Tuesday, February 28, 2012

18. அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஏ.எப்.எம். அஷ்ரப் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமலை அஷ்ரப், நேஹா, புரட்சி மகன், போன்ற பெயர்களில் கவிதை எழுதி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 64 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் 21 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், இன்றைய ஈழத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அல்லற்படுகின்ற மக்கள் பற்றியுமான பதிவுகளாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட விடயங்களுள், கவிஞரது சொந்த மாவட்டமான திருகோணமலைப் பிரதேசத்தின் சிதைவு கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை புலப்படுகிறது என்கிறார்.

மனம் திறந்து சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சிறுவயதிலிருந்து எனக்கு கவிதையில் ஈடுபாடு உண்டு. பாடசாலைக் காலத்தில் எனது தந்தையான கலைப் பிரியன் பரீட் அவர்களது வழிகாட்டலின் கீழ் அவ்வப்போது சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சியில் மஹாகவியும், நீலாவணனும் ஓர் சமூக ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பில் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது எனது கவிதை ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இக்கவிதைத்தொகுதி. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மஹாகவி, நீலாவணன் ஆகியோரின் கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவிதை வெளிப்பாட்டுக்கு காரணமாகியது. எனது கவிதைகளில் காணத்தகும் உருவ, உள்ளடக்கச் சிந்தனைகளுக்கு அவர்களது செல்வாக்கும் ஒரு காரணமே என்கிறார்.

நான் என்ற கவிதையில் போர்க்கால சூழல் தந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இயற்கையையும், இலக்கியத்தையும் காதலிக்கும் ஒரு சாதாரண கவிஞன், கனவுகள் சுமந்து இன்பக் கற்பனையில் மிதக்க விரும்புகிறான். ஆனாலும் திறந்த வெளிச்சிறையாக உலகம் மாறிவிட்டதால் தனது கற்பனைகள் எதுவும் ஈடேறாமல் செயற்கையான வாழ்வினை வாழ்வதாக திரு. அஷ்ரப் அவர்கள் கீழுள்ள வரிகள் கொண்டு புரிய வைக்க முனைகிறார்.

கொலையும்
கொலைவெறியும் மிகைத்து
மனிதம் மறைந்துவிட்ட - இத்
து(ர்)ப்பாக்கிய தேசத்தில்
கானகத்தில் சிறைப்பட்ட
பறவைகளாய்
சுதந்திர நாட்டின்
அடிமைகளாய் நாம் (பக்கம் 30)

தினம் தோறும் நாம் பலரைச் சந்திக்கிறோம். அவர்களில் எல்லோரும் நம்மோடு ஐக்கியப்பட்டவர்களல்லர். அதே போலதான் காத்தாயி என்ற பாத்திரம். காத்தாயி என்பவள்; பொதுப் பாதையை தினமும் கூட்டித் துப்பரவு செய்யும் பெண் என்பதனை இக்கவிதை மூலம் அறியமுடிகிறது. காலை வேலைகளிலேயே பாதைகளை சுத்தப்படுத்தி பொது மக்கள் அசௌகரியம் அடையா வண்ணம் சூழலை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு காத்தாயிக்குரியது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவ்வாறான தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. திரு. அஷ்ரப் அவர்கள் இந்தக் கவிதையினூடாக காத்தாயியைப் பற்றி எழுதியிருக்கும் சில வரிகள் இதோ

மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து
காலை மாலை வேளை மறந்து
வீதிகள் தோறும் விசராய் திரவாள்
காத்தாயி..
அமர்களமான அவளது வாழ்வில்
நோயும் இல்லை நொடியும் இல்லை
நலமாய் வாழ நாங்கள் நாடும்
மாத்திரை இல்லை மருந்தும் இல்லை
பறபறவென்று பறந்து வாழும்
கலியுகர்போலே அவளிடம் - அந்த
காசும் இல்லை கவலையும் இல்லை (பக்கம் 39)

நமது அன்றாட வாழ்வியல் யுத்தமுனை வார்த்தைகளைக் கொண்டே கழிகின்றது. துப்பாக்கிகள், குண்டுகள்தான் எமது உணர்வுகளாக இருக்கின்றன. ஆனால் வெற்றி கிடைப்பதற்காக வேண்டி சிறுவர்களையும், பெண்களையும் சீரழிப்பது தர்மமாகாது. அது போல நிம்மதியைக் குலைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது வீரமும் அல்ல. அப்பாவிகளை அழிக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இப்பொழுது
போராட்டந்தான்
ஒரு பாசையாக
விளங்குகிறது..
துப்பாக்கிகளும்
ரவைகளும்
குண்டுகளும்
தீவைப்புந்தான்
எமது உணர்வுகளை
வெளிக்காட்டுகின்றன! (பக்கம் 46)

ஏ ஆக்கிரமிப்பாளர்களே எனும் கவிதை சமாதானத்துக்கு தூது விடுவதாய் அமைந்துள்ளது. சமாதானத்தின் சின்னம் புறா. அமைதிக்கு உதாரணம் பூக்கள். இவைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதிலாக இருந்துவிட்டால் நமது தேசத்தின் ஆறாவடு என்றோ நீங்கியிருக்கும். அதைவிட்டுவிடாததன் காரணமாக யுத்ததத்தால் இன்று நாடு சின்னா பின்னமாகியிருக்கிறது. இவ்வாறான கருத்து புலப்பட தனது கவி வரிகளை கீழுள்ளவாறு எழுதியுள்ளார் திரு. அஷ்ரப் அவர்கள்.

இதய வேலிகளைப்
பிய்த்தெறிந்துவிட்டு
உங்கள்
துப்பாக்கிகளில்
ரவைகளுக்குப் பதிலாய்
மலர்ச் சொண்டுகளை
சூடுங்கள்..
ராக்கட்டுகளுக்குப் பதிலாய்
தோள்களில்
புறாக்களைச்
சுமந்து வாருங்கள்..
உங்கள் சொந்த தேசத்தின்
சுதந்திரத்தை
மீண்டும்; தருகிறோம்!
மீட்டுத் தருகிறோம்!! (பக்கம் 50)

மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக புத்தகத்தைத் தந்திருக்கின்ற நூலாசிரியர் திருமலை அஷ்ரப்; அவர்கள் பாராட்டுக்குரியவர். யுத்த கால நிகழ்வுகளை தனது கவிதைகளினூடாக சொல்லியிருக்கிறார். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமய நாமும் வாழ்த்துகிறோம்.!!!

நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - ashraff1973@gmail.com
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150

17. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார்.



2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.


எரிமலை குமுறும் இதய ஆழியின் சங்கமத்தில் என்ற தனது உரையில் நூலாசிரியர் அஸீஸ் அவர்கள் கீழுள்ளவாறு கூறுகின்றார். ஊழல்களின் உறைவிடமாகிய உலகின் மானிடனாகப் பிறந்த மதிப்பீடு இன்னும்... இதய ஆழியில் எழும் சுனாமி அலையாக என்னுள் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மானிடனாகப் பிறந்ததை விடவும் கல்லாக, ஏன் புல்லாகவேனும் படைக்கப்பட்டிருந்தால் கூட யாருக்காவது பிரயோசனப் பட்டிருப்பேனே என ஆதங்கப்பட்டு இதயத்தால் அழுதுகொண்ட உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் குமுறல் ஆன்மீக வெளிப்பாட்டின் உச்சம் மட்டுமல்ல சமூகப் பார்வையின் உண்மையான சலனம் என்று கூடச் சொல்லலாம். அந்தளவுக்கு அநியாய அரக்கன் கொடிகட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மாய உலகின் மானிடனாகப் படைக்கப்படும் முன் எழுந்த ஒரு விமர்சனம் இருபத்து நான்கு மணித்தியாலமும் நினைவிலேயே சதா மூழ்கி உனக்காகவே வாழ்ந்துவரும் எங்களைவிடவா இரத்தம் சிந்தி இறுமாப்போடு உன்னை மறந்து வாழும் ஊழல் பேர்வழிகளையா உலகில் படைக்கப் போகிறாய் என்ற வானவரின் யதார்த்தமான கேள்வியில் எவ்வளவு தூரம் உண்மை பொதிந்திருக்கிறது?... என்ற ஆதங்கம் மானிடனாகப் பிறந்து, பாவத்தில் மூழ்கி தம் வாழ்வை சீரழித்துக் கொள்வோருக்கான உபதேசமாக இருக்கிறது என்கிறார்.

பாடலின் முக்கிய சில அடிகள் இவ்வாறு..

இரண்டாயிரத்து நான்கு மார்கழி மாதம்
இருபத்தி ஆறு அதிகாலை, அவ்வேளை
சரமாரியாய் ஆழி அலைமே லெழுந்து
சாதனை புரிந்தஇவ் வரலாறு கேளீர்.. (பக்கம் 12)

என்ற இவ்வரி ஆழிப்பேரலை நடந்த காலத்தை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்திப் போகிறது. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியதை நூலாசிரியர் வெளியிட்ட இந்நூலிலும், இறுவட்டிலும் தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பச்சிளம் பாலகர் முதல் பெண்கள், வயோதிபர்கள் என்று பால், வயது வேறுபாடின்றி கடலலையின் கோரப் பசிக்கு இரையான காட்சிகள் கல்நெஞ்சத்திலும் ஈரத்தை கசியச் செய்யும். அந்தளவுக்கு கட்டிடங்களின் சிதைவுகளாலும், சுனாமி அலையின் வேகமான வீச்சாலும் உயிரிழந்தோர் பலர். உலகம் விஞ்ஞான வளர்ச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இயற்கையின் சீற்றத்தை நிறுத்த மனிதனால் முடியாது. பின்வரும் பாடல் வரிகள் அதனை நிதர்சனமாக்குகின்றது.

விஞ்ஞானம் வளர்ந்ததென வீறாப்பு பேசும்
வெகுளிகளை மூக்கின்மேல் விரல் வைக்கச்செய்த
அஞ்சாது, அழையாத விருந்தாளியாகி
அலைவந்து ஓடோட விரட்டியது கேளீர் (பக்கம் 12)

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகாம்களில் வாழ்ந்துவரும் காட்சியும் தத்ரூபமாக இறுவட்டில் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, மாளிகைக்காடு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில் போன்ற ஊர்களில் நிகழ்ந்த இக்கொடூர காட்சிகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தாய் தந்தையர் யார் என்று அறிய முடியாத சிறார்களை மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடித்து சேர்த்த சம்பவங்கள்கூட நடந்தேறியிருக்கின்றன. அதற்கான பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

அம்மணமாய் சிலபேரை அலையடித்துச் செல்ல
அழு குழந்தை இந்நாளில் உயிரோடு மீள
அம்மா யார்? அப்பா யார்? மரபணுவின் ஆய்வில்
அசல் கண்டு சேர்ப்பித்த அதிசயமே கேளீர் (பக்கம் 13)

நீரிலே மிதந்த உயிரற்ற உடல்களையும், சேதமாகிப் போன ஊர்களையும் ஒருங்கே சுத்தப்படுத்தி உதவியவர்களுக்கும் நூலாசிரியர் இந்நூலினூடு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதுபோல கரையோர மக்கள் கதிகலங்கி இருக்கும் போது கடுகளவும் பாதிப்புறாதோர் குறுக்கு வழியில் முன்னேறவும் சுனாமி உதவிசெய்த பரிதாபமும் கண்கூடு. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தபோதும் அதை சில சதிகாரர் தமக்காகப் பயன்படுத்திக் கொண்ட சோகக் கதைகளும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மக்கள் செய்கின்ற பாவங்களே காரணம் என்கிறார் நூலாசிரியர். அவ்வாறு இறைவனை மறந்து செயற்பட்டதால் வந்தவினை தான் சுனாமி என்பதை கீழுள்ள பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

பொய், களவு, காமங்கள், சூது, கொலை, வட்டி
பொறாமை, கோள், வஞ்சகம், போட்டி மனப்பான்மை
வையக வாழ்வினிலே வந்தவினை தானே
வரலாற்றில் நாம் பெற்ற சுனாமியதன் சீற்றம் (பக்கம் 18)

மேற்குறிப்பிட்ட விடயங்களை புத்தக வடிவிலும், இறுவட்டிலும் தந்திருக்கின்ற நூலாசிரியர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதே போல் மிகவும் சிறப்பாக இக்காவியத்தை பாடியுள்ள இசைவாணர் எம்.எம். அப்துல் கபூர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்த அற்புதமான கண்ணீர்க் காவிய நூலை படிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.!!!

நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
நூலாசிரியர் - கலாபூஷணம் கே. எம். ஏ. அஸீஸ்
தொலைபேசி - 067 7913248, 075 2529532
வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம்
விலை - 150/=

Wednesday, January 4, 2012

16. நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.

'எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர 'நல்வழி' என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன' என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நிலாச்சோறு சாப்பிட்டிராத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். சிறுவர்களுக்கான கதையிலும் சரி, கவிஞர்களின் கற்பனையிலும் சரி, பெண்களை உவமிப்பதிலும் சரி நிலா பிரதான இடத்தை வகிக்கின்றது. நிலாவை உவமித்து எழுதப்பட்ட பாடல்களும் நிறைய இருக்கின்றன. இந்நூலாசிரியரும் நிலவே இறங்கி ஓடிவா (பக்கம் 02) என்ற கவிதையில் நிலா பற்றி கூறியமை பின்வருமாறு அமைகிறது.

வட்ட நிலா வானத்திலே
எட்ட நின்று தோணுது பார்
கிட்ட வரும் நாளினிலே
எட்டி அதைப் பிடித்திடுவேன்

மனிதன் தீயவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்து நல்வழியில் வாழ வேண்டும். தான் உழைப்பது தொடக்கம் அனைத்திலும் நேர்மை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்தால்தான் குழந்தைகளும் நிச்சயமாக சிறந்தவர்களாக காணப்படுவார்கள். பிள்ளைகள் நன்கு கல்வி கற்று நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை நல்வழி (பக்கம் 03) என்ற கவிதை சுட்டி நிற்கிகிறது.

பற்பல அற்புதம் கற்பிக்கும் விஞ்ஞானம்
பாலகரே நாம் பயின்றிட வேண்டும்
நல்லவை நாடியும் தீயவை போக்கியும்
நற்பணி புரிந்து உயர்ந்திடுவோமே

ஒருவனுக்கு எவ்வளவுதான் பொருள், செல்வம் இருந்தாலும் கல்விச் செல்வம்தான் அவனை மதிப்புடையவனாக ஆக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதும் இதனால்தான். கல்வியை சரியாக பெறாதவர்கள் நிராதரவான நிலையில் இருப்பார்கள். கல்வியை முறைப்படி பெற்றவர்கள் என்றும் நிம்மதியாக இருப்பார்கள். ஆகவே கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்வியை மறக்காதிரு (பக்கம் 07) என்ற கவிதையை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சபாரெத்தினம் அவர்கள்.

அன்பும் அறனும் நம் சொத்து
அறிவு ஒளியே எம் பேறு
என்றும் எதையும் இழந்தாலும்
நன்றே கல்வி மறக்காதிரு

உலக மக்களில் அநேகர் போலி முகத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பிறரை ஏமாற்றி பிழைப்பதற்காக பசுத்தோல் போர்த்திய புலிகள் எம்மத்தியில் நிறையவே உலா வருகின்றன. அவர்களை கண்டு கொள்வது கூட கஷ்டமான காரியம். அருகிலேயே இருந்துவிட்டு ஆபத்தில் சிக்க வைத்துவிடும் சந்தரப்பவாதிகள் பற்றி சுயரூபம் (பக்கம் 13) என்ற கவிதை பின்வருமாறு சொல்கிறது.

எட்ட நின்றால் இனிப்பிருக்கும்
தொட்டு ரசிக்க மனமிருக்கும்
கிட்ட வந்தால் கசப்பிருக்கும்
பட்டு நொந்தால் பலன் தெரியும்

நல்லோர் போலத் தெரிகின்றார்
நம்பும் படியே பழகுகின்றார்
சூது வாது வஞ்சனையால்
சுயரூபம் காட்டுகின்றார்

சிறுவர் இலக்கியம், சிறுகதை போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் திரு. சபாரெத்தினம் அவர்கள் இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நல்வழி 
நூல் வகை - சிறுவர் கவிதை
நூலாசிரியர் - ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வெளியீடு - வனசிங்க பிரிண்டர்ஸ்
தொலைபேசி - 0652246781
விலை - 70/=

Saturday, December 31, 2011

15. மகுட வைரங்கள் - கவிதைத் தொகுப்பு

மகுட வைரங்கள் கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

பதுளை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது நித்தியஜோதி அவர்களின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுப்பு. கல்வியமைச்;சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்;கியம் வாசிக்கத் தந்தவர். ... நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கௌரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பௌர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.

அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பௌஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.

காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

சிங்கார சிரிப்புகள்
நாகரீக மூட்டத்தினுள்ளே
முகம் கழுவும் நாளில்
வெட்கத்திற்கு மட்டும்
மரியாதை தந்தவனே..
உந்தன் வேள்வியால்
நானே
மனைவியாகிறேன்
மன ஊஞ்சலில்...

காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ ... என்றும் நான்... (பக்கம் 46) என்ற கவிதையிலும் நயமாக உரைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கீழுள்ள அடிகளைக் குறிப்பிடலாம்.

புரிந்து கொண்டும்
பதிலைத் தேடுகின்றாய்..
நானோ...
வினாவைத் தேடுகின்றேன்..

கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி
வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0729068724
விலை - 200 ரூபாய்



பதிவுகள் வலைத்தளத்தில் இந்த விமர்சனத்தைப் பார்வையிட...

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=549:2011-12-29-03-54-12&catid=14:2011-03-03-17-27-43

Friday, December 9, 2011

14. கரை தேடும் அலை - கவிதைத் தொகுதி

கரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. அழகிய அட்டைப் படத்தோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியாக கரைதேடும் அலை என்ற கவிதைத் தொகுதியை புவிலக்ஷி வெளியிட்டிருக்கிறார். உள்ளக்கிடக்கைகள் என்ற கவிதைத் தொகுதியை இவர் ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல கவிஞர்களை உருவாக்கிய கிழக்கு மண்ணில் இவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர். டிசைன் லப் வெளியீடாக, 57 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 55 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல கவிதைத் துளிகளும் உள்ளடங்குகின்றன.



நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து, யாரும் இல்லையே, சுனாமியே, காதல் தேவதை, கலங்காதே, சவால், தூரத்துறவு, புரியாத புதிர், வேதனை, கரை தேடும் அலை, என் அழகே, வாழ்த்துக்கள், உறவு தேடும் உள்ளம், துயரம், அம்மாவே, அழியாத நினைவுகள், ஏழைப் போராளி, நான் இயேசு அல்ல, பலமேது?, இறுதி வரை, நீயும் பறந்திடுவாய், உனக்காக, கவிஞனின் காதலி, சாயம், பிரிவுத் துயர், சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு, இடைவெளி, சுவை, கனவு, கேட்க யாருண்டு, உயர்வு, பிரசவம், கிடைக்குமா?, நிழல் இல்லாத நினைவு, உணர்வாய், துன்பமில்லை, தரிசனம், வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், எதற்காக?, ப்ரார்த்தனை, காத்திருப்பு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

திமிலைத் துமிலன் அவர்கள் கவிதையும் இந்தத் தொகுதியும் என்ற தலையங்கத்தில் கருத்துரையொன்ரை வழங்கியுள்ளார். அம்பிளாந்துறையூர் அரியம் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் கவிதைகள் என தனது வாழ்த்துரையை வழங்கியுள்ளார். ம. புவிலக்ஷி தனதுரையில் ``இரண்டாவது தொகுப்பாய் வெளியாகும் கரை தேடும் அலையில் என் உணர்வுகள் மட்டுமல்ல சில உண்மைகளும் அலைகளாய்...'' வெளிப்படுகின்றன என்கிறார்.

சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவாக எல்லா கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். இத்தனை வருடங்களாகியும் சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் எச்சங்களாகவே இருக்கின்றன. சொத்திழந்து சொந்தமிழந்து வாடும் பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டபடியும், நிரந்தரமான சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த தனயனின் சோகம் நினைவலைகள் என்ற கவிதையில் (பக்கம் 01) இவ்வாறாக கவியாக்கப்பட்டிருக்கிறது.

கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உன்
கரங்களால்
அள்ளிக்கொண்டதும்
நான் நிர்வாணமாய்
நின்றதும்...
மாறாத ரணமாய்...


அலைச் சப்தங்களில்
என் உறவுகளின்
அலறல் கேட்பதால்
கடலுக்குச் செல்வதையே
தவிர்த்துவிட்டேன்
இப்போதெல்லாம்...

ஒரு தந்தையின் பரிவோடு வடிக்கப்பட்டிருக்கும் கவலை என்ற கவிதையில் (பக்கம் 05) ஒரு அழகிய சிறுமியின் படம் கவிதைக்கு உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

என் பிஞ்சு நிலாவின்
உறக்கம் கலைந்ததில்
என் உள் நெஞ்சம்
வேதனையில் வெதும்புகிறது..

காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிப்பது போல் காதல் (பக்கம் 07) என்ற கவிதையினூடாக புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். காதலியின் குரல் ஓசை தன் தலையணைக்குள் கேட்கும் என்பதை கவிநயத்தோடு கூறும் அவரது மொழிநடை இதோ...

தலையணைக்குள்
ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய்
விழியுறக்கம் மறந்து
விழித்துக் கிடக்கிறேன்...

காலம் எதையும் மாற்றக் கூடியது. அது மனித மனங்களையும் மாற்றவல்லது. இன்றைய நண்பர்களை எண்ணி உன் இரகசியங்களைச் சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரியாக மாறலாம் என்றொரு மூத்தொர் வாக்கு உண்டு. அதற்கிணங்க பகைவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் என்ற தத்துவத்தை விளக்குவதாக சவால் என்ற கவிதை (பக்கம் 14) அமைந்திருக்கிறது.

எந்த மனிதனையும் ஓரிரு நாளில் நல்லவர் என நம்பிவிடாதே! அந்த நம்பிக்கையே உன்னை ஏமாளியாக மாற்றலாம்.. கெட்டவர்கள் கூட நல்லவர் தான். கெட்டவர் என்பது நிரூபனமாகும் வரை..

காதலியின் பிரிவு எத்தகைய கொடுமை என்பதையே உணர்வு என்ற கவிதை (பக்கம் 43) சுட்டி நிற்கிறது. உலகத்தில் சந்தோஷம் தரும் அத்தனை விடயங்களும் காதலியின் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கும்போது காதலியின் பிரிவு மாத்திரம் வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

புல் சிரித்தது
பூ சிரித்தது..
புல்லின் மீது
பனித்துளி சிரித்தது..

காற்று இனித்தது..
காதல் இனித்தது..
ஏனோ...
அவளுடைய பிரிவு மட்டும் கசத்தது...

உள்ளக்கிடக்கைகள், கரை தேடும் அலை என்ற இரு கவிதைத் தொகுதிகளைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்பதே எமது அவா. அவரது முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கரை தேடும் அலை (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ம. புவிலக்ஷி
வெளியீடு - டிசைன் லப்
முகவரி - 190, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 15.
விலை - 200/=

Friday, September 30, 2011

13. இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.

"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

இப்படிக்கு அன்புள்ள அம்மாவுக்கு என்கிற கவிநடையில் அமைந்த திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் இலக்கியப் படைப்பின் நாயகியும் ஒரு வயதான அம்மா. இந்த மூதாட்டி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து டென்டார்க்கில் வாழும் நாயகி. இம் மூதாட்டியின் மிகப்பெரும் அவலம் தனது மகனை ஈழத்தில் இழந்ததுதான். அவரின் இறப்புக் காலம் நெருங்க நெருங்க அந்தப் பிள்ளையின் நினைவுகள் இம் மூதாட்டியை அல்லல்படுத்துகின்றது. அவர் அதனை தன் மனக்குமுறல்ளை கொட்டும் ஒரு வடிகாலாக, துயரங்களைக் கடிதங்களாக எழுதி தன்னை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு ஓட்டமாகத்தான் இந்த இலக்கிய வடிவத்தை அச்சில் கொண்டுவந்துள்ளார்.

மூதாட்டி தன் வாழ்வை கடிதம் மூலம் மகனுடன் பகிர்ந்துகொள்வதினூடாக டென்மார்க் தேசத்து வசதியான வாழ்வும், மருத்துவ வசதிகளும், மனித உறவுகளின் தொடர்புகளும் பங்களிப்புக்களும் இந்த இலக்கியத்தில் பதிவாகின்றன. திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் தாங்கள் கண்டு கொண்ட வாழ்க்கையை கூடிப்பழகிய மனிதர்களின் உறவுகளை இங்கு நன்கு பதிவுசெய்கிறார்" என்று கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் குறிப்பிடுகின்றார்.

திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் நுழைவாயிலில் என்ற தனதுரையில் "யுத்தத்திற்கு பிள்ளைகளைக் காவு கொடுத்த ஆயிரம் ஆயிரம் என் அம்மாக்கள். இவர்கள் வரிசையில் இந்த யசோ அம்மா - இப்படிக்கு அன்புள்ள அம்மாவின் கதை நாயகி. ... புத்திர சோகம்! இது நம் தேசத்தின் சாபம்!! இந்த வலி - என் அப்பா அம்மா பட்ட வலி. என் மாமா மாமி பட்ட வலி. இது என்னையும் துரத்திய போது என்னுள் எழுந்ததுதான் இப்படிக்கு அன்புள்ள அம்மா. இது டென்னிஷ் மொழியில் கருவானது" என்கிறார்.

1. முதியோர் இல்லம் 2. ஹரி என் கனவில் வந்தான் 3. அந்த சிவத்த ரங்குப்பெட்டி 4. எனது பேரப்பிள்ளை 5. அனைத்தும் இழந்தோம் 6. அகதி முகாமில் எங்கள் வாழ்வு 7. என் உதய சூரியனே 8. பாசத்தின் போராட்டம் 9. எண்பது வயதில் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்தேன் 10. போய் வருகிறேன் மகனே ஆகிய தலைப்புக்களில் இப்படிக்கு அன்புள்ள அம்மா என்கின்ற காவியக் கவிதை நூல் விரிந்து செல்வதை அவதானிக்கலாம்.

டென்மார்க்கில் தனியாக காலம் கழிக்கும் அந்த மூதாட்டிக்கு இயற்கையின் அன்றாட நிகழ்வுகள் கூட தன் நிலையை உணர்த்துவதாய் கற்பனைகள் எழுந்து வதைக்கின்றன. வழமையாக நிகழும் சூரிய அஸ்தமனத்தைக்கூட தனது மகனின் பிரிவுத் துயருடன் ஒப்பிட்டு கீழுள்ளவாறு வருந்துகிறார் அவர்.

கடைசிக் காலம் எனக்கு வந்திட்டுதா? கண் கலங்குது - என் கண்மணியைக் காணாது போகப் போறன் எண்டு... அந்த சிவத்த ரோஜாக்கள் மீண்டும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.. அந்திமச் சூரியன் எனக்கு கைகாட்டி விட்டுப் போவது போல இருக்குது.. அவனும் தன் தாயிடம் தான் போகின்றானா? என் மகனும் இந்த அந்திமத் தாயிடம் வருவானா? (பக்கம் 20)


தனயனின் அருகாமை இல்லாத இரவுகள் அவளுக்கு வேதனையை அள்ளித் தெளிக்கின்றன. ஆனாலும் அவள் அமைதியைத் தேட முற்படுகின்றாள். ஆழ்மனதில் கணவனின் நினைவுகள் ஊசலாடுகின்றன. மூதாட்டிக்கு தற்போது ஊன்றுகோலைத் தவிர துணைக்கென யாருமில்லை. ஊன்றுகோலையே தனது உற்ற நண்பனாக கருதும் அவள், தன்னை ஆறுதல் படுத்துவாக கீழுள்ள வரிகளில் தன்னையே ஆசுவாசப்படுத்தும் பாங்கை அவதானிக்க முடிகின்றது.

அழகிய அந்த யன்னலுக்கு வெளியே தெரியும் தெளிந்த வானமும்... கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் என் வீட்டுக்காரரை எனக்கு காட்டுகின்றன.. என் ஆன்மா அரவணைக்கப்படுகின்றது. ஷஷநிம்மதியாக தூங்கு யசோதா||
அமைதியாக சொல்லுகின்றார் - என் கண்கள் அவருள் ஐக்கியமாகின்றன! நானும் தூங்கப் போறன். நாளை தொடர்கின்றேன். (பக்கம் 24)

மகனே! அதிகாலை ஐந்து மணி அவசரப்பட்டு விழித்த கண்கள் மூட மறுக்கின்றன.. இரண்டு கால்களிலும் வலி இடது முழங்காலில் இன்னும் வலி.. கைத்தடியை எடுத்துக்கொள்கிறேன். என் புதிய நண்பன் அவன்! அவனின் துணை இனி எனக்கு எப்பவுமே வேண்டும். கைத்தடி இல்லாமல் இனி என்னால் நடக்க முடியாது (பக்கம் 37)

மகனை யுத்தத்தில் தொலைத்தது போல் அல்லாமல் அவனது ரங்குப் பெட்டியை ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் அவள் தன்னுடனேயே கொண்டு வந்து விடுகின்றாள். மகனைத்தான் காணவில்லை. சிறுவயதில் அவனது பிஞ்சுக் கரங்கள் தொட்டு விளையாடிய அந்த விளையாட்டுப் பொருட்களாவது அந்தக் கிழவியை ஆறுதல்படுத்துமா? கீழுள்ள வரிகளின் அந்த ஏக்கம் துளிர்ப்பதைக் காணலாம்.

ஞாபகமிருக்கா ஹரி உன் விளையாட்டுப் பெட்டியை? சிவப்பு நிற ரங்குப் பெட்டி உன் விளையாட்டுப் பொருள்கள் அத்தனையும் அதனுள்ளே! அவற்றுடனேயே விளையாடிக்கொண்டிருப்பாய்.. அதனுடனேயே அயர்ந்து தூங்கிவிடுவாய்.. அம்மா என்னுடனே அதை எடுத்து வந்துவிட்டேன் இந்த பனிபடரும் தேசத்திற்கு! ஒவ்வொரு இடப்பெயர்விலும் அதனை மட்டும் என் கையில் எடுத்துவிடுவேன் உன்னைத் தொலையவிட்ட மாதிரி அல்லாது! (பக்கம் 38)

என் நாடிகளிலும் நாளத்திலும் இரத்தம் ஓடும் வரை.. இதயத்தின் சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக்கும் வரை..
சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து மூடும் வரை.. காதுகள் உன் குரலைக் கேட்கும் வரை.. கண்கள் உன்னைக் காணும் வரை.. உன் ரங்குப் பெட்டியுடன் இந்தத் தாய் காத்திருப்பாள்! (பக்கம் 44)

போரின் வடுக்களைப் பற்றி அந்த மூதாட்டி சொல்லும் கதைகள் வாசக உள்ளங்களையும் கவலையில் மூழ்கடித்து விடுவதை மறுக்க முடியாது. யதார்த்தமாக கதையின் பாங்கு நகர்த்தப்பட்டிருப்பதினூடாக அந்த சமூகத்தின் அவலம் எமக்கு நன்கு புலப்படுகின்றது.

ஆகாயத்தில் இருந்து தரையை நோக்கி வான வேடிக்கை தொடங்கியது.. இல்லை உயிர்வேட்டை தொடங்கியது!
எங்கள் கிராமம் உழப்பட்டது! எங்கள் வீடு எரிந்துவிட்டது! மரண பயத்தை கையால் தொட்டுப் பார்த்த முதல் கொடிய இரவு அது! நடுங்கின கைகள்.. உதறிய உடம்பு.. தடுமாறின சொற்கள்.. வேறு வழியில்லை இடம்பெயர்ந்தோம்! இரண்டாம் தடவை என் தொப்புள் கொடி அறுந்தது.. குண்டுவீச்சு தந்த இரத்த வெள்ள மரணத்தில் நெளிந்தோம். விடியலில்லாத இரவை சந்தித்த வாழ்வின் முதல் நாள் அது (பக்கம் 63)

தனது அந்திம காலத்தின் தான் ஓடியாடி விளையாடிய ஊரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யசோதா கிழவிக்கு ஏற்படுகின்றது. எனினும் அது சாத்தியப்படக்கூடிய விடயமில்லை. ஆதலால் அவளது உள்ளம் இவ்வாறு மௌனமாக கதறி அழுகின்றது.

ஹரி! எனக்கு பறக்கும் கம்பளம் ஒன்று அனுப்பி வைப்பாயா? சிவத்த பறக்கும் கம்பளம்! அதில் பறந்து என் தாயகத்திற்குப் போக வேண்டும். கிளித்தட்டும் எட்டுக் கோடும் விளையாடிய மண்ணில் என் சிறு கை அளாவ வேண்டும். கைகளை விரித்தபடி மழை பெய்யும் பொழுது.. வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். வெள்ளம் மூடிய வயல் காணிகளில் நடந்து நடந்து போக வேண்டும். நெல்லின் கதிர்கள் என் கால்களுடன் கதை பேச வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பின் வளவு ஒழுங்கையூடே கைகளினால் கார் விட்டபடி ஓட வேண்டும். நான் சின்னப் பெண்ணாக வேண்டும். என் தாய் மண்ணில் விளையாட வேண்டும். பாழாய்ப் போன போர் எல்லாத்தையுமே பந்தாடிவிட்டது. பஞ்சாக்கிவிட்டது. (பக்கம் 90)

இன்று எல்லோரையும் தொற்றிக்கொண்டு விட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக்கிலும் தனது மகனைத் தேடியதாய் சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. என்றாவது மகன் அதனைக் காணக்கூடும். கண்டால் அவளைத்தேடி வரக்கூடும் என்ற அந்த தாயின் எதிர்பார்ப்பு மனதை கனக்கச் செய்கின்றது.

உனக்குத் தெரியுமா? ஃபேஸ் புக்கில் உனக்கொரு பக்கம் ஒதுக்கி உன்னைத் தேடினேன். ஒரு நாள் நீ அதைக் காண்பாய். என்னிடம் வருவாய். இது கதையல்ல என் கண்ணா.. இது நிஜம்! (பக்கம் 97)

கதையின் இறுதியில் கலாநிதி ஜீவகுமாரன் வாசகர் மனதை அப்படியே கவலையால் துடிக்க வைக்கின்றார். காரணம் உலகத்தில் பரவி வரும் புற்றுநோய் மூதாட்டிக்கும் ஏற்பட்டுவிட்டது என்று மாத்திரம் கூறாமல் அது நோயாளிகளின் புறத்தோற்றத்தை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது. அந்த மாற்றத்தை யசோதாக் கிழவி எந்தப் பாங்கில் வெளிப்படுத்துகிறாள் என்பதை வாசிக்கும் போது கதாசிரியர் வெற்றி பெறுகின்றார் என்றே கூற வேண்டும். அந்தக் கொடுமையை விபரித்து இருக்கும் விதம் இப்படி வருகிறது.

ஹரி! நான் சொல்வதைக் கேட்டு நீ கலங்காதே. வைத்தியசாலையிடம் இருந்து இறுதி முடிவு வந்தது. உன் அம்மாவுக்கு புற்று நோயாம். மரணத்தின் வாசலுக்கு மெது மெதுவாய் அழைத்துச் செல்லும் புற்று நோயாம்!! (பக்கம் 140)

உனக்குத் தெரியுமா ஹரி! இங்கு ஒரு ஒற்றுமை. இந்த வார்டில் ஒருவருக்கும் தலையில் முடியில்லை. கண்ணில் இமையில்லை. கான்சர் பேசண்ட் சங்கத்தின் முத்திரை இது. ஊதாக் கதிரின் வெப்பத்தில் இந்த ஊளைச் சதையில் தொங்கி நிற்கும் அத்தனை மயிர்களும் கொட்டிவிடும். நீ அம்மாவைப் பார்த்திருந்தால் பயந்திருப்பாய். இங்குள்ள அனைவருக்கும் இருட்டும் ஒன்றே. வேதனையும் ஒன்றே!! வலிகளும் ஒன்றே!!! (பக்கம் 145)

யசோதாவின் இறுதிக் காலங்கள் ஹெஸ்பிக் என்ற ஆசிரமத்திலேயே கழிகிறது. அன்னையர் தினமொன்றில் அவளது மற்ற பிள்ளைகள் ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்குகின்றார்கள். ஆனால் அந்த ரோஜாக்களிலும் கிழவி தனது இறுதி நாட்களையே காணுகிறாள். ஹரியின் குரலையாவது கேட்காமல் தனது இதயம் செயலிலழந்து விடக்கூடாது என கடவுளிடம் மன்றாடுகிறாள்.

ஆனாலும் என்ன ஹரியின் குரலையும் கேட்காமல், அவனையும் பார்க்காமல் பிரிவுத்துயரிலே கழிந்து வந்த அவளின் வாழ்க்கைப் பயணம் காலனின் கைகளுக்குள் அமிழ்த்தப்படுகின்றது. ஆம் யசோதா இறந்துவிடுகிறாள்! புத்தகத்தை வாசிக்கும் தொடக்கத்திலிருந்து கிழவி மகனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் புத்தகத்தை படிக்கும் எங்களுக்கும் தொற்றிவிடுகிறது. எனினும் ஹரியைக் காணாமலேயே கிழவி இறந்த பிறகு எங்கள் மனசும் விம்மி அடங்குகிறது.

திரு. ஜீவகுமாரன், திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் ஆகிய இலக்கிய தம்பதியரின் இலக்கிய முயற்சி இன்னும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com

Saturday, August 20, 2011

12. நீலாவணன் காவியங்கள் தொகுதி

நீலாவணன் காவியங்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

கவிஞர் நீலாவணன் 1931 இல் பிறந்தவர். பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார்.

நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர் தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந் நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன் வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றது. அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'நம் காவிய மரபுகள் எப்படி இருந்தாலும் அவைகளை அப்படியே தூக்கி வைத்துவிட்டு நவீன வாழ்வின் கதையை யதார்த்தமாகவோ குறியீடாகவோ செய்யுளில் வடித்துக் காட்டிய மூவர்களில் நீயும் ஒருவன். மூத்தவர் மஹாகவி அடுத்தது நீயும் முருகையனும். உன் வழியும் ஒருவிதமான கதை கூறும் காவியப் பொலிவுடைய நெடும்பாடல்தான். உங்கள் காவியங்களைக் கதைப் பாடல்கள் என்றும் சொல்லலாம். மரபுக் காவியங்களில் உள்ளது போலவே நவீன காவியங்களிலும் கதை பிரதான அம்சம். கதையின் சரடு இல்லாமல் காவியப் பொருள் விரியாது. உனது காவியங்களில் மூத்தது பட்டமரம். 1956 வாக்கில் எழுதியிருப்பாய். அடுத்தது வடமீன். பட்டமரத்திலிருந்து வடமீன் பெற்றுள்ள பாய்ச்சலுக்குக் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். வேளாண்மை அறுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு அடுத்த பத்து ஆண்டுகளின் பருவங்களில் வளர்ந்திருக்கும்'.

பட்டமரம் காவியம் 39 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பண்ணையாரிடம் பணிபுரியும் பரந்தாமன் பண்ணையாரின் மகளான பத்மாவைக் காதலிக்கிறான்;, அதனை அனுமதிக்காத பண்ணையார் பரந்தாமனைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புதைத்துவிடுகின்றார். பண்ணையாரின் மகளும், பரந்தாமனின் காதலியுமான பத்மா கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இவற்றைக் கண்ட பட்டமரம் ஒன்று கதை சொல்வதாகவே இந்த பட்டமரக் காவியம் அமைந்திருக்கிறது. இரசனைக்காக ஒரு சில வெண்பாவை இங்கு நோக்கலாம். (பக்கம் 06)

"பரந்தாம னுங்களது பாட்டைப் படித்தா(ல்)
இரங்காதாருள்ள மிரங்கும் - பறந்தோடிச்
சென்று தவம் நீங்கள் செயவேண்டா மிங்கேயே
என்று மிருப்போ மிணைந்து"

பத்மா வுரைத்தாள் பரந்தாமன் கேட்டதனைப்
"பத்மா விதென்ன பரிகாசம் - பித்திலையே!
ஏழைக் கணக்கனுக்கு ஈவா ரெவருன்னை
நாளை யெனக்கு நமன்!"

"ஏழை பணக்கார னில்லையன்பா! காதலுக்கு
கோழைபோன் றெல்லாங் கூறாதீர் - ஏழைதான்
எட்டி! மரமதனை ஏற்றே அரசொன்று
ஓட்டி வளர்த்திருப்ப தோர்!

அடுத்தது வடமீன் காவியம். இக்காவியம் 47 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. தனது ஊரிலிருந்து கொழும்புக்கு வந்து குடியேறிய தம்பதிகள் பற்றிய கதைதான் வடமீன் காவியம். கணவன் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளைஞனோடு தொடர்புபடுத்தி தன் மனைவியை சந்தேகிப்பதும், பின்னர் எப்படியோ பிரச்சினை தீர்வதுமாக இக்காவியம் அமைந்துள்ளது. மாதாந்தம் சம்பளம் பெறுவோரின் திண்டாட்டங்கள், சிக்கல்கள், போராட்டங்கள் இக்கதையினூடு நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். (பக்கம் 14)

'பட்டிக்காட்டாளே, ஈது
பாராளு மன்றம் என்னுங்
கட்டிடம் கோட்டைப் பார்த்துக்
கடவையில் நடவும்; நில்! இம்
எட்டிவை காலை: 'காலான்'
இடறுதோ? கடவுளே... சீ!
கட்டதை இறுக்கி; 'கோல்பேஸ்'
கடற்கரை இதுதான் கண்ணே!

இறுதியாக வேளாண்மைக் காவியம். இது கவிஞர் நீலாவணனின் கடைசிக் காவியமாகும். இக் காவியத்தின் படலங்களுக்கு கவிஞர் மிகப்பொருத்தமாக குடலை, கதிர்ப்பருவம் எனத் தலைப்பிட்டுள்ளார். குடலைப் பருவமானது பல்வேறு தலைப்புக்களில் 148 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது. இது போலவே கதிர்ப் பருவமும் பல்வேறு தலைப்புக்களில் 125 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது.

வேளாண்மைக் காவியத்தில் உதாரணத்திற்காக சிலதைப் பார்ப்போம்.

ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா?
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய் போய்ச்
சோறெடு, சிவசிவா... ஏய்
சுரைக் காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில் விட்டுச்
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி

சோக்கான கறிகா! தோலிச்
சுண்டலில்வை: முன் னால் நான்
கேட்காமல் அள்ளி வைப்பாய்,
கிழவனாய்ப் போனேன் பாரு!
காக்கையேன் பகல் முழுக்கக்
கறுபுறுக்கிறதோ? சேதி
கேட்கவோ, வீட்டுக் காரும்
கிளை வழி வருகின் றாரோ?...

ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத காவியமாக எழுதப்பட்டிருப்பதாகவே கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வாறாயினும் இதனை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த அற்புதமான காவியத்தை நீங்களும் படித்து பயன்பெற உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!

நூல் - நீலாவணன் காவியங்கள்
நூலாசிரியர் - நீலாவணன்
வெளியீட்டாளர் - எஸ். எழில்வேந்தன்
தொலைபேசி - 0777 313720
விலை - 300/=