Wednesday, February 24, 2016

95. இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை

இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை

சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.

கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.

அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.

ஐந்தரை மணிக்கு தனது பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்ற அவர், வீட்டு வேலைகளைச் செய்வதிலும் அதிகமாக மனைவிக்கு ஒத்தாசை புரிவார். அதுபோல மாதச் சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தி அவற்றை வாசிக்கும் அவரின் பழக்கத்துக்கு, மனைவியிடமிருந்து எந்த ஆதரவும் இருக்கவில்லை. இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சின்ன வயது யுவதி அவருடன் தனியாகப் பேச வேண்டும் என்றும், அவருக்கு மாத்திரமே தன் பிறந்த நாள் விருந்து தருவதாகவும் கூறி ஒரு பார்சலை கொடுக்கின்றாள். ஆனால் அவர் அந்த கடிதத்தை கிழித்து வெள்ளைப் பூக்களை சமாதியின் மேல் வைத்தபோல அவளிடம் கொடுக்கின்றார். தீய எண்ணங்களுக்கு அடிமையாகாத மனிதரான அருமை நாயகத்தைப் போல் ஒரு கணவர் அமையும் பெண்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

எது மனித சாதி (பக்கம் 42) என்ற சிறுகதையில் சாதி வெறி தத்துவார்த்தமாக முன்வைக்கப்படுகின்றது. கண்மணி - கந்தசாமி தம்பதியர் வசிக்கும் அந்தப் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது. குறிப்பிட்ட தூரத்துக்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற நிலை கண்மணிக்கு.

அங்கிருந்த வெள்ளாம் பகுதியில் வசிக்கும் பசுபதியின் வீட்டில் கிணறு இருக்கின்றது. அதில் தூய நீர். அதிலிருந்து குடத்துக்கு நீர் நிரப்பி வர கண்மணி சென்றிருந்த சமயம் பசுபதிக்கு புத்தி தடுமாறுகின்றது. கண்மணியை வளைத்துப் போடும் நோக்கில் அவரே கிணற்றிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்கின்றார். வலிய குரக்கன் வேண்டுமா என்கிறார். கண்மணி தன்னிடம் காசு இல்லை என்றபோதும் பிறகு தருமாறு சொல்லிவிட்டு குரக்கனை உரப்பையில் போடுவதற்கு உதவி செய்கின்றார். கண்மணி இரு கையையும் மேல் உயர்த்தி தாங்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கண்மணியைத் தொடுகின்றார். அதிர்ச்சியடைந்த கண்மணி அவரைத் தள்ளிவிட்டு உரப்பையையும் வீசிவிட்டுச் செல்கின்றாள்.

கந்தசாமிக்கும் கண்மணிக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. காரணம் கண்மணி வீட்டில் ஒரு விசேடம் நடக்கும்போது வெள்ளாம் பகுதியிலிருந்து வெகு நேரம் கடந்து ஆட்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு சிற்றுண்டிகள், பலகாரங்கள், தேநீர் என்பவை வழங்கப்பட்டும் அவர்கள் அவற்றை மறுத்து, கடையிலிருந்து சோடா வாங்கி வரச் சொல்கின்றார்கள். சோடா கம்பனியில் வேலை செய்பவர்கள் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும்? பனங்கட்டி வேண்டும் போது பனங்கட்டி தயாரிப்பவர் யார் என்று புரியாமலா இருக்கும்? என்று கதாசிரியர் கேட்டு நிற்கும் கேள்வி நியாயமானது. அது மாத்திரமன்றி கந்தசாமிக்கு இன்னொரு கசப்பான சம்பவமும் நடக்கிறது. முருகேசு என்பவரின் தலைமயிர் வழிப்பதற்காக கந்தசாமி, அவர் வீட்டுக்குச் செல்கின்றார். அவர் மலசல கூடத்துக்கு அருகாமையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கின்றார். கந்தசாமி உயரமானவன் என்பதால் அவனுக்கு குனிந்து குனிந்து வேலை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் முருகேசர் எண்ணிப் பார்க்கவில்லை. திடீரென வான மண்டலம் அதிர்ந்தது. கூக்குரல்கள் கேட்டன. முருகேசர் ஓடிப்போய் பதுங்குக் குழிக்குள் பதுங்கிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தவரும் பதுங்குக் குழிக்குள் தஞ்சம் புகுகின்றனர். ஆனால் ஒருவர் கூட கந்தசாமியைக் கூப்பிடவில்லை. இதிலிருந்து ஒரு ஆபத்தில் கூட சாதியத்தைத் தான் பார்க்கின்றனரே தவிர மனிதத்தை அல்ல உன்பது புலனாகின்றது.

தாழ்வு மனச்சிக்கலால்... (பக்கம் 82) என்ற கதை கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சிறு சிறு பிணக்குகள் பற்றி பேசியிருக்கின்றது. சத்தியமூர்த்தி ஒரு முறை கமலா என்பவளின் கடைக்குப் போய் நீண்ட நேரம் அவளுடன் கதை;ததை அவரது மனைவி மனோண்மணியிடம் வந்து சிலர் முறையிடுகின்றனர். அன்றிலிருந்து சத்தியமூர்த்தி எதைச் செய்தாலும் அவரை மாலாவுடன் இணைத்து திட்டிவிடுவாள் மனோண்மணி. மனோண்மணியின் இயல்புகள் சத்தியமூர்த்திக்கு ஒத்துப்போவதைவிட கமலாவின் இயல்புகள் ஒத்துப்போயின. எனவே அவர் சாதாரணமாகத்தான் கமலாவோடு கதைத்துவிட்டு வருவார். ஆனால் மனோண்மணிக்கு இது அடியோடு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மனோண்மணி பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுகின்றாள்.

மனோண்மணியின் சகோதரியின் கணவன் வீட்டு வளவிலேயே பட்டறை போட்டு தன் தொழிலை நடத்தி வருகின்றாள். அவரது உதவிக்கு நான்கு அடியாட்கள் வேறு. சகோதரி ஆசிரியை. அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமானது. ஆத்மார்த்தமானது என்று மனோண்மணி எண்ணி கவலைப்படுவாள். அவளுக்கு அமைந்த வாழ்க்கை போல தனக்கும் நல்ல புருஷன் அமைந்திருக்கக் கூடாதா என்று அவள் ஏங்குவாள். சில நாட்களின் பின்னர்தான் மனோண்மணிக்கு தன் சகோதரியின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள புரிந்தன. அவளது கணவன் சந்தேகக் குணம் பிடித்தவன். அவள் பாடசாலைவிட்டு ஒருநாள் நேரம் பிந்தி வீட்டுக்கு வந்தவுடன் அவன் போட்ட கூச்சலும் அதற்கு அவள் மறுத்துப் பேசுவதும் கேட்டது. பாடசாலையில் உள்ள இன்னொரு சக ஆசிரியருடன் மனோண்மணியின் சகோதரியை தொடர்புபடுத்தி அவன் பேசி விடுகின்றான். பின்பு அவளை அடி அடியென்று அடிக்கின்றான். இவை மனோண்மணிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது கணவன் சாதாரணமாக ஒரு பெண்ணுடன் பேசியதைத்தான், தான் தப்பாக நினைத்துள்ளேன் என்ற உண்மை மனோண்மணிக்குப் புரிவதாக கதை நிறைவுசெய்யப்பட்டிருக்கின்றது.

சின்னச் சின்ன சிக்கல்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிடும். நம்மைச் சூழ நடக்கின்ற பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்கின்றபோது அவற்றிலிருந்து நாம் எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று அறிய முடிகின்றது. அவ்வாறான பிரச்சினைகளை தனது கதைக்குள் கருவாக்கி அவற்றிற்கான தீர்வையும் தரும் வலிமை கதாசிரியர் சூசை எட்வேட்டுக்கு இருக்கின்றது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இவன் தான் மனிதன்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூசை எட்வேட்
வெளியீடு - அஸ்ரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

94. ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை

ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை

1979 இல் தினகரன் பத்திரிகையில் உலக சாதனை எனும் கவிதையை எழுதியதையடுத்து இன்று வரை கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபட்டு வருபவர் எழுத்தாளர் மாவனெல்லை உ. நிசார் அவர்கள். 18 நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கும் இவர் ஒரே பூமியில் நானும் நீயும் என்ற இந்த நூலை தனது 19 ஆவது நூலாக தற்போது வெளியிட்டிருக்கின்றார்.

கவிதைகளைக் காதலிப்பவர்களுக்கு இலக்கியத்தின் மறு வடிவங்களையும் ரசிக்கும் திறன் இயல்பிலேயே வாய்த்து விடுகின்றது. தீவிரமாக ஏனைய துறைகளில் ஈடுபட முடியாவிட்டாலும் கூட, இலக்கியத்தின் பரிணாமங்களை ஆராயும் மனம் இயல்பாகவே தோன்றி விடுகின்றது.

கவிதை, சிறுகதை, நாவல் என்ற தளத்தில் ஈடுபட்டவர்களில் பலர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை முன்வைக்கும்போது திக்குமுக்காடுவது கண்கூடு. ஆனால் உ. நிசார் அவர்களுக்கு அவை கைவந்த கலையாகிவிட்டது. அவர் வெளியிட்டுள்ள 19 நூல்களில் 13 நூல்கள் சிறுவர்களுக்கானவை.

ஒரே பூமியில் நானும் நீயும் என்ற கவிதைத் தொகுதி பானு வெளியீடாக 68 பக்கங்களில் 49 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

செடியில் பூத்திருக்கும் அழகிய பூவை ரசிக்கும் யாருக்கும் செடியைத் தாங்கும் வேர் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மலரின் வாசத்தை, மென்மையை வர்ணிப்பவர்கள் வேரின் தியாகத்தை வர்ணிப்பதில்லை. அது மனிதனின் இயல்பு. அதை ஓவியம் (பக்கம் 03) என்ற கவிதையினூடா கவிஞர் உ. நிசார் சொல்லியிருக்கும் விதம் அலாதியானது.

வானவில்லின்
வர்ணங்களிலெல்லாம்
வந்து குவியும்
ஓவியமொன்று அது

.. வரிசை வரிசையாக
வருவோர் போவோர்
வர்ணிக்கிறார்கள் ஓவியத்தை
அதை வரைந்த
கலைஞனை மறந்துவிட்டு!

நாம் என்றும் பெரியவர்கள் (பக்கம் 14) என்ற கவிதை சம காலத்துக்கு வெகுவாகப் பொருந்தும் கவிதையாக அமைந்திருக்கின்றது. சிறுவர்கள், வயோதிபர்கள் என்று பேதமில்லாமல் கற்பழிக்கப்படும் ஒரு புதுமையான யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதர்கள் மனிதத்தையெல்லாம் தொலைத்துவிட்டு இருட்டு வாழ்க்கைக்குள் தம்மை அடைத்துக் கொண்டுள்ளார்கள். இரக்க குணம் என்பது துளியளவுமின்றி பிஞ்சுகளைக் கூட முகர்ந்து பார்த்துவிட்டு கொன்றுவிட்டு தப்பிவிடுகின்றார்கள். வீடு, பாடசாலை, உறவினர் வீடுகள் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் பிள்ளைகளை அனுமதித்துவிட்டு அவர்களை முறையாகக் கண்கானிக்காமல் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அழுது துடிக்கிறார்கள். நம்மில் எத்தனைப் பேர் நம் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அலசி ஆராய்கிறோம்? அவர்களிடம் பிறர் தவறாக நடக்கின்றார்களா என்பதை எத்தனைப் பேர் பரிசீலனை செய்திருக்கின்றோம்.

ஒரு பிள்ளை வீட்டைவிட்டு காலையில் சென்றால் மாலை வீடு திரும்பும் வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். அவற்றை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கலாம். அவற்றை அறிந்து அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் பூக்காத மொட்டுக்கள் கூட கருகிப் போய்விடும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை கீழுள்ள கவிஞரின் வரிகள் நிதர்சனமாக்குகின்றன.

எட்டிப் பார்த்து உட்புகும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
விகாரப் பேய்களின்
குரூர காம சேஷ்டைகளினால்
குஞ்சு வீடுகள் உடைந்து
கூட்டாஞ் சோறு சிதறி
பொம்மைகளின்
கழுத்துக்கள் திருகப்படும்

பெண்கள் இறைவனின் அற்புத படைப்புக்கள். பெண்ணின் அன்புக்கு எந்த ஆணும் அடிமையாகிவிடுவான். இயற்கையிலே பெண்ணுக்கு மிருதுவான குணமும், உடலும் அமையப் பெற்றிருக்கின்றது. அந்த அழகைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கவிஞர் உ. நிசார் பெண் (பக்கம் 22) என்ற கவிதையில் பெண்களைப் பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றார்.

மலைகளின் உறுதி
அலைகளின் சலனம்
பூமியின் பொறுமை
தாமரையின் புனிதம்
ரோஜாவின் மென்மை
வைரத்தின் கடினம்....

இவற்றை சிறிது சிறிதாக எடுத்து
அமுதை விடத்தை இட்டு
குழைத்துக் குழைத்து
பக்குவமாக
ஊட்டி வளர்க்கப்பட்ட
அற்புதப் படைப்பு

வெற்றி என்பது இலகுவில் கிடைக்கக் கூடியதல்ல. இலகுவில் கிடைத்துவிட்டால் அது வெற்றியும் அல்ல. ஆனால் வெற்றியை அடைந்து கொள்வதற்கு நாம் மிகவும் பாடுபட வேண்டியிருக்கின்றது. போராட்டத்துக்குபின் தான் நல்ல வெகுமதி காத்திருக்கின்றது. சிறு சிறு தோல்விகளை நம்மை நாமே புடம்போட்டுக்கொள்ள இறைவனால் அமைத்துத் தரப்பட்ட சந்தர்ப்பங்கள். வெற்றி (பக்கம் 43) என்ற கவிதை வரிகள் வெற்றின் தத்துவத்தை அழகாக கூறி நிற்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

சுடராகி மின்மினியின்
உடல் ஒளிருது – தன்
மடல் விரிய வலி கொண்டு
மலர் பூக்குது

வீழ்ந்தாலும் அருவிகள்
எழுந்தோடுது – சகதி
தாழ்ந்தாலும் தாமரைகள்
தரம் பேணுது

இத்தகைய அழகிய அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி இலக்கியப் பணியாற்றி வரும் கவிஞர் உ. நிசார் இலங்கை இலக்கிய வரலாற்றில் நற்பெயரைப் பதித்துக்கொண்டவர். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - ஒரே பூமியில் நானும் நீயும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - உ. நிசார்
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 300 ரூபாய்

93. வண்ண வண்ணப் பூக்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

வண்ண வண்ணப் பூக்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியங்களுக்கான பங்களிப்புக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தாலும், பொதுவாக நோக்குமிடத்து ஏனையை துறைகளுடன் ஒப்பிடுகையில் சிறுவர் இலக்கியத் துறை இன்னும் வளர்ச்சியடைய வேண்டுமென்பது நிதர்சனமாகும்.


சிறுவர்கள் ஆர்வமாக நூலை வாசிக்கத் தக்கதாகவும், குழந்தை உலகத்துக்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் விதமாகவும் அவற்றை எழுதுவதில் பல யதார்த்த சிக்கல்கள் காணப்படுகின்றன. இலக்கிய ஜாம்பவானகள் என்று அறியப்படும் பலரால் சிறுவர் இலக்கியத் துறையில் பிரவேசித்து தனது பங்களிப்புக்களைச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. விதிவிலக்காக சிலர் பல தடைகளைத் தாண்டி சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், அவர்களது வாசிப்பைத் தூண்டும் விதமாகவும் சிறுவர் படைப்புக்கள் எழுதுவோரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அந்த வகையில் கவிஞர் ஷெல்லிதாசன் அவர்கள் ஈழத்துக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர். செம்மாதுளம் பூ, நகர வீதிகளில் நதிப் பிரவாகம் ஆகிய காத்திரமான கவிதைத் தொகுதிகளை அவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். மூன்றாவது தொகுதியாக வண்ண வண்ணப் பூக்கள் என்ற தலைப்பில் அமைந்த தனது சிறுவர் இலக்கிய நூலை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கின்றார்.

இந்நூல் மகுடம் வெளியீடாக 42 பக்கங்களில் வண்ணச் சித்திரங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கின்றது. பேராசிரியர் செ. யோகராசா, செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், மைக்கல் கொலின் போன்றவர்கள் நூல் பற்றிய உரைகளை எழுதியுள்ளனர்.

மாண்பு தரும் கல்வி, பலூன் சிறுவன், தூங்காத சின்ன முயல், எல்லாமே நீதான் அம்மா, பாற் கஞ்சி, வண்ண வண்ணப் பூக்கள், சின்னக் கண்மணி, பள்ளிப் பருவம், ஈடில்லா என் அன்னை, விடிகாலை விழிப்பு, அன்பான அண்ணன் தம்பி, சுகந்தரும் சுத்தம், வீட்டில் ஒரு தோட்டம், கைத் தொலைபேசி, கரணம் போடும் குரங்குக் குட்டி, மகத்துவமானது வாசிப்பு, தாய்மொழிக் கல்வி, ஆடுவோம் பள்ளுப் பாடுவோம், சுவை மாங்கனிகள், அம்மாவின் ஆசை, பச்சைக் கிளியும் பள்ளிச் சிறுவனும், நல்லோராய் நாம், தன்னை நம்பும் சின்னக் குருவி, கைகொடுக்கும் கற்பகதகடு, மதிக்கக் கற்று மதிப்பை உனதாக்கு, பாரதியின் உறவுக் குயில், ஓடி விளையாடு தம்பி, முக்குளித்து முத்தெடுப்போம், கள்ள நரி குள்ள நரி, மாற்றத் திறன் மகிமை, தங்கத் தாத்தா அழைக்கிறார், வளரிளம் பருவம், அம்மாவுக்கு உதவலாம் வா, சின்னத் தம்பியின் செல்லக் குறும்பு ஆகிய தலைப்புக்களில் 34 சிறுவர் பாடல்கள் நூலில் இடம்பிடித்துள்ளன.

கல்விச் செல்லவமானது பிறரால் திருடப்பட முடியாதது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு காத்திருக்கும். இன்றைய யுகத்தில் கல்வி இல்லாமல் யாராலும் காலூன்றியிருக்க முடியாது. கல்வியின் பெருமை சொல்லி மாளாதது. கல்வி கற்காதவர்கள் பிற்காலத்தில் அதற்காக எவ்வளவு வருத்தமடைந்தாலும் பயனிருக்காது. அத்தகைய கல்வியின் சிறப்பை மாண்பு தரும் கல்வி  (பக்கம் 01) என்ற பாடல் குறிப்பிட்டிருக்கின்றது.

அறிவுக் கண்ணைத் திறக்கும்
ஆற்றல் தன்னை வளர்க்கும்
பெருமை அனைத்தும் கொடுக்கும்
பெரியோராக உயர்த்தும்

உண்மை பொய்யை உணர்த்தும்
உலகை அறிய உதவும்
விண்ணை அளக்க துணியும்
வியக்கும் செயல்க ளாற்றும்

பலூன் சிறுவன் (பக்கம் 03) என்ற கவிதை சிறுவன் தன் கதையைக் கூறும் பாடலாக அமைந்திருக்கின்றது. குடிகாரராக இருக்கும் அவனது அப்பாவால் அந்த குடும்பம் படும் கஷ்டம் பாடலில் தொனிக்கிறது.

குடித்துவிட்டு எங்களப்பா
ஊரைச் சுற்றுறார்
குடிக்கக் காசு வேணுமென்று
என்னை அடிக்கிறார்

அம்மா பாவம் அப்பாவிடம்
அடியை வாங்கியே
அகலாத நோயில் வீழ்ந்து
பாயிற் கிடக்கிறாள்

பள்ளிப் பருவம் (பக்கம் 12) என்ற பாடல் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியதொன்றாகும். அன்றாடம் கற்பவை மனதில் பதிய வேண்டுமென்றால் அவற்றை அதே தினம் இரவில் மீட்டிப் பார்க்க வேண்டும். படிக்காமல் சோம்பேறியாக இருந்துவிட்டு பரீட்சைக் காலத்தில் படிக்க நினைப்பது முட்டாள் தனமாகும். இவற்றைக் கீழுள்ள வரிகளில் கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பள்ளி சென்று நீ நித்தம்
படிக்கும் புதிய பாடங்களை
அன்று இரவே நீ மீட்டால்
அதுவே உனக்கு கைகொடுக்கும்

பரீட்சை வந்த பின்னாலே
படிப்போம் என்று உறங்காதே
நன்றாய் படிக்க நினைத்தாலும்
ஒன்றும் புரியாது அவ்வேளை

இன்று தொலைக் காட்சித் தொடர்கள் எல்லோரையும் ஆக்கிரமித்திருக்கின்றன. பல பெண்கள் அதற்கு அடிமையாகியிருக்கின்றார்கள். கணவனை, குழந்தையை, வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு அவர்களுக்கு விளம்பர இடைவேளைகள்தான் கிடைக்கின்றன. பிள்ளைகளுக்கான தாய்ப் பாசம் அரிதாகின்றது. அந்நியோன்னியம் குறைகின்றது. ஈடில்லா என் அன்னை (பக்கம் 13) என்ற பாடலில் வரும் அம்மா, தாய்க் குலத்துக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறாள்.

ஆயா ஊட்ட அவளிருந்து
அழகாய் தொடர்கள் பார்த்ததில்லை
அப்பா வுடனே ஊர் சுற்றி
அழவும் தனியே விட்டதில்லை

விரும்பும் பண்டம் அத்தனையும்
வீட்டிலேயே அவள் செய்வாள்
எதையும் தெருவில் வாங்கியுண்ண
எங்க ளம்மா விட்டதில்லை

சிறுவர் பாடல்களுக்கு கனதி சேர்க்கும் விதமாக இந்நூலில் பொருத்தமான சித்திரங்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் விரும்பிப் படிக்க இது முக்கிய காரணியாக அமையும். ஓசை நயத்துடன் சிறுவர் பாடல்கள் அமைந்திருப்பது நூலின் கூடுதல் சிறப்பு. ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - வண்ண வண்ணப் பூக்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
வெளியீடு - மகுடம்
விலை - 200 ரூபாய்

92. சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதி மீதான பார்வை

சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதி மீதான பார்வை

இலங்கையைப் பொருத்தளவில் கவிதைகளுக்கான பங்களிப்பு கணிசமான முறையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இளங்கவிஞர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளுடனும், வீச்சுடனும் குறிப்பிடத்தக்க சிலர் தோன்றுகின்றார்கள். புதியவர்களின் வருகை இலக்கியத்துக்கு அணி சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்களே இலக்கிய உலகில் தொடர்ந்தும் காத்திரமான பணிகளைப் புரிந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் புலவூரான் ரிஷி இளங் கவிஞர்களுள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர். சிறகு தரித்த சிலுவைகள் என்ற அவரது கன்னிக் கவிதைத் தொகுதி செந்தணல் வெளியீட்டகத்தால் 120 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது.

எழுத்தாளர் மைதிலி தயாபரன் அவர்கள் இந்த நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

கவிதைகள் இதுதான் என்று ஒரு வரையறையை யாருமே செய்துவிடாது இருப்பதால் யாரும் அதைக் கையாண்டு உருவாக்க முடியும் என்ற எண்ணத்தை இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ளனர். இதனால் இலக்கியத்திற்குள் நுழைவதற்கு ஒரு திறவுகோலாகவே கவிதை என்ற வடிவத்தைப் பாவிக்கின்றனர். எமது தலைமுறையினர் அடுத்தடுத்து சந்தித்த பொருளாதார, அரசியல், சமுதாய நெருக்கடிகள் இளம் சமுதாயத்தினரை வெகுண்டெழச் செய்து தங்களது தாக்கங்களை உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றால் உந்தபப்பட்ட எமது இளந் தலைமுறையினர் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்துவதற்கு முக்கியமாகக் கவிதை வடிவத்தைப் பாவிக்க முனைகின்றனர். 

இனி புலவூரான் ரிஷியின் சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதியிலுள்ள 37 கவிதைகளில் சில கவிதைகளைப் பார்ப்போம்.

கனவு மெய்ப்பட வேண்டும் (பக்கம் 15) என்ற கவிதை உலகம் எப்படி மாறுவதை கவிஞரின் மனம் விரும்புகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றுமை இதில் வலியுறுத்தப்படுகின்றது. ஒற்றுமை என்ற ஒன்று இல்லாததால்தான் இன்று உலகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன.

மசூதியும் கோயிலும்
கூடிக்குலவுகின்றது
பௌத்தம் கிறிஸ்துவை
பற்றுகின்றது

.......
சீதனக் கொடுமை இன்றி
மங்கைக்கெல்லாம் மணமாயிற்று

காதலர்களின் தற்கொலை
அறவே இல்லை
அணுவுலைகளின் கொதிப்பு
அழிந்தே போயிற்று

பணத்துக்குள் பாசம் (பக்கம் 33) என்ற கவிதை வெளிநாட்டில் வசிப்பவர்களின் இதயத் தவிப்பை, மனக் குமறலை, ஆதங்கங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. தாய் தந்தையை, சொந்த நாட்டை, மனைவி மக்களை விட்டுப் பிரிந்து பாலைவன பூமியிலும், குளிர் வாட்டும் தேசங்களிலும் வசித்து தம் குடும்பத்தின் நினைவுகளுடன் காலத்தைக் கடத்தும் நம்மில் பலர் தொலைபேசியினூடாகத் தான் தமது வாழ்வைக் கொண்டு நடத்துகின்றனர். குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும்தான் அன்பை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஊடகங்களாக அவர்களுக்கு அமைந்துவிட்டன.

சாம பொழுதொன்றில்
அலைகளை கிழித்துக்கொண்டு
தொலைபேசித் திரையில்
வந்து விழுகிறது
குறுஞ்செய்தி

.....
கண்ணீர் விழுந்த 
திரையில் கலங்கல் 
காட்சிக்குள்
இன்னும் சிலதும்

சொப்பனம் (பக்கம் 86) கவிதை காதலை சுமந்திருக்கின்றது. காதல் வயப்பட்ட ஒரு கவிஞனின் நினைவுகள் எவ்வாறிருக்கும் என்பதை இக்கவிதை நிதர்சனப்படுத்துகின்றது.

வாடைக் காற்று 
வண்ணம் தெளிக்க
உன் முகம் பார்த்து 
வெட்கிப் போன செவ்வானம்

உன் வாசத்தை முகர்வதற்காய்
ஈர மண்ணில் ரகசியமாய்
புதைந்து போன நண்டுகள்

பசுமையின் மீட்டல் (பக்கம் 110) என்ற கவிதை கடந்த கால ஞாபகங்களை மீட்டிச் செல்கின்றது. குழந்தைப் பருவத்தில் ஒவ்வொருவக்கும் ஒவ்வொரு விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். இன்றுகளில் அவற்றை நினைத்துப் பார்த்தால் பசுமையான நினைவுகளில் நெஞ்சம் நிம்மதியடைகின்றது. தற்காலத்தில் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக சாப்பிட்டிருக்கும் தொலைக்காட்சி, கணிணி, தொலைபேசிகளிலிருந்து சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைப் பருவத்தின் சௌந்தரியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சிரட்டையும் ரின்களும் 
அடுக்கிய புளிச்சல் விளையாட்டு
.....
காட்டு மரவள்ளியின் செத்த காயில்
ஈக்கு கொழுவி பள்ளி மேசையில்
சுத்தி விட்ட பம்பரம்

அப்பாவின் தொப்பையில்
சறுக்கிய மகிழ்வு
அம்மாவின் சேலைத் தவிப்பை
சப்பிக்கொண்டே படுத்த இராக்கள்

யதார்த்தமான படைப்புக்கள் வாசகர் மனதில் நிலைத்து விடுகின்றன. கற்பனையான படைப்புக்கள் வாசகனை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. கவிஞனின் சொல்லாடலில்தான் கவிதையின் உயிர் தங்கியிருக்கின்றது. புலவூரான் ரிஷி இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி இன்னும்  பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்.

நூல் - சிறகு தரித்த சிலுவைகள் 
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - புலவூரான் ரிஷி
வெளியீடு - செந்தணல் வெளியீட்டகம்
விலை - 250 ரூபாய்

Thursday, October 29, 2015

91. மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.

சிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.

`இதெல்லாம் உங்களை ஏமாத்துற வேலை. உங்களுக்காக எந்த சொத்தையாவது சாச்சா எழுதிவச்சாரா?'

'ஆமா! நீங்க சீதனமே வேணாம்னு என்னை கட்டிக்கிட்டபோதும் காணி முழுசையும் என் பேருல எழுதியிருக்காரே'

'வெறும் காணியை தந்தா போதுமா? அதுல குடை பிடிச்சிக்கிட்டா குடும்பம் நடத்துறது?'

'குடை பிடிச்சுக்கிட்டு எதுக்கு குடும்பம் நடத்தனும்? இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுலயே வாழலாமே. கடல் மாதிரி இடம் இருக்கே'

அஸ்மானின் சுயரூபத்தை அறிந்துகொண்ட ஸாஹினா அவனைவிட்டு தூரமாகின்றாள். இப்போதுகூட அவன் ஸாஹினாவைக் கெஞ்சுவது அவளது நகைகளை எடுப்பதற்காகத்தான் என்று கதை இறுதியில் சொல்லப்படுவதிலிருந்து அவனது பேராசைக் குணம் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கின்றது.

இன்றைய காலத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்பவர்கள் அதிகம். காசு கொடுத்தால் அதைத் திருப்பி எடுப்பதற்குள் பகை ஏற்படுகின்றது. உதவிகள் செய்தால் அது உபத்திரவமாகின்றது. கலிகாலம் என்று சொல்வதற்கேற்ப இன்று அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டால் போதும் என்ற பக்குவம் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. தலைநகரைப் பொறுத்தளவில் அடுக்குமாடி வீடுகளில் வாழ்வோர் அடுத்த வீட்டில் யார் தங்கியிருக்கின்றனர் என்பதைக்கூட அறிந்துகொள்ள முனையாதவர்களாகக் காணப்படுகின்றனர். காரணம் யாரை நம்புவது என்று தெரியாத நிலை. யாரைப் பார்த்தாலும் குள்ள நரித்தனம். நலவுக்குக் காலமில்லை (பக்கம் 22) என்ற சிறுகதையும் அத்தகையதொரு வலியையே தனக்குள் சுமந்திருக்கின்றது.

காயத்ரியின் வீட்டில் வேலம்மா என்பவள் வேலை செய்கின்றாள். இந்த நிலையில் தனது மகளின் பாதுகாப்புக் கருதி, தனது மகள் ரோஜாவை காயத்ரியின் வீட்டில் தங்க வைக்க காயத்ரியிடம் அனுமதி கேட்கின்றாள் வேலம்மா. நல்லுள்ளம் படைத்த காயத்ரியும் தன் கணவனிடம் அனுமதி கேட்டுவிட்டு அதற்குச் சம்மதிக்கின்றாள். ரோஜா வந்து சிறிது காலத்தில் வேலம்மா தனக்குச் சுகமில்லை என்றுகூறி வேலையிலிருந்து நின்றுவிடுகின்றாள். காயத்ரி ரோஜாவை ஒரு வேலைக்காரியாகப் பார்க்காமல் அவளைப் படிக்கவைத்து ஆடைகள் வாங்கிக்கொடுத்து அன்பாகக் கவனித்து வருகின்றாள். ஆனால் ரோஜா மற்றவர்களின் துன்பத்தில் குளிர்காயும் கெட்ட பழக்கத்தை சிறுவயதிலேயே பழகியிருந்தாள். கோள் சொல்வது அவளுக்கு வா(வே)டிக்கையான விடயமாக இருந்தது. காயத்ரியின் அயல் வீட்டில் வாழ்பவர்களையும் காயத்திரியையும் பிரிக்கும் துரித வேலைகளில் ரோஜா சந்தோசம் கண்டாள். பின்வரும் உரையாடல் இதைப் பறை சாற்றுகின்றது.

'காயத்ரி அக்கா அடுத்தவீட்டு ஆனந்தி எங்க மரத்துல மாங்கா பறிக்கிறா. உங்ககிட்ட கேட்டாவா?' என்றாள் ரோஜா.

'இல்ல ரோஜா. பறிச்சிட்டு போவட்டும். பாவம் மசக்கைக்காரி'

எனப் பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினாள் காயத்ரி. உடனே ஆனந்தியிடம் சென்ற ரோஜா,

'நீங்க யாருகிட்ட கேட்டு மாங்கா பறிக்கிறீங்கன்னு காயத்ரி அக்கா கேட்டுவரச் சொன்னா'

இவ்வாறான செயற்பாடுகளால் காயத்ரியிடம் யாரும் அன்பாகப் பழகவில்லை. அவர்களிடமிருந்து காரணத்தை அறிந்துகொண்ட காயத்ரி அதிர்ச்சியடைகின்றாள். காலப்போக்கில் ரோஜாவின் நடவடிக்கைகளும் மோசமாகின்றன. பல வாலிபர்களோடு அவளுக்கு தொடர்பிருப்பதாக அறிந்த காயத்ரி அவளை அங்கிருந்து அனுப்பி விடுகின்றாள். அதன் பிறகுதான் அவள் நிம்மதியாக இருப்பதாகக் கதையில் சொல்லப்படுகின்றது.

சமூகமே உணர்வாயா? (பக்கம் 28) என்ற கதை அனைவரும் படித்துத் தெளிவடைய வேண்டிய சிறப்பான சிறுகதையாகும். இன்று சில ஆண்கள் தன் மனைவி அழகானவளாக, கவர்ச்சியானவளாக இருக்க வேண்டும் என எண்ணி வெளியிடங்களுக்கும் அவ்வாறே அழைத்துச் செல்கின்றனர். தம் நண்பர்களிடத்தில் தன் மனைவியின் பெருமைகளைப்பற்றி சிலாகித்துப் பேசுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மற்றவர்களின் மனதில் தீய எண்ணங்களை வளர்த்துவிடும் என்பதை அநேகர் உணர்ந்து கொள்வதில்லை.

இக்கதையில் வரும் ஸபார் என்பவன் சபலப் புத்திகொண்டவன். அவன் ரஸ்லானின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ரஸ்லானின் மனைவியைத் தகாத முறையில் பார்த்து ரசிக்கின்றவன். இதை அறிந்த ரஸ்லானின் மனைவி, ரஸ்லானிடம் பல தடவைகள் ஸபாரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என மன்றாடுகின்றாள். ஆனால் ரஸ்லான் அவள் சொல்வதைக் கேட்கவில்லை. இன்னொரு தினம் திடீரென தன் வீட்டுக்கு வரும் ரஸ்லான் ஸபார் சமையலறை ஜன்னல் வழியாக தன் மனைவியை கள்ளத்தனமாக நோக்குதைக் ஒருநாள் கண்டு விடுகின்றான். தன் மனைவி ஸபாரை வெறுப்பதற்கான காரணம் ரஸ்லானுக்கு அப்போதுதான் புரிகின்றது. அதை எமது சமூகம் எப்போது உணரப் போகின்றது என்று கதை இறுதியில் நூலாசிரியர் வாசகர்களிடம் கேள்விக் கணையைத் தொடுக்கின்றார்.

தென்றலின் தாக்கம் (பக்கம் 12) என்ற சிறுகதை திருமணமான ஆண்கள் எதிர்நோக்கும் நெருக்கடியான சூழலை நன்கு சித்தரித்துக் காட்டுகின்றது. திருமணமான பின்பு மனைவியை ஆண்களின் மனம் அதிகமாக விரும்புகின்றது. தாயின் சொல்லைவிட மனைவி சொல் மந்திரமாகின்றது. அந்த மனநிலையில் இருப்பவன்தான் இக்கதையில் வரும் பிரதான பாத்திரம். மனைவியின் சொல்லுக்கு அடிமையாகி தாயின் அரவணைப்பை இழந்து தவிக்கின்றான். தான் விரும்பியவளையே தனக்குத் திருமணம் முடித்து வைத்த தன் தாயை எப்படி அவ்வளவு சீக்கிரம் தூக்கியெறிய முடிந்தது என்று தன்னைத் தானே கேட்டு அழுகின்றது அவனது ஆத்மா. மனைவியின் அன்பில் புதைந்து கிடந்தவன் தாயைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

ஒரே வீட்டுக்குள் வசித்தாலும் ஒரு திருடனைப் போலத்தான் ஆரம்பத்தில் தன் தாயுடனும் தங்கையுடனும் அவன் பேசுவான். காலப் போக்கில் மனைவிக்கு கட்டுப்பட்டு அதையும் அடியோடு நிறுத்திவிட்டு வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டான். மனைவியின் ஆடம்பரத் தேவைகள் அதிகரித்தன. காலப்போக்கில் அவனது வியாபாரம் நஷ்டமடைந்தது. பணம் இருக்கும்போது அவனை மதித்த மனைவியும், மனைவியின் தாயும் இப்போது அவனைக் கணக்கெடுப்பதே இல்லை. இப்போதுதான் அவனுக்கு தன் தாயின்  அருமை புரிகின்றது. எல்லாவற்றையும் வீசிவிட்டு தாய் மடியில் விழுந்து கதறி அழ வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு. ஒருநாள் அவனது தாய் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்க்கின்றபோது வீட்டுக் கதவு பூட்டியிருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் இறைவனிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்றெண்ணி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றான் அவன். இக்கதையை வாசிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் வலி உயிர் வரை ஆழமாக ஊடுறுவுகின்றது. தன் தாயை மறந்து மனைவியை நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும் இக்கதை நல்லதொரு படிப்பினையாக அமைகின்றது.

சமுதாயத்தில் நாம் காணும் விடயம் யாவும் நமக்கொரு பாடமாகத்தான் இருக்கின்றது. நாம் தான்  அவற்றைப் பயில்வதில்லை. அவ்வாறான விடயங்களை சிறுகதைகள் மூலம் படிக்க நேர்கின்றபோது மனதுக்கு நிறைவாக இருக்கின்றது. அந்த நிறைவை வாசகர்களுக்குத் தன் எழுத்து மூலம் வழங்கும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மீண்டும் ஒரு வசந்தம்
நூல் - சிறுகதை
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

Wednesday, October 28, 2015

90. முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் நூல் மீதான பார்வை

முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் நூல் மீதான பார்வை

சிறுவர் இலக்கியத் துறையில் தன் பெயரைப் பதித்துக் கொண்டவர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஜெனீரா ஹைருள் அமான் குறிப்பிடத்தக்கவர். அவரது நூல்கள் பல விருதுகளையும், பரிசில்களையும் பெற்றிருப்பதானது இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். குழந்தைகளாக மாறி அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடல்களை எழுதுவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனாலும் மாணவர்களின் வாசிப்பின்மீது கொண்ட அக்கறையால் அத்தகைய சிறந்த பணியைச் செய்திருக்கின்றார் நூலாசிரியர் ஜெனீரா. ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக தான் கடமையாற்றுவதனாலும், அவரது குடும்பச் சூழ்நிலை சாதகமாக அமைந்திருப்பதனாலும் அவரால் தொடர்ந்து எழுத்துத் துறையில் பயணிக்க முடிந்திருக்கிறது.

முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்ற தொகுதி அவரது ஆறாவது நூலாகும். இந்நூலில் 34 சிறுவர் பாடல்கள் 69 பக்களில் அமைந்திருக்கின்றன.

ஓசைநயமிக்க பாடல் வரிகளைக் கொண்டமைந்த விளக்கம் தாருங்கள் (பக்கம் 03) என்ற பாடல் இரசிக்கத்தக்கதாய் இருக்கின்றது. சூரியக் கதிரின் சூட்டிலா சோளப் பொரிகள் பொரித்தன என்ற வரிகள் மிக அற்புதமானவையாக இருக்கின்றன. அதேபோல நட்சத்திரங்கள் பற்றிய நூலாசிரியன் கற்பனை இவ்வாறு அமைந்திருக்கின்றன.

சூரியக் கதிரின் சூட்டிலா
சோளப் பொரிகள் பொரித்தன
காற்றுமெல்லத் தொட்டதாலா
கண்கள் சிமிட்டும் தாரகை

மல்லிகைப் பூக்கள் என்று எண்ணியே
மதிததான் கொண்டுசென்றதா?
வெள்ளைநிறத்துப் பூக்கள்தான்
வெள்ளிஎன்றுஆனதா?

விரைந்து வாருங்கள் (பக்கம் 09) என்ற பாடலில் நற்பண்புகள் கூறப்பட்டிருக்கின்றன. கல்வி ஆரம்பத்தில் கசப்பாக இருந்தபோதும் அதுவே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக அமையும் என்தை எடுத்துக் காட்டுகின்றார். விளையாட்டு மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டால் அவை மாணவர் மனதில் பதியும் என்பதை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

படிக்கச் சிறுவர் வருகின்றார்
பண்பை மறந்து திரிகின்றார்....
....விலகிச் செல்லும் மாணவர்க்கு
விளையாட்டு மூலம் கற்பிப்போம்

ரோசாமலர் பற்றி மலர்களின் ராணி ரோசா (பக்கம் 11) என்ற கவிதையில் அழகாக கூறப்பட்டுள்ளது. ரோசாமலர் பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுகின்றது. அதன் தன்மையும், நிறமும் பார்ப்பவர் கண்ணைக் கவர்ந்துவிடுவதே அதற்குக் காரணமாகும். அழகுக்காகவும், அன்பைவெளிப்படுத்தவும் ரோசா பயன்படுகின்றது. ரோசாபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

பலபல நிறங்களில் பூக்குமாம்
பலரையும் விரும்ப வைக்குமாம்
வளர்ப்பது சற்றுச் சிரமம்தான்
வளர்ந்து பூத்தால் அழகுதான்

நல்லதை வளருங்கள் (பக்கம் 21) எனும் பாடல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பாடலாகும். அறிவுரைகளை அழகிய முறையில் அள்ளித் தெளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஜனீரா. அதைச் செய் இதைச் செய் என்று குழந்தைகளை வருத்தக் கூடாது. பக்குவமாக அவர்களிடம் புரியவைக்க வேண்டும். அறிவுரையை இசையுடன், பாடலாகச் சொல்லிக் கொடுத்தால் அவை மாணவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.

அன்பு கொண்ட சிறுவர்களே
அறிவைத் தேடிப் படியுங்கள்
அகிம்சை வழியில் செல்லுங்கள்
அகிலம் போற்ற வாழுங்கள்

வட்டமிடும் பருந்து (பக்கம் 29) என்ற பாடலில் பருந்தின் பண்புகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களின் சிந்தனையைக் கவரும் விதத்தில் எடுத்தாளப்பட்டுள்ள மொழி நடை சிறப்புக்குரியதெனலாம்.

கூர்மையான கண்களால்
கூர்ந்து நன்கு பார்க்கின்றாய்
கூர்மைமிக்க நகங்களால்
குஞ்சைத் தூக்கிச் செல்கின்றாய்

சிறுவர்களின் வாசிப்புத் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் வண்ணம் பாடல்கள் எழுதப்படுவது இன்றியமையாதது. அந்தப் பணியை செவ்வனே செய்யும் ஜெனீரா அமானுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முப்லிஹாவின் சிறுவர் கானங்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஜெனீரா கைருல் அமான்
வெளியீடு - அல் அக்தாப் இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய் 

89. கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.

யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது.  இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05)  என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.

அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.

பேய்களுக்குப் பயமில்லை (பக்கம் 13) என்ற சிறுகதை வேடிக்கைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் சுவாரஷ்யமிக்க சிறுகதையாகும். பேய்கள் பற்றிய பிரக்ஞைப் பூர்வமான விடயங்களை முதலில் பேசிவிட்டு இறுதியில் நகைச்சுவையாக முடிந்திருக்கின்றது இக்கதை. கோசலையும் அனுவும் வெளிநாட்டுக்கு படிக்கச் செல்கின்றனர். இருவரும் ஒரே அறையில் தங்கிப் படிக்கும் நேரத்தில் கோசலை பேய் பேய் என்று கத்தி அனுவையும் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றாள். நாட்களின் நகர்வில் ஒருநாள் திடீரென கோசலை தன் தந்தைக்கு அறிவித்து அவரும் அவளைப் பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் அனுதான் பேய் பற்றிக் கூறி தன்னைப் பயமுறுத்துவதாக பொய்யுரைக்கின்றாள். கோசலையின் தந்தை அனுவை பின்வருமாறு திட்டுகின்றார்.

``ஆளுக்காள் துணையாக இருப்பியள் என்று சேர்த்து அனுப்பினால் இங்க நீ மகளையும் பயப்படுத்தி வச்சிருக்கிறாய்.. இப்பவே அவளுக்கு வேற அறை ஒழுங்கு பண்ணப் போறன்''

கோசலை போன்றவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்வது ஆபத்து என்பதை இந்தக் கதை மூலம் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கின்றார் நூலாசிரியர்.

விலகிடும் திரைகள் (பக்கம் 31) என்ற சிறுகதை கணவன் மனைவியின் ஒற்றுமை பற்றி எடுத்தியம்புகின்றது. கணேசனும் மாலாவும் அந்நியோன்னியமான தம்பதியர். சில காலமாக இருவருக்குமிடையில் இடைவெளி அதிகமாகியிருக்கின்றது. கணேசன்தான் அவளைவிட்டு ஒதுங்குகின்றான். மாலா அதற்கான காரணத்தை ஆராய்கின்றாள். கணேசனின் வியாபாரம் நஷ்டமடைந்து வருவதால் அது பற்றிய எண்ணம் அவனை வாட்டுகின்றது என்பதை அவள் உணர்ந்துகொள்கின்றாள். அதனால் அவள் தையல் வேலை செய்து குடும்பப் பாரத்தை சற்று குறைக்க எண்ணினாள். ஆனால் கணேசனுக்கு அது அவமானமாக இருக்கின்றது. மனைவியின் காசில் தான் வாழ்வதா என்ற ஈகோ எழுகின்றது. அதை அறிந்த அவள் அவனை பக்குவமாக அணுகி தன்பக்க நியாயத்தை எடுத்துக் கூறி வியாபாரம் நஷ்டமடையாதிருக்க வேறு வழிவகைகளையும் கூறுகின்றாள். கணேசனுக்கு இப்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக தான் மட்டும் ஒரு முடிவை எடுத்துவிட்டு மற்றவரை காயப்படுத்தக் கூடாது என்பதை அழகாக சொல்கின்றது இந்தக் கதை.

கால தரிசனம் (பக்கம் 43) என்ற சிறுகதை போர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நிலையை எடுத்துக் கூறியிருக்கின்றது. காவியாவும் பிரசன்னாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள். ஆனால் அவனது சாதியைக் காரணம் காட்டி காவியாவின் பெற்றோர் அவர்களின் காதலை எதிர்க்கின்றார்கள். இந்த விரக்தியில் அவனோ போராளியாக இணைகின்றான். சில  காலங்களின் பின்னர் காவியாவின் தந்தை வீதி விபத்தில் இறந்து போகின்றார். சகோதரர்கள் தமது வாழ்வைத் தேடிக்கொண்டு போய்விட்டர்கள். இவ்வாறு அடுத்தடுத்து வந்த இடர்களால் காவியாவுக்கு மனநிலை பாதிப்படைகின்றது. மரத்திலிருந்து விழுந்தவளை மாடு முட்டின கதையாக அவள்  மானபங்கப்படுத்தப்படுகின்றாள். காலப் போக்கில் பிரசன்னா காவியாவைக் காண்கையில் அவள் உருமாறி கறுத்துப் போயிருப்பதைக் கண்டு துன்பமடைகின்றான். அவள் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்த அவன் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களைச் சந்தித்து காவியாவைப் பற்றிக் கூறி அவளை குணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றான். அவளது மனநிலையில் முன்னேற்றம் தெரிகின்றது. பிரசன்னாவிடம் தான் ஒரு எச்சில் கனி என்கின்றாள் காவியா.

ஆரம்பத்தில் பிரசன்னாவை அவமதித்த காவியாவின் தாய் இப்போது,

`தம்பி காவியாவுக்கு உங்களை விட்டா யார் இருக்கினம்?' என்கின்றார்.

ஆனால் காவியா இதற்கு சம்மதிக்காமல் இருக்க பிரசன்னாவோ,

`நான் உன்னை நேசித்தது உண்மை. நீ எனக்கு துரோகம் செய்யாபோது ஏன் யோசிக்கின்றாய்?' என்கின்றான்.

அந்தத் தூய காதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாய் கதை நிறைவுறுகின்றது.

கோடை மழை (பக்கம் 74) என்ற சிறுகதை முன்னால் காதலியை சந்திக்கும் ஒரு ஆணின் மன உணர்வுகளை சித்தரித்துக் காட்டுகின்றது. முடிந்து போன காதல் மீண்டும் மனதில் வந்தால் புயலடிக்கும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

தன் மனைவி அமராவதியோடு அன்பாக ஆதரவாக இருந்தாலும் அந்நியோன்னியம் இருக்கவில்லை. ஆனாலும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருபவர் தன் காதலியான செல்வியைக் கண்டதும் அந்தரப்படுகின்றார். செல்வி தங்குமிடம் தேடி அவ்வீட்டுக்கு வருகின்றாள். தன் பழைய காதலனின் வீடு அது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. திடீரென இருவரும் ஒரே வீட்டில் சந்திக்கும்போது மனைவி அமராவதி இருவரையும் அறிமுகம் செய்து வைக்கின்றாள். ஏற்கனவே தாம் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அவர் தன் மனைவிக்குக் கூற அவளும் சந்தோசப்படுகின்றாள்.

செல்வியின் கணவன் இறந்துவிட்டமையும் இவரது மனைவி நோயாளியாக இருப்பதும் அவர் மனதில் வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கின்றது. ஆனால் செல்வியோ மிகவும் உறுதியாக இருக்கின்றாள்.
அமராவதிக்கு நோய் முற்றிப் போக அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றாள். அவள் தன் கணவனிடமும் செல்வியிடமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகின்றாள். செல்வி அதிர்ச்சியாகி மௌனமாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு கணவனிடம் கேட்க, அவரும் செல்வியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றார். வீட்டில் வந்து விசாரிக்கும்போது செல்வி விரும்பிச் சொல்லவில்லை என்பது தெரிய வருகின்றது. ஆனாலும் அவரது மனம் சலனமடைகின்றது. அவளைத் தொட எத்தனிக்கும் போது ஷபோங்க வெளியே| என்று காட்டமாக் கூறுகின்றாள் செல்வி. அச்சந்தர்ப்பம் பார்த்து அவரது தொலைபேசி ஒலிக்கின்றது. அமராவதி இந்துவிட்டதாக வந்த அந்தச் செய்தியில் அவரும் அதிர்ச்சியாகியிருப்பதாக கதை நிறைவடைகின்றது.

இவ்வாறான சமுதாய விடயங்களை தன் படைப்பினூடாக வெளிப்படுத்தும் ஆற்றல் ச. முருகானந்தனுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கின்றது. கோடை மழை இவரது 10 ஆவது சிறுகதைத் தொகுதியாகும். இதுதவிர 02 கவிதைத் தொகுதிகளையும், குறநாவல்கள் இரண்டையும், ஒரு கட்டுரைத் தொகுதியும் மூன்று மருத்துவம் சார்ந்த நூல்களும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 40க்கும் மேற்பட்ட பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ள நூலாசிரியர் தனது சிறுகதைகள் விளிம்பு நிலை மக்களின் விடிவுக்கு பயன்பட்டால் அதுவே தனக்குப் போதும் என்று கூறுகிறார். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறேன்;!!!

நூலின் பெயர் - கோடை மழை
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ச. முருகானந்தன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்