Wednesday, March 19, 2014

55. நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

நகர வீதிகளில் நதிப் பிரவாகம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஜீவநதியின் 31 ஆவது வெளியீடாக 100 பக்கங்களை உள்ளடக்கியதாக கவிஞர் ஷெல்லிதாசனின் நகர வீதிகளில் நதிப் பிரவாகம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்தக் கவிதைத் தொதியானது கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். இவரது முதலாவது கவிதைத் தொகுதியான செம்மாதுளம்பூ 2010 இல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரரும், சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி த. கலாமணி அவர்கள் தனது முன்னுரையில் ''1970 களின் பிற்கூறுகளில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவனாக இருந்த வேளை கவிதை எழுதத் தொடங்கிய ஷெல்லிதாசனின் நாற்பதாண்டு கால அறுவடைகள் 2010 இலேயே வெளிவர முடிந்தது என்ற ஆதங்கநிலை கடந்து, அதன் பின்பான மூன்றாண்டுகளில் அவர் எழுதிய படைப்புக்களின் தொகுப்பான இந்நூலின் வரவானது, கவிஞர் ஷெல்லிதாசனின் நிதானமான பார்வையையும், முற்போக்குச் சிந்தனைகளில் அவர் கொண்ட பற்றுறுதியையும் சமகால நடப்புகளைத் தீர்க்கமாக நுனித்தாயும் அவரது ஆற்றலையும் பதிவு செய்ய ஏதுவாகின்றது. ஈழத்து இடதுசாரி முன்னோடிகளில் முக்கியமானவராகக் கொள்ளப்படும் தோழர் மு.கார்த்கேசன் அவர்களின் அரசியல் வகுப்புக்களின் பால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனைகளில் பயிற்சி பெற்று, இடதுசாரி இயக்கத் தோழர்களான கே. டானியல், இளங்கீரன், யோ. பெனடிக்ற் பாலன் போன்ற படைப்பாளியாக வரவேண்டும் என்ற தன்னார்வத்தை வளர்த்துக்கொண்டவர் கவிஞர் ஷெல்லிதாசன்'' என்கிறார்.

இந்த நூலை, மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் அவர்களின் 18 ஆவது நினைவு தினத்தை நினைவுறுத்தி அன்னாருக்கு சமர்ப்பிப்பதில் கவிஞர் ஷெல்லிதாசன் மன நிறைவுகொள்கிறார்.

கவிஞர் தனதுரையில் ''அன்றாடம் எனது உணர்வுத் திரையில் பிம்பங்களாக விழுந்த செய்திகள், காட்சிப் படிமங்கள், அவற்றினூடாக நான் பெற்ற அனுபவங்கள் நகர வீதிகளில் நதிப் பிரவாகமாக அங்கு உங்களது கைகளில் தவழுகின்றது. பல்வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய கவிதைகளாக இவை அமைந்தாலும், மனித சமூகங்களிடையே புரையோடிப் போயிருக்கும் இன, மத, மொழி, சாதிய வேறுபாடுகள், அடக்குமுறைகள் என்பவற்றிற்கு எதிராக ஏதோ ஒரு விதத்தில் இவை பங்களிப்புச் செய்வதாகவே நான் நம்புகின்றேன்'' என்கிறார்.

இடதுசாரிச் சிந்தனைகள்தான் அவரின் கவிதைகளின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றன என்பதை இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் கட்டியம் கூறுகின்றன. மிகவும் இலகுவான மொழி நடையைக் கையாண்டு காத்திரமான முறையில் தனது கருத்துக்களை கவிதை வடிவில் கவிஞர் ஷெல்லிதாசன் அழகாக இந்தத் தொகுதியில் பதிவு செய்துள்ளார். இந்தத் தொகுதியில் 69 கவிதைகள் உள்ளன.

கண்ணில் ஒரு கங்கையாறு (பக்கம் 03) என்ற கவிதையானது மூதூரைச் சேர்ந்த சகோதரி ரிஸானா நபீக் பற்றிய பதிவை விதைத்துச் செல்கின்றது. குடும்ப நலன் கருதி தன் தலையை அடமானம் வைத்த அவளது தியாகம் உலகத்தையே கதிகலங்கச் செய்ததொன்று. அவளுக்கான மரண தண்டனை விதிக்கப்பட்டு விதியின் கைகளுக்குள் அவள் மூச்சடங்கிவிட்டபின், இலங்கையில் அவளது குடும்பத்தினருக்காக வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இவை எதுவுமே ரிஸானா என்ற தனியொருத்திக்கு ஈடாகாது என்பது யாவரும் அறிந்த உண்மை. ரிஸானாவைப் பற்றின கவிஞரின் பார்வை இவ்வாறு பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம்.

பாலை நிலத்தில்
கானல் நீரை
பருக விரைந்த மான்குட்டி

கங்கையாற்று வெள்ளம்
கரை புரள்கிறது கண்களில்
உனது சிரசு கொய்து
உயிர் உருவிய
அரபுச் சீமான்களின்
அபார மனதாபிமானத்தால்..

புனிதத்தைப் போற்றும் நிலங்கள்
மனிதத்தையும் மகிமைப்படுத்துமென
மனப்பால் குடிக்கும்
மடைத்தனம் - இந்த
மண்ணுக்கே உரியது.

நோட்டுக்களின் நோட்டம் (பக்கம் 05) என்ற கவிதையானது இன்று புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களைப் பற்றி பேசியிருக்கின்றது. வர்ணமயமான நோட்டுக்கள் இன்று அச்சடிக்கப்பட்டு வந்தாலும், அவற்றின் பெறுமதி குறைந்தே காணப்படுகின்றது. சில்லறை நாணயங்கள் கவிதையில் சொன்னாற்போல உண்டியல்களில்கூட காணக்கிடைப்பதில்லை. பொதுவாகப் பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் காணப்பட்டால் ஒரு நாளைக்கான அத்தியவசியப் பொருட்களை வாங்க அது போதுமானதாக இருக்கும். இன்றைய நிலைமையில் ஒரு பால் மா பைக்கற்றை வாங்கிவிட்டால் ஆயிரம் ரூபாயும் முடிந்து போகும். பணத்தின் பெறுமதியானது குறைந்து வரும் இக்காலத்தில் விலைவாசி மாத்திரம் ஏறிக்கொண்டே செல்வதுதான் வாடிக்கையானதும், வேடிக்கையானதுமான விடயமாகும்.

மரியாதை முகவரியை
இழந்து தவிக்கும்
மனித உரிமைகளைப் போல
கரன்சி நோட்டுக்களின் மதிப்புக்களும்
கடுகதி வேகத்தில் சரிந்தபடி

காணாமற் போய்விட்ட
நீதியாக
சதங்களின் சலசலப்பை
உண்டியல்களில் கூட
காணமுடியவில்லை..
துடுப்பாட்டத்தில் மட்டும்
சதம் - தனது பெயர்
உச்சரிக்கப்படுவதைக் கேட்டு
உள்ளுர ஆனந்தப்படுகிறது..

ஆயிரமான மயில் நோட்டின்
ஆட்டமும் உரு மாறியபோதும்
சந்தைக்குப் போனால்
ஒரு பொலித்தீன் பையில்
அடக்கமாகிவிடுகிறது..

இன்றைய வாழ்க்கையில் மனிதர்களிடம் மனிதநேயம் என்ற விடயம் மரித்துப்போய் காணப்படுகின்றது. காசுக்காக எதையும் செய்ய விளைபவர்கள் ஒரு மனிதனின் துன்பத்திற்குக்கூட உதவும் மனப்பாங்கு அற்றவர்களாகவே வாழ்கின்றார்கள். பண்பும், பாசமும் இன்று விலைமதிப்பில்லாமல் போய்விட்டது. செயற்கையாகப் பழகும் தன்மையே இன்று எம் சமூகத்தினர் மத்தியில் புரையோடிப் போயிருப்பது அவதானத்திற்குரியது. இன்;றைய சமூகத்தில் முனைப்பு பெற்றிருக்கும் இத்தகைய சிந்தனைகள் மனிதம் என்ற செல்நெறியிலிருந்து அனைவரையும் மாற்றியிருக்கின்றது என்பது நிதர்சனத்துக்குரியது. அந்தப் பண்புகளை மண் புதைத்த மனிதங்கள் (பக்கம் 11) என்ற கவிதை சுட்டிநிற்கின்றது.

குடிதானிருக்கு குடித்தனத்தைக் காணவில்லை சில குடும்பங்களில்.. அடிதானிருக்கு அன்பு பாசம் காணவில்லை பலர் வாழ்க்கையிலே.. பணந்தானிருக்கு பண்பு அங்கு பறந்து போச்சு காற்றினிலே.. படிப்புதானிருக்கு பகுத்தறிவைக் காணவில்லை சிலர் நடத்தையிலே.. பதவிப்படி ஏற ஏற பாறாங் கல்லின் கனமும் உடனேறிக் கொள்கிறது கனவான்களின் உச்சியிலே.. பசையிருந்தால் மட்டுமே அண்ணன் தம்பி உறவும் ஒட்டுகிறது பெரும் பாசத்திலே.. அசையும் அசையாச் சொத்துக்களையும் அந்தஸ்துக்களையும் ஆராய்ந்தே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட இன்று நிச்சயமாக்கப்படுகின்றன எமது இல்லங்களிலே..

அடிமையின் மோகம் (பக்கம் 15) என்ற கவிதையானது அடக்குமுறைக்கு எதிரான ஒரு கவிதையாக நோக்கத்தக்கது. இன்றைய சமுதாயத்தில் நலிவுற்றவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வியூகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு இனம் சார்ந்து அல்லது ஒரு மொழி சார்ந்து எழுகின்ற சில போக்குகள் அடிமட்ட மக்களின் வாழ்க்கையை மாத்திரமன்றி பணம் படைத்தவர்களிடையேயும் தாக்கம் செலுத்திவிடுகின்றது. இன, மத, குலம் போன்றவற்றைத் தவிர்த்து மனிதம் என்ற வட்டத்துக்குள் வைத்து எலலோரையும் நோக்கும் சமத்துவம் பேணப்படுமானால் நாட்டில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் வலுவற்றதாகிப் போய்விடக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். கீழுள்ள அடிகளில் தொழிலாளி வர்க்கத்தின் ஏக்கத்தையும் காண முடிகின்றது.

குதிரையாய் கழுதையாய்
முதுகினைக் கொடுத்தோம்
சவாரிகள் நடக்குதடா

அவர்
கொடுப்பதை உண்டு
அடிப்பதை வாங்கி
அடிமைச் சீவியம் தொடருதடா

மலையில் ஒரு பனித்திரை (பக்கம் 27) என்ற கவிதையானது மலையக மக்களின் வாழ்வு குறித்து பேசியிருக்கின்றது. தேயிலை மலையில் காலநிலைக் குளிராலும், சுட்டெரிக்கும் வெயிலினாலும் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சுமக்கின்ற பாரத்துக்கான கூலிச் சம்பளமோ மிகக்குறைவுதான். மலையக மக்கள் என்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினராக கருதி வந்த காலம், தற்போதைய இளைஞர் யுவதிகளின் கல்வியறிவினால் மாற்றப்பட்;டு வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனினும் அவர்களின் யதார்த்த வாழ்வியலை நோக்கும்போது அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். துரைமார்களோ சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க, தொழிலாளர்களின் பாடு அந்தோகதியாகத்தான் இன்னமும் இருக்கின்றது என்பதை கீழுள்ள வரிகள் தொட்டுக்காட்டியிருக்கின்றமை மனவேதனையைத் தரும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

நானோ திருமலையில்
நீயோ தேயிலை மலையில்
உன் நிலையைக் கண்டு
எனது மனோ நிலையோ
ஒரு நிலையிலில்லை தோழா

இருவருக்கும் சுதந்திரம்
ஏனோ கேள்விக் குறிதான்
இருவருமே பேசுமொழி
இன்பத் தமிழே அதனாலேதான்

ஐயாமார் சம்பளத்தில்
ஐந்து வீதமும் உனக்கில்லை நீ
கொய்யாமல் இருந்துவிட்டால் நாளை
குடி மூழ்கும் தேசமடா

அடிமைச் சீவியத்தை
அடி வருடி உனக்களித்து
பெருமை பேசுபவர்
பெருந்தவறை (நீ) உணர்வதெப்போ?

மனம்விட்டுச் சிரிக்க வா (பக்கம் 99) என்ற கவிதையானது சிரிப்பின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அழகான புன்னகை ஒன்றின் மூலம் பல விடயங்களை சாதிக்க முடியும். ஆறுதல் கேட்டு தவித்திருக்கும் ஒரு இதயத்துக்கு அன்பானவரின் புன்னகை ஒன்றே மருந்தாக ஆகிவிடுகின்றது. ஆனால் ஏழையின் சிரிப்பை வறுமை இல்லாமலாக்குகின்றது. கன்னியரின் சிரிப்பை சீதனம் பறித்துக்கொள்கின்றது. கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளியின் சிரிப்பை முதலாளிவர்க்கம் இல்லாமலாக்குகின்றது. இப்படி சிரிப்புகூட இன்று பணத்தில்தான் தங்கியிருக்கின்றது என்ற பேருண்மையை இக்கவிதை சொல்லி நிற்கின்றது.

சிரிக்காமலிருந்த நாள் பாழென ஆகுமாம்.. செம்மையாய் வாழ்ந்திட சிரித்திட வேண்டுமாம்.. அகத்தினிலே இருந்தெழும் புன்னகை மலர்களால் ஆனதான நோய்களும் அகன்றேதான் ஓடுமாம்..

ஏழையின் சிரிப்பதை இல்லாமை பறித்தது.. இருப்பவன் சிரிப்பதை, அவன் இருப்பு அதே பறித்தது.. கன்னியர் சிரிப்பினை சீதனம் பறித்தது.. காளையர் சிரிப்பதை காவலும் தடுத்தது.. உழைப்பவன் சிரிப்பினை உறிஞ்சுவோன் பறித்தனன்.. உயர்ந்தவன் சிரிப்பதை பொய்மையும் மறைத்தது..

மமதையில் இங்கே மத யானை சிரிக்குது.. மடிகளை நிரப்பியே மந்திகள் சிரிக்குது.. ஏமாற்றி உள்ளுர நரிகளும் சிரிக்குது.. இடையிடை ஓநாயும் சேர்ந்தேதான் சிரிக்குது.. கழுகுகள் பிணங்களைக் கொத்தியே சிரிக்குது.. கலர்களை மாற்றியே பச்சோந்தி சிரிக்குது..

மனிதனைத்தவிர இங்கு எல்லாமே சிரிக்குது.. அவன் மனம்விட்டுச் சிரிக்கின்ற நாள் எந்த நாளோ?

இலங்கையின் மூத்த கவிஞர்கள் வரிசையில் அழியாத நாமம் கவிஞர் ஷெல்லிதாசனுக்கும் உரியது. மனிதநேயம் சார்ந்த அவரது சிந்தனைகள் கவிதை வழியே பிரவாகிக்கின்றன. இளைய எழுத்தாளர்கள் இக்கவிஞரின் நூலை படிப்பதன் மூலம் தங்களது இலக்கியப் பாதையில் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரது கவிதைகள் தக்க சான்றாக அமைகின்றன. கவிஞர் ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - நகர வீதிகளில் நதிப் பிரவாகம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் -  ஷெல்லிதாசன்
வெளியீடு - ஜீவநதி
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment