Wednesday, May 21, 2014

59. கடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


இன்று இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், நூல் விமர்சனங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டி வருவது கண்கூடு. இந்த வகையில் முல்லைத்தீவைச் சேர்ந்த வே. தீபனும் தனது கவிதை, கட்டுரை போன்ற படைப்புக்களை தினக்குரல், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் களப்படுத்தி தனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்துக்கொள்ள முயற்சிக்கிறார். 

முல்லைத்தீபன் என்ற புனைப் பெயரிலேயே பெரும்பாலும் தனது கவிதைகளை பத்திரிகைகளில் களப்படுத்திவரும் இவர், கடவுளிடம் சில கேள்விகள் என்ற கவிதை நூல் மூலம் இலக்கிய வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றார். முல்லைத்தீபன் எனும் மண் வாசனையுடன் எழுத்துலகில் கால் பதிப்பது ஊரின் மீது தான் கொண்ட பற்றை, நேசித்தலை வெளிப்படுத்துகின்றது. தன் வலி சார்ந்த படைப்புக்கள் நிச்சயம் சமூகத்தில் ஒரு மாறுதலை உண்டு பண்ண முயற்சிக்கும் என்பது திண்ணம். அகம் சார்ந்த கவிதைகள், சமூக சீர்திருத்தக் கவிதைகள், போரியல் சார்ந்த கவிதைகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 28 ஆவது நூல் வெளியீடாக 75 பக்கங்களை உள்ளடக்கியதாக 25 கவிதைகளைத் தாங்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவரான இவர் தற்போது தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கு வரலாறு, புவியியல் போன்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலுக்கு கலாபூஷணம், தமிழ்மணி, கலாநிதி அகளங்கன் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

``மண்பற்றுக்கொண்ட தீபன், முல்லைத்தீபனாக கவியுலகில் அறிமுகத்தைப் பெறுகிறார். கவிதை மட்டுமன்றி வில்லுப்பாட்டு, தாலளய நாடகம், இசை நாடகம், வடமோடி, தென்மோடி நாட்டக் கூத்துகள், சமூக நாடகங்கள் என கலைத் துறையில் பங்குபற்றி அனுபவம் பெற்றுள்ளார். செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் ஷநம்பி(க்)கை வை| என்ற தலைப்பில் கவிதை நூலொன்றைக் கையெழுத்துப் பிரதியாக 2009.11.03 இல் வெளியிட்டு யாவற்றையும் இழந்து வந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். சிறுவயதிலிருந்தே கலை இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர், வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர். பாடசாலை அதிபரான தாய்க்கு தனித்த பிள்ளையாக, தந்தையை இழந்த துயரில் தவித்த பிள்ளையாக இருக்கும் இவரின் கவிதைகளில் இவரது அனுபவம் வெளிப்படுகிறது.'' 

அடுத்து இந்த நூலுக்கு கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் நயப்புரை ஒன்றையும், யாழ். பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளரான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் பதிப்புரை ஒன்றையும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் வே. முல்லைத்தீபன் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ``கற்பனை என்பது வேறு. நினைவுகள் என்பது வேறு. அவ்வப்பொழுது என்னுள் எழும் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுதப்பட்ட சில கவிதைகளை ஒன்று சேர்த்துள்ளேன். மனிதம் தொடர்பாக சமூகத்திடம் அதிகமதிகமாக கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது. விடை காணாப் புதிர்கள் ஏராளம் எம்மில் மலிந்து போய்க் கிடக்கின்றன. விரக்தியம், வேதனையும் வெகுண்டெழும் போது வடிகால்களைத் தேட முற்படுகின்றேன். தனிமையின் கொடுமைகள் உதைக்கின்ற போது எழுதுகோலையே அதிகம் காதலித்ததுண்டு. உணர்வுகளும், வார்த்தைகளும் புணர்கின்ற போது ஏற்பட்ட பிரசவத் தொகுப்பே இந்நூலாகும். யாருக்காகவும் எவராவது இருக்கிறார்களா? என்றால்... எவருக்காகவும் எவரும் இல்லை என்பதே விடையாகும்.''

இனி இந்த நூலிலுள்ள ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம்.

வாழ்க்கை என்றால் ஒன்று மாறி ஒன்றைப் பிடிக்க ஆசைப்பட்டு இறுதியில் எதுவுமே கிடைக்காமல் போவது என்று ஒரு அறிஞர் கூறிய கருத்துக்களை நிதர்சனமாக்கியது போன்று முல்லைத்தீபனின் வாழ்க்கை (பக்கம் 01) என்ற கவிதை அமைந்திருக்கின்றது. வாழ்வென்றால் இதுவா.. இல்லை அதுவா என்று எதையோவெல்லாம் யோசித்து புரிந்துகொள்வதற்கு முதலே வாழ்க்கை நம்மைவிட்டு போய்விடுகின்றது என்பதை கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன. 

வாழ்க்கை என்றால்
என்னவென்று
தெரிந்து கொள்ளவே
வாழ்நாள் முடிந்து போகிறது..
இப்படியிருக்கையில் 
எப்படித்தான் 
வாழ்க்கை முழுமையாவது...?

நீ எங்கே...? (பக்கம் 13) என்ற கவிதை தொலைந்த காதல் பற்றி பேசுகின்றது. இதயத்தைப் பரிமாறியவர்கள் எல்லாம் இல்லறத்தில் சேர்வதில்லை. யுத்தத்தில் வாழ்ந்த மக்களுக்கு யுத்தமே ஒரு எதிரியாக மாறி விட்டதை இலக்கியங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அந்த வலி இந்த வரிகளினூடாகவும் வெளிப்பட்டிருக்கின்றதைப் பாருங்கள்.

நாடக மேடையிலே நான்
நடித்திருந்த வேளை
நயனங்களாகியவள் நீ!

வாழ்வுப் போரிலே - நான் 
வெற்றி பெற்றிருந்த வேளை
வாழ்த்திக் களிப்புற்றவள் நீ!

வேதனையிலே - நான் 
வாழ்ந்திருந்த வேளை
விரதமிருந்தவள் நீ!

ஒரு காலிழந்தே - நான்
ஊனமுற்றிருந்த வேளை
ஊன்று கோலாகியவள் நீ!

குருத்தின் கவலை.. (பக்கம் 18) என்ற கவிதை பெற்றோர் தம் பிள்ளைகளை எண்ணி சொல்வது போன்ற உவமானத்தை ஒத்ததாக இருக்கின்றது. தமது வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியே கவலைப்படுவார்கள். அத்தகைய ஒரு உண்மையை இவ்வரிகள் இயம்பி நிற்கின்றன.

குருத்தோலையொன்று
வாய்விட்டு அழுகிறது
காய்ந்து விழும்
காவோலைகளை நினைத்தல்ல
நாளை
துளிர்ப்பதற்காய்
காத்திருக்கும்
ஆயிரமாயிரம்
குருத்தோலைகளை நினைத்து!

ஓரிதயத்தினுள்ளே... (பக்கம் 22) என்ற காதல் கவிதை உடல் உறுப்புக்களை வைத்து ஒரு வித்தியாசமான கற்பனையில் எழுதப்பட்டிருக்கின்றது. நாடிகளும் நாளங்களும் காதலுக்காக தூது செல்கின்றன என்று தன் கற்பனையை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர் முல்லைத்தீபன்.

வலது
இதய அறையில் - நீ
இருந்து கொண்டு
இடது
இதய அறையிலிருக்க
அனுமதித்தாய் என்னை..

ஏக்கம் (பக்கம் 38) என்ற கவிதை சந்தம் பொதிந்த ஒரு கவிதையாக அமைந்திருக்கின்றது. கனிவிலும், வலியிலும் கழியும் காலம் பற்றி கவிஞர் எடுத்துரைக்கின்றார். போலியான இந்த உலகில் வேஷமாக பழகும் மக்களும், சந்தர்ப்பத்துக்கு விலகிடும் கயவர்களும் இருப்பதாகச் சாடி இருக்கின்றார். எல்லாக் காலத்திலும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் வருகின்றனர். ஆனால் காலம் செல்லச்செல்ல உலகமானது கலியுகமாக மாறிவிட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று நம்பிக்கைக்காக பழகிவிட்டால், நாளை காலை வாரிவிடுபவர் அவராகத்தான் இருப்பார். ஒவ்வொருவருக்கும் இதில் தனித்தனி அனுபவங்கள் நிச்சயம் இருக்கலாம்.

கனவினூடே நகருது - நம்
கனிவான நினைவுகள்
வலியுனூடே வளருது - எம்
வாலிப வயதுகள்

வேதனைகள் தந்திங்கு - மடல்
விழிகளும் நனையுது..
பாகங்கள் வலித்திங்கு - உடல் 
பாழ்பட்டுப் போகுது

வேசமாய்ப் பழகியே - கடும்
நாசங்கள் நடக்குது..
மோசமாய் உருகியே - பெரும் 
பாசங்கள் உடையுது!

வதங்கியே வெடிக்குது - மனசு
விம்மியே வேகுது..
போலியே உலகிது - இதன் 
பொய்மையே விலகிடு!

தன் பரபமரிப்பில் இருப்பவர்கள் ஏழைகளாக இருக்கும்போது கோபுரங்களுக்hக கொட்டிக்கொடுத்து புகழ் தேடுபவர்கள் பலர் உள்ளனர். வெறும் பெயருக்காகவும் பெருமைக்காகவும் இவ்வாறெல்லாம் நடப்பவர்கள் மனிதாபிமானம் துளியுமின்றி திமிராக நடந்துகொள்வதான வலியை கவிஞர் எங்களுக்கும் வெளிநாட்டில் சொந்தக் காரருண்டு (பக்கம் 55) என்ற கவிதையினூடாக பிரதிபலிக்கின்றார்.

கோபுரத்திற்கு
கொட்டிக் கொடுப்பதுடன்
அதைச் சுற்றியுள்ள
குடில்களுக்கு ஆயிரத்திலாவது
கூரையமைத்துக் கொடுத்தலென்ன
குறைந்தா போய்விடும்?

வாசிப்பினூடாக இன்னும் தன் ஆளுமையை வளர்த்து எதிர்காலத்தில் இன்னும் நல்ல கவிதைகளை கவிஞர் முல்லைத்தீபன் தர வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் யாவும் வெற்றி பெற மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - கடவுளிடம் சில கேள்விகள்
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர் - வே. முல்லைத்தீபன்
வெளியீடு - வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
விலை - 240 ரூபாய்

58. கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திருகோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதுபாஷினி (1968) என்ற இயற்பெயரைக் கொண்ட ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுதியே கருநாவு ஆகும். இவர் ஏற்கனவே 2000 இல், உரத்துப் பேச... என்ற கவிதைத் தொகுதியையும், 2006 இல் துவிதம் என்ற கவிதைத் தொகுதியையும் இலக்கிய உலகுக்குத் தந்தவர். 

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்ற ஆழியாள், மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமானிப் பட்டப் படிப்பையும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுமாணிப் பட்டப் படிப்பையும், தகவல் தொழினுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றவர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் சார்ந்த விடயங்களில் அதி தீவிர  வாசிப்பும், தேடலும் மிக்கவராகவே காணப்படுகிறார். இவர் ஆங்கில விரிவுரையாளராக யாழ். பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் 1992 - 1997 காலப் பகுதிகளில் சுமார் 05 வருடங்கள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

உரத்துப் பேச..., துவிதம் ஆகிய கவிதைத் தொகுதிகளை விட மாறுபட்ட வகையிலேயே தனது மூன்றாவது கவிதைத் தொகுதியியை முன்வைத்துள்ளார். மாற்று பதிப்பகத்தினூடாக 77 பக்கங்களில் கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இந்தத் தொகுதியில் 25 கவிதைகளும், 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

கருநாவு என்ற பதம், சொன்னது பலிக்கும் என்ற கருத்தைக் கொண்டது. நம்மில் யாராவது ஏதாவது சொல்லி அது பலித்துவிட்டால் கருநாக்கால் சொன்னது நடந்துவிட்டது என்று கூறும் வழக்கம் இருக்கின்றது. பலருக்கும் இது உண்மையாக நடந்திருப்பதால் கருநாக்கு என்ற சொல் இன்னும் பாவனையில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தொகுதியில் உள்ள  சில கவிதைகளை இனி நோக்கலாம்.

மௌனம் சம்மதத்துக்கான அறிகுறி என்பது காலங்காலமாக இன்று வரை சொல்லப்பட்டு வரும் ஒரு கூற்றாகும். மௌனத்தை சாதகமாக எடுத்துக்கொள்ளும் போக்கே நவீன காலத்திலும் நாகரிகம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்றைய சூழலில் மௌனத்தின் மொழிபெயர்ப்பு வலியாகவும், வேதனையாகவும், சகிக்க முடியாத அல்லது வெளிக்காட்ட முடியாத துக்கித்தலின் வெளிப்பாடு என்பதும் உணரப்பட வேண்டிய விடயமாகும். 

கோபத்திலும், எதிர்ப்பிலும் ஏன் இயலாமையிலும் கூட மௌனமே மொழியாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றது. கண்ணீருக்கும் மௌனத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதுதான் உதடு பிரிக்காமல் மனதில் உள்ளதை வெளிப்படுத்துதல் என்பதை மௌனம் (பக்கம் 17) என்ற கவிதை விளக்குகின்றது.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
சம்மதம் இன்மைக்கும் அறிகுறி
அது
எதிர்ப்புணர்வின் அறிகுறி
எதற்கான அறிகுறியுமே அல்ல.

மௌனம் 
சினத்தின் இறுக்கம்
இயலாமையின் துயரம்

மௌனம் ஒரு பாவனை
கூர்ந்து கவனித்தலின் குணாம்சம்
அல்லது
ஒட்டாமல் இருத்தலின் வெளிப்பாடு

கொப்பித் தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது? (பக்கம் 35) என்ற கவிதை போரின் வடுக்களை வலிமையாக மனதில் பதியச் செய்கின்றது. ஒன்றாக கூடிக்குலாவியிருந்த  குடும்பம் சின்னாபின்னமாக்கப்பட்ட வரலாற்றை ஒரு சிறிய கவிதையில் கூறியிருப்பது ஆழியாள் என்ற ஆளுமைப் பெண்ணின் திறமையை பறைசாற்றுகின்றது. காணாமல் போன பட்டியலில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களோ அல்லது அவர்களுக்கு உண்மையில் நேர்ந்த கதிகளோ இன்று வரை அறிவிக்கப்படாமல் அக்குடும்பத்தினரை வதைக்கிறது. இந்த விடயம் மனசாட்சி கொண்ட எல்லோரையும் வேதனை விளிம்புக்கு இட்டுச் செல்லும். அந்த தாக்கத்தினை கீழுள்ள வரிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி, வடிவு அன்ரி, வனிதா அன்ரி, சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர். அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் விக்கிப் போன செல்லம்மா பாட்டியை மணிக் கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள்.. பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்குப் போனார். சேகர் சித்தப்பா காணாமல் போனார். சித்தி சின்னா பின்னமாகி செத்துப் போனா (என்ரை ஆசைச் சித்தி) ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள். 

நாட்கள் வரும் (பக்கம் 44) என்ற கவிதை சிறைச்சாலையில் நடக்கின்ற சித்திரவதைகளை ஞாபகமூட்டிப் போகிறது. அரசியல் காரணங்களுக்காக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சிறை சென்றவர்களை அங்குள்ள அதிகாரிகள் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவார்களா? என்ற கற்பனையில் மனது விரிகிறது.  

எல்லாக் கதவுகளையும்
எங்களின்
முகத்தில் அடித்து மூடுங்கள்!

எங்களுக்கான ஜன்னல்களை
அறைந்து சாத்துங்கள்!

காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம் கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி அடையுங்கள்!

உங்களில் எவர் தன்னும் 
எங்கள் பாண் துண்டுகளுக்கு 
தித்திக்கும் பழப்பாகையோ - ஒரு கரண்டி 
வெண்ணையையோ பூசாதீர்கள்!

வழக்கறிஞராகவும், த சண்டே லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த லசந்த விக்கிரமதுங்க (1958 - 2009), தனது கட்டுரைகள் மூலம் இலங்கை அரசுக்கும், எல்டிடிஈ மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் 2009.01.08 ஆம் திகதி வேலைக்குச் செல்லும் போது கொழும்பில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நிகழ்வுகளை மறக்காத கவிஞர், என் அண்ணன் லசந்தவுக்கு அவர்கள் கூறியதாவது... (பக்கம் 51) என்ற தலைப்பிலான கவிதை மூலம் தனது துயரைப் பகிர்ந்து கொள்கிறார். ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது இன்று நேற்று நடந்து வருவதல்ல. உண்மைகளை உரத்துச் சொல்கின்ற காரணங்களுக்காக அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுவதும், தங்குமிடங்களை அடித்து நொறுக்குவதும், தனிப்பட்ட ரீதியில் அவர்களை மிரட்டுவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் ஆதிக்கத்தின் அடக்குமுறையாக காணப்படுகின்றது. இந்த தாற்பரியங்களை தத்துவார்த்தமாக தனது கவிதையில் பதியச் செய்திருக்கிறார் கவிஞர் ஆழியாள்.

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்

எவ்வளவு சுலபமாக, 
ஒரு பிஸ்கோத்தை
மொறு மொறுவெனக் கொறிப்பது போல
எவ்வளவு இலகுவாக

பகல் விமானம், பால்பெல்போரா - நடனம் முடிந்துவிட்டது, கொடுத்து வைத்த குட்டிப் பெண், காக்கைச் சிறகுகள், வெளி பற்றிய கனவில், கங்காரு, செந்தைல மரங்களும் நானும்... ஆகிய தலைப்புக்களில் 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும், மூலக் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்களும் நூலின் கடைசிப் பகுதியில் காணப்படுகின்றன.

இளம் தலைமுறை கவிஞர்கள் ஆழியாளின் தொகுதிகளை வாசிப்பதினூடாக கவிதையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். கவிதையின் ரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். காத்திரமான தொகுதியாக காணப்படும் இத்தொகுதி அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, நேசிக்கப்படவும் வேண்டியதாகும்!!!

நூல் - கருநாவு
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஆழியாள்
வெளியீடு - மாற்று
விலை - இந்திய ரூபாய் 60.

57. கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

கலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் 'பொப்' என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

நமது நாட்டில் 'பொப்' இசை என்று கூறிக்கொண்டு தமிழ்மொழிப் பாடல்கள் சிலவற்றையும் நமது இளைஞர்களில் சிலர் பாடி வருகின்றார்கள். 'பொப்' என்ற வார்த்தையை இவர்கள் ஏன் உபயோகிக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. மக்கள் சங்கீதம் என்று தமிழில் அழைக்கலாமே. அல்லது ஜனரஞ்சகப் பாடல் என்றும் கூறலாம். 'பொப்' என்றால் 'பொப்பியூலர்' என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கம். 'பொப்பியூலர்' என்றால் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது என்று பொருள். மக்கள் மத்தியில் பிரபல்யமான பாடல்கள், தமிழைப் பொறுத்தவரையில் சினிமாப் பாடல்களே!

கவிச்சுடர் அன்பு  முகையதீன் மணிவிழா மலரில் நூலாசிரியர் எழுதிய கட்டுரை உடனிகழ்கால பண்பாளன் ஒருவன் பற்றிய தகவற் பேழை (பக்கம் 18) என்ற தலைப்பில் வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளது. 

உருவகக் கதைகளுக்கான விளக்கம் (பக்கம் 33) என்ற தலைப்பில் எம்.ஐ.எம். முஸம்மில் எழுதிய பிரதிபலன் உருவகக் கதைத் தொகுதியை மேற்கோள் காட்டி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.  இக்கட்டுரையில் உருவகக் கதைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

''உலகத்திலேயே திறமை மிகுந்த முதல் உருவகக் கதாசிரியர், கிரேக்க ஞானி ஈசாப் ஆவார். வெளிப்படையாகக் கூறும் கசப்பான உண்மை, உலகத்தாருக்கு எடுத்த எடுப்பில் பிறப்பதில்லை. பெரும்பாலும் அதற்குப் பயன் ஏற்படுவதும் இல்லை என்பதை அறிந்தே அவன் உருவகக் கதை என்னும் இலக்கிய உருவத்தை எடுத்துக் கொண்டு, கணந்தோறும் புதிது புதிதாய் மலரும் தன் கற்பனைத் திறத்தினால் அதை விதம் விதமாக அலங்கரித்து உலகத்துக்குத் தந்தான்.''

''உருவகக் கதை, உருவில் சிறியதாகவும் முடிவு அழகாகவும் அமைவதனால் மனதில் நீண்ட நாள் பதிவாகவும் இருக்கும். உருவகக் கதையில் பொழுது போக்கு மட்டுமன்றிச் சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். இழையும் படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி, தேர்ந்தெடுத்த அதிசயமான கற்பனைகளினால்  அழகை தெளிவுபடுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும், உணர்ச்சியையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும், வாழ்க்கை மதிப்புகளையும் வாசகருக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக் கதை என்னும் இலக்கிய வடிவம் காவியத்துக்குச் சமமானது.'' என்ற விடயங்களை வாசகருக்குச் சொல்லி நிற்கின்றார் ஆசிரியர்.

சமூக முன்னேற்றத்திற்கான பத்திரிகையாளரின் பங்களிப்பு (பக்கம் 37) என்ற தலைப்பில் இதழியல் கற்கைநெறியைக் கற்கும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாம் அனைவரும் சமூகப் பிராணிகள் என்று அரிஸ்டோடர்டில் கூறியதற்கிணங்க சமூகத்தில் நாம் தனித்து வாழ இயலாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதாகவே நமது வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. அத்தகைய சமூகத்தில் நிகழும் விடயங்களை எல்லோரும் அறிவதற்காக பத்திரிகை என்ற ஊடகம் பெரிதும் துணை புரிகின்றது. அத்தகைய ஊடகத்தில் பணிபுரிந்த ஒருவரான. சி. குருநாதன் என்பரைப் பற்றியும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பத்திரிகைகள் பற்றியும் எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நுகர்ச்சியை மீள வலியுறுத்தும் சுவையான நூல் (பக்கம் 52) என்ற தலைப்பில் அகளங்கனின் இலக்கியச் சரம் என்ற நூல் பற்றிய கண்ணோட்டத்தை முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

''தான் பெற்ற அனுபவமொன்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழையும் இலக்கிய கர்த்தா அதற்கு ஏற்ற பழக்கத்தையும், வழிமுறைகளையும் தெரிந்து கையாளுகிறான். ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே வெற்றென வெளியிடுவதன் மூலம் கேட்போர் உள்ளங்களில் அவ்வனுபவத்தைக் கிளர்ந்தெழ வைத்தல் சாத்தியமன்று. எனவே பொருத்தமான அமைப்பினையும், சொல் ஒழுங்கையும், அணிகளையும் தெரிந்து கற்பனைத் திறனுடன் கையாளும் வல்லமை சிருஷ்டியாற்றல் என்று போற்றப்படுகிறது. ஆக்க இலக்கியங்கள் அனைத்துக்கும் பொருத்தமான இவ்வல்லமை கவிதைக்கு இன்றியமையாததாகும்.''

அண்மைக்கால ஆக்கங்கள் எழுப்பும் சலனங்கள் (பக்கம் 67) என்ற தலைப்பில் க. சட்டநாதன் எழுதிய உலா, எஸ். அகஸ்தியர் எழுதிய எரி நெருப்பில் இடைபாதை இல்லை, மாத்தறை ஹஸீனா வஹாப் எழுதிய வதங்காத தலரொன்று, ஏ.பி.வி. கோமஸ் எழுதிய வாழ்கையே ஒரு புதிர், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய மக்கத்துச் சால்வை, செ. யோகநாதன் எழுதிய கிட்டி, கதைவாணன் எழுதிய காளை விடு தூது, சோ. ராமேஸ்வரன் எழுதிய யோகராணி கொழும்புக்குப் போகிறாள், மாத்தளை கார்த்திகேசு எழுதிய வழி பிறந்தது, மண்டூர் அசோகா எழுதிய பாதை மாறிய பயணங்கள், ஓ.கே. குணநாதன் எழுதிய ஊமை நெஞ்சின் சொந்தம், ந. பாலேஸ்வரி எழுதிய தந்தை விடு தூது, ஜமுனா ராணி எழுதிய பூவிதழின் புன்னகை ஆகிய தொகுதிகள் பற்றிய விஷேட குறிப்புக்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரால் எழுதப்பட்ட மலையகம் பற்றிய முதல் நாவல் தொடர்பான விடயங்கள் ஓ.கே. குணநாதன் எழுதிய ஒரு துளி (பக்கம் 87) என்ற தலைப்பில் விரிவாக நோக்கப்பட்டுள்ளது. 

ஷாமிலாவின் இதயராகம் என்ற கதையை எழுதியிருப்பவர் ஜெக்கியா ஜுனைதீன் என்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர். ஆயினும் கதைக்கான கருவை வழங்கியவர் நாவலாசிரியையின் கணவரான பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவராவார் போன்ற விடயங்களை உள்ளடக்கியும், நாவலில் இலக்கிய ரசம் வெளிப்பட்டு நிற்கும் தன்மை பற்றியும் ஷாமிலாவின் இதயராகம் (பக்கம் 97) என்ற தலைப்பில் விபரங்களை நூலாசிரியர் விரிவாகத் தந்துள்ளார். ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் பேசப்படுகின்றது.

இவை தவிர இன்னும் பல விடயங்கன் இந்ந நூலில் உள்ளடங்கியுள்ளன. விரிவஞ்சி ஒரு சில விடயங்களையே எடுத்து நோக்கியுள்ளேன். தான் வாசித்து இரசித்தவற்றை வாசகர்களுக்கு முன்வைப்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அந்த வகையில் அவரை ஒரு தகவல் களஞ்சியமாகவே பார்க்க வேண்டியுள்ளது. தனது எழுத்துக்களாலும், பணிவான குணத்தினாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்த நூலாசிரியர்.  அவரைப் பல்லாண்டு காலம் வாழப் பிரார்த்தித்து, இன்னுமின்னும் பல தரமான புத்தகங்களை இலக்கிய உலகுக்குத் தர வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கலை இலக்கியப் பார்வைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன் 
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்