிலை நின்று சிந்திப்பவர்களுக்கு நல்லதெனப்படும். சிறந்த பிரசையாக வாழவிருக்கும் இளம் பருவத்தினருக்கு பல படிப்பினைகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவை சிறந்த சமூக உருவாக்கத்திற்கு பெரிதும் துணைபுரியும். அன்பு, அகிம்சை, ஒற்றுமை, இரக்கம் போன்ற இன்னும் பல மனித குலத்திற்குத் தேவையான நன்பண்புகள் இதில் மெருகூட்டப்பட்டு பாடல்களாக்கப்பட்டுள்ளன.''

கிண்ணியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளா கான் (சமாதான நீதவான்) இந்த நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை வழங்கியுள்ளார். இனி கலாபூஷணம் பி.ரி அஸீஸின் சில சிறுவர் பாடல்களை நயந்திட வாருங்கள்.

அணை கடந்தும் பாயுதே (பக்கம் 01) என்ற பாடல் தென்றலின் குளிர்ச்சியை மனதிலும் உடம்பிலும் உணரச் செய்கின்றது. ஓசை நயம் கொண்ட கவிதையாக இது காணப்;படுவதால் வாசிக்கும் போது இன்பமாக இருப்பதுடன், சிறுவர்கள் மிகவும் விரும்பும் ஒரு தொனிப்பொருளாகவும் இருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

தென்றலே நீயும் மிதந்து வா.. தெருவில் எங்கும் வீசி வா.. பந்தல் மேலே மலர் இருக்கு.. பார்த்து அதிலே தங்கி வா.. இதமே இதமே உன் வரவு.. இதயம் இன்பம் கொள்ளுதே.. பதமாய் நீயும் வீசுவதில்.. பாசம் நெஞ்சில் ஊருதே.. சுகமே மலரும் தென்றல் உன்னால்.. உள்ளம் மகிழ்வில் துள்ளுதே.. அகமும் விரிந்து ஆசை வெள்ளம்.. அணையைக் கடந்தும் பாயுதே..

ஒன்றாய் வாழ்வோம் (பக்கம் 04) என்ற பாடல் ஒற்றுமையை சிறுவர் மனதில் விதைக்கும் (க)விதையாக காணப்படுகின்றது. ஒருதாய் மக்களாக வாழ்ந்து பகைகளை நீக்கி சந்தோசம் காணுவோம் என்று கவிஞர் சிறுவர்களைக் கேட்டுக்கொள்கின்றார். சிறு வயதில் மனதில் பதியும் நல்ல குணங்களே ஒரு பிள்ளையின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. கெட்ட புத்திகள் மதலி; வளர்ந்துவிட்டால் அந்தப்பிள்ளை சமூகத்தில் ஒரு நஞ்சு மரமாகத்தான் வளரும். நல் பண்புகளைக் கொண்ட பிள்ளை நறுமணம்; வீசும். எனவே இவ்வாறான பாடல்கள் மூலம் குழந்தையின் மனதை நல்வழிக்கு திருப்பும் முயற்சியை கவிஞர் மேற்கொண்டிருக்கின்றார்.

பகமை வேண்டாம் பகமை வேண்டாம் ஒன்றாய் வாழுவோம்.. ஒரு தாய் மகவாய் ஒன்று பட்டு உயர்வு பேணுவோம்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இதனை உணர்வோம்.. தொன்று தொட்டு இருந்து வரும் உறவைத் தொடருவோம்.. அழிவு செய்யும் எண்ணங்களை தூர வீசுவோம்.. இழிவு நீக்கி காலமெல்லாம் ஒன்றாய் வாழுவோம்..

உன் அருகிருந்து பார்ப்பேன் (பக்கம் 06) என்ற பாடல் சிறுவர்கள் விரும்பும் தும்பிப் பூச்சியை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாக தும்பியின் வாலில் நூலைக் கட்டி அதற்கு தொல்லை கொடுக்கும் சிறுவர்களின் மனதில், தும்பி பற்றிய இரக்கத்தை ஏற்படுத்துகின்றது இப்பாடல். உயிர்களுக்கு அன்பு காட்டும் நல்ல பழக்கங்கள் குழந்தைகளுக்கு உணரச் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் கவிஞர் பி.ரி. அஸீஸ் அந்த முயற்சியிலும் தனது பங்களிப்பைச் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

பறந்து செல்லும் தும்பியாரே பாவை என்னைப் பாரீர்.. பயப்படாமல் துணிவு கொண்டு என்னிடத்தில் வாரீர்.. நீர்; பயப்படாமல் துணிவு கொண்டு என்னிடத்தில் வாரீர்.. உலாவரும் சுகம்காண அழைத்துப் போவேன்.. என் தோளின் மீதும் வைத்து உன்னை சுமந்து செல்வேன்.. பூந்தோட்ட மத்தியில் விளையாடச் செய்வேன்.. அங்கே நீ மகிழ்ந்திருக்க நான் அதனைப் பார்த்து ரசிப்பேன்.. மகிழ்ந்திருக்க நான் அதனைப் பார்த்து ரசிப்பேன்.. உன் கூட்டத்தோடு நீ வாழும் குதூகலத்தைக் காண்பேன்.. ஆட்டம் போட்டு நீ மகிழ உன் அருகிருந்து பார்ப்பேன்.. ஆட்டம் போட்டு நீ மகிழ உன் அருகிருந்து பார்ப்பேன்..

சின்னப் பாப்பா (பக்கம் 11) என்ற பாடல் சிறுவர்களின் மாலைநேர விளையாட்டை மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. மனதுக்கினிய மாலை வேளையில் தோழர்களோடு இணைந்து விளையாடும் கவிதையாக இது அமைந்திருக்கின்றது. பாரதியாரின் ஷஓடி விளையாடு பாப்பா| என்ற பாடலை இக்கவிதை ஞாபமூட்டிச் செல்கின்றமை இந்தக் கவிதையின் சிறப்பாகும்.

சின்னப் பாப்பா சின்னப் பாப்பா ஓடிவா.. சிறகடித்து பாடி மகிழ்வோம் ஓடிவா.. கூடி மகிழ்வார் நம்மைப் போல சிறுவர்கள் அந்த குதூகலிப்பில் இணைந்துகொள்வோம் ஓடிவா.. மாலை நேரம் மனதுக்கினிய தோழரோடு சுற்றி வருவோம் ஓடிவா.. அன்புகொண்டு அனைவரையும் ஒன்று சேர்த்து வம்பு இல்லா வாழ்க்கையினை தோற்றுவிப்போம் ஓடிவா..
வண்டி வருகுது பார் (பக்கம் 16) என்ற பாடலில் வண்டியானது திருமண ஜோடியை சுமந்து வரும் காட்சியும், வீதியெங்கும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சியும் சிறுவர் மனதைக் கவரும் விதமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

ஓடி ஓடி வருகுது பார்.. வண்டி ஓடி வருகுது பார்.. மாட்டு வண்டி வேகத்துடன் ஓடி ஓடி வருகுது பார்.. வெள்ளை மாடு சுமந்த வண்டி.. சீக்கிரம் காட்டி வருகுது பார்.. சலங்கை ஒலியும் சங்கீதமும்.. இசைத்து வருகுது பார்.. வீதி எங்கும் தோரணங்கள் விரைந்து அதுவும் வருகுது பார்.. பாதி நிலவு வெளிச்சத்திலேயே பாய்ந்து ஓடி வருகுது பார்.. திருமண ஜோடி சுமந்த வண்ணம் வண்டி அங்கே வருகுது பார்.. பெருமையோடு வருகுது பார்.. பெருமிதத்தால் ஜொலிக்குது பார்..

சந்தக் கவிதைகளாக ஓசை நயம் மிக்கதாக எழுதப்பட்டுள்ள பி.ரி. அஸீஸ் அவர்களின் கவிதைகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிப் படிக்கும்விதமாக அமைந்திருக்கின்றன. அவரது முயற்சிகள் மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!

நூல் - தென்றலே வீசி வா
நூல் வகை - சிறுவர் பாடல்
நூலாசிரியர் - கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஸ்தா பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

67. ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக ''ஆனாலும் திமிருதான் அவளுக்கு'' என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.

தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூளியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

எங்கோ ஒரு மூலையில் எதையுமே செய்ய முடியாமல் சமூக சிந்தனையோடு முடங்கிப் போய்க் கிடக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்காகவே தனது நூலை முற்போக்கு எழுத்தாளர் மதியன்பன் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை நிலாத் தெருவில் ஒரு உலா என்ற தலைப்பிட்டு கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும், மதிப்புரையை மலரின் இதழ்களாகிப் போன மிதியன்பனின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானும், ஆசியுரையை மாற்றத்தை வேண்டி நிற்கும் மதியன்பன் கவிதைகள் என்ற தலைப்பிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும்;, வெளியீட்டுரையை ஒரு தாயின் கன்னிப் பிரசவம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், நூலின் பின்னட்டைக் குறிப்பை நூலாலாளர் பற்றி என்ற தலைப்பில் மாறன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.

எண்பதுகளில் கவிதை இலக்கியத் துறைக்குள் நுழைந்தவர் கவிஞர் மதியன்பன். ஆனாலும் அண்மைக்காலம் வரை இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளிக்கொண்டுவர நாட்டம் காட்டாமலேயே இருந்து வந்துள்ளார். ஆயினும் இவரிடம் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கான பல கவிதைகள் குவிந்து கிடப்பதாக அறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் அவற்றை தொகுத்து பல காத்திரமான கவிதைத் தொகுதிகளை வெளியிடுவார் என நம்பலாம்.

ஆனாலும் திமிருதான் அவளுக்கு என்ற இந்தத் தொகுதியில் அரசியல், ஆன்மீகம், போராட்டம், சுனாமி, தேர்தல், போதை, இயற்கை, நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான உணர்வுபூர்வமான பல கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக சமகாலத்தில் நடக்கின்ற இடர்களை இயம்புவதாகவே இத்தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இவரது ஒரு சில கவிதைகளை ரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. அதற்குள் எத்தனையோ போராட்டங்கள், கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள், வஞ்சனைகள் என்று மனிதன் எதை எதையோவெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கு அநியாயம் செய்கின்றான். வாழ்கின்ற காலத்தில் யாரையும் மதிக்காமல் தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்ளும் பலர் இருக்கின்றார். நாம் வாழ்கின்றபோது யாரை எல்லாம் சந்தோசமாக சிரிக்க வைத்தோமோ அவர்கள்தான் நாளை நாம் இறந்தால் நமக்காக அழுவார்கள். அதல்லாமல் அவர்களை இப்போது கண்ணீர் சிந்த வைத்தால் எம் இறப்புக்கு பின் சந்தோசப்படுவார்கள். இன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் மரணித்த பின் மையித் (சடலம்) என்ற பெயரே மனிதனுக்கு எஞ்சுகின்றது. இவ்வாறான வாழ்க்கைத் தத்துவத்தை விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள் (பக்கம் 01) என்ற கவிதையினூடாக கவிஞர் சொல்லியிருக்கின்றார்.

விளக்கு ஒளியிழக்கும் போது விலகிச் செல்லும் விட்டில்களாய் வந்தவர்கள் விசாரித்து விட்டுப் போகிறார்கள்.. உறவுகள் மட்டும் அங்கே ஒட்டிக் கிடக்கிறது அவனை அடக்கி விட்டுச் செல்வதில் அத்தனை அக்கறை அவர்களுக்கு.. இப்போதெல்லாம் அவனுக்கு பெயர்கூட சொந்தமில்லை மையித் மரக்கட்டை என்றாயிற்று..

விமானமும் விஞ்ஞானமும் (பக்கம் 15) என்ற கவிதை காணாமல் போன மலேசியா விமானத்தைப் பற்றியதாக எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று உலகம் வியக்கும் வித்தைகளின் நடுவேயும் ஒரு விமானம் காணமல்போய் உலகத்தவர்களை அதிசயிக்க வைத்தபோது எழுதப்பட்ட கவிதை இது. எத்தனையோ தினங்களாகத் தேடியும் அதுபற்றிய தகவல்களை அறியாமல் உலகமே அதிசயத்தில் மூழ்கியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

விமானம் விழுந்ததா.. கடத்தலா.. காற்றில் பறக்கிறதா..? இன்னும் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்.. அதி உயர அண்டனாவையும், டவரையும் நம்பிய அமெரிக்கா கூட இப்போது வெம்பிப்போய் விழி பிதுங்கி நிற்கிறது.. சாட்டலைட்டில் சாதித்தவர்களெல்லாம் இப்போது சாத்திர காரர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள்.. தேடும் பணிகள் கூட இனிமேல் தேவையற்றுப் போகலாம்.. ஓடும் விமானங்களும் தாமாகவே ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..

சேமிப்பும் புத்தகமும் (பக்கம் 24) என்ற கவிதையை வாசித்துப் போகையில் பணத்தை சேமித்தல் என்ற கற்பனையே ஏற்பட்டது. ஆனால் இறுதியில்தான் அது மறுமை நாளுக்கான நன்மையை சேகரிக்கும் விடயம் பற்றி எழுதப்பட்டதாக அறிய முடிந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு ஒப்பிட்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றமை கவிஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றது.

நிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.. அதிகாரிகள் கூட இன்னும் அறிவிக்கவில்லை.. வைப்புப் புத்தகத்தை வழங்கவுமில்லை.. இரவு பகலாக உழைத்தே இத்தனையும் சேமித்திருக்கிறேன்.. அதற்காக தூக்கமிழந்தேன்.. சாப்பாட்டைத் தவிர்த்தேன்..

இந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு அமைந்துள்ளது.

மறுமைநாள் மஹ்சரில் எனக்கு வைப்புப் புத்தகம் வழங்கப்படும்.. சேமிப்பையும் சேமிக்கச் சொன்னவனையும் என்னால் காணமுடியும்..

பெட்டைகளின் உடுப்பும் பெடியன்களின் கடுப்பும் (பக்கம் 35) என்ற கவிதை நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கின்றது. இக்கவிதை இன்றைய இளம் பெண்களின் போக்கை நன்கு சுட்டிக் காட்டுகின்றது. பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாக ஆடைக் குறைப்பைத்தான் சில பெண்கள் கூறுகின்றார்களோ என்று ஐயப்படுமளவுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கடைத் தெருக்களில், பூங்காக்களில், பஸ்களில் எல்லாம் குறித்த சில பெண்களை அருவருப்புடன் நோக்கும் நிலையும், ஆபாசத்துடன் ரசிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

பெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்.. நாகரிகம் மிஞ்சிப் போய் அவங்கிட உடுப்பெல்லாம் இப்போ நடுவால பிஞ்சி போச்சுதாம்.. இடுப்புத் தெரிய பொம்புள கட்டுற புடைவையைப் பார்த்து இளசுகள் இடைத்தேர்தல் நடத்துதாம்.. இளைஞர்களின் இடுப்பின் மடிப்போடு இறங்கிப் போச்சுதாம்.. பெட்டைகளின் உடுப்பு குறையக் குறைய பெடியங்கள் மனசு நிறைஞ்சு போகுதாம்..

போதையின் தீதைக் கேளாய் (பக்கம் 61) என்ற கவிதையும் சிந்திக்க வைக்கும் ஒரு கவிதையாகும். அன்பு, ஞானம், அறிவு போன்ற எத்தனையோ விடங்களை கற்று சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு போதை தரும் இழிவான மதுவிற்குள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனைப் பேர்? கருத்துக் கணிப்புகளிலும் குடியை மறந்தவர்களின் தொகை காலத்துக்குக் காலம் குறைவதாகத் தெரிவதில்லை. எத்தனை விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள் செய்தாலும் குடிக்கின்ற கூட்டம் குடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மதுவை மறந்து குடிக்க வேண்டியவை எவை என்பதை கீழுள்ள கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றது.

நான் சொல்கிறேன் குடி.. குடித்துவிட்டுத்தானே எழுதுகிறது பேனா மையை.. குடித்துவிட்டுத்தானே மழை பொழிகிறது மேகம் நீரை.. குடித்துவிட்டுத்தானே உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை.. இப்படி எல்லாமே குடித்திருக்க நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது, குடி.. அன்பெனும் மதுவைக் குடி.. அறிவெனும் மதுவைக் குடி.. ஆன்மீகம் எனும் ஞானத்தைக் குடி.. இப்படி அழகான குடிகள் அணிவகுத்திருக்க எதற்காகத் தேர்ந்தெடுத்தாய் இந்த இழிவு தரும் குடியை..

சொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா (பக்கம் 82) என்ற கவிதை சவுதிக்கப் போய் தன்னுயிரை இழந்த றிஸானா நபீக்கின் மறைவையொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. றிஸானாவுக்கான மரண தண்டனையைக் கேட்டு உலகே ஸ்தம்பித்து நின்றது. எல்லா உள்ளங்களும் அவளுக்காகப் பிரார்த்தித்தது. வறுமையை போக்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தால் றிஸானாவின் தலைவிதியே மாறிப்போனதை உலகம் வெகுசீக்கிரம் மறந்துதான்விட்டது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ றிஸானாக்கள் போலி பாஸ்போட்டுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அவர்களின் அறியாமையா என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. றிஸானாவுக்காக கவிஞரின் பேனா இவ்வாறு கண்ணீர் சிந்தியிருக்கின்றது.

அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு.. உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா? எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ..


இனவெறியர்கள் ஆடும் ஆட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் தமது உயிர்களை இழக்கின்றனர். மதங்கள் சமாதானத்தை போதித்துக் கொண்டிருக்கையில், சமாதானத்தை வேண்டி போர் நடத்தும் சில மூடர்களினால் ஒரு நாட்டின் வரலாறே சிவப்பாக மாறியிருக்கின்றது. யுத்தம், சண்டை, என்று தொடர்ந்தால் அது உலகத்தின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் குறித்த நாடுகளுக்கிடையில் போராட்டங்கள் நிகழும்போது மற்ற நாடுகள் மௌனித்துவிடுகின்ற துரதிஷ்ட நிலைமையும் கண்கூடாக நடந்துவரும் பேருண்மை எனலாம். உன்னால் மட்டும் முடியும் என்பதால் (பக்கம் 89) என்ற கவிதை வரிகள் அதை கீழுள்ளவாறு கூறியிருக்கின்றன.

கொடிய பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்.. இஸ்ரேல் நாய்களின் இரத்தப் பசிக்கு இஸ்லாமியக் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.. சொந்த மண்ணிலே அகதிகாய் இப்போது நொந்து போய்க் கிடக்கிறது நம் சொந்தங்கள்..

நடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்ளை கருவாகக் கொண்டு கவிதை படைக்கின்றார் கவிஞர் மதியன்பன். சமகாலத்தின் நடக்கின்ற விடயங்கள் அவர் பேனைக்குள் புகுந்து சமூகப் பற்றுமிக்க கவிதையாக வெளிவருகின்றன. பலரும் பேசத் தயங்கும் சில விடயங்களையும் மிகத் துணிச்சலாக எழுத்தயிருக்கின்றமை கவிஞரின் மனத் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாகும். யதார்த்தவாதியாக தன்னை கவிதைகளுக்குகூடாக இனங்காட்டிக் கொள்ளும் கவிஞரின் படைப்புக்கள் எதிர்காலத்திலும் நூலுருவம் பெற்று வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - ஆனாலும் திமிருதான் அவளுக்கு
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - காத்தான்குடி மதியன்பன்
வெளியீடு - அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்
விலை - 300 ரூபாய்

66. இறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

இறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்த கிண்ணியாவைச் சேர்ந்த எம்.ரீ. சஜாத்தின் இரண்டாவது நூலே இறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே செல்லமே (2012) என்ற சிறுவர் பாடல் தொகுதியை வெளியிட்டுள்ளார். கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 100 பக்கங்களில் 58 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இத்தொகுதியில் உள்ள அணைத்துக் கவிதைகளும் மரபுக் கவிதைகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். இந்த அடிப்படையில் நோக்கும் போது தன்னை ஒரு மரபுக் கவிஞராக நிலை நிறுத்த முனைகிறார் என்று சொல்லலாம். 

செல்லமே என்ற இவரது சிறுவர் பாடல் தொகுதி 2013 இல் கிழக்கு மாகாணத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதுபோல் 2013 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசையும், 2013 இல் தேசிய சாகித்திய மண்டல சிறுவர் இலக்கியச் சிறப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளது. 

கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் கவிதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்களுக்காக கவிச்சுடர் என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுபோன்றே சிறுவர் இலக்கியத்துக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கண்டி கலை இலக்கிய மன்றம் இவருக்கு இரத்தினதீபம் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இவை இவரது இலக்கிய ஆற்றலுக்கு கிடைத்த வெற்றிகளாகும். 

அந்தந்த காலகட்டங்களில் பத்திரிகையிலும், சஞ்சிகைகளிலும், கவிதைப் போட்டிகளுக்கும் என்று எழுதப்பட்ட பல கவிதைகளை உள்ளடக்கியே இந்தத் தொகுதியை கவிஞர் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், சுனாமி, காதல், இயற்கை, மானிட நேயம், உழைப்பு, இன ஒற்றுமை, தத்துவம், போதனை, வாழ்த்து, இரங்கல் போன்ற பல கருப்பொருட்களை உள்ளடக்கியதாகவே கவிதைகள் புனையப்பட்டுள்ளன. 

இந்த நூலுக்கு கலாநிதி கலாபூஷணம் அகளங்கன் அணிந்துரையையும், காப்பியக் கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் நயவுரையையும், கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்கள் ஆரோக்கியமான கவிதை ஜனிக்காது கவிஞன் என்று காசினி கணிக்காது என்ற தலைப்பில் கருத்துரையையும், எச்.எம். ஹலால்தீன் மனநிறை மகிழ்சியும் மகிழ்வுறும் உயர்ச்சியும் என்ற தலைப்பில் உரையொன்றையும், நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கவிஞர் கிண்ணியா அமீர் அலியும் வழங்கியுள்ளனர்.

இளந்தலைமுறைக் கவிஞர்கள் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கவிஞர் சஜாத்தின் சில கவிதை வரிகளை இனி இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

சுழன்று அடித்த சுனாமியே! (பக்கம் 25) என்ற கவிதையானது ஒரு நொடியில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த கொடிய சுனாமியைப் பற்றி பேசியிருக்கின்றது. உயிர்கள், உடமைகள் என்ற பாகுபாடின்றி அனைத்தையும் தன் பசிக்கு இரையாக்கி கடல், மக்களின் சந்தோசங்களையெல்லாம் சொற்ப நேரத்துக்குள் ஏப்பம் விட்டது இன்றுபோல் இருக்கின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அதே வலி அல்லது வடு கொஞ்சமும் மாறாமலேயே மக்கள் மனதில் அனலாய் எரிந்துகொண்டிருக்கின்றது. அது பற்றி கவிஞரின் வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது.

உயிரைக் குடித்து உடைமையை யழித்து வயிற்றில் அடித்து வாழ்வை யொடித்து சொத்துச் சுகங்கள் சொந்தம் இழந்து கத்திக் கதறிக் கலங்க வைத்தாய்! காலைப் பொழுதுக் கடலே! அந்த நாளை நினைத்தால் நடுங்குது நெஞ்சம் மதிய மாகுமுன் மயான மானதூர் இதயம் கனத்து இன்று மழுகுதே! கரையிலே வாழ்வைக் கழித்த மாந்தர் தரையிலே தமதுயிர் நீத்துக் கிடந்தனர்! கனன்றே எழுந்த கடலலை யே!நீ சுழன்று வந்து சோகந் தந்தாய்! பொங்கி எழுந்து பொருந்தி கடலே! எங்கும் ஓலம் எழுந்திட வைத்தாய் வறுமைக் கோட்டில் வாழ்வைக் கொடுத்து வெறுமை ஆக்கி விட்ட சுனாமியே!

இணையிலாத இயற்கை பார்த்தேன்! (பக்கம் 35) என்ற கவிதையானது கவிஞர் இயற்கை மீது கொண்ட காதலை மொழி பெயர்ப்பு செய்வதாக அமைந்துள்ளது. இயற்கையைப் பார்த்து இரசிக்(வியக்)காத ஒருவரும் இல்லை. சாதாரணமான ஒருவன் மழையாகப் பார்ப்பதை கவிஞன் வானத்தின் கண்ணீராகக் காண்கின்றான். தவளையின் கத்துதலை எரிச்சாகப் பார்ப்பவர் மத்தியில் கவிஞன் அதை இசையாகக் கேட்கின்றான். உவமைகள் பொருத்தமாகக் கூறப்பட்டிருக்கும் இந்தக் கவிதை இவ்வாறு தொடங்குகின்றது.

சோலைகள் சுமந்த பூவில் சுகங்காணும் வண்டைப் பார்த்தேன்.. வாழைகள் விரித்த தண்டை வளைக்கின்ற தென்றல் பார்த்தேன்.. கவலைகள் நிறைந்த வானில் கண்ணீராய் மழையைப் பார்த்தேன்.. தவளைகள் இசை யெழுப்பித் தலைநீட்டும் எழிலைப் பார்த்தேன்.. வான் மீது வெண்ணிலாவும் வருகின்ற வண்ணம் பார்த்தேன்.. பொன்னந்தி மாலை நேரம் பொழிகின்ற அழகைப் பார்த்தேன்.. கரையோடு வந்து மோதிக் கலக்கின்ற அலையைப் பார்த்தேன்.. இறையோனின் அருளாம் இயற்கை அளிக்கின்ற எழிலைப் பார்த்தேன்..

தியாகத் திருநாளே! (பக்கம் 39) என்ற கவிதையானது பிறை பார்க்கும் பரவச நிலையினை எடுத்துக் காட்டியிருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு புதிய மாத தொடக்கமும் ஆரம்பிப்பது தலைப் பிறை தென்பட்ட பிறகுதான். அதிலும் நோன்பு தொடங்குவதற்கும், நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கும், ஹஜ் பெருநாளைத் தீர்மானிப்பதற்கும் பிறை பார்க்கும் நிகழ்வு விசேட நிகழ்வாக காணப்படுகின்றது. மேற்கூறப்பட்டவைகளுக்காக பிறையை கண்டவுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். அது பற்றிய பதிவை கீழுள்ள வரிகளில் அவதானிக்கலாம்.

பிறையொன்று அடிவானில் பூக்கும்! – அப் பிறைதன்னை கோடிக் கண்கள் பார்க்கும்! இத் தரையன்று குதூகலத்தில் சிலிர்க்கும்! – உள்ளம் சந்தோஷப் புனலிடையே மிதக்கும்! உதித்திட்ட பிறைக் கீற்றைப் பார்ப்பார்! – தம் உள்ளத்தில் உவகைப்பூ கோர்ப்பார்! – நெஞ்சில் பதித்திட்ட உள்ளன்பை வார்ப்பார்! - ஹஜ்ஜுப் பண்டிகையின் பண்புநலன் காப்பார்!

ஒற்றுமைப் புனலில் உள்ளங் குளிக்கட்டும்! (பக்கம் 41) என்ற கவிதையானது சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த கவிதையாகும். ஓசை நயம் இதில் சிறப்பாக காணப்படுகின்றது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கூற்றுக்கிணங்க மக்கள் ஒருதாய் மக்களாக வாழ்ந்தால் தம்மைப் பிடித்துள்ள சோகங்கள், துவேசங்கள் களையப்படும். அன்பு பெருகி சந்தோச வெள்ளம் வரும். எல்லோரும் இதற்காக தனிப்பட்ட ரீதியல் போராட வேண்டும். பொறாமை, வஞ்சகம், கோள் மூட்டுதல் போன்ற தீய குணங்களை விட்டுவிட்டு இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற கொள்கையைக் கடைப்பிக்க வேண்டும் போன்ற விடயங்கள் கீழுள்ள வரிகளை வாசிக்கும் போது ஏற்படுகின்றதெனலாம்.

ஒற்றுமை நாட்டில் ஓங்கட்டும்! – மனிதா ஒன்று பட்டு வாழட்டும்! குற்றம் யாவும் அகலட்டும்! – மனக் குறைகள் விட்டு விலகட்டும்! மற்றோர் வாழ்வும் செழிக்கட்டும்! – மனித நேயம் ஓங்கி வழியட்டும்! முற்றும் இன்பம் பெருகட்டும்! – முட்டி மோதும் குணங்கள் அருகட்டும்!

உழைத்து உயர்வாய்! (பக்கம் 45) என்ற கவிதையானது உழைப்பின் முக்கியத்துவத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. சொந்தமாக உழைத்து சாப்பிடும் சாப்பாட்டைவிட வேறு சிறந்த உணவு இல்லை என்று கூறப்படுவது இதற்காகத்தான். மற்றவர்களை எதிர்பார்த்து வாழுதல் என்பது கானல் நீரை குடிக்க ஆசைப்படுவது போலாகும். உழைக்காமல் சோம்பேறியாக இருந்துகொண்டு அடுத்தவர்களை அண்டி வாழ்வதால் எந்தப் பயனும் கிடையாது. மாறாக நாம் உழைத்து எம்மைச் சார்ந்தவர்களுக்கும் உதவி புரியும்போது மனதில் திருப்திகரத் தன்மை நிரம்பிவிடுகின்றது. உழைத்து வாழ வேண்டும் என்பதை கீழுள்ள வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பட்டி னியாலே வாடினாலும்! – நம்மை அயலவன் வந்து பார்ப்பானா? எட்டு நாட்கள் படுத்தாலும்! – வந்து என்ன என்று கேட்பானா? வட்டி சுரண்டற் கொள்கையிலே.. வாழும் இந்தக் காலத்திலே எட்டுத் திக்குஞ் சென்றேனும் ஏழ்மை நீங்க உழைத்துயர்வாய்!
எல்லாமே நீதான்! (பக்கம் 57) என்ற கவிதையானது காதலிக்காக அல்லது மனைவிக்காக எழுதப்பட்ட சிறந்ததொரு காதல் கவிதையாகும். இக்கவிதையை வாசிக்கும்போது, கவிஞர் தன் துணையிடம் கொண்ட காதல் பிரவாசித்துப் பாய்வதை இக்கவிதையை வாசிக்கையில் உணர முடிகின்றது. வாழ்க்கையின் பாதியாக, எல்லாமாக இருக்கும் துணையை எண்ணி எழுதப்பட்ட இக்கவிதையின் வரிகளை வாசித்துப் பாருங்கள். 

கண்ணுக்குள் கருவிழியாய் வந்தவளும் நீதான்.. என் நெஞ்சுக்குள் புது ராகம் தந்தவளும் நீதான்.. தனிமையிலே என்னோடு இருப்பவளும் நீதான்.. என் தாகத்தை எந்நாளும் தணிப்பவளும் நீதான்.. எண்ணத்தில் கவியாக உதிப்பவளும் நீதான்.. என் இதயத்தைப் பெரிதாக மதிப்பவளும் நீதான்.. அன்னம் போல் அழகாக நடப்பவளும் நீதான்.. என் அன்புக்குள் அகப்பட்டு கிடப்பவளும் நீதான்.. 

பேச்சு! (பக்கம் 83) என்ற கவிதை மெனத்தின் சிறப்பம்சங்களை எடுத்துக் காட்டுகுpன்றது. நாவைப் பேணிக்கொள் என்று பெரியோர்கள் வெறுமனே சொல்லவில்லை. வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அதன் பிறகு அதைப் பொறுக்கவும் முடியாது. சொன்ன சொற்களை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது. வாய் மூடி மெனமாக இருந்தால் அது நிறைய பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை இக்கவிதை கூறிநிற்கின்றது.

மௌனம் போலொரு மருந்தில்லை.. மனத் தாபம் அதனால் விளைவதில்லை.. மௌனம் பூணும் மனிதர்க்கு வீண் வாதம் வம்பும் வருவதில்லை.. வாயை விட்டுப் போம் வரைக்கும் நம் வார்த்தை நமக்கு அடிமையாம்.. வாயை விட்டுப் போய் விட்டால் அவ் வார்த்தைக்குப்பின் அடிமை நாம்..

சிறுவர் இலக்கியத் துறையிலும் தனக்கானதொரு நிலையான இடத்தை தக்க வைத்துள்ள நூலாசிரியர்  எம்.ரீ. சஜாத் அவர்கள் கவிதையிலும் தன்னை இனங்காட்டியுள்ளார். அவரது இலக்கிய முயற்சிகள் தொடர வாழ்;த்துகின்றேன்!!!

நூல் தலைப்பு - இறகுகளால் ஒரு மாளிகை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எம்.ரீ. சஜாத்
வெளியீடு - கிண்ணியா கலை இலக்கிய மன்றம்
விலை - 300 ரூபாய்

Tuesday, September 9, 2014

65. சடலத்தின் வேண்டுதல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சடலத்தின் வேண்டுதல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மிகிந்தலை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இளந் தலைமுறை எழுத்தாளரான மிகிந்தலை ஏ. பாரிஸின் சடலத்தின் வேண்டுதல் என்ற கன்னிக் கவிதைத் தொகுதி. படிகள் பதிப்பகத்தினூடாக 78 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் சமூக நோக்குடைய 29 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. காதல் கவிதைகளை இந்த நூலில் சேர்க்காமல் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

மிகிந்தலை ஏ. பாரிஸ் தினமுரசு, மித்திரன், உதயசூரியன், மெட்ரோ நியூஸ், சுடர் ஒளி, தினக்குரல், தினகரன், விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளிலும், ஞானம், ஜீவநதி, பூங்காவனம், படிகள் போன்ற சஞ்சிகைகளிலும் கவிதைகளை களப்படுத்தி வந்துள்ளதுடன் சூரியன், வசந்தம், வர்ணம், சக்தி, தமிழ், தென்றல் போன்ற வானலைகளிலும் தனது கவிதைகளை வாசகர்களுக்கு தனது குரலிலேயே வழங்கியுமுள்ளார். மிகிந்தலை ஏ. பாரிஸ் தனது நூலை தமிழ் பேசும் மக்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

இராணுவ வீரனின் இதயக் கைச்சாத்து என்ற தலைப்பில் தனது கருத்தை பின்வருமாறு பாரிஸ் முன்வைத்துள்ளார். 'எனக்குள் எழுந்த உள்ளுணர்வுகளை ஊமையாக்கிவிடாமல் எனக்கு தெரிந்த மொழி வடிவில் கவிதையாக மொழி பெயர்த்தேன். அவற்றை தூங்கவிட்டு விடாமல் உடனுக்குடன் வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் பறக்கவிட்டு பரவசம் அடைந்தேன். பறந்த என் கவிக் குஞ்சுகளின் இறக்கைகளை துண்டித்துவிடாமல் சிலவற்றை தேடிப்பிடித்து ஒருங்கிணைத்து ஒற்றை ஏட்டில் பதித்து பங்கிட்டளிப்பதில் பன்மடங்கு பரவசமடைகிறேன். நான் சற்று உயரப் பறந்தாலும் என்னிதயத்தை கவலை ஒன்று இரைகொள்கிறது. அது என்னைக் கண்டு அஞ்சிய மக்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுடன் என் உபதேசம் இப்படி உரையாடுகிறது. என் தொழில் இராணுவம். நான் அணிவது என் கடமை நேரச் சீருடை மட்டும்தான். எனக்குள்ளும் இதயம் இருக்கிறது. நீங்கள் மேலோட்டமாய் நோக்குவது என் இதயமல்ல என் சீருடை என்று மட்டும் திடமாகக் கூறுகிறேன்'' என்கிறார்.

இந்த நூலுக்காக ஷஉள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு உள்ளதை உணர்ந்தவாறு கூறுவது இலக்கியம்| என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை முன்வைத்துள்ளார் கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் எம்.டி.எம். றிஸ்வி அவர்கள். அவரது கருத்துரையின் சில பகுதி.. ''இலக்கியப் பிரசவங்களுள் ஒன்றே கவிதைகளால் கருத்துக்கள் வெளிப்படுவது. கால மாற்றம், சமூக எழுச்சி, அறிவியல் முன்னேற்றம் போன்ற காரணிகள், மனித சிந்தனைகளின் மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டு மாற்றங்களை நோக்கிய பயணத்திற்கான நூற்றாண்டு எனலாம். அம்மாற்றங்கள் இலட்சிய கவிதைகளால் ஏற்படுத்தப்படமுடியும் என்பதை உணர்ந்து அநுராதபுரக் கவிஞர் பாரிஸ் சிறந்த இலட்சியக் கவிதைகள் படைத்துள்ளார். அருமையான கருத்துணர்த்தும் கவிதைகள் அவை. உணர்வுகள் உறங்கிக் கிடந்த மனிதர்களை இலட்சியக் கவிஞர் அல்லாமா இக்பாலின் கவிதைகள் உசுப்பிவிட்டது போல, இலட்சியத் துடிப்புள்ள இளைஞன் பாரிஸ் போன்ற இளம் தலைமுறையிளரின் கவிதைப் படைப்புகளும் சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக அமையும்.''

அடுத்து இது ஊன மனங்களின் ஊமை ரணங்கள் என்ற தலைப்பிட்டு கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள் நூலுக்கான உரையொன்றை வழங்கியுள்ளார். அவர் அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ''அடிப்படையில் மனித நேயம் மிகுந்தவர்கள் எப்படையில் இருந்தாலும் எதையாவது படைக்கத்தான் செய்வர். இயல்பாக சமூகத்தை நேசிக்கும் உள்ளத்தில்தான் இசையாக வந்திணைகிறது கவிதை. நாடக மாந்தர் தம் நடைமுறைச் சிக்கலைச் சித்தரிக்க வேண்டும் என்ற சிந்தனைத் தூண்டுதல் கவிஞர், ஏ. பாரிஸ் அவர்களது சடலத்தின் வேண்டுதல்.. நீ எழுதும் கவிதை உன்னைக் காட்டிக் கொடுக்கும் என்பார்கள். கண்டு கொண்டேன். போர்காலச் சூழல் இவரை ஒரு கவிஞராக மாற்றியிருக்கிறது. கவியூறும் உள்ளம் பிறரின் ஈனநிலை கண்டு துள்ளும் என்ற பாரதியின் பாட்டு, இதற்கு பாரிஸின் பாட்டு ஓர் எடுத்துக்காட்டு. போதும் என்ற மனம், போதாது என்று போர் தொடுக்கும் காலத்து, மோதும் பிரச்சினைகளை முன் வைக்கின்றார். அதற்கான தீர்வுகளையும் பின்வைக்கின்றார். சதாகாலமும் சமூகத்தின் மீதே கண் வைக்கிறார். இதனால் இவர் முன் நிற்கிறார். மூன்று தசாப்தத்தின் மூச்சுத்திணறலைக் கவிதைகளாக்கி மூர்ச்சையற்றுக் கிடக்கும் சமூகத்தின் முனங்களைப் பதிவாக்கித் தருகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி நூலில் இடம்பிடித்துள்ள 29 கவிதைகளில் சில கவிதைகளை இரசனைக்காக உற்று நோக்குவோம்.

வீட்டை எரிக்கும் நிலா (பக்கம் 10) என்ற கவிதை ஒரு ஏழை மீனவத் தந்தையின் இதயத்தை பறைசாற்றியிருக்கிறது. கடன்பட்டு, கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்கள் நல்லதொரு நிலையை அடைந்தால்தான் பெற்றவர்களுக்குப் பெருமை. அதைவிடுத்து வீணாhன காரியங்களில் ஈடுபட்டு கல்வியை குழப்பிக்கொள்வது தன் பெற்றோருக்கும் ஏன் நாட்டுக்கும் செய்கின்ற துரோகமாகும். அத்தகையதொரு பெற்றோரின் மனப்பதிவு இக்கவிதையில் பின்வருமாறு...

தணல் மணலில் பாதணி இல்லாமல் நடைப் பயணம் செய்து கட்டு மரம் ஏறுவேன்.. கடல் கொந்தளித்தால் கடன்காரனாய் வீடு சேருவேன்.. மணலில் தணல் உருவாக்கும் சூரியனுக்கும் தெரியாது சொந்தக் கதை.. எனக்கு பாதணி வாங்காமல் என் மகனின் கல்விக்கு செலவிடுவது.. பாதம் சுடும் மணலுக்கும் தெரியாது பரிதாப நிலை.. கடல் கொந்தளித்ததால் கடன் சுமக்கிறேன் என்பது கடலுக்கு தெரியாதது நியாயம்தான்.. அத்தனையும் தெரிந்திருந்தும் பெத்த மகன் பல்கலைக் கழகம் சென்றதும் படிப்பை நிறுத்திவிட்டு பகிஸ்கரிப்பில் குதித்து அரசியல்வாதிக்கு இலாபம் கொடுக்கிறான்.. அப்பன் நெஞ்சில் அடுப்பு எரிக்கிறான்!!

மகுடக் கவிதையான சடலத்தின் வேண்டுதல் (பக்கம் 12) என்ற கவிதை கடல் மாதாவிடம் ஒரு சடலம் கதை கூறுவது போன்ற பாணியில் அமைந்திருக்கின்றது. மீனவத் தொழிலாளிகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது. கடலுக்குச் சென்றால் வீடு திரும்புவோமா என்று உறுதியாகச் சொல்ல முடியாத வாழ்க்கை. அத்தகைய ஒரு சூழ்நிலையில் இறந்து போன ஒரு தந்தை.. தன் குடும்பத்தாரின் எதிர்கால நலன் கருதி கீழ்வருமாறு கடலிடம் வேண்டுகோள் விடுக்கின்ற முறை வாசகர் மனதில் அதிர்ச்சியையும், மீனவர்கள் பற்றிய இரக்கத்தையும் தோற்றுவிக்கின்றதெனலாம்.

சமுத்திரமே..! சமூக சேவையின் சிகரம் நீ! எங்கள் செவிலித் தாயும் நீ தான்! எங்கள் உடல் உன்னுடையதுதான்! நீ போடும் பிச்சையில் தான் எங்கள் பசி போக்குகிறோம்.. நேற்று உன்னிடம் வந்தேன்.. நீ பிச்சை போடுவாய் எனும் திட நம்பிக்கையில் என் குடும்பமும் உன்னை நம்பியிருக்கிறார்கள்.. என்னைவிட அதிகம் நம்பிக்கை வைத்தவர்களாய்.. எங்கள் நம்பிக்கையில் என்னிடமில்லை இப்போது என் குருதி குடித்ததால் நான் சடலமானேன்.. என் உறவுகள் காத்திருப்பார்கள் என் வரவுக்கும் உன் பிச்சைக்கும்!!

விவசாயியின் விசும்பல் (பக்கம் 15) என்ற கவிதை, வானம் பொய்த்துப் போனதால் வாழ்க்கை சூன்யமாகிப் போனதைப்பற்றி கவலையாய் பேசியிருக்கின்றது. பருவகால மழை பெய்யாததால் வயல்கள் காய்ந்து வயிற்றுக்கு வஞ்சகம் நேர்ந்ததை கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கும் பாங்கு அர்த்தபூர்வமானது.

எங்கள் கிராமம் சிரமத்தில் சிக்கிவிட்டது.. செழிப்புகள் செத்துவிட்டன.. தேசமும் கூடத்தான்.. வானம் அழும் காலத்தில் சிரித்து எங்கள் வாழ்க்கையை சுவைத்துவிட்டன.. மேல் நோக்கி நகைக்கும் பச்சைப் பயிர்கள்தான் எங்கள் வாழ்க்கைச் சக்கரம் வானம் கண்ணீர் சிந்தாததால் நாங்கள் சிந்துகிறோம்.. எங்கள் கண்ணீரால் எந்த விவசாயி வாழப்போகிறான்? எவர் வாழ்வு மீளும்? ...மழை இருந்திருந்தால் வலை வீசியிருப்பார்கள்.. வானமே ஏமாற்றிவிட்ட போது மனிதன் ஏற்றுக்கொள்வானா? இப்போதெல்லாம் வயல் முழுவதும் பொருக்கு வெடித்து கிடக்கு புற்களும் சருகு முட்களும் சண்டித்தனம் காட்டுகிறது!!

எம்மை விட்டுப் பிரிந்து சென்ற ரிசானா நபீக்கை இன்று பலரும் மறந்திருக்கக்கூடும். அவருக்கு அவ்வாறானதொரு முடிவு வருவதற்குக் காரணம் வறுமைதான். வறுமையினால் வாடிய, வாடுகின்ற பல குடும்பங்கள் இன்றும் உள்ளன. ஆனாலும் ஈகை எனும் பண்பு இன்று எம்மவர்களுக்கு இல்லாமலே போயிருப்பதுதான் மனவருத்தம் தருகின்ற விடயமாகும். சமூக சீர்த்திருத்தம், சமூக அக்கறை என்று பேசுபவர்களில் சிலர் வெறும் எழுத்துக்குள்தான் தன் கருத்தைச் சுருக்குகின்றனரே தவிர, நடைமுறை வாழ்வில் அவர்களும் பூச்சியம்தான். எனவே இந்த அவலநிலை மாறி அனைவரும் அனைவருக்காகவும் வாழவேண்டும் என்ற எண்ணத்தைத் தருகின்றது வறுமையின் வலியும் நிறமும் (பக்கம் 22) என்ற கீழுள்ள கவிதை வரிகள்.

நம்பிக் காத்திருந்தோம் நல்லதோர் தீரமானம் கரணமடித்த வழக்கு மரணம் கொடுத்துவிட்டதே! எஜமான் கண் திறக்கும் வரை காத்திருந்தோம் குருடன் என்று தெரியாமல்! இதயம் இருக்கும் மனிதனாய் நினைத்தோம் இரும்பால் உருவான மிருகம் என்று தெரியாமல்! வறுமை வாழவிடவில்லை கழுத்தை அறுத்தே கொடூரம் செய்துவிட்டது! வறுமையின் வலி நிறம் தெரியாதவர்கள் றிசானா நபீக்கின் கொலையிலிருந்து அறிந்திருப்பார்கள்! குடும்பம் வாழ குஞ்சு சிறகடிக்க நினைத்தது இருளுக்கு ஒளி கொடுக்கலாம் எனும் நப்பாசையில்...!!

தொடரும் (பக்கம் 33) என்ற கவிதை விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. எவ்வளவுதான் உழைத்தாலும் இன்றைய விலையேற்றத்தில் அனைத்துப் பணமும் கரைந்து போய்விடுகின்றது. மலை போன்ற விலை அதிகரிப்பால் பல குடும்பங்கள் திக்கித் திணறுகின்றன. குடும்பச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, வாழ்க்கைச் செலவு என்று இருக்கையில் திடீரென விலையேற்றம் செய்வது மக்களின் வாழ்வு குறித்த பீதியை ஏற்படுத்திவிடுகின்றது. அதை வைத்து பின்னப்பட்ட கவிதையின் சில வரிகள் இதோ...

வறுமை அஞ்சுகிறது உழைப்பைக் கண்டு.. உழைப்பை மிஞ்சுகிறது விலையேற்றம்.. இப்படித்தான் எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை போக்க உழைப்பும் உழைப்பை வெல்ல விலையேற்றமும் போட்டி போட்டுக்கொள்கிறது.. ஒரு பொருள் வாங்குவதற்கு விலை விசாரித்தேன் பன்மடங்கு விலையேறிவிட்டு.. மீண்டும் சேமிக்கிறேன் அதுவும் நிராசையாக போகலாம் ஆனாலும் என் நம்பிக்கை என்றும் மாறாது!!

மூவரும் சகோதரர்கள்தான் (பக்கம் 46) என்ற கவிதை சமகாலத்தில் நிகழும் நாட்டு நடப்புகளைப் பற்றி எடுத்தியம்பியிருக்கின்றது. மூவினங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்று பாடசாலை பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரைக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். வெறும் மேடைப் பேச்சுக்களில் முழங்குவதை விட்டுவிட்டு அதை யதார்த்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அவரவர்க்கு அவரரவர் மதம் பெரிது. அதை கடைப்பிடிப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனதும் மனித உரிமையாகும். அதில் கைவைப்பது யாருக்கும் முடியாது என்ற கருத்தைத் தருகின்றது கீழுள்ள கவிதை வரிகள்..

உன் புழுக்கையாகவே நான் இருக்கவேண்டுமென நீ விருப்பம் கொண்டுள்ளாய் சில வேலைகளில் காற்றுச் சுமந்து வந்து உன் வீட்டுக்குள் அடையும் தூசியாய் காண்கிறாய் என்னையும் அவனையும்.. கடதாசியில் மேடை அமைத்து விழா நடத்தி மகிழ்கிறாய் மேகம் இருள்கிறது மழை வந்துவிடும் கவனத்திர் கொள்.. தாயிடம் இருக்கும் உரிமை மூவருக்கும் சமம்.. நாம் மூவரும் ஒரு தாய்க் குழந்தைகள் என்பதால் எனக்கு மதம் மாறும் உரிமை உண்டு.. என் வணக்கஸ்தலம் உடைக்கும் உரிமை உனக்கெப்படி வந்தது? எத்தனை வணக்கஸ்தலம் அமைத்தாலும் நானும் நீயும் அவனும் சகோதரர்களே!!

வாழ்க்கை என்பதன் பெறுமதி தெரியாமல் இன்று சின்ன விடயத்துக்கும் மரணத்தின் கதவைத் தட்டும் பலர் பற்றி அறிந்திருக்கிறோம். காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி, பேஸ்புக் காதல், பெற்றோர் - பிள்ளை பிரச்சனை, கணவன் - மனைவி சண்டை, நட்பின் துரோகம் போன்ற காரணங்களுக்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து எதிர்நீச்சல் போடாமல் சாவின் கைகளுக்குள் தஞ்சம் புகுவது உண்மையில் கோழைத்தனமாகும். சாகத்துணிந்த துணச்சலை வாழ்வதற்காக காட்டியிருந்தால் சாதனைiயின் உச்சத்தைத் தொட்டிருக்கலாம். இது பற்றி தற்கொலைகள் மரணிக்கட்டும் (பக்கம் 63) என்ற கவிதை சொல்லியிருக்கிறது.

இப்போதெல்லாம் இளையோர்களின் மனம் திடமாக இல்லை.. திண்டாடுகிறது தெளிவில்லாமல்.. காதலால் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வியுற்றவனாய் நினைத்து வாழ்க்கை துறந்து மரணம் தேடுகிறார்கள்.. குடும்பத்தில் பிணக்கு வந்தால் குழந்தைகளுக்கும் தனக்கும் தரமற்ற மரணம் கொடுத்து தற்கொலை தீர்;வு வழங்கும் கோழைகளாய் மாறிவிடுகிறார்கள்.. பரீட்சையில் தோல்லியுற்றால் அடுத்த நகர்வை ஆரம்பிக்காமல் இறுதித் தீர்வு இதுதான் என்று மாணவர் சமூகம் மரணம் தேட முயல்கிறது!!

இவ்வாறு சமூக தளங்களில் நின்று தனது படைப்புக்களை எழுதும் மிகிந்தலை ஏ பாரிஸ், எதிர்காலத்தில் இன்னும் பல காத்திரமான படைப்புகளை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - சடலத்தின் வேண்டுதல்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மிகிந்தலை ஏ. பாரிஸ்
மின்னஞ்சல் - mihinthalefaariz@gmail.com
வெளியீடு - படிகள் பதிப்பகம்
விலை - 280 ரூபாய்

Sunday, August 31, 2014

64. கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

உலகின் எந்த மூலை முடுக்குகளை எடுத்துக்கொண்டாலும் சித்;திரவதை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. வல்லரசுகள் அதற்குக் கீழுள்ள நாடுகளை சித்திரவதைப்படுத்துவது என்பது வரலாறு கண்ட பேருண்மை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் சர்வதேசம் குறித்த பார்வையை மக்களுக்கு தெரிவித்தபோதும் அது குறித்த இறுதி மதிப்பீடுகள் இன்று வரை ஏற்பட்டதில்லை என்பதுதான் நிதர்சனம்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வப்போது இஸ்ரேல், பலஸ்தீனம் மீது ஏற்படுத்திய தொடர் தாக்குதல்களால் எத்தனை எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்? சொத்து சுகங்களை இழந்தார்கள்? அந்த யுத்தம் ஒரு நிறுத்தத்துக்கு ஐக்கியப்படாமல் இன்று இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதுதான் பெரும் துரதிஷ்டவசமான நிகழ்வாகும். இது குறித்த கருத்தாடல்கள் அல்லது கண்டனங்களை பல நாடுகள் மேற்கொண்டு இருக்கின்றது. ஆனபோதும் யுத்த முடிவு ஒன்றை பலஸ்தீனம் எதிர்காலத்திலாவது காணுமா என்பது ஐயத்துக்கும் அச்சத்துக்கும் உரிய விடயமாகவே காணப்படுகின்றது. அண்மையில் சுமார் ஒன்றரை மாதங்களாக இஸ்ரேலினால், பலத்தீனர்கள் மீது காஸாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்தது யாவரும் அறிந்ததே. இதில் 500 க்கும் மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள், 250 க்கும் மேற்பட்ட பெண்கள், 100 க்குக் கிட்டிய முதியோர்கள் உள்ளடங்குவர்.

கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதிக்கு கண்கள் போன்றவை. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இசைப்பாடல், ஓவியம், மேடைப் பேச்சு போன்ற சகல துறைகளிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டு நிற்கும். இந்த வகையில் பல்கலை வேந்தன் என்ற பட்டம் இவருக்கு கிடைக்கப் பெற்றமை மிகவும் பொருத்தமானதே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இவரது பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இருந்துவருகின்றது. தற்போது நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். 

தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்கள் மன்னார் படிப்பு வட்டத்தின் ஊடாக 68 பக்கங்களில் வெளியிட்ட ஷஷஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்|| என்ற நூல் குறித்த பார்வையை பதிவு செய்வது காலத்தின் தேவையாகும். கலைவாதி கலீல் அவர்கள் ஏற்கனவே உலகை மாற்றிய உத்தமர் (இயல் - இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைகள்), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக் கவிதைகள்), றோணியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்) ஆகிய நான்கு நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெள்ளி ரூபா என்ற சிறுகதைத் தொகுதி எழுத்தாளர் தேசியக் கவுன்ஸில் விருது பெற்றுள்ளது.

இந்நூல் இஸ்ரேலுக்கும் பலஸ்தீன விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் அரபு ஆட்சியாளர்களுக்கும் எதிராக நஜீ அல் அலி என்பவரால் வரையப்பட்ட கூடார்த்த சித்திரங்களுக்கு எழுதப்பட்ட வரிகள் கலைவாதியின் கவிதைகளாக மலர்ந்திருக்கின்றது. இது தழுவலோ மொழி பெயர்ப்போ அல்ல. சித்திரங்களைப் பார்த்து கவிஞரின் மனதில் தோன்றிய எண்ணங்கள். 

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா, மேற்குக் கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் மிகுந்த காலப்பகுதியில் இனந்தெரியாதோரால் இந்த நஜீ அல் அலி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

உண்மைகளை உரத்துச் சொல்லும் எவருக்கும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது என்பதற்கு நஜி அல் அலியின் கொலையும் வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. யதார்த்தபூர்வமான சிதிதிரங்களை தத்ரூபமாக வரைந்ததினாலோ என்னவோ அவருக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. இனி அவரது சித்திரங்களுக்கு நூலாசிரியர் கலைவாதி அவர்கள் எழுதிய கவிதைகளில் சிலதை நோக்குவோம்.

பிஞ்சின் கரத்தில் அக்கினிக் குஞ்சு (பக்கம் 17) என்ற கவிதை பின்வருமாறு அமைகின்றது.

உயிர் நீங்கி ஓய்ந்த போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்

ஒரு கரம் ஓயும் போது
மறுகரம் கல்லை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்

பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த ஒரு எழுச்சிக் குரலாக மேலுள்ள கவிதையை நோக்கலாம். உயிர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாண்ட போதும் சத்தியத்துக்காக போராடும் மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்து புலப்பட அவர் எழுதியிருக்கின்றார் என்பது எனது அவதானம்.

அதேபோல தீ (பக்கம் 20) என்ற கவிதையும் உணர்ச்சித் தீயை வாசகர் மனதில் எரித்துவிட்டுச் செல்கின்றமை கவிதையின் சிறப்பம்சமாகும்.

கல்லில் கசியும் குருதித் துளிகள் 
கானகப் பூவை மலர்விக்கும்
கல்லைப் பிளந்தும் செடி துளிர்க்கும்
பூக்கள் மலர்ந்து தீ கக்கும்

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடுநடுங்கும்
வெள்ளைப் பிறையும் வெண் போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை சேர்க்கும்.

பூக்கள் மலர்ந்தால் கூட அவை தீ கக்கும் வீரத்துடன்தான் இருக்கின்றன. அதுபோல வெள்ளைப் பிறையும் போர் புரியத்தக்க வாளாய் மாறி துணை சேர்க்கும் என்ற கற்பனை கவிஞரின் மன வேதனையையும், வீராவேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.

இஸ்ரேலின் பிடிக்குள் சிக்குபட்ட பலஸ்தீனம் பற்றியும், பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தவர்களுக்குமாக கல் என்ற கவிதையில் (பக்கம் 31) கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.

முள்ளின் படுக்கையில்
முகங் குப்புறக் கிடக்கிறது பலஸ்தீனம்
அதனுள் அழிந்து எழ, எழ முயன்று
ரணத்துள் வழக்கம்
மஸ்ஜிதுல் அக்ஸா!

வானை நோக்கும் 
கைகள் ஏந்தத் 
துவக்கு இல்லையென்றால்...
கல்லை ஏந்தும்
அது சிறு கல்லை ஏந்தும்!

கல்லைக் கொண்டு 
யானைப் படையை 
பூண்டோடு அழித்த
புரட்சி வரலாறு
எம்மிடம் உளது ஜாக்கிரதை!

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டபோதும் இந்த நூல் இன்றைய காலத்துக்கு மிகவும்  பொருந்துகின்றது. பல்துறை ஆளுமை கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்கு நிறைய களம் அமைத்துக் கொடுப்பவர். பலரது மனதிலும் மரியாதைக்குரியவராக வலம் வருபவர். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் எழுதிவரும் கலைவாதி கலீல் அவர்களது பல்வேறு வகையான காத்திரமான அனைத்து ஆக்கங்களும் நூலுருபெற்று வெளிவர வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும். அவர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

நூல் - ஓ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - தாஜுல் உலூம் கலைவாதி கலீல்
வெளியீடு - மன்னார் படிப்பு வட்டம்
தொலைபேசி - 0785659319

Wednesday, August 20, 2014

63. ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல் 90 நாவல் பற்றிய கண்ணோட்டம்

ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல் 90 நாவல் பற்றிய கண்ணோட்டம்

மண்வாசனை மணக்கும் விதமாக படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான மொழிநடையாக எழுதி தன் நிலையை நிரூபித்திருக்கின்றார் ஆர்.எம். நௌஸாத். கிழக்கு மாகாணத்தின் பள்ளிமுனைக் கிராமத்தின் சொல்லாடல்கள் நாவலின் கனதிக்கு கட்டியம் கூறுகின்றன. கொல்வதெழுதுதல் 90 என்ற நாவலை வெளியிட்டிருக்கும் இவர் ஏற்கனவே வல்லமை தாராயோ? (2000) என்ற சிறுகதைத் தொகுதியையும், நட்டுமை (2009) என்ற நாவலையும், வெள்ளி விரல் (2011) என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்டுமை நாவலுக்கு சுந்தர ராமசாமி 75 பவள விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. அதேபோல் வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் உயர் இலக்கிய விருதான அரச சாகித்திய விருதும், கிழக்கு மாகாண மாகாண சபையி;ன் சாகித்திய விருதும் கிடைத்துள்ளன. 1990 காலப் பகுதிகளில் நடைபெற்ற அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டே இந்த நாவலை ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார் என்பது நோக்கத்தக்கது.

இந்த நாவல் பற்றி குறிப்புரை தந்திருக்கும் எம்.எம்.எம். நூறுல்ஹக் அவர்கள் ''ஒரு கிராமத்தின் தேர்தல் கள நிலவரங்கள், கொலைக் கள விபரங்கள், வர்க்க முரண் நிலைகள், காதலுணர்வுகள் ஆகியன வெகு யதார்த்தமாக இதில் சித்தரிக்கப்பட்டள்ளன. அதேவேளை அப்பாவிக் கிராமத்து மனிதர்களின் மனவியல்புகள், வர்ணனைகள், பேச்சோசைகள் என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளன. நாவலாசிரியர் ஒரு திறமையான கதைசொல்லி என்பதை அவரது எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன'' என குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசியல் வரலாற்றின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அரசியல் தலைவன், தொண்டன், கட்சிப் பிரமுகர்கள், ஊர் மக்கள், தேர்தல் கால சூடுகள் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் கிராமிய வாழ்க்கை, காதல் உணர்வு, ஏழ்மை போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சமூக நாவலாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் கதாநாயகன் ஒரு அரசியல்வாதி என்பதை விட, அவரால் உருவாக்கப்படும் முத்து முஹம்மத் என்ற பாத்திரமாகும். வாழ்க்கையில் படக்கூடாத கஷ்டங்கள், அவமானங்கள் போன்ற அனைத்து தாழ்வுகளையும் சந்திக்கும் முத்து முஹம்மது, மைமுனா என்ற தன் மச்சினியைக் காதலிக்கின்றான். அவளும் முத்து முஹம்மதுவை மனதாரக் காதலிக்கின்றாள். மைமுனாவின் தாயாருக்கு இருவரது காதல் பிடிக்கவில்லை. வெறுமனே ஊர்ப் பொதுக் கூட்டங்களில் பாடல்களை பாடிக்கொண்டு திரியும் முத்து முஹம்மதுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் வளம் இருப்பதாக நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலை முத்து முஹம்மத் அடிக்கடி பாடுவதாகவும், அதன்போது மைமுனா கூட்டத்தில் இருக்கிறாளா என்று அவன் கண்கள் தேடுவதாகவும் குறிப்பிட்டுள்ள விதத்திலிருந்து அவர்களது காதல் உணர்வு மிக மென்மையாக இழையோடுவதை அறிய முடிகின்றது.

அதே போல அவனது காதலிக்கு வலைவீசும் சப்பு சுலுத்தான் என்ற பாத்திரமும் இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவலின் விறுவிறுப்புக்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் சப்பு சுலுத்தானின் நடவடிக்கைகள் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவல் மேலீட்டுக்கு அவனது செயல்கள் காரணம் என்பது அவதானத்துக்குரியது. ஏனெனில் இன்றைய காலத்திலும் சரி, என்றைய காலத்திலும் சரி.. சப்பு சுலுத்தான் போன்ற விஷமிகள் நம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். பெண்களை ஏமாற்றி வெளிநாட்டு ஆசையை வளர்த்து, பின் கொழும்புக்கு கூட்டிச் சென்று அவர்களது வாழ்வை இருட்டாக்கிவிட்டு, அந்தக் காசில் மனசாட்சியே இல்லாமல் சொகுசாக வாழ்கின்றார்கள். அதுவும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு பெண்களின் கற்பு சுலுத்தான் போன்றவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது என்பது நாவலின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

கன்னிவெடிபட்டு கால் முடமாகிப் போனதால் 'முட உதுமான்' என்ற காரணப் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஊர்வாசியின் மனைவி, சுலுத்தானுடன் கொழும்புக்குச் சென்று அவனால் வாழ்க்கை இழக்கிறாள். அதை முத்து முஹம்மத் அடிக்கடி மைமுனாவுக்கு ஞாபகப்படுத்தி சுலுத்தானோடு பேச்சு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகின்றான். கிராமிய மணம் கமழும் சொற்றொடர்கள் இந்த நாவலில் தாராளமாகவே விரவிக் கிடக்கின்றதெனலாம். பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடும் சொற்களிலிருந்து அவர்களது அன்றாட வாழ்வியலை தரிசிக்க முடிகின்றது. உதாரணமாக கீழுள்ள உரையாடலைக் குறிப்பிடலாம்.

''ஐஸ்பளம் வாங்கித்தந்த ஆரு? சப்பன் எங்க?''

''அவன் சுல்தான்! நெக்கில்ல... தம்பிக்கு வாங்கிக் கொடுத்த''

''மைமுனா! அந்த நாய்க்கிட்ட ஒன்டும் வாங்காதண்டு செல்லிரிக்கன்... ல்லா..? ஞ்சப்பாரு நான் வாங்கித்தாரன்..''

நாவலின் இடையே திடீரென முட உதுமானின் மனைவி நஞ்சு குடித்து இறந்து போகின்றாள். அவளது மையத்துக்கு வருகை தரும் தலைவர், முதல் முறையாக முத்து முஹம்மதுவுடன் பேசுகையில் அவன் பெறும் சந்தோஷம் கண்முன் தெரிகின்றது. ஒரு சாதாரண இளைஞனாக ஊருக்குள் இருக்கும் முத்து முஹம்மது தலைவர் மீது கொண்ட பற்றால் தலைவரின் நியமிப்பின் பேரில் இளைஞர் அணித் தலைவனாக ஆகிவிடுகின்றான்.

மைமுனாவின் தாய் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்கின்றாள். முத்து முஹம்மது அதற்கு சம்மதிக்காதபோது மைமுனாவையும், அவளது தங்கைகளையும் பாரமெடுத்து வீடு வளவு வாங்குவதற்கு உன்னால் முடியுமா என்று கேட்கும் கேள்வியால் முத்து முஹம்மது சர்வாங்கமும் ஒடுங்கிப் போகின்றான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கு உதைத்துவிட்டு அவன் தரையில் உட்கார்ந்து அழுவதில் அவனது இயலாமை வெளிப்படுகின்றது.

மைமுனா வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை சப்பு சுலுத்தான் செய்து முடித்துவிட்டு கொழும்புக்கு அழைக்கின்றான். மைமுனாவையும் அவளது தம்பி யாஸீன் மற்றும் முத்து முஹம்மதுவை அழைத்துக்கொண்டு மைமுனாவின் தாய் கொழும்புக்கு பயணமாகின்றாள்.

மருதானையில் உள்ள 'யூக்கே லொஜ்' என அழைக்கப்படும் விடுதியில் அவர்களை இரண்டு வாடகை அறை எடுத்து தங்க வைக்கின்றான் சுலுத்தான். முத்து முஹம்மதுவை அழைத்து வந்தது அவனுக்கு எரிச்சலாக இருப்பதை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கின்றான். விமானமேறும் நாளில் எம்.பி யின் ஒப்பம் வேண்டும். அதற்கு முத்து முஹம்மது உதவி புரிய வேண்டும் என்று பொய்யைச் சொல்லி அழைத்துப்போய் இடையில் கைவிட்டு விடுகின்றான் சுலுத்தான். அவனது சூழ்ச்சியால் முத்து முஹம்மதுவும் கூடவே சென்ற யாஸீனும் கொழும்பில் வழிதெரியாமல் திக்குமுக்காடித் தவிக்கும் காட்சியில் முத்து முஹம்மது வாசகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றான்.

அங்கிருந்த பொலிஸாரிடம் அழுது மன்றாடி எம்.பியின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுடன்.. சுலுத்தான் ஏமாற்றிய விதத்தைக் கூறி அவரது மேலீட்டால் யூக்கே லொஜ் செல்கின்கிறான். சுலுத்தான் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்பியதுடன் யாஸீனை முத்து முஹம்மது கடத்தியதாக பொய் சொல்லி மைமுனாவின் தாய் மனதையும் மாற்றுகிறான். அதனால் மைமுனாவின் தாய் முத்து முஹம்மதுவை குறை சொல்கின்றாள்.

மைமுனா வெளிநாடு போன பின்பு பள்ளிமுனைக் கிராமத்துக்கு போகவே பிடிக்கவில்லை முத்து முஹம்மதுக்கு. அவளில்லாத அந்தக் கிராமத்தை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஷஷபொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன். நா வந்த நேரம் அந்ந பூவங்கு இல்ல|| என்ற பாடலை முத்து முஹம்மத் முணுமுணுக்கிறான். இதன் மூலம் மைமுனா மீது அவன் வைத்திருந்த உருக்கமான காதலின் வலி வாசகர் மனதிலும் கசிகிறது. எனவே எம்.பியே கதியென்று தன்னை எம்.பிக்காகவே அர்ப்பணித்துக்கொள்கின்றான் முத்து முஹம்மத்;. அவரது வழிகாட்டலின் கீழ் தான் கொஞ்ச கொஞ்மாக முன்னேறி, அரசியல் கற்று, தலைவரின் பேச்சு நுணுக்கங்களை ஆராய்ந்து ஒரு சராசரி நகரத்து இளைஞனாக மாறிக்கொண்டிருந்தான். தலைவரைக் கொல்ல வந்த முயற்சியில் தன் உயிரைத் துச்சமென மதித்து அவரைக் காப்பாற்றியதில் முத்து முஹம்மதுவுக்கு தனது இடது கையில் மூன்று விரல்களையும் இழக்க நேரிடுகின்றது. தலைவருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த அவனை பலரும் பாராட்டுகின்றனர். இந்தக் காரணத்தால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் வயற்சேனை பிரதேசத்தின் தவிசாளராக முத்து முஹம்மதுவை கட்சி நியமிக்கிறது. இதனால்  பலருக்குள் பொறாமைத்தீ கொளுந்து விட்டெரிகின்றது. இடையில் மைமுனா அனுப்புகின்ற கெஸட் முத்து முஹம்மதுக்கு கிடைக்கின்றது. சுலுத்தான் அவளது பெண்மையை சூரையாடிய சோகத்தை கெஸட் பாடி நிற்கின்றது. அந்த ஆத்திரத்தில் சுலுத்தானைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றான் முத்து முஹம்மது.

இப்படியே நாட்கள் செல்ல முட உதுமானின் மகன் இயக்கத்தில் சேர்ந்து, தன் நண்பனொருவனுடன் வந்து சுலுத்தானை கொலை செய்கின்றான். தன் தாயை கொழும்புக்கு அழைத்துச் சென்று அவளது வாழ்க்கையை மட்டுமல்லாமல் தனதும், தன் தந்தையினதும் வாழ்க்கையை இல்லாமலாக்கிய சுலுத்தானை பலி வாங்கும் அவனது நோக்கம் அல்லது குறிக்கோள் நிறைவேறியதில் வாசகர்கள் ஆறுதலடையலாம். சுலுத்தான் போன்ற அயோக்கியர்கள் சமூகத்தில் இருக்கவே கூடாது என்ற மனநிலையில் நாவலைப் படிக்கும் வாசகர்கள் சுலுத்தானின் மறைவில் திருப்தி காணுவார்கள் என்பது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இவ்வாறான சூழ்நிலைகளில் முன்னேறி எம்.பியின் மனதில் இடம்பிடித்து அவருக்கு விசுவாசமாக இருக்கின்றான் முத்து முஹம்மத். இலங்கை இஸ்லாமிய கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராகவும், பள்ளி முனை இளைஞர் தலைவராகவும், முன்னாள் வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளராகவும் இருந்த முத்து முஹம்மது, தற்போதைய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ளான். அவன் தன் இளம் மனைவி மைமுனா சகிதம் வருவதாக நாவல் நிறைவடைகின்றது.
வாசிக்கிறோம் என்ற உணர்வை மறந்து பள்ளிமுனையில் வசிக்கச் செய்த நாவலாக இதைக் கொள்ளலாம். பள்ளிமுனைக் கிராமத்தை சுற்றிப் பார்த்து, அங்குள்ளவர்களுடன் உரையாடி.. அவர்களுடன் சிலநாட்கள் வாழ்ந்த ஒரு அனுபவம் நாவலை வாசித்து முடிக்கையில் உணர முடிகின்றது. இவ்வாறு ஒரு நாவலின் ஊடாக வாழ்வியலை தரிசிக்கச்செய்தநாவலாசிரியர் ஆர்.எம். நௌஸாதுக்கு வாழ்த்துக்கள்!!!

நாவல் - கொல்வதெழுதுதல் 90
நாவலாசிரியர் - ஆர்.எம். நௌஸாத்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - இந்திய 150 ரூபாய்