Friday, November 30, 2012

35. நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர்

நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர் பற்றிய எனது பார்வை

தாம் வாழும் மண்ணுக்கு பெருமையும், புகழும் கிடைக்கச் செய்வதானது ஒரு மனிதன் தனது வாழ்வில் கண்ட மாபெரும் வெற்றியாகும். அந்த வெற்றியை தனது பன்முக ஆளுமைகள் மூலம் தனதாக்கி கொண்டவர் எமது வெலிகம மண்ணின் மாணிக்கங்களில் ஒருவரான ஹூசைன் சேர் அவர்கள்.

தான் வாழ்ந்த காலப்பகுதியில் பல்துறைகளில் தனது சேவைகளைப் புரிந்த மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றி, 188 பக்கங்களைக் கொண்ட நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் என்ற நினைவு மலரை ஓய்வு பெற்ற ஆசிரியரான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் மற்றும் முன்னால் அதிபரான ஏ.ஆர்.எம். இர்ஷாத் ஆகியோர் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் கட்டுரைகள், கவிதைகள், நினைவுரைகள் தவிர மர்ஹூம் ஹூசைன் அவர்களின் படைப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும். இதுபோலவே மர்ஹூம் ஹூசைன் அவர்களிடம் கல்வி பயின்று இன்று மதிப்புக்குரிய தொழில்களிலிருக்கும் பலர் அவரைப் பற்றிய தத்தமது அவதானங்கள், குறிப்புகள் போன்றவற்றை பகிர்ந்துள்ளமையும் புத்தகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது எனலாம். அதன் மூலம் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றிய தகவல்களை பிறரும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது.


ஓய்வு பெற்ற ஆசிரியரும், இலக்கியவாதியுமான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்-குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு (பாகப் பிரிவினை), மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தும் இறவா இன்னுறவே என்ற கவிதையை டாக்டர் எம். இப்லால் சுபைர் அவர்கள் யாத்திருக்கின்றார். அதில் ஹூசைன் சேரின் உயர்ந்த குணங்களை அழகாக குறித்து நிற்கும் கவிதையின் சில அடிகள் (பக்கம் 66)...

கல்விக் கரையை நாங்கள் அடைந்திட
கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்த உறவே
வல்லபம் மிக்கவோர் மானுடன் ஆக
கல்வியால் நானும் மேன்மையுற்றேன்

கல்விக்குயிர் கொடுத்தோன் மாள்வதில்லை
கனவானுங்களை மரணமும் மறைக்காது
நல்லோர் காணும் சுவர்க்க உலகத்தை
நீங்கள் காண இறையை இறைஞ்சினேன்

உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியும் மனிதனுக்கு மிக முக்கியம். இன்றைய காலத்தில் அதான் (தொழுகைக்கான அழைப்பு) ஒலிக்கும் போதும் பலர் அதனைக் கணக்கிலெடுக்காமல் வீணாக பொழுதைப் போக்குகின்றனர். ஆனால் கற்பிக்கும் நேரத்தில் கூட அதான் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்த உத்தமரைப் பற்றிய கல்விச் சோலையில் பூத்த ரோஜாவே (பக்கம் 108) என்ற தலைப்பில் எம்.எஸ்.எம். அப்ளல் ஹுஸைன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

பள்ளிவாசல்களில் பாங்கொலி கேட்கும் வேளை
பள்ளிக்கூடங்களில் மணியொலிக்கச் செய்தாய்
மனோரம்மியமான சூழல் வேண்டும் என்றாய்
மகிழ்ச்சி பொங்கும் சோலையாக கலாசாலைகளை மாற்றினாய்

மாணவருலகம் எழுச்சி பெற்றிட
மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
ஆசானாய் - அதிபராய் - பணிப்பாளராய் பணிசெய்து
அனைந்துவிட்டாலும் நிலைத்துவிட்டீர் எம்மகங்களில்!

மர்ஹூம் ஹூசைன் அவர்கள் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர். ஒரு ஏணியாக இருந்து கரம்கொடுத்து உதவியவர். கரந்ததே கல்விக் கதிரவன் என்ற தலைப்பில் (பக்கம் 133) எம்.எஸ். பஸ்லி ஸாலிம் ஆசிரியர் அவர்கள் அதனைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அணி உரையில் அண்ணாத்துரை அவர்
துணிச்சலில் யூலிய சீசருக்கு நிகர்
பணியே பரம் பொருளாய்க் கண்டவர்
ஏணியாக எம்மை ஏற்றி விட்டவர்

எரியும் வேளையில் கண்ணீர்
சொரிவது மெழுகுத்திரி ஆனால்
சிரித்துக் கொண்டே தன்னைக்
கரித்துக் கொண்ட வித்தகர்

எம்.ஜே.எம். மின்ஹாஜின் மறைந்தாலும் மங்காத ஒளித்தீபம் (பக்கம் 139) என்ற கவிதை மர்கூம் ஹுஸைன் அவர்கள் வெலிகமை மக்களின் உள்ளத்தில் என்றும் ஒளியாகத் திகழ்கிறார் என்பதையும், அவர் ஆற்றிய சேவைகள் மாணவர்களின் நினைவுகளில் என்றுமே நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இவ்வாறு இயம்பி நிற்கிறது.

தென்னிலங்கையின் தன்னிகர் முத்தாக
வெலிகமை வாழ் மக்களின் உள்ளத்தில்
என்றும் நீங்காத ஒளி விளக்காக
ஏற்றம் பெற்றவர் ஏயாரெம் ஹுஸைன்

அதே போல நூலில் இடம்பெற்ற பிரார்த்திப்போம் எந்நாளும் (பக்கம் 160) என்ற எனது கவிதையிலும் அவரது பல்துறைத் தொழில்களையும், சேவையையும் எழுதியிருக்கிறேன்.

நல்லாசானாய்
அதிபராய்
உயர் அதிகாரியாய்
பல பரிமாணங்கள் பெற்று
வெலிகமை மண்ணுக்கு
பெருமை சேர்த்தீரே!

மாணவச் செல்வங்கள்
மதிப்புடனே வாழ்ந்திட
பண்பாகப் படிப்பித்து
பார்போற்றச் செய்தீரே!

இது தவிர பல கட்டுரைகளைப் பிரபலம் வாய்ந்த பல்வேறு பட்டோர் எழுதியிருக்கின்றனர். அதில் வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் போன்ற பலர் எழுதியிருப்பது ஹூசைன் சேர் அவர்களின் மதிப்புக்கும், ஆளுமைக்கம் கட்டியங் கூறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் சமூக சேவை உள்ளம் மிக்க ஆசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களுக்கும எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள்     (நினைவு மலர்)
தொகுப்பாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711
விலை - குறிப்பிடப்படவில்லை

Friday, November 23, 2012

34. நாட்டார் / கிராமிய பாடல்கள் தொகுதி

நாட்டார் / கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு



நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது 52 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்த கவிஞர் கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள எஸ்.ஏ. முத்தாலிப் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் கிண்ணியாவின் இலக்கியப் பயணத்தில் பவனி வராதிருந்த ஒரு கலை வடிவம் கிண்ணியாவின் நாட்டார் கிராமிய பாடல்களாகும். அந்த இடைவெளியை பி.ரி. அஸீஸ் அவர்கள் நிரப்பியிருக்கின்றார். நாட்டார் பாடல்கள் என்றாலே கிராமிய மண் வாசைன கலந்த நடையிலே உணர்வுகள் வெளிப்படுவதாகும். பி.ரி. அஸீஸ் அவர்களின் நாட்டார் பாடல்களில் கிராமிய சொல் வழக்கு அங்காங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது என்கிறார்.

கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது. வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்னால் எழுதப்பட்டுள்ள இக் கிராமியக் கவிகள் நான் கண்டு ரசித்து அனுபவித்த விடயங்களே. நயமும் சுவையும் கருத்தாளமும் இளைந்தோடுகின்ற கவிகளாக இதைப் படைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியேற்பட்டது என்று நூலாசிரியர் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (பக்கம் 04) அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

காலயும் புலந்திருக்கு
கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
மாலையும் கையுமா
மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

வேலயும் இல்ல மச்சி
வருமானம் கொறஞ்சிரிச்சி
தோளிலே ஒன்ன வைக்க
தோது இல்ல என் கிளியே!

அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை (பக்கம் 05) பின்வரும் வரிகள் சுட்டி நிற்கிறன. அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சுற்றி வர நெருஞ்சி முள்ளு
சுருண்டிருந்து பாத்திருக்கேன்
தடை தாண்டிப் பாய்ந்து வர
நல்ல சப்பாத்துக்காய்
காத்திருக்கேன்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை (பக்கம் 08) பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

ஓடுகின்ற
தண்ணியிலே
ஆடுகின்ற
அலையெல்லாம்
தேடுகின்ற
என் மனதின்
ஏக்கங்களைக்
கூறாதோ!

தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல் (பக்கம் 20) இப்படி வருகிறது.

கழுத்திலே மின்னுகிற
கரிச மணிக் கோர்வையிலே
கைய வைத்து உருட்டி விடும்
என் ஆசைக் கண்ணாலா

தொழிலுக்கு தொலை தூரம்
போனவரே
நெடுநாளா சேதியில்ல
என் நெஞ்சம் வெடிக்குதுகா!

பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் (பக்கம் 28) இப்படி வருகிறது.

மாடுகள் வலய வலய
நெல் மணிகள் குலய குலய
பாடுகிறோம் பாட்டு
சூடடித்து முடியும் வர
சுகமாகக் கேட்டு!

நாடுகிறோம் அல்லாஹ்வை
நல் விளைச்சல் கெடச்சிடவே
தேடுகிறோம்
கடனெல்லாம் தீர
ஒரு நல் வாழ்வை!

மேற்படி அழகிய நாட்டார் கிராமிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போர் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இப் பாடல்கள் அனைத்தும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கிராமியக் கவிகளுக்கான ஆய்வில் சேர்க்கப்பட்டிருப்பதானது கவிஞருக்கு கிடைத்த பெரும் கௌரவமாகும். இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நாட்டார் / கிராமிய பாடல்கள்
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042 / 0752101556
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com