Friday, August 10, 2012

29. வைகறை வாசம் - கவிதைத் தொகுதி

வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர்.

மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம்,  நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் தொகுதிகளையும், காத்திருந்த கண்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், பேனைக்குள் பெருக்கெடுத்த பெரியவர்கள், எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம் ஆகிய ஆய்வு நூல்களையும் இலக்கிய உலகுக்குத் தந்தவர்.

அவருடைய வைகறை வாசம் என்ற கவிதைத்தொகுதி 65 கவிதைகளை உள்ளடக்கியதாக 83 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

பாவலர் சாந்தி முகைதீன் தனது மதிப்புரையில் ஷகடந்த மூன்று தசாப்தங்களாக எழுத்துலகில் தடம்பதித்து கதை, கட்டுரை, கவிதை, ஹாஷ்யம், துணுக்கு என்பன போன்ற சகல துறைகளிலும் தனது எழுத்தாற்றலால் அடையாளப்படுத்தியவர் பௌஸ் மௌலவி. பாவலர் பண்ணை 1980 களில் பா எனும் கவிதைச் சஞ்சிகையை வெளியிட்ட போது அதன் ஆசிரியராக இருந்து அணிசெய்தவர். வீச்சான பேச்சாளர். அடிக்கடி பகிரங்க மேடைகளிலும் வானொலி, தெலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் தோன்றி சன்மார்க்க நெறி காட்டுபவர்| என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவனை மற்றவர்கள் மதிக்கச் செய்வது கல்வியாகும். கல்வியறிவு இருந்தால் எந்த இடத்துக்குச் சென்றாலும் நம்மால் சாதிக்க முடியுமாக இருக்கும். கற்றவனும், கற்காதவனும் சமமாக மாட்டார்கள். ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வங்கள் இருந்தாலும், கல்விச் செல்வமே தலை சிறந்ததாகும். அதே போல் அந்த செல்வத்தை காப்பாற்றுவதற்கும் கல்வியறிவே அவசியமாகிறது. படித்து வாழு (பக்கம் 15) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் கல்வியின் பெருமை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்றோரைக் கணம் பண்ண வேண்டும்
கற்பதிலே கடும் முயற்சி வேண்டும்
கற்றார்கள் கல்லாதார் நிலையைக்
கட்டாயம் கவனித்தல் வேண்டும்

கல்லாதார் கற்றோரை நாடி
கரைகாணாக் கல்வியினைத் தேடி
நல்லறிவை மற்றார்க்கு ஊட்டி
நலம் காண்பார் புகழ்மாலை சூடி

பொழிவிழந்த மரகதங்கள் (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் ஒரு தாயின் இதயக்குமுறல் கொட்டப்படடிருக்கிறது. பெண்களை மணமுடித்து வைத்தல் என்பது இன்றைய காலத்தில் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. பலர் அதனால் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து வருகின்றார்கள். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த பிற்பாடுதான் புரிகிறது வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற கதை. அத்தகையதொரு நிலையில் வாடும் ஒரு தாயின் ஏக்கம் இந்தக் கவிதை மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

வாழ்வைத் தேடி
வீட்டுக்குள் அடைபட்டு
காலத்தைத் தாண்டும்
கண்மணி என் மகளை
சிறப்பாக வைக்கவே
சிறகடித்துப் பறந்தேன்

வாழ்க்கையின் நிர்ணயத்தை மாற்றியமைக்கப்பட்ட சமூகம் தேயிலைத் தொழிலாளிகளாவர். அன்றாடம் அட்டைக்கடியிலும், மழை, வெயிலிலும் பாடுபட்டு உழைத்தாலும் விலைவாசிக்கு ஈடுகொடுத்து வாழ இயலாதவர்கள். தாம் கஷ்டப்பட்டு பறித்த தேயிலையை இதமாக பலர் ருசி பார்க்கிறார்கள். ஆனால் தமக்கோ அதை அமர்ந்திருந்து குடிக்கும் உரிமை கூட இல்லை என்று ஏங்குமவர்களின் வார்த்தைகளாக சரித்திரம் படைக்கிறோம் (பக்கம் 34) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் கூறப்பட்டுள்ளது.

எங்கோ இருப்பவர்கள்
இதமாய்ப் படிக்கையிலே
எங்கள் கரங்களினால்
எடுத்த தேயிலையை
சாய்ந்து கட்டிலிலே
சுவைத்து மகிழ்கின்றார்!

ஐயோ ஆண்டவனே
அந்தத் தேனீரை
ஆறி அமர்ந்து
அருந்த வாய்ப்பின்றி
சக்கரமாய்ச் சுழன்று
சரித்திரம் படைக்கின்றோம்!

பிட்டு வாங்கிய குட்டு (பக்கம் 69) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் தமிழ், முஸ்லிம்களின் உறவு நிலை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமையாய் வாழ்ந்தவர்கள் நாம். ஒருவர் துக்கத்தில் இன்னொருவர் பங்கு கொண்டு, ஒருவர் சந்தோஷத்தில் மற்றவரும் மகிழ்ந்து வாழ்ந்த சகோதரர்கள் நாம். ஆனாலும் சிலரின் தனிப்பட்ட விடயங்களுக்காக இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் முளைவிடப்பட்டன. அல்லது முடுக்கிவிடப்பட்டன. நாம் எத்துணை தூரம் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பதற்கு கீழுள்ள வரிகள் சாட்சிகளாகும்.

தேங்காய் போட்ட பிட்டென்றால்
தின்பதற்கு ருசியாகும்
பாங்காய் தேங்காய்ப் பிட்டென்றும்
பிரிக்க முடியா துறவாகும்
ஓங்கும் தமிழர் முஸ்லிம்கள்
ஒற்றுமைக்கு உதாரணந் தான்
தீங்காய் யார்தான் குழி பறித்தார்?
தினமும் உறவில் தீக் குளித்தார்?

காத்திரமான பல நூற்களை இலக்கிய உலகுக்குத் தந்த மௌலவி பௌஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். தனது கவிதைகளினூடே சமூகத்துக்கு நல்ல பல செய்திகளை சொல்லி நிற்கிறார். இவர் மேலும் பல்வேறு நூல்களை வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - வைகறை வாசம்
நூலின் வகை - கவிதைகள்
நூலாசிரியர் - மௌலவி காத்தான்குடி பௌஸ்
முகவரி - 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, ஹேனமுல்லை,                                                                                                                                          பாணந்துறை.
வெளியீடு - பாவலர் பண்ணை
விலை - 150 ரூபாய்

No comments:

Post a Comment