Wednesday, August 20, 2014

62. ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன.

போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள்  அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.

நிலை குலைவு பற்றிய விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் கே.ஆர். டேவிட்டும், காவி நரகத்தின் கதைகள் என்ற தலைப்பில் ஜே. பிரோஸ்கானும், நஸ்புள்ளாஹ்வின் கதைகளில் நான் என்ற தலைப்பில் ஏ.எம்.எம். அலியும், நான் நேசிக்கின்ற சகோதர சமூகத்திற்காக என்ற தலைப்பில் நூலாசிரியரின் குறிப்புக்களையும் நூலில் காண முடிகின்றது.

2007 இல் முதலாவது சிறுகதை லண்டன் புதினம் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், பூபாள ராகங்கள் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், 2009 இல் வந்தாறு மூலை கிழக்கொளி சிறுகதைப்  போட்டியிலும் (மூன்றாமிடம்) பரிசுகள் கிடைத்துள்ளதோடு, நோர்வே சர்வதேச தமிழர் கவிதை சிறப்பிதழ் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளதோடு, தேசிய பிரதேச மட்டங்களிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றுள்ளார். இவற்றை இவரது சிறுகதைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கலாம்.

2008 இல் திருகோணமலை நூலக அபிவிருத்திச் சங்கம் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் இலக்கிய ஒளி பட்டமும், விருதும் வழங்கப்பட்டுள்ளதோடு, கிண்ணியா நகர சபையினால் கௌரவிக்கப்பட்ட சமூகம் என்னும் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான் இவரது சிறுகதைகளை ஆராய்ந்து பார்ப்பது சாலப் பொருத்தம் என்று கருதுகின்றேன்.

இனி நஸ்புள்ளாஹ்வின் முதலாவது கதையான புத்தன் வந்த பூமியிலே (பக்கம் 23) என்ற சிறுகதையை நோக்குவோமேயானால் மனிதம் மரித்துப் போன தேசத்தின் வரலாற்றை அது குறித்து நிற்கின்றதெனலாம். இனவெறிகளால் ஆளப்பட்டு இன்பமான வாழ்வை தொலைத்து நிற்பவர்களுக்கு இதுவொரு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. கருணையும், காரூண்யமுமே வாழ்வின் ஆதாரம் என்று போதித்த புத்தன் வாழ்ந்த இந்த பூமி இரத்த வெள்ளத்தாலும், பிரேத வாடையாலும் மாசுபட்டுவிட்டது. வரலாற்றுக் கறையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் அப்பாவிகளே கொல்லப்பட்டமை கண்டுகூடு. இந்தக் கதையிலும் அவ்வாறாதோர் சம்பவமே கருவாக சொல்லப்பட்டுள்ளது. சந்திரபால என்ற சிங்கள மனிதன், மாணிக்கம் என்ற இந்து மனிதனை எதிரியாக நோக்குவதினூடாகவே கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. கதையின் இறுதியில் மாணிக்கத்தின் மகனை சந்திரபால தன் வாகனத்தால் விபத்துக்குள்ளாக்குகின்றான். தனது அண்ணனின் சொந்த மகனையே, தான் கொன்றுவிட்டதாக சந்திரபால பின்னர் அறிகின்றான். காட்டேறி மனிதர்களின் கசந்த மனது இக்கதையில் இழையோடியிருக்கிறன்றது.

நிலைகுலைவு (பக்கம் 55) என்ற சிறுகதையிலும் யுத்தமே கருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் மனித நேயத்தின் சாயல்களை இனங்காட்டியிருக்கின்றார் நஸ்புள்ளாஹ். காயத்திரி என்ற முதிர் கன்னியின் வேதனைகளும், அவஸ்தைகளும் தத்ரூபமாக இக்கதையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரம் நடந்த ஒரு பயங்கர இரவில் கருணாரட்னவின் மனைவிக்கு பிரசவம் பார்க்கிறார்கள் காயத்திரியும் அவளது நண்பி உமாவும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக கருணாரட்ன கண்டிக்குச் சென்றுவிடுகிறான். கருணாரட்ன என்ற மத வெறியன் மனதினாகிறான். சில நாட்களின் பின் நன்றி தெரிவித்து காயத்திரிக்கு கடிதம் எழுதுகின்றான். புரிந்துணர்வு வந்துவிட்டால் பூமி ஆனந்தமாக இயங்கும் என்ற உண்மை இக்கதை மூலம் உணர்த்தப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது.

இப்படிக்கு பூங்காற்று (பக்கம் 79) என்ற சிறுகதை மெல்லிய காதல் உணர்வினை மனதில் விதைத்துச் செல்கின்றது. ரம்மியமான முறையில் கதை சலனமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற அதிகபட்ச ஆர்வத்தை இக்கதை ஏற்படுத்துகின்றது. கதையின் ஆரம்பத்தில் தாயிடம் பயணம் சொல்லிக்கொண்டு நாச்சியாதீவுக்கு வரும் இளைஞன் என்ன செய்கிறான் என்ற எதிர்பார்ப்பே எட்டி நிற்கின்றது. எனினும் கதையின் இறுதியில் ஏற்படும் தாயின் மரணம் மனதை துண்டாடுகின்றது. சோகம் அப்பிக்கொள்கின்றது. தாய்ப் பாசத்தையும், காதலையும், மனித நேயத்தையும் ஒருசேர உணர்த்தியிருக்கும் பாங்கு சிறப்புக்குரியதெனலாம்.

மகுடக் கதையான காவி நரகம் (பக்கம் 90) என்ற சிறுகதையிலும் யுத்தமே சொல்லப்பட்டிருக்கின்றது. கர்ப்பம் தரித்து நிற்கும் குகநாயகியின் கணவன் ஒரு ஊடகவியலாளன். செய்திகளை அழுத்தந் திருத்தமாக வெளியிட்ட காரணத்தால் அவன் வெள்ளை வேனில் கடத்தப்படுகின்றான். ஐந்துமாத கர்ப்பத்துடன் அவள் வாழ்தல் பற்றிய நம்பிக்கையையே இழந்து காணப்படுகின்றாள். காலம் அதன் பாட்டுக்கு நகர்ந்து செல்கின்றது. பசி, தாகம், தூக்கம் எதிலும் பிடிமானம் இல்லாமல் சராசரி மனுசியாகக்கூட இல்லாமல் அவள் தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றாள். சாப்பிடுமாறு அவளது தாய் கூறியபோது தனக்கு பசிக்கவில்லை என்கின்றாள். ஆனால் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காகவே சாப்பிடுகின்றாள்.

திட்டமிடப்பட்ட கொலையால் கணவனை இழந்த ஒட்டுமொத்த பெண்களின் வலி இக்கதையால் புலப்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் எவரும் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்ற ஆயுததாரிகளின் கட்டளை குகநாயகி பிரசவ வேதனையில் துடிக்கும் போது கரையுடைகின்றது. மகளின் பிரசவ வேதனை தாங்க இயலாமல் அவளது தாய் உதவிக்கு அழைக்க அயல்வீட்டுக்குச் செல்கிறாள். அத்தருணத்தில் காவலரண் அமைத்து அதிலிருந்தவர்கள் அவளை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றனர். 'கடவுளே என்ற அம்மா' என்று தன் வேதனையையும் மறந்து குகநாயகி வெளியே செல்கையில் அவளும் சுட்டுக் கொல்லப்படுகின்றாள். அநியாயங்கள் மலிந்த.. அரக்கர்கள் நிறைந்த.. அந்த சூழலுக்கு காவி நரகம் என்ற தலைப்பை நூலாசிரியர் வைத்திருப்பதிலிருந்து அவரது மன வேதனை வெளிப்படுகின்றது.

காதல் ஒன்று சேராவிட்டால் அது தரும் காயங்கள் வாழ்நாள் முழுக்க தொடரும். வருடங்கள் பல கழிந்தாலும் காதல் தந்த வடு சிறிதும் மாறாமல் அப்படியேதான் இருக்கும் என்பதை சுதா, சுங்கன் மீன் போல அழகு (பக்கம் 110) என்ற சிறுகதை உணர்த்தி நிற்கின்றது. முபாரக் என்ற இளைஞன் பள்ளிக் காலத்தில் சுமையாவின் மீது கொள்கின்ற பாசம் அவனது தாய் பள்ளிக்கூடம் மாற்றியதால் மறைந்து போகிறது. கனவுகள் வளர்த்த காதலர்கள் பிரிந்து போனாலும் வாழ்க்கை என்பது உரிய காலத்தில் அவரவர்க்கான துணையை தேடிக்கொடுக்கின்றமை நிதர்சனம். அதற்கிணங்க இருவரும் இருவேறு துருவத்தில் வாழ்தலை மேற்கொள்கின்றனர்.

காலம் கழிகிறது. முபாரக்கிற்கு இரு குழந்தைகள். அவர்களை சுற்றுலா பயணத்துக்காக அழைத்துச் செல்கின்றபோது எதிர்பாராத விதமாக சுமையாவைக் காண்கின்றான் முபாரக். நீண்ட நாட்களுக்கு பின் அவனைப் பார்க்கும் எந்தவித பரபரப்புமின்றி அவள் காணப்படுகின்றாள். அவளது மாற்றத்துக்கான காரணத்தை முபாரக் வினவியபோது, பிற ஆண்களுடன் பேசுவது தன் கணவனுக்கு விருப்பமில்லை என்று வெடுக்கென்று பதில் கூறுகிறாள் சுமையா. முபாரக்கிற்கு கன்னத்தில் அறைந்தது போல இருக்கின்றது. இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறான். அவனது கடந்த காலத்தை அறிந்திருந்த மனைவி அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கவிதை யாத்தலில் தன் பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்திக்கொண்டுள்ள நஸ்புள்ளாஹ் காவி நரகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதி மூலம் தான் ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளி என்பதையும் நிரூபித்திருக்கின்றார். மேலும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட நஸ்புல்லாஹ்வுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - காவி நரகம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஏ. நஸ்புள்ளாஹ்
வெளியீடு - பேனா பதிப்பகம்
விலை - 400 ரூபாய்

61. வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


ஈழநாட்டுப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்தவரே சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்கள். தினக்குரல், இடி, மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் சுடர் ஒளி ஆசிரிய பீடத்தில் தற்போது பணிபுரிந்து வருவதை அறியமுடிகின்றது. கவிதை, சிறுகதை போன்ற துறைகளில் தனது நாமத்தை சிறப்பாகப் பதித்துள்ள இவர், இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, அரசியல் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பத்திரிகைத் துறையைப் பொருத்தமட்டில் துணுக்குகள், பத்தி எழுத்து, விளையாட்டு, விவரணக் கட்டுரை ஆகியவற்றுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆங்கில, சிங்கள மொழிப் பத்திரிகையாளர்களுடன் போட்டியிட்டு விவரணக் கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரன் ஏ. ரவிவர்மாவின் கன்னிச் சிறுகதைத் தொகுதி வடக்கே போகும் மெயில் என்ற மகுடத்தில் சிறுகதைகளையும், குறுங்கதைகளையும் உள்ளடக்கியதாக காயத்திரி பப்ளிகேஷன் மூலம் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள் யதார்த்தமானவை. மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற கஷ்டங்களையும், சோகங்களையும் படம் பிடித்துக்காட்டும்படியாக தனது சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்து நடை வாசகர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் அமைந்துள்ளது சிறப்பு. 80 பக்கங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் வடக்கே போகும் மெயில், போனால் போகட்டும், பொன்னுக் கிழவி, மிலேனிய அப்பா, என்னைத் தெரியுமா?, செல்லாக் காசு, தாலி பாக்கியம், திக்குத் தெரியாத..., முடிவிலும் ஒன்று தொடரலாம், குல தெய்வம், தண்ணீர் தண்ணீர், திரைகடல் ஓடியும், கொக்கு வெடி, என்று மறையும், காவியமா நெஞ்சில் ஓவியமா?, விடியலைத் தேடி ஆகிய 16 தலைப்புக்களிலேயே கதைகள் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு பரம்பரையாகத் தொடரும் எழுத்தூழியம் என்ற தலைப்பிட்டு தனது ஆசியுரையை லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா) அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர் தனது ஆசியுரையில் ''வடமாரட்சியில் அடிநிலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை. இயல்பிலேயே இலக்கிய நாட்டமும், பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன. ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவி புனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பேசத் தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்துக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள் காரணமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும், ஊடகவியலாளராக செய்திகளைச் செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல் மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும் சிறப்பிக்க முடியும். ரவிவர்மாவின் பின்புலம் மனித உரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது'' என்கிறார்.

அதேபோல் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கனடாவைச் சேர்ந்த க. நவம் அவர்கள் தனதுரையில் ''வடக்கே போகும் மெயில் திரட்டினை படித்து முடிக்கும் வாசகர்கள், இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுதுபோக்கு அம்சங்களைக் கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரரல்ல என்பதையும், பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும், அக்கறையும் கொண்ட ஒரு மனித நேயப் படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தமது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார். எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும், அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி, மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.'' என்கிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள வடக்கே போகும் மெயில், தாலி பாக்கியம், திக்குத் தெரியாத..., குலதெய்வம், தண்ணீர் தண்ணீர், என்று மறையும், விடியலைத் தேடி ஆகிய கதைகள் நேரடியாக அல்லது மறைமுகமாகவேனும் யுத்த கால கெடுபிடிகள், கஷ்டங்கள், பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஞாபகப்படுத்தி மனதை ரணப்படுத்துகின்றன. போர்காலச் சூழலுடன் பின்னிப் பிணைந்த இக் கதைகள் நிச்சயமாக அச்சூழலைக் கடந்து வந்த மக்களின் மனதில் ஒரு உஷ்ணமான பெருமூச்சை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வடக்கே போகும் மெயில் (பக்கம் 13) என்ற சிறுகதை ரயில் பயணத்தை உணர்வு பூர்வமாக சித்திரித்திருக்கின்றது. கதாசிரியர் சொல்லும் பாங்கில் ரயிலில் வாசகர்களும் பயணம் செய்வது போன்ற ஒரு மனநிலை ஏற்படுவது மொழிநடைச் சிறப்பு என்று கூறலாம். அன்றாடம் பயணம் செய்பவர்கள் வெகு சாதாரணமாக எதிர்நோக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒரு சிறுகதையாக கூறியிருக்கிறார். இச்சிறுகதையில் பயணிகள் பற்றிய மனப்பதிவுகள் கூறப்படுவதோடு திடீரென ஒரு கும்பல் ரயிலுக்குள் ஏறி தமது அடாவடித்தனங்களை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சொற்ப நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதத்தில் உயிர்களும், உடமைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனூடாக இனப்பிரச்சினையின் கொடுமை பற்றியும், அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காசு இருக்கும்போது மற்றவர்களை இழிவாகப் பார்த்தவர்களுக்கும், ஊனமானவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் தமக்கென துன்பம் வரும்போது அதை உணர்ந்துகொள்வார்கள் போன்ற தத்துவச் சிந்தனைகளும் இச்சிறுகதையில் பொதிந்துள்ளமை அவதானத்துக்குரியது.

என்னைத் தெரியுமா? (பக்கம் 31) என்ற சிறுகதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்ட ஒரு யதார்த்தமான சிறுகதையாகும். பொழுதுபோக்குச் சாதனமாகக் கருதப்படும் வானொலியினால் இன்று பலரது வாழ்க்கையை சிதைத்திருக்கின்ற சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன. அதில் மிக முக்கியமான அம்சம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது, தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கும் நேரத்தில் தொலைபேசியில் பெண்கள் தங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லிவிடுவதுதான். இச்சிறுகதையில் வரும் கல்பனா என்ற பாத்திரமும் அத்தகைய இயல்பைக் கொண்டவள். கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார் என்ற தகவல் தொடக்கம் தனக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் வரை ஊருலகத்துக்கே சொல்கின்றாள். பிறகு திருடன் அவளது வீட்டுக்கு வருவதைக் கண்ட பக்கத்து வீட்டார் பொலிசுக்கு அறிவிக்கின்றனர். இதுதான் சாராம்சம். இக்கதை சொல்ல வரும் சேதி எத்தனை ஆழமானது? பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண்கள் பக்குவமில்லாமல் இவ்வாறு நடந்துகொள்வது நடைமுறையில் இருப்பதை மறந்துவிடக்கூடாது. யதார்த்தத்துக்கு புறம்பான கற்பனைக் கதைகளை மக்கள் ரசிப்பதைவிட இவ்வாறான கதைகள் வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் சிறப்பான சிறுகதையாக இதைக் கொள்ளலாம்.

தாலிபாக்கியம் (பக்கம் 38) என்ற சிறுகதையின் ஆரம்பம் கற்பனைகள் பலதை ஏற்படுத்திவிடுகின்றது. வாசிப்பின் இடையில் வயதான வள்ளிப்பிள்ளை - கந்தசாமி தம்பதியர் மீண்டும் திருமணம் செய்துகொள்கின்றார்கள். காரணம் இப்போது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசதியாக வாழ்வதால் காசுக்குப் பஞ்சமில்லை. எனவே வள்ளியம்மைக்கு புதுத்தாலி மற்றும் நகைகளை அணிவித்துப் பார்க்க ஆசைப்படுகின்றார் கந்தசாமி. ஊரார்கள், நண்பர்கள் அனைவருக்கும் தடல்புடல் விருந்து கொடுக்கப்டுகின்றது. கதையின் இறுதியில் மகனது கல்யாண விடயமாக தரகரைச் சந்திக்க செல்லும் கந்தசாமி டவுன் பக்கம் ஹர்த்தால் என்பது தெரியாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிடுகின்றார். குதூகலமாக வாசித்த சிறுகதை மனதில் ஈரத்தை கசியச் செய்கின்றது. ஒரு சின்ன சிறுகதையில் இதயத்தை உருக்கும் விடயத்தை உள்ளடக்கியிருக்கும் பாங்கு சிறப்பிற்குரியது எனலாம்.

திக்குத் தெரியாத... (பக்கம் 42) என்ற சிறுகதை யுத்த காலகட்டத்தை நினைவுபடுத்திச் செல்கின்றது. யார் குண்டு வைத்தாலும் சிறுபான்மை இனத்தவரை சந்தேகம் கொண்டு பார்த்து பொலிசுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பார்கள். செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதிவிடுவார்கள். அத்தகையதொரு பிண்ணனியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதையில் வரும் அவனும் பொலிசாரினால் ஏற்றிச்செல்லப்படுகின்றான். பொலிஸில் உள்ள கம்பிக்கூண்டினுள் அவனுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கின்றனர். பிரபு என்ற அந்த மாணவனுக்கு தமிழ் பத்திரிகையைக் கொடுத்து படிக்கச் சொல்லுகின்றனர். காரணம் அவன் வருவதற்கு முதல்நாள் அந்தப் பிரதேசத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. கண்டியைச் சொந்த ஊடராகக் கொண்ட அவனை அந்தத் தமிழ் பத்திரிகையை வாசிக்கச் சொல்லி அதட்ட, அவன் மறுக்கின்றான். பொலிசார் மிகவும் கடுமையாக நடந்துகொள்கையில், அவன் சிங்கள மொழி மூலமே கற்றுக்கொண்டிருப்பதாகவும், தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்றும் கூறுகின்றான். அவனுக்கு அடிக்க கையை ஓங்கிய அதிகாரி அதிர்ச்சியடைவதாக கதை நிறைவடைகின்றது.

முடிவிலும் ஒன்று தொடரலாம் (பக்கம் 47) என்ற சிறுகதை தொழிலாளர் பிரச்சனை பற்றிப் பேசுகின்றது. அன்று தொடக்கம் இன்று வரை தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்வதும், தொழிற்சாலை நிர்வாகம் வேறு தொழிலாளிகளை வேலைக்குச் சேர்ப்பதும் நடந்தேறி வரும் விடயமாகும். வறுமையில் வாடுபவர்கள் வேறு வழியில்லாமல் குறைந்த சம்பளத்துக்காக வேலைக்குச் சென்றுவிடுகின்றார். இயலுமானவர்கள் தெரிந்தவர்களின் கையைக் காலைப் பிடித்தேனும் வேறு தொழில்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள். முதலாளி வர்க்கத்தினர் என்றும் போல சுகபோக வாழ்க்கை வாழ்வதும், தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே மாய்ந்து போவதும் விதி என்றால் அதை மாற்ற யாராலும் முடியாதே.

இவ்வாறாக பல யதார்தமான விடயங்களை கருப்பொருட்களாக வைத்தே தனது சகல கதைகளையும் நூலாசிரியர் படைத்துள்ளார். ஏகாம்பரம் ரவிவர்மா எழுதிய தமிழக அரசியல், திரைக்கு வராத சங்கதி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள், பாடல் பிறந்த கதை ஆகியவை வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. தனது ஆசிரியபீடப் பணிகளில் பல புதிய கவிஞர்களையும், எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இவருக்கு உண்டு. திரு. ரவிவர்மா இதுவரை பத்திரிகைளில் எழுதி வெளிவந்த பல கவிதைகளையும் தொகுத்து ஒரு கவிதை நூலாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!!!

நூலின் தலைப்பு - வடக்கே போகும் மெயில்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூரன் ஏ. ரவிவர்மா
வெளியீடு - காயத்திரி பப்ளிகேஷன்
விலை - 250 ரூபாய்

60. என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.



என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.

சூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.

ஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.

நதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-

நான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை
தடைகள் எனக்கு புதிதல்ல
மேலிருந்து கீழாக குதித்து
விளையாடுவதிலேயே எனக்கு இஷ்டம்
பல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்
மரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு
தொடர்ந்திருக்கின்றேன் என் பயணத்தினை
பாறைகளிலிருந்து தினம் கற்சில்லுகளை
பிரித்து அங்குமிங்குமாக சேர்த்திருக்கிறேன்
இல்லை சிதைத்திருக்கிறேன்
ஒரு நாளும் மரங்களோ பாறைகளோ
என் மீது கோபித்ததில்லை..

கடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.

நீ மரணம் பற்றி அந்த இரவு
முழுவதுமாய் பேசிக்கொண்டேயிருந்தாய்
பயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி
சிரித்தது..
உன் முகத்தில் நான் என்றைக்குமே
கண்டிடாத புன்னகையையும்
உன் வார்த்தையின் தெளிவையும் கண்டு
நான் ஒரு நீள் தெருவில் நடப்பதான
எண்ணத்தில் பயணிக்கிறேன்..
நடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்
என் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது
மரணம்... மரணம்... மரணம்...
இப்படியாய் சகோதரி உன் பேச்சு
விகசித்துக் கொண்டிருந்தது..
அப்போது எனக்கும் தெரிந்திருக்கவில்லை..
நீ அறிந்திருந்தாயா?
உனது கடைசி இரவை???

விஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.

என் உடலின் மேலாக
குட்டிக் கம்பளிப் பூச்சியொன்று
ஊர்ந்து உதிர்த்து விட்டுச்சென்ற
மயிர்க்கால்கள் எங்குமாக படர்ந்து
தழும்புகளை ரயில்ப் பாதையாய்
வரைந்து விட்டிருந்தது..
குழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..

எதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா..? (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.

நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது
றிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்துவிடுவாய் என்று..

இப்போ நான் எப்படிச் சொல்வேன்

நீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு
மார்க்கம் கற்ற குர்ஆன்
மத்ரஸாவுக்கு
அந்த அடுப்பங்கரைக்கும்
ஆட்டுப் பட்டிக்கும்
எப்படிச் சொல்வேன்
நீ இனி வரவே மாட்டாயென்று..

நீயும் சகோதரியுமாய்
ஊஞ்சல் ஆடிய புளியமரமும்
தும்பி பிடித்து விளையாடிய
அந்தக் கவளப் பற்றைகளும்
உன்னைத் தேடுமே...

கவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - என் எல்லா நரம்புகளிலும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு - பேனா பப்ளிகேஷன்
விலை - 200 ரூபாய்

Wednesday, May 21, 2014

59. கடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


இன்று இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், நூல் விமர்சனங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டி வருவது கண்கூடு. இந்த வகையில் முல்லைத்தீவைச் சேர்ந்த வே. தீபனும் தனது கவிதை, கட்டுரை போன்ற படைப்புக்களை தினக்குரல், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் களப்படுத்தி தனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்துக்கொள்ள முயற்சிக்கிறார். 

முல்லைத்தீபன் என்ற புனைப் பெயரிலேயே பெரும்பாலும் தனது கவிதைகளை பத்திரிகைகளில் களப்படுத்திவரும் இவர், கடவுளிடம் சில கேள்விகள் என்ற கவிதை நூல் மூலம் இலக்கிய வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றார். முல்லைத்தீபன் எனும் மண் வாசனையுடன் எழுத்துலகில் கால் பதிப்பது ஊரின் மீது தான் கொண்ட பற்றை, நேசித்தலை வெளிப்படுத்துகின்றது. தன் வலி சார்ந்த படைப்புக்கள் நிச்சயம் சமூகத்தில் ஒரு மாறுதலை உண்டு பண்ண முயற்சிக்கும் என்பது திண்ணம். அகம் சார்ந்த கவிதைகள், சமூக சீர்திருத்தக் கவிதைகள், போரியல் சார்ந்த கவிதைகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 28 ஆவது நூல் வெளியீடாக 75 பக்கங்களை உள்ளடக்கியதாக 25 கவிதைகளைத் தாங்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவரான இவர் தற்போது தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கு வரலாறு, புவியியல் போன்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலுக்கு கலாபூஷணம், தமிழ்மணி, கலாநிதி அகளங்கன் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

``மண்பற்றுக்கொண்ட தீபன், முல்லைத்தீபனாக கவியுலகில் அறிமுகத்தைப் பெறுகிறார். கவிதை மட்டுமன்றி வில்லுப்பாட்டு, தாலளய நாடகம், இசை நாடகம், வடமோடி, தென்மோடி நாட்டக் கூத்துகள், சமூக நாடகங்கள் என கலைத் துறையில் பங்குபற்றி அனுபவம் பெற்றுள்ளார். செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் ஷநம்பி(க்)கை வை| என்ற தலைப்பில் கவிதை நூலொன்றைக் கையெழுத்துப் பிரதியாக 2009.11.03 இல் வெளியிட்டு யாவற்றையும் இழந்து வந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். சிறுவயதிலிருந்தே கலை இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர், வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர். பாடசாலை அதிபரான தாய்க்கு தனித்த பிள்ளையாக, தந்தையை இழந்த துயரில் தவித்த பிள்ளையாக இருக்கும் இவரின் கவிதைகளில் இவரது அனுபவம் வெளிப்படுகிறது.'' 

அடுத்து இந்த நூலுக்கு கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் நயப்புரை ஒன்றையும், யாழ். பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளரான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் பதிப்புரை ஒன்றையும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் வே. முல்லைத்தீபன் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ``கற்பனை என்பது வேறு. நினைவுகள் என்பது வேறு. அவ்வப்பொழுது என்னுள் எழும் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுதப்பட்ட சில கவிதைகளை ஒன்று சேர்த்துள்ளேன். மனிதம் தொடர்பாக சமூகத்திடம் அதிகமதிகமாக கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது. விடை காணாப் புதிர்கள் ஏராளம் எம்மில் மலிந்து போய்க் கிடக்கின்றன. விரக்தியம், வேதனையும் வெகுண்டெழும் போது வடிகால்களைத் தேட முற்படுகின்றேன். தனிமையின் கொடுமைகள் உதைக்கின்ற போது எழுதுகோலையே அதிகம் காதலித்ததுண்டு. உணர்வுகளும், வார்த்தைகளும் புணர்கின்ற போது ஏற்பட்ட பிரசவத் தொகுப்பே இந்நூலாகும். யாருக்காகவும் எவராவது இருக்கிறார்களா? என்றால்... எவருக்காகவும் எவரும் இல்லை என்பதே விடையாகும்.''

இனி இந்த நூலிலுள்ள ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம்.

வாழ்க்கை என்றால் ஒன்று மாறி ஒன்றைப் பிடிக்க ஆசைப்பட்டு இறுதியில் எதுவுமே கிடைக்காமல் போவது என்று ஒரு அறிஞர் கூறிய கருத்துக்களை நிதர்சனமாக்கியது போன்று முல்லைத்தீபனின் வாழ்க்கை (பக்கம் 01) என்ற கவிதை அமைந்திருக்கின்றது. வாழ்வென்றால் இதுவா.. இல்லை அதுவா என்று எதையோவெல்லாம் யோசித்து புரிந்துகொள்வதற்கு முதலே வாழ்க்கை நம்மைவிட்டு போய்விடுகின்றது என்பதை கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன. 

வாழ்க்கை என்றால்
என்னவென்று
தெரிந்து கொள்ளவே
வாழ்நாள் முடிந்து போகிறது..
இப்படியிருக்கையில் 
எப்படித்தான் 
வாழ்க்கை முழுமையாவது...?

நீ எங்கே...? (பக்கம் 13) என்ற கவிதை தொலைந்த காதல் பற்றி பேசுகின்றது. இதயத்தைப் பரிமாறியவர்கள் எல்லாம் இல்லறத்தில் சேர்வதில்லை. யுத்தத்தில் வாழ்ந்த மக்களுக்கு யுத்தமே ஒரு எதிரியாக மாறி விட்டதை இலக்கியங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அந்த வலி இந்த வரிகளினூடாகவும் வெளிப்பட்டிருக்கின்றதைப் பாருங்கள்.

நாடக மேடையிலே நான்
நடித்திருந்த வேளை
நயனங்களாகியவள் நீ!

வாழ்வுப் போரிலே - நான் 
வெற்றி பெற்றிருந்த வேளை
வாழ்த்திக் களிப்புற்றவள் நீ!

வேதனையிலே - நான் 
வாழ்ந்திருந்த வேளை
விரதமிருந்தவள் நீ!

ஒரு காலிழந்தே - நான்
ஊனமுற்றிருந்த வேளை
ஊன்று கோலாகியவள் நீ!

குருத்தின் கவலை.. (பக்கம் 18) என்ற கவிதை பெற்றோர் தம் பிள்ளைகளை எண்ணி சொல்வது போன்ற உவமானத்தை ஒத்ததாக இருக்கின்றது. தமது வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியே கவலைப்படுவார்கள். அத்தகைய ஒரு உண்மையை இவ்வரிகள் இயம்பி நிற்கின்றன.

குருத்தோலையொன்று
வாய்விட்டு அழுகிறது
காய்ந்து விழும்
காவோலைகளை நினைத்தல்ல
நாளை
துளிர்ப்பதற்காய்
காத்திருக்கும்
ஆயிரமாயிரம்
குருத்தோலைகளை நினைத்து!

ஓரிதயத்தினுள்ளே... (பக்கம் 22) என்ற காதல் கவிதை உடல் உறுப்புக்களை வைத்து ஒரு வித்தியாசமான கற்பனையில் எழுதப்பட்டிருக்கின்றது. நாடிகளும் நாளங்களும் காதலுக்காக தூது செல்கின்றன என்று தன் கற்பனையை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர் முல்லைத்தீபன்.

வலது
இதய அறையில் - நீ
இருந்து கொண்டு
இடது
இதய அறையிலிருக்க
அனுமதித்தாய் என்னை..

ஏக்கம் (பக்கம் 38) என்ற கவிதை சந்தம் பொதிந்த ஒரு கவிதையாக அமைந்திருக்கின்றது. கனிவிலும், வலியிலும் கழியும் காலம் பற்றி கவிஞர் எடுத்துரைக்கின்றார். போலியான இந்த உலகில் வேஷமாக பழகும் மக்களும், சந்தர்ப்பத்துக்கு விலகிடும் கயவர்களும் இருப்பதாகச் சாடி இருக்கின்றார். எல்லாக் காலத்திலும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் வருகின்றனர். ஆனால் காலம் செல்லச்செல்ல உலகமானது கலியுகமாக மாறிவிட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று நம்பிக்கைக்காக பழகிவிட்டால், நாளை காலை வாரிவிடுபவர் அவராகத்தான் இருப்பார். ஒவ்வொருவருக்கும் இதில் தனித்தனி அனுபவங்கள் நிச்சயம் இருக்கலாம்.

கனவினூடே நகருது - நம்
கனிவான நினைவுகள்
வலியுனூடே வளருது - எம்
வாலிப வயதுகள்

வேதனைகள் தந்திங்கு - மடல்
விழிகளும் நனையுது..
பாகங்கள் வலித்திங்கு - உடல் 
பாழ்பட்டுப் போகுது

வேசமாய்ப் பழகியே - கடும்
நாசங்கள் நடக்குது..
மோசமாய் உருகியே - பெரும் 
பாசங்கள் உடையுது!

வதங்கியே வெடிக்குது - மனசு
விம்மியே வேகுது..
போலியே உலகிது - இதன் 
பொய்மையே விலகிடு!

தன் பரபமரிப்பில் இருப்பவர்கள் ஏழைகளாக இருக்கும்போது கோபுரங்களுக்hக கொட்டிக்கொடுத்து புகழ் தேடுபவர்கள் பலர் உள்ளனர். வெறும் பெயருக்காகவும் பெருமைக்காகவும் இவ்வாறெல்லாம் நடப்பவர்கள் மனிதாபிமானம் துளியுமின்றி திமிராக நடந்துகொள்வதான வலியை கவிஞர் எங்களுக்கும் வெளிநாட்டில் சொந்தக் காரருண்டு (பக்கம் 55) என்ற கவிதையினூடாக பிரதிபலிக்கின்றார்.

கோபுரத்திற்கு
கொட்டிக் கொடுப்பதுடன்
அதைச் சுற்றியுள்ள
குடில்களுக்கு ஆயிரத்திலாவது
கூரையமைத்துக் கொடுத்தலென்ன
குறைந்தா போய்விடும்?

வாசிப்பினூடாக இன்னும் தன் ஆளுமையை வளர்த்து எதிர்காலத்தில் இன்னும் நல்ல கவிதைகளை கவிஞர் முல்லைத்தீபன் தர வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் யாவும் வெற்றி பெற மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - கடவுளிடம் சில கேள்விகள்
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர் - வே. முல்லைத்தீபன்
வெளியீடு - வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
விலை - 240 ரூபாய்

58. கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திருகோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதுபாஷினி (1968) என்ற இயற்பெயரைக் கொண்ட ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுதியே கருநாவு ஆகும். இவர் ஏற்கனவே 2000 இல், உரத்துப் பேச... என்ற கவிதைத் தொகுதியையும், 2006 இல் துவிதம் என்ற கவிதைத் தொகுதியையும் இலக்கிய உலகுக்குத் தந்தவர். 

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்ற ஆழியாள், மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமானிப் பட்டப் படிப்பையும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுமாணிப் பட்டப் படிப்பையும், தகவல் தொழினுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றவர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் சார்ந்த விடயங்களில் அதி தீவிர  வாசிப்பும், தேடலும் மிக்கவராகவே காணப்படுகிறார். இவர் ஆங்கில விரிவுரையாளராக யாழ். பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் 1992 - 1997 காலப் பகுதிகளில் சுமார் 05 வருடங்கள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

உரத்துப் பேச..., துவிதம் ஆகிய கவிதைத் தொகுதிகளை விட மாறுபட்ட வகையிலேயே தனது மூன்றாவது கவிதைத் தொகுதியியை முன்வைத்துள்ளார். மாற்று பதிப்பகத்தினூடாக 77 பக்கங்களில் கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இந்தத் தொகுதியில் 25 கவிதைகளும், 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

கருநாவு என்ற பதம், சொன்னது பலிக்கும் என்ற கருத்தைக் கொண்டது. நம்மில் யாராவது ஏதாவது சொல்லி அது பலித்துவிட்டால் கருநாக்கால் சொன்னது நடந்துவிட்டது என்று கூறும் வழக்கம் இருக்கின்றது. பலருக்கும் இது உண்மையாக நடந்திருப்பதால் கருநாக்கு என்ற சொல் இன்னும் பாவனையில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தொகுதியில் உள்ள  சில கவிதைகளை இனி நோக்கலாம்.

மௌனம் சம்மதத்துக்கான அறிகுறி என்பது காலங்காலமாக இன்று வரை சொல்லப்பட்டு வரும் ஒரு கூற்றாகும். மௌனத்தை சாதகமாக எடுத்துக்கொள்ளும் போக்கே நவீன காலத்திலும் நாகரிகம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்றைய சூழலில் மௌனத்தின் மொழிபெயர்ப்பு வலியாகவும், வேதனையாகவும், சகிக்க முடியாத அல்லது வெளிக்காட்ட முடியாத துக்கித்தலின் வெளிப்பாடு என்பதும் உணரப்பட வேண்டிய விடயமாகும். 

கோபத்திலும், எதிர்ப்பிலும் ஏன் இயலாமையிலும் கூட மௌனமே மொழியாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றது. கண்ணீருக்கும் மௌனத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதுதான் உதடு பிரிக்காமல் மனதில் உள்ளதை வெளிப்படுத்துதல் என்பதை மௌனம் (பக்கம் 17) என்ற கவிதை விளக்குகின்றது.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
சம்மதம் இன்மைக்கும் அறிகுறி
அது
எதிர்ப்புணர்வின் அறிகுறி
எதற்கான அறிகுறியுமே அல்ல.

மௌனம் 
சினத்தின் இறுக்கம்
இயலாமையின் துயரம்

மௌனம் ஒரு பாவனை
கூர்ந்து கவனித்தலின் குணாம்சம்
அல்லது
ஒட்டாமல் இருத்தலின் வெளிப்பாடு

கொப்பித் தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது? (பக்கம் 35) என்ற கவிதை போரின் வடுக்களை வலிமையாக மனதில் பதியச் செய்கின்றது. ஒன்றாக கூடிக்குலாவியிருந்த  குடும்பம் சின்னாபின்னமாக்கப்பட்ட வரலாற்றை ஒரு சிறிய கவிதையில் கூறியிருப்பது ஆழியாள் என்ற ஆளுமைப் பெண்ணின் திறமையை பறைசாற்றுகின்றது. காணாமல் போன பட்டியலில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களோ அல்லது அவர்களுக்கு உண்மையில் நேர்ந்த கதிகளோ இன்று வரை அறிவிக்கப்படாமல் அக்குடும்பத்தினரை வதைக்கிறது. இந்த விடயம் மனசாட்சி கொண்ட எல்லோரையும் வேதனை விளிம்புக்கு இட்டுச் செல்லும். அந்த தாக்கத்தினை கீழுள்ள வரிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி, வடிவு அன்ரி, வனிதா அன்ரி, சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர். அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் விக்கிப் போன செல்லம்மா பாட்டியை மணிக் கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள்.. பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்குப் போனார். சேகர் சித்தப்பா காணாமல் போனார். சித்தி சின்னா பின்னமாகி செத்துப் போனா (என்ரை ஆசைச் சித்தி) ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள். 

நாட்கள் வரும் (பக்கம் 44) என்ற கவிதை சிறைச்சாலையில் நடக்கின்ற சித்திரவதைகளை ஞாபகமூட்டிப் போகிறது. அரசியல் காரணங்களுக்காக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சிறை சென்றவர்களை அங்குள்ள அதிகாரிகள் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவார்களா? என்ற கற்பனையில் மனது விரிகிறது.  

எல்லாக் கதவுகளையும்
எங்களின்
முகத்தில் அடித்து மூடுங்கள்!

எங்களுக்கான ஜன்னல்களை
அறைந்து சாத்துங்கள்!

காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம் கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி அடையுங்கள்!

உங்களில் எவர் தன்னும் 
எங்கள் பாண் துண்டுகளுக்கு 
தித்திக்கும் பழப்பாகையோ - ஒரு கரண்டி 
வெண்ணையையோ பூசாதீர்கள்!

வழக்கறிஞராகவும், த சண்டே லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த லசந்த விக்கிரமதுங்க (1958 - 2009), தனது கட்டுரைகள் மூலம் இலங்கை அரசுக்கும், எல்டிடிஈ மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் 2009.01.08 ஆம் திகதி வேலைக்குச் செல்லும் போது கொழும்பில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நிகழ்வுகளை மறக்காத கவிஞர், என் அண்ணன் லசந்தவுக்கு அவர்கள் கூறியதாவது... (பக்கம் 51) என்ற தலைப்பிலான கவிதை மூலம் தனது துயரைப் பகிர்ந்து கொள்கிறார். ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது இன்று நேற்று நடந்து வருவதல்ல. உண்மைகளை உரத்துச் சொல்கின்ற காரணங்களுக்காக அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுவதும், தங்குமிடங்களை அடித்து நொறுக்குவதும், தனிப்பட்ட ரீதியில் அவர்களை மிரட்டுவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் ஆதிக்கத்தின் அடக்குமுறையாக காணப்படுகின்றது. இந்த தாற்பரியங்களை தத்துவார்த்தமாக தனது கவிதையில் பதியச் செய்திருக்கிறார் கவிஞர் ஆழியாள்.

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்

எவ்வளவு சுலபமாக, 
ஒரு பிஸ்கோத்தை
மொறு மொறுவெனக் கொறிப்பது போல
எவ்வளவு இலகுவாக

பகல் விமானம், பால்பெல்போரா - நடனம் முடிந்துவிட்டது, கொடுத்து வைத்த குட்டிப் பெண், காக்கைச் சிறகுகள், வெளி பற்றிய கனவில், கங்காரு, செந்தைல மரங்களும் நானும்... ஆகிய தலைப்புக்களில் 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும், மூலக் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்களும் நூலின் கடைசிப் பகுதியில் காணப்படுகின்றன.

இளம் தலைமுறை கவிஞர்கள் ஆழியாளின் தொகுதிகளை வாசிப்பதினூடாக கவிதையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். கவிதையின் ரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். காத்திரமான தொகுதியாக காணப்படும் இத்தொகுதி அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, நேசிக்கப்படவும் வேண்டியதாகும்!!!

நூல் - கருநாவு
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஆழியாள்
வெளியீடு - மாற்று
விலை - இந்திய ரூபாய் 60.

57. கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

கலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் 'பொப்' என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

நமது நாட்டில் 'பொப்' இசை என்று கூறிக்கொண்டு தமிழ்மொழிப் பாடல்கள் சிலவற்றையும் நமது இளைஞர்களில் சிலர் பாடி வருகின்றார்கள். 'பொப்' என்ற வார்த்தையை இவர்கள் ஏன் உபயோகிக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. மக்கள் சங்கீதம் என்று தமிழில் அழைக்கலாமே. அல்லது ஜனரஞ்சகப் பாடல் என்றும் கூறலாம். 'பொப்' என்றால் 'பொப்பியூலர்' என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கம். 'பொப்பியூலர்' என்றால் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது என்று பொருள். மக்கள் மத்தியில் பிரபல்யமான பாடல்கள், தமிழைப் பொறுத்தவரையில் சினிமாப் பாடல்களே!

கவிச்சுடர் அன்பு  முகையதீன் மணிவிழா மலரில் நூலாசிரியர் எழுதிய கட்டுரை உடனிகழ்கால பண்பாளன் ஒருவன் பற்றிய தகவற் பேழை (பக்கம் 18) என்ற தலைப்பில் வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளது. 

உருவகக் கதைகளுக்கான விளக்கம் (பக்கம் 33) என்ற தலைப்பில் எம்.ஐ.எம். முஸம்மில் எழுதிய பிரதிபலன் உருவகக் கதைத் தொகுதியை மேற்கோள் காட்டி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.  இக்கட்டுரையில் உருவகக் கதைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

''உலகத்திலேயே திறமை மிகுந்த முதல் உருவகக் கதாசிரியர், கிரேக்க ஞானி ஈசாப் ஆவார். வெளிப்படையாகக் கூறும் கசப்பான உண்மை, உலகத்தாருக்கு எடுத்த எடுப்பில் பிறப்பதில்லை. பெரும்பாலும் அதற்குப் பயன் ஏற்படுவதும் இல்லை என்பதை அறிந்தே அவன் உருவகக் கதை என்னும் இலக்கிய உருவத்தை எடுத்துக் கொண்டு, கணந்தோறும் புதிது புதிதாய் மலரும் தன் கற்பனைத் திறத்தினால் அதை விதம் விதமாக அலங்கரித்து உலகத்துக்குத் தந்தான்.''

''உருவகக் கதை, உருவில் சிறியதாகவும் முடிவு அழகாகவும் அமைவதனால் மனதில் நீண்ட நாள் பதிவாகவும் இருக்கும். உருவகக் கதையில் பொழுது போக்கு மட்டுமன்றிச் சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். இழையும் படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி, தேர்ந்தெடுத்த அதிசயமான கற்பனைகளினால்  அழகை தெளிவுபடுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும், உணர்ச்சியையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும், வாழ்க்கை மதிப்புகளையும் வாசகருக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக் கதை என்னும் இலக்கிய வடிவம் காவியத்துக்குச் சமமானது.'' என்ற விடயங்களை வாசகருக்குச் சொல்லி நிற்கின்றார் ஆசிரியர்.

சமூக முன்னேற்றத்திற்கான பத்திரிகையாளரின் பங்களிப்பு (பக்கம் 37) என்ற தலைப்பில் இதழியல் கற்கைநெறியைக் கற்கும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாம் அனைவரும் சமூகப் பிராணிகள் என்று அரிஸ்டோடர்டில் கூறியதற்கிணங்க சமூகத்தில் நாம் தனித்து வாழ இயலாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதாகவே நமது வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. அத்தகைய சமூகத்தில் நிகழும் விடயங்களை எல்லோரும் அறிவதற்காக பத்திரிகை என்ற ஊடகம் பெரிதும் துணை புரிகின்றது. அத்தகைய ஊடகத்தில் பணிபுரிந்த ஒருவரான. சி. குருநாதன் என்பரைப் பற்றியும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பத்திரிகைகள் பற்றியும் எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நுகர்ச்சியை மீள வலியுறுத்தும் சுவையான நூல் (பக்கம் 52) என்ற தலைப்பில் அகளங்கனின் இலக்கியச் சரம் என்ற நூல் பற்றிய கண்ணோட்டத்தை முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

''தான் பெற்ற அனுபவமொன்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழையும் இலக்கிய கர்த்தா அதற்கு ஏற்ற பழக்கத்தையும், வழிமுறைகளையும் தெரிந்து கையாளுகிறான். ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே வெற்றென வெளியிடுவதன் மூலம் கேட்போர் உள்ளங்களில் அவ்வனுபவத்தைக் கிளர்ந்தெழ வைத்தல் சாத்தியமன்று. எனவே பொருத்தமான அமைப்பினையும், சொல் ஒழுங்கையும், அணிகளையும் தெரிந்து கற்பனைத் திறனுடன் கையாளும் வல்லமை சிருஷ்டியாற்றல் என்று போற்றப்படுகிறது. ஆக்க இலக்கியங்கள் அனைத்துக்கும் பொருத்தமான இவ்வல்லமை கவிதைக்கு இன்றியமையாததாகும்.''

அண்மைக்கால ஆக்கங்கள் எழுப்பும் சலனங்கள் (பக்கம் 67) என்ற தலைப்பில் க. சட்டநாதன் எழுதிய உலா, எஸ். அகஸ்தியர் எழுதிய எரி நெருப்பில் இடைபாதை இல்லை, மாத்தறை ஹஸீனா வஹாப் எழுதிய வதங்காத தலரொன்று, ஏ.பி.வி. கோமஸ் எழுதிய வாழ்கையே ஒரு புதிர், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய மக்கத்துச் சால்வை, செ. யோகநாதன் எழுதிய கிட்டி, கதைவாணன் எழுதிய காளை விடு தூது, சோ. ராமேஸ்வரன் எழுதிய யோகராணி கொழும்புக்குப் போகிறாள், மாத்தளை கார்த்திகேசு எழுதிய வழி பிறந்தது, மண்டூர் அசோகா எழுதிய பாதை மாறிய பயணங்கள், ஓ.கே. குணநாதன் எழுதிய ஊமை நெஞ்சின் சொந்தம், ந. பாலேஸ்வரி எழுதிய தந்தை விடு தூது, ஜமுனா ராணி எழுதிய பூவிதழின் புன்னகை ஆகிய தொகுதிகள் பற்றிய விஷேட குறிப்புக்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரால் எழுதப்பட்ட மலையகம் பற்றிய முதல் நாவல் தொடர்பான விடயங்கள் ஓ.கே. குணநாதன் எழுதிய ஒரு துளி (பக்கம் 87) என்ற தலைப்பில் விரிவாக நோக்கப்பட்டுள்ளது. 

ஷாமிலாவின் இதயராகம் என்ற கதையை எழுதியிருப்பவர் ஜெக்கியா ஜுனைதீன் என்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர். ஆயினும் கதைக்கான கருவை வழங்கியவர் நாவலாசிரியையின் கணவரான பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவராவார் போன்ற விடயங்களை உள்ளடக்கியும், நாவலில் இலக்கிய ரசம் வெளிப்பட்டு நிற்கும் தன்மை பற்றியும் ஷாமிலாவின் இதயராகம் (பக்கம் 97) என்ற தலைப்பில் விபரங்களை நூலாசிரியர் விரிவாகத் தந்துள்ளார். ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் பேசப்படுகின்றது.

இவை தவிர இன்னும் பல விடயங்கன் இந்ந நூலில் உள்ளடங்கியுள்ளன. விரிவஞ்சி ஒரு சில விடயங்களையே எடுத்து நோக்கியுள்ளேன். தான் வாசித்து இரசித்தவற்றை வாசகர்களுக்கு முன்வைப்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அந்த வகையில் அவரை ஒரு தகவல் களஞ்சியமாகவே பார்க்க வேண்டியுள்ளது. தனது எழுத்துக்களாலும், பணிவான குணத்தினாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்த நூலாசிரியர்.  அவரைப் பல்லாண்டு காலம் வாழப் பிரார்த்தித்து, இன்னுமின்னும் பல தரமான புத்தகங்களை இலக்கிய உலகுக்குத் தர வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கலை இலக்கியப் பார்வைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன் 
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

Monday, March 31, 2014

56. பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார்.

இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.

இந்த நூலுக்கு தமிழ்மாமணி, செந்தமிழ்ச் செம்மல், கவிச்சுடர், கலைக்காமாமணி, பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் நெய்திறம் மிக்க நெசவாளர் நெய்த நேரிய நூல் என்ற தலைப்பிட்டு தனது மதிப்புரையை பதிவு செய்துள்ளார். அதுபோல் முதுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு, குறும்பாவில் அமைந்து சுவைதரும் அங்கதப் பாக்கள் என்ற தலைப்பிலும், கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி கலைப் பெறுமானம் நிறைந்த பாலமுனை பாறூக் குறும்பாக்கள் என்ற தலைப்பிலும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பாலமுனை பாறூக் அவர்கள் குறும்பா விருந்து வைத்து என்ற தலைப்பில் தனதுரையை முன்வைத்துள்ளார். நவாஸ் சௌபி அவர்கள் நூலுக்குரிய பிற்குறிப்பை வழங்கியுள்ளார். இந்த பல்வேறுபட்ட மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்களை வைத்தே பாலமுனை பாறூக் அவர்களின் குறும்பாக்களை அவதானித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாய் அமையும் என்று கருதுகின்றேன்.

ஈழத் தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிட்டுப் பெயர் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக பாலமுனை பாறூக் அவர்கள் காணப்படுகிறார். 1987 இல் பதம் என்ற கவிதைத் தொகுதியையும், 2009 இல் சந்தனப் பொய்கை என்ற கவிதைத் தொகுதியையும், 2010 இல் கொந்தளிப்பு என்ற குறுங்காவியத்தையும், 2011 இல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத்தையும், 2012 இல் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு என்ற குறுங்காவியத்தையும் ஆக ஐந்து நூற்களை இலக்கிய உலகுக்கு தந்தவர், தனது ஆறாவது நூலாகவே இந்ந குறும்பாக்களைத் தொகுத்து முன்வைத்துள்ளார்.

காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா

என்ற வகையில் 90 குறும்பாக்களை அமைத்தும், ஏனைய குறும்பாக்களை வேறு யாப்பிலும் அமைத்துள்ளார். இயைபுத் தொடையும், மோனைத் தொடையும் குறும்பாக்களை அணிசெய்கின்றன. எதுகையும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. பல குறும்பாக்களில் எள்ளல் துள்ளி விளையாடுகின்றது.

குறும்பாவின் குணங்கள் என்ன? வெண்பா, குறள்வெண்பா போன்று கூரான பார்வை கொண்டது. கவிதைக்குரிய அழகும், ஆழமும், அடர்த்தியும், சுருக்கமும் கொண்டது. ஐந்தடி கொண்ட இப்பா மூலம் வாழ்வியலைப் பற்றிக் கலாபூர்வமாகப் பேசலாம். வார்த்தைக் கட்டமைப்புக்குள் வாழ்வியல் கலாச்சாரங்களை வடித்துத் தரலாம். ஈரடி எழுசீர் கொண்ட குறட்பா போலும் ஐந்தடி பதின்மூன்று சீர்களைக் கொண்ட குறும்பா மூலம் கவிஞர் தனது கருத்துக்களை அழகுபடச் சொல்லியுள்ளார். நகைச் சுவையும் எள்ளலும் நயந்து இரசிக்கத் தக்கவாறு இக்குறும்பாக்கள் அமைந்துள்ளன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பனுவலுக்கும் ஒவ்வொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. கவிச்சுவை கூட்டப்பட்டுள்ளது. ஐந்தடிப் பாவுக்குள் அர்த்தமும் அழகும் காட்டப்பட்டுள்ளது.

இந்நூலில் பல அறிவுரைகள் விரவிக் காணப்படுகின்றன. அநீதியான சமூகத்தோடு முரண்படுகின்ற அறிவாளிகளின் பேச்சு எப்போதும் அங்கதமாகவே இருக்கும். குறும்பாவின் இயல்பும் அங்கதம் சார்ந்ததே. மேற்கு நாடுகளில் இருந்த நுனறயசன டுநயச  இன் டுiஅநசiஉ (லிமறிக்;) ஆங்கில கவிதை வடிவமே இங்கு குறும்பாவாக வந்தது என்பது பலரது அபிப்பிராயம். இக் குறும்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மஹாகவி ஆவார். கேலியையும், கிண்டலையும், சமூக ஊத்தைகளையும் வெளிப்படுத்த மிகவும் பொருத்தமான வடிவமாக இந்த குறும்பாக்கள் இருந்தது. கேலியும், ஆபாசமும், நகைச் சுவையும் இதில் இருந்ததால் செம்மொழி இலக்கியத்துள் இதைப் பலர் இணைத்துக்கொள்ளவில்லை. இங்கும் அதே நிலைதான்.

1965 களில் வெளிவந்த மஹாகவியின் குறும்பாக்களிலும் இக்கேலியும் கிண்டலையும் காணலாம். 2002 இல் ஒலுவில் எஸ். ஜலால்தீன் சுடுகின்ற மலர்கள் என்ற தலைப்பில் ஒரு குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். அதுபோல் 2010 இல் ஒலுவில் ஜே. வஹாப்தீன் வெட்டுக்கற்கள் என்ற குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். இந்தத் தொடரில் நான்காவது நூலாகவே பாலமுனை பாறூக்கின் இந்த நூல் 2013 டிசம்பரில் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுதியில் சில குறும்பாக்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பிடித்துள்ளன. கவிஞர் அதற்கு காரணமாக, அந்த ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து புலக்கத்தில் உள்ளதாலும், நகைச்சுவை உணர்வை அந்த ஆங்கிலச் சொற்கள் கூட்டித் தருவதாலும் பொருத்தம் கருதி அவற்றை தான் சேர்த்திருப்பதாகக் கூறுகின்றார்.

இனி இரசனைக்காக கவிஞர் பாலமுனை பாறூக்கின் சில குறும்பாக்களை எடுத்து நோக்குவோம்.

அழகு, குணம், அறிவு என்ற எது இருந்தபோதிலும், இன்று திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயம் சீதனம் ஆகும். சீதனம் கொடுக்க வழியில்லை என்றால் எத்தகைய அழகிகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்ற நிலை தற்காலத்தில் தோன்றியிருக்கின்றது. அழகுக்காக மாத்திரம் திருமணம் செய்தல் கூட அண்மைய காலங்களில் வழக்கொழிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதுபற்றிய விடயங்களை உள்ளடக்கியே தேவை (பக்கம் 26) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அமைகிறது.

பக்கத்து வீட்டிலொரு பாவை
பால்நிலவு வதனத்தாள் பூவை
முப்பதையும் தாண்டிவிட்டாள்
முடியவில்லை திருமணமே
எப்படியும் சீதனமாம் தேவை!

தாய் தந்தையர் கஷ்டப்பட்டு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சொத்து சுகங்களைத் தேடி வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் முடித்த பிறகு சொத்தில் பாகப் பிரிவினை கேட்டு சண்டையிடுவார்கள். பிறகென்ன நடக்கும்? மொத்த சொத்தையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டு ஆளுக்காள் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய எண்ணமெல்லாம் தாய் தந்தையர்க்கு சிதறிப் போய்விடும். இறுதியில் அவர்களுக்கு வீடுமில்லை. பிள்ளைகளின் அன்பும் இல்லை என்ற பரிதாப நிலைமை உருவாகி விடுவதை இன்றுகளிலும் காணக்கூடியதாய் இருக்கிறது. சொத்து (பக்கம் 29) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அதை ஒட்டியே எழுதப்பட்டிருக்கின்றது.

பிள்ளைகளில் அவர்க்கதிகம் பற்று
பெருமளவில் சேர்த்தாராம் சொத்து
பிள்ளைகளோ சண்டையிட்டுப்
பிரிந்தனராம் தனித்தனியாய்
உள்ளதெல்லாம் வேறாக்கி, விற்று!

பெருங்குடி (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது. இதில் குடியின் கெடுதியைப் பற்றி சொல்லப்படடிருக்கின்றது. கணவன் குடியில் மூழ்கிவிட்டால் பால்மா வாங்குவதற்குக் கூட முடியாத நிலை தோன்றும். பிறகு குழந்தை பசியால் வாடி நிற்கும். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனமாக எழுதப்பட்டிருக்கின்றது.

தவழ்கிறது மதலையவள் மடியில்
தவழ்கின்றான் கணவனுமோ குடியில்
மதலையது பாலின்றி
மடியிலிருந் தழுகிறதே
குடிகுடியைக் கெடுத்திடுமோ முடிவில்!

இலஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். அப்படியிருக்க இன்றெல்லாம் சிறியதொரு காரியம் ஆக வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வாங்குபவர்களைவிட கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். காரணம் நேரத்துக்கு முடிய வேண்டிய காரியங்கள் பொடுபோக்குத் தனத்தால் பிற்போடப்படுகின்றன. அவற்றை சீக்கிரம் செய்துகொள்வதற்காக அலுவலக பியூன் முதல் மேலதிகாரி வரைக்கும் ஷகைக்குள் வைக்க| வேண்டும். அதை உணர்த்தி (பக்கம் 33) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கந்தோரில் கையூட்டுப் பெற்றான்
கடமைகளில் தவறியவன் கெட்டான்
வந்தவனை பொலிஸாரே
வலைவீசிப் பிடித்ததனால்
இன்றவனோ கூண்டிலகப் பட்டான்!

அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஒரு வகை முரட்டுத் தன்மையோடு பழகுவார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதற்குக் காரணம் தான் கந்தோரில் வேலை செய்கிறோம் என்ற பெருமையும், அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷனும் ஆகும். அவற்றை எல்லாம் உதறிவிட்டு எல்லோருடனும் இயல்பாக, அன்பாகப் பழகி, தமக்குக் கீழுள்ளவர்களிடமும் பணிவாக நடந்தால் எல்லாம் அழகாக இருக்கும் என்பதை அழகு (பக்கம் 39) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா விளக்கி நிற்கின்றது.

மக்களொடு அன்பாகப் பழகு
மதித்தவர்க்குப் பணிபுரிய இளகு
கட்டிவைத்த நாயாகக்
கடமையினில் குரையாமல்
ஒத்துழைப்பாய், உத்தியோகம் அழகு!

இலங்கையைப் பொறுத்தவரை எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகக் குறைவு. எழுத்தறிவு வீதம் இலங்கையில் உயர் மட்டத்தில் காணப்படுகின்றபோதும், வாசிக்கும் வீதம் மிகக் குறைவு என்றே சொல்லலாம். புத்தகங்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அதை புரிந்து கொள்ள இயலும், தமது கற்பனைளை உட்செலுத்தி படைப்புக்களை எழுதி ஒரு நூல் வெளியிட்டால் போதும். அந்த எழுத்தாளன் இனி வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே இருக்க வேண்டும் என்கிற நிலையும் காணப்படுகின்றது. அதைத்தான் வாட்டம் (பக்கம் 47) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா சுட்டி நிற்கின்றது.

இலக்கியநூல் வெளியீட்டுக் கூட்டம்
எத்தனைநாள் அதற்காக ஓட்டம்
பலவர்ண அழைப்பினிலே
பதவியொடு பெயர்பொறித்தும்
வரவிலையே எழுத்தாள்வோர், வாட்டம்!

கலாநிதி என்ற பட்டம் இன்று எல்லா துறைகளுக்கும் வழங்கப்படுகின்றது. குறித்த ஒரு துறையில் சாதனைகளை நிகழ்த்துவதனாலும் இப்பட்டம் வழங்கப்படுகிறதெனலாம். படித்து கலாநிதி ஆனவர்களுக்கும், புகழால் கலாநிதி ஆனவர்களுக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை காணப்படுவதை எடுத்துக்காட்ட, க(ல்)லாநிதி (பக்கம் 51) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கல்லாதான் ஆள்சும்மா வாட்டம்
கலாநிதியாம் இன்றவனோ கொட்டம்
பல்வேறு சங்கங்கள்
பலரகத்தில் விற்பதனால்
கல்லாதான் வாங்கினானாம் பட்டம்!

தேர்தல் மழைக்கு முளைக்கும் சில வேட்பாளர் காளான்களுக்கு போங்கையா... போங்க (பக்கம் 52) என்ற குறும்பா எழுதப்பட்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் வந்து அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் பிறகு யார் நீங்கள்? என்று கேள்வி கேட்பார்கள். வேடிக்கை என்னவென்றால் காலம் காலமாக இது நடைபெற்று வருவது தெரிந்தும் தமது மக்கள் இதைப் பற்றி பேசிப்பேசியே காலம் கழித்திருப்பதுதான். முன்னேற்றம், முயற்சி, மாற்றம் என்ற எதுவுமே இல்லாமல் தேர்தல் கால வேட்பாளர்களைப் பற்றி பேசிப் பேசியே நமது முன்னோர் வாழ்க்கை முடிந்திருக்கிறது. நமது வாழ்க்ககை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல்தான் வருகிறதா? வாங்க
தேனாக வாக்குறுதி தாங்க
பேர்புகழப் பேசிடுங்க
பேசிஎங்க வாக்கெடுத்தா
போயிடுங்க... வரமாட்டீர் போங்க!


அந்தம் (பக்கம் 55) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா நாட்டின் தேசியத்தை வலியுறுத்துகின்றது. யுத்தம் தின்ற நம் பூமியில் இப்போதுதான் சமாதான விதை நடப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் கூட இனவாதம், மொழிவாதம் பேசி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில தீய சக்திகள் நம்முள்ளும் ஊடுறுவித்தான் இருக்கின்றன. இதை கீழுள்ள குறும்பா வலியுறுத்தி நிற்கின்றது.

எல்லார்க்கும் நாடுஇது சொந்தம்
எவர்மறுப்பார் எமக்குள்ள பந்தம்
பொல்லாத இனவாதப்
பூசகரின் இடைமறிப்பால்
தொல்லையடா ஒற்றுமைக்கே அந்தம்!

எமக்கான ஒரு குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்தான், மக்கள் வாக்குகளை இட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களோ மக்களின் தீயில் சுகமாக குளிர் காய்கின்றனர். அவர்களால் உருவாகி, அவர்களையே அழிக்கின்றனர். சமூகத்தின் இருப்புநிலை குறித்த அக்கறை எதுமின்றி தானும் தன் குடும்பமும் என்ற வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்கின்றனர். கஷ்டப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கஷ்டமாகவே இருக்க, எம்.பி மார்கள் சொகுசான வாழ்க்கைக்குள் தங்களை உட்பொருத்திக் கொள்கின்றனர். இதைச் சொல்கிற குரல் (பக்கம் 57) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

எம்குரலே இவரென்று நம்பி
ஏமாந்தோம் போதுமடா தம்பி
எம்சமூகம் அழிகிறது
இருப்பெங்கோ தொலைகிறது
இவரெங்கோ? பிரதிநிதி.. எம்பி?

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது இலக்கியப் பங்களிப்புக்களைச் சிறப்பாகச் செய்துவருபவர். இவரது கொந்தளிப்பு என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2010 இல் அரச சாகித்திய மண்டல சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரது குறும்பாக்கள் அடங்கிய இத்தொகுதி நகைச்சுவை கலந்த விடயங்களை சுவாரசியமாக சொல்லியிருப்பதினூடாக மக்கள் மனதில் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. புது முயற்சிகளைக் கையாண்டு, ரசிக்கத்தக்க வகையிலும், சிரிக்கத்தக்க வகையிலும் குறும்பாக்களை எழுதி வெளியிட்ட நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
விலை – 200 ரூபாய்