Sunday, November 6, 2022

148. "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலக்கிய இரசனை மற்றும் கவியாற்றலுடையவர்கள் அது சார்ந்த நூல்களை வெளியிடுவது வழமையாகும். அந்தவகையில் மக்கொனையூராள் என்ற புனைப் பெயரில் எழுதிவரும் பர்ஹானா அப்துல்லாஹ் தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக நிசாந்தம் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இவர் பாடசாலைக் காலத்திலேயே கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளார். அத்துடன் அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது படைப்புகளுக்காகப் பல சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்று பாடசாலைக்குப் புகழ் சேர்த்துள்ளார். 

பல்வேறு வகையான இலக்கிய வடிவங்கள் இருப்பினும் கவிதை பலரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு இலக்கிய வடிவமாகக் காணப்படுகிறது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவமாகும். மேலும், மொழியில் உள்ள ஒலியின் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. இன்றைய இளந்தலைமுறைப் படைப்பாளிகளையும் இந்தக் கவிதையென்ற இலக்கிய வடிவமே வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏனைய வகை இலக்கிய வடிவங்களை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேர காலங்களிலும் பார்க்க ஒப்பீட்டளவில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு குறுகிய நேர காலத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதே அதற்கான காரணமாகவும் இருக்கலாம்.

நிசாந்தம் கவிதைத் தொகுதி 30 கவிதைகளை உள்ளடக்கியதாக அக்கினிச் சிறகுகள் அமைப்பினரின் கை வண்ணத்தினால் வடிவமைக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலின் அட்டைப் படம் கவிதை வாசகர்களைக் கவர்வதாக அமைந்து கவிதை நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. நூலாசிரியர் பற்றிய சிறப்பானதொரு அறிமுகத்தை பின்னட்டையில் நூலாசிரியரின் ஆசிரியையான மக்கொனை, இந்திரிலிகொடயைச் சேர்ந்த திருமதி. ஏ.ஏ.என். ஸனீயா சிறப்பாக முன்வைத்துள்ளார். இந்த அறிமுகத்தில் நூலாசிரியருக்கும் கவிதைக்கும் உள்ள ஈடுபாட்டை தான் பாடசாலையில் கற்பிக்கும் காலத்திலிருந்தே கண்டுகொண்டதாகச் சொல்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமான கவிதை, கருத்து வெளிப்பாட்டுக்கான ஒரு முக்கிய ஊடகமாக எல்லாக் காலப் பிரிவுகளிலும் செயல்பட்டு வந்துள்ளது. கருத்துக்கள் கவிதையில் உருப்பெறும் போது அது மக்களின் உள்ளங்களில் உணர்ச்சியும் உயிரோட்டமும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு சாதனமாகக் கவிதைகளைக் கையாண்டுள்ளனர் என்று அவரது அறிமுகக் குறிப்பில் கவிதைக்கான முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான ஆசியுரையை முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் மிகவும் சுருக்கமாக வழங்கியுள்ளார். அத்துடன் கலாநிதி ஏ. அஸ்வர் அஸாஹீம் அவர்களும் ஆசியுரையொன்றை வழங்கியுள்ளார். நூலாசிரியர் எண்ணும் எழுத்தும் அறிமுகப்படுத்திய தன் தந்தைக்கும் தனது தாயாருக்குமே இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். 

நூலாசிரியர் தனதுரையில் "சிறுவயது முதல் என்னில் காணப்படும் எழுத்தாற்றல் மூலம் பாடசாலைக் காலப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து, பல வெற்றிகளைச் சுவீகரித்துக் கொண்டதோடு பத்திரிகை, வானொலி மற்றும் இணையம் ஊடாகவும் எழுத்துக்களுடன் சஞ்சரித்திருந்தாலும் கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற என்னுடைய நீண்ட பெருங்கனவு இன்று நனவாகக் கண்டதில் அகம் மகிழ்வடைகிறேன்" என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றார்.

இந்தக் கவிதை நூலில் நாம் இலங்கையர், இஸ்லாம் போற்றும் பெண்மை, ஆசிரியர் தினம், எது கவிதை, நிகற்பட ஆட்டம், காண்போம் புதிய உலகம், முள்ளோடுதான் ரோஜா, வேண்டாம் கொரோனா, மாறுவோம் மாற்றுவோம், மனிதா அது போதும், உயிர் பிரியும் அந்த நொடி, உயிரெழுத்துக் கவி, புத்தகங்களை காதல் கொள், தேடல், வாழ்க்கைப் படிகள், இளமையில் வறுமை, யார் அழகு, வியாபாரமா, கையர், செய்ந்நன்றி, வாழ்க்கைப் பாடம், தமிழ், செகத்திலே நிலவாய், வா..தோழா..வா.., அன்பினால், விரைவுணவும் விபரீதமும், அன்பு எதனாலானது, நீயும் ஜெயம் பெறுவாய், மனித உலகம் தவிக்கிறது, ஆதலால் தாமதம் வேண்டாம் ஆகிய தலைப்புக்களில் நூலூசிரியர் கவிதைகளை எழுதியுள்ளார். இந்தக் கவிதைகளில் இரசனைக்காகச் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

காணும் காட்சிகள் யாவற்றையும் கவிஞரின் மனக்கண் படம் பிடித்துவிடுகின்றது. பின்னர் அது கவிதையாக உருப்பெறுகிறது. இயற்கையாகக் காணக் கிடைக்கின்ற அத்தனை அழகுகளையும் இதுதான் கவிதையோ என எண்ணுகிறார் கவிஞர். பின்பு இவற்றையெல்லாம்விட குழந்தையின் குறும்புகளே கவிதையெனக் கூறி நிற்கின்றார். பக்கம் 11 இல் இடம்பிடித்துள்ள எது கவிதை? என்ற கவிதையின் அழகான சில வரிகள் இதோ:-


மலர்ப்பொழில் எழிலினில் 

என்னை மறந்தேன்.. 

மலர்களே கவிதையென 

நான் இருந்தேன்..


காற்றின் தழுவலில்

எனை மறந்தேன்..

காற்றுதான் கவிதையென 

நான் இருந்தேன்..


வானில் பல நிறம் பார்த்து 

என்னை மறந்தேன்..

வானமே கவிதையென 

நான் இருந்தேன்..


குழந்தையின் அழைப்பினில் இவை

அத்தனையும் மறந்தேன்..

குழந்தையே கவிதையென 

நான் உணர்ந்தேன்..


மனிதம் படிப்படியாக அருகிக்கொண்டு வருகின்ற இக்கால கட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் சிறந்த பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வைக்கிறது பக்கம் 13 இல் அமைந்துள்ள காண்போம் புதிய உலகம் என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை. இக்கவிதை மூலம் நம்மிடம் இருக்கின்ற எத்தனை சிறந்த இயல்புகளை நாம் இழந்து நிற்கின்றோம் என்ற ஆழமான வலியையும் ஊடுருவ வைக்கின்றது கவிஞரின் பின்வரும் வரிகள்..


பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் 

நல்லுள்ளங்களுடன் இணைவோம் 

நம் வாழ்வு சிறக்கும்..


வஞ்சனை செய்வோருக்கும் 

வந்தனம் செய்வோம் 

பசிக்கின்ற வயிற்றுக்கு 

பட்சணம் கொடுப்போம்..


அயல்வீட்டாரை 

அன்போடு பார்ப்போம்..

உறவினருடன் 

ஒத்தாசையாய் இருப்போம்..


பெண்ணியம் என்பது யாது என்று பலரும் கேட்கும் கேள்விக்கு பக்கம் 14 இல் அமைந்துள்ள முள்ளோடுதான் ரோஜா என்ற கவிதையின் வரிகள் மிக அழகான பதிலாக அமைந்திருக்கிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப கலிகாலத்தில் கால் வைத்து நொந்து போவதல்ல பெண்ணியம். மாறாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கீழுள்ள கவிதை வரிகள்; மூலம் கவிஞர் மிகவும் அருமையாகக் கூறிச் செல்கின்றார்.


வட்டத்துக்குள் வாழ்வதால் - நீ 

கிணற்றுத் தவளையாகிட முடியாது 

அந்த வட்டம்தான் - உனை

பல வாட்டங்களில் இருந்து 

காக்கும் காவலரண்.. 


நாணம் உனக்கு 

வேலியாக வேண்டும்.. 

நாணயம் உனக்கு 

தோழியாக வேண்டும்..

இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது 

இன்பங்கள் இல்லை 

இனியோர் சொல் கேட்டொழுகுதல் 

இன்பத்தின் எல்லை..


பக்கம் 20 இல் அமைந்துள்ள புத்தகங்களைக் காதல் கொள் என்ற கவிதையானது புத்தகங்களோடு வாழும் இன்பத்தை இயம்பி நிற்கின்றது. தனிமையில் சிறந்த துணையாகவும் மனசு கணத்த பொழுதுகளில் தாய் மடியாகவும் எமைத் தாங்கும் நூல்கள் இருள் சூழ்ந்த இரவுகளைக் கூட விளக்காக மாறி ஜொலிக்க வைக்கும் என்கிறார் கவிஞர்.


புத்துலகம் உன் வசமாகும்.

இத்தலத்தில் 

இனிமைகள் கரம் சேரும்..

உதயம் உன் மன வானில் 

காட்சியாகும்..

இதயம் தினம் புதுமைகளுக்கு 

சாட்சியாகும்..

புத்தகங்களைக் காதல் கொள்..


நினைவுகளில் எல்லாம் 

கார்கால மழை தூறும்..

கனவிலும் கவிதைகள் 

ஊர்கோலம் போக வரும் 

புத்தகங்களைக் காதல் கொள்..


மனசு கனத்த பொழுதுகளில்

தாய் மடியாய் மகிழ்விக்கும்..

புதுசு புதுசாய் எண்ணங்களை

சேய் போல ஒப்புவிக்கும்

புத்தகங்களைக் காதல் கொள்..


இவ்வாறு தனது கன்னிக் கவிதைத் தொகுதி மூலம் கவிதை வாசகர்களுக்கு விழிப்புணர்வுக் கவிதைகள், நாட்டுப் பற்று மற்றும் தமிழ்ப் பற்றுடன் கூடிய கவிதைகள், ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் போன்றவற்றை வழங்கி, விருந்து படைத்த கவிஞர் பர்ஹானா அப்துல்லாஹ் பாராட்டுக்குரியவர். எதிர்காலத்தில் மேலும் பல காத்திரமான கவிதை நூல்களை கவிதைப் பிரியர்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல் - நிசாந்தம்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்

வெளியீடு - அக்கினிச் சிறகுகள்




வெலிகம ரிம்ஸா முஹம்மத்