Wednesday, June 20, 2012

22. உனக்கான பாடல் - கவிதைத் தொகுதி

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன.
மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ''இலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்' என்கிறார்.

இந்தியாவின் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியை அ. சவ்தா உம்மாள் மனதை விட்டும் நகர மறுக்கின்றன இவரது கவிதைகள் என்ற தலைப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இவரது கவிதைகள் மென்மையும், அழகும் கைகுலுக்கி நின்று கவிதைக்கு அழகிய பரிமாணத்தைத் தருகின்றன. மனித காலடிச் சுவடுகளை, தான் அறிந்த வகையில் பதிவு செய்கிறான் கவிஞன். காதலைப் போல் சுகம் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? காதலைப் போல் வலியைத் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? இல்லை என்று ஓராயிரம் கவிஞர்களின் பதில் ஓங்கி ஒலிக்கிறது. ரபீக்கின் கவிதைகள் மரங்களிலிருந்து பூக்கள் உதிர்ந்து நம் மேல் விழும் சுகத்தையும், கடற்கரையில் கால் புதைந்து நிற்கும் சுகத்தையும், தென்றல் முகத்தில் வருடும் சுகத்தையும் தந்து நிற்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் மனிதனுக்கு ஏற்படுவது நியதி. ஆனால் காதலில் ஏற்படும் துன்பம்தான் மிகவும் வருந்தத்தக்க விடயம் எனும்படி காதல் புனிதமாக இருக்கிறது. விரக்தியும், ஏமாற்றமும் அழுகையும் இணைந்த உருக்கமான வரிகள் இவை. பக்கம் (10)

அழுகை எனக்கொன்றும் புதிதல்ல
சிறு வயது முதலே விதிக்கப்பட்டது..
நீ வந்து கொஞ்சம்
அதிகப்படுத்தியிருக்கிறாய்
அவ்வளவுதான்

காதலிப்பவர்கள் பலர். ஆனால் அதே காதலில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. காதலர்கள் விரும்பினாலும் காலம் சிலரை இணைய விடுவதில்லை. அதை தனது வரிகளினூடாக பக்கம் (15) இல் கவிஞர் கூறுகின்றார் இப்படி

காதல் ஓர் எளிமையான பாடம்தான்.
ஆனால் பலபேர்
அதில் தோற்றுப் போகிறார்கள்

பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ அல்லது காதலர்களுக்கிடையிலான மனக்கசப்பினாலோ காதல் மரணித்துவிடும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன. காதலில் துயருற்ற ஒரு காதலனின் புலம்பல் இது. பக்கம் (18)

காதலும் செருப்பும்
ஒன்று போலத்தான்.
சில சமயங்களில் இப்படித்தான்
இடைநடுவே அறுந்துவிடுகிறது.

தான் நேசிக்கம் பெண்ணின் காதல் தனக்கு கிடைக்காவிட்டால் என்ன? இதோ அவளுடனே நடந்து கொண்டிருக்கிறேனே என்ற அங்கலாய்ப்பில் ஒற்றைக் காதலின் தவிப்பாக பக்கம் (30)

உன் இதயத்தில் எனக்கு
இடம் இல்லையென்றால் என்ன
நீ நடக்கும் பாதையில்
நானும் நடக்கிறேனே அது போதாதா?

காதலியின் நினைவுகளில் இருந்து மையைத் தொட்டுக் கவிதை புனைகிறான் காதலன். அது தெரியாமல் பலர் மைகொண்ட போனாவை பரிசாக வழங்குகின்றனர். அதனால் வந்த இன்னொரு கவிதை இது பக்கம் (38)

நினைவுப் பரிசாக
ரசிகர்கள் பேனாக்களைத் தருகிறார்கள்.
அவர்களுக்குத் தெரியாது
உன் நினைவுகளில்
மை தொட்டுக் கொண்டுதான்
நான் கவிதைகளை எழுதுகிறேன் என்று.

காதலின் வலி, காதல் தந்த சந்தோஷம், காதலின் பிரிவு என்று பலதரப்பட்ட காதல் மழையில் நனைந்து பார்க்க நீங்களும் இந்த நூலைப் படித்துப் பாருங்கள். கவிஞர் எஸ். ரபீக்கிற்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உனக்கான பாடல் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - எஸ். ரபீக்
வெளியீடு - சரா பதிப்பகம்
விலை – 200/=

21. உயிரோவியம் - கவிதைத் தொகுதி

உயிரோவியம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே சதாசிவம் மதன் தனது இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்த நூலுக்கான அணிந்துரையை கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செ. யோகராசாவும், ஆசியுரையை அன்புறு சிந்தையன் சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் அவர்களும் வழங்கியுள்ளார்கள். செ. யோகராசா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'இத்தொகுதிக்கு அணிந்துரை ஏழுத முற்படுகின்ற போது வித்தியாசமானதொரு மனத்திருப்தி எனக்குள் பிறப்பெடுக்கின்றது. புதியதொரு பிரதேசத்திலிருந்து புதியதொரு கவிஞன் முதன்முதலாகப் பிறப்பெடுக்கின்றான் என்பதனால் ஏற்படும் திருப்தியே அது. மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்ற போது மண்டூர், ஆரையம்பதி, ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி என்றவாறு ஊர் சார்ந்த இலக்கிய வளர்ச்சியொன்று உருவாகி வந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவ்வழி இத்தொகுதியூடாக மட்டக்களப்பு நவீன கவிதை வளர்ச்சி ஓட்டத்துடன் புதுக்குடியிருப்பு என்ற புதியதொரு பிரதேசம் சங்கமமாகின்றமை முக்கிய கவனிப்புக்குள்ளாகின்றது. ஏலவே வானொலி முதலானவற்றினூடாக தேவராசன் முதலான இரண்டொரு புதுக்குடியிருப்புக் கவிஞர்களின் குரல்கள் ஓரளவு ஒலித்திருப்பினும் தொகுதி வடிவில் வருகின்ற முதற்தொகுப்பு இதுவென்பதில் தவறில்லை' என்று குறிப்பிடுகின்றார்.


இனி இந்தக் கவிஞரது கவிதைகள் சிலதை நாமும் ரசித்துப் பார்ப்போம்.

புதியதோர் உலகம் செய்வோம் என்ற கவிதையில் (பக்கம் 03) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

புதியதோர் உலகம் செய்வோம்.
அதில் புதுமையே பூக்கச் செய்வோம்.
மகிழுடை மாந்தர் செய்வோம்.
நல்ல மனமுடை தேகம் செய்வோம்.
நனி எழில் நகரம் செய்வோம்.
அதை நானிலம் போற்றச் செய்வோம்.

புதியதோர் உலகம் என்பது புதுமைகளால் நிறந்திருக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தூய உள்ளம் கொண்டவர்களாக அனைவரும் திகழ வேண்டும். ஆக மொத்தத்தில் உலகம் போற்றக்கூடிய வகையில் வாழ்க்கை அமைய வேண்டும் என்றிருக்கிறார் கவிஞர்.

இளைஞரே வாரீர் என்ற கவிதை (பக்கம் 05) இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய அழகான கவிதை இது. பாமரர்களைப் பார்த்து படித்தவர்கள் கொள்ளும் இழிவான எண்ணங்களை தகர்த்தெறிகிறார் நூலாசிரியர். மற்றவன் படிக்கவில்லை என்று மட்டந்தட்டுவதைவிட படிப்பதற்கு உதவி புரிவது எத்தகைய மேன்மை பொருந்திய செயல்? செய்யம் தொழிலே தெய்வம் என்றொரு கூற்றுண்டு. அடுத்தவர்களுக்கு ஆபத்தையோ, அடுத்தவர் மனம் நோகும்படியான தொழில்களையோ இந்தக் கூற்று குறிப்பிடவில்லை. அது தவிர்ந்த அனைத்து தொழிலும் செய்யத் தகுந்தவையே. எனவே தொழிலில்லை என்று வருந்துபவர்களுக்கம் தனது கவிதையினூடாக ஆறுதல் சொல்லியிருக்கிறார கவிஞர் மதன்.

வானம் தூரமில்லை தாண்டலாம் வாரீர்.
மண்ணும் தாழ்வில்லை வாழலாம் வாரீர்.
கல்வி அற்றவனை கல்வி கற்றவர் நாம்
எள்ளி நகையாடாமல் கல் என்று
கல்வி புகட்டுவோம் வாரீர்.

இழிவென்று ஒரு தொழில்
இனி இங்கு இல்லையென
இடியெனவே கூறிடுவோம்.
இன்றே நீ எழுந்து வாரீர்.
மனித ஜாதிதனை
புனிதமாக்கிடவே
சாதிமத பேதமின்றி
சரித்திரம் படைக்க வாரீர்..

சின்னஞ்சிறார்களாய் நாம் மகிழ்ந்து தரிந்த காலங்களை எம்மில் ஒருவரும் மறந்துவிட முடியாது. அத்தனை பசுமை நிறைந்தவை அவை. அம்மா அப்பாவின் கைப்பிடித்து நடை பழகிய காலங்கள், அழுதுகொண்டே பாடசாலை செல்லும் காலங்கள்... என பட்டியலிட்டுச் சொல்லலாம். மறக்க முடியவில்லை என்ற கவிதையில் (பக்கம் 23) மறக்க முடியாத அந்தக் காலங்களைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார்.

வயல்களின் வசந்தமும் மரநிழல் மாருதமும் மறக்க முடியவில்லை. கடலோடு கதை பேசும் கரையோர மணற்கோட்டை கட்டிய காலங்களும் மறக்க முடியவில்லை. மணல்வீட்டு மாளிகையில் சிரட்டைக் கறிச்சட்டி, படிப்பறியாக் காலங்களில் படிதாண்டும் பரீட்சைகள், தவணை விடுமுறையில் தலைதெறிக்க விளையாட்டு, விடுமுறை விடைகேட்கும் விரைவாக எனத்தோன்றும் பள்ளிக் காலங்களும் மறக்க முடியவில்லை.

ஒரு தந்தையின் வரிகளாக மலர்ந்திருக்கிறது எனக்காக ஒருமுறை என்ற கவிதை (பக்கம் 42)

சிந்திய உன் சிரிப்பில் சிகரமே சிதையுமடி. சிக்கிய என் மனது சிலையாகப் போகுமடி. உன் புன்னகை எனை இழுக்கிறது. பல தடைகளைத் தாண்டி புரியாத உன் மொழிகூட புதுக் கவிதை புனைகிறது.

தாய்க்கு அடுத்தபடியாக ஒரு குழந்தைக்கு எல்லாமே தந்தைததான். ஒரு தந்தை தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எப்போதுமே கனவுகளுடன் வாழ்பவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக பாடுபடுபவர். குழந்தையின் சிரிப்பிலும் மகிழ்வார். குழந்தை தன் பிஞ்சுக்கால் நீட்டி உதைக்கையிலும் மகிழ்வார். அந்த உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைதான் மேலுள்ள வரிகள்.

வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு, இளமைக் காலங்கள், அன்னை, தந்தையின் பெருமை, காதல், நட்பு ஆகிய பல்வேறு கருப் பொருட்களும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் சதாசிவம் மதனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உயிரோவியம்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - சதாசிவம் மதன்
வெளியீடு - அன்னை வெளியீடு
தொலைபேசி - 0653650153, 0773620328
விலை – 120 ரூபாய்

Tuesday, April 17, 2012

20. படிகள் - இருமாத இலக்கிய இதழ் - (ஜனவரி - மார்ச் 2012)

படிகள் இருமாத இலக்கிய இதழ் பற்றிய இரசனைக் குறிப்பு

பெரும்பாண்மை இனத்தவர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்திலிருந்து சுமார் 08 வருடங்களாக படிகள் சஞ்சிகை வெளிவருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் ஈழத்து சஞ்சிகையுலகில் படிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்பதை எவறும் மறுக்க முடியாது. படிகள் தனது 30 ஆவது இதழை (ஜனவரி - மார்ச் 2012) அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. படிகளின் அட்டைப் படத்தை மறைந்த பேராசிரியர் ம.மு. உவைஸ் மற்றும் சாகித்திய ரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் ஹிமானா செய்யத் போன்றோர்கள் அலங்கரக்கின்றார்கள். படிகள் தனது ஆசிரியர் தலையங்கத்தில் அநுராதபுரப் பிராந்திய கலை இலக்கிய முழுநாள் விழாவொன்றை நடாத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்களின் 16 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரைகளாக 1994ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட உவைஸ் மணிவிழா மலரில் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கமும், மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ம.மு. உவைஸ் பற்றி எழுதிய கட்டுரையும் மீளப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாற்றங்களைத் தொடும் தமிழ் சினிமா என்ற தலைப்பில் எங்கேயும் எப்போதும் தமிழ்த் திரைப்படம் பற்றிய தனது பார்வையை எல். வஸீம் அக்ரம் மிகவும் காத்திரமாக முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ் நாடு ராமநாத மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஹிமானா செய்யத்தை சுழற்சிகள், கண் திறவாய் போன்ற கவிதை நூல்களின் ஆசிரியரான கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அஹமது நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நேர்காணல் மூலம் ஹிமானா செய்யத் அவர்கள் தனது எழுத்துலக, இலக்கிய அனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். நேர்காணல் செய்தவரும் நேர்காணப் பட்டவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் நாடக விழாவில் அநுராதபுர மாவட்ட நாடகத்திற்கு ஏழு விருதுகள் கிடைத்திருக்கிறது என்ற தகவலையும் கண்டுகொள்ள முடிகிறது.

மருதூர் ஜமால்தீனின் உயர்ந்தவன் என்ற சிறுகதை சாதிப் பிரிவினை பார்க்கும் மனித வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாய் அமைந்திருக்கிறது. அதே போல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்து சீவியம் நடாத்திவரும் பெண்ணின் வாழ்க்கையை ஓவியமாய்க் காட்டி நிற்கிறது வெலிப்பண்ணை அத்தாஸின் காய்த்த மரம் என்ற சிறுகதை.

முல்லை முஸ்ரிபா, ஸாருஸ், காத்தான்குடி பௌஸ், நேகம பஸான், துவாரகன், வெற்றிவேல் துஷ்யந்தன் ஆகியோரது கவிதைகளுடன் கே.எம். ஷபீக்கின் மொழி பெயர்ப்புக் கவிதையும் இதழை மேலும் சிறப்பிக்கின்றன.

நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பை சேவியர் தந்துள்ளார். அத்தோடு உமா வரதராஜன் கதைகள் பற்றிய ஓர் அவதானத்தை மன்சூர் ஏ. காதிர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் கலைச் சொல்லாக்கம் பற்றிய கட்டுரையை கலாவெல றஸ்மிலா நிஹாரும், அநுராதபுர இலக்கிய அலைகள் என்ற கட்டுரையை திக்வல்லை கமாலும் தந்துள்ளார்கள். மேலும் வால்ஸ்ரீட் போராட்டத்தை சி. குமாரலிங்கம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

எம்.எம். ரிபாயுடீன், சபுர்தீன், பிரியா கார்;த்திகேயன், எம்.எச்.எம். ரிப்கான் ஆகியோரின் படிகள் பற்றிய நேர் எதிர் எண்ணங்களையும் காண முடிகிறது.

இறுதியில் சாஹித்திய ரத்னா தகைமைசார் கல்வித் துறைப் பேராசிரியர் பற்றிய தனது பார்வையை விரித்திருக்கிறார் திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், வாசகர் கருத்துக்கள் என பல்வேறு இலக்கியச் சிறப்புக்கள் அமைந்தவையாக படிகள் தொடந்ர்து வெளிவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. படிகள் சஞ்சிகைக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - படிகள் (இருமாத இலக்கிய இதழ்)
பிரதம ஆசிரியர் - எல். வஸீம் அக்ரம்
முகவரி - 519/G/16, Jayanthi Mawatha, Anuradhapura.
தொலைபேசி - 0783 244 255, 0713 485060.
மின்னஞ்சல் - padihal@yahoo.com
விலை - 60 ரூபாய்

Friday, March 30, 2012

19. நினைவுப் பொழுதின் நினைவலைகள் - கவிதைத் தொகுதி

நினைவுப் பொழுதின் நினைவலைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

வவுனியாவைச் சேர்ந்த திருமதி சந்திரமோகன் சுகந்தினி எழுதிய நிலவுப் பொழுதின் நினைவலைகள் என்ற கவிதைத்தொகுதி வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இதில் 53 பக்கங்களை உள்ளடக்கியதாக 27 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தொகுதி சுகந்தினியின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். சில கவிதைத் துளிகளும் இதில் உள்ளடங்குகின்றன. அன்னையின் பெருமை, அன்பு, காதல், உறவு, மது, சீதனம், சேமிப்பு, பெண்ணியம், ஆசிரிய மாண்பு ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன. கவிதைக்குப் பொய்யழகு என்று கவிப்பேரரசே சொல்லியுள்ள போதும், பொய்களைப் புறந்தள்ளி வைத்து அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்தித்த, சந்தத்துக்கொண்டிருக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள், வாழ்வின் யதார்த்தங்கள் என்பவற்றை இலகு நடையில் எவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் என் சிந்தைக்கெட்டிய உள்ளத்து உணர்வுகளை கவிதைக்கு உண்மையும் அழகே என்று நீங்கள் யாவரும் உணரும் வகையிலான கவிதைகளாகத் தந்துள்ளேன் என்று நூலாசிரியர் தனதுரையில் குறிப்பிடுகிறார்.

உலகத்தில் தாயன்பைவிட புனிதமானதொரு உறவு இருக்க முடியாது. தாயின் அன்புக்கு வேறு யாருடைய அன்பும் ஈடாகாது. அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதில்கூட அன்னைதான் முதன் முதலாக விளித்துக் கூறப்பட்டிருக்கின்றாள். என் அன்னையே என்ற கவிதையில் அன்னையின் பெருமை பற்றி நூலாசிரியர் தனது கருத்தை இப்படி முன்வைக்கிறார்.

ஜயிரண்டு மாதம் கருவறையில்
எனை சுமந்து
அகிலத்தை நான்
அறியவைத்த என் அன்னையே!

ரத்தத்தை பாலாக்கி
முத்தத்தை அன்பு பரிசாக்கி
இன்பமாய் நான் வாழ்வதற்காய்
நீ சுமந்த துன்பங்கள் எத்தனையோ? (பக்கம் 03)

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், விஞ்ஞானம் விதைந்துரைக்கச் செய்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம உரிமைப் போராட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்களின் சமத்துவத்தை சிலரால் அங்கீகரிக்க முடியவில்லை. அதற்கு காரணமாக சொல்லப்படுவது அடுப்பூதுவதற்கு படிப்பெதற்கு என்ற ஆற்றாமையால் உருவான வாசகம்;தான். அவ்வாறான கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதை காட்டியிருக்கிறது பெண்ணே உன் சிந்தனைக்கு என்ற இந்தக் கவிதை.

பெண்ணே!
கற்கும் வயதில் காதல் வரும்
கடந்து செல்
கல்வி ஒன்றே வேதமென்று
ஓதிச் செல்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்றால்
விண் ஆண்ட கல்பனாவையும்
மண்ணாளும் கிளரியையும்
ஆதாரம் காட்டிச்செல்... (பக்கம் 05)

விந்தை என்ன? என்ற கவிதை இன்றைய வாழ்வியலை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இன்றைய விலைவாசி மக்களின் கழுத்தை இறுக்குவதாக மாறியுள்ளது. தினமும் பொருட்களின் விலை ஏறிச் செல்வதனால் ஏழைக் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையையே போராட்டத்துடன் கழித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்தின் தலைவிதி பொருளாதாரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வகையில் ஏழையாக பிறந்துவிட்ட காரணத்துக்காக பாடசாலை வாழ்க்கையே பறிபோகுமளவுக்கு சிலரின் வாழ்வு மாறியிருக்கின்றது. அத்தகையதொரு நிலையிலிருந்து மக்களை மீட்க எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் பொது மக்களுக்கு அதற்கான தீர்வுகள் இல்லை.

தீர்வுதேடி தேர்வெழுதினோம்
சுற்றமிழந்து சுயமிழந்து சுமைகளை
தினம் சுமக்கிறோம்..

வட்டமேசை மாநாடுகள் எத்தனையோ
திட்டமிட்டபடி நடந்த போதும்
தீர்க்கப்பட்ட நம் தேவைகள்
எவையேனும் உண்டோ? (பக்கம் 17)

மதுவென்ற அரக்கன் ஆண்களை நன்றாகவே தன் வலைக்குள் வீழ்த்திக்கொண்டுவிட்டான். உடல் அலுப்பாக குடிக்கப் பழகியவர்களும், உல்லாசத்துக்காக குடியை விரும்பியவர்களும் தமது தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டதற்கு சமானமாகும். ஒரேயடியாக உயிர் கொல்வது விஷம் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும் ஒரு வஸ்து மது என்றால் பிழையில்லை. சாராயம் குடித்த பின்பு ஆராய்வதற்கான புத்தியின்றி அல்லல்படுகின்றனர். குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனைகள் பூதாகாரமாக கிளம்பிவிடுகின்றன. இதுபற்றி உயிர்க்கொல்லி என்ற கவிதையில் கீழுள்ளவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

உற்றதுணை உயிராய் வந்த பிள்ளைகள்
உடன்பிறப்புக்கள் என்று
உன்னதமான உறவுகள்
ஆயிரமாய் இருக்க
உயிர் குடிக்கும் மதுவை அல்லவா
மகத்துவமென்று நாடுகிறீர் (பக்கம் 23)

சேமிப்பு என்ற கவிதையில் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் நூலாசிரியர் அதை சேமிப்பது மனிதர்களின் கையில் உள்ள விடயம்தான் என்பதை அழகிய தொனியில் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றார்.

வருவாயில் செலவிடப்படாத தொகை சேமிப்பென்பது பொருளியல். சேமிக்கும் கலைதனை சிறுவயது முதல் பழகிடனும் என்பது உளவியல். சேமித்திட சிறந்த இடமாக வைப்பகத்தை தந்தது உலகியல். சேமிப்புக் கணக்கைப் பேணுவது நிதியியல். சேமிப்பு மீளப்பெறுதலை இலகுவாக்கியது இலத்திரனியல். சேமித்தால்தான் செல்வம் சேருமென்பது வாழ்வியல். சேமிப்பது யார் கையில்? அது உன் கையில். (பக்கம் 37)

ஆரம்பத் தொகுப்பென்றாலும் கூட பல விடயங்களையும் தொட்டுக்காட்டியிருக்கின்றார் நூலாசிரியர். அவரது முயற்சியை பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - நிலவுப் பொழுதின் நினைவலைகள் (கவிதை)
நூலாசிரியர் - வவுனியா சுகந்தினி
தொலைபேசி - 0776753874
மின்னஞ்சல் - suganthiny83Shgmail.com
வெளியீடு - வவுனியா சுகந்தினி
விலை - 250/=

Tuesday, February 28, 2012

18. அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஏ.எப்.எம். அஷ்ரப் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமலை அஷ்ரப், நேஹா, புரட்சி மகன், போன்ற பெயர்களில் கவிதை எழுதி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 64 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் 21 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், இன்றைய ஈழத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அல்லற்படுகின்ற மக்கள் பற்றியுமான பதிவுகளாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட விடயங்களுள், கவிஞரது சொந்த மாவட்டமான திருகோணமலைப் பிரதேசத்தின் சிதைவு கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை புலப்படுகிறது என்கிறார்.

மனம் திறந்து சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சிறுவயதிலிருந்து எனக்கு கவிதையில் ஈடுபாடு உண்டு. பாடசாலைக் காலத்தில் எனது தந்தையான கலைப் பிரியன் பரீட் அவர்களது வழிகாட்டலின் கீழ் அவ்வப்போது சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சியில் மஹாகவியும், நீலாவணனும் ஓர் சமூக ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பில் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது எனது கவிதை ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இக்கவிதைத்தொகுதி. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மஹாகவி, நீலாவணன் ஆகியோரின் கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவிதை வெளிப்பாட்டுக்கு காரணமாகியது. எனது கவிதைகளில் காணத்தகும் உருவ, உள்ளடக்கச் சிந்தனைகளுக்கு அவர்களது செல்வாக்கும் ஒரு காரணமே என்கிறார்.

நான் என்ற கவிதையில் போர்க்கால சூழல் தந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இயற்கையையும், இலக்கியத்தையும் காதலிக்கும் ஒரு சாதாரண கவிஞன், கனவுகள் சுமந்து இன்பக் கற்பனையில் மிதக்க விரும்புகிறான். ஆனாலும் திறந்த வெளிச்சிறையாக உலகம் மாறிவிட்டதால் தனது கற்பனைகள் எதுவும் ஈடேறாமல் செயற்கையான வாழ்வினை வாழ்வதாக திரு. அஷ்ரப் அவர்கள் கீழுள்ள வரிகள் கொண்டு புரிய வைக்க முனைகிறார்.

கொலையும்
கொலைவெறியும் மிகைத்து
மனிதம் மறைந்துவிட்ட - இத்
து(ர்)ப்பாக்கிய தேசத்தில்
கானகத்தில் சிறைப்பட்ட
பறவைகளாய்
சுதந்திர நாட்டின்
அடிமைகளாய் நாம் (பக்கம் 30)

தினம் தோறும் நாம் பலரைச் சந்திக்கிறோம். அவர்களில் எல்லோரும் நம்மோடு ஐக்கியப்பட்டவர்களல்லர். அதே போலதான் காத்தாயி என்ற பாத்திரம். காத்தாயி என்பவள்; பொதுப் பாதையை தினமும் கூட்டித் துப்பரவு செய்யும் பெண் என்பதனை இக்கவிதை மூலம் அறியமுடிகிறது. காலை வேலைகளிலேயே பாதைகளை சுத்தப்படுத்தி பொது மக்கள் அசௌகரியம் அடையா வண்ணம் சூழலை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு காத்தாயிக்குரியது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவ்வாறான தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. திரு. அஷ்ரப் அவர்கள் இந்தக் கவிதையினூடாக காத்தாயியைப் பற்றி எழுதியிருக்கும் சில வரிகள் இதோ

மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து
காலை மாலை வேளை மறந்து
வீதிகள் தோறும் விசராய் திரவாள்
காத்தாயி..
அமர்களமான அவளது வாழ்வில்
நோயும் இல்லை நொடியும் இல்லை
நலமாய் வாழ நாங்கள் நாடும்
மாத்திரை இல்லை மருந்தும் இல்லை
பறபறவென்று பறந்து வாழும்
கலியுகர்போலே அவளிடம் - அந்த
காசும் இல்லை கவலையும் இல்லை (பக்கம் 39)

நமது அன்றாட வாழ்வியல் யுத்தமுனை வார்த்தைகளைக் கொண்டே கழிகின்றது. துப்பாக்கிகள், குண்டுகள்தான் எமது உணர்வுகளாக இருக்கின்றன. ஆனால் வெற்றி கிடைப்பதற்காக வேண்டி சிறுவர்களையும், பெண்களையும் சீரழிப்பது தர்மமாகாது. அது போல நிம்மதியைக் குலைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது வீரமும் அல்ல. அப்பாவிகளை அழிக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இப்பொழுது
போராட்டந்தான்
ஒரு பாசையாக
விளங்குகிறது..
துப்பாக்கிகளும்
ரவைகளும்
குண்டுகளும்
தீவைப்புந்தான்
எமது உணர்வுகளை
வெளிக்காட்டுகின்றன! (பக்கம் 46)

ஏ ஆக்கிரமிப்பாளர்களே எனும் கவிதை சமாதானத்துக்கு தூது விடுவதாய் அமைந்துள்ளது. சமாதானத்தின் சின்னம் புறா. அமைதிக்கு உதாரணம் பூக்கள். இவைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதிலாக இருந்துவிட்டால் நமது தேசத்தின் ஆறாவடு என்றோ நீங்கியிருக்கும். அதைவிட்டுவிடாததன் காரணமாக யுத்ததத்தால் இன்று நாடு சின்னா பின்னமாகியிருக்கிறது. இவ்வாறான கருத்து புலப்பட தனது கவி வரிகளை கீழுள்ளவாறு எழுதியுள்ளார் திரு. அஷ்ரப் அவர்கள்.

இதய வேலிகளைப்
பிய்த்தெறிந்துவிட்டு
உங்கள்
துப்பாக்கிகளில்
ரவைகளுக்குப் பதிலாய்
மலர்ச் சொண்டுகளை
சூடுங்கள்..
ராக்கட்டுகளுக்குப் பதிலாய்
தோள்களில்
புறாக்களைச்
சுமந்து வாருங்கள்..
உங்கள் சொந்த தேசத்தின்
சுதந்திரத்தை
மீண்டும்; தருகிறோம்!
மீட்டுத் தருகிறோம்!! (பக்கம் 50)

மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக புத்தகத்தைத் தந்திருக்கின்ற நூலாசிரியர் திருமலை அஷ்ரப்; அவர்கள் பாராட்டுக்குரியவர். யுத்த கால நிகழ்வுகளை தனது கவிதைகளினூடாக சொல்லியிருக்கிறார். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமய நாமும் வாழ்த்துகிறோம்.!!!

நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - ashraff1973@gmail.com
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150

17. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார்.



2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.


எரிமலை குமுறும் இதய ஆழியின் சங்கமத்தில் என்ற தனது உரையில் நூலாசிரியர் அஸீஸ் அவர்கள் கீழுள்ளவாறு கூறுகின்றார். ஊழல்களின் உறைவிடமாகிய உலகின் மானிடனாகப் பிறந்த மதிப்பீடு இன்னும்... இதய ஆழியில் எழும் சுனாமி அலையாக என்னுள் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மானிடனாகப் பிறந்ததை விடவும் கல்லாக, ஏன் புல்லாகவேனும் படைக்கப்பட்டிருந்தால் கூட யாருக்காவது பிரயோசனப் பட்டிருப்பேனே என ஆதங்கப்பட்டு இதயத்தால் அழுதுகொண்ட உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் குமுறல் ஆன்மீக வெளிப்பாட்டின் உச்சம் மட்டுமல்ல சமூகப் பார்வையின் உண்மையான சலனம் என்று கூடச் சொல்லலாம். அந்தளவுக்கு அநியாய அரக்கன் கொடிகட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மாய உலகின் மானிடனாகப் படைக்கப்படும் முன் எழுந்த ஒரு விமர்சனம் இருபத்து நான்கு மணித்தியாலமும் நினைவிலேயே சதா மூழ்கி உனக்காகவே வாழ்ந்துவரும் எங்களைவிடவா இரத்தம் சிந்தி இறுமாப்போடு உன்னை மறந்து வாழும் ஊழல் பேர்வழிகளையா உலகில் படைக்கப் போகிறாய் என்ற வானவரின் யதார்த்தமான கேள்வியில் எவ்வளவு தூரம் உண்மை பொதிந்திருக்கிறது?... என்ற ஆதங்கம் மானிடனாகப் பிறந்து, பாவத்தில் மூழ்கி தம் வாழ்வை சீரழித்துக் கொள்வோருக்கான உபதேசமாக இருக்கிறது என்கிறார்.

பாடலின் முக்கிய சில அடிகள் இவ்வாறு..

இரண்டாயிரத்து நான்கு மார்கழி மாதம்
இருபத்தி ஆறு அதிகாலை, அவ்வேளை
சரமாரியாய் ஆழி அலைமே லெழுந்து
சாதனை புரிந்தஇவ் வரலாறு கேளீர்.. (பக்கம் 12)

என்ற இவ்வரி ஆழிப்பேரலை நடந்த காலத்தை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்திப் போகிறது. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியதை நூலாசிரியர் வெளியிட்ட இந்நூலிலும், இறுவட்டிலும் தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பச்சிளம் பாலகர் முதல் பெண்கள், வயோதிபர்கள் என்று பால், வயது வேறுபாடின்றி கடலலையின் கோரப் பசிக்கு இரையான காட்சிகள் கல்நெஞ்சத்திலும் ஈரத்தை கசியச் செய்யும். அந்தளவுக்கு கட்டிடங்களின் சிதைவுகளாலும், சுனாமி அலையின் வேகமான வீச்சாலும் உயிரிழந்தோர் பலர். உலகம் விஞ்ஞான வளர்ச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இயற்கையின் சீற்றத்தை நிறுத்த மனிதனால் முடியாது. பின்வரும் பாடல் வரிகள் அதனை நிதர்சனமாக்குகின்றது.

விஞ்ஞானம் வளர்ந்ததென வீறாப்பு பேசும்
வெகுளிகளை மூக்கின்மேல் விரல் வைக்கச்செய்த
அஞ்சாது, அழையாத விருந்தாளியாகி
அலைவந்து ஓடோட விரட்டியது கேளீர் (பக்கம் 12)

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகாம்களில் வாழ்ந்துவரும் காட்சியும் தத்ரூபமாக இறுவட்டில் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, மாளிகைக்காடு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில் போன்ற ஊர்களில் நிகழ்ந்த இக்கொடூர காட்சிகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தாய் தந்தையர் யார் என்று அறிய முடியாத சிறார்களை மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடித்து சேர்த்த சம்பவங்கள்கூட நடந்தேறியிருக்கின்றன. அதற்கான பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

அம்மணமாய் சிலபேரை அலையடித்துச் செல்ல
அழு குழந்தை இந்நாளில் உயிரோடு மீள
அம்மா யார்? அப்பா யார்? மரபணுவின் ஆய்வில்
அசல் கண்டு சேர்ப்பித்த அதிசயமே கேளீர் (பக்கம் 13)

நீரிலே மிதந்த உயிரற்ற உடல்களையும், சேதமாகிப் போன ஊர்களையும் ஒருங்கே சுத்தப்படுத்தி உதவியவர்களுக்கும் நூலாசிரியர் இந்நூலினூடு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதுபோல கரையோர மக்கள் கதிகலங்கி இருக்கும் போது கடுகளவும் பாதிப்புறாதோர் குறுக்கு வழியில் முன்னேறவும் சுனாமி உதவிசெய்த பரிதாபமும் கண்கூடு. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தபோதும் அதை சில சதிகாரர் தமக்காகப் பயன்படுத்திக் கொண்ட சோகக் கதைகளும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மக்கள் செய்கின்ற பாவங்களே காரணம் என்கிறார் நூலாசிரியர். அவ்வாறு இறைவனை மறந்து செயற்பட்டதால் வந்தவினை தான் சுனாமி என்பதை கீழுள்ள பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

பொய், களவு, காமங்கள், சூது, கொலை, வட்டி
பொறாமை, கோள், வஞ்சகம், போட்டி மனப்பான்மை
வையக வாழ்வினிலே வந்தவினை தானே
வரலாற்றில் நாம் பெற்ற சுனாமியதன் சீற்றம் (பக்கம் 18)

மேற்குறிப்பிட்ட விடயங்களை புத்தக வடிவிலும், இறுவட்டிலும் தந்திருக்கின்ற நூலாசிரியர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதே போல் மிகவும் சிறப்பாக இக்காவியத்தை பாடியுள்ள இசைவாணர் எம்.எம். அப்துல் கபூர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்த அற்புதமான கண்ணீர்க் காவிய நூலை படிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.!!!

நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
நூலாசிரியர் - கலாபூஷணம் கே. எம். ஏ. அஸீஸ்
தொலைபேசி - 067 7913248, 075 2529532
வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம்
விலை - 150/=

Wednesday, January 4, 2012

16. நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.

'எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர 'நல்வழி' என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன' என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நிலாச்சோறு சாப்பிட்டிராத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். சிறுவர்களுக்கான கதையிலும் சரி, கவிஞர்களின் கற்பனையிலும் சரி, பெண்களை உவமிப்பதிலும் சரி நிலா பிரதான இடத்தை வகிக்கின்றது. நிலாவை உவமித்து எழுதப்பட்ட பாடல்களும் நிறைய இருக்கின்றன. இந்நூலாசிரியரும் நிலவே இறங்கி ஓடிவா (பக்கம் 02) என்ற கவிதையில் நிலா பற்றி கூறியமை பின்வருமாறு அமைகிறது.

வட்ட நிலா வானத்திலே
எட்ட நின்று தோணுது பார்
கிட்ட வரும் நாளினிலே
எட்டி அதைப் பிடித்திடுவேன்

மனிதன் தீயவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்து நல்வழியில் வாழ வேண்டும். தான் உழைப்பது தொடக்கம் அனைத்திலும் நேர்மை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்தால்தான் குழந்தைகளும் நிச்சயமாக சிறந்தவர்களாக காணப்படுவார்கள். பிள்ளைகள் நன்கு கல்வி கற்று நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை நல்வழி (பக்கம் 03) என்ற கவிதை சுட்டி நிற்கிகிறது.

பற்பல அற்புதம் கற்பிக்கும் விஞ்ஞானம்
பாலகரே நாம் பயின்றிட வேண்டும்
நல்லவை நாடியும் தீயவை போக்கியும்
நற்பணி புரிந்து உயர்ந்திடுவோமே

ஒருவனுக்கு எவ்வளவுதான் பொருள், செல்வம் இருந்தாலும் கல்விச் செல்வம்தான் அவனை மதிப்புடையவனாக ஆக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதும் இதனால்தான். கல்வியை சரியாக பெறாதவர்கள் நிராதரவான நிலையில் இருப்பார்கள். கல்வியை முறைப்படி பெற்றவர்கள் என்றும் நிம்மதியாக இருப்பார்கள். ஆகவே கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்வியை மறக்காதிரு (பக்கம் 07) என்ற கவிதையை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சபாரெத்தினம் அவர்கள்.

அன்பும் அறனும் நம் சொத்து
அறிவு ஒளியே எம் பேறு
என்றும் எதையும் இழந்தாலும்
நன்றே கல்வி மறக்காதிரு

உலக மக்களில் அநேகர் போலி முகத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பிறரை ஏமாற்றி பிழைப்பதற்காக பசுத்தோல் போர்த்திய புலிகள் எம்மத்தியில் நிறையவே உலா வருகின்றன. அவர்களை கண்டு கொள்வது கூட கஷ்டமான காரியம். அருகிலேயே இருந்துவிட்டு ஆபத்தில் சிக்க வைத்துவிடும் சந்தரப்பவாதிகள் பற்றி சுயரூபம் (பக்கம் 13) என்ற கவிதை பின்வருமாறு சொல்கிறது.

எட்ட நின்றால் இனிப்பிருக்கும்
தொட்டு ரசிக்க மனமிருக்கும்
கிட்ட வந்தால் கசப்பிருக்கும்
பட்டு நொந்தால் பலன் தெரியும்

நல்லோர் போலத் தெரிகின்றார்
நம்பும் படியே பழகுகின்றார்
சூது வாது வஞ்சனையால்
சுயரூபம் காட்டுகின்றார்

சிறுவர் இலக்கியம், சிறுகதை போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் திரு. சபாரெத்தினம் அவர்கள் இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நல்வழி 
நூல் வகை - சிறுவர் கவிதை
நூலாசிரியர் - ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வெளியீடு - வனசிங்க பிரிண்டர்ஸ்
தொலைபேசி - 0652246781
விலை - 70/=