திறனாய்வு தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


`இந்த நூலை கொண்டு வருவதன் நோக்கம் கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களுக்கு முன் எனது திறனாய்வுப் பார்வை எப்படியிருந்தது என்பதை வரலாற்றுச் செய்தியாக பதிவு செய்தல். அடுத்ததாக புதிய பரம்பரையினருக்கு அக்கால கலை இலக்கிய செய்திகளை நினைவூட்டுதல்' என நூலாசிரியர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
யதார்த்தவாதம் என்றால் என்ன என்ற தலைப்பில் அருமையான விடயங்களை எமக்கு விளங்கிக்கொள்ளலாம். யதார்த்தவாதம் என்பதற்கு ஆங்கிலத்தில் திட்டவட்டமான அர்த்தம் இல்லை என்று கூறும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஷரியலிசம் என்ற பதம் மிக நுண்ணிய அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
ஆனால் இலக்கியத்தில் இது இடம்பெறும் பொழுது விசேட அர்த்தத்தையோ தத்துவத்திலுள்ளதுபோல் நுண்ணிய அர்த்தத்தையோ கொடுப்பதில்லை. மேலோட்டமாக கூறினால் யதார்த்தவாதம் என்பது பிரத்தியேட்ச நிதர்சன, உண்மைத் தோற்றமான, வெளிப்படையானது, உள்ளது உள்ளபடியானவற்றின் பிரதிபலிப்பு எனக் கூறலாம்| என்ற விளக்கத்தை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். இதில் நாவலில் யதார்த்தவாதம், சமூக யதார்த்தவாதம் என்று உப தலைப்பிட்டு அது சம்பந்தமாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
ஈழத்து உடனிகழ்கால இலக்கியம் என்ற மகுடத்தில் சமகால எழுத்தின் தன்மைகள் பற்றி விரிவாக விளக்கியிருக்கின்றார் நூலாசிரியர். அன்றைய இலக்கிய வடிவம் அகம், புறம் சார்ந்த விடயங்களில் அதுவும் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே எழுதப்பட்டன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இலக்கியத்தின் வடிவம் மாறியுள்ளது. இதிலும் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவதானித்தால் தமிழின் வடிவ மாற்றம் நமக்குப் புரியும்.
இன்றைய இலக்கியங்களில் அதுவும் விசேடமாக சிறுகதைகள், நாவல்களில் பேச்சு வழக்கைக் கையாண்டு வருகின்றார்கள். பேச்சு வழக்கிலும் பிரதேச வழக்கு என்ற ஒன்று முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றது. எழுத்து வடிவில் விவரிக்க இயலாத உணர்ச்சிகளை பேச்சு மொழியில் ஏற்ற இறக்கங்களோடு கூற விளையும் போது படைப்பின் தரம், சுவை கூடிவிடுகின்றது.
இவற்றின் அடிப்படையில் நிகழ்கால இலக்கியத்தின் போக்கு பற்றி நூலாசிரியர் தனது கருத்தாக இன்று யாழ்ப்பாணத்தவர்கள் போரின் கொடுமைகள் பற்றியும், மலையகத்தார் தோடத் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியும், மட்டக்களப்பினர் தமிழ்நாட்டுப் பாணியில் எழுதுகிறார்கள் என்ற கருத்தை எழுதியிருக்கின்றார்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறக்கவியலாத, அழியா நாமம் கொண்ட கைலாசபதி அவர்களைப் பற்றியும் ஒரு ஆக்கம் பிரசுரமாகியிருக்கிறது. ஒரு பேராசிரியராக, பத்திராதிபராக, நல்ல விமர்சகராக இருந்த கைலாசபதி அவர்கள் தனது எழுத்துக்கள் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.
`இலக்கியத்தின் சமூகவியலுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு விமர்சகராகவும், மார்க்ஸியத்தை தழுவியவராகவும் கைலாசபதி தன்னை இனம்காட்டிக் கொள்கிறார். எனவே இலக்கிய கொள்கைகள் பலவற்றில் ஒன்றாகிய சமுதாயக் கொள்கையை கைலாசபதி அனுஷ்டிக்கிறார் என்பது தெளிவாகிறது' என நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இத்தகைய அரும்பெரும் விடயங்களை இலக்கியவாதிகளுக்காக தொகுத்துத் தரும் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இன்னும் இலக்கியச் சேவை புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன்!!!
நூலின் பெயர் - திறனாய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 350 ரூபாய்
No comments:
Post a Comment