Wednesday, June 20, 2012

28. உணர்வூட்டும் முத்துக்கள் - கவிதைத் தொகுதி

உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு




உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 20 வயதிலிருந்தே கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசித்தவர். பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக கடமை புரியும் இவர், வை.எம்.எம்.ஏ, ஆர்.டீ.எஸ், இளைஞர் சேவைகள் மன்றம், சர்வோதயம் போன்றவற்றிற்கு தலைவராகவும், ஜாவா ஜும்மா மஸ்ஜித், ஸஹீஹுல் முஸ்லிம் சங்கம், வாசகர் வட்டம், போன்றவற்றுக்கு செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய இவர் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அந்த ஒன்பது படைப்புக்களுள் ஒன்றுதான் இந்த உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதி. சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமிய, நாட்டார் பாடல்கள், மாண்புறும் மாநபி ஸலவாத்து புகழ் பாடல், கிண்ணிய முஸ்லீம்களின் கல்விக் கண் திறந்த காசிநாதர், சிறுவர் பாடல் இறுவட்டு, கிராமியக் கவி இறுவட்டு போன்றவை இவரது ஏனைய படைப்புக்களாகும்.

உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியானது 83 பக்கங்களில் சிறியதும், பெரியதுமான 73 கவிதைகளை உள்ளடக்கி பாத்திமா ருஷ்தா பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ளது. ஸலவாத்து, ஈமான், ஆட்சிகள் அமைந்திட வழிகள் செய்திடுவோம், இளைஞர் தலைமைத்துவம், மகிழுவோம், உத்தம நபி, தலை குனிந்து போற்றுவோம், அருள் தந்த நபி, அனைத்தும் அறிந்தவன் போன்ற ஆண்மீகம் சார்ந்த பல கவிதைகளையும், மங்கை உன்னை அடைந்திடுவேன், புறந்தள்ளிப் போட்டிடுவேன், ஏக்கம் நீங்கிட, தாங்க மாட்டாய், தவிக்கின்றாய், எகிறிடும் நெஞ்சம், அழித்துவிட நினையாதே, பொழிவாய், நந்தவனம், ஒளி பரவும், தவிப்பு, தாகம், குடும்பத்தைத் தாங்கி நின்றாய், தெவிட்டாத இன்பங்கள், தேன் கொண்ட மங்கை, வந்திடுவாய் போன்ற அகம் சார்ந்த பல கவிதைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுதி வெளிவந்திருக்கிறது.

மனிதநேயம் என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் மருவி மக்கள் காழ்ப்புணர்ச்சியோடும், நயவஞ்சக உள்ளத்தோடும் பழகுகின்றனர். வார்த்தைகளினால் அடுத்தவர் மனதை வதைத்து அதில் இன்பம் காணும் இழிகுணம் படைத்தவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். தன்னைவிட எவரும் நல்ல வசதியுடன் வாழக்கூடாது அல்லது எல்லோரையும் விட நானே உயர்ந்தவன் என்ற அகம்பாவத்தில் பலர் காணப்படுகின்றனர். அடுத்தவர் மகிழ்ச்சியாயிருப்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகின்ற பல வஞ்சக நெஞ்சங்கள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் பற்றி நேர்மையில்லா மானிடம் என்ற கவிதையில் (பக்கம் 08) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வஞ்சனை செய்து
வசை பாடும்
மகிழ்வு
மிஞ்சுகின்ற
காலம்
மிகைத்துப்
போகும் கோலம்..

நெஞ்சில்
வார்த்தை
ஆயுதங்கள்
பாயும்
நஞ்சுப் பகைகள்
பரவி
உடலேறும்
நய வஞ்சக
முக மலரும்..

மனிதர்கள் மதிக்கப்படாத இந்தக் காலத்தில் காலுக்குப் போடும் செருப்பையா யாரும் மதிக்கப் போகின்றார்கள்? மதிப்பு என்ற கவிதையினூடாக செருப்பின் பரிதாபகரமான நிலையைப் பற்றி மாத்திரம் கவிஞர் குறிப்பிடவில்லை. அதனூடாக இன்னொரு தத்துவத்தையும் கூறுகிறார். அதாவது காலம் செல்லச்செல்ல அனைத்து விடயங்களுமே மதிப்பற்றப் போகும் என்பதுதான். (பக்கம் 25)

காலுக்கு இதமளித்து
தினந் தினம்
அழுக்கைத் தள்ளிவிடும்
செருப்பு
ஈற்றில் காலாலேயே
உதைத்து தள்ளப்படுகிறது.

நாட்டார் பாடலாக புனையப்பட்டிருக்கும் சில கவிதைகள் மனதில் ரம்மியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. வாசிக்கும் போது கிராமிய மணம் கமழ்கின்றது. வந்திடுவாய்; என்ற கவிதையில் (பக்கம் 70) அதை தரசிக்கலாம்.

சேனைக்குப் போகையிலே
சிவந்த புள்ள நெத்தியிலே
முத்தமிட்டுப் போன மச்சான்
முழு ராவும் தூக்கமில்ல

யானைக்குப் பயந்து நான்
சூர மரம் ஏறிவிட்டேன்
தானாக கீழிறங்கி
வீடு வர முடியவில்லை.

இவ்வாறான பல்வேறு கருப் பொருட்களுடன் உள்ளடங்கிய பல அழகிய கவிதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு பல புத்தங்களைத் தந்துள்ள நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உணர்வூட்டும் முத்துக்கள்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042
விலை – 175 ரூபாய்

27. புதிய இலைகளால் ஆதல் - கவிதைத் தொகுதி

புதிய இலைகளால் ஆதல் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார்.

உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.

கலியுகமல்ல என்ற கவிதை போர்க்காலத்தின் கோர நிலையை படம்; பிடித்துக்காட்டும் கவிதையாகும். (பக்கம் 31) கோயில் திருவிழாக்களின்போது பல கடைகள் முளைத்துவிடும். பல்வேறுவிதமான விளையாட்டுப் பொருட்கள், தீன் பண்டங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். அத்தகையதொரு நிகழ்வினிலே விளையாட்டுத் துப்பாக்கி கேட்டு அழும் பிள்ளையின் அடம்பிடிப்பினால் தவித்து எதிர்காலம் பற்றி மிரட்சியுற்றிருக்கும் ஒரு தாயின் புலம்பலிவை.

எங்கள் தெருக்களில் தோளில் துவக்கும் கையில் டோச்சும் கொண்டு இரவு பகலாய் அலையும் மனிதர்களையும் நட்ட நடு இரவில் அமைதியை அதிர்க்கும் வேட்டுச் சத்தங்களையும் வானிலிருந்து அதிர்ந்து விழும் நெருப்புத் துண்டங்களையும் வீட்டிற்குள் மூச்சுவிடவே பயந்து ஒதுங்கும் எம்மையும் கண்டுவிட்ட எம் குழந்தைகள் இப்போதெல்லாம் விளையாட்டுத் துவக்குகள் கேட்டு துளைத்தெடுப்பது அதிகமாகிவிட்டது. எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக் குறிகளில் என் பொழுதுகள் அமைதியின்றியே கழிகின்றன.

ஒரு குழந்தையின் மன உணர்வுகளாக எழுதப்பட்டிருக்கும் காற்றில் விடு என்ற கவிதை (பக்கம் 48) போலியான உலகம் பற்றியும், அதில் வாழும் ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றியும் விளக்குகிறது. அத்தகைய பேர்வழிகளை இனங்காண போலிகளை கற்றுத்தரச்சொல்லி கேட்டு நிற்கிறது குழந்தை. யதார்த்த உலகம் பற்றி சொல்லித் தரும்படியும், கற்பனை வர்ணனைகளை விட்டுத்தள்ளும் படியும் இறைஞ்சுகிறது அந்த மழலை மனம். அந்த வரிகள் பின்வருமாறு அமைகின்றது.

அம்மா எனக்குத் தொட்டில் வேண்டாம். தொட்டில் சட்டங்கள் என்னைக் குறுக்கிப் பார்க்கின்றன. ... உன் விருப்பப்படி நறுக்கிவிடாதே என் சிறகுகளை. அன்பிருந்தால் உலகம் பற்றிச் சொல். போலி எது? பொய் எது? ஏமாற்றுவது எப்படி? கற்றுக் கொடு. நிஜங்களைக் காணவும் ஏமாறாதிருக்கவும்.

நாணலாய் நான் என்ற கவிதை (பக்கம் 63) காதலை உணர்த்துகிறது.  உண்மையாக காதலிப்பவர்களின் இதயம் மென்மையாக இருக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய மனம் படைத்த தலைவனைப் பார்த்து கீழுள்ளவாறு கூறுகிறாள் தலைவி.

பூக்கள் பூக்கும் போது
பூக்களுக்கு வலிக்கும் என்றோ
தென்றல் வீசும் போது
எதிலாவது மோதி
நொந்து போகும் என்றோ
யாருமே கவலைப்பட்டதில்லை
உன்னைத்தவிர...

...............................
எல்லாமும் முழுமையாய்
நான் எனும் நாணல்
இன்று
நீ எனும் விருட்சத்தினடியில்

உன் மார்ச் சூட்டில் நான் அடை கிடப்பேன் என்ற கவிதை காதல் ரசம் ததும்பியதாக காணப்படுகின்றது. (பக்கம் 79)  பிரியத்தைப் போராடி புரிய வைக்கத் தேவையில்லை, மூச்சிரைத்து தழுவத் தேவையில்லை என அழகாக தொடங்கும் கவிதையின் இன்னும் சில வரிகள் இவ்வாறு அமைகின்றது.

பொருட்களாய் வாங்கி
வெறும் உயிரற்றவைகளை
என் முன் கிடத்துதலும் வேண்டாம்.
உன் இருப்புவிட்டு
என் காலடியே கதியென
வீழ்ந்திருக்கவும் வேண்டாம்.

அன்பே விடுதலையாய்
உனை நீ உணரும் பொழுதுகளில் மாத்திரம்
உன் மடியில் சிறிது எனை வளர்த்து..
தலை கோது.. விரல்கள் பிணை..
பின் கொஞ்சம் கண்ணயர்வேன் விடு.

டிசம்பர் 2004, 26ம் நாள் என்ற கவிதை (பக்கம் 93) சுனாமியின் தாக்கம் பற்றி இயம்பி நிற்கின்றது. சரித்திரத்தின் துயர் பக்கங்களை நிரப்பிப் போன சுனாமி மக்கள் மனதில் எத்தகைய துன்ப அலைகளை ஏற்படுத்தியது என்பது யாவருமறிந்ததே. நீலமாய், அழகாய் காட்சியளித்த கடல், திடீரென அரக்கனாய் மாறி மக்களைக் காவு கொண்டது. அதனால்

உன் இடம் விட்டு வானம் தொட
நீ முயல வானமே கடலாய் மாறியதோ?
உன் கடலில் மட்டுமல்ல
எங்கள் கண்கள் எங்கள் உள்ளங்கள்
எங்கள் கிணறுகளிலும்
இன்னமும் உப்புக் கரிக்கின்றது.. என்கிறார் கவிஞர்.

வாசகனைக் கட்டிப் போடுவதாய் அமையும் அகம் சார்ந்த கவிதைகள் பலவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளன. காத்திரமான கவிதைத் தொகுதியொன்றைத் தந்த நூலாசிரியர் மலராவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - புதிய இலைகளால் ஆதல்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - மலரா (புஷ்பலதா லோகநாதன்)
மின்னஞ்சல் - lpushpalatha@yahoo.com
விலை - 200 ரூபாய்

26. குருதி தோய்ந்த காலம் - கவிதைத் தொகுதி

குருதி தோய்ந்த காலம் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

யூ.எல். ஆதம்பாவா எழுதிய குருதி தோய்ந்த காலம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி மெற்றோ பொலிற்றன் கல்லூரியினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது இவரது ஐந்தாவது நூல் வெளியீடாகும்.

1999 இல் கலாபூஷணம் விருது பெற்றுள்ள இவர் ஏற்கனவே நாங்கள் மனித இனம் (1991 உருவகக் கதைத் தொகுதி), காணிக்கை (1997 சிறுகதைத் தொகுதி), சாணையோடு வந்தது (2007 சிறுகதைத் தொகுதி), பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் (2003 மர்கூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய இரங்கற் கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். 63 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 35 கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன.

மெற்றோ பொலிற்றன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தனது வெளியீட்டுரையில் படைப்பிலக்கியத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற மூத்த எழுத்தாளர் யூ.எல். ஆதம்பாவாவை கௌரவிக்கும் வகையிலே அவரின் இந்நூலை வெளிக்கொணர்கிறேன்.

இது இக்கல்லூரியின் தலைவர் என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியையும் மனநிறைவையும் தருகிறது. கலைத் துறையின் மேம்பாட்டிற்கு இவர் ஆற்றிய சேவைக்காக தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் கௌரவிப்புக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார் என்று குறிப்பிடுகிறார்.

யூ.எல். ஆதம்பாவா அவர்கள் வர்ணம் பூசாத வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் 1961 இல் நான் கவிதை எழுதுவதன் மூலம் படைப்பிலக்கியத் துறையில் பிரவேசித்தேன். என்றாலும் உருவகக் கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் நிறையவே எழுதியுள்ளேன். 1961 முதல் இன்றுவரை என்னால் படைக்கப்பட்ட கவிதைகளிலே பொறுக்கி எடுக்கப்பட்ட 35 கவிதைகளைக் கொண்டது இக் குருதி தோய்ந்த காலம் கவிதைத் தொகுதி என்கிறார்.

இயற்கையின் கொடைகளான தென்றல், தேன், நிலவு, முகில் போன்ற அம்சங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட முதற்கவிதையே மனதை சிலிர்க்கச் செய்துவிடுகின்றது. கவிஞர்கள் என்றாலே இயற்கையின் தூதுவர்களன்றே? அந்த வகையில் எழுதப்பட்ட உணர்வின் ஊற்று என்ற கவிதையின் (பக்கம் 11) சில வரிகளிதோ..

தென்றல் வந்து மலர் மருவி
தேனைச் சுவைத்து முத்தமிடும்
மன்றல் இனிய காட்சியிலே
மகிழ்ந்தே கவிதை யாக்கிடுவேன்

காயும் நிலவில் குளிரேற்றிக்
களி கொண்டாடும் முகிற் கூட்டம்
ஆயும் முத்தக் கனிச் சாற்றில்
ஆயிரம் கவிதை ஆக்கிடுவேன்...

குருதி தோய்ந்த காலம் என்ற கவிதை இலங்கையின் போர்க்காலத்தை ஞாபகமூட்டுகின்றது. மக்கள் அவதிப்பட்டும், அல்லல்பட்டும் கிடந்த துயரச்சுமைகள் எமது மண்ணில் நிகழ்நதமை சாபக்கேடான விடயம். அத்தகையதொரு காலம் இனி வரவே கூடாது. (பக்கம் 14) சமாதானம் தொலைந்து போய் அதற்காக ஏங்கித் தவித்த அந்தக் காலங்களை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறார் கவிஞர் பின்வருமாறு.

உயிரைக் கைக்குள் பொத்திக் கொண்டே
கோழிக் குஞ்சாய் ஓடி ஒழிந்தது போதும்! போதும்!
எங்கே அந்தச் சமாதானம்?
அது இமயத்திலிருந்தாலும் எடுத்து வருவோம்!

குருதி தோய்ந்த அந்தக் காலம்
நம் கனவிலும் இனி வரவே வேண்டாம்!
புரிந்துணர்வும் மனதாபிமானமும் பூண்டு
பூரண சமாதான பூமியைக் காண்போம்!

திறமையுள்ளவனுக்கு களம் கிடைப்பது திண்ணம். அதற்கு பாடுபட வேண்டியதில்லை. என்றாலும் கூட இன்றைய காலம் பல அலுவல்களும் பரிந்துரையின் பெயராலேயே நிச்சயிக்கப்படுகின்றன. அத்தகைய கருத்தை முன்னிருத்தி கவிஞர் சவர்க்காரக் குமிழி என்ற கவிதையை யாத்திருக்கிறாரா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. (பக்கம் 17) இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

நான் பாட மன்னர் அரங்கு தேவையில்லை. பொதுஜன அரங்கே போதுமானது. மன்னர் அரங்கில் இசைப்பதற்கு சிலர் ஆலாய்ப் பறக்கிறார்கள். அரிய பிரயத்தனமும் செய்கிறார்கள். மன்னர் அரங்கால் வருகின்ற பெருமை பப்பாசிக் குழலில் ஊதிவிடும் சவர்க்காரக் குமிழி போன்றதே. எனது பாடல்களால் பேசப்படுவதையே நான் விரும்புகின்றேன். நான் பாட மன்னர் அரங்கு தேவையில்லை.

முயற்சி என்பது மனிதனின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் சாதனம். அந்த முயற்சி இல்லை என்றால் அன்றாட கருமங்களிலிருந்து எதிர்கால இலட்சியங்கள் கூட கருகிப் போய்விடும். கடமையை சரியாக செய்தாலேயன்றி உரிமையைத் தட்டிக்கேட்டக எவராலும் இயலாதல்லவா? தைரியத்தை ஏற்படுத்தி துணிச்சல் கொள்ளக்கூடிய வரிகள் எழுக என்ற கவிதையில் (பக்கம் 21) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தூங்கிக் கிடக்காதே தோழா!
இன்றே துள்ளியெழுந்திடுவாயே!
ஓங்கிக் கிடக்குதே கடமை.
இன்னும் உறங்கிக் கிடப்பதோ மடமை.
முன்னோரின் பெருமையில் மூழ்கி
இருளில் முடங்கிக் கிடப்பது முறையோ?
முன்னேற்ற ஒளியெங்கும் பரவ
இன்றே முயன்று உழைத்திட எழுக.

ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் தமக்கிடயில் பேதமை பட்டுத்திரிவதில்லை. ஆறரிவு கொண்ட மனிதன்தான் பகுத்துப் பார்த்து சண்டை போடுகிறான். குண்டு வைத்தும், சுட்டுச் செத்தும் அழிந்து போனோர் பற்றி உலக வரலாறுகளில் பலரைச் சொல்லலாம், அனைவரும் அன்புடனும், அனுசரணையுடனும் நடந்து கொண்டால் பூமிப் பந்து எத்தனை மகிழ்ச்சியாக சுத்தும்? வேதங்கள் கூட சகோதரத்துவத்தை, ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன. அவற்றை வைத்து எழுதப்பட்டதுதான் பேதங்கள் மறப்போம் என்ற கவிதை (பக்கம் 49)

குண்டு வைத்தும் சுட்டும் நம்மையே கொன்று அழிக்கின்றோம். விலங்குகளுக்குள்ளும் இப்படி விரோதங்களில்லையே. வேதங்கள் யாவும் ஒன்றாய் வாழவே ஓதுகின்றன. பேதங்கள் மறப்போம். ஒரு தாயின் பிள்ளைகளாய் நடப்போம்.

காதல், சமாதானம், அன்னையின் பெருமை, கருணை நபி (ஸல்) அவர்களின் பெருமை, ஆசான், தமிழ் மீது  கொண்ட பற்று, உழைப்பு, இன ஒற்றுமை, தந்தையின் பெருமை, சுனாமி, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு கருப் பொருட்களும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பவள விழாக் கண்ட எழுத்தாளர் தெளிவத்தை, கொத்தன் எனும் பேராறு, மாமனிதர் அஷ்ரப் மறைந்தார், டாக்டர் எம். முருகேசப்பிள்ளை போன்ற தனிமனிதர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காத்திரமான பல படைப்புக்களைத் தந்த நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - குருதி தோய்ந்த காலம்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா
வெளியீடு - மெற்றோ பொலிற்றன் கல்லூரி
விலை – 200 ரூபாய்

25. இந்த நிலம் எனது - கவிதைத் தொகுதி

 இந்த நிலம் எனது கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுவது என்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமன்னு. அதற்கு பாரியதொரு அறிவு இருக்க வேண்டும். அந்த வகையில் துணிச்சலாக இந்த நிலம் எனது என்ற காத்திரமானதொரு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியை கெக்கிறாவயிலிருந்து திருமதி. ஸுலைஹா அவர்கள் வெளியீடு செய்திருக்கிறார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசியரான கெக்கிறாவ ஸுலைஹா தற்போது மரதன்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றுகிறார். ஆங்கிலத்தைத் தேடிப் படிப்பதில் தணியாத தாகம் கொண்டவர்.

இவர் ஏற்கனவே 2009 இல் பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் - மொழி பெயர்ப்புக் கவிதைகள் (2009 சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது), 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு - மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் (2010 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்), 2012 வானம்பாடியும் ரோஜாவும் - மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் ஆகிய மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பெண் படைப்பாளியான கெக்கிறாவ ஸஹானாவின் சகோதரியே இந்த நூலாசிரியர்.

ஜீவநதியின் 14 ஆவது வெளியீடாக மொத்தம் 79 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதி  வேடிக்கையும் விநோதமும், அழகும் ஆர்ப்பரிப்பும், வாழ்வும் கனவும், காதலும் தவிப்பும், போரும் பிரிவும், மரணமும் தனிமையின் வலியும் ஆகிய 06 தலைப்புக்களில் 51 கவிதைகளை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாமல் கலீல் ஜிப்ரான், நொபேட் புரொஸ்ட், எமிலி டிகின்ஸன், ஜோன் டொன், வில்லியம் பிளேக், ஆதர் வலேய், ஜேம்ஸ் ஸ்டீபன், கமலா தாஸ், ஜேம்ஸ் கிர்கப் போன்ற சர்வதேசக் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது தொகுதியின் காத்திரத் தன்மையை மென்மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

நூலாசியர் இந்த நூலை பிரபல எழுத்தாளர் திக்வல்லை கமாலுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். ஒருவகையில் தனிமனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை. சுதந்திரத்தின் மீதான தீவிர வேட்கை, எதிலும் உண்மையைத் தேடல், இயற்கையின் அழகில் தரிசிக்கும் உயிருள்ள நம்பிக்கை, தாய்மையினது மென்னுணர்ச்சி, கரையற்ற காதலின் வாஞ்சை, கனவுகளின் சுகந்தம், கண்ணீர் குலைத்த வாழ்வின் அமைதி, விடியலை வேண்டும் பிரார்த்திப்புகள். மரணத்தின் எவரும் மறுக்க முடியா ஆற்றல், மனித வாழ்வை வாட்டும் பிணிகள், இன்ன பிறவெல்லாம் மொழிவேறாயினும் நமக்குப் போலவேதான் மற்றவர்க்கும் என்பதனை, இந்தக் கவிதைகளைப் படித்துணர்ந்து தெரிந்து கொண்டுள்ளேன். மன ஆழத்தே எழுதியவர் அனுபவித்த உணர்வை வாசிக்க வாசிக்க அவர் மீதான மதிப்பும், மரியாதையும் பல்கிப் பெருகி, அவை நெஞ்சில் ஒலித்துக் கொண்டேயிருக்க, அவர்தம் எழுத்துக்கு கௌரவம் கொடுக்க விரும்பினேன் என்று நூலாசிரியர் தனதுரையில் மனந்திறக்கிறார்.

ஆங்கிலத்தை அதிகம் படிக்கிறேன் என்று கர்வக் கிரீடம் சூட்டித் தற்செருக்கு காட்டுகிறேன் என்பதெல்லாம் இல்லை சத்தியமாக என்கிற நூலாசிரியரின் தன்னடக்கத்தை மெச்சி கவிதைகளுக்குள் நுழையலாம் என்று நினைக்கிறேன்.

கலாச்சாரம் நாளுக்கு நாள் மாறுபடுகின்றது. நாகரீகம் வளருவதாய் எண்ணிக்கொண்டு கலாச்சாரம் சீரழிந்து போகிறது. இது மேற்கத்தைய உலகில் படுவேகமாக பரவி வரும் ஒரு விடயம். அந்தக் கலாச்சாரம் பற்றி அதே சமூகத்தின் கவிஞனொருவனே கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பது வரவேற்கக்கூடிய விடயமே. வளர்ச்சி என்ற கவிதை (பக்கம் 01)

எலிசபெத் ஆன் வளர்கிறாள் உயரமாக.. தனது உயரத்தை அவள் அளக்கிறாள் தோட்டத்துச் சுவரினிலே.. சென்ற வாரம் அவள் ரோஜாச் செடியினது அளவை அடைந்திருந்தாள்.. இப்போதோ இரு செங்கல்கள் அளவு  உயர்ந்திருப்பதாய் அவள் சொல்கிறாள். என்றாலும் வியப்பாய் இருக்கிறது சொல்லுவதற்கு.. அவள் ஆடைகள் எல்லாமும் உயருவதற்குப் பதிலாய்க் குட்டையாகியே வளர்கிறது.

சின்ன மழைத்துளிகள் (பக்கம் 07) என்ற கவிதை சின்ன மழைத்துளியுடன் விளையாட ஆசைப்படும் சுட்டிப் பையனொருவனின் ஆதங்கத்தைப் பேசுவதாய் அமைந்துவிடுகிறது.  அவனை வெளியே விடுகிறார்களில்லை. பந்தைத் தருகிறார்களில்லை. ஏனெனில் விளையாட்டுச் சாமான்களை அவன் உடத்துவிடுகிறான். அந்த கவலைகளை சிறுவன் மழையிடம் பகிர்ந்துகொள்கிறான்.

காதலும் தவிப்பும் என்ற தலைப்புக்குள் வரும் நீ தன்னந்தனியே இருந்தால், இனிமையான நேஸமே உனைவிட்டுப் போகேன் ஆகிய கவிதைகள்; மிகவும் ரசிக்கத்தக்கன. காதலிப்பவர்களின் வார்த்தைகள் உருக்கமானவை. அன்பு கொப்பளிப்பவை. அவர்கள் சொல்வதெல்லாம் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதே. அந்தப்பாணியிலான தன்னந்தனியே இருந்தால் (பக்கம் 51) என்ற கவிதையின் சில வரிகள் கீழே..

நீ களைப்புற்றுச் சோர்ந்து தன்னந் தனியே இருந்தால் உனதண்டை நான் வருவேன். ஆறுதலாய்ப் பேசியபடியிருக்க உனக்கு எவறேனும் தேவைப்பட்டால் அங்கே நான் உனதருகே வந்திடுவேன். நண்பர் கூட்டம் உனைக் கைவிட்டு விட்டால் உன் பக்கத்தே நான் வந்திருப்பேன். எங்கேயேனும் போய்வர உன்னிதயம் ஏங்கிற்றென்றால் என் வாசற் கதவு அகலத் திறந்திருக்கும் உனக்காய். குளிர்கொண்டு நீ நடுங்கினாயானால் ஓடியே வந்து உன்னருகே கதகதப்பூட்டும் சுவாலை மூட்டுவேன். துயருற்றுச் சோர்ந்து நீ துவண்டு போவாயானால் உன்னை மேலுயர்த்தித் தூக்கி நிறுத்திட ஓடோடி நான் வருவேன்..

இனிமையான நேஸமே உனைவிட்டுப் போகேன் (பக்கம் 56) என்ற கவிதை துணையை விட்டுப்பிரிந்த ஆத்மாவின் ராகமாகும். வெறுத்தோ, கோபத்திலோ உன்னை விட்டுப் போகவில்லை என்று ஒலிக்கும் குரலில் அதீத அன்பு இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. என்றேனும் உனக்கு முதல் நான் மரணித்தால் அதை நீ தாங்க வேண்டும். அதற்கான பயிற்சியிது என்று பின்வருமாறு சொல்லப்படுகின்றது.

இனிமையான நேஸமே உனதான நேஸத்தில் சலிப்புற்றோ, உன்னைவிடச் சிறந்ததொரு நேஸம் வாய்க்குமென நம்பியோ நான் உனைவிட்டுப் போகவில்லை. என்றேனும் ஒரு நாள் நான் உனைவிட்டு மரணித்துப் போகலாம். அந்த நிரந்தரப் பிரிவை தாங்கிடும் வல்லமையை முன்கூட்டியே எனக்கு தந்திடக் கருதி, இந்தத் தற்காலிக மரணத்தை உனக்கு வழங்கிட எண்ணினேன்.

இப்படிப் பல கவிதைகளையும் நாமும் ரசிக்கக் கூடியதாக மொழி பெயர்த்துத் தந்திருக்கும் ஸுலைஹா அவர்கள் பாராட்டுக்குரியவர். இந்தக் கவிதைகளைப் படித்து பயன்பெற வேண்டியது எங்கள் அனைவரினதும் கடமை. இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களை நூலாசிரியரிமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை நூலாசிரியரின் சுய படைப்புக்களையும் வெளிக்கொணர வேண்டும் என அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்!!!

நூலின் பெயர் - இந்த நிலம் எனது
நூலின் வகை - மொழி பெயர்ப்புக் கவிதைகள்
நூலாசிரியர் - கெக்கிறாவ ஸுலைஹா
வெளியீடு - ஜீவநதி வெளியீடு
மின்னஞ்சல் - kekirawasulaiha@gmail.com
விலை - 220/=

24. தற்கொலைக் குறிப்பு - கவிதைத் தொகுதி

தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார்.

பதிப்பாளர் உரையில் ஜாபர் ஷாதிக் அவர்கள் எத்தகைய வீரனும் வெள்ள முடியாத ஒன்றான மரணத்தின் கடைசி நுனிவரை சென்று யாரும் அனுபவித்துவிடாத ஒன்றை அனுபவித்திருப்பாரோ என்கிறளவு நினைக்க வைக்கிறது ஷிப்லியின் வரிகள் என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சேவியர் ஈழம், தமிழன் எனும் வார்த்தைகள் அரசியலுக்காக வெட்டப்படும் சதுரங்கக் காய்கள் எனும் நிலையில் தமிழக (இந்தியா) வீதிகள் வியூகங்கள் வகுத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வீதியின் அறைகளில் இருந்துகொண்டு ஷிப்லியின் கவிதைப் பக்கங்களை புரட்டப் புரட்ட விரல்களின் நுனிகளிலும் உணர முடிகிறது வழியும் குருதியின் பிசுபிசுப்பை. துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை என்கிறார். அதே போல் ராஜகவி றாஹிலும் விழிகளில் குருதி வடிய வைக்கும் கவிதைகள் என்ற தனது கருத்தை துள்ளியமாக பதியவைத்துள்ளார். இதே பாணியிலான கருத்தை ஆணியடித்தாற் போல வெற்றி வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்களும் முன்வைத்துள்ளார்.

நூலாசிரியர் தனதுரையில் ஒரு காலம், தேசம் கொடூரத்தின் உச்சிக் கிளையில் தள்ளாடிய காலம். அது பற்றிய பதிவுகள் இன்னொரு தள்ளாடும் காலத்தை தவிர்க்க உதவும் என்பது என் அசையாத நம்பிக்கை. அந்த நாட்களில் அப்பாவி மக்கள் அல்லலுற்ற கணங்களையும் ஏக்கக் கனவுகளையும் பதிவுகளாக்கும் முயற்சியே இந்நூல். யுத்தம் குறித்தான பல்லாயிரம் கவிதைத் தொகுப்புக்களில் கடைசியாக வெளிவரும் நூலாகவே இந்நூலை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். இனி இப்படியொரு நூல் வராது. வரவும் கூடாது என்று பிரார்த்திக்கிறார்.

முதல் கவி என் ப்ரிய அன்னைக்கே என்ற கவிதையில் (பக்கம் 01) அன்னையின் பெருமைகளைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார்.

அவள் மரணத்தின் முகவரியை முத்தமிட்டுத் திரும்பிய போதே எனது முகவரி எனக்குக் கிடைத்தது. அவள் குருதியின் முகவரிகளே எனது சுவாசம். கருணையின் முகவரி அவள் கண்களில் உறைகிறது. பொறுமையின் முகவரி அவள் மௌனத்துள் நிறைகிறது.

தாயன்புக்கு ஈடானதொரு அன்பு உலகில் எவரிடமும் கிடைக்காது. ஆனால் அத்தகைய அன்பையும் உதாசீனப் படுத்தும் எத்தனைப் பேரை நாம் அறிந்திருகின்றோம். அன்னையின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாதது. அரைவாசியில் நிற்காதது.

யுத்தம் முடிவடைந்து போனாலும் அது விட்டுச் சென்ற ரணங்கள் ஆறப் போவதில்லை. ஊரிழந்து உறவினரிழந்து தாயிழந்து தந்தையிழந்து எத்தனைப் பேர் இன்றும் காணாதவர்களைத் தேடித் தவிக்கின்றனர்? உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் அன்றாடம் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்ந்த எத்தனைக் குடும்பங்கள் இன்று சுகமாகத் தூங்கவும் வழியின்றி தவிக்கின்றார்கள். அவர்களின் கண்ணீராக வந்து விழுகிறது யாரிடம் போய்ச் சொல்லி அழ என்ற கவிதை (பக்கம் 06)

கனவுகளைக் காணவில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
இடம்பெயர்ந்த நான் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை.

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன்பிறந்தோர் பலரிழந்தோம்

துப்பாக்கிகள் இரண்டுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் இக்கட்டானதொரு நிகழ்வை கண்முன் கொண்டு வருகிறது எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி என்ற கவிதை (பக்கம் 12)

எனக்கு முன்னால் துப்பாக்கி ஒன்று
நீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது..
...................
எனது பின் மண்டையை குறி பார்த்தபடி
இன்னொரு துப்பாக்கி

இரத்ததத்தின் நிறத்தில் எந்த மதமென்று அறிய முடிவதில்லை. கொலை செய்யப்பட்டவரின் இரத்தம், கற்பழிக்கபட்டவளின் இரத்தம், யுத்தத்தில் வழிந்த இரத்தம், அவள் இரத்தம், அவன் இரத்தம் என இரத்தத்துக்கு பேதமில்லை. இரத்த சாசனம் என்ற கவிதை (பக்கம் 24) பின்வருமாறு அமைகிறது.

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

கண்களில் வழியும்
இரத்தக் கண்ணீர் வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய்
எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது

போர்ச் சூழலில் இருந்து பல கவிதைகளால் நிரம்பி வழியும் இந்தக் கவிதை நூலை நீங்களும் வாசித்து உணருங்கள். காத்திரமான வெளியீடுகள் பலவற்றையும் தந்த நூலாசிரியர் நிந்தவூர் ஷிப்லிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தற்கொலைக் குறிப்பு
நூலின் வகை - கவிதைத் தொகுதி
வெளியீடு - பிளிண்ட் பதிப்பகம், இந்தியா
நூலாசிரியர் - நிந்தவூர் ஷிப்லி
முகவரி - இல. 50, ஹாஜியார் வீதி, நிந்தவூர் 18.
தொலைபேசி - 0716035903, 0772301539
விலை – 190 ரூபாய்

23. வியர்த்தொழுகும் மழைப்பொழுது - கவிதைத் தொகுதி

வியர்த்தொழுகும் மழைப்பொழுது கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

கிண்ணியா மண்ணில் தங்களது நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களான ஏ.ஏ.எம். அலி, கிண்ணியா நஸ்புல்லாஹ், ஜே. பிரோஸ்கான், ஏ.கே. முஜாராத், ஏ.ஏ. அமீர் அலி, பாயிஸா அலி, ஜெனிரா கைருள் அமான் போன்றோர்கள் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியினூடாக கவிஞர் எம்.சி. சபருள்ளாவும் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். முஹம்மது காஸிம் வெளியீட்டகத்தினூடாக, 110 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 46 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


நூலாசிரியர் இந்த நூலை காலா காலமாக அரசியலில் அநாதரவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருமலை மாவட்ட முஸ்லிம்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். வீடு செல்லும் வழியில் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தலைப்பிட்டு நூலாசிரியர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'வெயில்பட்டுத் தெரிக்கும் ஒரு கண்ணாடியில் விமரிசையாக வந்துவிழுகின்றன வார்த்தைகள். அதிகூடிய பிடிவாதத்துடன் கவிதையை உணர்வுகளின் விரல்கொண்டு தடவிக் கொடுக்கின்றேன். இப்படித்தான் கவிதையுடனான எனது கட்டில்பந்தம் பருவம் முளைவிடத் தொடங்கும்முன் ஆனால், அறிவு துளிர்விடத் தொடங்கிய காலத்தில் கால்கோளாகியது. முடிவிலியாகத் தொடரும் பயணம் இனி மரணத்துடன் தான் முற்றுப்பெறுமோ?' என்று ஆதங்கப்படுகின்றார்.

நூலாசிரியர் பற்றி கிண்ணியா ஏ. நஸ்புள்ளா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'சபருள்ளா ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர், சிறந்த மேடைப் பேச்சாளர், ஒரு பாடகர் என பன்முகத்தளத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். தவிரவும் தற்போது தீவிர மற்றும் மாற்று அரசியல் பற்றி சமூகத் தளத்தில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் கிண்ணியா சபருள்ளா இன்னுமோர் அஷ்ரப் எனும் ஆளுமை மீண்டும் வரலாம். ஆனால் அவர் ஒரு கவிஞராக இருப்பாரா என்று எழுகின்ற சமகாலத்து ஆதங்கங்களுக்கு மத்தியில் இவர் நம்பிக்கையூட்டுகிறார்.

மேலும் இந்நூலில் உள்ள கவிதைகள் குறித்து அத்தனை கவிதைகளும் முஸ்லிம் தேசத்தின் ஆவணக் காப்பகம். கடந்து சென்ற போர்க் சூழலின் கருணையற்ற காட்சிப்படுத்தல், கற்பனையின் ஒப்பனையிலிருந்து விடுபட்டு காலத்தின் கொடுமைகளை அப்பாவிச் சமூகஙகள் எல்லா திசைகளிலிருந்தும் எதிர்கொண்ட வரலாற்றின் அதர்மத்தை எரித்திருக்கிறார். சத்தியம் உரைக்கும் அவரது கவிதைகள் அடுத்துவரும் பரம்பரைக்கும் முன்னோரின் துயரத்தை முதுசமாக சுமந்து செல்லும்' என்று குறிப்பிடுகிறார்.

பால்ய காலத்தில் தந்திரமாகத் திரியும் ஏழைச் சிறார்கள் வறுமையின் கொடுமையை உணரும் தருணத்தை வாசிக்கும்போதே படம்பிடித்துக்காட்டுகிறது முறை தவறிய நியாயம் என்ற கவிதை (பக்கம் 50). வறுமையை உணரும் மனிதநேயக் கவிதை இது.

சகதிக்குள் புரண்டு சொர்க்கிக்கும்
சேரிப்புறத்து சிறுசுகளின் சின்ன மனசுக்கு
காலத்தின் கொடுமை
கட்டாயம் தெரியவரும் ஒரு நாளில்..
முழுசாய் உசிரை விழுங்கி ஏப்பமிட்ட
முதலைகளின் இரைப்பையில்
ஒரு இனத்தின் சுத்திகரிப்புக்கான
குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன..

தூக்கம் தொலைவாகிப்போன விடிகாலை பொழுது கண் முன் நிழலாடும் காட்சி கவிதையாக இருக்கிறது. துயரத்தைப் பூசிக்கொண்டுள்ள இந்தக் கவிதை யுத்த காலத்தை என்னில் ஞாபகப்படுத்தியது. அதிகாலைக் குளிருக்கு ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால் இந்தக் கவிதையிலும், அதன் தலைப்பிலும் அதிகாலையிலேயே, அதுவும் மழைப்பொழுதில் வியர்த்தொழுகுகின்றது. இதயத்தில் மகிழ்ச்சியிருந்தால் வியர்க்காது. அதே இதயத்தில் பாரமிருந்தால் ஏற்படும் மனப்போராட்டத்தை வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற கவிதை தாங்கியிருக்கிறது (பக்கம் 90)

மழைக்காற்று சில்லிட்ட
ஒரு விடிகாலைப் பொழுதில்
குளிரைப் போத்திக் கொண்டு
உறங்கிய வீடுகளில்
நான் மாத்திரம் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.

காத்திரமான கவிதைத் தொகுதியொன்றைத் தந்த நூலாசிரியர் கிண்ணியா சபருள்ளாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வியரத்தொழுகும் மழைப்பொழுது
நூலாசிரியர் - கிண்ணியா சபருள்ளா
முகவரி - பெருந்தெரு, கிண்ணியா - 06.
விலை - 250/=

22. உனக்கான பாடல் - கவிதைத் தொகுதி

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன.
மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ''இலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்' என்கிறார்.

இந்தியாவின் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியை அ. சவ்தா உம்மாள் மனதை விட்டும் நகர மறுக்கின்றன இவரது கவிதைகள் என்ற தலைப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இவரது கவிதைகள் மென்மையும், அழகும் கைகுலுக்கி நின்று கவிதைக்கு அழகிய பரிமாணத்தைத் தருகின்றன. மனித காலடிச் சுவடுகளை, தான் அறிந்த வகையில் பதிவு செய்கிறான் கவிஞன். காதலைப் போல் சுகம் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? காதலைப் போல் வலியைத் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? இல்லை என்று ஓராயிரம் கவிஞர்களின் பதில் ஓங்கி ஒலிக்கிறது. ரபீக்கின் கவிதைகள் மரங்களிலிருந்து பூக்கள் உதிர்ந்து நம் மேல் விழும் சுகத்தையும், கடற்கரையில் கால் புதைந்து நிற்கும் சுகத்தையும், தென்றல் முகத்தில் வருடும் சுகத்தையும் தந்து நிற்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் மனிதனுக்கு ஏற்படுவது நியதி. ஆனால் காதலில் ஏற்படும் துன்பம்தான் மிகவும் வருந்தத்தக்க விடயம் எனும்படி காதல் புனிதமாக இருக்கிறது. விரக்தியும், ஏமாற்றமும் அழுகையும் இணைந்த உருக்கமான வரிகள் இவை. பக்கம் (10)

அழுகை எனக்கொன்றும் புதிதல்ல
சிறு வயது முதலே விதிக்கப்பட்டது..
நீ வந்து கொஞ்சம்
அதிகப்படுத்தியிருக்கிறாய்
அவ்வளவுதான்

காதலிப்பவர்கள் பலர். ஆனால் அதே காதலில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. காதலர்கள் விரும்பினாலும் காலம் சிலரை இணைய விடுவதில்லை. அதை தனது வரிகளினூடாக பக்கம் (15) இல் கவிஞர் கூறுகின்றார் இப்படி

காதல் ஓர் எளிமையான பாடம்தான்.
ஆனால் பலபேர்
அதில் தோற்றுப் போகிறார்கள்

பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ அல்லது காதலர்களுக்கிடையிலான மனக்கசப்பினாலோ காதல் மரணித்துவிடும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன. காதலில் துயருற்ற ஒரு காதலனின் புலம்பல் இது. பக்கம் (18)

காதலும் செருப்பும்
ஒன்று போலத்தான்.
சில சமயங்களில் இப்படித்தான்
இடைநடுவே அறுந்துவிடுகிறது.

தான் நேசிக்கம் பெண்ணின் காதல் தனக்கு கிடைக்காவிட்டால் என்ன? இதோ அவளுடனே நடந்து கொண்டிருக்கிறேனே என்ற அங்கலாய்ப்பில் ஒற்றைக் காதலின் தவிப்பாக பக்கம் (30)

உன் இதயத்தில் எனக்கு
இடம் இல்லையென்றால் என்ன
நீ நடக்கும் பாதையில்
நானும் நடக்கிறேனே அது போதாதா?

காதலியின் நினைவுகளில் இருந்து மையைத் தொட்டுக் கவிதை புனைகிறான் காதலன். அது தெரியாமல் பலர் மைகொண்ட போனாவை பரிசாக வழங்குகின்றனர். அதனால் வந்த இன்னொரு கவிதை இது பக்கம் (38)

நினைவுப் பரிசாக
ரசிகர்கள் பேனாக்களைத் தருகிறார்கள்.
அவர்களுக்குத் தெரியாது
உன் நினைவுகளில்
மை தொட்டுக் கொண்டுதான்
நான் கவிதைகளை எழுதுகிறேன் என்று.

காதலின் வலி, காதல் தந்த சந்தோஷம், காதலின் பிரிவு என்று பலதரப்பட்ட காதல் மழையில் நனைந்து பார்க்க நீங்களும் இந்த நூலைப் படித்துப் பாருங்கள். கவிஞர் எஸ். ரபீக்கிற்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உனக்கான பாடல் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - எஸ். ரபீக்
வெளியீடு - சரா பதிப்பகம்
விலை – 200/=

21. உயிரோவியம் - கவிதைத் தொகுதி

உயிரோவியம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே சதாசிவம் மதன் தனது இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்த நூலுக்கான அணிந்துரையை கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செ. யோகராசாவும், ஆசியுரையை அன்புறு சிந்தையன் சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் அவர்களும் வழங்கியுள்ளார்கள். செ. யோகராசா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'இத்தொகுதிக்கு அணிந்துரை ஏழுத முற்படுகின்ற போது வித்தியாசமானதொரு மனத்திருப்தி எனக்குள் பிறப்பெடுக்கின்றது. புதியதொரு பிரதேசத்திலிருந்து புதியதொரு கவிஞன் முதன்முதலாகப் பிறப்பெடுக்கின்றான் என்பதனால் ஏற்படும் திருப்தியே அது. மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்ற போது மண்டூர், ஆரையம்பதி, ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி என்றவாறு ஊர் சார்ந்த இலக்கிய வளர்ச்சியொன்று உருவாகி வந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவ்வழி இத்தொகுதியூடாக மட்டக்களப்பு நவீன கவிதை வளர்ச்சி ஓட்டத்துடன் புதுக்குடியிருப்பு என்ற புதியதொரு பிரதேசம் சங்கமமாகின்றமை முக்கிய கவனிப்புக்குள்ளாகின்றது. ஏலவே வானொலி முதலானவற்றினூடாக தேவராசன் முதலான இரண்டொரு புதுக்குடியிருப்புக் கவிஞர்களின் குரல்கள் ஓரளவு ஒலித்திருப்பினும் தொகுதி வடிவில் வருகின்ற முதற்தொகுப்பு இதுவென்பதில் தவறில்லை' என்று குறிப்பிடுகின்றார்.


இனி இந்தக் கவிஞரது கவிதைகள் சிலதை நாமும் ரசித்துப் பார்ப்போம்.

புதியதோர் உலகம் செய்வோம் என்ற கவிதையில் (பக்கம் 03) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

புதியதோர் உலகம் செய்வோம்.
அதில் புதுமையே பூக்கச் செய்வோம்.
மகிழுடை மாந்தர் செய்வோம்.
நல்ல மனமுடை தேகம் செய்வோம்.
நனி எழில் நகரம் செய்வோம்.
அதை நானிலம் போற்றச் செய்வோம்.

புதியதோர் உலகம் என்பது புதுமைகளால் நிறந்திருக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தூய உள்ளம் கொண்டவர்களாக அனைவரும் திகழ வேண்டும். ஆக மொத்தத்தில் உலகம் போற்றக்கூடிய வகையில் வாழ்க்கை அமைய வேண்டும் என்றிருக்கிறார் கவிஞர்.

இளைஞரே வாரீர் என்ற கவிதை (பக்கம் 05) இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய அழகான கவிதை இது. பாமரர்களைப் பார்த்து படித்தவர்கள் கொள்ளும் இழிவான எண்ணங்களை தகர்த்தெறிகிறார் நூலாசிரியர். மற்றவன் படிக்கவில்லை என்று மட்டந்தட்டுவதைவிட படிப்பதற்கு உதவி புரிவது எத்தகைய மேன்மை பொருந்திய செயல்? செய்யம் தொழிலே தெய்வம் என்றொரு கூற்றுண்டு. அடுத்தவர்களுக்கு ஆபத்தையோ, அடுத்தவர் மனம் நோகும்படியான தொழில்களையோ இந்தக் கூற்று குறிப்பிடவில்லை. அது தவிர்ந்த அனைத்து தொழிலும் செய்யத் தகுந்தவையே. எனவே தொழிலில்லை என்று வருந்துபவர்களுக்கம் தனது கவிதையினூடாக ஆறுதல் சொல்லியிருக்கிறார கவிஞர் மதன்.

வானம் தூரமில்லை தாண்டலாம் வாரீர்.
மண்ணும் தாழ்வில்லை வாழலாம் வாரீர்.
கல்வி அற்றவனை கல்வி கற்றவர் நாம்
எள்ளி நகையாடாமல் கல் என்று
கல்வி புகட்டுவோம் வாரீர்.

இழிவென்று ஒரு தொழில்
இனி இங்கு இல்லையென
இடியெனவே கூறிடுவோம்.
இன்றே நீ எழுந்து வாரீர்.
மனித ஜாதிதனை
புனிதமாக்கிடவே
சாதிமத பேதமின்றி
சரித்திரம் படைக்க வாரீர்..

சின்னஞ்சிறார்களாய் நாம் மகிழ்ந்து தரிந்த காலங்களை எம்மில் ஒருவரும் மறந்துவிட முடியாது. அத்தனை பசுமை நிறைந்தவை அவை. அம்மா அப்பாவின் கைப்பிடித்து நடை பழகிய காலங்கள், அழுதுகொண்டே பாடசாலை செல்லும் காலங்கள்... என பட்டியலிட்டுச் சொல்லலாம். மறக்க முடியவில்லை என்ற கவிதையில் (பக்கம் 23) மறக்க முடியாத அந்தக் காலங்களைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார்.

வயல்களின் வசந்தமும் மரநிழல் மாருதமும் மறக்க முடியவில்லை. கடலோடு கதை பேசும் கரையோர மணற்கோட்டை கட்டிய காலங்களும் மறக்க முடியவில்லை. மணல்வீட்டு மாளிகையில் சிரட்டைக் கறிச்சட்டி, படிப்பறியாக் காலங்களில் படிதாண்டும் பரீட்சைகள், தவணை விடுமுறையில் தலைதெறிக்க விளையாட்டு, விடுமுறை விடைகேட்கும் விரைவாக எனத்தோன்றும் பள்ளிக் காலங்களும் மறக்க முடியவில்லை.

ஒரு தந்தையின் வரிகளாக மலர்ந்திருக்கிறது எனக்காக ஒருமுறை என்ற கவிதை (பக்கம் 42)

சிந்திய உன் சிரிப்பில் சிகரமே சிதையுமடி. சிக்கிய என் மனது சிலையாகப் போகுமடி. உன் புன்னகை எனை இழுக்கிறது. பல தடைகளைத் தாண்டி புரியாத உன் மொழிகூட புதுக் கவிதை புனைகிறது.

தாய்க்கு அடுத்தபடியாக ஒரு குழந்தைக்கு எல்லாமே தந்தைததான். ஒரு தந்தை தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எப்போதுமே கனவுகளுடன் வாழ்பவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக பாடுபடுபவர். குழந்தையின் சிரிப்பிலும் மகிழ்வார். குழந்தை தன் பிஞ்சுக்கால் நீட்டி உதைக்கையிலும் மகிழ்வார். அந்த உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைதான் மேலுள்ள வரிகள்.

வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு, இளமைக் காலங்கள், அன்னை, தந்தையின் பெருமை, காதல், நட்பு ஆகிய பல்வேறு கருப் பொருட்களும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் சதாசிவம் மதனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உயிரோவியம்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - சதாசிவம் மதன்
வெளியீடு - அன்னை வெளியீடு
தொலைபேசி - 0653650153, 0773620328
விலை – 120 ரூபாய்