Thursday, June 30, 2011

11. இதயத்தின் ஓசைகள் - கவிதைத் தொகுதி

இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் பெண் கவிஞர்கள் வரிசையில் கலைப்பட்டதாரி ஆசிரியரான ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களும் இணைந்துகொள்கிறார். தனது கவிதைத் தொகுதியாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் இவர், விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி), முதிசம் (பொன்மொழித் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியராகவும் காணப்படுகிறார்.

ஆசிரியர் தொழிலை பெரும் சேவையாக மேற்கொண்டு பல மாணவர்களுக்கு அறிவுக்கண் கொடுத்தவர் ஸக்கியா அவர்கள். அதனால் பல மாணவர்கள் இன்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள என்ற சிறந்த ஆய்வு நூலையும் எழுதி பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரது எழுத்து ஆளுமைக்கு இந்நூல் சிறந்த சான்று. அந்த எழுத்து ஆளுமையோடு கவிதைத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். என்று தனது அணிந்துரையில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கான கவிதைகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கவிதைகளும் இந்தக் கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய விதத்தில் இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தொகுதியில் சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

தாயின் கருவறை சுகம் இந்த உலகத்தில் எந்த பாகத்திலும் கிடைக்காது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கருவறை என்பது மிகவும் பாதுகாப்பானதொரு இடம். குழந்தையாக நாமிருந்தபொழுது இந்த உலகத்தின் எந்தவித அக்கிரமங்களும், நோய்நொடிகளும் எம்மைத் தாக்கும் வீதம் மிகக்குறைவு. தன் கண்ணைப்போல நம்மை நேசிக்கும் ஒரேயொரு உயிர் நம் தாய் மாத்திரம்தான். உலகத்தில் யாரை நாம் நேசித்தாலும் அல்லது யார் நம்மை நேசித்தாலும் அதில் ஒரு சுயநல உணர்வு கலந்திருக்கும். ஆனால் அத்தகைய எந்த உணர்வும் இன்றி நூறுவீத அன்புடன் பழகும் தாயின் பெருமை அம்மா வேண்டும் (பக்கம் 17) என்ற கவிதையில் இப்படிக் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

அம்மா வேண்டும் எனக்கு ஓர் அம்மா வேண்டும். அள்ளி அணைத்து ஆறுதல் தந்திட எனக்கு அம்மா வேண்டும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இப்பாரினில் எதற்குமீடாகா அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். பள்ளி விட்டுத் துள்ளி வரும் என்னை அள்ளியணைத்து முத்தமிட்டு பக்குவமாய் வளர்த்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். அன்னைக் கீடான ஓருயிர் ஆயிரம் தேடினாலும் உண்டோ உலகில் ஆறுதல் அளித்தெனைக் காத்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும்.

ஏமாற்றங்களும், களவு பொய் புரட்டுக்களும் நிறைந்த உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிரி யார் என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றோம். உற்ற தோழர்களை சந்தேகப்படுமளவுக்கு சிலரின் நடவடிக்கைகள் துரோகமாய் அமைந்துவிடும் துரதிஷ்டங்களைப் பரவலாக சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு நிலைமையினை நம்ப நட நம்பி நடவாதே (பக்கம் 18) என்ற கவிதையினூடாக அறிவுரை கூறுகிறார் இப்படி

உள்ளத்தில் நஞ்சு வைத்து உதட்டினிலே அமுதம் வைத்து பள்ளத்தில் தள்ளி விடும் பாவிகள் தான் எத்தனை பேர்? கள்ளமாகப் பழகிக் காரியம் சாதித்து குள்ள நரிகளாய் வாழும் கயவர்கள் எத்தனை பேர்? நல்லவன் போல் நடித்து நயவஞ்சகம் புரியும் நண்பனை நம்பியதால் நாதியற்றோர் எத்தனை பேர்?

மழையில்லை என்று வாய்கிழியப் பேசும் நாம் மரம் வளர்ப்பதை மாத்திரம் ஏனோ மறந்து போகிறோம். மரங்களற்ற பொட்டல் வெளியில் மழை வரும் வரை காத்திருத்தல் எத்தனைப் பெரிய முட்டாள் தனம்? காடுகளை அழித்து கட்டடிடங்களை நிர்மாணித்துச் நச்சுப் புகையை சுவாசிப்பதால் எவ்வளவு நோய்களுக்கு ஆளாகின்றோம். இதையெல்லாம் உணர்த்துமாற்போல மரங்களை நாட்டுவோம்: மாநிலம் காப்போம் (பக்கம் 24) என்ற கவிதை அமைந்திருக்கின்றது.

மனிதனோ மண்ணதன் புனிதத்தை நீக்கி
மதியினை இழந்து மறம் பல புரிந்து
மரங்களை வெட்டி மாளிகை கட்டி
மாநிலமதனை மாசுபடுத்திட்டான்
மழை வழி நீரெல்லாம் வற்றிப் போகாமல்
மரமெல்லாம் பட்டுப் போய் மணல் வெளியாகாமல்
மன்பதை வாழ்வெல்லாம் கருகிப் போகாமல்
மரங்களை நாட்டுவோம் மாநிலம் காப்போம்

யாருடைய தலையெழுத்து மாறினாலும் தோட்டத்தொழிலாளர்களின் தலையெழுத்து மட்டும் இத்தனைக் ;காலங்களாக இன்னும் மாறவில்லை. அந்த பாவப்பட்ட ஜீவன்கள் பரம்பரை பரம்பரையாக பலருக்கும் அடிமைப்பட்டு முறையாக உண்ணக் குடிக்க வழியில்லாமலும், உடுத்துவதற்குரிய துணியில்லாமலும் அவதிப்படுவது கண்கூடாக நடக்கின்ற விடயம். மலையக சிறுமிகளை தலைநகரத்தில் உள்ள பெரிய பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்புதல், பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய காலத்தில் கடைகளில் வேலை செய்யும் வாலிபர்கள் என்று அவர்களது வாழ்க்கை தன்னிச்சையின்றியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வெயில் மழை பாராமல் மலைகளில் தேயிலை பறித்து தமது ஜீவனோபாயத்தை நடத்துகின்ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு மங்கை பற்றிய தனது ஆதங்கத்தை தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்து ஓடாகிப் போன மங்கையே (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.

கொழுந்து கொய்து கொய்து உன்
கொடும் பசியைத் தீர்த்திடும்
கொடியே உந்தன் வாழ்வினில்
கொடுமை என்று நீங்குமோ?
முதுகில் கூடை சுமந்ததால்
முள்ளந்தண்டு வலிக்குதோ
முதுமை காணும் வரையிலும்
முடிவே இன்றி உழைப்பதோ?

இன்று பணக்காரர்களாக நம்மத்தியில் வாழும் பலரை நாம் அவதானித்திருக்கின்றோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர்தான் உண்மையில் நல்மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். வேறு சில பணம் படைத்தவர்கள் தாமும் தங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தால் போதும் என்ற கீழ்த்தரமான எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பள்ளிப் படிப்புக்கு பணமின்றி தவிக்கும் ஒரு மாணவனின் துன்பமோ, உண்ண உணவின்றி பசியால் வாடும் ஏழைகளின் கதறல்களோ, திருமணம் முடிக்க அத்தனை தகுதியிருந்தும் சீதனம் கொடுக்க வழியில்லாமல் ஏங்கும் அபலைகளின் உஷ்ண மூச்சோ இவர்களின் இதயத்தை உருக்குவதில்லை. மாறாக அவ்வாறானவர்கள் உதவி கேட்டு சென்றாலும் அவர்களை அவமதித்து அனுபபும் நிலைகள் பரவலாகிவிட்ட நிலைiயில் அவர்களின் கவனத்துக்காகத் தான் செல்வச் சீமானே என்ற கவிதை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

உண்ண உணவின்றி
உறவினர் உழல
உற்றாரும் பெற்றாரும்
ஊமை போல் வாட
உதவி செய்யாமல் வாழலாமோ செல்வச் சீமானே

இவ்வாறான மனதைத் தொடும்; கவிதைகளை கவிஞர் உணர்வுபூர்வமாக மிகவும் அற்புதமாக முன்வைத்திருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள், அறிவுரைகள் பற்றியும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
வெளியீடு - முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் (ஆநுPளு)
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 150/=

No comments:

Post a Comment